சீராக் ஆகமம்

அதிகாரம் 01

1 எல்லா ஞானமும் ஆண்டவராகிய கடவுளிடமிருந்து உண்டாகி, அவருடன் என்றென்றைக்கும் நித்தியமாய் இருக்கின்றது.

2 கடல் மணல்களையும் மழைத்துளிகளையும், உலகத்தின் நாட்களையும் கணக்கிட்டவன் யார்? வானத்தின் உயரத்தையும் பூமியின் அகலத்தையும் பாதாளத்தின் ஆழத்தையும் அளந்தவன் யார்?

3 எல்லாவற்றிற்கும் முன்னிருந்த கடவுளின் ஞானத்தைக் கண்டுபிடித்தவன் யார்?

4 எல்லாவற்றிற்கும் முன் ஞானம் உண்டாக்கப்பட்டது. காலத் துவக்கத்திலிருந்து விவேகமுள்ள அறிவு இருந்தது.

5 வான மண்டலங்களில் வீற்றிருக்கும் கடவுளின் வார்த்தையே ஞானத்தின் ஊற்றும், அதனை அடையும் வழிகளே அவருடைய நித்திய கட்டளைகளுமாய் இருக்கின்றன.

6 ஞானத்தின் அடித்தளம் எவனுக்கு வெளிப்படுத்தப்பட்டது? அதன் வியத்தகு பண்புகளை அறிந்தவன் யார்?

7 ஞானத்தின் உணர்வு எவனுக்குத் தெரிவித்து வெளியாக்கப்பட்டது? அதன் பலவித வழிகளையும் கண்டுபிடித்தவன் யார்?

8 எல்லாவற்றிற்கும் மேலான, எல்லாம் வல்ல படைப்பாளர் ஒருவர் இருக்கிறார். வல்லமையுள்ள அவ்வரசர் மிகவும் அஞ்சத்தக்கவர். தமது அரியணையில் வீற்றிருந்து ஆண்டு வரும் கடவுள் அவரே.

9 அவரே தமது அளவில்லாப் பரிசுத்த ஆவியைக் கொண்டு அதை உண்டாக்கி, அறிவித்து வெளிப்படுத்தினார்.

10 ஏனென்றால், தமது எல்லாப் படைப்புகளிலும், எல்லா உயிரினங்களிலும் தமது விருப்பத்திற்கு ஏற்றபடி அதைப் பகிர்ந்திட்டார்; தம்மை நேசிப்பவர்களுக்கு அதைக் கொணர்ந்தார்.

11 தெய்வ பயம் மகிமையும் மகத்துவமும் களிப்பும் மகிழ்ச்சியின் முடியுமாய் இருக்கின்றது.

12 தெய்வ பயம் இதயத்தை மகிழ்விக்கும்; அகமகிழ்ச்சியையும் அக்களிப்பையும் நீடிய ஆயுளையும் கொடுக்கும்.

13 ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவன் தன் இறுதிக் காலத்தில் பேறு பெற்றவன் ஆவான்; மரண நாளிலும் ஆசீர்வதிக்கப்படுவான்.

14 கடவுள்பால் உள்ள நேசமே மேன்மையுள்ள ஞானம்.

15 யார் யாருக்கு அது காணப்படுகிறதோ அவர்கள் தாங்கள் அதைக் கண்டதாலும், அதன் மாட்சிகளை அறிந்ததாலும் அதை நேசிக்கிறார்கள்.

16 ஞானத்தின் தொடக்கம் தெய்வ பயம். அது தாய் வயிற்றிலேயே பிரமாணிக்கம் உள்ளவர்களோடு உண்டாகின்றது; நற்குணமுள்ள பெண்களோடு வளர்கின்றது; நீதிமான்களிடத்திலும் விசுவாசிகளிடத்திலும் விளங்குகின்றது.

17 தெய்வ பயம் மறை ஒழுக்கத்தின் நூல்.

18 மறை ஒழுக்கம் இதயத்தைக் காத்து நீதியில் நிலைநிறுத்தும்; நிறைவையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும்.

19 தெய்வ பயமுள்ளவன் பேறுபெற்றவனாய் வாழ்ந்து, சாகும் நேரத்தில் ஆசீர்வதிக்கப்படுவான்.

20 தெய்வ பயமே ஞானத்தின் நிறைவு. அதன் கனிகளால் இது வெளிப்படும்.

21 ஞானமுள்ளவர்களுடைய குடும்பங்கள் அதனால் நிரப்பப்படும்; அதன் செல்வங்களால் அவர்கள் நிறைந்த களஞ்சியங்கள் (போல்) ஆவார்கள்.

22 ஞானத்தின் முடி தெய்வ பயம். அது மன அமைதியை நிறைவாக்கும் மீட்பின் கனியாகும்.

23 கடவுள் அதைக் கண்டு கணக்கிட்டார். அதன் செயல்கள் அவருடைய கொடைகளாய் இருக்கின்றன.

24 ஞானம் அறிவுக் கலையையும், விவேகமுள்ள அறிவையும் கொடுக்கின்றது; தன்னைச் சேர்பவர்களை மகிமையில் உயர்த்துகின்றது.

25 ஞானத்தின் அடிவேர் தெய்வ பயமாகும். அதன் கிளைகள் நீடித்த ஆயுளுள்ளவை.

26 ஞானத்தின் செல்வங்களோ அறிவுத் தெளிவும் மறை ஒழுக்கமுமாம். பாவிகளோ ஞானத்தை வெறுக்கிறார்கள்.

27 தெய்வ பயம் பாவத்தை அகற்றுகின்றது.

28 ஏனென்றால், பயமற்றவன் நீதிமானாதல் இயலாது. கோபம் அவனுக்குக் கலக்கமும் கேடுமாய் இருக்கின்றது.

29 பொறுமையுடையவன் சிறிது காலத்திற்குச் சகிப்பான்; பின்னர் மகிழ்ச்சி அடைவான்.

30 நல்லறிவு சிறிது காலத்திற்கு அவன் வார்த்தைகளை மறைக்கும். பலருடைய நாவு அவன் அறிவை வெளிப்படுத்தும்.

31 ஞானத்தின் செல்வங்களில் ஒன்று நல்லொழுக்கத்தின் அடையாளம்.

32 பாவி கடவுளுக்கு ஊழியம் செய்வதை வெறுக்கிறான்.

33 மகனே, நீ ஞானத்தை விரும்புவாயாகில் நீதியைக் காப்பாற்று. கடவுள் உனக்கு அதை அளிப்பார்.

34 ஞானமும் நல்லொழுக்கமும் தெய்வ பயமாகும். அவை அவருக்கு விருப்பமானவை.

35 விசுவாசம், சாந்தம் இவைகளைக் கொண்டு அவர் ஞானியின் செல்வங்களை நிரப்புவார்.

36 தெய்வ பயத்தை விட்டுவிடாதே. கபடுள்ள இதயத்தோடு அவரை அணுகிப்போகாதே.

37 மனிதர் முன்பாகக் கள்ள ஞானியாய் இராதே. உன் நாவால் அவர்களுக்குத் துன் மாதிரிகைக்கு இடம் கொடாதே.

38 நீ தவறிப்போகாதபடி உன் வார்த்தைகளில் கவனமாய் இரு. உன் ஆன்மாவிற்கு அவமானம் வருவிக்காதே.

39 கடவுள் உன் இரகசிய எண்ணங்களை வெளியிட்டுச் சபை முன்பாக உன்னை ஒழித்து விடுவார்.

40 ஏனென்றால், நீ கெட்ட கருத்தோடு கடவுளை நாடினாய்; உன் இதயம் கபடும் பொய்யும் நிறைந்ததாய் இருக்கின்றது.

அதிகாரம் 02

1 மகனே, நீ கடவுளுக்கு ஊழியம் செய்யப் போகையில் நீதியிலும் அச்சத்திலும் நிலைகொண்டு, சோதனைக்குத் தப்ப உன் ஆன்மாவை ஆயத்தப்படுத்து.

2 உன் இதயத்தைத் தாழ்த்தி அமைந்திரு. செவிகொடுத்து நல்லறிவின் வார்த்தைகளை ஏற்றுக்கொள். கலக்க நேரத்தில் ஆத்திரப்பட்டு யாதொன்றும் செய்யாதே.

3 ஆண்டவருடைய இரக்கத்தின் காலம் வரைக்கும் காத்திரு. அவரோடு ஒன்றித்துக் கடைசியில் உன் வாழ்க்கை பலன் கொடுக்கும்படி பொறுமையாய் இரு.

4 உனக்கு நேர்வன எல்லாவற்றையும் பொறுத்துக் கொள். துன்பத்தில் திடமாயும், தாழ்வில் பொறுமையாயும் இரு.

5 பொன்னும் வெள்ளியும் நெருப்பினால் சுத்தமாவது போல, மனிதரும் தாழ்ச்சி என்னும் உலையில் தகுதியானவர்கள் ஆகிறார்கள்.

6 கடவுள் பால் உன் விசுவாசத்தை வை; அவர் உன்னைக் காப்பாற்றுவார். செவ்வழியில் சென்று, அவர்பால் உன் நம்பிக்கையை வை; அவருக்கு அஞ்சி நட; நெடுங்காலம் நிலை கொள்வாய்.

7 ஆண்டவருக்கு அஞ்சுவதால் நீங்கள் அவர் இரக்கத்தை அடைவீர்கள். நன்னெறி வழுவாதபடி அவரை மறவாதீர்கள்.

8 ஆண்டவருக்கு அஞ்சும் நீங்கள் அவரை விசுவசியுங்கள்; உங்கள் சம்பாவனை வீணாகாது.

9 ஆண்டவருக்கு அஞ்சும் நீங்கள் அவரை நம்புங்கள்; அவர் இரக்கம் உங்கள் மகிழ்ச்சியாகும்.

10 ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர்களே, அவரை நேசியுங்கள்; உங்கள் இதயங்கள் ஒளி பெறும்.

11 மக்களே, எல்லா மனிதரையும் பாருங்கள்; ஆண்டவரை நம்பின எவனும் கலங்கினதில்லையென்று கண்டறியுங்கள்.

12 அவருடைய கட்டளைகளில் நிலைநின்றவன் எவன் கைவிடப்பட்டான்? அவரை மன்றாடினவன் எவன் புறக்கணிக்கப்பட்டான்?

13 ஆண்டவர் தயவும் இரக்கமும் உள்ளவராதலால் துன்ப நேரங்களில் பாவங்களை மன்னிப்பார்; உண்மையாகத் தம்மைத் தேடுகிறவர்களை ஆதரிக்கிறார்.

14 கபடுள்ள இதயத்திற்கும், அக்கிரம உதடுகளுக்கும், தீச்செயல்களைச் செய்யும் கைகளுக்கும், பூமியில் இரு வழியாய் நடக்கும் பாவிக்கும் கேடாம்.

15 கடவுளை விசுவாசியாத தீநெறியாளர்க்கும் கேடாம். ஆகையினால், அவர்கள் அவரால் காப்பாற்றப்பட மாட்டார்கள்.

16 பொறுமையை இழந்தவர்களுக்கும், செவ்வழிகளை விட்டகன்றவர்களுக்கும், தீயவழிகளில் உட்பட்டவர்களுக்கும் கேடாம்.

17 ஆண்டவர் தங்களுடைய நடத்தையைச் சோதிக்கையில் அவர்கள் என்ன செய்வார்கள்?

18 தெய்வ பயமுள்ளவர்கள் ஆண்டவருடைய வார்த்தைகளை விசுவசியாமல் இரார்கள். அவரை நேசிக்கிறவர்கள் அவர் வழியில் நிலைகொள்வார்கள்.

19 தெய்வ பயமுள்ளவர்கள் அவருக்கு விருப்பமானவைகளைத் தேடுவார்கள். அவரை நேசிப்பவர்கள் அவர் கட்டளையால் நிறைவு அடைவார்கள்.

20 தெய்வ பயமுள்ளவர்கள் தங்கள் இதயங்களை ஆயத்தப்படுத்துவார்கள்;

21 அவர் திருமுன் தங்கள் ஆன்மாக்களைத் தூய்மைப் படுத்துவார்கள். தெய்வ பயமுள்ளவர்கள் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிப்பார்கள்; ஆண்டவர் தங்களைத் தீர்ப்பிடும் வரையிலும் பொறுமையாய் இருப்பார்கள்.

22 ஏனென்றால், தவம் செய்யாமல் போவோமேயாகில், மனிதருடைய கைகளில் அல்ல, ஆனால் ஆண்டவருடைய கைகளில் அகப்படுவோம் என்று சொல்லிக் கொள்வார்கள். அவர் எவ்வளவு வலிமை பொருந்தியவரோ அவ்வளவு இரக்கம் உடையவராய் இருக்கிறார்.

அதிகாரம் 03

1 ஞானத்தின் மக்கள் நீதிமான்களின் கூட்டம். அவர்களின் பிள்ளைகள் கீழ்ப்படிதலும் நேசமுமாம்.

2 பிள்ளைகளே, உங்கள் தந்தையின் அறிவுரைகளைக் கேட்டு, நீங்கள் மீட்பு அடையும் பொருட்டு அவைகளின்படி நடந்து வாருங்கள்.

3 ஏனென்றால் ஆண்டவர், பிள்ளைகள் தந்தையை மதிக்க வேண்டும் என்றும், தாயின் அதிகாரத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும் என்றும் நியமித்திருக்கிறார்.

4 கடவுளை நேசிக்கிறவன் தன் பாவங்களுக்காகப் பரிகாரம் செய்வதல்லாமலும் அவைகளை விலக்குவான்; ஆதலால் அவன் மன்றாட்டும் கேட்கப்படும்.

5 தன் தாயை மதிக்கிறவன் செல்வங்களைச் சேர்த்தவன் (போல வாழ்வான்).

6 தன் தந்தையை மதிக்கிறவன் பிள்ளைகளால் மகிழ்ச்சி அடைவான். அவன் வேண்டுதலும் கேட்கப்படும்.

7 தன் தந்தையை மதிக்கிறவன் நெடுங்காலம் வாழ்வான். தன் தந்தைக்குக் கீழ்ப்படிகிறவன் தாய்க்கு உதவுவான்.

8 தெய்வ பயமுள்ளவன் தாய் தந்தையரை மதிக்கிறான்; தன்னைப் பெற்றவர்களுக்குத் தலைவர்களுக்குச் செய்வது போல் ஊழியம் செய்வான்.

9 செயலிலும் சொல்லிலும் பொறுமையிலும் உன் தந்தைக்கு மரியாதை செய்.

10 அதனால் உனக்கு அவனுடைய ஆசி கிடைக்கும். அவன் ஆசியும் உன் வாழ்நாள் வரை உன்னோடு இருக்கும்.

11 தந்தையின் ஆசி பிள்ளைகளின் குடும்பங்களை நிலை நாட்டும். தாயின் சாபமோ பிள்ளைகளுடைய குடும்பங்களின் அடித்தளத்தைப் பிடுங்கி விடும்.

12 உன் தந்தைக்கு உண்டாகும் நிந்தைகளால் நீ பெருமை கொள்ளாதே. ஏனென்றால், அவன் துன்பம் உனக்குப் பெருமையன்று. ஏனென்றால், தந்தைக்கு உண்டாகும் மாட்சிமை பிள்ளையினுடைய மகிமை;

13 தந்தைக்கு உண்டாகும் நிந்தையோ பிள்ளைக்கு அவமானம்.

14 மகனே, உன் தந்தையின் முதுமையில் அவனை ஆதரி. அவன் வாழ்நாளில் அவனை மனம் நோகச் செய்யாதே.

15 அவன் அறிவு குறைந்ததாயின் மன்னித்துக் கொள். உன் விவேகத்தை முன்னிட்டு அவனை நிந்தியாதே. ஏனென்றால், தந்தைக்குக் காண்பிக்கப்படும் இரக்கம் ஒருபோதும் மறக்கப்பட மாட்டாது.

16 உன் தாயின் குற்றத்தைச் சகிப்பதனால் உனக்கு நன்மை ஏற்படும்.

17 ஏனென்றால், நீ நீதியில் நிலைநாட்டப்படுவாய்; உன் துன்ப நாட்களில் ஆதரிக்கப்படுவாய்; கதிரவன் முன் பனி கரைந்து போவது போல உன் பாவங்களும் கரைந்து போகும்.

18 தன் தந்தையைப் புறக்கணிப்பவன் எவ்வளவோ நிந்தைக்குரியவன். தன் தாயை மனம் நோகச் செய்கிறவன் கடவுளால் சபிக்கப்பட்டவன்.

19 மகனே, உன் செயல்களைச் சாந்த குணத்தோடு செய்வாயாகில் மனிதரால் அதிக மேன்மையாய் நேசிக்கப்படுவாய்.

20 எவ்வளவுக்கு நீ பெரியவனாய் இருக்கிறாயோ அவ்வளவுக்கு அனைத்திலும் உன்னைத் தாழ்த்து. அப்போது கடவுள் முன் இரக்கத்தைக் காண்பாய்.

