மரியாள் ஓர் ஆச்சரியம் ***

     இழப்பு என்பது ஓர் உணர்வு. மரியாளின் வாழ்க்கையில் இழந்துவிட்டோம் என்ற உணர்வே ஏற்பட்டதில்லை. மரியாள் இந்த உலகத்தில் வாழும்போதும் பணி செய்தார். தான் இறந்தபின்பும் பணி செய்கிறார்.

    மரியா இல்லாத மீட்பை நாம் நினைத்துப் பார்க்க முடியவில்லை. மீட்பின் இலக்கணம் இழப்பு என்றால், மரியாவும் தன்னை முற்றிலுமாக இழந்தவர். இயேசுவின் இழப்புகள் அனைத்திலும் இணையாக நின்றவர்.

   இயேசு தன் வயுற்றில் உதித்த காலம் முதல் அவர் சாகும்வரையிலும், மேலும் அவர் இறந்த பின்பும், இயேசுவின் இழப்பில் முழுபங்கு கொண்டவர். மனிதர்களைப்போல் தான் இழந்த எதிலும் சோர்வடையாது அந்த இழப்பை  இறைதிட்டமாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்தவர்.

   இயேசுவுக்கு இணையாக வாழ இறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்டவர். கடவுள் இயேசு மனித இயேசுவாக பிறந்ததால் மனித வாழ்வின் துன்பங்களை ஏற்க வேண்டியிருந்தது. இந்தத் துன்பமே அவரை மறுபடியும் இறை மகிமைக்கு எடுத்துச் சென்றது. அதுபோல அன்னையும் சுகங்களை இழந்து கடவுளுக்கே தன்னை அர்பணித்து இயேசுவின் நிழலாகவும், இரட்சகியாகவும் மாறி விண்ணேற்பு அடைய முடிந்தது.

   இயேசு, மரியாளின் மீட்புப் பணி அவர்களது இழப்பைச் சரி செய்தது. தான் மோட்சத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பின்பும், மரியாள் உலக நாடுகளில் எத்தனையோ இடங்களில், எத்தனையோ மக்களுக்கு காட்சி கொடுப்பது, அவர் இறந்த பின்னும் இயேசுவுக்காகவும், இறை அரசுக்காகவும் பணி செய்கிறார் என்பதே உண்மை.

சிந்தனை :-
            அன்னையின் மீட்புப் பணியில் நாமும் பங்கேற்று வாழ்வோமா?