மற்ற புனிதர்கள்

276. நாம் ஜெபிக்கும்போதும், பரித்தியாகங்கள் செய்யும்போது பசாசு நமக்கு பயப்படுகிறது. நாம் தாழ்ச்சியுள்ளவர்களாகவும், நல்லவர்களாகவும் இருக்கும்போதும் அது நமக்கு பயப்படுகிறது. குறிப்பாக, நாம் இயேசுவை மிக அதிகமாக நேசிக்கும் போது, அது மிகவும் பயப்படுகிறது. நாம் சிலுவை அடையாளம் வரையும் போது, அது ஓடிப் போகிறது. -- மடாதிபதியான புனித அந்தோனியார்.

277. ஒரு புனிதனாவதற்கு என்ன செய்ய வேண்டும்? அதை சித்தங்கொள்ள வேண்டும். - புனித தாமஸ் அக்குயினாஸ்.

278. அன்பில் வாழ்ந்தால் தவிர எந்த மனிதனும் உண்மையான மகிழ்ச்சியைக் காண மாட்டான். -- புனித தாமஸ் அக்குயினாஸ்.

279. தாழ்ச்சிக்கு ஓர் உதாரணத்தைத் தேடுகிறாய் என்றால், சிலுவையைப் பார் -- புனித தாமஸ் அக்குயினாஸ்.

280. நான் புத்தகங்களிலிருந்து கற்றுக்கொள்வதை விட பாடுபட்ட சுரூபத்திற்கு முன்பிருந்து ஜெபிப்பதில் அதிகம் கற்றுக்கொள்கிறேன்.-- புனித தாமஸ் அக்குயினாஸ்.

281. மற்றொருவனுக்காக ஜெபிப்பது ஒரு பிறர்சிநேகச் செயலாகும். -- புனித தாமஸ் அக்குயினாஸ்.

282. துன்பத்தைப் பற்றிய அறிவு புனிதர்களின் அறிவாகும். ஆகவே, எதிர்பாராத சிலுவை நமக்கு வந்து, நாம் வேதனையால் அவதிப்படும்போது, அதைக் குறித்து மகிழ்ச்சி கொள்வோமாக. -- புனித சேவியர் கேப்ரினி.

283. அர்ச்சியசிஷ்டதனத்தை அடையுமுன் நாம் பல படிகளில் ஏற வேண்டியிருக்கும் என்று நான் காண்கிறேன். நாம் ஏறும் ஒவ்வொரு படியும் நம் கடைசிப் படியாக இருக்கலாம், அப்போது, நாம் ஒன்றுமே செய்யவில்லை என்று நாம் காண்போ மானால், நாம் இன்னும் தொடங்கவேயில்லை என்பதுதான் பொருள் -- புனித க்ளாட் த லா கொலம்பியேர்.

284. உன் செயல்களை நன்றாகச் செய்து முடிப்பதற்கான ஒரே இரகசியம், கடவுளை மகிழ்விப்பதற்காக மட்டுமே அவற்றைச் செய்வதும், உன் தவறுகளில் கவலையையும், அதைரியப்படுதலையும் தவிர்ப்பதுமேயாகும். -- புனித க்ளாட் த லா கொலம்பியேர்.

285. சிலுவைகள் இவ்வுலகிலிருந்து நம்மை விடுவிக்கின்றன, அப்படிச் செய்வதன் மூலம் அவை நம்மைக் கடவுளோடு சேர்த்துக் கட்டுகின்றன. -- முத். சார்ல்ஸ் த ஃபோக்கால்ட்.

286. நிஜமான முயற்சி இன்றி, எவனும் கிரீடத்தை சம்பாதித்துக் கொள்ள முடியாது என்னும் உண்மைக்கு எல்லாப் புனிதர்களுமே சாட்சியம் தருகிறார்கள். -- புனித தாமஸ் பெக்கெட்.

287. தேவதூதர்கள் மனிதர்களைக் கண்டு பொறாமை கொள்ள முடியும் என்றால், அவர்கள் ஒரே ஒரு காரணத்திற்காகத்தான் பொறாமை கொள்வார்கள். அதுவே திவ்ய நன்மை -- புனித மாக்ஸிமிலியன் கோல்பே.

288. பீடத்தின் மகா பரிசுத்த தேவத்திரவிய அனுமானத்தில் கடவுள் நம் மத்தியில் வாசம் செய்கிறார். -- புனித மாக்ஸிமிலியன் கோல்பே.

289. திவ்ய பலிபூசையின் உச்சகட்டம் தேவ வசீகரமல்ல, மாறாக, திவ்ய நன்மை அருந்துவதேயாகும். -- புனித மாக்ஸிமிலியன் கோல்பே.

290. பரிசுத்ததனம் அசாதாரணமான செயல்களில் அல்ல, மாறாக, கடவுள் பேரிலும், உன் பேரிலும், மற்றவர்கள் பேரிலும் உனக்குள்ள கடமைகளை நிறைவேற்றுவதிலேயே அடங்கியுள்ளது என்பதை மறக்காதே. -- புனித மாக்ஸிமிலியன் கோல்பே.

291. நேசம் பரித்தியாகத்தின் வழியாகவே வாழ்கிறது, அது கொடுப்பதால் போஷிக்கப் படுகிறது என்பதை நினைவில் கொள்வோம். பரித்தியாகமின்றி, அன்பில்லை. -- புனித மாக்ஸிமிலியன் கோல்பே.

292. சந்தோஷ உற்சாகம் இருதயத்தைப் பலப்படுத்தி, நல்ல வாழ்வில் நாம் நிலைகொள்ளச் செய்கிறது. ஆகவே, கடவுளின் ஊழியன் எப்போதும் சந்தோஷமுள்ள மனநிலைகளில் இருக்க வேண்டும். -- புனித பிலிப் நேரியார்.

293. ஏதாவது ஒரு நல்ல பக்தி முயற்சியைத் தேர்ந்து கொண்டு, அதைத் தொடர்ந்து செய்வதும், ஒருபோதும் அதைக் கைவிடாதிருப்பதும் நல்லது. -- புனித பிலிப் நேரியார்.

294. ஊக்கப்படுத்தப்பட அல்லது உதவி பெற மிக அதிகத் தேவையில் இருப்பவர்களில் உமக்கு நான் ஊழியம் செய்ய இன்று எனக்குப் போதுமான நேரம் கிடைக்க உதவியருளும். -- புனித வின்சென்ட் த பவுல்.

295. மற்ற மனிதர்களின் துன்பங்களுக்கும் தாழ்நிலைக்கும் திறப்பானவையாக நம் இருதயங்களை வைத்துக்கொள்ளவும், கடவுளின் உணர்வாகவே இருக்கிற தயா உணர்வைக் கடவுள் நமக்குத் தந்தருள வேண்டுமென்று தொடர்ந்து ஜெபிக்கவும் நாம் பிரயாசைப்பட வேண்டும். -- புனித வின்சென்ட் த பவுல்.

