திருவருகைக் காலம் - ஒரு வரலாற்றுப் பார்வை ***

திருவருகைக் கால இறையியலானது கிறிஸ்து பிறப்பின் இறையியலைச் சார்ந்திருக்கிறது. ஏனென்றால், நாம் எதற்காகக் காத்திருக்கிறோமோ அது நாம் எப்படி காத்திருக்கிறோம் என்பதை உறுதிசெய்கிறது. 'அட்வன்ட்" என்று அழைக்கப்படும் திருவருகைக்காலம் என்னும் வார்த்தை, லத்தின் வார்த்தையான 'வெனியோ" அதாவது 'வருகை" என்னும் வார்த்தையிலிருந்து வருகின்றது. இவ்வார்த்தை 'வருகைக்கு" என்று பொருள்படுகின்றது. ஏனென்றால், தொடக்ககால திருச்சபையில் கிறிஸ்து பிறப்பு விழாவினை காட்டிலும் கிறிஸ்துவின் வருகைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.

ஆகையினால் இரண்டாம் வருகையின் எதிர்பார்ப்போடு இறுதித் தீர்ப்பு பற்றிய சிந்தனை கிறிஸ்து பிறப்பினுடைய ஆண்டு கொண்டாட்டத்துடன் இணைந்திருந்தது. இதன் காரணமாக, உயிர்ப்பு விழா போன்று கிறிஸ்து பிறப்பு விழாவும் நான்கு வார தயாரிப்பு காலங்களைப் பெற்றது. இவ்வாறு மார்கழி 25க்கு முன் நான்கு வாரங்கள் கொண்ட தயாரிப்புக் காலமானது ஒரே மாதிரியாக அனைத்து திருச்சபைகளாலும் பின்பற்றப்பட்டவில்லையென்றாலும் கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய நாடுகளில் கிறிஸ்து பிறப்பு விழாவிற்கான தயாரிப்பின் காலம் ஒன்று நிச்சயமாக உருவாகியது.

வரலாற்றில் திருவருகைக் காலம்

தொடக்க கால திருவழிபாட்டுக் காலங்கள் மற்றும் விழாக்களின் தோற்றம் பற்றிய ஆய்வு பல சான்றுகளுக்கு நம்மை இட்டுச்செல்கின்றது. எனவே திருவருகைக் காலத்தின் தொடக்கம் பற்றிய ஆய்வில் கிடைத்த சான்றுகளை அவைகள் கிடைக்கப் பெற்ற நாடுகளின் அடிப்படையில் இங்கு தொகுத்து வழங்கப்படவுள்ளது. இம்முயற்சி திருவருகைக் காலத்தின் வரலாறு மற்றும் இறையியல் சிந்தனைகளை அறிந்துக் கொள்ள உதவிடும். திருவருகைக்காலம் பற்றிய மிகப் பழமையான சான்றுகள் உரோமையில் கண்டுபிடிக்கப்படவில்லை. மாறாக கிழக்கத்திய திருச்சபைகளோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்ட வட இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்துதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வட இத்தாலியிலிருந்து கிடைத்த சான்றுகள்

வட இத்தாலியிலிருந்து கிடைக்கப்பெற்ற ஆறு சான்றுகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. அவையாவன:

1) 4ம் நூற்றாண்டில் வட இத்தாலியிலிருந்து கிடைக்கப் பெற்ற தப்பறைக் கொள்கைகள் மற்றும் தப்பறைவாதிகளின் பட்டியல்.

2) மிலான் ஆயரான புனித அம்புரோஸ் அவர்களின் எழுத்துக் கடிதங்கள்.

3) தூரின் நகரின் மேக்ஸிமுஸ் எழுதிய குறிப்புக்கள்.

4) புனித பீட்டர் கிறிஸ்சோலோகஸ் அவர்களின் குறிப்புகள்.

