விண்ணிற்கு எடுத்துச் செல்லப்பட்ட மரியா – கி.பி 1950

மரியாவின் மரண காலம் நெருங்கி வந்ததும், திருத்தூதர்கள் அனைவரும் உள்ளுணர்வால் தூண்டப்பட்டு எருசலேம் நோக்கி விரைந்தனர். தோமா தவிர மற்ற திருத்தூதர்கள் அனைவருக்கும் ஆசி வழங்கிய நிலையில் மரியா மரணம் அடைந்தார். யூத வழக்கப்படி மரியாவின் உடலை திருத்தூதர்கள் விரைவில் அடக்கம் செய்துவிட்டனர். தாமதமாக எருசலேம் வந்து சேர்ந்த தோமா, மரியாவிடம் இறுதி ஆசீர் பெற முடியாமல் போனது குறித்து மனம் வருந்தினார். எனவே அவரது முகத்தையாவது ஒருமுறை பார்க்க வேண்டுமென்று விரும்பினார்.

திருத்தூதர்கள் அனைவரும் மரியாவை அடக்கம் செய்த கல்லறைக்கு சென்றனர். கல்லறை திறக்கப்பட்டது; ஆனால் உள்ளே மரியாவின் உடல் இல்லை. விண்ணக நறுமணம் அங்கே வீசியது. இறைமகன் இயேசு தனது அன்னையின் உடலை அழிவுற விடாமல், மரியாவை உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்தில் ஏற்றுக்கொண்டார் என்று திருத்தூதர்கள் நம்பினர். பின்பு அன்னை மரியா தோமாவுக்கு காட்சி அளித்து, தான் விண்ணக மாட்சியில் இருப்பதை உறுதிசெய்தார் என்று மரபுவழி செய்திகள் கூறுகின்றன.

தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு என்பது கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை முதலிய பல திருச்சபைகளின் நம்பிக்கையின் படி மரியாள் தனது உலகவாழ்வின் முடிவுக்குப்பின் விண்ணகத்திற்கு உடலோடு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்னும் நம்பிக்கையினைக்குறிக்கும்.

, மரியாவின் விண்ணேற்பு, Tizian, 1516

1950இல் பன்னிரண்டாம் பயஸ் மரியா விண்ணேற்பு அடைந்ததை கிறித்தவ விசுவாச உண்மையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

கத்தோலிக்க திருச்சபையில் இது பெருவிழாவும், கடன்திருநாளும் ஆகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

மரியன்னையின் விண்ணேற்பு விழா உலகிலுள்ள அனைத்துக் கத்தோலிக்கர்களாலும் கொண்டாடப்படுகின்றது. இயேசுகிறீஸ்து தனது தாயாரை நம் அனைவர்க்கும் தாயாக இவ்வுலகில் நமக்காக விட்டுச் சென்றார். "பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்ட தாய்", "அருள் நிறைந்த பெண்மணி" என்று பெண்கள் குலத்திற்கு மட்டுமல்ல உலகத்தில் தாய்மையின் பொக்கிஷமாக திகழ்பவள் தான் எம் மரியன்னை. எனவே அவரின் விண்ணேற்பை பெருவிழாவாக கொண்டாடுகிறோம்.

திருச்சபையின் மரபு பதிவு செய்திருக்கும் அன்னை மரியாள் பற்றிய செய்திகளும் திருத்தந்தையர்களின் அன்னை மரியாளின் விண்ணேற்பு பிரகடனங்களும் மரியன்னையின் மகிமையை உலகறியச் செய்துள்ளன. சாவின் நிழல் தண்டாத பெண்ணாய் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணக மகிமையைச் சுவீகரித்த அன்னை மரியாள் நம்மிடம் எதிர்பார்ப்பது எல்லாம் பாவக்கறை நீங்கிய நம் தூய வாழ்வைத் தான். கி. பி. 8 ஆம் நூற்றாண்டு முதல் ஆகஸ்ட் திங்கள் 15ஆம் நாள் அன்னை மரியாளின் விண்ணேற்பு விழாவாகக் கொண்டாடப்பட்டது.

முதலாம் நிக்கோலாஸ் காலம் (கி. பி. 858- 867) முதல் என்றும் மறைய முடியாத அளவிற்கு திரு வழிபாட்டில் ஊன்றிய வெற்றி விழாவாக விண்ணேற்பு விழா மாறியது. திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர் 1954 ஆம் ஆண்டில் அன்னை மரியாள் ஆன்மாவோடும் உடலோடும் விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டாள் என்றும், திருச்சபையின் போதனையை விசுவாச சத்தியம் என்றும் பிரகடனப்படுத்தினார்.

அன்னை மரியாள் மரிக்கவில்லை. உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்ற ஒரு மரபு பசுமையாக இருந்து வருகிறது. இதற்கு ஓர் இறையியல் அடிப்படையென்றால், பாவமறியாத மரியாளை மரணம் எப்படித் தீண்ட முடியும்? எனவே அன்னை மரியாள் மரணத்தின் பிடியில் சிக்காமல் விண்ணகம் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற நம்பிக்கை வேரூன்ற ஆரம்பித்தது.

திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர், தனது சாசனத்தில், அன்னை மரியாளின் மரணம் பற்றி திட்டவட்டமாக எதுவும் கூறாமல் விட்டுவிடுகிறார். ‘தனது வையக வாழ்வு நிறை வெய்தியவுடன்’ என்று மட்டும் குறிப்பிடுகிறார். ‘மரணத்தால் வாழ்வு மாறுபடுகின்றதேயன்றி அழிக்கப்படுவதில்லை’ என்றே கத்தோலிக்க அடக்கச் சடங்குத் திருநூல் பகர்கிறது. அன்னை மரியாள் இயேசுவை தமது உள்ளத்தில் ஏற்று, உதரத்தில் தாங்கி, அவருடைய உணர்வுகளோடு ஒன்றாகி மீட்புத் திட்டத்தில் முழுமையாகத் துணை நின்றதால், மரியாள் இயேசுவின் உயிர்ப்பில் முதன்மையாக பங்கு பெறுவது தகுதியும் நீதியுமாகும்.

நாம் அனைவரும் பெறப்போகும் விண்ணக மகிமையின் முன்னாக்கமாகவும், முன்னடையாளமாகவும், வெளிப்படையாக நம்பிக்கையாகவும் அவர் திகழ்கின்றார். மரியாளின் உடல், ஆன்ம விண்ணேற்பு, மனித உடலின் பருப்பொருளின் நன்மைத்தனத்தைச் சுட்டிக்காட்டி, முழு மனிதனும் மீட்கப்படுவான் என பகர்கிறது. மரியாளின் விண்ணேற்பு, வெறும் கோட்பாடு மட்டுமல்ல, அது விண்ணையும் மண்ணையும் இணைத்த ஓர் உண்மை நிகழ்வு. அது வெறும் புதுமை அல்லது கொண்டாட்டமல்லாத அன்றாட வாழ்வின் சிலுவைகள் ஊடான ஒரு பயணம். அது, வெறும் திருவிழாவல்ல, ஒரு தீப்பொறி, பாவத்தை விலக்கி தூய வாழ்வுக்கு எம்மை அழைத்து நிற்கும் ஒரு வாழ்க்கை.

தமிழில் அன்னை மரியாள் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார், இப்பெயர்கள் அவரது குணாதியசங்களை கொண்டும் அவர் செய்த புதுமைகளைக் கொண்டும், அவரது ஆலயங்கள் அமைந்துள்ள இடப் பெயர்களைக் கொண்டும் புனையப்பட்டுள்ளன. புனித மரியாள், கன்னி மரி, பனிமயமாதா, வியாகுல மாதா, அன்னை வேளாங்கண்னி, மடுமாதா, புதுமைமாதா, லூட்ஸ் மாதா, போன்ற பெயர்களாள் அன்னை மரியாள் இவ்வுலகில் அழைக்கப்பட்டு மகிமைப்படுத்தப்படுகின்றார்.

இன்றைய நாளில் நாம் அன்னையை மகிமைப்படுத்த நம்மாலான கடமைகளையும் கடைப்பிடிக்கவும் நமக்கான பணிகளை செவ்வனே ஏற்று அன்னை மரியாளின் வழித்தடத்தில் பயணிக்கவும் முயலுவதே அவருக்கு நாம் செய்யும் மகிமைப் பேறாகும்.

இன்றைய உலகில் அன்னை மரியாளின் வழியில் தாய்மையின் மகத்துவத்தையும் வாழ்க்கையில் அன்றாட நிலைகளில் அவற்றுக்கான பொறுமை நிலைகளை தத்தம் குடும்பங்களில் நாம் கடைப்பிடித்து வாழ்கின்றோமா? நம் குழந்தைகளை தாயன்புடன் பரிவுடன் அவர்களது நடைமுறை வாழ்க்கையை அவதானித்து அவர்களுக்கான உந்துகோலாக நாம் நடந்து கொள்ளுகின்றோமா? நம்மை அண்டி வருபவர்களை தாயன்புடன் நடத்துகின்றோமா…? நம்மை பரிகாசப்படுத்துபவர்களை நாம் மன்னிக்கின்றோமா?…. நமக்கு வரும் சோதனைகளையும் சுமைகளையும் தாங்கிக் கொள்கின்றோமா….. இவற்றுக்கான விடைகளை நாம் அனைவரும் நமக்குள் சுயபரிசோதனை செய்து அன்னை மரியாள் இவ்வுலகில் வாழ்ந்த பாதையில் அவரது செபதவ முயற்சிகளை நாம் கடைப்பிடித்து விசேடமாக இன்றைய உலகில் அன்னை மரியாளின் பக்தி மீது காட்டப்படும் அவவிசுவாச நிலைகளை நாம் தகர்த்தெறிந்து அன்னை மீது விசுவாசம் கொண்டவர்களாக வாழ்ந்து அன்னையின் செபமாலைப் பக்தியை இவ்வுலகில் மற்றவர்களிடையே நிலை பெறச் செய்து அன்னைக்குரிய பிள்ளைகளாக நாம் என்றும் வாழ்வதற்கு நாம் நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்வோம்.

அன்னை என்றுமே எம்மைக் காப்பாள். எமக்கு கவசமாக காவலாக என்றும் எம்முடன் கூட பயணிப்பாள் அந்த நம்பிக்கையில் நம் வாழ்வை அன்னையின் கையில் ஒப்படைப்போம்.

அருள் நிறைந்த மரியே வாழ்க! கர்த்தர் உம்முடனே, பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே, உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.

அர்ச்சியசிஷ்ட மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே, பாவிகளாயிருக்கிற எங்களுக்காக, இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். - ஆமென்...