296. பசாசை வெற்றி கொள்வதற்கு அனைத்திலும் அதிக வல்லமையுள்ள ஆயுதம் தாழ்ச்சியே. ஏனெனில் அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதே அவனுக்குத் தெரியாது என்பது போல, அதற்கு எதிராகத் தன்னைக் காத்துக் கொள்வது எப்படி யயன்றும் அவன் அறியாதிருக்கிறான்.-- புனித வின்சென்ட் த பவுல்.

297. நான் எங்கே சென்றாலும், அங்கே உம்மைக் காண்கிறேன், என் தேவனே! -- புனித ஜான் பாப்டிஸ்ட் தெ ல ஸால்.

298. திவ்ய நற்கருணையே மனிதன் மீது இயேசு கிறீஸ்து கொண்டுள்ள அன்பின் உத்தமமான வெளிப்பாடாக இருக்கிறது. -- அர்ச். மரிய கொரெற்றி.

299. விசுவாசம் எனக்கு பலம் தரும் வரையில், நான் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பேன் -- முத்.பியயர் ஜார்ஜியோ ஃப்ராஸ்ஸாட்டி.

300. நம் தேவனாகிய ஆண்டவரை நம் முழு பலத்தோடு நேசிப்பதும், நம்மை நாம் நேசிப்பது போல பிறரையும் நேசிப்பதுமான, கத்தோலிக்க விசுவாசத்தின் சாராம்ச மாகிய இரு கட்டளைகளோடு நம் வாழ்வு ஒத்திராத வரையில், நாம் ஒருபோதும் உண்மையான கத்தோலிக்கர்களாக இருக்க மாட்டோம். -- முத்.பியயர் ஜார்ஜியோ ஃப்ராஸ்ஸாட்டி.

301. சாதாரண காரியங்களில் அசாதாரணமானவர்களாக இருங்கள் -- புனித ஜோசப் மரெல்லோ.

302. எந்த மனிதனும், அவன் எவ்வளவுதான் பலவீனமானவனாக இருந்தாலும், சிலுவையின் வெற்றியில் ஒரு பங்கு அவனுக்கு மறுக்கப்படுவதில்லை. கிறீஸ்துவின் ஜெபத்தால் உதவி செய்யப்பட முடியாத தொலைவில் எவனும் இல்லை. -- அர்ச். பெரிய சிங்கராயர்.

303. தெய்வீக இருதயணம் எல்லா நற்காரியங்களும் நிறைந்திருக்கிற ஒரு பெருங்கடலாக இருக்கிறது. அதில் பரிதாபத்திற்குரிய ஆத்துமங்கள் தங்கள் தேவைகள் அனைத் தையும் வீசிவிட முடியும்; அது நம் எல்லாத் துயரத்தையும் அமிழ்த்தி விடுகிற சந்தோஷம் நிறைந்த ஒரு பெருங்கடலாகவும், நம் மடமையை அமிழ்த்தி விடுகிற தாழ்ச்சியின் பெருங்கடலாகவும், இக்கட்டில் இருப்பவர்களுக்கு இரக்கத்தின் பெருங் கடலாகவும், நம் வறுமையை நாம் அமிழ்த்தி விடக்கூடிய அன்பின் பெருங்கடலாக வும் இருக்கிறது. - புனித மர்கரீத் மரியம்மாள்.

304. நான் கிறீஸ்தவன் என்று வெறுமனே அழைக்கப்படுவதையல்ல, மாறாக, உண்மை யாகவே ஒரு கிறீஸ்தவனாக இருப்பதையே விரும்புகிறேன். ஆம், நான் ஒரு கிறீஸ்தவன் என்பதை எண்பித்தால்தான், அந்தப் பெயரை நான் கொண்டிருக்க முடியும். -- புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார்.

305. பரலோகத்தால் குணப்படுத்த முடியாத துயரம் ஏதும் பூலோகத்தில் இல்லை. -- புனித தாமஸ் மூர்.

306. கடவுள் என்னை அங்கீகரிக்கும்போது, மனிதர்கள் என்னைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதைக் குறித்து நான் மிக அதிகமாகக் கவலை கொள்வதில்லை. -- புனித தாமஸ் மூர்.

307. சிலுவையே பரலோகத்திற்கு வழி, ஆனால் அது மனமுவந்து சுமந்துகொள்ளப்படும் போது மட்டுமே. -- புனித சிலுவை சின்னப்பர்.

308. இருதயத்தின் தாழ்ச்சியினின்றே மன அமரிக்கையும், சாந்தமுள்ள நடத்தையும், உள்ளரங்க சமாதானமும், ஒவ்வொரு நன்மையும் புறப்படுகின்றன. -- புனித சிலுவை சின்னப்பர்.

309. துன்பத்தில் உடனே நம்பிக்கையோடு கடவுளை நெருங்கிச் செல், அப்போது நீ பலத்தையும், ஞான வெளிச்சத்தையும், போதகத்தையும் பெற்றுக்கொள்வாய். -- புனித சிலுவை சின்னப்பர்.

310. இயேசுவாலும், மரியாயாலும் மிக நன்றாகப் புரிந்துகொள்ளப்படுகிற மொழி, அன்பின் மெளனமே. -- புனித சிலுவை அருளப்பர்.

311. கிறீஸ்துவின் சிலுவையைத் தேடாதவன் எவனும், அவருடைய மகிமையைத் தேடுவதில்லை. -- புனித சிலுவை அருளப்பர்.

312. நீ கிறீஸ்துவைப் போல் இருக்க விரும்பினால், சிலுவையைக் கூப்பிடு, அல்லது அதை எப்போதும் தேடு. -- புனித சிலுவை அருளப்பர்.

313. நம் வாழ்வின் இறுதியில், நாம் அனைவரும் சிநேகத்தால் தீர்ப்பிடப்படுவோம். -- புனித சிலுவை அருளப்பர்.

314. உன் இருதயம் மனிதத் தன்மையான எதனாலும் நிறுத்தி வைக்கப்படாதபடி, கடவுளும் நீயும் மட்டுமே உலகத்தில் இருப்பது போல வாழு. -- புனித சிலுவை அருளப்பர்.

315. அதிகமாகத் துன்பப்படாமல், பெரிய காரியங்கள் எதுவும் ஒருபோதும் சாதிக்கப் படுவதில்லை -- புனித சியயன்னா கத்தரீனம்மாள்.

316. நீ எப்படி இருக்க வேண்டுமென்று கடவுள் விரும்புகிறாரோ, அப்படி இரு, அப்போது நீ உலகம் முழுவதையும் பற்றியயரியச் செய்வாய். -- புனித சியயன்னா கத்தரீனம்மாள்.

317. நீ உண்மையாகவே இயேசுவை நேசிக்க விரும்பினால், முதலில் துன்பப்படக் கற்றுக் கொள், ஏனெனில் துன்பம் உனக்கு நேசிக்கக் கற்றுக் கொடுக்கிறது. -- புனித ஜெம்மா கல்கானி.

318. உனக்காகத் தம்மைத் தாழ்த்திக் கொண்டவரை நோக்கி உன்னை உயர்த்து. -- புனித ஜெம்மா கல்கானி.

