பாத்திமா காட்சிகள் - வானவனின் இரண்டாம் வருகை

1916-ம் ஆண்டு மாதம் ஜூலை அல்லது ஆகஸ்டாக இருக்கும். இவ்வானவனின் காட்சிகள் நிகழ்ந்த காலக் குறிப்பை லூஸியாவால் சரியாகக் கூற முடியவில்லை . "மாதங்களையும், வாரத்தின் நாட்களையும் சரியாக அப்போது எனக்கு எண்ணத் தெரியாது'' என்று அவளே கூறுகிறாள்.

கோடை வெப்பம் அதிகமாயிருந்தது. அன்று சிறுவர் மூவரும் நண்பகல் ஓய்வுக்கென ஆடுகளை வீட்டுக்கு ஓட்டிச் சென்றார்கள். வெயில் தாவாதபடி ஆடுகளைப் பட்டியில் அடைத்து விட்டு லூஸியாவின் வீட்டருகில் ஒரு அத்திமர நிழலில் சும்மா விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

திடீரென்று அவர்கள் ஏறிட்டுப் பார்க்கையில், அதே வானவன் அவர்கள் அருகில் காணப்பட்டார்.

"என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? ஜெபியுங்கள். மிக அதிகமாக ஜெபியுங்கள். சேசு மரியாயின் இருதயங்கள் இரக்கமுள்ள திட்டங்களை உங்களுக்கென வைத்துள்ளார்கள். ஜெபங்களையும், பரித்தியாகங்களையும் உன்னதருக்கு ஒப்புக்கொடுங்கள்” என்று கூறினார்.

"நாங்கள் எப்படிப் பாத்தியாகங்கள் செய்ய வேண்டும்'' என்று கேட்டாள் லூஸியா.

"நீங்கள் செய்யும் யாவற்றையும் ஒறுத்தல் முயற்சி ஆக்குங்கள். கடவுளை நோகச் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரமாகவும், பாவிகள் மனந்திரும்பும்படி மன்றாட்டாகவும் அவற்றை ஒப்புக்கொடுங்கள். இவ்விதமாய் உங்கள் நாட்டில் சமாதானத்தைக் கொண்டு வாருங்கள். நானே அதன் காவல் தூதன், போர்த்துக்கலின் தூதன். யாவற்றுக்கும் மேலாக, நமதாண்டவர் உங்களுக்கு அனுப்பும் துன்பங்களை அமைந்த மனதுடன் ஏற்று தாங்கிக் கொள்ளுங்கள்.''

இவ்வாறு கூறிய தூதன் உடனே மறைந்து விட்டார். குழந்தைகள் மூவரும் ஒருவகையான மெய்மறந்த நிலையில் விடப் பட்டனர். அந்நிலை மாறி தன் நிலை ஏற்பட சற்று நேரமாயிற்று. தங்கள் சுய உணர்வைப் பெற்றபின் மெதுவாகப் பேசத் தொடங்கி னார்கள்.

"ஆண்டவர் உங்களுக்கு அனுப்பும் துன்பங்களை அமைந்த மனதுடன் ஏற்று தாங்கிக்கொள்ளுங்கள் என்ற வானவனின் அந்த வார்த்தைகள் உயிருள்ள ஒளி போல் எங்கள் மனதில் பதிந்தன; நல்ல கடவுள் நம்மை எவ்வளவு நேசிக்கிறார், நம்மால் நேசிக்கப்பட எவ்வளவு விரும்புகிறார்; பரித்தியாகங்களின் பலன் எவ்வளவு பெரியது, எவ்வாறு அவற்றைக் கொண்டு ஆண்டவர் பாவிகளை மனம் திருப்புகிறார் என்று அவ்வார்த்தைகள் எங்களுக்கு உணர்த்தின'' என்று எழுதியுள்ளாள் லூஸியா. 

அன்று முதல் குழந்தைகள் தங்களுக்குக் கஷ்டமாக இருந்த எல்லாவற்றையும் பரித்தியாகமாக ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்து வந்ததாகவும், தூதன் கற்றுக் கொடுத்த ஜெபத்தைப் பல மணி நேரங்கள் ஜெபித்து வந்ததாகவும் லூஸியா கூறியுள்ளாள்.

