கிறிஸ்துமஸ் கால சிந்தனைகள் 3 /25 ***


“ இதோ கன்னி கருத்தாங்கி ஒரு மகனை பெற்றெடுப்பாள் அவருக்கு இயேசு என்று பெயரிடுவர் “

                    மத்தேயு 1 : 22

அர்பணத்தின் சிகரம் அன்னை கன்னி மரியாள் :

“ தனக்காக ஒரு நாள் கூட வாழ்ந்ததில்லை. இயேசு வருகைக்கு முன் கடவுளுக்காக வாழ்ந்து வந்தாள். இயேசுவை தன் உடலும் ரத்தமாக பெற்றெடுத்த பின் இயேசுவுக்காகவே வாழ்ந்தாள். இயேசு மரித்து உயிர்த்தபின் நற்செய்தி எங்கும் அறிவிக்கப்பட அப்போஸ்தலர்களை வழி நடத்தினாள். அவர்களோடு ஜெபித்தாள் “

அதே போன்று மீட்பின் திட்டத்திற்காக அன்னை அனுபவித்த வேதனைகளும் கொஞ்சமல்ல. திருமணத்திற்கு முன்பே பரிசுத்த ஆவினால் கருத்தரிப்பு. பெண்களுக்கு மரியாதை கொடுக்காத, பெண்களை இரண்டாம் தரமாக நடத்தும் யூத சமுதாயம் அன்னையை எப்படி பார்த்திருக்கும். கபரியேல் தூதர் ஊரைக்கூட்டி சொல்லவில்லை அன்னையிடம் மட்டும் தானே தெரிவித்தார்.

சரி இன்னொரு கோணத்தில் பார்ப்போம். திருமண ஒப்பந்தமாகியிருந்த நம்முடைய பாசையில் சொல்ல வேண்டுமென்றால் நிச்ச்யதார்த்தம் முடிந்திருந்தவள். புதிய வாழ்க்கையை எதிர்பார்த்து இருந்தவருக்கு ஆசாபாசங்கள், கனவுகள் இல்லாமலா இருந்திருக்கும். அத்தனையும் உனக்கு கிடையாது. நீ கடவுளை பெற்றெடுக்க வேண்டும். அவரை வளர்க்க வேண்டும் அவருக்காகவே உன் வாழ்க்கையை தரவேண்டும் என்று இத்தகைய சூழ்நிலையில், இப்படித்தான் நீ குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்ற வேண்டுதல் மற்றும் ஆணைக்கு அத்தனையும் தூக்கி எரிந்துவிட்டு அடி பணிந்தாளே அதுதான் அன்னை. அவள்தான் அன்னை.

ஜெபம் : அன்னையே அன்புத்தாயே அம்மா ! நாங்கள் எதை எதையோ எங்களோடு கட்டிக்கொண்டு கடவுளுக்காக எதையும் தர முடியாமல், விட முடியாமல் தவிக்கிறோம். கடவுளுக்காக எதையும் தூக்கி எரிந்துவிட தயாராக இருந்த நீ எங்கே ? கடவுளுக்காக சிறு ஒறுத்தல் முயற்சிகள் கூட செய்ய முடியாத பல வீணர்களாகிய நாங்கள் எங்கே ?.. உம் துணிச்சல் எமக்கு வேண்டுமம்மா..

நீயோ, உம் குமாரனோ எம்மிடம் எதிர்ப்பார்பது, நீயோ, உம் குமாரனோ சுமந்த பெரிய பெரிய சிலுவைகளை அல்ல. குறைந்த பட்சம் பாவமில்லாத வாழ்வு. புனித தொன்போஸ்கோ இளைஞர்களிடம் சொன்னது போல “ எவ்வளவு வேண்டுமானலும் விளையாடுங்கள் மகிழ்சியாக இருங்கள். ஆனால் பாவம் மட்டும் செய்யாதீர்கள்...

எங்களிடம் இருக்கும் பாவங்களை விட்டுவிட்டு உம் பாலகனை எங்கள் நெஞ்சில் சுமக்க வரம் தாரும்- ஆமென்