319. இந்தப் புத்தாண்டின்போது, ஒரு புதிய வாழ்வைத் தொடங்க நான் தீர்மானம் செய்கிறேன். இந்த ஆண்டில் எனக்கு என்ன நிகழும் என்று எனக்குத் தெரியாது. ஆனால், என் தேவனே, நான் என்னை முழுமையாக உம்மிடம் கையளித்து விடுகிறேன்.-- புனித ஜெம்மா கல்கானி.

320. இயேசுவின் மகா பரிசுத்த திரு இருதயமே, பரிசுத்தமான அனைத்திலும் நிலைத் திருக்க என் இருதயத்திற்கு உதவும். -- புனித காஸிக்கா ரீத்தம்மாள்.

321. நீ ஒரு நல்ல செயலைச் செய்யும்போது, முதலில் கடவுளைப் பிரியப்படுத்தும் கருத்தையும், அதன்பின் உன் அயலானுக்கு நன்மாதிரிகை தரும் கருத்தையும் கொண்டிரு. -- புனித அல்போன்ஸ் லிகோரியார்.

322. கடவுளின் பரிசுத்த கன்னித் தாயாருக்குச் செலுத்தப்படும் சங்கை மரியாதைகளில் எல்லாம், ஜெபமாலையைப் போல் அவர்களுக்கு அதிகம் உகந்தது எதையும் நான் அறியவில்லை. -- புனித அல்போன்ஸ் லிகோரியார்.

323. பொறுமை என்பது கடவுளுக்கு நாம் ஒப்புக்கொடுக்கக் கூடிய உத்தமமான பலியாக இருக்கிறது, ஏனெனில் நம் துன்ப சோதனைகளின்போது, வேறெதையுமன்றி, நமக்கு அவர் அனுப்பும் சிலுவையையே அவருடைய திருக்கரங்களிலிருந்து நாம் ஏற்றுக் கொள்கிறோம். -- புனித அல்போன்ஸ் லிகோரியார்.

324. கடந்த காலத்தைப் பொறுத்த வரை, அதை நாம் கடவுளின் இரக்கத்திடமும், எதிர் காலத்தை தேவ பராமரிப்பிடமும் ஒப்படைத்து விடுவோம். நிகழ்காலத்தில் பரிசுத்தமாக வாழ்வதே நம் பணியாகும் -- புனித ஜியான்னா மோல்லா.

325. மகிழ்ச்சியின் இரகசியம் அந்தந்த கணத்தில் வாழ்வதும், கடவுள் தம்முடைய நன்மைத்தனத்தில் நமக்கு நாளுக்கு நான் அனுப்புகிற அனைத்திற்காகவும் அவருக்கு நன்றி செலுத்துவதுமேயாகும். -- புனித ஜியான்னா மோல்லா.

326. அன்பும் பரித்தியாகமும், சூரியனையும் ஒளியையும் போல நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கின்றன. துன்பப்படாமல் நேசிக்கவோ, நேசமின்றித் துன்புறவோ நம்மால் இயலாது. -- புனித ஜியான்னா மோல்லா.

327. நேசம் என்பது ஆண்களுடையவும் பெண்களுடையவும் ஆத்துமத்தில் ஆண்டவர் வைத்துள்ள அனைத்திலும் அழகிய உணர்வாகும். -- புனித ஜியான்னா மோல்லா.

328. நேசம் மொத்தமானதாகவும், முழுமையானதாகவும், நிறைவானதாகவும், கடவுளின் திருச்சட்டத்தால் ஆளப்படுவதாகவும் இருக்க வேண்டும். அது நித்தியத்திலும் தொடர்வதாக இருக்க வேண்டும். -- புனித ஜியான்னா மோல்லா.

329. நாம் கிறீஸ்தவத்தின் அழகிற்கும், மகிமைக்கும் உயிருள்ள சாட்சிகளாக இருக்க வேண்டும். -- புனித ஜியான்னா மோல்லா.

330. தன் அன்றாடப் பணியைக் கொண்டு ஒருவன் பரலோகத்தை சம்பாதித்துக் கொள்கிறான்.-- புனித ஜியான்னா மோல்லா.

331. ஒரு மனிதனின் முன்னேற்றத்தில் முக்கியமானதாக இருப்பது, உள்ளபடி அவனுடைய சரீர உழைப்போ, அல்லது அவன் செய்யும் பணியின் தன்மையோ அல்ல, மாறாக, எத்தகைய விசுவாச உணர்வோடு அது செய்யப்படுகிறது என்பதே முக்கியமாகும். -- புனித பிரான்சிஸ் சவேரியார்.

332. நம் ஆண்டவராகிய இயேசு கிறீஸ்துவின் நேசத்தின் மகா விலையேறப்பெற்ற வாக்குறுதியாக இருக்கிற சிலுவையைப் போல, அவருடைய திரு இருதயத்தோடு நம்மை அதிக நெருக்கமாக ஒன்றிணைப்பது வேறு எதுவுமில்லை. -- புனித மர்கரீத் மேரி அலாக்கோக்.

333. கடவுளோடு ஒட்டியிரு, மற்ற எல்லாவற்றையும் அவரிடம் விட்டு விடு; அவர் உன்னை அழிந்து போக விட்டுவிட மாட்டார். உன் ஆன்மா அவருக்குப் பிரிய மானது, அவர் அதை இரட்சிக்க விரும்புகிறார். -- புனித மர்கரீத் மேரி அலாக்கோக்.

334. இயேசுவின் திரு இருதயம் நீ மகிழ்ச்சியால் நிரம்பியிருக்கும் நேரத்தை விட நீ துன்புறும்போதுதான் உனக்கு அதிக நெருக்கமாக இருக்கிறது. -- புனித மர்கரீத் மேரி அலாக்கோக்.

335. பரிசுத்த ஜெபமாலை மாமரிக்கு அனைத்திலும் அதிகப் பிரியமான ஜெபமாகும், அது புனிதர்களால் மிக அதிகமாக விரும்பப்பட்டது, கிறீஸ்தவ மக்களினங்களிடையே மிக அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது, மலைக்கச் செய்யும் அற்புதங்களைக் கொண்டு கடவுளால் மிக அதிகமாக கனப்படுத்தப்படுகிறது, திவ்ய கன்னிகையின் மாபெரும் வாக்குறுதிகளால் மிக அதிகமாக வளப்படுத்தப்பட்டுள்ளது. -- முத். பார்த்தேலோ லோங்கோ.

336. கடவுள் அநீதியானவர் அல்ல. அவர் தாழ்ச்சியோடு தட்டும் மனிதனுக்கு எதிராகக் கதவை அறைந்து சார்த்த மாட்டார். -- புனித கிளிமாக்கஸ் அருளப்பர்.

337. உன் ஜெபத்தில் ஏதாவது ஒரு வார்த்தையில் இனிமையையோ, அல்லது மனஸ்தாபத் தையோ நீ உணர்வாய் என்றால், அதிலேயே தங்கியிரு; ஏனெனில் அப்போது நம் காவல் தூதர் நம்மோடு ஜெபித்துக் கொண்டிருக்கிறார். -- புனித கிளிமாக்கஸ் அருளப்பர்.

338. உன் ஆசாபாசங்கள் உன்னைக் கட்டுப்படுத்தத் தொடங்குமுன், நீ அவற்றைக் கட்டுப் படுத்து. -- புனித கிளிமாக்கஸ் அருளப்பர்.

