மரியாளை 'துன்புறுவோரின் ஆறுதல்' என்று அழைக்க காரணம் என்ன?

மனித குலத்தைப் பாவங்களில் இருந்து மீட்பதற்காக, இறைமகன் இயேசு மனிதரின் கரங்களால் துன்புற வேண்டியிருந்தது. "இதோ, இக்குழந்தை எதிர்க்கப்படும் அடையாளமாக இருக்கும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" (லூக்கா 2:34,35) என்ற சிமியோனின் இறைவாக்கிற்கு ஏற்ப, இயேசுவின் துன்பத்தில் மரியாளும் பங்கேற்றார். கன்னி மரியாள் பரிசுத்த ஆவியால் கருவுற்றதும், 'அவர் கணவர் யோசேப்பு அவரை மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.' (மத்தேயு 1:19) பெத்லகேம் விடுதியில் இடம் கிடைக்காததால், இயேசுவை மரியாள் மாட்டுத் தொழுவத்தில் பெற்றெடுத்தார். (லூக்கா 2:7) ஏரோதிடம் இருந்து குழந்தை இயேசுவைக் காப்பாற்ற எகிப்துக்கு ஓடிச் சென்றார். (மத்தேயு 2:14) பன்னிரண்டு வயதில் எருசலேம் கோவிலில் தங்கிவிட்ட இயேசுவைத் தேடி மூன்று நாட்கள் அலைந்து திரிந்தார். (லூக்கா 2:46)

இயேசுவின் பணி வாழ்வின்போதும், மரியாள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்ததைக் காண்கிறோம். இறைமகன் இயேசுவை ஒரு சீடராகவும் தாயாகவும் மரியாள் பின்தொடர்ந்தார். அதேநேரத்தில், மகனை சந்திக்காமல் மரியாள் தனிமையில் வாழ்ந்த நாட்களும் பல இருந்தன. இறையாட்சிப் பணியை மட்டுமே நோக்கமாக கொண்டிருந்த இயேசு, மரியாளின் தாயன்பைக் காயப்படுத்திய தருணங்களும் உண்டு. இறுதியாக, மரணத் தீர்ப்புக்கு ஆளாகி சிலுவை சுமந்து சென்ற இயேசுவின் பாதையில் மரியாளும் பயணம் செய்தார். உலக மக்களைப் பாவத்தின் பிடியில் இருந்து விடுவிக்க, "தான் பெற்றெடுத்த மகனைப் பலியிடவும் அன்புடன் இசைந்தார்; தாயுள்ளத்தோடு தன்னையே அவரது பலியுடன் இணைத்தார்." (திருச்சபை எண். 58) இவ்வாறு இயேசுவின் மரணம் மற்றும் அடக்கத்தின்போது உடனிருந்த அன்னை மரியாள், துயரத்தின் உச்சத்தை அனுபவித்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

வாழ்நாள் முழுவதும் கடவுளுக்காக துன்பங்களை ஏற்றுக்கொண்ட மரியாள், தம் மகனோடு விண்ணக மாட்சியில் பங்கு பெற்றிருக்கிறார். மனிதருக்குரிய அனைத்து துன்பங்களையும் சந்தித்தவர் என்பதால், நமது துன்ப நேரங்களில் பரிந்து பேசுபவராக இருக்கிறார். கானாவூர் திருமண வீட்டில் திராட்சை இரசம் தீர்ந்தபோது, அவர்களின் தேவையறிந்து அன்னை மரியாள் உதவி செய்ததை நற்செய்தி எடுத்துரைக்கிறது. "அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்ய முடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே" (யோவான் 2:4) என்று கூறிய இயேசுவின் மனதை தம் நம்பிக்கையால் மாற்றி, தண்ணீர் திராட்சை இரசமாக மாறிய முதல் புதுமை நிகழக் காரணமாக இருந்தவர் அன்னை மரியாள். நமது துன்ப வேளைகளிலும் இத்தகைய வல்லமையுள்ள பரிந்துரையால் நாம் ஆறுதல் பெற முடியும் என்பதாலே, மரியன்னையை 'துன்புறுவோரின் ஆறுதல்' என அழைக்கிறோம்.