அமல உற்பவி மரியாள் – கி.பி 1854

அழகின் முழுமையெனவும், ஆறுதலின் தாயெனவும், நம்பிக்கையின் நாயகியெனவும், நலன்களின் ஊற்று எனவும், நம்பினோரின் ஆதரவெனவும், அகிலமனைத்தின் அரசியெனவும், அன்னையர்க்கெல்லாம் அன்னையெனவும், மகிழச்செய்த ஆச்சரியக்கனியெனவும் பலராலும், பலவாறாக, பரவலாக விந்தையோடு விவரிக்கப்படும் மரியாள், அன்பிறைவனின் திருமகனைத் தாங்கித் தரணிக்களிப்பதற்காக இத்தரணியின் தன்னிகரில்லாத் தாரகையாக, பாவமெனும் தாகம் சூழாப் பரமனின் தூரிகையாக, பக்குவமாய், அதிமுக்கியமாய் அவனிக்களிக்கப்பட்ட அருமையான படைப்பு. இவளது மேன்மை இவளது இறைத் தாய்மையிலிருந்தாலும், இத்தாய்மைக்காக இறைவனாலேயே சிறப்பான விதத்தில் காக்கப்பட்டதால், மாந்தரனைவரும் அடையவேண்டிய இலக்கான மங்களத்தின் நிறைவான மாசற்ற அமலத்துவத்தில் தான் பரிமளிக்கிறது என்றால் இக்கூற்று மிகையல்ல.

மரியாள் அமலியாக அவதரித்தவள். இவள் அமல உற்பவி. ஆதிப்பெற்றோரின் வீழ்ச்சிக்கு முன்பிருந்த தூய நிலையிலேயே இவ்வவனியில் அருமையாக அவதரித்தவள். இத்தகு பெருமையால் மரியாள் இறைவனால் அலங்கரிக்கப்பட்டிருந்தபோதும், இந்த ‘அமலி’ என்னும் அங்கீகாரம் வரலாற்றில் அவ்வளவு சுலபத்தில் கிடைத்துவிடவில்லை. வரலாற்றை நோக்கும்போது, நூற்றாண்டுகளையல்ல, ஆயிரமாண்டுகளைக் கடந்து, அறிவு, நம்பிக்கை, விசுவாசம், போராட்டம், பகிர்வுகளைக் கடந்து பலமான எதிர்பார்ப்புகள் மற்றும் மக்களின் ஏக்கங்களுக்கிடையே தான் மறைக்கோட்பாடாக முழங்கப்பட்டிருக்கின்றது. இந்த மறைக்கோட்பாடு கடந்து வந்த வரலாறு மற்றும் பாரம்பரியப்பயணம் அதி நீளமானது. இதனை ஆழமாக நோக்குமுன், மரியாள், “அமலி” என்று அழைக்கப்படுமளவிற்கு அவளை உயர்த்திய, மக்களுக்கு உணர்த்திய சில விவிலிய மற்றும் விசுவாசக் கலவைகளையும் அவற்றின் பயணங்களையும் அவற்றின் பொருளையும் புரிந்துகொள்ள விழைவது நன்மை பயக்கும்.

ஆதாம் ஏவாள் பாவம் செய்தபோது, கடவுளின் அருட்கொடைகள் மனிதனுக்கு தடைப்பட்டன. உறவு நிலை பாதிக்கப்பட்டது. தந்தை கடவுள் மனிதனோடு கொண்டுள்ள் உறவைச் சரிசெய்ய, புதுப்பிக்கக் கன்னி மரியாளைக் கருவியாகவும், பாலமாகவும், பயன்படுத்தினார்.

இறைவனின் மீட்புத்திட்டத்தின் தொடக்கத்திலேயே மரியாள் தோன்றுகிறார். “உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும், அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன்தலையைக் காயப்படுத்தும்” (தொநூ 3:15). பெண்ணின் வித்துக்கும் அலகையின் வித்துக்கும் இடையே நடைபெறும் மாபெரும் தொடர் போரில் பெண்ணின் வித்து நிச்சயமாக வெற்றி அடையும். இதுதான் தவறிய மனிதனுக்கு இறைவன் வழங்கிய முதல் நற்செய்தியாகும்.

