69 புனித சவேரியார் ஆலயம், சிக்கத்தம்பூர் பாளையம்


புனித சவேரியார் ஆலயம்

இடம் : சிக்கத்தம்பூர் பாளையம்.

மாவட்டம் : திருச்சிராப்பள்ளி
மறை மாவட்டம் : கும்பகோணம்
வட்டம் : துறையூர்.

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித செபஸ்தியார் ஆலயம், பெருமாள் பாளையம்.

குடும்பங்கள் : 130
அன்பியங்கள் : 5

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு.

புதன் கிழமை சகாயமாதா நவநாள் திருப்பலி.

மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை திருஇருதய ஆண்டவர் நவநாள் திருப்பலி, நற்கருணை ஆசீர்.

பங்குத்தந்தை : அருட்பணி ஆரோக்கிய ராஜா

திருவிழா : நவம்பர் 27 ம் தேதி முதல் டிசம்பர் 03 ம் தேதி வரையிலான ஏழு நாட்கள்.

ஆலய வரலாறு :

தற்போதைய ஆலயத்தின் பின்பகுதியில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் காரைச் சுவர்களால் ஆன ஆலயம் அமைந்திருந்தது. அதன் பிறகு 1975 ம் ஆண்டு அருட்பணி சூசைநாதர் அவர்களின் நல்லாசியோடு ஆலயம் புதுப் பொலிவு பெற்றது.

வேறு எந்த ஆலயங்களிலும் காணக் கிடைக்காத ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்ட ஆறுகால மந்திரம், ஏழு பிரசங்கங்கள், ஐந்து காய மந்திரங்கள் பராமரிக்கப் பட்டு வருகிறது.

ஆலயத்தின் முன்புறம் அழகிய லூர்து மாதா கெபியும், திருமண மண்டபம் மற்றும் ஆலய வளாகத்தில் பசுமை கொஞ்சும் மரங்கள், மலர்ச்செடிகள் காணப்படுகின்றது.

இதன் வனப்பகுதியில் இரண்டு ஆறுகள் சங்கமிக்கும் கரையோரத்தில் புனித வனத்து சின்னப்பர் ஆலயம் உள்ளது. ஒவ்வொரு வருடமும் மே மாதம் 2ம் புதன் கிழமை புனித வனத்து சின்னப்பர் திருவிழா கொண்டாடப் படுகிறது.

ஆரம்ப காலத்தில் விவசாயிகளாகவும் கூலித் தொழிலாளர்களாகவும் வாழ்ந்த மக்கள் தங்கள் உழைப்பின் பயனால் மேன்மை பெற்று புனித சவேரியாரின் அருள் துணையோடு பெருமளவில் ஆசிரியர் பெருமக்களாக உருவாகி உள்ளதோடு மட்டுமல்லாது இராணுவ வீரர்கள், வங்கி மேலாளர்கள், இளம் பொறியலாளர்கள், விவசாயகள் என்று பல்வேறு துறைகளில் சிறந்து வளர்ச்சிப் பாதையில் செல்கின்றனர். முப்பாட்டன் கொள்ளுபேரன், பாட்டி, பேத்தி என்று அனைத்து தலைமுறையினரும் இன்றளவும் கூடி வாழும் அழகிய கிராமம் இது என்பது தனிச்சிறப்பு.

1930 களில் ஆலயத்தின் இருபுறமும் கிரான்ட் தனியார் பள்ளியாக (5ம் வகுப்பு வரை) துவக்கப்பட்டு 1955ல் அரசு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்ந்து விளங்குகின்றது.

புனித பிரான்சிஸ் சேவியர் நற்பணி மன்றம் ஆரம்பித்து கல்வி கற்பித்தல், கிராமத்தின் வளர்ச்சிக்கு உதவுதல், சுற்றுப்புற ஊர்களுக்குச் சென்று இசைப்பணி என்று பல்வேறு சிறந்த பணிகளை செய்து வருகின்றனர்.

1960 ல் அருட்பணி ரோச் மாணிக்கம் பணிக்காலத்தில் வாலிபால் குழு அமைத்து செல்லும் இடங்களில் எல்லாம் வெற்றி வாகை சூடி வந்தனர்.

1988 ல் அருட்பணி அந்தோணிசாமி பணிக்காலத்தில் நெசவுத்தொழில் தொடங்கப்பட்டு, புதிய கொடிமரம் திருமண மண்டபம் ஆகியவை நிறுவப் பட்டது.

அருட்பணி மரிய ஜோசப் பணிக்காலத்தில் (1990) நெசவுத் தொழிலாளர்களுக்கு தரமான எட்டு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது.

அருட்பணி வல்லபநாதன் பணிக்காலத்தில் (2000) கலை வளர்ச்சியில் மேம்பட இளைஞர் மன்றத்தாரின் உதவியோடு கலைநிகழ்ச்சிகள், உடல்திறன் விளையாட்டுகள், பட்டி மன்றம், நாடகம் ஆகியன துவக்கப் பட்டு இன்றளவும் சிறப்பாக நடத்தப் பட்டு வருகிறது.

அருட்பணி ஆரோக்கிய சாமி அவர்களின் பணிக்காலத்தில் (2007) அன்பியங்கள், மறைக்கல்வி வகுப்புகள் ஆரம்பிக்கப் பட்டதுடன் மாதா கெபிக்கான அடிக்கல் போடப்பட்டது.

அருட்பணி ஜேம்ஸ் அவர்கள் பணிக் காலத்தில் (2012) லூர்து மாதா கெபியானது பங்கு மக்களின் தாராள நன்கொடைகள் மற்றும் ஒத்துழைப்போடு நிறைவு பெற்று பங்குத்தந்தை அவர்களாலேயே அர்ச்சிக்கப் பட்டது.

தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி ஆரோக்கிய ராஜா அவர்கள் குழந்தைகளுக்கு பல்வேறு இசைக்தருவி பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறார். மேலும் வீட்டிற்கொரு விவிலியம் வழங்கும் அருட்பணி ஜேம்ஸ் அவர்களின் உதவியோடு இறை வார்த்தையை வழங்கி மக்களை ஜெப வாழ்வில் கொண்டு சென்று சிறப்பாக வழிநடத்துகின்றார்.

வழித்தடம் :

தி௫ச்சிராப்பள்ளி, பெரம்பலூர் -ல் இருந்து துறையூர் பே௫ந்தில் வர வேண்டும். பின்னர் தம்மம்பட்டி, சேலம், மேட்டூர் எனும் பே௫ந்துகளில் பயணம் செய்ய முதல் ஊர் பாளையம் (௭)சிக்கத்தம்பூர் பாளையம்.