339. நம் இருதயம் சரியானதாகவும், நம் கருத்து ஆர்வமுள்ளதாகவும், நம் தைரியம் நிலையானதாகவும், நம் நம்பிக்கை கடவுளின் மீது பதிக்கப்பட்டதாகவும் இருக்கும் வரையிலும், நாம் ஒவ்வொரு புயலையும் பத்திரமாகக் கடந்து துறைமுகத்தை அடைவோம். -- புனித பிரான்சிஸ் சலேசியார்.

340. திவ்ய நற்கருணையிலிருக்கும் இயேசுவை நாம் ஒரு நாளில் ஒரு இலட்சம் தடவைகள் சந்திக்க வேண்டும். -- புனித பிரான்சிஸ் சலேசியார்.

341. உண்மையாகவே தாழ்ச்சியுள்ளவர்கள் தங்களுக்கு வரும் எல்லாப் புகழ்ச்சியையும் ஏற்க மறுத்து, அதை முழுவதும் கடவுளுக்குச் செலுத்துகிறார்கள். -- புனித பிரான்சிஸ் சலேசியார்.

342. நீ ஜெபமாலையை நன்றாய்ச் சொல்வாய் என்றால், அதுதான் அனைத்திலும் சிறந்த ஜெபமுறையாக இருக்கிறது. -- புனித பிரான்சிஸ் சலேசியார்.

343. திவ்ய நற்கருணையிலிருக்கும் இயேசுவை நாம் ஒரு நாளில் ஒரு இலட்சம் தடவைகள் சந்திக்க வேண்டும். -- புனித பிரான்சிஸ் சலேசியார்.

344. நீ வேலையில் மூழ்கியிருக்கும்போது தவிர, மற்றபடி அரை மணி நேர தியானம் அத்தியாவசியமானது. நீ வேலையில் மும்முரமாக மூழ்கியிருக்கும்போதோ, ஒரு முழு மணி நேர தியானம் தேவைப்படுகிறது. -- புனித பிரான்சிஸ் சலேசியார்.

345. நீ என்னவாக இருக்கிறாயோ, அதை விடுத்து வேறொன்றாக இருக்க விரும்பாதே. அந்நிலையிலேயே உத்தமமாக இருக்க முயற்சி செய். -- புனித பிரான்சிஸ் சலேசியார்.

346. ஒருபோதும் எதிலும் அவசரப்படாதே; எல்லாவற்றையும் மவுனமாகவும், அமைதி யான உணர்வோடும் செய். -- புனித பிரான்சிஸ் சலேசியார்.

347. கடவுளுக்கு நல்ல ஊழியனாக இருப்பது என்பதற்கு, உன் அன்றாடத் தவறுதல்களில் உன்னிடமே நீ பொறுமையாக இருப்பது என்பதும், உன் அயலானின் எல்லாக் குறைபாடுகளோடும் அவனை சகித்துக் கொள்வது என்பதும் பொருளாகும். -- புனித பிரான்சிஸ் சலேசியார்.

348. கடவுளின் ஊழியத்தில் சிறியது என்று ஏதுமில்லை. -- புனித பிரான்சிஸ் சலேசியார்.

349. ஏன் இப்படி அவசரப்படுகிறாய்? மெதுவாகவும் சமாதானத்தோடும் உன் வேலையைச் செய், ஒரு சமயத்தில் ஒரு காரியத்தை மட்டும் செய். அப்போது நல்ல முன்னேற்றம் காண்பாய். -- புனித பிரான்சிஸ் சலேசியார்.

350. ஒருவன் ஜெபத்தை நேசிக்காதபோது, தன் ஆசாபாசங்களை எதிர்த்து நிற்பது அவனுக்கு சாத்தியமேயில்லாத காரியம்! -- புனித பிரான்சிஸ் சலேசியார்.

351. புனிதர்களின் வாழ்வு நடைமுறையில் கடைப்பிடிக்கப்படும் சுவிசேஷமேயன்றி வேறு எதுவுமில்லை. -- புனித பிரான்சிஸ் சலேசியார்.

352. நிர்ப்பாக்கியத்தின் கொந்தளிப்பான நீர்நிலையின்மீது நடக்கும்படி கடவுள் உன்னிடம் கேட்கிறார் என்றால், அஞ்சாதே, ஏனெனில் கடவுள் உன்னோடு இருக்கிறார். தைரியமாயிரு, அப்போது பத்திரமாயிருப்பாய். -- புனித பிரான்சிஸ் சலேசியார்.

353. கடவுள் தாழ்ச்சியை எவ்வளவு அதிகமாக நேசிக்கிறார் என்றால், அதைத் தாம் காணும் போதெல்லாம் அதை நோக்கி உடனடியாக அவர் ஈர்க்கப்படுகிறார். -- புனித பிரான்சிஸ் சலேசியார் புனித பிரான்செஸ் த ஷாந்தாலுக்கு எழுதியது.

354. கல்வாரி மலையானது, அன்பின் உயர் கல்வி நிலையமாகும். -- புனித பிரான்சிஸ் சலேசியார்.

355. புனித சூசையப்பரிடம் மன்றாடும்போது, நீ அதிகம் சொல்ல வேண்டியதில்லை. ""என் இடத்தில் நீர் இருந்திருந்தால், என்ன செய்திருப்பீரோ, அதையே நான் செய்ய எனக்காக ஜெபியும்'' என்று மட்டும் சொல். -- புனித ஆந்த்ரே பெஸ்யஸட்.

356. சந்தோஷ உற்சாகமுள்ள மனநிலை மிக மேன்மையான எல்லாச் செயல்களுக்காகவும் மகிமையுள்ள மனதை ஆயத்தம் செய்கிறது. - புனித எலிசபெத் ஆன் ஸேட்டோன்.

357. நம் அன்றாட வேலையில்... கடவுளின் திருச்சித்தத்தைச் செய்; அவர் சித்தங் கொள்ளும் விதத்தில் அதைச் செய்; அது அவருடைய சித்தம் என்பதால் அதைச் செய். - புனித எலிசபெத் ஆன் ஸேட்டோன்.

358. நான் சமாதானத்தோடும், உறுதியோடும் கத்தோலிக்கத் திருச்சபையிடம் செல்வேன்; ஏனெனில் விசுவாசம் நம் இரட்சணியத்திற்கு இவ்வளவு முக்கியமானது என்றால், எங்க உண்மையான விசுவாசம் முதலில் தொடங்கியதோ, அங்கே அதை நான் தேடுவேன், கடவுளிடமிருந்தே அதைப் பெற்றுக் கொண்டவர்களிடையே அதைத் தேடுவேன்.- புனித எலிசபெத் ஆன் ஸேட்டோன்.

359. நாம் ஜெபிப்போம், மீதியை கடவுள் செய்வார். -- புனித கனோஸா மதலேனம்மாள்.