திருமுழுக்கு வழியாக ஒருவருடைய ஜென்மப் பாவம் நீக்கப்படுகிறது. ஆனால் மரியாளை ஜெனமப்பாவம் தீண்டாதபடி இறைவன் பாதுகாத்தார். மீட்பரின் தாய் மரியாள் பாவத்தின் ஆட்சிக்கு ஒரு நொடியும் உட்பட்டிருப்பது, ‘மீட்பரின் தாய்’ என்னும் அவருடைய தனிச்சிறப்பான அழைத்தலுக்கு ஏற்புடையது அல்ல. எனவே அவரை ‘அருள் நிறைந்தவராக’ (லூக் 1:28) அதாவது, ஜென்ம பாவக்கறையின்றி இறைவன் படைத்தார்.

இதனைத்தான் வானதூதர் கன்னி மரியாளிடம்

அருள் நிறைந்தவளே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார், பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்

என வாழ்த்தொலியாக லூக்கா 1:28 இல் என்று வாழ்த்துகிறார். மரியாள் அன்றும் இன்றும் என்றும் “அருள் நிறைந்தவரே.”

தூய பவுல், நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். (எபே. 1:4) என்கிறார். உலகம் உருவாகும் முன்பே ஒவ்வொரு கிறித்தவரையும் இறைவன் கிறிஸ்து வழியாகத் தேர்ந்துகொண்டது உண்மை என்றால், இவ்வுண்மை மீட்பரின் தாய் மரியாளுக்கு இன்னும் எவ்வளவோ அதிகமாகப் பொருந்தும்!

மரியாள் மீட்பரின் தாய் என்றாலும் அவரும் இயேசுவின் இறப்பாலும் உயிர்ப்பாலும் மீட்கப்பட்டார். மரியாளுக்கு இயேசு கொண்டுவந்த மீட்பை இறைவன் முன்னரே வழங்கிவிட்டார். இயேசு கிறிஸ்துவின் பேறுபலன்களை முன்னிட்டே மரியாள் அமல உற்பவியாகப் பிறந்தார். இரண்டாவது வத்திக்கான் சங்கம் கூறுவது போல், “தம் மகனின் பேறு பலன்களை முன்னிட்டு அவர் உன்னத முறையில் மீட்கப்பெற்று, நெருங்கிய, பிரிக்கமுடியாத முறையில் அவரோடு இணைக்கப் பெற்றிருக்கிறார்… ஆயினும் அதே நேரத்தில் ஆதாமின் வழித்தோன்றலாகவும் இருப்பதால் மீட்கப்பெறவேண்டிய மக்கள் அனைவரும் அவருள் ஒருவராகின்றார்”. (திருச்சபை எண்.53). திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் “மீட்பரின் தாய்” என்னும் தமது மறைத் தூது மடலில் மரியாள் ‘அருள் நிறைந்தவர்’ என்பதற்கு ஆழமான விளக்கம் தருகிறார் (மீட்பரின் தாய், எண்கள் 8-11).

மரியாளைப் பொருத்தமட்டில், ஜென்மப் பாவக்கறை அவரைத் தீண்டாதபடி அவர் கருவான முதல் நொடியிலிருந்தே இறைவன் அவரைப் பாதுகாத்தார். நம்மைப் பொருத்தமட்டில் ஜென்மப்பாவம் நம்மைத் தீண்டிய பிறகு அதே இறைவன் அப்பாவத்தின் காயத்தைத் திருமுழுக்கு வழியாகக் குணப்படுத்திப் பாதுகாக்கின்றார்.

ஒரு மருத்துவர் ஒருவரை இரண்டு வழிகளில் நோயினின்று காப்பாற்ற முடியும். ஓன்று. அவரை நோய் தாக்காமலே தடுப்பு ஊசி போட்டு நோயினின்று காப்பாற்றமுடியும். இரண்டு, நோய் தாக்கிய பிறகு அந்நோய்க்குத் தக்க மருந்தைக் கொடுத்து அவரைக் குணப்படுத்த முடியும்.

இவ்வாறு மரியாளின் அமல உற்பவத்தை விசுவாசக்கோட்பாடாகத் திருத்தந்தை 9ம் பத்திநாதர் பிரகடனம் செய்த நான்கு ஆண்டுகளுக்குப்பின் லூர்து கெபியில் தோன்றிய மரியா, “நாமே அமல உற்பவம்” என்று தமது பெயரை வெளிப்படுத்pயது குறிப்பிடத்தக்கது.

