மரியாளின் பரிந்துரையால் நாம் விண்ணகத்தைப் பெற முடியுமா?

"விண்ணகத்தில் கடவுளின் கோவில் திறக்கப்பட்டது. அந்தக் கோவிலில் உடன்படிக்கைப் பேழை காணப்பட்டது." (திருவெளிப்பாடு 11:19) இறை இரக்கத்தின் அரியணையைத் தாங்கிய இந்த உடன்படிக்கைப் பேழையாகவே அன்னை மரியாள் செயல்படுகிறார். மோசேயின் சந்திப்புக் கூடாரத்தில் வைக்கப்பட்டிருந்த உடன்படிக்கைப் பேழையின் வழியாக, இஸ்ரயேல் மக்கள் கடவுளின் திருவுளத்தை அறிந்துகொண்டதுடன், அவரது ஆசியையும் வழி நடத்துதலையும் பெற்றனர். அவ்வாறே விண்ணக கோவிலின் உடன்படிக்கைப் பேழையாகத் திகழும் அன்னை மரியாள், புதிய இஸ்ரயேலாகிய திருச்சபையின் மக்கள் அனைவரும் கடவுளின் திருவுளத்தை அறிந்துகொள்ளவும், அவரது அருள் வரங்களைப் பெற்றுக்கொள்ளவும் உதவுகிறார். எனவே, மரியாளின் உதவியை நாடுவோர் நிலை வாழ்வுக்கு தகுதி பெறுவார்கள் என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை."பரிசுத்த கன்னி 'கடவுளின் தாய்' என்னும் கொடையாலும் அலுவலாலும் மீட்பரான தம் மகனோடு ஒன்றித்து இருக்கிறார்; தமக்குரிய தனிப்பட்ட அருள்கொடைகளாலும் அலுவல்களாலும் இவர் திருச்சபையோடும் நெருங்கிய முறையிலே இணைக்கப்பட்டிருக்கிறார். புனித அம்புரோஸ் ஏற்கெனவே கற்பித்ததுபோல், நம்பிக்கை, அன்பு, கிறிஸ்துவோடு கொண்டுள்ள நிறை ஒன்றிப்பு ஆகியவற்றால் இறையன்னை திருச்சபையின் முன்மாதிரியாகத் திகழ்கிறார்." (திருச்சபை எண். 63) இவ்வாறு, "நிறைவாழ்வு வரலாற்றில் ஆழ்ந்து ஊன்றிய மரியாள் நம்பிக்கைப் பேருண்மைகளைத் தம்மில் ஒருவாறு இணைத்துப் பிரதிபலிக்கிறார். தாம் பறைசாற்றப்படும்போதும் வணங்கப்படும்போதும், நம்பிக்கை கொண்டோரைத் தம் மகனிடமும் அவரது பலிக்கும் இறைத்தந்தையின் அன்புக்கும் இட்டுச் செல்கின்றார்." (திருச்சபை எண். 65)  "இறைவனின் பரிசுத்த அன்னையும், புதிய ஏவாளும், திருச்சபையின் தாயுமான மரியாள், கிறிஸ்துவின் உறுப்பினர்களுக்காக பரிந்துபேசும் பணியை விண்ணகத்திலும் தொடர்கிறார் என நாம் நம்புகிறோம்." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக் கல்வி எண். 975) இவ்வாறு, "தூய கன்னி கொண்டுள்ள நிறைவாழ்வளிக்கும் செல்வாக்கு அனைத்தும், கடவுளின் விருப்பத்திலிருந்தே உருவாகிறது; கிறிஸ்துவின் இணைப்பாளர் பணியையே அடித்தளமாகக் கொண்டுள்ளது; அதிலிருந்தே தன் ஆற்றல் அனைத்தையும் பெறுகின்றது; நம்பிக்கை கொண்டோர் கிறிஸ்துவுடன் கொண்டுள்ள நேர்முக ஒன்றிப்பை இச்செல்வாக்கு எவ்வகையிலும் தடுப்பதில்லை; மாறாக அதைப் போற்றி வளர்க்கின்றது." (திருச்சபை எண். 60) எனவே, அன்னை மரியாளின் வழியாக விண்ணக வரங்களைத் தேடுவோர், அவரது பரிந்துரையால் விண்ணகத்தை பெற்றுக்கொள்வது உறுதி.