மரியாள் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார்' (லூக்கா 2:7) என்று எழுதப் பட்டிருப்பது, அவருக்கு வேறு பிள்ளைகளும் இருந்தார்கள் என்பதைத்தானே குறிக்கிறது?

'அவர்கள் பெத்லகேமில் இருந்தபொழுது மரியாளுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார்.' (லூக்கா 2:6-7) என்று நற்செய்தி கூறுகிறது. கிறிஸ்துமஸ் பெருவிழா திருப்பலியில் இந்த நற்செய்தி வாசகத்தை கேட்ட புனித ஜெர்த்ருத் (1256-1302), "இயேசு மட்டுமே மரியன்னைக்கு மகனாக இருக்கும்போது, 'மரியாள் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார்' என்று நற்செய்தியாளர் குறிப்பிடுவது ஏன்?" என சிந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு காட்சி அளித்த அன்னை மரியாள், "நற்செய்தியாளர் எழுதியிருப்பது சரியே. ஏனெனில் நான் இயேசுவைக் கருத்தாங்கிப் பெற்றது மட்டுமின்றி, கல்வாரி மலையிலே கிறிஸ்தவர்கள் அனைவரையும் ஞான விதமாய் பெற்றேன். அதுமுதல் அவர்கள் அனைவரும் எனது பிள்ளைகளாகவும், இயேசுவின் சகோதர சகோதரிகளாகவும் இருக்கிறார்கள்" என்று தெளிவுபடுத்தினார். (கன்னி மரியாளின் வணக்க மாதம், பக்.44)'தலைமகன்' அல்லது 'தலைப்பேறான மகன்' என்ற பதம், முதல் குழந்தையைக் குறிக்கிறது என்பது உண்மையே. ஆனால் இரண்டாவது குழந்தை பிறந்தால் தான், முதல் குழந்தையை தலைமகன் என்று அழைக்க வேண்டும் என்பதில்லை. யூத மரபில் தலைமகனுக்கு ஒரு சிறப்பிடம் இருந்தது. "'ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்' என்று மோசேயின் திருச்சட்டத்தில் எழுதியுள்ளது." (லூக்கா 2:23) இயேசு 'இறைமகன்', 'கடவுளுக்கு அர்ப்பணமானவர்'  என்பதை உணர்த்த நற்செய்தியாளர் 'தலைமகன்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். "இயேசு கிறிஸ்து கட்புலனாகாத கடவுளது சாயல்; படைப்பனைத்திலும் தலைப்பேறு." (கொலோசையர் 1:15) என்றும், "இறைத் தன்மையின் முழுநிறைவும் உடலுருவில் கிறிஸ்துவுக்குள் குடிகொண்டிருக்கிறது" (கொலோசையர் 1:15) என்றும் திருத்தூதர் பவுல் சான்று பகர்கிறார்."இவ்விறுதி நாள்களில், கடவுள் தம் மகன் இயேசு வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அவர் தம் முதற்பேறான இவரை உலகிற்கு அனுப்பினார்." (எபிரேயர் 1:2,6) இறைமகன் இயேசுவின் பொருட்டு யோசேப்பும், மரியாளும் தூயவர்களாக வாழ்ந்தார்கள். "ஏனெனில், கடவுளே அவர்களில் செயலாற்றி,  தம் திருவுளப்படி செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் அளித்தார்." (பிலிப்பியர் 2:13) "இயேசு மட்டுமே மரியாளின் ஒரே மகன் என்றாலும், அவர் மீட்பளிக்க வந்த அனைத்து மனிதரிடமும் மரியாளின் ஆன்மீகத் தாய்மை விரிவடைகிறது: 'பல சகோதர சகோதரிகளிடையே, அதாவது நம்பிக்கை கொண்டோரிடையே தலைப்பேறாக' (உரோமையர் 8:29) நியமிக்கப்பட்ட மகனையே அவர் பெற்றெடுத்தார்; நம்பிக்கை கொண்டோரை உருவாக்கி வளர்ப்பதில், அவர் தாய்க்குரிய அன்போடு ஒத்துழைக்கிறார்." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண்.501) எனவே, இயேசுவைத் தவிர வேறு யாரையும் மரியாள் பெற்றெடுக்கவில்லை என்பது உறுதி.