புனித பொனவெந்தூர் கூறுகின்றார், “இறைவன் விரும்பி இருந்தால் இப்போதிருக்கும் விண்ணகத்தையும் மண்ணகத்தையும் விட மேலான விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்திருக்க முடியும். ஆனால் மரியன்னையை விட மேலான ஒரு தாயை அவரால் படைத்திருக்கமுடியாது.

மரியாளின் அமல உற்பவத்திற்கு ஓர் இறையியல் வல்லுநர் கூறியுள்ள இரத்தினச் சுருக்கமான காரணம்: இறைவன் அதைச்செய்ய முடிந்தது: அது ஏற்புடையதாக இருந்தது: எனவே அவர் அதைச் செய்தார்

ஒரு முறை ஒருவர் என்னிடம், "தந்தையே, சென்னை மெரினா கடற்கரையில் ஒரு நாய் கண்ணகியின் சிலை வரை ஓடிவருகிறது: பிறகு திரும்பவும் பின்நோக்கி ஓடுகிறது: இவ்வாறு பலமுறை அந்நாய் செய்கிறது. ஏன்? ஏன்று கேட்டார். நான் பல காரணங்களைச் சொல்லியும் அவர் அவற்றை ஏற்றுக்கொள்ளாமல், “அது அந்த நாயின் விருப்பம்” என்று நாயை விடப் பயங்கரமாகக் கடித்தார்.

இது ஒரு ‘கடிஜோக்’. ஆனால் இதில் பொதிந்துள்ள உண்மை என்ன? ஒரு நாய்க்குக் கூட அதன் விருப்பப்படி நடக்க உரிமை உண்டு. அப்படியானால் மனிதருக்கு, எல்லாவற்றிற்கும் மேலாகக் கடவுளுக்கு தாம் விரும்புவதைச் செய்ய உரிமை இல்லையா? திராட்சைத் தோட்ட வேலையாள்கள் உவமையின் இறுதியில் நிலக்கிழார் தமக்கு எதிராக முணுமுணுத்தவர்களிடம், எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக்கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப்பொறாமையா? (மத் 20:15) என்கிறார். எனவே, இறைவன் மரியாளின் அமல உற்பவத்தை விரும்பினார். அதை அவரால் செய்ய முடிந்தது. எனவே. அவர் அதைச் செய்தார். கடவுளின் செயலைக் கேள்விக்கு உட்படுத்த நாம் யார்?

அருள் நிறைந்தவரும் அமல உற்பவியுமான மரியாள் நமக்கு வழங்கும் நற்செய்தி: நாம் அனைவரும் மரியாளைப் போன்று அமல உற்பவமாகப் பிறக்கும் பேறு கிடைக்கவில்லையென்றாலும், நம்மாலும் மாசற்றவர்களாக வாழ முடியும். அதற்குண்டான ஆற்றலை நாம் திருமுழுக்கின் மூலம் பெற்றுக்கொண்டுள்ளோம். நாம் மாசற்றவர்களாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் கடவுள் இறைமகன் இயேசுவை இந்த உலகத்திற்கு அனுப்பினார். இதனைப் புனிதப் பவுல் அடிகளார், “நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும் படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே, கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்” என்ற எபே. 1:4 இல் குறிப்பிடுகிறார்.

ஓய்வு பெற்ற ஜெயில் அதிகாரி ஒருநாள் அதிகாலையில் கைவண்டி இழுத்துக்கொண்டு போகும் ஒரு நபரை சந்தித்தார். உற்றுப்பார்த்த போதுதான் தெரிந்தது அவன் பல திருட்டுக்களை செய்துவிட்டு அடிக்கடி சிறைக்கு வந்தவன் என்று. இவருக்கு நன்றாகத் தெரிந்தவன். இப்போது கஷ்டப்பட்டு கைவண்டி இழுத்து அவன் பிழைப்பது பார்த்து அவனைப் பாராட்டினார். “தம்பி உன்னைப் போலவே எல்லோரும் திருந்தி உழைக்க ஆரம்பித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என்றார். அதற்கு அவன், “சார் உங்களிடத்தில் சொல்ல என்ன இருக்கிறது. நீங்கள் நினைப்பதுபோல் ஒன்றும் மாறவில்லை. இப்போது கூட இந்த கைவண்டியைத் திருடிக்கொண்டுதான் போகிறேன்” என்று சொல்லிக்கொண்டு போனான்.