பிரான்சிஸ் தூதனைக் கண்டான். ஆனால் அவர் கூறிய எதையும் அவனால் கேட்கக்கூடவில்லை. முந்திய காட்சியிலும் அப்படியே வானவனைக் கண்டானேயொழிய அவர் கூறிய வார்த்தை எதையும் அவன் கேட்கவில்லை.

"நீ சம்மனசுடன் பேசினாயா? உன்னிடம் அவர் என்ன சொன்னார்?" என்று கேட்டான் பிரான்சிஸ் லூஸியாவிடம்.

"நீ கேட்கவில்லையா?” என்றாள் லூஸியா.

"இல்லை . நீ அவருடன் பேசியதைப் பார்த்தேன். நீ அவரிடம் சொன்னதைக் கேட்டேன். ஆனால் அவர் என்ன கூறினார் என்று எனக்குத் தெரியவில்லை .''

மறுநாள் பிரான்சிஸ் தன் தங்கை ஜஸிந்தாவிடம் :

'சம்மனசு சொன்னதை என்னிடம் சொல்லு ஜஸிந்தா'' என்றான். ''நாளைக்குச் சொல்கிறேன். இன்று என்னால் பேச முடிய வில்லை” என்றாள் ஜஸிந்தா.

மறுநாள் அவன் லூஸியாவைக் கண்டு,

"நேற்று இரவு நீ தூங்கினாயா? நான் முழு நேரமும் சம்மனசையும், அவர் என்ன கூறியிருப்பார் என்றும்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்'' என்றான்.

லூஸியா எல்லாவற்றையும் கூறினாள். ஜஸிந்தாவைப் போல் அவன் அவற்றை உடனே கண்டுபிடிக்கவில்லை.

"உன்னதர் என்றால் யார்? "நீங்கள் மன்றாடும் குரலை சேசு மரியாயின் இருதயங்கள் செவியுற்றுக் கேட்கிறார்கள்'' என்றால் என்ன அர்த்தம்?'' என்று கேட்டான் பிரான்சிஸ்.

லூஸியா முடிந்த மட்டும் விளக்கினாள். பிரான்சிஸ் திடீர் திடீரென வேறு கேள்விகளைக் கேட்பான். அதனால் அவளால் நிதானித்துக் கூற முடியவில்லை. அதோடு தூதனைக் கண்ட ஒரு வகையான விண்ணுலக உணர்வு அவர்களிடம் இன்னும் நீங்க வில்லை. எனவே பிரான்சிஸிடம், "இன்னொரு நாள் கேள்'' என்று கூறி முடித்து விட்டாள் லூஸியா.

பிரான்சிஸ் காத்திருந்தான். அவனால் அதிகம் பொறுமையாய்க் காத்திருக்க முடியவில்லை. வேறு கேள்விகளைக் கேட்கத் துவக்கினான்.

''இந்தக் காரியங்களைப் பற்றி ரொம்பவும் பேசக் கூடாது'' என்று இடைமறித்தாள் ஜஸிந்தா. சம்மனசு வந்தபின் அவளுக்குப் பேசவே மனமில்லை.

''எதற்குமே என்னிடம் போதிய பலமில்லை " என்றாள்.

"எனக்கும் அப்படித்தான் இருக்கிறது. ஆனால் அது பரவாயில்லை; அந்தத் தூதன் எவ்வளவு அழகாயிருக்கிறார்! நாம் அவரைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்போம்" என்றான் பிரான்சிஸ்.

பிரான்சிஸம் தூதன் கூறியவற்றின் கருத்தை வெகு விரைவில் உணர்ந்து விட்டான். குழந்தைகள் மூவரும் தங்கள் சிறு சிறு விருப்பங்களைத் தியாகம் செய்து அவற்றைப் பாவிகள் மனந்திரும்புவதற்காக ஒப்புக்கொடுப்பதில் மிகவும் ஊக்கமாக இருந்தனர்.

அத்தியந்த விரத்தியாயிருக்கிற மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.