21 ஏனென்றால், கடவுள் ஒருவரே மிக வல்லமையுள்ளவர். அவர் தாழ்ச்சியுள்ளவர்களால் மாட்சிப்படுத்தப் படுகிறார்.

22 உன் நிலைக்கு மேலான காரியங்களை நீ தேடாதே. உன் ஆற்றலுக்கு அதிகமானவைகளை நீ கண்டறிய நாடாதே. ஆனால், கடவுள் உனக்குக் கற்பித்திருப்பதை எப்போதும் நினைத்துக் கொள். அவர் செயல்களில் பலவற்றைச் சோதிக்காதே.

23 ஏனென்றால், மறைவான காரியங்களை உன் கண்களால் காணத் தேவையில்லை.

24 தேவையற்ற காரியங்களைப் பற்றி வீணாய் யோசனை செய்யாதே. அவர் படைப்புகளில் பலவற்றை ஆராய ஆசை கொள்ளாதே.

25 ஏனென்றால், மனித அறிவுக்கு எட்டாத காரியங்கள் பல உனக்குக் காண்பிக்கப்பட்டிருக்கின்றன.

26 அவைகளின் ஆராய்ச்சி பலரை மயக்கி அவர்கள் புத்தியைக் கெடுத்தது.

27 கடுமையான நெஞ்சம் இறுதிக் காலத்தில் கெடுதிக்கு உள்ளாக்கும். ஆபத்தை நேசிக்கிறவன் அதிலேயே அழிவான்.

28 இரு நெறிகளில் செல்லும் மனம் வெற்றி அடையாது. தீநெறியாளனுக்கு அவைகளினால் ஆபத்து உண்டாகும்.

29 அக்கிரம மனமுள்ளவன் வருந்துவான். அவன் பாவத்தின் மேல் பாவம் கட்டிக் கொள்வான்.

30 அகந்தையுள்ளவர்களுடைய கூட்டத்திற்குத் திருத்தம் உண்டாகாது. ஏனென்றால், பாவம் ஒரு செடி போல அவர்கள் அறியாமலே அவர்களிடம் வேரூன்றும்.

31 ஞானியின் நடத்தை அவன் ஞானத்தால் அறியப்படும். நற்குணமுள்ளவனின் செவி ஞானம் உணர்த்துவதை வெகு ஆவலோடு கேட்கும்.

32 ஞானமும் அறிவுமுள்ள மனதுடையவன் பாவங்களினின்று தன்னைக் காப்பான்; நீதியின் செயல்களால் வெற்றி அடைவான்.

33 எரிகிற நெருப்பைத் தண்ணீர் அவிக்கின்றது.

34 தருமம் பாவத்தைத் தவிர்க்கும். சம்பாவனை அளிக்கும் கடவுள் அதைக் கண்ணோக்குகிறார்; வருங்காலத்தில் அதை நினைத்துக் கொள்கிறார். அவன் ஆபத்தில் விழும் நேரத்தில் அதைத் தனக்கு ஓர் ஆதரவாகக் காண்கிறான்.

அதிகாரம் 04

1 மகனே, வறியவனுக்குப் பிச்சையிடுவதை விலக்காதே. எளியவனுக்கு உன் முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே.

2 பசியினால் வருந்துகிறவனைப் பழியாதே. வறியவனை அவனது வறுமையில் புறக்கணியாதே.

3 வறியவனுடைய மனத்தை நோகச் செய்யாதே. வருந்துகிறவனுக்குக் கொடுக்கத் தாமதியாதே.

4 துன்பப்படுகிறவனுடைய மன்றாட்டைத் தள்ளி விடாதே. எளியவனினின்று உன் முகத்தைத் திருப்பாதே.

5 எளியவனுக்கு உன்மீது வருத்தம் உண்டாகாதபடி அவனிடத்தினின்று உன் கண்களை அகற்றாதே. உன்னை மன்றாடுகிறவர்கள் உன் கண் மறைவில் உன்னைச் சபிக்கும்படி விடாதே.

6 மனத்தாங்கலால் உன்னைச் சபிக்கிறவனுடைய மன்றாட்டு கேட்கப்படும். ஏனென்றால் அவனைப் படைத்தவர் அவன் வேண்டுதலைக் கேட்பார்.

7 எல்லா ஏழைகள் மீதும் அன்பாய் நடந்து கொள். முதியோருக்கு உன் மனத்தைத் தாழ்த்தி, பெரியோருக்குத் தலை வணங்கு.

8 மகிழ்ச்சியோடு எளியவனின் மன்றாட்டுக்குச் செவி கொடு. நீ கொடுக்க வேண்டியதை அவனுக்குக் கொடு; சாந்த குணத்தோடு அவனுக்குச் சமாதான வார்த்தைகளைச் சொல்.

9 வருந்தும் எளியவனை அகந்தை கொண்டவனுடைய கையினின்று விடுதலை செய். மனவருத்தம் கொண்டு பின்வாங்காதே.

10 தந்தையற்ற பிள்ளைகளுக்கு நீதி செலுத்துகையில் தந்தையைப் போல் இரக்கம் காண்பித்து, அவர்கள் தாயை ஆதரிப்பவன் போல் இரு.

11 அப்பொழுது, மேலான கடவுளுக்கு நீயும் கீழ்படிதலுள்ள மகனைப் போல் இருப்பாய்; அவரும் தாயை விட அதிகமாய் உன் மீது இரக்கம் கொள்வார்.

12 ஞானம் தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு உயர்வுள்ள வாழ்வைத் தருகின்றது; தன்னைத் தேடுகிறவர்களை ஏற்றுக் கொண்டு, நீதிநெறியில் முன் செல்கின்றது.

13 அதை நேசிக்கிறவன் வாழ்வை நேசிக்கிறான்; அதை அடையக் கவலை கொள்கிறவர்கள் அதன் சமாதானத்தைக் கைக்கொள்வார்கள்.

14 ஞானத்தைக் கைப்பற்றினவர்கள் வாழ்வை அடைவார்கள். அது புகுந்த இடமெல்லாம் கடவுள் ஆசீர்வதிப்பார்.

15 அதற்கு ஊழியம் செய்கிறவர்கள் புனிதருக்கு ஊழியம் செய்கிறவர்கள் ஆவார்கள். அதை நேசிப்பவர்களைக் கடவுள் நேசிக்கிறார்.

16 அதற்குச் செவி கொடுக்கிறவன் மனிதருக்கு நியாயம் தீர்க்க வல்லவன் ஆகிறான். அதைப் பார்க்கிறவன் நம்பிக்கையைக் கைவிடான்.

17 அதன் மீது நம்பிக்கை வைக்கிறவன் அதைத் தன் உரிமையாக அடைவான். அவன் சந்ததியாரும் அதில் நிலை கொள்வார்கள்.

18 ஏனென்றால், அது துன்ப நேரத்தில் அவனோடு உலாவுகின்றது; அவனை ஆதியில் தேர்ந்து கொள்கின்றது.

19 பயத்தையும் அச்சத்தையும் சோதனையையும் அவன்மீது ஏவுகின்றது; அவன் எண்ணங்களால் அவனைச் சோதித்து, அவன் தன் ஆன்மாவில் நம்பிக்கை கொள்ளும் வரையிலும் தன் போதனையினால் உண்டாகும் துன்பத்தில் அவனை வருத்துகின்றது;

20 அவனை உறுதிப் படுத்தி அவனிடம் நேர்வழி சென்று அவனை மகிழ்விக்கும்;

21 அவன் இரகசியங்களை அவனுக்கு வெளியாக்கி, கலையையும் நீதியின் அறிவையும் அவனிடம் சேர்ப்பிக்கும்;

22 அவன் தவறினானாயின், அவனை விட்டகன்று, பகைவன் கையில் அவனைக் காட்டிவிடும்.

23 மகனே, காலம் அறிந்து தீமையை விலக்கு.

24 உன் உயிரை இழப்பதானாலும் உண்மையைச் சொல்ல நாணாதே.

25 பாவத்திற்குக் கூட்டிப்போகும் வழி ஒன்று; மகிமைக்கும் கடவுள் அருளுக்கும் அழைத்துப் போகும் வழி வேறொன்று.

26 உன் இதய நன்மைக்கு விரோதமான யாதொன்றையும் ஏற்றுக் கொள்ளாதே. உன் ஆன்மாவிற்கு இடையூறான பொய்யைச் சொல்லாதே.

27 அயலானை அவன் தன் குற்றத்தில் மதிக்காதே.

28 நன்மை செய்யக்கூடுமான போது பேசாதிராதே; உன் ஞானத்தை அதன் நற்குணத்தில் மறைக்காதே.

29 ஞானம் நாவைக்கொண்டு அறியப்படுகின்றது. அறிவு, கலை, நல்லொழுக்கம் அறிவாளியின் வார்த்தைகளால் விளங்குகின்றன. ஆனால், அதன் நிலைமையோ நீதியின் செயல்களில் அடங்கியிருக்கின்றது.

30 உண்மையான வார்த்தையை ஒரு போதும் மறக்காதே. உன் அறிவீனத்தால் வந்த பொய்க்காக வெட்கப்படு.

31 உன் குற்றங்களை ஏற்றுக் கொள்ள நாணாதே. ஆனால், உன் குற்றத்தை முன்னிட்டு எல்லார்க்கும் முன்பாகவுமே உன்னைத் தாழ்த்திக் கொள்ளாதே.

32 வலியவன் முன்பாக எதிர்த்து நில்லாதே. ஆற்று நீரின் வேகத்தை எதிர்க்க முயலாதே.

33 உன் ஆன்மாவை முன்னிட்டு நீதிக்காகத் துன்பப்படு. சாகும் வரையிலும் நீதிக்காகப் போராடு. கடவுளும் உனக்காக உன் பகைவர்களை எதிர்த்து வெல்லுவார்.

34 பேசுவதில் துரிதப்படாதே. உன் செயல்களில் வீணனாகவும் சோம்பேறியாகவும் இராதே.

35 உன் வீட்டில் உன் வேலைக்காரரை அலைக்கழித்து, உனக்குக் கீழ்ப்பட்டவர்களைத் துன்புறுத்திச் சிங்கத்தை போல் இராதே.

36 உன் கை வாங்குவதற்கு மட்டும் விரிந்தும், கொடுப்பதற்கோ மூடியும் இராதிருக்கக் கடவது.

அதிகாரம் 05

1 அநீதப் பொருட்கள் மீது உன் நம்பிக்கையை வைக்காதே. வாழ்க்கைக்குப் போதுமானது எனக்கு உண்டு என்று சொல்லாதே; ஏனென்றால், பழிவாங்கும் காலத்திலும் மரண நேரத்திலும் அவை உனக்கு உதவப் போவதில்லை.

2 உன் வலிமையை நம்பி உன் இதயத்தின் தீய நாட்டங்களைப் பின்செல்லாதே.

3 நான் எவ்வளவோ வலிமை உள்ளவன்; என் செயல்களைப் பற்றி என்னைக் கணக்குக் கேட்பவன் யார் என்று சொல்லாதே. ஏனென்றால், பழி வாங்கும் கடவுள் பழிவாங்குவார்.

4 பாவம் செய்தேன்; அதனால் எனக்கு வந்த தீங்கு என்ன என்று சொல்லாதே. ஏனென்றால் உன்னத கடவுள் பொறுத்திருந்து தண்டிப்பார்.

5 பொறுக்கப்பட்ட பாவத்தைப் பற்றி அச்சமற்று இராதே. பாவத்தின் மேல் பாவம் கட்டிக் கொள்ளாதே.

6 ஆண்டவருடைய இரக்கம் பெரிது; என் கணக்கற்ற பாவங்கள் மீது அவர் இரங்குவார் என்று சொல்லாதே.

7 ஏனென்றால், இரக்கமும் கோபமும் அவரிடம் விரைவில் சேர்ந்து விடும். அப்பொழுது அவர் கோபம் பாவிகள் மீது விழும்.

8 மனந்திரும்பி ஆண்டவரிடம் சேரத் தாமதியாதே; நாளுக்கு நாள் தாமதம் செய்யாதே.

9 ஏனென்றால், அவர் கோபம் திடீரென வரும்; பழிவாங்கும் காலத்திலோ அவர் உன்னைச் சிதறடிப்பார்.

10 அநீதச் செல்வங்களைப் பற்றி ஏக்கம் கொள்ளாதே. ஏனென்றால், மரண நேரத்திலும் பழிவாங்கும் நாளிலும் அவைகளால் உனக்கு யாதொரு பயனும் உண்டாகாது.

11 காற்றடிக்கும் பக்கமெங்கும் திரும்பாதே. வழி போகும் இடங்களெல்லாம் செல்லாதே. ஏனென்றால், இவ்வண்ணமே வஞ்சக நாவினால் பாவி அறியப்படுகிறான்.

12 ஆண்டவருடைய வழியிலும், அறிவின் உண்மையிலும், கலையிலும் நிலையாய் இரு. அமைதியும் நீதியும் பொருந்திய வார்த்தை உன்னைப் பின்தொடரக்கடவது.

13 சொல்லுவதைக் கண்டுபிடிக்க வேண்டிச் சாந்த குணத்தோடு அதைக் கேள். அப்போது ஞானமுடன் உண்மையான மறுமொழி சொல்வாய்.

14 உனக்குத் தெரிந்திருக்குமாயின் பிறனுக்கு மறுமொழி சொல்; இல்லாவிடில், தகாத காரியங்களைச் சொல்லி அகப்பட்டுக் கொண்டு வெட்கமடையாதபடிக்கு உன் வாயை மூடிக்கொள்.

15 அறிவாளியின் உறையாடலில் மரியாதையும் மகிமையும் உண்டு. விவேகமற்றவனின் நாவோ அவனுக்கே இடையூறாகின்றது.

16 புறங்கூறுபவன் என்று பெயர் எடுக்காதே. உன் வார்த்தையினால் அகப்பட்டுக் கொண்டு வெட்கமடையாதே.

17 ஏனென்றால், திருடன் மேல் வெட்கமும் அச்சமும் சார்கின்றன. வஞ்சக நாவுள்ளவன் மீதோ பெரிய அவமானம் சார்கிறது; ஏனென்றால், புறங்கூறுகிறவன் மீது பகை, வர்மம், இகழ்ச்சி, உண்டாகின்றன.

18 சிறியவனுக்கும் பெரியவனுக்கும் நீ சரி நீதி செலுத்துவாயாக.

அதிகாரம் 06

1 அயலான் காரியத்தில் அவனுக்கு நண்பனாய் இருப்பதற்குப் பதிலாய்ப் பகைவனாய் இராதே. ஏனென்றால், தீயவன் வெட்கத்தையும் நிந்தையையுமே உரிமை கொள்வான்; பொறாமையுள்ளவனுக்கும் இரட்டை நாக்குடைய பாவிக்கும் அவ்வண்ணமே நேரும்.

2 எருது போல் உன் ஆன்மீக எண்ணங்களில் அகந்தை கொள்ளாதே. ஏனென்றால், உன் வலிமை அறிவீனத்தால் சிதைந்து போகும்.

3 அகந்தை உன் நிலைகளைக் கெடுக்கும்; உன் கனிகளை ஒழித்து விடும்; நீ பாலைவனத்தில் நிற்கும் பட்ட மரத்தைப் போல விடப்படுவாய்.

4 ஏனென்றால், கெட்ட ஆன்மா எவனிடத்தில் இருக்கின்றதோ அது அவனைக் கெடுத்து, அவன் பகைவருக்கு மகிழ்ச்சியுண்டாக்க அவனைக் கையளித்து, அக்கிரமிகளின் நிலைக்கு அவனைக் கொண்டுபோம்.

5 இன்சொல் நண்பரைப் பெருகச் செய்யும்; பகையாளிகளைச் சாந்தப்படுத்தும். இனிய சொல்லால் புண்ணியவானிடம் பல நலன்கள் உண்டாகும்.

6 பலர் உன் நண்பராய் இருக்கக் கடவார்கள். ஆனால், ஆயிரத்தில் ஒருவன் உன் ஆலோசனைக்காரனாய் இருக்கக்கடவான்.

7 உனக்கு நண்பன் வேண்டியிருக்கும் போது அவனை நன்கு ஆராய்ந்து தெரிந்துகொள். எளிதாய் அவன் மீது நம்பிக்கை வைக்காதே.

8 ஏனென்றால், தன்னலத்தை நாடும் நண்பனும் உண்டு; அவன் உன் துன்ப காலத்தில் நிலைத்திருக்க மாட்டான்.

9 பகைவனாய்த் திரும்பும் நண்பனும் உண்டு; பகையும் சச்சரவும் நிந்தையும் காண்பிக்கும் நண்பனும் உண்டு.

10 பந்தியில் அமர்ந்து சாப்பிடும் நண்பனும் உண்டு. ஆனால், அவன் ஆபத்துக் காலத்தில் நிலைப்பவனல்லன்.