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன இலாபம் என்று ஒரு பாடல் வரி சொல்கிறது.

தூய பவுல், நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத்தெரியாதா? (1 கொரி 3:16) என்று கேட்கிறார்.

ஒரு ‘குண்டு’ அம்மா பங்குத்தந்தையிடம் “நானுமா பரிசுத்த ஆவியின் ஆலயம் என்று கேட்டதற்கு , பங்குத்தந்தை அவரிடம், “நீங்கள் பரிசுத்த ஆவியின் பசிலிக்கா என்றாராம்.

ஓர் ஆலயத்தை எவ்வளவு புனிதமாக போற்ற வேண்டுமோ அவ்வளவு புனிதமாக நம் உடலையும் போற்ற வேண்டும். தூய ஆவி நமது உள்ளத்தில் சுடர் விட்டெரியும் பேரொளி. அப்பேரொளியை, உண்மையின் ஒளியை நமது கனமான பாவத்தால் அணைத்து விடுகின்றோம். ஆகவே தான், தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம். (1கொரி 5:19), அதாவது தூய ஆவியை அணைத்து விட வேண்டாம் என்று எச்சரிக்கிறார் தூய பவுல். நமது உள்ளத்தின் இனிய விருந்தினரான தூய ஆவியை நாம் அன்புடனும் பண்புடனும் நடத்த வேண்டும். தூய ஆவி நமது தீய நடத்தையால் மிகவும் வருந்துகின்றார்.

கடவுளின் தூய ஆவியார்க்கு துயரம் வருவிக்காதீர்கள் (எபே 4:30) என்று அறிவுருத்துகின்றார் தூய பவுல்.

ஒரு கிறிஸ்தவர் பொய்யை விலக்கி உண்மை பேச வேண்டும்: சினம் கொள்ளக்கூடாது: திருடக்கூடாது: கெட்டவார்த்தையை தவிர்க்க வேண்டும். மனக்கசப்பு, சீற்றம், சினம், வீண்கூச்சல, பழிச்சொல் ஆகியவைகளை விட்டொழித்து பிறரிடம் பரிவும் இரக்கமும் காட்டி பிறரை மன்னிக்க வேண்டும். (எபே 4:25-32).

கோபம் வருவது இயல்பு கோபத்தை சரியான விதத்தில் வெளிப்படுத்தலாம். தீய வார்த்தைகள் சொல்ல தேவையில்லை. எப்போதும் கெட்ட கெட்ட வார்த்தைகளை மிகவும் சரளமாக பொரிந்து தள்ளும் ஒரு பாட்டியிடம் பங்கு தந்தை “பாட்டி இனிமே கெட்ட வார்த்தை சொல்லாமல் நாயே பேயே பன்றி குரங்கு வெண்டக்கா சுண்டக்கா வெறிநாய் சொறிநாய் என்று திட்டுங்கள் என்றார் அதற்கு அந்த பாட்டி அந்த வார்த்தையெல்லாம் என் வாயிலிருந்து வராது கெட்ட வார்த்தை பழக்கம் ஆயிடுச்சு சாமி என்றார். அடிக்கடி அவர் தம் பழக்கத்தை புதுபித்து கொள்கின்றார். “கெட்டவார்த்தை எதுவும் உங்கள் வாயினின்று வரக்கூடாது என்று வேண்டுகோள் விடுக்கின்றார். (எபே 4:29).

சிலருக்கு குடிப்பழக்கம் நல்ல பழக்கம் ஆயிடுச்சு அதை தவிர்க்க அவர்களால் இயலவில்லை. ஒரு மாணவன் ‘வாழைப்பழம்’ என்று சொல்வதற்குப்பதிலாக ‘வாயப்பயம்’ என்றான். அவனுடைய தந்தையை ஆசிரியர் அழைத்து ‘ஏன் உங்கள் மகன் அவ்வாறு சொல்கிறான்’ என்று கேட்டதற்கு அவர் “அது எங்க பயக்க வயக்கம்’ என்றார். ஒருசிலர் ஒருசில பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகின்றனர். பின்னர் அவற்றிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள முடியாத நிலைக்குத்தள்ளப்படுகின்றனர்.