360. நான் ஒரு சமயத்திற்கு ஓரடி மட்டும் எடுத்து வைத்து பயணம் செய்கிறேன். ஏனெனில் இரண்டு பெரிய பயணப் பெட்டிகளை நான் சுமந்து செல்கிறேன். அவற்றில் ஒன்றில் என் பாவங்கள் இருக்கின்றன, அதை விட மிக அதிக பாரமான மற்றொன்றில், இயேசுவின் அளவற்ற வேறுபலன்கள் இருக்கின்றன. நான் மோட்சத்தை அடையும் போது, இந்தப் பெட்டிகளைத் திறந்து கடவுளை நோக்கி: ""நித்திய பிதாவே, இப்போது நீர் தீர்ப்பிடலாம்'' என்பேன். மேலும், புனித இராயப்பரிடம்: ""கதவைச் சார்த்தும், ஏனெனில் நான் இங்கே தங்குகிறேன்'' என்பேன். -- புனித ஜோசஃபின் பக்கிற்றா.

361. கடவுளைத் தவிர வேறு யார் உனக்கு சமாதானத்தைத் தர முடியும்? உலகத்தால் எப்போதாவது இருதயத்தைத் திருப்திப்படுத்த முடிந்திருக்கிறதா? -- புனித ஜெரார்ட் மஜெல்லா.

362. பீடத்தின் மகா பரிசுத்த தேவத்திரவிய அனுமானமாகிய திவ்ய நற்கருணை காணப் படக்கூடியவராக ஆக்கப்பட்டிருக்கிற கிறீஸ்துவாக இருக்கிறது. கிறீஸ்துவாகிய அந்த ஏழையான நோயுற்று மனிதன் மீண்டும் காணப்படக்கூடியவராக ஆக்கப்படுகிறார். -- புனித ஜெரார்ட் மஜெல்லா.

363. யாருடைய இருதயங்கள் மாசற்றவையாக இருக்கின்றனவோ, அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் தேவாலயங்களாக இருக்கிறார்கள். -- புனித லூசியம்மாள்.

364. சிலுவையைத் தவிர்த்து, நாம் பரலோகத்திற்கு ஏறிச் செல்லக் கூடிய வேறு ஏணி எதுவுமில்லை. -- அர்ச். லீமா ரோஸ்.

365. போராட்டங்கள் அதிகரிக்கும்போது தேவ கொடைகளாகிய வரப்பிரசாதங்களும் அதிகரிக்கின்றன. -- அர்ச். லீமா ரோஸ்

366. நாம் புனிதர்களைப் போல் இறக்க விரும்பினால், அவர்களைப் போல வாழவும் வேண்டும் என்பதை நாம் ஒருபோதும் மறவாதிருப்போமாக. -- புனித தியோடோர் குவெரின்.

367. நாம் சிலுவையை மிக அதிகமாக நேசிப்போமாக, ஏனெனில் அங்கேதான் நாம் நம் வாழ்வையும், நம் உண்மையான அன்பையும், நம்முடைய மிகப் பெரிய கஷ்டங்களில் நம் பலத்தையும் கண்டடைவோம். -- அர்ச். மரியா த மத்தியாஸ்.

368. சிலுவை எப்படிப்பட்டதாக இருந்தாலும், பொறுமையோடும் தாழ்ச்சியோடும் அதை அனுபவிப்பதுதான் நாம் செய்ய வேண்டிய மிக உயர்ந்த பணியாகும். -- புனித கேத்தீன் ட்ரெக்யஸல்.

369. ஆண்டவர் நம் சூரிய அஸ்தமனங்களை சூரிய உதயமாக மாற்றியிருக்கிறார். -- புனித கிளமெண்ட்.

370. வாரம் ஒரு முறை மட்டும் உணவு உண்டால், நீ பிழைத்திருப்பாயா? உன் ஆன்மாவின் நிலையும் அதுதான். திவ்ய நற்கருணையைக் கொண்டு அதற்கு உணவளி. - அர்ச். ஆந்த்ரே பெஸ்யஸட்.

371. எதிர்காலத்தைப் பற்றி உன் எல்லாக் கவலைகளையும் நம்பிக்கையோடு கடவுளின் திருக்கரங்களில் வைத்து விடு, ஒரு சிறு குழந்தையைப் போலவே ஆண்டவரால் வழிநடத்தப்பட உன்னைக் கையளித்து விடு. -- புனித எடித் ஸ்டேயின்.

372. கடவுளின் இரக்கத்தின் எல்லாப் பொக்கிஷங்களும் மரியாயின் திருக்கரங்களில் இருக்கின்றன. -- புனித தமியான் இராயப்பர்.

373. ஜெபமாலை ஜெபிக்கும் ஒரு போர்ப்படை என்னிடமிருந்தால், உலகத்தை மனந் திருப்ப என்னால் முடியும். -- முத். பாப்பரசர் ஒன்பதாம் பத்திநாதர்.

374. உன் தாயை அறிந்து கொள்! உன் தாயை நேசி! உன் தாயைக் கண்டுபாவி! உன் தாயைப் பிறர் அறியச் செய். -- முத். ஆல்பெரியோன். 

375. மாமரியை நேசிக்கும் எவனும் இரட்சிக்கப்படுவான், மாமரியை வெகுவாக நேசிக்கும் எவனும் ஒரு புனிதனாவான் என்பதை நினைவில் கொள்வோமாக. முத். ஆல்பெரியோன்.

376. கடவுளின் திருத்தாயாரின் மீது மிகுந்த அன்பில்லாதவன் எவனும், அவர்களுடைய திருமகனின் மீது மிகுந்த அன்பு கொண்டிருக்கவே முடியாது. -- புனித ஜோசப் கஃபாஸோ.

377. என்னை எவ்வளவோ அதிகமாக நேசித்த தேவ தாயாரின் மீதான அன்பில் ஒவ்வொரு நாளும் ஒரு சிறிதளவாவது வளர நான் ஆசிக்கிறேன். - புனித பெர்க்மான்ஸ்.

378. மரியாயுடன் வாழு, அப்போது இரட்சிக்கப்படுவாய். உண்மையில், அவர்களுடைய திருநெஞ்சினின்று உன்னை யார் பிய்த்தெடுக்க முடியும்? -- புனித ராபர்ட் பெல்லார்மீன்.

379. பொதுவில் வாழும் மனிதர்களுக்கு சமாதானமும், ஐக்கியமும் அனைத்திலும் அதிக அவசியமான காரியங்களாகும். எதைக் கொண்டு நாம் ஒருவர் ஒருவருடைய குறை களை சகித்துக்கொள்கிறோமோ, அந்தப் பொறுமையுள்ள பிறர்சிநேகத்தைப் போல வேறு எதுவும் இந்த சமாதானத்தையும், ஐக்கியத்தையும் நம்மிடையே நிறுவி, அதைப் பாதுகாக்க முடியாது. -- புனித ராபர்ட் பெல்லார்மீன்.

380. மாமரியின் பரிந்து பேசுதலின்றி கடவுளின் உபகாரங்களைக் கேட்பவன், இறக்கைகள் இன்றி பறக்க விரும்பும் பறவையைப் போன்றவன். -- புனித அந்தோனினுஸ்.

381. சகல வரப்பிரசாதங்களும் கடவுளிடமிருந்து இயேசுவுக்கும், இயேசுவிடமிருந்து மாமரிக்கும், மாமரியிடமிருந்து நமக்கும் வருகின்றன. -- புனித சியயன்னா பெர்னார்தீன்.