11 உறுதியாய் நிலைத்திருக்கும் நண்பனோ உன்னை ஒத்தவனாய் இருப்பான்; உன் வீட்டில் உள்ளவர்களோடு விசுவாசமாய் நடந்து கொள்வான்.

12 அவன் உனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தினாலும், உன் கண்முன் நின்று மறைந்தாலும் உன் நல்ல நட்பு மாறாமல் இருக்கக் கடவது.

13 பகைவர்களினின்றும் விலக உன் நண்பனுக்கு உன்னைக் கையளி.

14 நம்பிக்கையுள்ள நண்பன் பலமான காவலுக்குச் சமம்; அவனைக் கண்டடைந்தவன் செல்வத்தைக் கண்டவன் போலாவான்.

15 நம்பிக்கையுள்ள நண்பனுக்கு ஒப்பு ஒன்றும் இல்லை; அவனது நம்பிக்கைக்கு எந்த அளவு பொன்னும் வெள்ளியும் நிகராகா.

16 நம்பிக்கையுள்ள நண்பன் வாழ்வைத் தரும் மருந்து போல் இருக்கிறான். ஆண்டவருக்கு அஞ்சுகிறவர்கள் அவனைக் கண்டடைவார்கள்.

17 கடவுளுக்கு அஞ்சுகிறவன் நல்ல நண்பனை உரிமையாக்கிக் கொள்வான். ஏனென்றால், அவனைப் போலவே அவன் நண்பனும் இருப்பான்.

18 மகனே, வாலிப முதல் நற்போதனைகளைப் பின்பற்றி நட; அப்போது முதுமை வரையிலும் ஞானத்தைக் காண்பாய்.

19 உழுது விதைப்பவன் (அறுவடைக் காலத்துப்) பலன்களுக்காகக் காத்திருப்பது போல, நீயும் ஞானத்தைப் பயிற்சி செய்து அதன் நற்கனிகளுக்காகக் காத்திரு.

20 அதைப் பயிரிடக் குறைந்த வேலை செய்வாய்; அதன் கனிகளை வெகு விரைவில் உண்பாய்.

21 நல்லறிவில்லாத மனிதருக்கு ஞானம் எவ்வளவோ கசப்பாய் இருக்கிறது! அறிவீனன் அதன் மீது விருப்பம் கொள்ளான்.

22 இந்த ஞானம் அவனுக்கு மனிதர் பலத்தைச் சோதிக்கும் பாரமான கல் போலாகும். அவன் அதை எறிந்து விடத் தாமதியான்.

23 ஏனென்றால், ஞானம் தன் பெயருக்கு ஒத்ததாய் இருக்கின்றது; அது பலருக்கு வெளிப்படுத்தப்படவில்லை; தெரிவிக்கப்பட்டவர்களிடத்திலேயோ அவர்களைக் கடவுள் முன் சேர்க்கும் வரையிலும் நிலைத்திருக்கின்றது.

24 மகனே, கேள், அறிவுள்ள யோசனையை ஏற்றுக்கொள். என் யோசனையைத் தள்ளிவிடாதே.

25 அதன் விலங்குகளில் உன் கால்களையும், அதன் சங்கிலிகளில் உன் கழுத்தையும் மாட்டிக்கொள்.

26 குனிந்து, உன் தோளில் அதைச் சுமந்துகொள். அதன் கட்டுகளால் நீ சலிப்புக் கொள்ளாதே.

27 உன் முழு இதயத்தோடு அதை அணுகிப்போ. முழு ஆற்றலுடன் அதன் நெறிகளைக் காப்பாற்று.

28 அதைத் தேடினால் நீ கண்டடைவாய்; அடைந்த பிறகு அதை விட்டு விடாதே.

29 ஏனென்றால், இறுதிக் காலத்தில் அதில் இளைப்பாற்றியைக் காண்பாய். உனக்கு அது மகிழ்ச்சியாக மாறும்.

30 அப்போது அதன் விலங்குகள் உன் பலத்திற்குக் காவலும், உன் ஆற்றலுக்கு அடித்தளமுமாய் இருக்கும். அதன் சங்கிலிகளோ மகிமையின் மேலாடை ஆகும்.

31 ஏனென்றால், வாழ்வின் அழகே அதில் உண்டு. அதன் விலங்குகள் குணப்படுத்தும் கட்டுகளாம்.

32 மகிமையின் மேலாடையால் அதைப் போர்த்துவாய்; ஆனந்தத்தின் முடியாக உன் தலையில் தரித்துக் கொள்வாய்.

33 மகனே, நான் சொல்வதை நீ கவனிப்பாயாகில் கற்றறிந்து கொள்வாய்; அதில் உன் மனத்தைச் செலுத்துவாயாகில் ஞானியாவாய்.

34 செவி கொடுப்பாயாகில் அறிவடைவாய்; கேட்க விருப்பம் கொள்வாயாகில் ஞானியாவாய்.

35 ஞானமுள்ள முதியோருடைய சங்கத்தில் சேர்ந்து கொள். கடவுளைப்பற்றிய அனைத்தும் அறிய வேண்டி, அவர்கள் ஞானத்திற்கு மனம் கொண்டு ஒத்திரு. புகழ்ச்சிக்குரிய அவர்கள் உரையாடல் உன்னை விட்டு அகலாது.

36 அறிவாளியைக் கண்டால் அவனுடன் மிக விரைவில் பழகு. அவன் வாயிற் படிகளை உன் கால் மிதிக்கக்கடவது.

37 கடவுள் கட்டளைகளில் உன் எண்ணத்தைச் செலுத்தி, அவைகளில் வெகு கவனமாய் இரு. அவர் உனக்கு நன்மனத்தைக் கொடுப்பார். ஞானத்தின் ஆசையும் உனக்கு அளிக்கப்படும்.

அதிகாரம் 07

1 நீ தீமை செய்யாதே; அதுவும் உன்னை அணுகாது.

2 தீநெறியாளனை விட்டு அகன்று போ; தீமையும் உன்னை விட்டு அகன்று போகும்.

3 மகனே, தீநெறியில் புகுந்து தீமைகளை விதைக்காதே; ஏனென்றால், விதைத்ததை விட ஏழு மடங்கு தீமை அறுப்பாய்.

4 ஆண்டவரிடத்தில் உயர்ந்த நிலையைக் கேட்காதே. அரசனிடத்தில் மகிமையின் அரியணையைத் தேடாதே.

5 ஆண்டவர் முன்பாக நீ நீதிமானாகமாட்டாய்; ஏனென்றால், அவர் உன் மனத்தை அறிவார். அரசனிடத்தில் ஞானியாய்த் தோன்ற மனம் கொள்ளாதே.

6 அக்கிரமங்களை உன் ஆற்றலால் ஒழிக்க வல்லவனாய் இருந்தாலன்றி நீதிபதியாவதற்குத் தேடாதே. ஏனென்றால், சில வேளை வலியவன் முன் அஞ்சி உன் நேர்மைக்கு இடையூறு உண்டாக்குவாய்.

7 ஊரார் எல்லாரையும் பகைக்காதே. மக்கட் கூட்டத்தில் சேர்ந்துகொள்ளாதே.

8 குற்றத்திற்கு மேலே குற்றம் செய்யாதே; ஏனென்றால், தண்டனைகளுக்கு ஆளாக்க ஒரு குற்றமே போதுமானது.

9 உன் மனத்தில் கோழையாய் இராதே.

10 செபிப்பதையும் பிச்சையிடுவதையும் அசட்டை செய்யாதே.

11 நான் பலதடவை பிச்சையிட்டிருக்கிறதைக் கடவுள் கடைக்கண் நோக்கி, நான் அவருக்குக் கொடுக்கும் காணிக்கைகளை அவர் ஏற்றுக்கொள்வார் என்று சொல்லாதே.

12 யாரேனும் துன்பப்படுகையில் அவனைக் கேலி செய்யாதே; ஏனென்றால், தாழ்த்துகிறவரும் உயர்த்துகிறவருமாய் எல்லாவற்றையும் பார்க்கும் கடவுள் ஒருவர் இருக்கிறார்.

13 உன் சகோதரனுக்கு விரோதமாய்ப் பொய்யான காரியங்களை ஏற்பாடு செய்யாதே; அவ்வண்ணமே உன் நண்பனுக்கு விரோதமாகவும் செய்யாதே.

14 எந்தப் பொய்யும் சொல்லாதே; அப்படிச் சொல்வது நல்ல வழக்கமன்று.

15 முதியோருடைய சபையில் விரிவாய்ப் பேசாதே. உன் செபத்தில் வார்த்தைகளை இரட்டித்துச் சொல்லாதே.

16 கடினமான வேலைகளை வெறுக்காதே. கடவுளால் ஏற்பட்ட பயிர்த் தொழிலைக் கைவிடாதே.

17 தீநெறியாளர் கூட்டத்தில் நீயும் ஒருவனாய் இராதே.

18 தெய்வ கோபம் வரத் தாமதியாது என்று எண்ணிக்கொள்.

19 உன் மனத்தை மிகவும் தாழ்த்து; ஏனென்றால் தீநெறியாளனுடைய தண்டனை நெருப்பும் புழுக்களுமே.

20 பணம் கொடுக்கத் தாமதிப்பதனால் உன் நண்பன் மீது கொண்ட நம்பிக்கையைக் கைவிடாதே. பொன்னைப் பற்றி உன் அன்புச் சகோதரனை நிந்தியாதே.

21 தெய்வ பயத்தோடு நீ ஏற்றுக் கொண்ட அறிவுள்ள பெண்ணை விட்டுப் போகாதே; ஏனென்றால், அவளது நாணத்தின் அலங்காரமே பொன்னுக்கு மேலானதாம்.

22 நம்பிக்கையாய் வேலை செய்யும் ஊழியனையும், தன்னை முழுமையும் நேர்ந்து பணிவிடை செய்யும் ஊழியனையும் துன்புறுத்தாதே.

23 அறிவாளியான ஊழியனை உன் ஆன்மாவைப் போல நேசிப்பாயாக. அவன் உரிமையை அவனிடமிருந்து பறிக்காதே; அவனை வறுமையில் விட்டு விடாதே.

24 உனக்கு மந்தைகள் உண்டோ? அவற்றைப் பராமரித்துக் கொள். உனக்கு உதவியானால் அவை உன்னுடன் இருக்கட்டும்.

25 உனக்குப் புதல்வர் உண்டோ? அவர்களுக்குக் கற்பித்துக் கொடுத்து, இளமையிலேயே அவர்களைப் பழக்கு.

26 உனக்குப் புதல்வியர் உண்டோ? அவர்கள் கற்பைக் காப்பாற்று; அவர்களுக்கு மகிழ்ச்சி முகம் காண்பியாதே.

27 உன் புதல்வியைத் திருமணம் செய்து கொடு; அப்பொழுது பெரிதான காரியத்தை முடித்தவனாவாய். அறிவாளியான மனிதனுக்கு அவளைக் கொடு.

28 உன் மனத்துக்கு இசைந்த பெண்ணாய் இருப்பாளேயாகில் அவளைக் கைவிடாதே. தீநெறியுடையவளிடத்தில் உன்னைக் கையளிக்காதே.

29 உன் முழு இதயத்தோடு உன் தந்தைக்கு மரியாதை செய்; உன் தாயின் புலம்பல்களை நீ மறவாதே.

30 அவர்களின்றி நீ பிறந்திருக்கமாட்டாய் என்று நினைத்துக் கொள். அவர்கள் உனக்குச் செய்தது போலவே அவர்களுக்கும் நீ பதில் நன்றி செய்.

31 உன் முழு ஆன்மாவோடு ஆண்டவருக்கு அஞ்சி நட; அவருடைய குருக்களுக்கு மரியாதை செய்.

32 உன்னைப் படைத்தவரை உன்னால் ஆனமட்டும் நேசிக்கக்கடவாய்; அவருடைய பணியாளர்களையும் கைவிடாதே.

33 உன் முழு ஆன்மாவோடு கடவுளை வணங்கு. குருக்களுக்கு மரியாதை செய்து, உன் சொந்தக் காணிக்கைகளைக் கொண்டு உன்னைத் தானே தூய்மைப் படுத்திக்கொள்.

34 உன் முதற் பலன்களிலும் காணிக்கைகளிலும் அவர்களுக்கு உண்டான பங்கை, உனக்குக் கட்டளையிடப் பட்டுள்ள வண்ணம் கொடுத்து விடு. உன் குற்றங்களைச் சிலர் முன்னிலையில் நிவர்த்தி செய்துகொள்.

35 பலி மிருகங்களில் தோல்களையும், ஆராதனைப் பலியையும், முதற் காணிக்கைகளையும் ஆண்டவருக்கு ஒப்புக்கொடு.

36 உன் பலியும் காணிக்கையும் முழு நிறைவு பெற வறியவருக்குப் பிச்சையிடு.

37 தாராள குணம் வாழ்வோரால் விரும்பப்படுகின்றது. இறந்தோருக்கும் அதனால் உண்டாகும் மகிழ்ச்சியைத் தடை செய்யாதே.

38 அழுவோர்க்கு ஆறுதல் சொல்லத் தவறாதே. புலம்புகிறவர்களோடு நீயும் கூடப் புலம்பு.

39 நோயாளியைச் சந்திப்பதை அசட்டை செய்யாதே. ஏனென்றால், இத்தகைய செயல்களால் தான் நீ பிறர் அன்பில் உறுதிப்படுவாய்.

40 உன் எல்லாச் செயல்களிலும் உன் இறுதிக் கதியை நினைத்துக் கொள்; ஒருபோதும் பாவம் செய்ய மாட்டாய்.

அதிகாரம் 08

1 வலிமையுள்ளவனோடு நீ வழக்காடாதே; ஏனென்றால், சிலவேளை அவன் கையில் அகப்பட்டுக் கொள்வாய்.

2 செல்வமுள்ளவனோடு வழக்குத் தொடுக்காதே; ஏனென்றால், சில வேளை அவன் உன் மீது வழக்குத் தொடுப்பான்.

3 ஏனென்றால், பொன்னும் வெள்ளியும் பலரை அழித்தொழித்தன; அரசரையும் தம் வசமாக்கித் தம் விருப்பப்படி நடத்தின.

4 வாயாடியோடு வழக்கிடாதே. அவனிடம் எரிகிற நெருப்பில் இன்னும் எண்ணெய் வார்க்காதே.

5 அறிவீனன் உன் கோத்திரத்தை இழிவாய்ப் பேசாதபடிக்கு அவனோடு உறவு கொள்ளாதே.

6 பாவத்தை விட்டு வெறுத்து நடக்கும் மனிதனை நீ நிந்தியாதே; அவனைக் கண்டிக்காதே. ஏனென்றால், நாம் எல்லோருமே தண்டனைக்கு உரியவர்கள் என்று நினைத்துக் கொள்.

7 எந்த மனிதனையும் அவன் முதுமையில் புறக்கணிக்காதே; ஏனென்றால், நம்மைப் போல் இருந்தல்லவோ அவன் முதியவனானான்!

8 உன் பகையாளியின் மரணத்தைப்பற்றி மகிழ்ச்சி கொள்ளாதே; ஏனென்றால், நாம் எல்லோரும் சாவோமென்றும், நமது சாவைப் பற்றிப் பிறர் மகிழ்ச்சி கொள்ள நமக்கு மனம் இராதென்றும் அறிந்து கொள்.

9 பெரியோரான ஞானிகள் சொல்லும் காரியங்களை அசட்டை செய்யாதே; அவர்கள் நீதி மொழிகளின்படியே நடந்துகொள்.

10 ஏனென்றால், அவர்களிடமிருந்து ஞானத்தையும், அறிவின் நெறியையும், பெரியோருக்கு முறைப்பாடு இல்லாமல் ஊழியம் செய்யும் விதத்தையும் கற்றறிந்து கொள்வாய்.

11 பெரியோர் சொல்வதை அசட்டை செய்யாதே; ஏனென்றால், அவர்கள் தங்கள் தந்தையரிடம் கற்றறிந்திருக்கின்றார்கள்.

12 ஆதலால், அவர்களால் நீ அறிவுக் கூர்மை அடைவாய்; வேண்டும் போது மறுமொழி சொல்லவும் அறிவாய்.

13 (அடுப்பில் எரியும் கரிபோலப்) பாவிகளுடைய கோபத்தை எழுப்பாதே; ஏனென்றால், அவர்கள் பாவத்தின் அக்கிரமம் உன்னைச் சுட்டெரித்து விடும்.

14 அகந்தையுள்ளவனுடன் பிடிவாதம் கொள்ளாதே; ஏனென்றால், அவன் உன் வார்த்தைகளைக் கொண்டு உன்மீது குற்றம் சாட்டுவான்.

15 உன்னிலும் வலியவனுக்குக் கடன்கொடாதே; கொடுத்திருந்தால், இழந்து போனதென்று எண்ணிக்கொள்.

16 உன் வலிமைக்கு மிஞ்சி உத்தரவாதி ஆகாதே; உத்தரவாதியானாலோ நீயே ஈடு செய்ய வேண்டியதென்று எண்ணிக்கொள்.