கணவர் பயங்கரக் குடிகாரர். அவருடைய மனைவி அவரைப் பற்றிப் பங்குத் தந்தையிடம் முறையிட்டார். ஒரு நாள் இரவு பன்னிரெண்டு மணிக்கு பங்குத் தந்தை பேய் வேடம் போட்டுக் கொண்டு அக்குடிகாரர் வீட்டிற்குச் சென்றார். அப்போதும் அவர் நன்றாகக் குடித்துவிட்டு மனைவி. மக்களை அடித்துக் கொண்டிருந்தார். பேய் வேடத்தில் வந்திருந்த பங்குத் தந்தையைக் கண்ட குடிகாரர் சிரித்துக் கொண்டு அவரிடம், “நீ பேய்தானே நான் கூடப் பங்கு சாமியார் என்று நினைத்து பயந்திட்டேன்” என்றார்.

குடிப்பழக்கமும் அத்துடன் இணைந்துள்ள பக்க வாத்தியங்களும் தூய ஆவிக்கு மனவருத்தம் விளைவிக்கும் பாவங்களாகும். குடி குடியை கெடுக்கும் என்பது மட்டுமல்ல குடி கோமகன் கோயிலையும் இடிக்கும் என்பது உண்மையே.

ஒரு பெண் குரஙகு குட்டியொன்றை ஈன்றது: அக்குட்டியைப் பார்த்து அழுதது, ஏன்? என்று ஆண்குரங்கு கேட்டதற்கு, அப்பெண் குரங்கு, ‘நமக்குப் பிறந்துள்ள குட்டியின் முகம் மனித முகத்தைக்கொண்டிருக்கிறது’ என்றது. அதற்கு ஆண் குரங்கு, கவலைப்படாதே போகப்போக நம் முகம் வந்துவிடும்’ என்று அதைத்தேற்றியது. மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு உயர வேண்டிய மனிதர், மனித நிலையிலிருந்து மிருக நிலைக்குத் தாழ்ந்து கொண்டிருப்பது, வேதனைக்குரியது.

நீங்கள் ஒருவரையொருவர் கடித்து விழுங்குவதை நிறுத்தாவிட்டால் ஒருவாரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள்

(கால 5:15).

புனித அகுஸ்தினார் ஒர் ஊரில் ஆட்டம் போட்டுக் கொணடிருந்த பேயைக் கட்டி இழுத்துக் கொண்டு வந்தார். சக்திபடைத்த புனிதா். ஆகவே பேய் வாயைப் பொத்திக் கொண்டு வந்து கொண்டிருந்தது. வழியில் ஒரு கோயில். புனிதர் சிறிது நேரம் ஜெபித்துவிட்டு வர எண்ணி கோவிலுக்கருகில் இருந்த மரத்தில் பேயைக் கட்டினார்.

அங்கே பக்கத்தில் ஒரு தாய் பசுவிடம் பால் கறந்துகொண்டிருந்தாள். அருகில் அவளது மகன் விளையாடிக் கொண்டிருந்தான். “அவர்களை ஒன்றும் செய்யக்கூடாது” என்று பேய்க்கு கட்டளையிட்டுவிட்டு புனிதர் செபிக்கச் சென்றார். சிறிது நேரத்தில் பேய் சிறுவனிடம் பேச்சுக்கொடுத்தது. ஒரு குச்சியை எடுத்து பசுமாட்டின் பின்புறம் குத்தச் சொன்னது. சிறுவன் பேயின் பேச்சைக் கேட்டு குச்சியை எடுத்துக் குத்த மாடு மிரண்டு எட்டி உதைத்துவிட்டு கயிறு அறுத்துக்கொண்டு ஓடிப்போனது. பால்பாத்திரம் கீழே விழுந்து பால் தரையில் சிந்தியது.

