ஏப்ரல் 03

அர்ச். ஆகாப்பம்மாளும் துணைவர்களும். வேதசாட்சிகள் (கி.பி. 1304)

தங்கள் பெற்றோர் அஞ்ஞானிகளாயிருந்தும், ஆகாப், கியோனியா, இரேன் ஆகிய மூன்று சகோதரிகளும் ஞானஸ்நானம் பெற்று உத்தம கிறீஸ்தவர்களாய் வாழ்ந்து, வேதாகமங்களை வாசித்து மற்றவர்களுக்கு புத்தி சொல்லிக்கொண்டு வந்தார்கள்.

தியொகிலேசியன் சக்கரவர்த்தி வேத கலகம் எழுப்பிய காலத்தில் கிறிஸ்தவர்களை உபாதித்து அவர்களிடத்திலுள்ள வேதாகமம் முதலிய வேத புத்தகங்களை பறித்துக் கொள்ளும்படி கட்டளை யிட்டான்.

மூன்று சகோதரிகளும் வேதத்திற்காகப் பிடிபட்டபோது ஆகாப், கியோனியா ஆகிய இரு சகோதரிகளையும் அதிகாரி தன் முன்னிலையில் நிறுத்தி பொய்த் தேவர்களுக்குப் படைக்கப்பட்ட போஜனத்தைப் புசிக்கும்படி கட்டளையிட்டபோது, தாங்கள் கிறிஸ்தவர்களாகையால் அதைப் புசிக்க மாட்டோம் என்றார்கள்.

தான் காட்டிய நியாயங்களும் நயபயமும் வீணானதைக் கண்ட அதிபதி அவ்விரு சகோதரிகளையும் நெருப்பில் சுட்டெரிக்கக் கட்டளையிட்டான்.

பிறகு இரேன் என்பவளை வரவழைத்து, கபடமாய்ப் பேசி, வேதாகம புத்தகங்களை வாசித்திருக்கிறாயோ, அவை இப்போது யாரிடத்திலிருக்கின்றன? என்று தந்திரமாய்க் கேட்டபோது, அதை நான் வாசித்ததுண்டு. அது இருக்கின்ற இடத்தை காட்ட மாட்டேன் என்று தைரியமாகச் சொன்னதைக் கேட்ட அதிபதி அவளை ஒரு விபச்சாரியின் வீட்டுக்கு அனுப்பினான்.

ஆனால் அவ்விடத்தில் தேவ கிருபையால் அவள் கற்புக்குப் பழுது உண்டாகவில்லை. இதற்குப்பின், அதிபதியின் தீர்ப்புக்கு இணங்கி கொலைஞர்கள் மூன்று சகோதரிகளையும் நெருப்புக்கு இரையாக்கினார்கள்.

யோசனை 

பேய்க்குப் படைக்கப்பட்ட பண்டங்களை ஒரு பிரசாதமாக பாவிக்கவுங் கூடாது, அல்லது அதைப் புசிப்பதால் மற்றவர்களுக்கு துர்மாதிரிகையாக இருக்குமென்று அறிந்தால் அதை சாப்பிடவுங் கூடாது. ஆனால் பசியினிமித்தம் அதைப் புசிப்பதால் தவறாகாது.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். ரிச்சர்ட், மே.
அர்ச். யுல்பியன், வே.
அர்ச். நிசேதாஸ், ம.