பிற பயணங்கள்

ஓய்வின்றி இத்தாலியில் பல இடங்களுக்கு கால் நடையாகச் சென்று போதித்தார். இத்தாலி எங்கும் மத மறுமலர்ச்சியும் விழிப்புணர்வும் ஏற்பட்டன. 1228ல் சிவதாலே, திரேஸியா, வெனிஸ் நகரங்களில் போதித்து புதுமைகள் செய்தார். மீட்புப் பணி மீது அவருக்கிருந்த ஆர்வம், அவரை பெரேரா, பிளாரன்ஸ் பட்டணம் செல்லத் தூண்டியது. அங்கு சென்று பிரசங்கங்கள் செய்தார். பிளாரன்ஸ் நகரில் நெடு நாள் தங்கினார்.

அவர் இங்கு செய்த பிரசங்கங்கள் பல பாவிகளை மனந்திருப்பியது. பின் மிலான் சென்றார். இங்கு வால்தென்ஸ் என்ற பேதகத்தினர் பல தப்பறைகளைப் பரப்பி பூசல்களைக் கிளப்பினர். அதனால் மிலான் அமைதியில்லா நிலையில் இருந்தது. பதிதப் பிரிவினர் பல தவறான கருத்துகளை மிலானில் பரப்பி வந்தனர். மக்களிடையே கட்சி, பூசல்களை ஏற்படுத்தினர். இதனால் அந்நகர் அமைதி இழந்து காணப்பட்டது.

பதிதத்தை ஒடுக்கும் பணி அந்தோனியாருக்குப் புதிதல்லவே! அவரின் போதனையால் அங்கு மீண்டும் சமாதானம் நிலவியது. எத்தனை பேதகத்தினர் வாய்களை அவர் நாவன்மை அடக்கியது! எத்தனை ஆயிரமாயிரம் பதிதர்களை அவர் மனந் திருப்பியுள்ளார்! இங்கும் அவர் மக்களிடையே சமாதானத்தை நிலை நாட்டினார்.

சண்டை சச்சரவுகள் நீங்கின. பேதகமும் அழிந்தது. பின் அவர் கிரமோனாநகர் சென்று, அங்கு துறவிகளுக்கு ஒரு மடத்தைக் கட்டினார். அதன் பின் பிரேஸியா பட்டணஞ்சென்று அங்கும் பேதகத்தைக் களைந்தார். அதன்பின்னர் பிரேனோ, திரெந்து, மாந்துவா, வெரோனா " பட்டணங்களில் போதித்தார். பலரை மனந்திருப்பினார். பிணியாளர்களைக் குணமாக்கினார்.

சபைத்தலைவர் பதவி போதகப்பணிக்கு முட்டுக் கட்டையாக இருந்தது. எனவே சபைத் தலைவர் பதவியிலிருந்து தன்னை விடுவித்துவிடவேண்டுமென்று 1230ல் விண்ணப்பம் செய்தார். இவ்வருடம் கூடிய துறவிகள் மாநாடு அவரின் வேண்டுகோளை ஏற்றது. பின்னர் லாவெர்னா நகர் வந்தார். இங்குதான் அசிசி பிரான்சீஸ் ஐந்து காயம் பெற்றார். அவர் வரவால் துறவிகள் மகிழ்ந்தனர். ஐந்து காயங்கள் பெறும் முன் பிரான்சீஸ் தங்கிய அறையை அவர் தங்கிட அளித்தனர். தாழ்மை மிகும் அந்தோனியார் அதை ஏற்கவில்லை. பதுவை செல்வது வரை, தான் அமைத்த ஒரு குடிலில் கடின தவம் செய்து வந்தார்.

இரண்டாம் முறை உரோமாபுரி பயணம்

"போர்கிலாங்குவில் 1230 மே திங்கள் 25ஆம் நாள் சபையின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தனது ஆன்மீகப் பணியின் பொருட்டும், உடல் நலமில்லாமலிருப் பதாலும், மாநாட்டுப் பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டு மென்று விண்ணப்பித்தார். அது ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பொது அமர்வில் சபையின் மாற்றம் தேவை; சட்டங்களைத் தளர்த்த வேண்டும் என ஒரு சாராரும்; கூடாது என மற்றவரும் வாதிட்டனர். ஒரு முடிவிற்கும் வர இயலவில்லை .

பிரான்சீஸிற்குப் பின் பொதுத் தலைவரான எலியாஸ், சபைச் சட்ட திட்டங்களை மதிக்கவில்லை. விதிகளை தனக்கு ஏற்ப தளர்த்தினார். சபையின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஒரு பெரிய கோவிலைக் கட்டினார். சபையின் வறுமை வார்த்தைப்பாட்டினை பின்பற்றாத இவர் தனக்கென ஒரு குதிரையை வாங்கிப் பயன்படுத்தினார். சபையாரோடு சேர்ந்து உணவுச்சாலையில் உணவருந்தவில்லை. தனியாகச் சுவையான விருந்தினை உண்பார். இத்தகைய வசதிகளை விரும்பிய பல துறவிகள் அவர் பக்கம் சாய்ந்தனர். அந்தோனியார் ஆதாம் என்ற ஆங்கிலத் துறவியை தம்முடன் அழைத்துக் கொண்டு இரண்டாம் முறை உரோமாபுரி சென்றார். பாப்பிறை 9ம் கிரகோரியாரிடம் எலியாஸின் சீர்கேடுகளைப் பற்றி முறையிட்டார். பாப்பு எலியாசை நேரில் அழைத்து விசாரணை செய்தார். அவர் பேரில் சுமத்தப்பட்ட குற்றங்கள் அப்பட்டமாயின. எலியாசை, தூய பிதா பதவியிலிருந்து அகற்றினார். - மீண்டும் பதுவைப் பதியினை அடைந்தார். அவரது தவக்கால பிரசங்கத்தை நகர ஆயரும், குருக்களும், திரளான மக்களும் கேட்டுப் பயனடைந்தனர். கூட்டம் நாள்தோறும் வளர்ந்து கொண்டே வந்தது. பக்கத்துக் கிராம மக்களும் திரண்டு வந்தனர்.

அவரது உடையின் ஒரு பாகத்தைக் கத்தரித்துச் செல்ல சில பக்தியுள்ள பெண்கள் கத்தரிக்கோல் கொண்டு வந்தனர். பக்தியுள்ள வாலிபர் சிலர் துணியை வெட்டாமலிருக்க அவருக்கு காவலாய் நின்றனர்.

அவரது பிரசங்கத்தைக் கேட்டு, பலர் மனம் வருந்தி பச்சாத்தாபம் எனும் தேவ அருள் சாதனம் பெற்றிட வந்தனர்.

பல குருக்கள் - துறவிகள், பாவசங்கீர்த்தனம் அளித்தனர். புனிதரும் காலை முதல் மாலை வரை அன்ன ஆகாரமின்றி பாவசங் கீர்த்தனம் கொடுத்து வந்தார்.