கிறிஸ்துமஸ் கால சிந்தனைகள் 10 /25 ***


 “ அவள் தலைப்பேறான மகனை ஈன்றெடுத்து முன்னிட்டியில் கிடத்தினாள். எனெனில் சத்திரத்தில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை “

                      லூக்காஸ் : 2:7

ஏன் கடவுள் சாதாரண மாட்டுக்கொட்டகையில் பிறக்கவேண்டும் ? கடவுள் உலகத்தையும், சர்வத்தையும் படைத்த கடவுள் தான் மனிதனாக பிறக்க இவ்வளவு எளிமையாக ஒரு மாட்டித்தொழுவத்தில் ஏன் பிறக்கவேண்டும் ? தான் பிறக்க தான் தேர்ந்து கொண்ட மரியாளும் ஒரு செல்வ சீமாட்டி அல்ல ஒரு சாதாரண விவசாய குடும்பத்தை சார்ந்தவர்தான். தனக்கு வளர்ப்புத தந்தையாக தேர்ந்தெடுத்தவரும் அன்றாடம் மர வேலை செய்யும் சாதாரண தொழிலாளிதான்.

தான் பிறக்கும்போது கூட தூய்மையான மாதாவையும், வாய்மையான சூசையப்பரையும் தவிர மனிதர்கள் யாரும் இல்லை. வாயில்லா ஜீவன்களே இருந்தன இயேசு பிறக்கும்போது. ஏனென்றால் அந்த வாயில்லா ஜீவங்களிடத்திலும் பாவம் இல்லை. திருப்பெற்றோர்கள் தவிர உலகின் மீட்பரை முதலில் பார்க்கும் பாக்கியம் இவைகளுக்குத்தான் கிடைத்தன.

இப்படி மூவொரு கடவுள் தூய்மையை தேர்ந்து கொண்டதுபோல் எளிமையை ஏன் தேர்ந்து கொண்டார்? “ என் மகனே ! என் மகளே நான் உனக்காக எதுவும் செய்வேன் “ என்பதற்காகத்தான்.

“ தாவிது அரசனின் பரம்பரையில் வந்த நான் அரன்மனையை தேடவில்லை. செல்வ சீமான் குடும்பத்தை தேர்ந்தெடுத்திருந்தால் தங்கத்தொட்டிலில் பிறந்திருக்க முடியும். அட்லீஸ்ட் ஒரு நடுத்தர குடும்பத்தை தேர்த்தெடுத்திருந்தால் நல்ல அழகான ஒரு தொட்டிலில் பிறந்திருக்க முடியும். அதையும் நான் செய்யவில்லை. உனக்காக நான் மாட்டுத்தொழுவத்தை தேர்ந்துகொண்டேன். “

எந்த ஒரு ஏழையும் இப்படி சொல்லிவிட முடியாது “ இயேசு என் வீட்டில் எல்லாம் வந்து பிறப்பாரா ? இந்த கஷ்ட்டப்பட்ட குடும்பத்தை அவர் தேர்வு செய்வாரா ? தேர்வு செய்தார்.

மாட்டுத்தொழுவத்தை கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போம். இடவசதி இருக்காது. அமரக்கூட வசதி இருக்காது. காய்ந்த தரை இருக்காது. மாட்டு சாணம் அங்கும் இங்கும் கிடக்கும். மாட்டுச்சாணத்தின் வாசம் வீசும். மாடுகளின் “ மா...மா..” என்ற சத்தம் அவ்வப்போது ஒலித்துக்கொண்டிருக்கும். மாட்டின் தீவனத்தொட்டி சுத்தமாக இருக்காது. இவ்வளவு சவுகரிகக்குறைவு உள்ள இன்னும் சொல்லப்போனால் சவுகரிகமே இல்லாத ஒரு இடத்தில்.