17 நீதிபதிக்கு விரோதமாகத் தீர்ப்புச் செய்யாதே; ஏனென்றால், அவன் நீதிப்படியே தீர்ப்பிடுகின்றான்.

18 துடுக்குள்ளவனோடு சேர்ந்திராதே; ஏனென்றால் சில வேளை தன்னால் விளைந்த தீமைகளை உன் மீது சுமத்துவான். ஏனென்றால், அவன் தன் விருப்பப்படி நடக்கிறான்; நீயும் அவனுடைய மூடத்தனத்தினால் கெடுவாய்.

19 கோபியோடு சண்டையிடாதே. துடுக்கனோடு தனியிடம் போகாதே. ஏனென்றால், அவனுக்கு முன்பாக இரத்தம் ஒன்றுமல்ல. உனக்கு உதவியில்லாத இடத்தில் உன்னை நசுக்குவான்.

20 பேதைகளிடம் உன் காரியங்களைப் பற்றி யோசனை கேட்காதே; ஏனென்றால், தங்களுக்கு விருப்பமானதை மட்டும் அவர்கள் விரும்பக் கூடும்.

21 அன்னியனுக்கு முன்பாக உன் இரகசியங்களைப் பேசாதே; ஏனென்றால், அவன் பிறகு என்ன செய்யத் தொடங்குவான் என்று நீ அறியாய்.

22 எல்லாவித மனிதருக்குமே உன் உள்ளத்தை வெளிப்படுத்தாதே; ஏனென்றால், சில வேளை பொய்யான செயலை உன் மீது சாட்டுவார்கள்; உன்னைப் பற்றிப் புறணி சொல்வார்கள்.

அதிகாரம் 09

1 உன்னுடன் சேர்ந்து வாழும் பெண்ணின் மீது சந்தேகம் கொள்ளாதே; ஏனென்றால், கெட்ட நடத்தையின் அக்கிரமத்தை அவள் உன் மீது செலுத்துவாள்.

2 உன் அதிகாரத்தைப் பெண் அபகரித்துக் கொள்வதால் நீ வெட்கம் அடையாதபடிக்கு உன் மன அதிகாரத்தை அவளுக்குக் கொடுத்து விடாதே.

3 பல காரியங்களை ஆசிக்கும் பெண்ணின் வலைகளில் நீ சிக்கிக் கொள்ளாதபடிக்கு அவளை ஏறெடுத்துப் பார்க்காதே.

4 நடன மாதோடு தொடர்பு கொள்ளாதே. அவள் மாய்கையினால் கெடாதபடி அவளுக்குச் செவி கொடாதே.

5 இளமங்கையின் அழகினால் நீ கெட்டுப் போகாதபடி அவளைக் கண்ணோக்காதே.

6 எக்காரியத்திலும் விலைமாதருக்கு உன் மனத்தைப் பறிகொடாதே. ஏனென்றால், உன்னையும் உன் சொத்துக்களையும் இழந்து போவாய்.

7 நகரின் தெருக்களில் சுற்றிப்பார்க்காதே; அதன் மைதானங்களில் திரியாதே.

8 தன்னைத் தானே அழகுபடுத்தித் திரியும் பெண்ணினின்று உன் முகத்தைத் திருப்பிக் கொள். அழகுள்ள அன்னிய பெண்ணை நோக்காதே.

9 பெண்ணின் அழகினால் பலர் கெட்டழிந்துள்ளார்கள்; அதனால் ஆசையுணர்வு நெருப்பைப் போல் பற்றி எரிகின்றது.

10 வேசியாய்த் திரியும் எவளும் பாதையிலுள்ள சகதியைப் போல் மிதிக்கப்படுவாள்.

11 பிறன் மனைவியின் அழகைக் கண்டு அதிசயித்தவர்கள் பலர் தள்ளுண்டு போனார்கள். ஏனென்றால், அவள் உரையாடல் நெருப்பைப் போல் எரிகின்றது.

12 பிறன் மனைவியோடு ஒரு போதும் உட்கார்ந்திராதே. முழங்கையூன்றிச் சாய்ந்து அவளுடன் மேசையில் அமராதே.

13 உன் மனம் அவள் மீது ஆசை கொள்ளாதபடிக்கும், அதனால் நீ இரத்தம் சிந்தி உயிர் இழக்காதபடிக்கும் அவளுடன் மது குடித்து உல்லாசமாய் உரையாடாதே.

14 பழைய நண்பனைக் கைவிடாதே. ஏனென்றால், புதியவன் அவனைப் போல் ஆகமாட்டான்.

15 புதிய மதுவைப் போலவே புதிய நண்பனும். மது பழமைப்பட்டால் அதை இன்பத்தோடு அருந்துவாய்.

16 பாவியினுடைய மகிமையையும் செல்வத்தையும் பற்றிப் பொறாமை கொள்ளாதே. ஏனென்றால், அவனுக்குப் பின்வரும் கேட்டை நீ அறியாய்.

17 தீயவன் மறுவுலகம் வரையிலும் விரும்பப்படுவதில்லை என்று நீ அறிந்திருக்கிறபடியால், நீதியற்றவனுடைய அநீதியை விரும்பாதே.

18 கொலை செய்யும் வலிமையுள்ள மனிதனை விட்டகன்று வெகு தூரத்தில் இரு. அப்போது மரணத்தின் பயங்கரம் உன்னை அணுகாது.

19 அவனிடம் நீ போவாயேயாகில், அவன் உன் உயிரை வாங்காதபடிக்கு யாதொன்றும் செய்யாதே.

20 மரண நேரம் கிட்டியிருக்கிறதென்று அறிந்திரு. ஏனென்றால், கண்ணிகளின் நடுவே புகுகிறாய்; கோபவெறி கொண்டவர்களுடைய ஆயுதங்களின் மேல் உலாவுகிறாய்.

21 உன் வலிமைக்குத் தக்க வண்ணம் பிறனோடு எச்சரிக்கையாய் இரு. ஞானிகளுடையவும் விவேகிகளுடையவும் யோசனையைக் கேள்.

22 நீதிமான்கள் உன்னுடன் பந்தியமரக் கடவார்கள். உன் மகிமை தெய்வ பயத்தில் அடங்கியிருக்கக்கடவது.

23 உன் உள்ளத்தில் கடவுளைப் பற்றிய எண்ணம் இருக்கக்கடவது. உன் உரையாடலெல்லாம் உன்னத கடவுளின் கட்டளைகளைப் பற்றியதாய் இருக்கக்கடவது.

24 தொழிலாளரின் கையினால் செய்யப்பட்ட வேலைகள் மதிப்படைகின்றன. மக்கள் தலைவன் தன் வார்த்தைகளின் ஞானத்தாலும், முதியோர் தம் மொழிகளின் கருத்தினாலும் புகழப்படுவார்கள்.

25 வாயாடி தன் ஊரில் அஞ்சப்படத்தக்கவன். யோசனையில்லாமல் பேசுகிறவன் பகைக்கப்பட வேண்டியவன்.

அதிகாரம் 10

1 ஞானமுள்ள நீதிபதி தன் குடிகளுக்கு நீதியாய்த் தீர்ப்புச் சொல்வான். அறிவாளியின் ஆட்சி நிலையுள்ளதாய் இருக்கும்.

2 மக்களுடைய நீதிபதி எப்படியோ அப்படியே அவன் ஏவலர்களும். நகரத் தலைவன் எப்படியோ அப்படியே அந் நகரில் வாழ்கிறவர்களும்.

3 அறிவற்ற அரசன் தன் குடிகளுக்குக் கெடுதி செய்வான். தலைவர்களின் அறிவுக்கேற்ற அளவு நகர்களில் குடிகள் தொகை ஏறும்.

4 மண்ணுலக அரசாட்சி கடவுளின் கையில் இருக்கின்றது. அதை ஆள்வதற்குத் தகுதியான தலைவரை அவர் வேண்டிய போது எழுப்புவார்.

5 மனிதனுடைய பேறும் கடவுள் கையில் இருக்கின்றது. அவர் ஞானிக்கு வேண்டிய மரியாதையைச் செய்விப்பார்.

6 பிறரால் உனக்கு உண்டாகும் எவ்விதத் தீமையையும் நினைவு கூராதே. தீச் செயல்கள் எதையும் நீ செய்யாதே.

7 அகந்தை கடவுளாலும் மனிதராலும் அருவருக்கப்படத் தக்கதாய் இருக்கின்றது. மனிதருடைய எல்லா அக்கிரமமும் வெறுக்கப்படத்தக்கது.

8 அநீதிகள், அக்கிரமங்கள், நிந்தைகள், பலவித மோசங்கள் முதலியவைகளை முன்னிட்டு, அரசு ஒரு நாட்டினின்று வேறொரு நாட்டுக்கு மாற்றப்படுகின்றது.

9 பேராசைக்காரனைக் காட்டிலும் கெடுதியானவன் ஒருவனுமில்லை. மண்ணும் சாம்பலும் அகந்தை கொள்வது ஏன்?

10 பணத்தை நேசிப்பதை விடத் தீயது ஒன்றுமில்லை. அப்படிச் செய்பவன் தன் ஆன்மாவை விலைபேசுகிறவனாவான்; ஏனென்றால், தன் ஆயுட் காலத்திலேயே தனக்கு மிகவும் சொந்தமானவைகளை எறிந்து விடுகிறான்.

11 எந்த அதிகாரமும் நெடுநாளாக நிலை கொள்ளாது. நீடித்த நோய் மருத்துவனுக்குச் சுமையாய் இருக்கின்றது.

12 நோயின் ஆரம்பத்திலேயே மருத்துவன் அதைத் தறித்து விடுகிறான். அதைப் போலவே, அரசன் இன்று இருக்கிறான்; நாளை இறக்கிறான்.

13 மனிதன் சாகும் போது பாம்புகளும் மிருகங்களும் புழுக்களுமே அவன் உரிமையாகும்.

14 கடவுளை விட்டகன்று போவதே மனிதனுடைய அகந்தையின் தொடக்கம்.

15 ஏனெனில் தன்னைப் படைத்தவரிடத்தினின்று அவன் மனம் விலகிப் போகின்றது; அகந்தை எல்லாப் பாவங்களின் அடிப்படையாகவும் இருக்கிறது. அகந்தையால் பீடிக்கப்பட்டவன் கொடிய சாபத்துக்கு உரியவனாவான்; இறுதியில் அது அவனை அழிக்கும்.

16 ஆதலால் தான் ஆண்டவர் பாவிகளின் கூட்டத்தை அவமானப்படுத்தினார். எப்போதும் அவர்களை அழித்தார்.

17 அகந்தை கொண்ட அதிகாரிகளுடைய அரியணைகளைக் கடவுள் வீழ்த்துவார். அவர்களுக்குப் பதிலாய்ச் சாந்தமுள்ளவர்களை அரியணைகளில் இருத்துவார்.

18 அகந்தை கொண்ட மக்களுடைய வேர்களை ஆண்டவர் உலர வைத்தார்; அவர்களினின்றே தாழ்ச்சியுள்ளவர்களை நட்டு வைத்தார்.

19 அகந்தை கொண்டவர்களுடைய நாடுகளை ஆண்டவர் ஒழித்தார். அடித்தளம் மட்டும் அவர்களை அழித்தார்.

20 அவர்களில் சிலரைப் பட்டுப்போகும்படி செய்து அவர்களைச் சிதறடித்தார்; அவர்களுடைய நினைவும் மண்ணுலகினின்று அற்றுப்போகும்படி செய்தார்.

21 அகந்தை கொண்டவர்களுடைய நினைவை ஆண்டவர் அழித்தார். மனத்தாழ்ச்சி உடையவர்களுடைய நினைவு நிலைத்திருக்கும்படி செய்தார்.

22 அகந்தை மனிதனுக்கு ஆகாது. பெண்களிடத்தில் பிறந்தவர்களுக்குக் கோபம் தகாது.

23 கடவுளுக்குப் பயந்து நடக்கும் மனித இனம் உயர்த்தப்படும்; ஆண்டவருடைய கட்டளைகளை அசட்டை செய்யும் இனமோ அவமதிக்கப்படும்.

24 சகோதரரைச் சரியாய் நடத்துகிறவன் அவர்களால் மதிக்கப்படுவான். ஆண்டவருக்குப் பயந்து நடக்கிறவர்களை அவர் கண்ணோக்குவார்.

25 செல்வமுடையவனாய் இருந்தாலும் சரி, உயர் குடிப் பிறந்தவனாய் இருந்தாலும் சரி, எளியவனாய் இருந்தாலும் சரி -கடவுளுக்குப் பயப்படுவது எல்லாருக்கும் மகிமை.

26 எளியவனாய் இருப்பதால் ஞானியை நிந்தியாதே; செல்வனாய் இருப்பதனால் பாவியைப் புகழாதே.

27 பெரியவனும் நீதிபதியும் வல்லமையுள்ளவனும் மரியாதை அடைகிறார்கள். ஆனால், கடவுளுக்குப் பயந்து நடப்பவனை விடப் பெரியவன் எவனும் இல்லை.

28 உரிமையுள்ளவர்கள் தங்கள் அறிவாளியான அடிமையின் கருத்துக்கு இணங்குவார்கள். விவேகமும் நல்லொழுக்கமும் உள்ள மனிதன் கண்டிக்கப்பட்டால் முறையிடான். விவேகமில்லாதவனோ அவமதிக்கப்படுவான்.

29 உன் வேலையை நன்றாய்ச் செய்ததால் உன்னை நீயே உயர்த்திக் கொள்ளாதே. இக்கட்டு நேரத்தில் சோம்பலாய் இராதே.

30 மகிமையுடன் இருந்தும் உண்ண ஒன்றுமில்லாதிருப்பவனை விட, உழைத்து மிகுதியாய்ச் சம்பாதிப்பவன் சிறந்தவன்.

31 மகனே, உன் ஆன்மாவைச் சாந்தத்தில் நிலைநிறுத்து; அதைத் தக்கபடி மதித்து நட.

32 தன் ஆன்மாவைக் கெடுக்கும் குற்றவாளி நீதிமானாக மதிக்கப்படுவானோ? (இல்லை) தன் ஆன்மாவைக் கறைப்படுத்தினவன் மகிமைப் படுத்தப்படுவானோ? (கண்டிப்பாய் இல்லை)

33 எளியவன் தன் நன்னெறியாலும் பயத்தினாலும் மகிமை அடைகிறான். மற்றும் சிலர் தங்கள் செல்வத்தின் பொருட்டு (வீணில்) மகிமை அடைகிறார்கள்.

34 வறுமையிலேயே மகிமை அடைகிறவன் செல்வமுடையவனானால் எவ்வளவோ மகிமை அடைவான்! ஆனால், செல்வத்தால் பெருமை பாராட்டுகிறவன் வறுமைக்குப் பயப்படுவான்.

அதிகாரம் 11

1 தாழ்ச்சியுள்ளவனுடைய ஞானம் அவனை உயர்த்தும்; பெரியோர் நடுவில் அவனை உட்காரும்படி செய்யும்.

2 எந்த மனிதனையும் அவன் அழகின் பொருட்டுப் புகழாதே. ஒருவனையும் அவன் வடிவைப் பற்றி இகழாதே.

3 பறவைகளில் தேனீ சிறியது. ஆனால், அதன் உழைப்பின் பலன் இனிப்பில் முதன்மையானது.

4 உன் உடைமுறையைப் பற்றி பெருமை கொள்ளாதே; நீ மரியாதையுடன் நடத்தப்படும் போது மகிமை கொள்ளாதே. ஏனென்றால், உன்னத கடவுளின் செயல்கள் மட்டுமே வியப்புக்குரியவைகளும் மகிமை பொருந்தியவைகளும் மறைக்கப்பட்டவைகளும் அறிவுக்கெட்டாதவைகளுமாய் இருக்கின்றன.

5 கொடுங்கோலர் பலர் அரியணை ஏறினர். (ஆனால், அவர்களுக்குப் பதிலாய்) எவரும் நினையாத ஒருவன் முடி அணிந்தான்.

6 அதிகாரம் உடைய தலைவர்களில் பலர் கொடூரமாய்ச் சிறைப்பட்டார்கள்; ஆன்றோர் பலர் மற்றவர்கள் கைகளில் காட்டிக் கொடுக்கப்பட்டார்கள்.

7 எவனையும் தண்டிப்பதற்கு முன் அவனை விசாரி; விசாரித்த பிறகு நீதியாய்த் தண்டனை விதி.

8 கேட்பதற்கு முன்பே மறுமொழி சொல்லாதே. எவனையும் அவன் பேச்சு நடுவில் தடை செய்யாதே.

9 உன்னைச் சாராத காரியத்தைப் பற்றி வாதாடாதே. கெட்டவர்களுடன் நியாயம் தீர்க்க முற்படாதே.

