ஏப்ரல் 06

120 வேதசாட்சிகள். (கி.பி. 345) 

பெர்சியா இராச்சியத்தில் சாபோர் அரசு புரிந்த காலத்தில் 120 கிறீஸ்தவர்கள் வேதத்திற்காகப் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

இவர்களுக்குள் சிலர் கன்னியரும், சிலர் குருக்களும், சிலர் சிறு பட்டங்கள் பெற்றவர்களுமாயிருந்தார்கள்.

இவர்கள் ஆறு மாத காலமாக நெருக்கமும் அசுத்தமுமான சிறையில் அடைக்கப்பட்டு அப்போதைக்கப்போது நிஷ்டூரமாய் உபாதிக்கப்பட்டு, வேண்டிய ஆகாரமின்றி கஷ்டப்பட்டு வந்தார்கள்.

வேதசாட்சி களின் கஷ்டத்தைப்பற்றி கேள்விப்பட்ட பணக்கார புண்ணியவதி ஒருத்தி அவர்களுக்கு வேண்டிய ஆகாரங்களைக் கொடுத்து விசாரித்து அவர்களுடன் சம்பாஷித்து, சத்திய வேதத்தில் உறுதியாயிருக்கும்படி தைரியம் கொடுத்து வந்தாள்.

அரசன் வேதசாட்சிகளைக் கொலை செய்யும்படி கூறிய தீர்ப்பை கேள்விப்பட்ட இந்த புண்ணிய ஸ்திரீ, உடனே சிறைக்குச் சென்று ஒவ்வொரு வருக்கும் ஒரு நேர்த்தியான வஸ்திரங் கொடுத்து, அன்று இரவு அவர்களுக்குப் பெரும் விருந்திட்டு, மறுநாள் அவர்கள் வேதசாட்சிகளாகப் போகிற செய்தியை அவர்களுக்கு அறிவித்து, வேதத்தில் தைரியமாயிருக்கும்படி புத்தி சொல்லி தனக்காக வேண்டிக்கொள்ளும்படி அவர்களை மன்றாடினாள்.

மறுநாள் காலை மேற்கூறிய வேதசாட்சிகள் வேதத்தினிமித்தம் சிரச்சேதம் செய்யப்பட்டு மோட்ச பதவி சேர்ந்தார்கள்.

அந்தப் புண்ணியவதி வேதசாட்சிகளின் பிரேதங்களைப் மிக மரியாதையுடன் நல்லடக்கஞ் செய்வித்தாள்.

யோசனை 

கிறீஸ்தவர்களின் அடக்கத்திற்கு நாம் போவதுடன், ஏழைகளின் அடக்கத்திற்கு தேவையான உதவிகளை செய்யவும் வேண்டும்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். சிக்ஸ்துஸ், பா.வே. .
அர்ச். செலஸ்டியன், பா.
அர்ச். வில்லியம், ம.
அர்ச். ப்ருதென்சியுஸ், மே.
அர்ச். செல்சுஸ், அதிமே.