ஆத்திரமடைந்த தாய் ஒரு கட்டையை எடுத்துக் கொண்டு சிறுவனை துரத்திக்கொண்டிருந்தாள். புனிதர் ஜெபம் முடித்து வெளியே வந்தார். நிலைமை மாறியிருப்பதைப் பார்த்தார். பால் கொட்டிக்கிடக்கிறது. யாரையும் காணவில்லை. “நீ ஏதாவது செய்தாயா?” என்று கேட்க பேய் “இல்லை” என்று தலையாட்டியது. சாத்தான் எதுவும் செய்வதில்லை. ஆனால் செய்யத் தூண்டுகிறது. மனிதர்கள் அதன் சோதனைக்கு மடிகிறார்கள்.

மனமாற்றத்திற்கு மிகச்சிறந்த எடுத்துகாட்டு சக்கேயு. ஆவர் குறுக்கு வழியில் சென்று கொள்ளை அடித்து குபேரர் ஆனார். ஆனால் அவர் நிம்மதியாக இல்லை அவர் மனசாட்சி குடைந்து கொண்டே இருந்தது. புவியில் செழிப்புடன் வாழ்ந்திருந்தாலும் பாவங்கள் அவர்களை விடுவதில்லை. சக்கேயு இயேசுவை காண விரும்பி ஒரு மரத்தில் ஏறினார். இயேசு கண்ணாலே கண்டால் போதும் என்றிருந்தார். ஆனால் இயேசுவோ அவர் வீட்டிற்க்கே சென்றார், அவருடன் விருந்துண்டார். ஓளிந்து கொண்டிருந்தவனை ஒளிக்கு கொண்டு வந்தார். கள்ளனை நல்லவனாக ஆக்கினார். உடல் அளவில் குட்டயனை உள்ளத்தில் நெட்டயனாக உயர்த்தினார்

ஒருமுறை ஒரு பங்குத்தந்தையிடம் வயதான அம்மா, “சாமி! என் மகன் தன் மனைவியின் பேச்சைக்கேட்டு என்னை வீட்டைவிட்டே துரத்தி விட்டான்” என்று சொல்லி அழுதார். அதற்கு அப்பங்குத்தந்தை “உன் மகன் நாசமாப்போவான்” என்று கூறி அவனைச் சபித்தார். உடனே அத்தாய், “சாமி அவனைச் சபிக்காதீங்க, அவன் நல்லா இருப்பானு ஒரு வார்த்தை சொல்லுங்க” என்றார். எனக்கு ஒரே ஆச்சரியம்! ஒரு தாயின் அன்பு எத்தகையது ! பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு, தாய் மன்னிக்காத குற்றமே இல்லை!

உங்கள் பாவங்கள் கடுஞ்சிவப்பாய் இருக்கின்றன: எனினும் உறைந்த பனிபோல அவை வெண்மையாகும், இரத்த நிறமாய் அவை சிவந்திருக்கின்றன: எனினும் பஞ்சைப்போல் அவை வெண்மையாகும்

(எசா1:18).

முதல் திருவிருந்திற்குத் தயாரிப்பாகச் சிறுவர் சிறுமியருக்கு மறைக்கல்வி வகுப்பு நடத்திக்கொண்டிருந்தார் பங்கத்தந்தை. ஒரு சிறுனியிடம், “iஷ்னி? நீ சாவான பாவத்துடன் இறந்துபோனால் எங்கே போவாய்?” என்று கேட்டார். “நரகத்தக்குப் போவேன் ஃபாதர்! என்றாள். “நரகத்துக்குப் போனபின் அங்கே நீ செய்யும் முதல் காரியம் என்னவாயிருக்கும்? என்று பங்கத்தந்தை கேட்டார். “நான் பாவசங்கீர்த்தனத்திற்குப் போவேன்” ஃபாதர்” என்றாள் “நரகத்திலா, பாவசங்கீர்த்னத்திற்கா?” என்று ஆச்சரியப்பட்ட அவர் “நரகத்தில் யாரிடம் பாவசசங்கீர்த்தனம் செய்யப்போவாய்? “என்று சிரிப்பை வரவழைத்துக்கொண்டு கேட்டார். “உங்களிடம்தான் ஃபாதர்? “ என்று உறுதியாகச்சொன்னாள் சிறுமி. பங்குத்தந்தைக்குத் தூக்கி வாரிப்போட்டது.

