பிரான்சீஸ் சபை மேலாளர்

"ஆண்டவரே ஒரு வார்த்தை சொல்லுகிறேன், கேளும், அடியேன் உம் முன்னிலையில் அருள் அடைந்தேனே: (ஆதி 19/19)

இத்தாலி பயணம்

வட இத்தாலி நாட்டு பிரான்சீஸ் சபையின் மேலாளராக அந்தோனியார் 1227ஆம் ஆண்டு நியமனம் பெற்று இத்தாலிக்குப் பயணமானார். அவரது நாவன்மையைப் பற்றி இத்தாலி நாடு நன்கு அறிந்திருந்ததால், அவர் வருகையை மிக ஆவலுடன் எதிர்பார்த்தனர். இவருக்குப் பக்கபலமாக லூக் பெல்லூடி என்ற துறவியும் இருந்தார். இவரும் சிறந்த மறையுரையாளர், செல்வந்தர், செல்வத்தை விட்டு துறவியானவர், அத்துடன் அந்தோனியாருடன் உழைத்தவர். அவர் கடைசி வேளையில் அவருடனிருந்து உதவி செய்தவர்.

பாப்பிறையின் முன் அந்தோனியார்

அந்தோனியார் 1228ல் உரோமாபுரி சென்று பாப்பரசர் 9வது கிரகோரியாரைச் சந்தித்தார். இவர் அசிசி பிரான்சிஸின் நண்பர். அந்தோனியாரின் புகழை அறிந்தவர். அதனால் தன் முன்னிலையிலும், கர்தினால்கள், ஆயர்கள், குருக்கள் திருப்பயணிகள் முன்னிலையிலும் ஒரு பிரசங்கம் செய்ய வேண்டுமென அந்தோனியாரைக் கேட்டுக் கொண்டார்.

அந்தோனியாரும் பணிந்து பாப்பரசரது ஆசீருடன் அற்புத பிரசங்கம் நிகழ்த்தலாயினார். பாப்பிறை உளம் பூரித்து "வாக்குத்தத் தத்தின் பேழை" என்ற பட்டத்தை அவருக்கு அளித்தார். இவரால் திருமறை சுடர்விடும் என எண்ணி, இத்தகையவரை அளித்தமைக்கு இறைவனுக்கு நன்றி செலுத்தினார்.

பல்வேறு மொழிகளில் அந்தோனியார்

பெந்தகோஸ்தே விழாவின் போது நடைபெற்ற அற்புதம் அன்றும் நிகழ்ந்தது. அந்தோனியார் உரை நிகழ்த்திய போது குழுமி இருந்த அனைவரும் தத்தம் மொழிகளில் அவரது மறை உரையைக் கேட்டனர். வேதாகமத்தின் எடுத்துக் காட்டுகள் தங்கு தடையின்றி அவர் வாயிலிருந்து மழையைப் போல் பொழியலாயின.

தூய பிதா மகிழ்ந்து "வேதாகமத்தின் கருவூலம் நீர்" என்று பாராட்டினார். அவர் பல மொழிகள் பேசியதைப் பற்றி எங்கும் எல்லோரும் பேசிக் கொண்டனர்.

அவரோ, “எவன் தூய ஆவியால் நிரப்பப்படுவானோ அவன் பல மொழிகளில் பேசுவான். தாழ்மை, ஏழ்மை, பொறுமை, கீழ்ப்படிதல் என்பவைகளை இறை இயேசுவிற்கு அளித்து, நாம் பிறருடன் பேசும்பொழுது நாம் சாட்சிகளாகும் பொருட்டு இவ்வரம் அளிக்கப்படும். நமது வேலை பயனுள்ளதாயிருந்தால் தான் பேச்சிற்குப் பொருளுண்டு. உங்கள் வார்த்தைகள் மறைந்து செயல்கள் வெளியாகட்டும் என உங்களுக்கு அறிவுரை கூறுகிறேன். நமது வாழ்க்கை சொற்களால் மிகுந்து உள்ளது. செயல்களால் காலியாக உள்ளது. வெறும் இலையுடன் பழமில்லாது இருந்த அத்தி மரத்தை சபித்த அவரின் சாபத்தை நாம் நம்மேல் வரச்செய்கிறோம்" என்றார். பின் அசிசி சென்றார். அங்கு தூய பிதா பிரான்சிஸின் நினைவு அவரை வாட்டியது.

பதுவை வருதல்

1229ஆம் ஆண்டளவில் அந்தோனியார் பதுவை மாநகரம் வந்தார். பாச்சிகிலோன் நதியின் கரையில் பதுவை இருந்தது. கல்வியில் சிறந்த அப்பட்டணத்தில் உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் இருந்தது. இப்பல்கலைக்கழகம் 1222ல் அமைக்கப்பட்டது. மறை ஆயர் ஒருவரும் இங்கு வாழ்ந்து வந்தார். கிறிஸ்தவ வாழ்வு மிகத் தாழ்வான நிலையிலிருந்தது. கட் கிபலைன் கட்சியினரான கொடுங்கோலன் எஸ்லினோ ரோமனா வுடன் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. வெரோனாநனர் பதுவையின் எதிரி. அதையும் சமாளிக்க வேண்டிய நிலை. அமைதியில்லா சூழ்நிலை இதனால் நிலவியது. த சில நாட்களுக்குப் பின் அவர் தனிமையான ஒரு இடத்திற்குச் சென்று, ஞாயிறு நாட்களுக்கான மறை உரையை எழுதலானார். ஆண்டின் எல்லா ஞாயிறு நாட்களுக்கும் இவை எழுதப்பட்டதால் மிகவும் பலனுடையதாயிற்று.

"நூலில் நிறைவிருப்பின் இறைவனுக்கு நன்றி சொல்வீர். குறை இருப்பின் என் அறியாமையால் ஆனது எனப் பொறுப்பீர்” என இறுதியில் எழுதி முடித்தார்.