மீட்புத் திட்டத்தில் மரியாளுக்கும் பங்கு இருக்கிறதென்றால், இயேசுவின் துன்பங்களிலும் அவர் பங்கேற்றாரா?

வரலாற்றின் தொடக்கத்தில் உலகிற்கு மீட்பரை வாக்களித்த கடவுள், அவரது தாயைக் குறித்தும் முன்னறிவிப்பதைக் காண்கிறோம். "பெண்ணின் வித்து அலகையின் தலையைக் காயப்படுத்தும்" என்பதே மீட்பின் வாக்குறுதி. அலகையின் தலையை நசுக்கும் மீட்பரை உலகிற்கு கொண்டு வர ஒரு பெண்ணின் ஒத்துழைப்பு தேவைப்பட்டது. இவ்வாறு தீமை மற்றும் பாவத்தின் மொத்த வடிவான அலகையை ஒழிப்பதில் மீட்பரின் தாய்க்கும் கடவுள் பங்கு தந்தார். அலகைக்கு எதிரானப் போராட்டத்தில் இறைமகன் இயேசு பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்திக்க வேண்டியிருந்தது. மகன் அனுபவித்த இந்த துன்பங்களோடு தாயின் மனமும் ஒன்றித்திருந்தது என்பதை நாம் உறுதியாக கூற முடியும்.

எவ்வாறெனில், 'மரியாள் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.' (லூக்கா 2:19)
அன்னை மரியாள், இயேசுவின் துன்பங்களில் பங்குபெற வேண்டுமென்பது இறைத்தந்தையின் திருவுளமாக இருந்தது. 'திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் கோவிலுக்கு வந்தபோது, சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்தி கடவுளைப் போற்றினார். பின்னர் சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாளை நோக்கி, "இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" என்றார்.' (லூக்கா 2:27,28,34-35) சிமியோன் வழியாக அறிவிக்கப்பட்ட இந்த இறைவாக்கு கன்னி மரியாளின் வாழ்வில் முழுமையாக நிறைவேறியது.

"மீட்பு அலுவலில் மகனோடு தாய் கொண்டுள்ள இந்த ஒன்றிப்பை கிறிஸ்து கன்னியிடம் கருவாக உருவானதிலிருந்து அவரது சாவு வரை நாம் காண்கிறோம். இவ்வாறு தூய கன்னி தம் மகனோடு கொண்ட ஒன்றிப்பை சிலுவை வரை விடாது காத்து வந்தார்; கடவுளின் திட்டத்திற்கேற்ப சிலுவையின் அருகே நின்றார்; தம் ஒரே மகனோடு கடுமையாகத் துன்புற்றார்; தாயுள்ளத்தோடு தன்னையே அவரது பலியுடன் இணைத்தார். இறுதியாக, சிலுவையிலே உயிர்விட்ட அதே கிறிஸ்து இயேசுவே மரியாளைத் தம் சீடருக்குத் தாயாக அளித்தார்." (திருச்சபை எண். 57,58) "ஓ, ஆசிபெற்ற அன்னையே! உண்மையாகவே, உமது இதயத்தை ஒரு வாள் ஊடுருவியது. ஏனெனில் உமது இதயத்தை ஊடுருவினால்தானே உம் மகனின் இதயத்தில் வாள் நுழைய முடியும்" என்று புனித பெர்நார்து (1090-1153) கூறிய வார்த்தைகள் எத்துணை உண்மையானவை.