பேறுகால வேதனையில் அன்னை. பதற்றத்தோடும், துடிப்போடும் புனித சூசையப்பர் அதாவது தெய்வக்குடும்பம். எப்படி இருந்திருக்கும் ? சூசையப்பர் என்னவெல்லாம் செய்திருப்பார். அவரே அந்த தொழுவத்தை சுத்தம் செய்திருப்பார். மாட்டின் தீவனத்தொட்டியை சுத்தம் செய்திருப்பார். அன்னை படுக்க அந்த குளிர்காலத்த்லும் தன் போர்வைகொடுத்திருப்பார். அன்னை அந்த வேதனையிலும் அந்த சவுகரீகம் இல்லாத இடத்தை ஏற்றுக்கொண்டார். சமாளித்துக்கொண்டார். அதுதான் அர்ப்பணம், தியாகம். நாம் குடில்களை இல்லங்களில் வைக்கும் இந்த நேரங்களில், அழகழகான சீரில்களை போடும் இந்த நேரங்களில், பார்த்து பார்த்து டெகரேசன் செய்யும் இந்த நேரங்களில் அன்று இறைப்பெற்றோரும், இறைவனும் தங்கியிருந்த உண்மைகுடிலை ஒரு நிமிடம் யோசித்துப்பார்ப்போம்.

இதோ பணத்திற்கும், பகட்டிற்கும், வசதிகளை மேலும் மேலும் பெருக்கிக்கொள்ள அதன் பின்னே எத்தனையோ மனிதர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பணம் சம்பாதிப்பதோ, மனைவிகளுக்காக, குழந்தைகளுக்காக வசதிகளை பெறுக்குவதோ தவறில்லை. எந்த நிலையில் இருந்தாலும், பணம் இருந்தாலும்,இல்லாவிட்டாலும் எளிமையாக இருக்க வேண்டும்.

 உள்ளத்தில் எளிமை பிறந்தால்தான் தனக்குள் ஒரு மனம் இருப்பதை உணர முடியும், பிறரின் கஷ்ட்டங்களை உணர முடியும். மூவொரு கடவுளே இவ்வளவு ஏழ்மையையும், எளிமையையும் தேர்ந்துகொண்ட பின்பு நாம் எம்மாத்திரம்.

எளிமை எங்கு இருக்கிறதோ அங்கு உணர்வு இருக்கும், மனிதாபிமானம் இருக்கும். முன்பு பரந்து விரிந்திருந்த உள்ளங்கள் இப்போது குறுகி விட்டன.  சுய நல போக்கு அதிகரித்துவிட்டன. தான், தனது, தன் குடும்பம் என்று ஆகிவிட்டது... ஏன் இந்த இழி நிலை...

ஜெபம் : எல்லாம் வல்ல எளிமையை தேர்ந்து கொண்ட எங்கள் இறைவா ! நீர் எங்களுக்கு ஒரு ரோல் மாடல், உம் பெற்றோரும் எங்களுக்கு ரோல் மாடல். தான் என்ற கர்வம், தான்தான் பெரியவன் என்ற அகந்தை இவைகளை எங்களிடமிருந்து பிடுங்கி எரிந்துவிடும். அனைத்து அரசர்களுக்கும் அரசரான உலகின் மிகப்பெரியவரான் நீரே ஒரு சாதாரண மாட்டுத்தொழுவத்தை தேர்ந்து கடவுளே எளிமையானவர் என்று காட்டிவிட்டீர். நாங்களும் உம் எளிமையை தேர்ந்துகொள்வதோடு  நிறுத்திவிடாமல், எங்களுக்கு இருப்பதை பிறருக்கும் கொடுத்து அவர்கள் மகிழ்ச்சியில் குறிப்பாக ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கு உதவி செய்ய வரம் தாரும். இத்தகைய பரந்த மனப்பான்மையோடு உம் பிறப்பு விழாவுக்கு எங்களை தயார் செய்ய வரம் தாரும். ஆமென்