118 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், தருவைக்குளம்


புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம்

இடம் : தருவைக்குளம்

மாவட்டம் : தூத்துக்குடி
மறை மாவட்டம் : தூத்துக்குடி

திருத்தந்தை : பிரான்சிஸ்
ஆயர் : மேதகு இவோன் அம்புறோஸ்
பங்குத்தந்தை : அருட்பணி எட்வர்ட் அடிகளார்

இணைப் பங்குத்தந்தை : அருட்பணி பர்ணபாஸ் மற்றும் அருட்பணி விஜயன்

நிலை : பங்குதளம்

குடும்பங்கள் : சுமார் 3000
அன்பியங்கள் : 28

ஞாயிறு திருப்பலி : காலை 05.00 மணி மற்றும் காலை 07.00 மணிக்கும்.

திருவிழா : செப்டம்பர் மாதத்தில்.

வரலாறு :

தருவைக்குளம் கிராமம் தூத்துக்குடிக்கு வடக்கே கடற்கரை ஓரமாய் சுமார் ஏழு மைல் தூரத்தில் அமைந்துள்ளது என்பது எல்லோரும் அறிந்த ஓர் விஷயமே! ஆனால் அது உண்டான வரலாறு நம்மில் பலருக்குத் தெரியாது. அதை கிடைத்த சில குறிப்புகளுடன் இங்கு கூறுகிறோம்.

ஓர் பெரிய தருவையும், இன்னும் இரண்டு குளங்களும் உள்ளதால் தருவைக்குளம் என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. கி.பி.1692-ல் முதன் இங்கு சுமார் 25 குடும்பங்கள் கொண்ட சில ஹரிஜனங்கள் குடியேறியதாக தெரிகிறது. பிறகு சுமார் 20 வருடங்கள் கழித்து இந்து நாடார் குடும்பங்கள் இங்கு வந்து குடியேறினர். இவர்களோடு தேவர் இனத்தைச் சேர்ந்தவர்களும் குடியேறினார்ளாம். இவர்கள் எல்லோரும் இப்போது இருக்கும் இடத்திலேயே குடியேறினார்கள். ஆனால் மேலே சொல்லப்பட்ட எல்லோரும் விவசாயத்தை நம்பியே இங்கு குடியேறியதாக கூறப்படுகிறது.

பின்னர் கி.பி.1750-ல் பழைய கண்மாய் வெட்டப்பட்டது. இது ஆறு பாஞ்சாலங்குறிச்சி பாளையக்கரர்களால் வெட்டப்பட்டது. அப்போதுதான் நெல் விதைக்கப்பட்டது. இந்த நேரத்தில் இங்கு "மருந்துக்குகூட"ஒரு பனைமரம் கிடையாது.சிலகாலம் சென்ற பிறகுதான் இங்கு மேலே சொன்ன மூன்று ஜாதியினராலும் பனைமரங்கள் உண்டாக்கப்பட்டன.

பனைமரங்கள் வளர்ந்த பின்தான் கத்தோலிக்க நாடார்கள் இங்கு வந்து, இந்து நாடார்களுடன் குடியேறினார்கள். சுமார் 25 வருடங்கள் வரை அங்கேயே வசித்து வந்தனர். கி.பி.1826-ம் வருடம் தனியாக கிழக்கே விலகி இப்போது (கத்தோலிக்க நாடார்கள்) இருக்கும் இடத்தில் குடியேறினார்கள். பிறகு (சுமார்) 1868-ல் தங்களுக்கென்று ஒரு சிறிய கற்கோவில் கட்டினார்கள்.

கி.பி.1879-ல் பிராட்டஸ்டண்டு பிரிவினர் இங்கு வந்து குடியேறினர். கி.பி.1884-ல் அவர்கள் ஓர் ஆரம்பப்பாடசாலையைக் கட்டினார்கள்.

ஜனத்தொகை பெருகியது, விவசாயத்திற்கு வேண்டிய தண்ணீர் வசதி இல்லை, ஆகவே எட்டையாபுரம் ஜமீன்தாரால் கி.பி.1897-ல் புதுக்கண்மாய் வெட்டப்பட்டது. இதனால் 800 ஏக்கர் விஸ்தீரணமுள்ள தருவை நிலம் 400 ஏக்கர் கண்மாயாகவும், 400 ஏக்கர் புன்செய் நிலமாகவும் மாற்றப்பட்டது. துர் அதிர்ஷ்டவசமாக, இக்கண் மாய் வெட்டப்பட முக்கிய காரணமாயிருந்த ஜமீன் மேனேஜர் வெங்கட்ராமனின் திடீர் மரணத்தால் இக்கண்மாய் முழுவதும் முற்றுப்பெறாமலே போய் விட்டது. கண்மாய்க்கு தண்ணீர் வரும் கால்வாய் இன்றுவரை வெட்டப்படவில்லை.