10 மகனே பற்பல காரியங்களைச் செய்ய முயலாதே; அப்படிச் செய்தால் குற்றத்திற்குத் தப்பிக் கொள்ள மாட்டாய். நீ பற்பல காரியங்களில் புகுந்தால் அவை உனக்கு வெற்றியைத் தரா; இவைகளை விட்டு விட்டால் உனக்கு நட்டம் வராமல் இராது.

11 ஒரு மனிதன் வேலை செய்கிறான்; துரிதப்படுகிறான்; வெகு துன்பப்படுகிறான். ஆனால், அவ்வளவுக்கு அவன் செல்வனாக மாட்டான்.

12 மற்றொருவன் பற்பல குறைவுகளால் வருத்தப்பட்டு, உதவியற்றவனாயும் தைரியமில்லாதவனாயும் பரம ஏழையாயும் இருக்கிறான்.

13 கடவுளுடைய கண்கள் தயவாய் அவனை நோக்கின; அவன் தாழ்மையினின்று அவனைத் தூக்கி, அவனை உயர்த்தின. பலர் அவனைப் பற்றி ஆச்சரியம் அடைந்து கடவுளைப் போற்றினார்கள்.

14 நன்மையும் தீமையும், வாழ்வும் சாவும், வறுமையும் செல்வமும் கடவுளிடமிருந்து உண்டாகின்றன.

15 ஞானமும் நற்போதகமும், கட்டளைகளின் அறிவும் கடவுளிடமிருந்து வருகின்றன. அன்பும் நற்செயல்களும் அவரிடமிருந்தே உண்டாகின்றன.

16 தவறும் இருளும் பாவிகளுக்கு ஏற்பட்டன; ஏனென்றால், பாவத்தில் மகிழ்ச்சி அடைகிறவர்கள் முதுமையிலும் பாவத்திலேயே நிலைகொள்வார்கள்.

17 கடவுளுடைய அருள் நீதிமான்கள் மேல் நிலைத்திருக்கின்றது. அவருடைய தயவு அதைப் பெருகச் செய்கிறதனால், நீதிமான் நித்திய பேற்றைப் பெறுவான்.

18 அளவோடு செலவிடுவதனால் செல்வனாகிறவன் உண்டு. அதனால் வரும் பயன் என்னவென்றால்:

19 நான் இளைப்பாற்றியைக் கண்டடைந்தேன்; என் சம்பாத்தியத்தைக் கொண்டு நான் மட்டும் சாப்பிடுவேன் என்பான்.

20 ஆனால், காலம் கடந்துபோம் என்றும், மரணம் கிட்டிவரும் என்றும், மற்றவர்களிடம் எல்லாவற்றையும் விட்டுச் சாவேன் என்றும் நினையான்.

21 உன் மனவுறுதியில் நிலைத்திரு. அதைப் பற்றியே உரையாடு; அதைப் பற்றியே உன் உள்ளத்தில் யோசி. உன் முதுமை வரையிலும் உனக்குக் கட்டளையிடப் பட்டவைகளைக் கடைப்பிடி.

22 பாவிகளுடைய செயல்களில் நிலையாதே. கடவுள் மீது உன் நம்பிக்கையை வைத்து, மனவுறுதியில் நிலைத்திரு.

23 ஏனென்றால், வறியவனை ஒரே நிமிடத்தில் செல்வனாக்குவது கடவுளுக்கு எளிதான காரியமாம்.

24 கடவுள் நீதிமானை ஆசீர்வதித்து, அவனுக்குக் கூடிய விரையில் வெகுமதி அளிப்பார். வெகு விரைவில் அவன் பலனடைவான்.

25 எனக்கு என்ன தேவை? எனக்கு என்ன நன்மைகள் உண்டாகும் என்று சொல்லாதே.

26 எனக்கு இருப்பதே போதுமானது; இனிமேல் நான் அஞ்சத் தக்கது என்ன என்று சொல்லாதே.

27 உன்னுடைய செல்வாக்கான நாட்களில் நீ வருத்தப்பட்ட நாட்களை மறந்து விடாதே; உனக்குத் துன்பம் வரும் நாட்களிலும் செல்வாக்கான நாட்களை நினையாமல் இராதே.

28 ஏனென்றால், ஒவ்வொருவனுக்கும் அவன் தன் செய்கைகளுக்குத் தகுந்த வண்ணம் அவன் மரண நாளில் அவனுக்கு வெகுமதி அளிப்பது கடவுளுக்கு எளிதான காரியமாம்.

29 இக்காலத்துத் துன்பம் பழைய, பெரிய, இன்ப அனுபவத்தை மறக்கச் செய்கின்றது. மனிதனுடைய மரண வேளையில் அவன் செயல்கள் யாவும் வெளிப்படுத்தப்படும்.

30 ஒருவன் சாவதற்குமுன் அவனைப் புகழாதே; ஏனென்றால், தன் பிள்ளைகளால் அவன் அறியப்படுகிறான்.

31 எல்லாரையுமே உன் வீட்டிற்குள் அழைத்துப் போகாதே; ஏனென்றால், கபடனுக்குப் பல தந்திர உபாயங்கள் உண்டு.

32 மிதமிஞ்சிச் சாப்பிட்டவர்களுடைய நெஞ்சினின்று வரும் கெட்ட நாற்றம் போலவும், கவுதாரியை இழுத்துக் கொள்ளும் கண்ணியைப் போலவும், மான்குட்டியை அகப்படுத்திக் கொள்ளும் வலையைப் போலவும் அகந்தை கொண்டவர்களுடைய இதயமும் இருக்கின்றது. தன் அயலானுடைய கேட்டைக் கண்டு ஆராய்கிறவனும் அப்படியே ஆகிறான்.

33 ஏனென்றால், அவன் நன்மையைத் தீமையாக மாற்றிப் பிறரைக் கெடுக்க வழி தேடுகிறான். சிறந்த செயல்களிலும் குறை காண்கிறான்.

34 ஒரு நெருப்புப் பொறியினின்று பெரும் நெருப்பு உண்டாகும். ஒரு தீநெறியாளனால் இரத்தப்பழி அதிகரிக்கும். பாவியான மனிதன் இரத்தம் சிந்த வைக்கிறதற்கு வழி தேடுகிறான்.

35 கெட்ட குணமுள்ள மனிதனிடம் எச்சரிக்கையாய் இரு. ஏனென்றால், சில வேளை உன் மீது காலமெல்லாம் தொடரும் பொய்யான புறணிகளைச் சுமத்துவான்.

36 அன்னியனுக்கு நீ இடம் கொடுத்தாலோ, அவன் கலகத்தில் உன்னை விழத்தாட்டி, உன் உறவினனுக்கும் உன்னை அன்னியனாக்குவான்.

அதிகாரம் 12

1 நீ நன்மை செய்வதாயின், எத்தன்மையானவனுக்குச் செய்கிறாயென்று தெரிந்து செய்; அப்போது உன் நற்செயல்களினால் பெரும் பயன் உண்டாகும்.

2 நீதிமானுக்கு நன்மைசெய்; அதனால் பெரும் நன்மை அடைவாய்; அவனால் பெறாவிடினும் நிச்சயம் ஆண்டவராலேனும் உனக்குக் கிடைக்கும்.

3 எப்போதும் கெடுதியை நாடுகிறவனும், பிச்சை இடாதவனும் நல்ல நிலையில் இருக்கப் போகிறதில்லை; ஏனென்றால், உன்னத கடவுள் பாவிகளைப் பகைக்கிறார்; மன வருத்தப் படுகிறவர்கள் மேல் இரக்கமாய் இருக்கிறார்.

4 இரக்கமுள்ளவனுக்குக் கொடு; பாவியை ஏற்றுக்கொள்ளாதே. ஏனென்றால், ஆண்டவர் அக்கிரமிகளுக்கும் பாவிகளுக்கும் தகுந்த தண்டனை கொடுப்பார்; அவர்களுக்காகப் பழிவாங்கும் நாள் வரை காத்துக் கொண்டிருக்கிறார்.

5 நல்லவனுக்குக் கொடு; பாவியை ஏற்றுக்கொள்ளாதே.

6 தாழ்ச்சியுள்ளவனுக்குப் பிச்சை இடு; தீயவனுக்கு ஒன்றும் கொடாதே; அவன் உன்னினும் வலியவனாகாதபடிக்கு, அவனுக்கு உணவு கொடுக்கப்படுவதைத் தடுத்து விடு.

7 நீ அவனுக்குச் செய்யும் எல்லாவற்றிலும் இருவிதத் தீமைகளைக் காண்பாய். ஏனென்றால், உன்னத கடவுள் பாவிகளைப் பகைக்கிறார்; அக்கிரமிகளைத் தண்டிக்கிறார்.

8 நீ செல்வாக்குடன் இருக்கும் போது உண்மையான நண்பன் யாரென்று அறிய முடியாது. துன்பத்தில் உண்மையான பகைவன் யாரென்று அறியப்படும்.

9 மனிதன் செல்வாக்குடன் இருக்கும் போது அவன் பகைவர்கள் வருத்தமாயிருக்கிறார்கள்; அவன் துன்பத்தில் நண்பன் அறியப்படுகிறான்.

10 உன் பகைவனை நீ ஒரு போதும் நம்பாதே. ஏனென்றால், பித்தளையில் களிம்பு ஏறுமாப் போல் அவன் கெட்ட குணமும் களிம்பேறிப் போகும்.

11 தன்னைத் தாழ்த்தி அவன் குனிந்து நடந்த போதிலும், உன் மனத்தை எச்சரிக்கைப்படுத்தி, அவனிடம் சிக்கிக்கொள்ளாதபடி விழித்திரு.

12 அவனை உன்னோடு சேர்த்துக் கொள்ளாதே; அவன் வலப்பக்கத்திலும் உட்காராதே. ஏனென்றால், ஒருவேளை அவன் உனக்கு விரோதமாய் உன் பக்கமாய்த் திரும்பி உன் இருக்கையில் அமர்வான். (அப்படிச் செய்தால்) கடைசியில் நான் சொன்னதை நீ நினைந்து வருந்தி, அது உண்மையென்று கண்டுபிடிப்பாய்.

13 பாம்பால் கடிபட்ட பாம்பாட்டி மீதும், மிருகங்களிடம் போகும் எவன் மீதும் இரக்கம் கொள்பவன் யார்? இது போலவே, அக்கிரமியோடு கூடுகிறவனும் அவன் பாவங்களாலேயே சூழப்படுவான்.

14 அவன் சிறிது நேரம் உன்னோடு தங்குவான்; அவனை நீ கவனியாமல் போனால் பொறுக்க மாட்டான்.

15 பகைவன் தன் சொற்களில் இனிப்பானவன்; தன் உள்ளத்திலோ உன்னைக் குழியில் தள்ள வழி தேடுவான்.

16 பகைவன் உன் துன்ப காலத்தில் தன் கண்களில் கண்ணீர் உகுக்கிறான். சமயம் வாய்க்கும் போது நீ இரத்தம் சிந்தக் கண்டு நிறைவு கொள்வதை ஆசையுடன் தேடுவான்.

17 உனக்குத் துன்பங்கள் வரும் போது அவனே முதன் முதல் உன்னிடம் ஓடி வருவான்.

18 பகைவன் தன் கண்களில் கண்ணீர் உகுக்கிறான். உனக்கு உதவி செய்பவன் போல் உன் காலடிகளைத் தட்டி விடுகிறான்.

19 அப்பால், தன் தலையை அசைப்பான்; கைதட்டுவான்; பற்பல பொய், புறணிகள் சொல்லித் தன் முகத்தை மாற்றுவான்.

அதிகாரம் 13

1 கீலைத் தொடுகிறவன் கறைப்படுவான். அகந்தையுள்ளவனோடு உறவாடுகிறவன் அகந்தையைத் தரிப்பான்.

2 தன்னை விடப் பெரியவனோடு உறவாடுகிறவன் தன் மேல் பாரத்தைச் சுமத்திக் கொள்கிறான். உன்னைச் காட்டிலும் அதிகச் செல்வமுள்ளவனோடு உறவு கொள்ளாதே.

3 மண் பானைக்கு இரும்புப் பானையோடு தொடர்பு என்ன? ஒன்றோடொன்று மோதும் போது (மண்பானை) உடைந்து போகும்.

4 செல்வமுள்ளவன் அநியாயம் செய்து பிறகு துடிதுடிக்கிறான். அநியாயம் செய்யப்பட்ட எளியவனோ மௌனமாய் இருக்கிறான்.

5 அவனுக்குப் பரிசு கொடுத்தால் உன்னை ஏற்றுக்கொள்வான்; உன்னிடத்தில் ஒன்றுமில்லாமல் போனால் உன்னை விட்டு விடுவான்.

6 உன்னிடம் செல்வமிருந்தால் உன்னுடன் சேர்ந்து பந்தியில் அமர்ந்து உனக்கு அதிகச் செலவை உண்டாக்குவான்; அதனால் உன்னைப் பற்றி அவன் வருந்தமாட்டான்.

7 அவனுக்குத் தேவையாய் இருப்பாயேயாகில் உன்னை வசப்படுத்திக் கொள்வான்; நயந்து, உனக்கு நம்பிக்கை வருவித்து, நல்ல வார்த்தைகள் சொல்லி, உனக்கு வேண்டியது என்ன என்று கேட்பான்.

8 தன் விருந்துகளால் உன்னை மயக்கி, உன்னை முழுமையும் போக்கடிக்கிற வரையில் இரண்டு மூன்று முறை அவ்வாறே செய்வான்; கடைசியில் உன்னை நகைத்து, உன்னிடம் ஒன்றுமில்லை என்று கண்டு உன்னை விட்டுவிடுவான்; உன்னைப் பார்த்துத் தன் தலையை அசைப்பான்.

9 கடவுளுக்கு முன்பாக உன்னைத் தாழ்த்து; அவர் உதவிக்குக் காத்திரு.

10 வஞ்சகத்தால் மோசம் போய், மூடத்தனத்தால் நீ தாழ்த்தப்படாதபடிக்கு எச்சரிக்கையாய் இரு.

11 தாழ்த்தப்பட்டதனால் மூடத்தன்மைக்கு உள்ளாகாதபடிக்கு உன் ஞானத்தில் உன்னைத் தாழ்த்தாதே.

12 உன்னிலும் பெரியவன் ஒருவன் உன்னை அழைப்பானேயானால், நீ தூரமாய்ப் போ. ஏனென்றால், அப்படிச் செய்வதனால் அவன் உன்னை மீண்டும் அழைப்பான்.

13 அவனுக்கு வெறுப்புண்டாகாதபடி அடிக்கடி போகாதே; அவன் உன்னை மறந்து விடாதபடிக்குத் தூரமாயும் போகாதே.

14 அவனுக்கு நிகரானவன் போன்று நீடித்த உரையாடல் மேற்கொள்ளாதே; அவனுடைய நீண்ட பேச்சுகளையும் நம்பாதே. ஏனென்றால் அவன் பல பேச்சுகளால் உன்னைத் தந்திரமாய் ஏமாற்றி, சிரித்துக் கொண்டு உன் இரகசியங்களை அறிய முயல்வான்.

15 தான் இரக்கமற்ற இதயமுடையவனாய் இருப்பதனால், உன் வார்த்தைகளை வெளிப்படுத்துவான்; உன்னைக் கெடுப்பதற்கோ, சிறையில் அடைப்பதற்கோ பின்னடையமாட்டான்.

16 நீ எச்சரிக்கையாய் இரு; அவன் சொல்வதைக் கவனமாய்க் கேள். இல்லாவிடில் நீ ஆபத்தில் சிக்கிக் கொண்டு நடப்பாய்.

17 அவைகளெல்லாம் கனவில் கேட்பது போல் எண்ணு; அப்போது விழித்திருப்பவன் போல் எச்சரிக்கையாய் இருக்கக்கடவாய்.

18 உன் வாழ்நாள் முழுமையும் கடவுளை நேசி; உன் மீட்பிற்காக அவரை மன்றாடு.

19 எல்லா உயிரினங்களும் தம்மைப் போன்றவற்றை நேசிக்கின்றன. அவ்வாறே ஒவ்வொரு மனிதனும் தன் அயலானை நேசிக்கிறான்.

20 ஒவ்வொரு பிராணியும் தனக்கு ஒத்ததோடு சேர்க்கப்படுகின்றது; ஒவ்வொரு மனிதனும் தனக்கு ஒத்தவனோடு இணைக்கப்படுகிறான்.

21 நரி ஒருவேளை ஆட்டோடு கூடுமானால் பாவியும் நீதிமானோடு கூடலாம்.

22 புண்ணியவானான மனிதனுக்கு நாயோடு தொடர்பு என்ன? செல்வனுக்கு எளியவனோடு என்ன ஒப்புரவு?

23 காட்டுக் கழுதை சிங்கத்திற்கு இரையாகிறது போல் எளியவர்கள் செல்வமுடையோருக்கு இரையாகிறார்கள்.

24 அகந்தை கொண்டவர்கள் தாழ்ச்சியை வெறுப்பது போல செல்வமுடையோன் எளியவனை வெறுக்கிறான்.