- யாக்கோபின் இறையனுபவ ஏணி (தொ. நூ. 28:12)

- மோசேயின் பாலைவன அனுபவத்தால் கருகாமல் எரியும் புதர் (வி. ப. 3:2-3)

- இனிமைமிகு பாடலில் காணப்படும், தாவீதின் கோபுரம் (இ. பா. 4:4)

- அதே புத்தகத்தில் காணப்படும் வாயில் மூடப்பட்ட தோட்டம் (இ. பா. 4:12)

- யாவேயின் நகரம் (தி. பா. 87: 1-3)

- இறைமாட்சிமை விளங்கும் ஆலயம் (1அர. 8:10-11)

- இறைவனின் புனித பேழை (வி. ப. 31:1-11)

- ஞானத்தின் பிம்பம் (நீதி மொழிகள் 8:22-36)

முதுகில் கோணிப்பையைப் போட்டுக்கொண்டு ஒரு சாலையோரத்தில் குப்பைகளை பொறுக்கிக் கொண்டிருந்த ஒருவனை பார்த்து ஒரு செல்வந்தன் கேட்டான். “எல்லாம் எடுத்து போட்டுக்கொண்டிருக்கிற,, உனக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கு? சற்று சுதாரித்து திரும்பி குப்பைகளை பொறுக்கிக் கொண்டிருந்த அவன் செல்வந்தனைப் பார்த்து “யாரைப் பார்த்து பைத்தியம் என்ற சொன்னாய்? நான் நினைத்தால் இதோ இந்தக் கோணியில் சேர்த்து வைக்கிற இவற்றை இப்போது கூட தூக்கி எறியலாம். ஆனால் நீ உன் உடம்பு முழுவதும் சேர்த்துக் குவித்து வைத்திருக்கிறாயே வஞ்சனை, நேர்மையற்றதனம், சுயநலம், இந்தக் குப்பைகளைத் தூக்கி எறிய முடியுமா? செல்வந்தன் அரண்டு போனான். இதே கேள்விக்கணை நம்மை நோக்கிய வண்ணம் இருப்பதை உணர்வோம். இயேசு அட்டவணையிட்டுக் காட்டும் பரத்தமை, களவு, கொலை, விபச்சாரம், பேராசை , தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகிய கறைகள் நம்மில் படிந்திருக்கிறதா? என்று ஒரு கணம் நினைத்துப்பார்ப்போம்.

அருள்மிகப்பெற்றவரும் அமல உற்பவியுமான மரியா நமக்கு வழங்கும் நற்செய்தி: பெண்ணின் வித்து அலகையின் மீது வெற்றி கொள்ளும் (தொநூ. 3:15). பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது (உரோ 5:20). கடவுள் நம் சார்பில் இருக்கும்போது நமக்கு எதிராக இருப்பவர் யார்? (உரோ. 8:31). உலகம் உருவாகும் முன்பே இறைவன் நம்மையும் கிறிஸ்துவில் தேர்ந்துகொண்டார் (எபே. 1:4). திருச்சபையானது மாசு மறுவோ வேறு எக்குறையோ இன்றி உருமாற்றம் அடையும் (எபே 5:27). நாமும் மரியன்னையுடன் இறை மாட்சிமையில் பங்கு பெறுவோம் (உரோ. 8:28-30).

இவ்வுண்மைகளை நாம் திறந்த உள்ளத்துடன் ஏற்று, அவற்றை உலகிற்குப் பறைசாற்றி, மரியன்னையுடன் இணைந்து தீமையின் அச்சாணியை முறித்து, புனிதம் கமழும் புத்துலகைப்படைப்பதே நாம் நம் தாய்க்குப்பாடும் தன்னிகரில்லாத் தாலாட்டு ஆகும்.


இந்தக் கடவுளின் மீட்புத் திட்டத்தை இறைமகன் இயேசுவும், கன்னி மரியாளம் பற்றுதியோடுச் செய்து முடித்தனர். இன்றைய முதல் வாசகம் (தொ. நூ. 3:4-15,20) கீழ்ப்படியாமையால் ஆதாம் ஏவாள் எப்படி இறைவனின் அருட்கொடையை இறந்தனர் என்பதைப் பறிறியும், இந்த நிலை ஒரு பெண்ணால் மீண்டும் புதுபிக்கப்படும் என்பது பற்றியும் தெளிவாகக் கூறியது. இன்றைய முதல் வாசகத்தில் குறிப்பிடப்பட்ட அந்தப் பெண்தான் கன்னி மரியாள். கீழ்ப்படியாமையால் விளைந்தத் தீமை, கீழ்ப்படிதலால் சரிசெய்யப்பட்டது. குன்னி மரியாயும், இறைமகன் இயேசுவும் கீழ்ப்படிதல் மூலம் இறைத்திட்டத்திற்குப் பணிந்தனர்.