382. கடவுளுக்குப் பிறகு, அவருடைய திருத்தாயாரை விட மேலான எதையும் சிந்திப்பதும் கூட இயலாத காரியம். -- புனித ஆன்செல்ம்.

383. பல வரப்பிரசாதங்களை நாம் கடவுளிடம் கேட்டால், அவற்றைப் பெற்றுக்கொள்ள மாட்டோம்; ஆனால் மாமரியிடம் கேட்டால், அவற்றைப் பெற்றுக்கொள்வோம், காரணம், மாமரி அதிக வல்லமையுள்ளவர்கள் என்பதல்ல, மாறாக, இம்முறையில் மாமரியை மகிமைப்படுத்த கடவுள் விரும்புகிறார் என்பதே. -- -- புனித ஆன்செல்ம்.

384. ஒரு படைப்பு கொண்டிருக்கக் கூடிய உச்சபட்ச அழகு, மாசற்றதனம் மற்றும் பரிசுத்த தனம் ஆகிய எல்லாவற்றையும் கடவுள் தம் திருத்தாயாருக்குத் தந்திருக்கிறார். -- புனித எஃப்ரேம்.

385. கிறீஸ்துவின் திருப்பாடுகளில் குறைவுபட்டது எதுவாயினும், அதை மாமரி தன் இருதயத்தில் அனுபவித்ததன் காரணமாக, அவர்கள் நம் இணை இரட்சகியாக இருக் கிறார்கள். -- புனித இரேனேயுஸ்.

386. சுவாசம் உடலுக்கு உயிரளிப்பது போலவே, அடிக்கடி மாமரியிடம் மன்றாடுவது ஆன்மாவுக்கு உயிரளிக்கிறது -- புனித ஜெர்மானுஸ்.

387. ரோஜாக்கள் வளர்வது போல, முட்களும் வளர்கின்றன. இதே விதமாக, மாமரிக்கு வயது செல்லச் செல்ல, அவர்களுடைய துன்பங்கள் மேன்மேலும் கூர்மையாகிக் கொண்டு வந்தன. -- அர்ச். பிரிட்ஜத்தம்மாள்.

388. கடவுளை நேசி, கடவுளுக்கு ஊழியம் செய்; எல்லாம் அதில் உள்ளது. -- அர்ச். அசிசி கிளாரம்மாள்.

389. எல்லாத் தவறையும் எதிர்த்துப் போராடு, ஆனால் நல்ல மனநிலையோடும், பொறுமையோடும், கருணையோடும், அன்போடும் செய். கடுமை உன் சொந்த ஆத்துமத்தை சேதப்படுத்தி, மிகச் சிறந்த பலனைக் கெடுத்து விடும். - புனித ஜான் கனிஷியுஸ்.

390. ஒருவன் விசேஷமாக சிலுவைக்கென தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்போது, அதிலிருந்து விடுதலை பெற ஆசிக்க முடியாது. -- புனித தெரேஸா பெனடிக்டா.

391. ஒருவன் எல்லோரிலும் கடவுளைக் காண வேண்டும். -- புனித கத்தரீன் லபூரே.

392. சமாதானமே உன் தேடலாகவும், நோக்கமாகவும் இருப்பதாக. -- புனித ஆசீர்வாதப்பர்.

393. ஜெபமாலை எண்ணற்ற ஆசீர்வாதங்களின் சேமிப்புக் கிடங்காக இருக்கிறது. -- முத். ஆலன் லா ரோச்.

394. அன்றாட வாழ்வின், சாதாரண வாழ்வின் சிறு காரியங்களைப் பற்றிக்கொள். புனிதனாக இருப்பதற்கு, பெரிய காரியங்களைச் செய்யத் தேவையில்லை, மாறாக சிறிய காரியங்களை மேலான விதத்தில் செய்வது மட்டும் போதும். -- அர்ச். ரஃபேல் ஆர்னேய்ஸ் பேரோன்.

395. கடவுளின் மீது உனக்குள்ள நம்பிக்கை எவ்வளவு பெரியதாகவும், எவ்வளவு பிடிவாத மானதாகவும் இருக்கிறதோ, அவ்வளவுக்கு அதிகமாக நீ கேட்பதை அபரிமிதமாகப் பெற்றுக்கொள்வாய். -- புனித பெரிய ஆல்பெர்ட்.

396. அனைத்திற்கும் ஆண்டவராகிய இயேசு கிறீஸ்துவே! நீர் என் இருதயத்தைக் காண்கிறீர்; என் ஆசைகளை நீர் அறிந்திருக்கிறீர். நானாக இருக்கிற அனைத்தையும் - நீர் மட்டும் - சொந்தமாக்கிக் கொள்ளும். நான் உம்முடைய ஆடாயிருக்கிறேன்; பசாசை வெல்ல என்னைத் தகுதியுள்ளவளாக்கும். -- புனித அகதா.

397. பொக்கிஷங்களைக் காப்பாற்றுவதை விட, ஆண்டவருக்காக ஆன்மாக்களை இரட்சிப்பது மேலான காரியம். - புனித அம்புரோஸ்.

398. கடவுளின் வார்த்தையிலிருந்து கடவுளின் திரு இருதயத்தை அறிந்துகொள்ளுங்கள். -- புனித பெரிய கிரகோரியார்.

399. நேசம் செயல்களில் எண்பிக்கப்படுகிறது. எங்கே நேசம் இருக்கிறதோ, அங்கே அது பெரிய காரியங்களைச் செய்கிறது. ஆனால் அது செயல்படுவதை நிறுத்திக் கொள்ளும்போது, அது தன் இருத்தலையே நிறுத்திக் கொள்கிறது. -- புனித பெரிய கிரகோரியார்.

400. திவ்ய நற்கருணையில் இயேசுவையும், திவ்ய நற்கருணையில் எல்லாவற்றையும் எப்படிக் கண்டுபிடிப்பதென்று அறிந்திருக்கிற ஆன்மா பேறுபெற்றது. -- அர்ச். பீற்றர் ஜூலியன் எம்மார்ட்.

401. உலகம் மாறும்போது, சிலுவை உறுதியாக நிற்கிறது. -- புனித ப்ரூனோ.

402. நீ உன் ஜெபமாலையைச் சொல்லும்போது, சம்மனசுக்கள் அக்களிக்கிறார்கள், பரிசுத்த தமத்திரித்துவம் அதில் இன்பம் காண்கிறது, என் திருமகனும் அதில் மகிழ்ச்சி யைக் காண்கிறார், நானும் நீ கற்பனை செய்யக்கூடியதை விட அதிக மகிழ்ச்சியடை கிறேன். -- நம் திவ்ய இராக்கினி முத். ஆலன் த லா ரோச்சிடம் கூறியது.

403. இறுதிக் காலங்களில், மனிதன் அன்பாலும், தாழ்ச்சியாலும், கருணையாலும் இரட்சிக்கப்படுவான். -- புனித ஜார்ஜியா கபிரியேல்.