25 செல்வமுடையோன் கலக்கமுற்ற காலத்தில் தன் நண்பரால் தேற்றப்படுகிறான். எளியவனோ விழுந்த போது நண்பரால் புறக்கணிக்கப்படுவான்.

26 மோசம் செய்யப்பட்ட செல்வனுக்கு உதவுகிறவர்கள் பலர்; அகந்தையாய்ப் பேசினாலும் அவன் சொற்களை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

27 எளியவன் மோசம் செய்யப்பட்டாலோ அதிகமாய்க் குற்றம் சாட்டப்படுவான். அறிவுச் செறிவோடு பேசினாலும் அவனுக்கு இடம் கொடுக்கப்பட மாட்டாது.

28 செல்வமுள்ளவன் பேசினால் எல்லாரும் மௌனமாய் இருப்பார்கள்; அவன் வார்த்தைகளை மேகங்கள் வரையிலும் உயர்த்துவார்கள்.

29 எளியவன் பேசினாலோ: இவன் யார் என்பார்கள்; அவன் தவறினாலோ அவனை விழத்தாட்டுவார்கள்.

30 மனச்சாட்சியில் குற்றமில்லாதவனுக்குச் செல்வம் நலம் தரும். வறுமையோ அக்கிரமிக்கு மிகவும் கெடுதிக்கு உரியதாய் இருக்கும்.

31 நன்மையிலேனும் தீமையிலேனும் மனிதனுடைய இதயம் அவன் முகத்தை மாற்றுகின்றது.

32 நல்லவன் இதயத்தின் அடையாளத்தையும், அவன் மலர்ந்த முகத்தையும் காண்பது அரிதும் கடினமுமானது.

அதிகாரம் 14

1 தன் வாயினின்று வரும் வார்த்தையில் தவறாத மனிதன் பேறு பெற்றவன்; குற்றத்தின் மன வேதனையால் வருத்தப்படுத்தப்படாதவனும் பேறு பெற்றவன்.

2 மனவருத்தமில்லாதவனும், தன் நம்பிக்கையைக் கைவிடாதவனும் பேறு பெற்றவர்கள்.

3 பேராசையும் கஞ்சத்தனமும் கொண்டுள்ள மனிதனுக்குச் செல்வம் பயனற்றது. பொறாமைக்காரனுக்குப் பொன் எதற்கு?

4 பேராசையுடன் செல்வங்களை அநியாயமாய்ச் சேகரிக்கிறவன் பிறருக்குச் சேர்த்து வைக்கிறான். அவனுடைய செல்வங்களால் மற்றொருவன் இன்ப சுகங்களில் மகிழ்ந்திருப்பான்.

5 தனக்குத் தானே கெட்டவனாய் இருப்பவன் எவனுக்கு நல்லவனாவான்? (எவனுக்குமில்லை) மேலும் தான் சேர்த்து வைத்த செல்வங்களால் அவன் நிறைவு அடையான்.

6 தன்னைத் தானே வஞ்சிக்கிறவனை விடக் கெட்டுப் போனவன் ஒருவனும் இல்லை. இதுவே அவன் கெட்ட குணத்தின் இலாபம்.

7 அவன் எந்த ஒரு நன்மையைச் செய்தாலும் அதை நினையாமலும் அறியாமலும் செய்வான். இறுதியில் அவன் மனத்திலுள்ள கபடு வெளிப்படுத்தப்படும்.

8 பொறாமையால் பீடிக்கப்பட்டவனும், பிறருடைய (மன்றாட்டை) அசட்டை செய்து தன் முகத்தைத் திருப்புகிறவனும் பொல்லாதவர்கள்.

9 தன் கெட்ட குணத்தில் பேராசையுள்ளவனுடைய கண் ஆவல் அடங்குவதில்லை. தன் உயிரை உலர்த்தி மாய்த்துக் கொள்கிற வரையிலும் அவனுக்கு நிறைவு ஏற்படப் போவதில்லை.

10 கஞ்சனின் கண் தீமைகளையே நாடும். அவன் மற்றவர்களுக்கும் உணவு கொடான்; தானும் பசியால் வருந்துவான்.

11 மகனே, உன்னிடம் ஏதேனும் இருந்தால், உனக்கும் உதவிக்கொள்; கடவுளுக்கும் தகுதியான காணிக்கைகளைக் கொடு.

12 மரணம் தாமதிக்காதென்றும், கல்லறைக்குப் போவாயென்று உனக்குத் தீர்ப்புச் சொல்லப்பட்டிருக்கிறதென்றும் நினைத்துக்கொள். ஏனென்றால், மனிதன் சாகவே சாவான் என்பது இவ்வுலக நியதி.

13 சாகிறதற்கு முன்பே உன் நண்பனுக்கு உதவி செய்; உன் வலிமைக்குத் தக்க கை நீட்டி எளியவனுக்குக் கொடு.

14 செல்வாக்கு நாளில் குறை செய்துகொள்ளாதே; செய்யக் கூடுமான நன்மையையெல்லாம் தவறாமல் செய்.

15 ஏனென்றால், நீ உழைத்துச் சம்பாதித்த பொருட்களை மற்றவர்களுக்கு நீ விடப்போகிறதில்லையா? நீ விட்டு விடுவாய்; மற்றவர்கள் அவற்றைப் பங்கிட்டு அனுபவிக்கப் போகிறார்கள் அல்லவா?

16 கொடு, பெற்றுக்கொள், உன் ஆன்மாவைப் பரிசுத்தமாக்கு.

17 உன் மரணத்திற்கு முன்பே பிச்சை இடு. ஏனென்றால், கல்லறையில் உணவு தேட வேண்டிய தேவை இல்லை.

18 எல்லா உயிரினங்களும் செடியைப் போலவும், பச்சை மரத்தில் தழைக்கும் இலையைப் போலவும் வாடிப் போகின்றன.

19 சில தளிர்க்கவே, மற்றும் சில வளர்ந்து விழுந்துபோம். மனிதரிலும் சிலர் இறக்க, வேறு சிலர் பிறப்பார்கள்.

20 அழிவுள்ள எல்லா வேலையும் இறுதியில் அழிந்து போம். அதைச் செய்கிறவனும் அதைப்போல் அழிவான்.

21 அப்போது நியாயமான செயல்கள் ஏற்றுக்கொள்ளப்படும்; அதைச் செய்கிறவனும் அதைப்பற்றி மகிமைப்படுத்தப்படுவான்.

22 ஞானத்தில் நிலை கொள்கிறவனும், தன் நீதியைத் தியானிப்பவனும், கடவுளுடைய பராமரிப்பைத் தன் மனத்தில் சிந்திப்பவனும் பேறு பெற்றவன்.

23 தன் நடத்தைகளைத் தன் இதயத்தில் நினைத்துப் பார்த்து, தன் இரகசியங்களை நன்றாய் அறிந்து, ஆராய்கிறவன் போல ஞானத்தின் வழி நடந்து, அதன் வழிகளில் நிலை கொள்கிறவனும்,

24 அதன் சன்னல் வழி பார்த்து, கதவுகளின் ஓரமாய் நின்று கேட்கிறவனும்,

25 அதன் வீட்டின் அருகிலேயே இளைப்பாறி, அதன் சுவர்களில் முளையடித்து, அதன் பக்கத்தில் சிறு அறை கட்டுகிறவனும் பேறு பெற்றவன். ஏனென்றால் அந்த அறையில் நன்மைகள் நித்தியத்திற்கும் தங்கியிருக்குமாதலால்,

26 அதன் நிழலின் கீழ்த் தன் மக்களை நிறுத்துவான்; அதன் கிளைகளின் கீழ்த் தங்கியிருப்பான்;

27 வெப்பத்தினின்று அதன் நிழலால் காப்பாற்றப்படுவான்; அதன் மகிமையில் இளைப்பாறுவான்.

அதிகாரம் 15

1 கடவுளுக்குப் பயந்து நடக்கிறவன் புண்ணியத்தைச் செய்வான். நீதியின்படி ஒழுகுபவன் அதைக் கைப்பற்றுவான்.

2 அது மகிமையுள்ள அன்னையைப் போல அவன்முன் செல்லும்; கன்னிமை கெடாத பெண்ணைப் போல் அவனை ஏற்றுக்கொள்ளும்;

3 உணவாக வாழ்வையும் அறிவையும் அவனுக்குத் தரும்; பானமாக ஞானத்தை அவனுக்கு அளிக்கும். அவன் அதன் மீது ஊன்றி நடப்பதனால் கலக்கமடைய மாட்டான்;

4 அதன் மீது பற்று வைத்ததனால் வெட்கம் கொள்ளமாட்டான்; அதனால் மற்றவர்களுக்கு முன்பாக மேன்மைப் படுத்தப்படுவான்.

5 அவன் சபை நடுவில் பேச ஆண்டவர் அவனுக்கு நாவன்மை அளிப்பார். விவேகமும் அறிவாற்றலும் நிறைந்த உணர்வை அவனுக்குத் தந்தருளுவார். இந்த அறிவாற்றல், உடுத்தும் அலங்கார ஆடை போல் அவனிடம் ஒளிரும்;

6 மகிழ்ச்சியையும் அக்களிப்பையும் அவனிடம் சேர்ப்பிக்கும்; நித்திய பெயருக்கு அவனை உரிமையாளியாக்கும்.

7 அறிவில்லா மனிதர் அதைக் கண்டுபிடிக்க மாட்டார்கள். அறிவுடையோரோ அதை அடைய விரும்புவார்கள். மூடர் அதைக் காணார். ஏனென்றால், அகந்தைக்கும் கபடுக்கும் வெகுதூரத்தில் அது இருக்கின்றது.

8 பொய்யர் அதை நினைக்க மாட்டார்கள். உண்மையுரைப்போரோ அதைக் துணையாகக் கொண்டமையால் கடவுள் திருமுன் வரும் வரைக்கும் மகிழ்வு அடைவார்கள்.

9 பாவியினுடைய வாயில் கடவுளுடைய புகழ்ச்சி சிறந்ததன்று.

10 ஏனென்றால், கடவுளிடத்தினின்று ஞானம் தோன்றினது; கடவுளுடைய புகழ்ச்சியே ஞானத்தோடு கூட நிற்கின்றது; நம்பத் தகுந்தவனுடைய வாயில் அது மிகுந்திருக்கின்றது; ஆண்டவர் அவனுக்கு அதைக் கொடுப்பார்.

11 ஞானம் என்னிடம் இல்லாததற்குக் கடவுளே காரணம் என்று சொல்லாதே. ஏனென்றால், அவர் பகைப்பதை நீ செய்யாதிரு.

12 அவரே நான் கெட்டுப் போவதற்குக் காரணம் என்று சொல்லாதே. ஏனென்றால், அக்கிரமிகள் அவருக்குத் தேவையில்லை.

13 அநியாயம் அனைத்தையும் ஆண்டவர் பகைக்கிறார். அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கும் அது விருப்பமாய் இராது.

14 கடவுள் ஆதியில் மனிதனைப் படைத்து, அவன் தன் விருப்பத்தின்படியே நடக்க உரிமை கொடுத்தார்.

15 ஆனால், தம் கட்டளைகளையும் சட்டங்களையும் கொடுத்தார்.

16 கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும் அவருக்கு நித்தியத்திற்கும் விருப்பமாய் நடக்கவும் உனக்கு மனமுண்டானால் அவைகள் உன்னைக் காப்பாற்றும்.

17 அவர் நீரும் நெருப்பும் உன் முன்பாக வைத்தார். எது வேண்டுமோ, உன் கையை நீட்டு.

18 மனிதனுக்கு முன்பாக வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும் உண்டு. அவன் எதைத் தேர்ந்து கொள்வானோ அதை அடைவான்.

19 ஏனென்றால், கடவுளுடைய ஞானம் மகத்தானது. அதிகாரத்தில் வல்லமை உள்ளது. அவர் இடைவிடாமல் அனைவரையும் கண்டறிகிறார்.

20 ஆண்டவருடைய கண்கள் அவருக்கு அஞ்சி நடப்பவர்கள் மீது இருக்கின்றன. மனிதனுடைய எல்லாச் செயல்களையும் அவர் அறிகிறார்.

21 அக்கிரமமாய் நடக்க அவர் எவனுக்கும் கற்பித்ததில்லை; பாவம் செய்யும்படி எவருக்கும் உத்தரவு கொடுத்ததில்லை.

22 ஏனென்றால், பிரமாணிக்கமற்றவர்களும் பயனற்றவர்களுமான பிள்ளைகளின் கூட்டத்தை அவர் விரும்புவதில்லை.

அதிகாரம் 16

1 அக்கிரமிகளான பிள்ளைகள் அதிகரிப்பதனால் மகிழ்ச்சி கொள்ளாதே. அவர்களிடம் தெய்வ பயம் இல்லாமல் போனால், அவர்களைப் பற்றி அகமகிழ்ச்சி கொள்ளாதே.

2 அவர்கள் வாழ்நாள் நீடித்திருக்கும் என்று நம்பாதே. அவர்கள் வேலைகளுக்கு எதிர்பார்த்திராதே.

3 தீநெறியாளரான ஆயிரம் பிள்ளைகளை விடத் தெய்வ பயமுள்ள ஒரு மகன் மேலானவன்.

4 தீநெறியாளரான மக்களைப் பெறுவதை விட மக்களில்லாமல் சாவது நல்லது.

5 ஓர் அறிவாளியால் ஒரு நாடே செழிக்கும். அக்கிரமிகள் நாடோ காடாகி விடும்.

6 இவை போன்ற பல காரியங்களை என் கண்ணால் பார்த்தேன். இவைகளினும் பெரியவைகளைக் காதால் கேட்டேன்.

7 பாவிகள் சபையில் நெருப்பு கொழுந்து விட்டு எரியும். விசுவாசமற்ற மனிதரிடம் கோபம் பொங்கும்.

8 முற்காலத்தில் அரக்கர் தங்கள் சொந்த பலத்தை நம்பினபடியால் அழிக்கப்பட்டார்கள். ஏனென்றால், அவர்கள் தங்கள் பாவங்களுக்காக மன்றாடவில்லை.

9 லோத் பயணம் செய்த இடங்களை ஆண்டவர் காப்பாற்றவில்லை. அவர்கள் வார்த்தையின் அகந்தைக்காக அவர்களை அவர் வெறுத்தார்.

10 அவர்கள்மீது அவர் இரக்கம் வைக்கவில்லை. தங்கள் அக்கிரமங்களைப்பற்றிப் பெருமை பாராட்டின மக்கள் அனைவரையும் அவர் அழித்தார்.

11 அவ்வாறே கல் நெஞ்சம் படைத்தவர்களாய் ஒருமித்திருந்த ஆறு லட்சம் பேர்களையும் அழித்தொழித்தார். இப்படியிருக்க, ஒருவன் மட்டும் கீழ்ப்படியாதிருந்தும் தண்டனைக்குத் தப்பிக் கொண்டால் ஆச்சரியத்திற்கு இடமாகும்.

12 இரக்கமும் கோபமும் அவரிடம் இருக்கின்றன. அவர் பொறுப்பதில் வல்லவரானால், கோபத்தைக் காட்டுவதிலும் அவ்வாறே.

13 அவர் இரக்கத்திற்கு ஏற்பவே அவர் கண்டிப்பும். மனிதனை அவன் செயல்களுக்குத் தக்கவண்ணம் தீர்மானிக்கின்றது.

14 பாவி தன் தீநெறியில் தப்பிக்கொள்ள மாட்டான். இரக்கம் காண்பிக்கிறவனுடைய பொறுமை வெகுமதி அடையத் தாமதியாது.

15 இரக்கத்தின் செயல்கள் அனைத்தும் ஒவ்வொருவனையும் அவனவனுடைய செயல்களின் பேறு பலனுக்குத் தக்கவண்ணமும், அவன் தன் வாழ்க்கைப் பயணத்தில் காண்பிக்கும் அறிவுடைமைக்குத் தக்கவண்ணமும் அவனை வரிசை முறையில் நிறுத்தும்.

16 நான் தெய்வத்தின் கண்ணில் அகப்படமாட்டேன்; மேலுலகத்தில் என்னை நினைக்கிறவன் யார் என்றும்,

17 இவ்வளவு மக்கட்திரளில் ஒருவரும் என்னை அறியப்போவதில்லை; ஏனென்றால், எண்ணிறந்த படைப்புகளில் என் ஆன்மா என்ன என்றும் சொல்லாதே.

18 இதோ பார்: வானமும் வான மண்டலங்களும், பாதாளமும் மண்ணுலகம் முழுவதும், அவைகளிலுள்ள யாவும் அவர் முன்னிலையில் நடுங்குகின்றன.

19 மலைகளும் குன்றுகளும் பூமியின் அடித்தளங்களும் கடவுள் தங்களைக் கண்ணோக்கும் போது அச்சத்தினால் அதிர்கின்றன.

20 இவைகளிலெல்லாம் இதயம் அறிவற்றதாய் இருக்கின்றது. ஆனால், எல்லா இதயங்களும் அவரால் கண்டு பிடிக்கப்படுகின்றன.