கி.பி.1906-ல் தான் கத்தோலிக்க பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. அப்போதுதான் முதல்குருவான சங்.சாமிநாத சுவாமியவர்கள் பொறுப்பாக நியமிக்கப்பட்டார்கள். பின்னர் தனிப்பங்காகி, 1918-ல் முதல் பங்கு சுவாமியாக சங்.லூர்து சுவாமியவர்கள் நியமிக்கப்பட்டார்கள். அவர்களின் பெரு முயற்சியால் இப்போதுள்ள மிக்கேல் சம்மனசு ஆலயத்திற்கு அஸ்திவாரமிடப்பட்டது. 1920-ல் கோயில் தற்காலிகமாக அபிஷேகம் செய்யப்பட்டு திறக்கப்பட்டது. 1932-ல் தான் கோபுரம் தவிர மற்ற எல்லா வேலைகளும் முடிக்கப்பட்டன.

கி.பி.1922-ல் தான் கன்னியர்மடம் ஆரம்பிக்கப்பட்டு, பெண்களுக்கென ஓர் ஆரம்பபாடசாலையும் திறக்கப்பட்டது. மக்கள் மத்தியில் கல்வி பரவி நாகரிகமடைந்து முன்னேற்றம் ஆரம்பமாகியது. சங்.மரியமாணிக்கம் சுவாமியவர்களின் தூண்டுதலால் இளைஞர்கள் வெளியிடங்களுக்கு சென்று கல்வி கற்க ஆரம்பித்தனர். 1950-ம் வருடம் ஆரம்பிக்கப்பட்ட ச.மரிய சிங்கராயர் வாசகசாலை மக்களுக்கு அறிவு வளர்ச்சியளிக்கிறது.

( மேற்படி இதுவரை நீங்கள் படித்ததெல்லாம் 18-10-1953-ல் திரு.எஸ்.ஏ.பிரான்சிஸ் எம்.ஏ.எம்.எட். அவர்களால் வெளியிடப்பட்ட 'கலைக்களஞ்சியம்' என்னும் கையெழுத்து மலரில் வெளியிடப்பட்ட தருவைக்குளம் கிராமம் பற்றிய சில பகுதிகளை தான்.)

இதன்பின் கிடைத்த தகவலின் குறிப்புகள்; (1953 முதல் 1983 வரை)

1953-54-ல் மரியானுஸ் சுவாமி அவர்களால் நடுநிலைப்பள்ளி அமைக்கப்பட்டது. 1956-ல் தருவைக்குளம் தனி பஞ்சயத்தாக அமையப்பெற்று முதல் பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் மறைந்த திரு. சூசை அந்தோணி ராஜமணி நாடார். 1960-ல் மீனவர்களுக்கு அரசு கடனும் மானியமுமாக 10 வீடுகள் கட்டிக்கொடுத்தது. சங்.மாணிக்கம் சுவாமி அவர்கள் காலத்தில் கோபுரம் வேலை முடிந்து, சங்.லூர்து சுவாமி அவர்களால் மந்திரிக்கப்பட்டது.

அடுத்த ஓரிரு ஆண்டுகளில் உயர்நிலைப்பள்ளி அமைக்கப்பட்டது.

பின்னர் சங்.அம்புரோஸ் சுவாமியவர்கள் காலத்தில் 100 வீடுகள் கட்டப்பட்டது. இது அரசாங்கத்தால் மானியமாக மீனவர்களுக்காக 1976-ல் கட்டி முடிக்கப்பட்டது. இவ்வாறு பல்வேறு நிலைகளிலும் சிறந்து விளங்குகின்றது தருவைக்குளம் பங்குதளம். 2007 ம் ஆண்டு தருவைக்குளம் பங்குதளம் ஆனதன் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வெள்ளிக்கிழமைகளில் மாலை 06.30 ற்கு புனித மிக்கேல் அதிதூதர் நவநாள் திருப்பலி நடைபெறும். மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை தேர்பவனி உடன் திருப்பலி மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. பல்வேறு மக்களும் இதில் கலந்து கொண்டு இறை அருளை புனிதரின் வழியாக பெற்றுச் செல்கின்றனர்.