404. திவ்ய நற்கருணை ஆசீர்வாதம் என் வாழ்வில் பாதியாகும். மற்றொரு பாதி இயேசுவை நேசிப்பதிலும், அவருக்காக ஆன்மாக்களை வெற்றி கொள்வதிலும் அடங்கியுள்ளது. -- புனித மேரி யஹர்மினா க்ரிவோட்.

405. தீய மனிதர்களை உன் சாந்தமுள்ள கருணையால் வெற்றி கொள், பக்தியார்வமுள்ள மனிதர்களை உன் நன்மைத்தனத்தால் ஆச்சரியப்படுத்து, சட்டத்தை நுணுக்கமாக அனுசரிப்பதை நேசிப்பவனை உன் தயாளத்தால் வெட்கத்திற்குள்ளாக்கு. எல்லா மனிதர்களையும் நேசி. ஆனால் எல்லா மனிதர்களிடமிருந்து தொலைவாக இருந்து கொள். -- புனித சீரியா ஈசாக்.

406. கடவுளை நீ வெளிப்படையாகவும், எளிமையோடும் அணுகிச் செல்லும்போது, அவர் எப்போதும் உன்னோடு பேசுகிறார். -- புனித கேத்தரீன் லபூரே.

407. கடவுளைக் கண்டடையும் எவனும், அனைத்தையும் கண்டடைகிறான், கடவுளை இழக்கும் எவனும் எல்லாவற்றையும் இழக்கிறான். -- அர்ச். ராபர்ட் பெல்லார்மீன்.

408. மிகுந்த இனிமையுள்ளவையும், மிகுந்த வல்லமையுள்ளவையுமாகிய இயேசு மரியாயாகிய இரண்டு திருப்பெயர்களும் எப்போதும் நம் இருதயங்களிலும், நம் உதடுகளிலும் இருப்பனவாக! -- புனித அல்போன்ஸ் மரிய லிகோரியார்.

409. உலகம் முழுவதற்கும் அரசனாயிருப்பதை விட, கடவுளின் குழந்தையாயிருப்பது அதிகம் நல்லது. -- புனித கொன்ஸாகா ஞானப்பிரகாசியார்.

410. ஒரு நாளின்போது, ஏதாவது நன்மை செய்யாமல், அந்நாளைக் கடந்து போக விடாதே. -- புனித பிலிப் நேரியார்.

411. மாமரியின் மீது மிகுந்த பக்தி கொண்டுள்ளவர்கள் இரட்சிக்கப்படுவது மட்டுமின்றி, மாமரியின் பரிந்துரையின் வழியாக மாபெரும் புனிதர்களாகவும் ஆவார்கள். மேலும், அவர்களுடைய பரிசுத்ததனம் நாளுக்கு நாள் வளரும். -- புனித வின்சென்ட் பலோட்டி.

412. மாமரி மாசற்ற பெண்மையின் உத்தம மாதிரியாக இருப்பதால், மாமரியைக் கண்டு பாவிப்பது பெண் கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும். -- புனித தெரேசா பெனடிக்டா.

413. சத்தியத்தின் மீதான என் ஏக்கம் ஓர் ஒற்றை ஜெபமாக இருந்தது. -- புனித தெரேசா பெனடிக்டா.

414. நல்ல போதகர்கள் நல்ல போதகத்தைக் கற்பிக்கிறார்கள், ஆனால் தீய போதகர்களால் கற்பிக்கப்படுவது முற்றிலும் தீமையானதாக இருக்கிறது. -- புனித பேசில்.

415. கடவுளால் முன்பே சிந்திக்கப்படாதது எதுவுமில்லை, அவரால் அலட்சியம் செய்யப் படுவதும் எதுவுமில்லை. அவருடைய உறங்காத கண் எல்லாவற்றையும் நோக்குகிறது. -- புனித பேசில்.

416. ஜெபம் இல்லாமல் நல்லது எதுவும் செய்யப்படுவதில்லை. கடவுளின் வேலைகள் குவிக்கப்பட்ட நம் கரங்களைக் கொண்டும், முழந்தாளில் இருந்தபடியும் செய்யப் படுகின்றன. நாம் ஓடும்போதும் கூட, ஞான முறையில் நாம் எப்போதும் அவருக்கு முன்பாக முழந்தாளிட்டிருக்க வேண்டும். -- புனித லுய்கி ஓரியோன்.

417. பிறருக்கு முன்மாதிரிகையாக இருக்க விலிdழிம் எவனும், முதலில் தன்னைத்தானே பரிசோதித்துக் கொள்வானாக. -- புனித எஃப்ரேம்.

418. பரிசுத்த வேதாகமம் என்னைப் பரலோகத்தின் வாசலுக்குக் கொண்டு வந்தது, என் மனம் அதில் நுழைந்தபோது, அதிசய உணர்வால் அசையாமல் நின்றது. -- புனித எஃப்ரேம்.

419. உன் போதகம் ஒளிவீசும்போது, எந்த மனிதனும், இருளின் ஆசைகளுக்குச் செவிகொடுக்கத் துணியாதபடி, பிரகாசமாக எரியும் விளக்காயிரு, இருளின் வேலைகளை நின்று போகச் செய். -- புனித எஃப்ரேம்.

420. ஒரு நல்ல ஆன்ம வலையாயிருந்து, நல்ல ஆண்டவருக்காகப் பலரைப் பிடித்துள்ள மனிதன் பேறுபெற்றவன்; அத்தகைய ஒரு மகன் ஆண்டவரால் வெகுவாகப் புகழப் படுவான்.-- புனித எஃப்ரேம்.

421. தாழ்ச்சியோடு பாவசங்கீர்த்தனம் செய்யும் பாவங்களைக் கடவுள் அகற்றுகிறார்; இதன் மூலம் பசாசு மனித இருதயத்தின் மீது தான் அடைந்திருந்த இராஜரீக உரிமையை இழந்து போகிறது. -- புனித பெர்னார்ட்.

422. புத்தகங்களில் காணப்படுவதை விட, காடுகளில் நீ அதிகமானவற்றைக் காண்பாய். நீ ஆசிரியர்களிடம் நீ ஒருபோதும் கற்றுக்கொள்ள முடியாதவற்றை மரங்களும், கற்களும் உனக்குக் கற்பிக்கும். -- புனித பெர்னார்ட்.

423. உன் சொந்த ஆன்மாவோடு சமாதானமாயிரு, அப்போது பரலோகமும், பூலோகமும் உன்னோடு சமாதானமாயிருக்கும். -- புனித நினிவே ஈசாக்.

424. கடவுள் உன் வேண்டுகோளுக்குப் பதில் தர தாமதிக்கிறார் என்றாலோ, அல்லது நீ கேட்டும் துரிதமாக எதையும் பெற்றுக்கொள்வதில்லை என்றாலோ, நிலைகுலைந்து போகாதே, ஏனெனில் நீ கடவுளை விட அதிக ஞானமுள்ளவனல்ல. -- புனித நினிவே ஈசாக்.

