மரணிக்கப் பிறந்தவர் விண்ணின் சுதன் அதை தரணிக்குச் சொல்லுது சாம்பல் புதன் ***

மரணிக்கப் பிறந்தவர் விண்ணின் சுதன் - அதை
தரணிக்குச் சொல்லுது சாம்பல் புதன்
சிலுவைச் சாம்பல் நெற்றியிலே - மரச்
சிலுவை மரணம் வெற்றியிலே
 
அடையாளங்களை அறிந்து கொள்வோம்- உயர்
அர்த்தங்களை நாம் அணிந்து கொள்வோம்
சாம்பலை நெற்றியில் இட்டுக் கொள்வோம் - நாம்
பாவத்தை தூரமாய் விட்டுச் செல்வோம்
 
சாம்பல் என்பது தவத்தின் தொடக்கம்
தவங்கள் எல்லாம் மீட்பில் அடக்கம் !
தன்னை உணர்தல் மனதின் திருப்பம்
திருந்தி வருதல் இறைவன் விருப்பம்
 
தவநாள் வருவது அழுதிடவா
தலைவனை விடாது தொழுதிடவா
ஒறுத்தல் முயற்சிகள் எடுத்திடவா - நாம்
தவறுகள் வராமல் தடுத்திடவா
 
சிலுவை என்பது தியாகச் சின்னம்
வலியை அன்பு ஏற்கும் திண்ணம் !
நெற்றியில் அதனை அணிந்த பின்னும்
நெஞ்சினில் ஏனோ பாவியின் எண்ணம்
 
தவநாள் வருவது திருந்திடவே
தவறுகள் உணர்ந்து வருந்திடவே !
மனிதம் மனதில் சொரிந்திடவே - இறை
அன்பின் அருகில் இருந்திடவே !
 
சாம்பல் புதனில் மாற்றம் பிறக்கும்
பாவம் அழிந்தால் வாழ்க்கை சிறக்கும்
தீயில் குருத்து ஓலைகள் இறக்கும
நேசன் உயிர்ப்பில் சொர்க்கம் திறக்கும்
 
அன்பை அறிவதே தவக்காலம்
தன்னைத் தருவதே தவக்காலம்
மனம்போல் வாழும் மனிதர்களை - மனம் 
திரும்பச் செய்வதே தவக்காலம்