21 அவருடைய வழிகளையும், மனிதனுடைய கண் பாராத பெரும் காற்றையும் கண்டுபிடிக்கிறவன் யார்?

22 ஏனென்றால், அவருடைய செயல்களில் பல மறைபொருளாய் இருக்கின்றன. அவருடைய நீதியின் செயல்களை எவன் எடுத்துரைப்பான்? அவைகளைத் தாங்கக்கூடியவன் யார்? நன்னெறி சிலரை விட்டு வெகுதூரத்தில் இருக்கின்றது. அனைவருடைய தீர்ப்பும் முடிவில் நடக்கும்.

23 தன்மனத்தில் அற்பத்தனமுள்ளவன் வீணானவைகளை நினைக்கிறான். விவேகமற்றவனும் ஒழுங்கற்றவனுமான மனிதன் மூடத்தனமானவைகளை நினைக்கிறான்.

24 மகனே, நான் சொல்வதைக் கேள். அறிவின் நெறியைக் கற்றுக்கொள்.

25 உன் மனத்தில் என் வார்த்தைகள் மீது கவனம் வை. ஒழுங்கோடே நன்னெறியைப் போதிப்பேன்; ஞானத்தை ஆராய்ந்து உரைப்பேன். உன் மனத்தில் என் வார்த்தைகள் மீது கவனம் வை. கடவுள் தொடக்கம் முதல் தம்முடைய செயல்களில் விளங்கச் செய்த அதிசயங்களை அறிவுத் தெளிவோடு சொல்கிறேன்; அவர்தம் இயல்பை உண்மையோடு உரைக்கிறேன்.

26 கடவுள் தம்முடைய திட்டத்தின்படி தொடக்கத்தில் படைப்புகளைப் படைத்தவுடனே, அவைகளின் வகைகளைப் பிரித்து வேறுபடுத்தி, ஒவ்வொரு இனத்திலும் தலைமையானவைகளை ஏற்படுத்தினார்;

27 அவைகளை என்றும் அணி செய்தார். அவைகள் பசியினால் வருந்தினதுமில்லை; துன்புற்றதுமில்லை; வேலைகளை நிறுத்தினதுமில்லை.

28 ஒருபோதும் ஒரு படைப்பு மற்றொன்றைத் தொல்லைப் படுத்தினதுமில்லை.

29 ஆண்டவருடைய வார்த்தையின் மீது அவிசுவாசியாய் இராதே.

30 அதன் பிறகு கடவுள் நிலத்தை நோக்கினார்; தம்முடைய வரங்களால் அதை நிரப்பினார்.

31 எல்லாவித உயிரினங்களும் நிலத்தின் மேல் உண்டாயின. அவை நிலத்துக்கே திரும்பவும் போகும்.

அதிகாரம் 17

1 கடவுள் மண்ணால் மனிதனை உண்டாக்கினார்; தமது சாயலாக அவனைப் படைத்தார்.

2 திரும்பவும் அவனை மண்ணாகவே மாற்றுவார்; அவனுக்குக் தக்க வலிமையைக் கொடுத்தார்.

3 நாட்களின் தொகையையும் காலத்தையும் அவனுக்குக் குறித்தார்; நிலத்தில் உள்ளவைகளின் மீது அவனுக்கு அதிகாரம் கொடுத்தார்.

4 எல்லா உயிரினங்களும் அவனுக்கு அஞ்சும்படி செய்தார். அவனும் மிருகங்கள் மேலும் பறவைகள் மேலும் அதிகாரம் செலுத்தினான்.

5 அவர் அவனிடத்திலிருந்து அவனைப் போலவே அவனுக்கு ஒரு துணைவியை உண்டாக்கினார்; அறிவையும் நாவையும் கண்களையும் காதுகளையும், நினைப்பதற்கு மனத்தையும் அவர்களுக்குக் கொடுத்தார்; அறிவின் ஒளியால் அவர்களை நிரப்பினார்.

6 ஞான அறிவையும் அவர்களுக்குத் தந்தார்; அவர்கள் இதயத்தை ஞானத்தினால் நிரப்பினார்; நன்மையையும் தீமையையும் அவர்களுக்குக் காண்பித்தார்.

7 தம் செய்கைகளின் மாட்சியை அவர்களுக்குக் காண்பிக்க அவர்கள் இதயங்களின் மேல் தமது கண் வைத்தார்.

8 தம் புனித பெயரை அவர்கள் கொண்டாடவும், அவர்கள் தம் செய்கைகளின் மாட்சியை வெளிப்படுத்துவதனால் தம் அரும் பெரும் செயல்களில் மகிமைப் படுத்தப்படவும் திருவுளம் கொண்டார்.

9 அவர் அவர்களுக்கு நன்னெறியை ஏற்படுத்தி வாழ்நாளின் ஒழுங்குக்கு அவர்களை உரிமையாளராக்கினார்.

10 அவர்களோடு நித்திய ஒப்பந்தம் செய்துகொண்டார்; தமது நீதியையும் தீர்மானங்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.

11 அவருடைய பெருமையின் மாட்சியை அவர்கள் கண்கள் கண்டன. அவர் குரலின் மேன்மையை அவர்கள் செவிகள் கேட்டன. மேலும் அவர்: எல்லா அக்கிரமத்திலிருந்தும் விலகுங்கள் என்று அவர்களுக்குச் சொன்னார்.

12 அவர்கள் ஒவ்வொருவருக்கும் அயலாரைப் பற்றிய கட்டளைகளை ஏற்படுத்தினார்.

13 அவர்கள் நடத்தைகள் எப்போதும் அவர் முன்பாக இருக்கின்றன; அவருடைய கண்களுக்கு அவை மறைந்தவை அல்ல.

14 அவர் ஒவ்வொரு நாட்டுக்கும் தலைவரை ஏற்படுத்தினார்.

15 கடவுளுடைய மக்களோ இஸ்ராயேல் என்பது வெளிப்படுத்தப்பட்டது.

16 அவர்களுடைய செயல்களெல்லாம் கதிரவனைப் போல் அவருக்கு முன் இருக்கின்றன. இடைவிடாது அவருடைய கண்கள் அவர்களுடைய செயல்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

17 அவர்களுடைய அக்கிரமத்தினால் கட்டளைகள் மறைபடுவதில்லை; அவர்களுடைய அக்கிரமங்கள் எல்லாம் கடவுளுக்கு முன்பாக இருக்கின்றன.

18 மனிதன் இடும் பிச்சை அவருக்கு முன்பாக ஒரு முத்திரையைப் போல் இருக்கின்றது. அவர் தம்முடைய கண்மணி போல் அவனுடைய நன் மனத்தைக் காப்பாற்றுவார்.

19 பிறகு எழுந்து, அவனவனுக்கு அவனவன் செய்ததற்குத் தக்கபடி தீர்ப்பிடுவார்; தீயோரை மண்ணுலகின் பாதாளத்தில் புதைப்பார்.

20 மனவருத்தப்படுகிறவர்களை மனந்திரும்பச் செய்வார்; பலவீனரைத் தேற்றி நிலை நிறுத்துவார்; உண்மையை அவர்கள் உடைமையாக நியமிப்பார்.

21 ஆண்டவரிடமாய்த் திரும்பி உன் பாவங்களை விட்டு விடு.

22 ஆண்டவர் முன் மன்றாடி உன் குற்றங்களைக் குறைத்து விடு.

23 ஆண்டவர்பால் திரும்பி உன் அநீதத்தினின்று விலகு. அக்கிரமத்தை வெறுத்துப் பகைப்பாயாக.

24 கடவுளுடைய நீதிச் செயல்களையும் தீர்மானங்களையும் அறிந்து, அவர் உனக்கு நியமித்த நிலையிலும், உன்னத கடவுளை நோக்கி வேண்டுவதிலும் நிலைத்திரு.

25 உயிரோடிருந்து கடவுளுக்கு வணக்கம் புரிகிறவர்களோடு புனித உலகின் பேற்றைப் பெறச் செல்.

26 அக்கிரமிகளுடைய பொய்மையில் நில்லாதே. மரணத்திற்கு முன்பே கடவுளை வாழ்த்து. இறந்தவனுடைய வாழ்த்து ஒன்றுமில்லாமை போல் ஒழிந்து போகின்றது. உயிருள்ள போது கடவுளை வணங்குவாய்.

27 உயிரும் உடல் நலமும் இருக்கும் போதே அவரைப் புகழ்ந்தேத்து. அவருடைய இரக்கத்தைக் கொண்டாடுவாய்.

28 தம்மிடத்தில் திரும்புகிறவர்கள் மீது ஆண்டவருடைய இரக்கமும் அவருடைய மன்னிப்பும் எவ்வளவோ மாட்சிமையுள்ளனவாய் இருக்கின்றன.

29 மேலும், அனைத்தும் மனிதரில் இருப்பது கூடாத காரியம். ஏனென்றால், மனிதனாய்ப் பிறந்தவன் அழியாதவன் அல்லன். வீண் பெருமையுள்ள தீச் செயல்களை அவன் விரும்புகின்றான்.

30 கதிரவனைவிட ஒளியுள்ளது எது? அதுவும் குறைவுபடுகிறது. மாமிசமும் இரத்தமும் நினைப்பதை விடக் கெடுதியானது எது? ஆனால், அது கண்டிக்கப்படும்.

31 வானத்தின் உன்னதத்தைக் கடவுள் காண்கிறார். மனிதர் அனைவரும் தூசியும் சாம்பலுமாய் இருக்கிறார்கள்.

அதிகாரம் 18

1 என்றும் வாழ்கிறவர் எல்லாவற்றையும் உண்டாக்கினார். கடவுள் ஒருவரே முற்றிலும் நீதியுள்ளவர். வெல்லப்படாத அரசராக அவரே என்றும் நிலைத்திருக்கிறார்.

2 அவருடைய படைப்புகளை வருணிக்க வல்லவன் யார்?

3 அவருடைய மகத்துவங்களைக் கண்டுபிடிப்பவன் யார்?

4 அவருடைய மகிமையின் மாட்சிமையைச் சொல்லிக் காண்பிப்பவன் யார்? அவருடைய இரக்கத்தை விவரித்துச் சொல்லுகிறவன் யார்?

5 குறைக்கவும் கூட்டவும் முடியாத கடவுளுடைய மகத்துவங்களைக் கண்டுபிடிப்பவர் ஒருவரும் இல்லை.

6 மனிதன் எல்லாவற்றையும் தான் கண்டுபிடித்து விட்டதாக நினைக்கும் போது தான் கண்டுபிடிக்கத் தொடங்குகிறான். அவன் தீர்மானம் செய்த பின் சந்தேகத்தினால் வருந்துவான்.

7 மனிதன் யார்? அவனால் உண்டாகும் இலாபம் என்ன? அல்லது, அவனால் உண்டாகும் நன்மை தான் என்ன? அல்லது தீமைதான் என்ன?

8 மனிதருடைய வாழ்நாட்களின் கணக்கு, மிஞ்சினால் நூறு ஆண்டுகளே. நித்தியத்துக்கு முன்பாக இவை கடலின் சிறு துளி போலவும், மணலின் ஒரு மணி அணுப் போலவும் சொற்பமானவைகளாய் இருக்கின்றன.

9 ஆதலால், கடவுள் அவர்கள் மீது பொறுமையாய் இருக்கிறார்; அவர்கள் மேல் தம் இரக்கத்தைப் பொழிகிறார்.

10 அவர்களது வீண் அகந்தையைக் கெடுதியானதென்று காண்கிறார்; அவர்களுடைய குறிக்கோளும் கெட்டது என்று அறிந்திருக்கிறார்.

11 ஆதலால், அவர்களிடத்தில் தம்முடைய மன்னிப்பை நிறைவாக்கினார்; அவர்களுக்கு நீதியின் வழியைக் காண்பித்தார்.

12 மனிதன் தன் அயலானுக்கு இரக்கம் காண்பிக்கிறான்; கடவுளுடைய இரக்கமோ எல்லாப் படைப்புகள் மேலும் உண்டு.

13 இடையன் தன் மந்தையை நடத்துவது போல, இரக்கமுள்ள கடவுள் மனிதருக்குப் போதிக்கிறார்; அவர்களைத் தண்டிக்கிறார்.

14 தமது இரக்கத்தின் நெறியைக் கடைப்பிடிப்பவன் மேலும், தம்முடைய தீர்மானங்களுக்கு உட்படுகிறவன் மேலும் அவர் இறங்குகிறார்.

15 மகனே, நன்மை செய்யும்போது முறையிடாதே. பிச்சை இடும் போது கெடுதியான வார்த்தைக்கு இடம் கொடாதே.

16 பனி வெப்பத்தைக் குளிர்ச்சியாக்குவதில்லையோ? அதுபோலவே நல்ல வார்த்தை பிச்சையை விட மேலானது.

17 இட்ட பிச்சையை விட நல்ல வார்த்தை உண்மையாகவே உயர்ந்ததன்றோ? ஆனால், அவ்விரண்டும் நீதிமானிடமே உண்டு.

18 மூடன் கடும் சொல் சொல்லுவான். தீநெறியான் இட்ட பிச்சை கண்களை உலரச் செய்கின்றது.

19 தீர்ப்பிடு முன் முதலில் நீதியைக் கற்றுக் கொள். பேசுவதற்கு முன் அறிந்து கொள்.

20 நோய்க்கு முன் மருந்து சாப்பிட்டுக் கொள். தீர்மானத்திற்கு முன் உன்னையே ஆராய்ந்து பார்; கடவுள் முன்னிலையில் இரக்கத்தைக் காண்பாய்.

21 நோய் வருமுன்பே உன்னைத் தாழ்த்தி நட. நோயின் போது உன் நன்னெறியைக் காண்பி.

22 இடைவிடாமல் செபிப்பதை விட்டுவிடாதே. மரணம் வரையிலும் நீதியைத் தேடுவதில் தயங்காதே. ஏனென்றால், கடவுளுடைய வெகுமதி நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும்.

23 செபிப்பதற்கு முன் உன் ஆன்மாவைத் தயார் செய்; கடவுளைச் சோதிக்கும் மனிதனைப் போல் இராதே.

24 இறுதி நாளில் அவர் கொள்ளும் கோபத்தையும், அவர் தம் முகத்தைத் திருப்பி நீதியளிக்கும் காலத்தையும் நினைத்துக் கொள்.

25 இன்பம் துய்க்கும் போது நீ பட்டிருந்த துன்பத்தை மறவாதே. வறுமையால் வருந்தும் போது, நீ சுவைத்த இன்பத்தை மறவாதே.

26 ஏனென்றால், காலை முதல் மாலை வரையிலும் காலம் மாறிவரும்; இவைகளெல்லாம் கடவுள் முன்னிலையில் நடத்தப்படுகின்றன.

27 ஞானி எல்லாவற்றிலும் பயந்து நடப்பான். பாவச் சமயமான நாட்களில் சோம்பலை அகற்றுவான்.

28 புத்திக் கூர்மையுள்ளவன் ஞானத்தைக் கண்டுகொள்கிறான்; அதைக் கண்டவனுக்குப் புகழ்ச்சி செலுத்துகிறான்.

29 அறிவாளிகளுடைய ஞானம் அவர்கள் வார்த்தையில் வெளிப்படுத்தப்படும். அவர்கள் உண்மையையும் நீதியையும் கண்டுபிடித்து, நீதி மொழிகளையும் நியாயங்களையும் சரமாரியாய்ப் பொழிகிறார்கள்.

30 ஆசையுணர்வுகளுக்கு இடம் கொடாதே. அவைகளை உன் மனத்தினின்று. அகற்றி விடு.

31 உன் ஆன்மாவில் உன் ஆசையுணர்வுகளுக்கு இடம் கொடுப்பாயானால், அவை உன்னைப் பற்றி உன் பகைவர் மகிழ்வடையும்படி செய்யும்.

32 அற்பமான கலகக் கூட்டங்களில் முதலாய் விருப்பம் கொள்ளாதே; ஏனென்றால், அவைகளில் குற்றம் தடையில்லாமல் இருக்கும்.

33 உனக்கு உன் பையில் ஒன்றுமில்லாத போது, விருந்துச் செலவுக்காகக் கடன் வாங்கி வறியவனாகாதே; ஏனென்றால், உன் உயிருக்கே நீ பகையாளி ஆவாய்.

அதிகாரம் 19

1 குடிகாரனான தொழிலாளி செல்வனாகப் போவதில்லை. அற்பக் காரியங்களை அசட்டை செய்கிறவன் படிப்படியாக விழுவான்.

2 மதுவும் பெண்களும் ஞானிகளை வழுவச் செய்கின்றனர்; அறிவாளிகளை அவமானப்படுத்துகின்றனர்.

3 வேசிகளோடு சேர்கிறவன் தீ நெறியாளன் ஆவான். அழுகலும் புழுக்களும் அவனைத் தங்கள் உரிமையாக்கிக் கொள்ளும். அவன் பெரிய எடுத்துக்காட்டாக விளங்குவான். அவன் ஆன்மா கணக்கினின்று எடுக்கப்படும்.