425. நீ கெடுக்கக் கூடிய, அசுத்த நினைவுகள் எப்படி இருக்கும் என்று பரிசோதித்துப் பார்க்கும்போது, அவற்றால் வெற்றி கொள்ளப்பட மாட்டாய் என்று கற்பனை செய்து கொண்டு, அவற்றைப் பரிசோதித்து, உன் மனதைச் சோதனைக்கு உட்படுத்தாதே. ஞானிகளும் கூட இம்முறையில் குழப்பத்திற்குள் வீசியயறியப்பட்டு, இச்சைக்கு உள்ளாகியிருக்கிறார்கள். -- புனித நினிவே ஈசாக்.

426. நான் பயப்படவில்லை… இதைச் செய்வதற்கே நான் பிறந்தேன். -- புனித ஜான்தார்க்.

427. செயல்படு, அப்போது கடவுள் செயல்படுவார். -- புனித ஜான்தார்க்.

428. பாவமான காரியம் அல்லது கடவுளின் திருச்சித்தத்திற்கு விரோதமானது என்று நான்அறிந்துள்ள எதையும் செய்வதை விட நான் மரிக்கவே விரும்புகிறேன்-- புனித ஜான்தார்க்.

429. இயேசுவின் திருப்பாடுகள் கடும் துயரத்தின் கடலாகும், ஆனால் அது அன்பின் பெருங்கடலாகவும் இருக்கிறது. அதன் ஆழத்திற்குள் மூழ்கிச் செல். நீ எவ்வளவுதான் ஆழம் சென்றாலும், ஒருபோதும் அடிப் பகுதியைச் சென்றடைய மாட்டாய். -- புனித சிலுவை சின்னப்பர்.

430. பக்தி இல்லாமலும், முழு பராக்கோடும் ஓராயிரம் பரலோக மந்திரங்களைச் சொல் வதை விட, உருக்கமாகவும், பக்தியோடும் ஒரே ஒரு பரலோக மந்திரம் சொல்வது சிறந்தது. - புனித எட்மண்ட்.

431. குறைவாகப் பேசி, மிக அதிகமாக ஜெபிக்கும்படி நான் உனக்கு அறிவுறுத்துகிறேன். -- புனித கஸ்பார் தெல் பஃபேலோ.

432. ஜெபி, உழை. -- புனித ஆசீர்வாதப்பரின் விருதுவாக்கு.

433. நடக்கும்போதும், வேலை செய்யும்போதும், இந்தச் சிறிய ஜெபங்களை நீ சொல்ல லாம். மற்றவர்களோடு இருக்கும்போதும், உன் இருதயம் சுதந்திரமாயிருக்கிறது. உன் இருதயத்தின் வழியாக, மிகக் கடுமையான வேலைக்கு மத்தியிலும், உன் ஆன்மாவை நீ ஆதாயமாக்கிக் கொள்ளலாம். -- புனித சிலுவை சின்னப்பர்.

434. ஒவ்வொரு விசுவாசிக்கும் அருகில் ஒரு தேவதூதர் பாதுகாவலராகவும், மேய்ப் பராகவும் நின்று அவனை வாழ்வுக்கு வழிநடத்துகிறார்.- புனித பெரிய பேசில்.

435. கடவுளிடமிருந்து எதுவும் தொலைவில் இல்லை. -- புனித மோனிக்கம்மாள்.

436. உலகப் பொருட்கள் அல்ல, கடவுள்தான். செல்வங்கள் அல்ல, கடவுள்தான். உலக மதிப்பு அல்ல, கடவுள்தான். உலகப் பெருமை அல்ல, கடவுள்தான். பெரும் பதவிகள் அல்ல, கடவுள்தான். முன்னேற்றமல்ல, கடவுள்தான். கடவுளே எப்போதும், எல்லாக் காரியங்களிலும். -- புனித வின்சென்ட் பல்லோட்டி.

437. நீ என்ன செய்தாலும், உன்னையல்ல, கடவுளைப் பற்றியே நினை. -- புனித வின்சென்ட் ஃபெரர்.

438. உண்மையாகவே உலகப் பற்றற்ற பத்து மனிதர்களைத் தாருங்கள், நான் அவர்களைக் கொண்டு உலகத்தை மனந்திருப்புவேன். -- புனித பிலிப் நேரியார்.

439. ஆண்டவரே, என் துன்பங்களையும், என் பொறுமையையும் அதிகரித்தருளும். -- புனித ஐந்தாம் பத்திநாதர்.

440. யாருடைய இருதயங்கள் மாசற்றவையாக இருக்கின்றனவோ, அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் தேவாலயங்களாக இருக்கிறார்கள். -- புனித லூசியம்மாள்.

441. வீணிலும் வீண், எல்லாம் வீண், கடவுளை நேசித்து அவருக்கு ஊழியம் செய்வதை மட்டுமே எதிர்பார்த்திருங்கள். -- புனித தாமஸ் அ கெம்பிஸ்.

442. நிச்சயமாக உயர்வான வார்த்தைகள் ஒரு மனிதனைப் பரிசுத்தனாகவும், நீதிமானாக வும் ஆக்குவதில்லை; மாறாக, புண்ணிய வாழ்வே அவனைக் கடவுளுக்குப் பிரியமானவனாக்குகிறது. -- புனித தாமஸ் அ கெம்பிஸ்.

443. ஆண்டவர் நம் சூரிய அஸ்தமனங்களை சூரிய உதயமாக மாற்றியிருக்கிறார். -- புனித அலெக்சாந்திரியா கிளமெண்ட்.

444. பரலோகத்திலுள்ள பாக்கியவான்களின் கிரீடத்திலுள்ள மிகுந்த ஒளிபொருந்திய ஆபரணங்கள், இவ்வுலகில் அவர்கள் பொறுமையோடு தாங்கிக் கொண்ட துன்பங்களே. -- அர்ச். அல்போன்ஸ் மரிய லிகோரியார்.

445. திவ்ய நன்மை உட்கொள்வது பரலோகம் செல்ல அனைத்திலும் குறுகியதும், பாதுகாப்பானதுமான வழியாகும். -- பாப்பரசர் புனித பத்தாம் பத்திநாதர்.

446. கிறீஸ்து மட்டுமே என் வாழ்வும், என் இரட்சணியமும். -- புனித அகதா.

447. திவ்ய நற்கருணை இயேசு கிறீஸ்து மனிதன் மீது கொண்டுள்ள அன்பின் உத்தமமான வெளிப்பாடாகும். -- புனித மரிய கொரெற்றி.

448. புனிதர்களைப் பின்செல், எனெனில் அவர்களைப் பின்செல்பவர்கள் புனிதர்கள் ஆவார்கள். -- பாப்பரசர் புனித முதலாம் கிளமெண்ட்.

449. இந்நிலையில் என்னிடம் எதுவும் மீதமில்லை, என்றாலும் என்னிடம் இன்னும் இருதயம் இருக்கிறது, அதைக் கொண்டு என்னால் எப்போதும் நேசிக்க முடியும். -- முத். ஷியாரா லூச்சே.

450. நாம் நல்ல முறையில் கடவுளுக்கு ஊழியம் செய்யவும், நம் அயலானை நேசிக்கவும் விரும்பினால், அவருக்கும், அவர்களுககும் நாம் செய்யும் ஊழியத்தில், நாம் நம் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும். -- புனித கேத்தரீன் ட்ரெக்யஸல்.