புத்தகங்களை டவுன்லோட் செய்வது, வேறு வழிகளில் காப்பி செய்வது, சமூக தளங்களில் பகிர்வது அனுமதிக்கப்படவில்லை. மீறினால் Copyright Act 1957படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஏப்ரல் 04

அர்ச். இசிதோர். மேற்றிராணியார் (கி.பி. 606) 

இவர் ஸ்பெயின் தேசத்தில் பிறந்து சாஸ்திரங்களைப் படிக்கும்போது, படிப்பு தமக்கு எளிதில் வராததைக் கண்டு சலிப்புற்று படிப்பை விட்டுவிட்டார்.

ஒரு நாள் இவர் வெளியே உலாவும்போது ஒரு கிணற்றைப் பார்த்தார். அதன் கல்லின் மேல் தாம்புக்கயிறு பட்டுத் தேய்ந்திருப்பதைக் கண்டு, தாம் மந்த புத்தியுள்ளவராயினும் விடாமுயற்சியால் தமக்குப் புத்திக் கூர்மையாகுமென்று எண்ணி சாஸ்திரங்களைப் படிக்கத் தொடங்கி பிற்காலத்தில் பெரிய சாஸ்திரி ஆனார்.

மேலும் இவர் இறந்த 16 வருடங்களுக்குப்பின் அவருக்கு வேதபாரகர் என்னும் பட்டம் கொடுக்கப்பட்டது. மேற்றிராணிமார்களான அவருடைய இரு சகோதரர்களும் அவருடைய சகோதரியும் அர்ச்சியசிஷ்டவர்களானார்கள்.

ஆரியப் பதிதனான ஒரு இராஜப் பிரபுவை இவர் மனந்திருப்பி கொஞ்சக் காலத்திற்குள் அந்தப் பதித வேதத்தை ஸ்பெயின் தேசத்தினின்று முற்றிலும் அழித்து விட்டார்.

பிறகு இவர் குருப்பட்டம் பெற்று இறந்துப்போன தன் சகோதரருக்குப் பதிலாக மேற்றிராணியாரானார். சாஸ்திரியான இவர் தமது புண்ணியங்களாலும் ஜெபதபத்தாலும், விசேஷமாக, தான தர்மத்தாலும் தமது மேற்றிராசனத்தில் மாத்திரமல்ல, ஸ்பெயினிலும் மற்ற தேசங்களிலும் கணக் கற்ற நன்மை செய்தார்.

40 வருடமாக தமது மேற்றிராசனத்தை நடத்தி அநேக பிரபந்தங்களை உண்டாக்கி, 80 வயது மட்டும் கடினமாக உழைத்து நித்திய சம்பாவனையைப் பெற்றார்.

யோசனை

நாமும் புண்ணிய வாழ்வில் அசமந்தமாயிருந்தால், சலிப்படையாமல் முயற்சிப்போமாகில் நமது ஞான அசமந்தத்தை வெல்லலாம்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். பிளாட்டோ , ம.