5) பழங்கால வழிபாட்டு குறிப்புகள்

6) பெர்காமோ நகர திருவழிபாட்டு மன்றாட்டு தொகுப்பு நூல்

இக்குறிப்புக்கள் கிறிஸ்து பிறப்பு விழாவை பல்வேறு இறை வெளிப்பாடுகளின் நாள் என்றழைக்கின்றன. இறைவெளிப்பாடுகள் என்று பன்மையில் அழைப்பது இயேசுவின் பிறப்பானது பலருக்கு வெளிப்படுத்தப்பட்டதை (எ.கா. இடையர்கள், மூன்று ஞானிகள்) சுட்டிக்காட்டுகின்றது. மேற்கூறப்பெற்ற முதல் சான்று திருவழிபாட்டு ஆண்டில் நான்கு நோன்புகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்று சுட்டிக்காட்டுகின்றன. அவையானவ: பிறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவி பெருவிழா ஆகியவற்றிற்கான தயாரிப்பு.

புனித அம்புரோஸ் தனது சகோதரியான மர்சலீனா என்பவர் கிறிஸ்து பிறப்பு விழாவன்று உரோமையில் கன்னிமை வார்த்தைப்பாடு வழங்கியதற்கு வாழ்த்தி எழுதிய நீண்ட கடிதத்தில் கிறிஸ்து பிறப்பு விழா தயாரிப்பைப் பற்றி கூறுகின்றார். அதுபோலவே, மேக்ஸிமுஸ் நிகழ்த்திய மறையுரையில் தூயவரான மெசியாவின் பிறப்பை கொண்டாட அதன் தயாரிப்புக் காலத்தில் நம் உள்ளங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றார். தனது மறையுரையில் இவ்வாறு கூறுகின்றார். 'முன் கடந்த பற்பல நாட்களில் நம் இதயத்தை தூய்மையாக்குவோம். நம் மனசாட்சியை சாந்தப்படுத்துவோம். மாசுமறுவற்ற நம் ஆண்டவரின் வருகையைக் கொண்டாடுவோம். அதன் மூலம் மாசற்ற மரியாயிடமிருந்து வந்த இறைமகனின் பிறந்த நாள் அவரின் மாசற்ற ஊழியர்களால் கடைப்பிடிக்கப்படும்.

திருவருகைக்காலத்தின் தொடக்கம் பற்றி இறையியல் ஆய்வில் முக்கியமான சான்று புனித பீட்டர் கிறிஸ்சோலோகஸ் (425 - 429) அவர்களின் குறிப்புகள் மற்றும் மறையுரைகளாகும். இவர் ரொலீனா நகரத்தின் ஆயராக இருந்போது வட இத்தாலியில் ஐந்தாம் நூற்றாண்டில் தொடங்கிய கிறிஸ்து பிறப்பு விழா தயாரிப்பு சமூகப்பண்புகளோடு திருவழிபாட்டு சிறப்புகளோடும் கடைப்பிடிக்கப்பட்டது. புனித லூக்கா நற்செய்தியிலிருந்து கிறிஸ்து பிறப்பு பற்றி சொல்லப்பட்டுள்ள வார்த்தையின் அடிப்படையில் இந்த தயாரிப்புகள் நடந்தன. இதன் தொடர்ச்சயாக ஏழாம் நூற்றாண்டில் ரொவீனா நகரில் தொகுக்கப்பட்ட மன்றாட்டு தொகுப்பு நூல் இக்காலத்தின் அழகான இறையியலான கிறிஸ்துவின் மானிடப் பிறப்பு, அவரின் இறைத்தன்மை போன்றவற்றை வெளிக்கொணர்வதாக உள்ளது. இதே காலகட்டத்தில் வழக்கில் இருந்த பழங்கால வழிபாட்டுக் குறிப்புகள், மற்றும் பெர்களமோ நகர திருவழிபாட்டு மன்றாட்டு தொகுப்பு நூல் போன்ற குறிப்புகள் வழங்குகின்ற செய்திகளின்படி திருவருகைக்காலம் ஒருசில இடங்களில் ஐந்து வாரங்களுக்கும் வேறுசில இடங்களில் ஏழு வாரங்களுக்கும் கடைப்பிடிக்கப்பட்டன. மேற்கூறிய சான்றுகள் அனைத்தும் தயாரிப்பு காலமான திருவருகைக்காலத்தின் பழமையான மரபினை எடுத்துரைக்கின்றது.

..............................................நன்றி