அன்னை மரியாள் இறைவனின் தாய் ***

  ' இறைவனின் தாய்' என்ற திருவிழா ஜனவரி மாதம்  1 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. முதலில் இந்த விழா அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள் இவ்விழாவை ஜனவரி 1 ஆம் தேதிக்கு மாற்றினார்.
     
  தொடக்க காலத்தில் இருந்தே கிறிஸ்தவர்கள் அன்னையை இறைவனின் தாய் எனப்போற்றி வந்தார்கள் . இதனை உறுதி செய்யும் விதமாக திருவிவிலியமும் அன்னையை இயேசுவின் தாய் என்று அழைக்கிறது. " மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு " ( மத்தே 1:16 ) . " நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும் " ( மத்தே 2:13 ) . " நீர் எழுந்து குழந்தையையும் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரேயல் நாட்டுக்குச் செல்லும் " (2:20)  . " உம் தாயும் சகோதரர்களும் வெளியே நின்றுகொண்டு உம்மை தேடுகிறார்கள் " ( மாற் 3:32) . " கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று தடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார் " ( யோவா 2:1 ) . "திராட்சை இரசம் தீர்ந்ந்து போகவே இநேசுவின் தாய் அவரை நோக்கி  ' திராட்சை இரசம் தீர்ந்து விட்டது ' என்றார் " ( யோவா 2:3 ) . " இவருடைய தாய் மரியா என்பவர் தானே " ( மத்தே 13:55)  . " இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புசீடரையும் கண்டு அம்மா இவரே உம் மகன் என்றார் " ( யோவா 19:26) . இயேசுவின் தாய் மரியாவோடும் இணைந்து ஒரே மனதோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள் " ( திருத்துதர் பணி 1:14) .நான்கு நற்செய்தியாளர்களும் அன்னை மரியாளை இயேசுவின் தாய் என்று அழைப்பது, தொடக்கத்தில் இருந்தே நம் அன்னை இயேசுவின் தாய் என்றே போற்றப்பட்டுள்ளார்கள் என்பதைத் தெளிவுப்படுத்துகின்றது.

   மரியாவிடம் பிறந்த இயேசு இறைவனின் மகனாக, இறைவனாக இருந்தார். அன்னைக்கு சொல்லப்பட்ட மங்களவார்த்தை இதனை தெளிவுபடுத்துகின்றது. " இதோ கருவுற்ற ஒரு மகனைப் பெறுவீர்.  அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர் . அவர் பெரியவராயிருப்பார். உன்னத கடவுளின் மகன் எனப்படுவார் " (லூக்கா 1:31-32) . " தூய ஆவி உம்மீது வரும்.  உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழத்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும் " ( லூக்கா 1:35) . தூய ஆவியால் பிறந்தவர் இறைவனே ஆவார். எனவே அன்னை மரியாளிடம் பிறந்த இயேசு கடவுளின் ஒரே மகனாக இருந்தார்.  புனித பவுல் அடிகளாரின் கூற்றும் இதனை நமக்கு தெளிவுபடுத்துகிறது.  " கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார் " ( கலா 4:5 ) .கடவுளோடு ஒரே பொருளாக ஜெனித்த , கடவுளின் இரண்டாவது ஆளான கடவுளின் மகன் மரியாவிடம் பிறத்தவராக இறைவன் அனுப்பினார்.

   இயேசு இறைவன் என்பதாலும், அன்னை மரியாள் இறைவனாகிய இயேசுவைப் பெற்றெடுத்ததினாலும் அன்புத்தாய் அவர்கள் இறைவனின் தாய் என்கின்ற மேலான பேற்றினைப் பெற்றார்கள். "அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார் " ( லூக்கா 1:50) .தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட எலிசபெத்தம்மாள் இந்த மாபெரும் உண்மையை முதல் ஆளாக உலகத்திற்கு எடுத்தியம்பினார்கள். " பெண்களுக்குள் நீர் ஆசீர் பெற்றவர் . உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே. என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார் " ( லூக்கா 1:42-43 ) . இவை அனைத்தும் இறை ஏவுதலால் திருவிவிலியத்தில் எழுதப்பட்ட பேருண்மைகள்.