நான் ஆண்டவரின் அடிமை, உம் சொற்படியே எனக்க நிகழட்டும்

லூக்கா, 1:38-இல் என்று மரியாவும்

ஆனாலும் என் விருப்பப்படி அன்று, உம் விருப்பப்படியே

என்ற லூக்கா. 22:42-இல் இயேசுவும் கூறி இறைத்திட்டத்தை நிறைவேற்றினர்.

நமது வாழ்விலும், நாம் மாசற்றவர்களாக வாழ முயற்சி செய்ய வேண்டும். குன்னி மரியாள் தூய்மையற்றவராகப் பிறந்தாலும், அவரும் நம்மைப் போன்று மனிதப்பெண் தான். கடவுள் அவருக்குக் கொடுத்த தூய உடலையம், உள்ளத்தையும் பாவத்திலிருந்து தொடர்ந்து தன் வாழ்நாள் முழுவதும் பாதுகாத்தார். ஆணவத்திற்குச் சிறிதும் இடம் கொடாமல் தாழ்ச்சியோடு இறைத்திட்டத்தை நிறைவேற்ற தன்னையே அர்ப்பணித்தார்.

இன்று நாம் அனைவரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் திருமுழுக்கின் வழியாகப் புனிதப் படுத்தப்பட்டுள்ளோம். நாம் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பெற்ற மக்கள். மாசற்ற வாழ்வு வாழ அழைக்கப்பட்டுள்ளோம். நாம் எந்த அளவிற்கு நமது புனிதத் தன்மையைப் பாதுகாக்க முயற்சி செய்கியோம்? இன்றைய உலகம் பால உணர்வு என்றால என்ன என்பதை மறந்கு கொண்டு வருகிறது. எதை வேண்டுமானாலும் செய்யலம் என்ற கண்ணோட்டத்தில் இறை இயேசுவின் மதிப்பீடுகளான அன்பு, அமைதி, தூய்மை என்ற புண்ணிங்களைக் கொஞ்கம் கொஞ்சமாகக் முழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் மாசற்ற வாழ்வு வாழ்வது எளிதான ஒன்றல்ல. நாம் அனைவரும் எளிதில் வாவம் செய்யக்கூடியவர்கள்தான். ஆனால் நாம் எந்த அளவுக்க மாசற்ற வாழ்வு வாழ முயற்சி செய்கிறோம் என்பதைத்தான் கடவுள் பார்க்க ஆசைப்படுகிறார். மரியாள் மாசற்ற வாழ்வு வாழ அவர் எண்ணற்ற சோதனைகளையும், வேதனைகளையும், தாங்கிக் கொண்டார். இயேசுவைக் காப்பாற்ற எகிப்திற்கு அவரைத் தூக்கிக்கொண்டுச் சென்றது முதல், அவரை இரத்தக் கறையோடு சிலுவையில் அறைந்தது வரை ஆயிரம் ஆயிரம் துன்பங்கள். அனைத்தையும் பொறுத்கக் கொண்டு ஆண்டவரின் சித்தம் நிறைவேற்றிட தன்னை நமது சோதனைகளைத் தாங்கிகொண்டு, பிறருக்குத் தீங்கு செய்யாத வாழ்க்கை வாழ வேண்டும். இத்தகைய வாழ்வு வாழ நாம இறைவனை முழுமையாக நம்பி, அவரிடத்தில் நமது வேதனைகளையும், துன்பங்களையும் ஒப்படைக்க வேண்டும். மாசற்றவர்களாக வாழ தூண்ட வேண்டும். அத்தகைய பயனுள்ள மாசற்ற வாழ்வு வாழ நாம் தொடர்ந்து இறைமகன் இயேசுவிடமும் கன்னி மரியாளிடமும் தொடர்ந்து செபிப்போம்