ஜுலை 06

அர்ச். செக்ஸ்பர்கம்மாள் - விதவை (கி.பி. 695) 

செக்ஸ்பர்கம்மாள் ஆங்கிலேய நாட்டில் அரசக் குடும்பத்தில் பிறந்தாள். புண்ணியவாளர்களான இவளுடைய பெற்றோரால் தர்ம வழியில் வளர்க்கப் பட்டதினால் சிறுவயதிலேயே இவள் சகல புண்ணியங்களையும் சுறுசுறுப்புடன் அனுசரித்து வந்தாள். 

இவளுடைய சரீர அழகிலும், கற்பு, தாழ்ச்சி, கீழ்படிதல் ஒறுத்தல் முதலிய புண்ணியங்கள் இவளிடத்தில் அதிகமாய்ப் பிரகாசித்தபடியால் சகலரும் இவளைக் கனப்படுத்தி அன்புடன் நேசித்து வந்தார்கள். இவளுக்கு வயது வந்தபின் இங்கிலாந்து தேசத்தில் வேறொரு அரசனுக்கு மணமுடிக்கப்பட்டாள். 

புண்ணியவதியான இராணியின் பக்தியையும் தர்மத்தையுங் கண்ட அரசர் சந்தோஷித்து, ஞானக் காரியங்களில் தன் மனைவியைக் கண்டுபாவித்து புண்ணிய வழியில் நடந்தார். மேலும் தன் புண்ணிய இராணியின் நல்ல ஆலோசனைப்படி நல்ல சட்டதிட்டங்களை வகுத்து, பிரஜைகளை நீதியுடன் பரிபாலித்து வந்தார். 

மேலும் அக்காலத்தில் கிறிஸ்தவர்களுக்குள் சில அஞ்ஞான ஆசாரங்கள் அனுசரிக்கப்பட்டும், திருச்சபை கட்டளைகளில் சில அலட்சியம் செய்யப்பட்டும் வந்ததை அறிந்த செக்ஸ்பர்க் இராணி மிகவும் பிரயாசைபட்டு அவர்கள் அந்த ஆசாரங்களை ஒழித்து விட்டு திருச்சபைக் கட்டளையை சரியாய் அனுசரிக்கும்படி செய்தாள். 

தன் கணவன் மரணமான பின் இப்புண்ணியவதி ஒரு கன்னியர் மடத்தில் சேர்ந்து துறவற வாழ்வில் உயர்ந்து மோட்ச முடியை சுதந்தரித்துக் கொண்டாள்.

யோசனை

கணவன் மனைவியர் ஒருவரொருவருடைய புண்ணியத்தைக் கண்டு பாவித்து நடப்பார்களாகில் அவர்களுக்குச் சந்தோஷமும் சமாதானமும் குறையாது. மேலும் நாம் வீண் ஆசார சடங்குகளை விட்டொழிக்க வேண்டும்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். பல்லாடியுஸ், மே. 
அர்ச். ஜூலியன், மு. 
அர்ச். கோஆர், கு. 
அர்ச். மொனின்னா , க.