   கத்தோலிக்க மரபுபடி இறைவன், தனது இறைத்தன்மையை கொஞ்சமும் மாற்றிக்கொள்ளாமல் இறைவனாகவே ஆனால் மனித உருவில், மனிதனாக பிறந்தார். இயேசு இறைச்சுபாவம், மனித சுபாவம் ஆகிய இரண்டும் கலந்த ஒரே ஆளாக இம்மண்ணில் தோன்றினார். இறைமையும் மனிதமும் பிரிக்க முடியாதபடி இரண்டறக்கலந்து இயேசு என்னும் ஒரே ஆளாக தோன்றினார். கடவுளுக்குரிய மகிமையையும், வல்லமையும் மறைத்து அடிமையின் கோலம்பூண்டு சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்கு தன்னைத் தாழ்தியதில்தான் கடவுள் உலகின் மீது கொண்ட அன்பை உணர்த்து நாம் மெய் சிலிர்க்கின்றோம் ( பிலி 2:7-8) .

     பேராயர் நெஸ்டோரியஸ் இதை மறுத்து மாறுபட்ட கருத்தை தெரிவித்தார். மரியிடம் பிறந்தது கிறிஸ்து என்னும் மனிதர். மனிதனாய் பிறந்த இயேசுவிடம் , இறையியல்பு மனித இயல்போடு கலவாத, தனித்து நிற்கின்ற ஒன்றாக ஒட்டிக்கொண்டது .பாடுகள் பட்டது அவரின் மனித இயல்புதான். இறையியல்பு அல்ல என்றார் . எனவே மரியாவை கிறிஸ்டோடோக்கோஸ்(கிறிஸ்துவின் தாய்  ) என்று அழைக்கலாமே தவிர தெயோடோக்கோஸ்( கடவுளின் தாய்) என்று அழைக்கக்கூடாது என்று வாதிட்டார். அன்னையை இறைவனின் தாய் என்று போற்றினால் அவர்களைத் திருச்சபையிலிருந்து விலக்குவதாகவும் அறிவித்தார். விவிலியப் போதனைகளுக்கு முற்றிலும் எதிரான இந்த விவாதத்தினால் அதிர்ச்சியடைந்த திருச்சபை இந்நிலையைச் சரிசெய்யவேண்டி எபேசு நகரில் கி.பி.431 ஆம் ஆண்டில் மூன்றாவது திரு அவைக்கூட்டத்தை கூட்டியது.

    பேராயர் நெஸ்டோரியஸ் அவர்களை திருச்சபையிலிருந்து விலக்கியது.  இயேசு மனிதனாக பிறந்த கடவுள் என்றும் , அன்புத்தாய் இறைவனுக்கு மனித உடல் தந்து பெற்றெடுத்த இறைவனின் தாய்  என்றும் பிரகடனப்படுத்தியது. கூட்டம் நடந்த இடத்திற்கு வெளியே திரண்டிருந்த இறைமக்கள் அனைவரும் இதையறிந்த உடன் " இறைவனின் அன்னையே வாழ்க " என்று முழங்கி ஆர்பரித்தார்கள். என்பது பதிவு செய்யப்பட்ட வரலாறு ஆகும்.

சிந்தனை
-----------------
                அன்னை மரியாள் ' இறைவனின் தாய்  '  என்கிற உரிமையை கொண்டவர்கள். அந்த அன்புத் தாயை " அருள் நிறைந்தவளே " என உள்ளம் மகிழ்ந்து வாழ்த்துவோம். நமது வாழ்வை தாயின் பாதத்தில் அர்பணிப்போம்.  அன்னை மரியாள் பரிந்துபேசி நமக்கு இறையாசி அளிப்பாராக.