பிப்ரவரி 05

அர்ச். ஆகத்தம்மாள். கன்னிகை, வேதசாட்சி (கி.பி. 251)

செல்வந்தர் கோத்திரத்தில் பிறந்த ஆகத்தம்மாள் தன்னுடைய பெற்றோரால் சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டாள். இப்பெண் பசாசாலும் துஷ்டராலும் உண்டான தந்திர சோதனைகளை ஜெயித்து தன் ஆத்துமமும் சரீரமும் பாவத்தால் கறைப்படாதபடிக்கு வெகு கவனமாய் இருந்தாள்.

ஆகத்தம்மாளின் உத்தம கோத்திரத்தையும், அழகையும், திரண்ட சொத்துக் களையும் பற்றி கேள்விப்பட்ட குயிந்தானுஸ் என்னும் நாட்டதிகாரி அவளை மணமுடித்துக்கொள்ள செய்த முயற்சிகளெல்லாம் வீணானதால், அவள் கிறீஸ்தவளென்று அவள்மேல் குற்றஞ்சாட்டி அவளது கற்பைப் பறிக்கும்படி ஒரு விபச்சார ஸ்திரீயிடம் அவளைக் கையளித்தான்.

இப்புண்ணியவதி பாவத்திற்கு சம்மதியாததை அதிபதியறிந்து, அவளைக் கொடூரமாய் அடித்தும் நயமாகப் பேசியும், பயமுறுத்தியும், அவள் அஞ்சாததினால், அவளுடைய மார்பை அறுத்து சிறையிலடைக்கும்படி கட்டளையிட்டான்.

அன்று இரவு அப்போஸ்தலரான அர்ச். இராயப்பர் ஆகத்தம்மாளுக்குத் தோன்றி, அவளைத் தைரியப்படுத்தி, அவள் காயம் முழுவதையும் குணமாக்கினார். இதைக் கண்ட அதிகாரி கோபத்தால் பொங்கியெழுந்து, தரையில் பரப்பப்பட்ட நெருப்பில் அவளைப் புரட்டச் சொன்னான்.

அந்நேரத்தில் அந்நகரம் அதிர்ந்ததைக் கண்ட அதிபதி, ஜனங்கள் தன்னை எதிர்த்துக் குழப்பம் செய்வார்களென்று பயந்து, அப்புண்ணியவதியை சிறைக்குக் கொண்டுபோகும்படி கட்டளையிட்டான். வேதசாட்சி தான் பட்ட காயங்களால் சிறையில் உயிர் துறந்தாள்.

யோசனை

கற்பென்னும் புண்ணியம் ஒரு தேவ கொடை. அதை கவனமாக ஜெபத்தாலும் ஐம்புலன்களின் அடக்கத்தாலும் பழுதின்றிக் காப்பாற்றுவோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

ஜப்பான் தேச வேதசாட்சிகள்
அர்ச். அவிதுஸ், மே
அர்ச். அபிராமியுஸ், மே.வே.
அர்ச். ஆலிஸ், க.