4 உடனே நம்புகிறவன் மனத்தில் கவனக்குறைவுள்ளவன்; அதனால் அவன் மதிப்பிற்குக் குறைவு ஏற்படும். அவன் தன் ஆன்மாவிற்கே தீங்கு செய்பவன் போலும் எண்ணப்படுவான்.

5 அக்கிரமத்தில் மகிழ்ச்சி கொள்கிறவன் நிந்திக்கப்படுவான். கண்டிப்பை வெறுக்கிறவனின் வாழ்நாள் குறைவுபடும். வீண்பேச்சுகளைப் பகைக்கிறவன் கெடுதியை நீக்குகின்றான்.

6 தன் ஆன்மாவிற்குத் துரோகமாய்ப் பாவம் செய்கிறவன் மனவருத்தமடைவான். தீயகுணத்தில் விருப்பம் கொள்கிறவன் நிந்திக்கப்படுவான்.

7 கெடுதியும் கடுமையுமுள்ள வார்த்தையை மறுபடியும் சொல்லாதே; அதனால் உனக்குக் குறையொன்றும் வராது.

8 நண்பனுக்கும் பகைவனுக்கும் உன் மனத்திலிருப்பதை வெளியிடாதே. நீ குற்றம் செய்திருந்தால் அதை வெளிப்படுத்தாதே.

9 ஏனென்றால், அவர்கள் நீ சொல்வதைக் கேட்டு, நீ செய்வதைப் பரிசோதித்து, உன் குற்றத்தை மன்னிப்பது போலக் காட்டி உன்னைப் பகைப்பார்கள்; இவ்வாறே உன் காரியத்தில் எப்போதும் நடந்து வருவார்கள்.

10 மற்றவனுக்கு விரோதமாய்க் கேள்விப்பட்டதை உன் உள்ளத்தில் அடக்கி வைத்துக் கொள். அப்படிச் செய்வதனால் உனக்குக் கெடுதி நேரிடாதென்று நம்பு.

11 பிள்ளை பெறுகிற பெண் அடிக்கடி மூச்சு விடுவது போல, அறிவிலி ஒரு வார்த்தையினின்று வேறுபல வார்த்தைகளைப் பிறப்பிக்கிறான்.

12 மூடனின் இதயத்தில் வார்த்தை சதையுள்ள தொடையில் பதிக்கப்பட்ட அம்பைப் போன்றது.

13 உன் நண்பனுக்கு அறிவுரை கூறு; ஏனென்றால் அவன் சில வேளை கண்டுபிடியாமல், நான் குற்றம் செய்ததில்லை என்பான். அவன் செய்திருந்தால், திரும்பவும் செய்யாதபடி கண்டனை செய்.

14 மற்றவனுக்கும் அறிவுரை கூறு. அவன் சில வேளை கொடும் சொல் சொல்லியிருக்க மாட்டான்; சொல்லியிருந்தால், மறுபடியும் சொல்லாதபடிக்கு அறிவுரை கூறு.

15 நண்பனுக்கு அறிவுரை கூறு. ஏனென்றால் குறை அடிக்கடி நேரும்.

16 சொல்வதெல்லாம் நம்பாதே. நாவினால் தவறிப் போகாதவன் இதயத்திலும் தவறுவதில்லை.

17 தன் நாவினால் தவறிப் போகாதவன் யார்? அயலானை அச்சுறுத்துவதற்கு முன் அவனுக்கு அறிவுரை கூறு.

18 உன்னத கடவுளுக்கு நீ பயப்படுவாயாக; ஏனென்றால், எல்லா ஞானமும் தெய்வ பயத்தில் அடங்கியிருக்கிறது. அதுவே கடவுளுக்குப் பயந்து நடக்கக் கற்பிக்கின்றது. ஞானத்தின் முழுமையில் தான் கட்டளையும் ஒழுங்கும் அடங்கியுள்ளன.

19 அக்கிரமத்தின் நெறி ஞானமன்று. பாவிகளின் நடத்தை விவேகமன்று.

20 அருவருக்கப்படத் தக்கதும், ஞானத்தில் குறைந்து போகும் மூடத்தன்மையுள்ளதுமான அக்கிரமம் உண்டு.

21 தெய்வ பயம் இருந்து ஞானம் குறைந்து போய் அறிவு மட்டமாய் இருக்கும் மனிதன், அறிவு மிஞ்சிப் போய் உன்னத கடவுளின் கட்டளைகளை மீறுகிறவனை விட மேலானவன்.

22 தப்பாது நிறைவேறும் நுண்ணுணர்வு அக்கிரமமானது.

23 உண்மையைத் தெரிவிக்கத் தெளிவான வார்த்தை சொல்லுகிறவனும் உண்டு; உள்ளம் கபடு நிறைந்திருக்கக் கபடான எண்ணத்தோடு தன்னைத் தாழ்த்துகிறவனும் உண்டு.

24 மிதமிஞ்சின தாழ்ச்சியில் தன்னை அதிகமாய்க் கீழ்ப்படுத்துகிறவனும் உண்டு; தன் தலையைத் தாழ்த்தி, அறியாத காரியங்களைப் பாராதவன் போல நடிப்பவனும் உண்டு.

25 ஆனால், அவன் தன் பலக் குறைவினால் தீமை செய்யத் தவறினாலும், தீமை செய்யச் சமயம் காண்பானேயாகில் அவன் தீமை செய்வான்.

26 மனிதன் அவன் தன் பார்வையைக் கொண்டு அறியப்படுகிறான். அறிவாளி அவன் தன் முகத் தோற்றத்தைக் கொண்டு அறியப்படுகிறான்.

27 ஒருவன் அணிந்திருக்கும் உடையும், அவன் சிரிப்பும், அவன் நடையும் அவன் எத்தகையவன் என்று தெரியப்படுத்துகின்றன.

28 அகந்தை படைத்தவனுடைய கோபத்தினால் உண்டாகும் கண்டிப்பு பொய்யானது; நீதியானதென்று தெளிவுபடாத தீர்மானமாயிருக்கின்றது. மௌனமாய் ஒருவன் இருப்பின், அவனே விவேகி.

அதிகாரம் 20

1 கோபம் கொள்வதை விடக் கண்டித்து அறிவுரை சொல்வதும், குற்றத்தை ஏற்றுக்கொள்கிறவன் நியாயம் சொல்லும் போது அவனைத் தடை செய்யாதிருப்பதும் எவ்வளவோ நலமான காரியம்!

2 அண்ணகனின் ஆசையுணர்வு சிறுமியின் கன்னிமையை அழிக்கும்.

3 அதுபோலவே நீதியற்ற தீர்ப்பைச் சொல்லுகிறவனும் அக்கிரமமான நீதி செலுத்துகிறான்.

4 கண்டிக்கப்பட்ட போது மனவருத்தம் காண்பிப்பது எவ்வளவோ நலமானது. அப்போது தான் மனம் பொருந்திச் செய்யும் குற்றத்தைத் தவிர்ப்பாய்.

5 ஞானியாகக் கண்டு ஏற்றுக் கொள்ளப்படுகிறவன் மௌனமாய் இருக்கிறான். பேசுகிறதற்குத் துடிக்கிறவன் பகைக்கப்பட வேண்டியவன்.

6 பேசும் திறமை இல்லாததால் மௌனமாய் இருக்கிறவனும் உண்டு; தகுந்த காலம் அறிந்து மௌனமாய் இருக்கிறவனும் உண்டு.

7 ஞானமுள்ள மனிதன் சமயம் கிடைக்குமட்டும் மௌனமாய் இருப்பான். அற்பனும் அவிவேகியுமோ சமயத்திற்குக் காத்திரார்.

8 பற்பல வார்த்தைகளைப் பயன்படுத்துகிறவன் தன் ஆன்மாவைக் காயப்படுத்துகிறான். அநியாயமாய் அதிகாரத்தை அபகரித்துக் கொள்கிறவன் பகைக்கப்படுவான்.

9 தீநெறியாளனான மனிதனுக்குத் தீமைகளில் வெற்றி உண்டு. ஆனால், அந்த வெற்றியே அவனுக்குக் கேடாகின்றது.

10 பயனற்ற ஈகையும் உண்டு; இரு மடங்கு வெகுமதி அளிக்கக் கூடிய ஈகையும் உண்டு.

11 மகிமையைப் பற்றியே ஒருவன் இழிவடைகிறான். தாழ்மையினாலேயே ஒருவன் தலையெடுக்கிறான்.

12 உதவாத பலவற்றைச் சொற்ப விலைக்கு வாங்கிப் பிறகு ஏழு மடங்கு அதிகமாய்ச் செலவு செய்கிறவனும் உண்டு.

13 ஞானி தன் வார்த்தைகளினால் தன்னைத் தானே பிறருக்கு விருப்பமாக்கிக் கொள்கிறான். மூடருடைய பரிவுகள் வீணாகின்றன.

14 அறிவிலியினுடைய ஈகை உனக்கு விருப்பப்படாது. ஏனென்றால், அவனுக்கு ஏழு கண்கள் உண்டு.

15 கொஞ்சமாய்க் கொடுப்பவன் வெகுவாய்ச் சொல்லிக் காட்டுவான். அவன் வாய் திறப்பதே நெருப்பு மூட்டுவதாகின்றது.

16 ஒருவன் இன்றைக்குக் கடன் கொடுத்து நாளைக்குக் கேட்பான். இத்தகைய மனிதன் பகைக்கு உகந்தவன்.

17 மூடனுக்கு நண்பன் இல்லை. அவன் நற்செயல்களினால் யாருக்கும் விருப்பு உண்டாவதில்லை.

18 ஏனென்றால், அவன் அப்பத்தை உண்கிறவர்கள் பொய்யான நாவுள்ளவர்கள். அவர்கள் எத்தனை முறை எவ்வளவு அவனைக் கேலி செய்கிறார்கள்!

19 ஏனென்றால், தான் மீதி வைக்க வேண்டியதையும், அப்படி மீதி வைக்கத் தேவையில்லாததையும் தகுந்த விவேகத்துடன் செலவிடவில்லை.

20 பொய்யான நாவினால் வரும் கேடு உயர இருந்து கட்டாந்தரையில் விழுகிறவனுக்கு ஒத்தது. இவ்வாறே தீயோருடைய இழிவு வெகு விரைவில் வரும்.

21 ஆத்திரக்காரனான மனிதன் வீணான கதையைப் போல நெறியற்றவர்களுடைய வாயில் அடிக்கடி வருவான்.

22 மூடனுடைய வாயில் நீதிமொழி நிந்திக்கப்படும். ஏனென்றால், அதைக் காலம் அறிந்து அவன் சொல்வதில்லை.

23 வசதியில்லாததனால் குற்றம் செய்யத் தவறுகிறவன் உண்டு. அவன் அயர்ந்திருக்கையில் தூண்டப்படுவான்.

24 வெட்கத்தை முன்னிட்டுத் தன் ஆன்மாவை இகழ்கிறவனும் உண்டு. அவிவேகியான மனிதன் அதைப் போக்கடிக்கிறான்; மனிதரின் முகத் துதிக்காகத் தன்னை இழந்து போகிறான்.

25 வெட்கத்தினால் நண்பனுக்கு வாக்குறுதி கொடுக்கிறவன் காரணமின்றி அவனைப் பகைவனாக்கிக் கொள்கிறான்.

26 மனிதனிடம் பொய்மை நிந்தைக்குரியது. ஆனால், தீநெறியாளர் வாயில் அது ஓயாமல் வரும்.

27 அடிக்கடி பொய் சொல்லுகிறவனை விடத் திருடன் தாவிளை. ஆனால், இருவருமே அழிவார்கள்.

28 பொய்யருடைய நடத்தை மேன்மை அற்றதாய் இருக்கின்றது. அவர்களிடம் வெட்கம் எப்போதும் குடி கொண்டிருக்கிறது.

29 ஞானி வார்த்தைகளினால் தன்னை வெளிப்படுத்துவான். விவேகி பெரியோருக்குப் பிரியப்படுவான்.

30 தன் நிலத்தில் பாடுபடுகிறவன் விளைச்சல்களின் குவியலைச் சேர்ப்பான். நீதியை நிறைவேற்றுகிறவன் உயர்த்தப்படுவான். பெரியோருக்குப் பிரியப்படுகிறவன் அக்கிரமத்தைத் தவிர்ப்பான்.

31 கையூட்டுகளும் வெகுமதிகளும் நீதிபதிகளுடைய கண்களைக் குருடாக்குகின்றன. அவை ஊமையனைப் போல் அவர்கள் கண்டனங்களை அகற்றும்.

32 மறைக்கப்பட்ட ஞானத்தாலும் காணப்படாத செல்வத்தாலும் வரும் பயன் என்ன?

33 தன் ஞானத்தை மறைக்கிறவனை விடத் தன் மூடத்தனத்தை மறைக்கிறவன் மேலானவன்.

அதிகாரம் 21

1 மகனே, பாவம் செய்தாயோ, திரும்பவும் செய்யாதே. ஆனால், செய்தவைகள் உனக்கு மன்னிக்கப்படும்படி மன்றாடு.

2 பாம்பை விட்டு விலகுவது போலப் பாவத்தை விட்டு விலகு. அவைகளின் அண்மையில் போனாயானால், அவைகள் உன்னைத் தம் வயப்படுத்தும்.

3 சிங்கத்தின் பற்களைப் போல் அவற்றின் பற்கள் மனிதருடைய ஆன்மாவைக் கொலைப்படுத்தும்.

4 எல்லா அக்கிரமங்களும் இரு புறமும் கூர்மையான கத்தி போல் இருக்கின்றன. அதன் காயங்கள் ஆறமாட்டா.

5 நிந்தனையும் அநியாயங்களும் செல்வத்தை அழிக்கின்றன. திரண்ட செல்வமுள்ள குடும்பம் அகந்தையால் கெடும். இவ்வண்ணமே அகந்தையுள்ளவனுடைய சொத்து அழிந்து போகும்.

6 வறியவனது வேண்டுதல் அவன் வாயினின்று கடவுளுடைய செவிகள் வரையிலும் சேரும்; அவனுக்கு நியாயம் விரைவில் கிடைக்கும்.

7 கண்டனத்தைப் பகைக்கிறவன் பாவியினுடைய காலடியைப் பின்பற்றுகிறான். கடவுளுக்குப் பயந்து நடக்கிறவன் மனந்திரும்புகிறான்.

8 துணிவுள்ளவனுடைய வலுத்த நாவு தூரத்தினின்றே அறியப்படுகின்றது. அறிவாளி அதினின்று தப்பிக் கொள்ளும் வழி அறிவான்.

9 பிறருடைய செலவில் தன் வீட்டைக் கட்டுகிறவன் மாரிகாலத்தில் தன் கற்களை அடுக்குகிறவன் போல் இருக்கிறான்.

10 பாவிகளுடைய கூட்டம் சேர்த்து வைக்கப்பட்ட சிம்புகளைப் போலவும், அவர்களுடைய முடிவோ மூட்டப்பட்ட நெருப்பைப் போலவும் இருக்கின்றன.

11 பாவிகளின் வழி கற்கள் பரப்பப்பட்ட தரையாய் இருக்கின்றது. ஆனால் அவர்களுக்கு முடிவில் நரகம், இருள் ஆகிய தண்டனைகளே இருக்கின்றன.

12 நீதியைக் காப்பாற்றுகிறவன் அதன் நெறியைக் கடைப்பிடிப்பான்.

13 ஞானமும் அறிவும் தெய்வ பயத்தின் பலன்.

14 நன்மையான காரியங்களில் ஞானியாய் இராதவன் உயர்ந்தவனாக மாட்டான்.

15 தீமையிலும் ஒருவித ஞானம் மிகுந்திருக்கிறது. மனக்கசப்பு உள்ள இடத்தில் புரிந்து கொள்ளும் தன்மை இராது.

16 ஞானியினுடைய கலை வெள்ளத்தைப் போல மிகுந்திருக்கும். அவனுடைய யோசனை வாழ்வின் ஊற்றைப் போல நிலைத்திருக்கும்.

17 மூடனுடைய இதயம் உடைந்த பாத்திரத்தைப் போல் இருக்கின்றது. அவன் ஞானத்தை முழுவதும் அடக்கி வைத்திரான்.

18 அறிவுள்ளவன் எந்த ஞானமான வார்த்தையைக் கேட்கிறானோ அதைப் புகழ்ந்து, அதைத் தன்னிடம் சேர்த்துக் கொள்வான். தீநெறியாளன் அதைக் கேட்டால், அது அவனுக்கு விருப்பப்படாது. அவன் அதைத் தனக்குப் பின்னால் எறிந்து விடுவான்.

19 மூடனுடைய உரையாடல் வழியில் பாரமூட்டையைப் போல இருக்கின்றது. ஆனால், அறிவாளியின் பேச்சு விரும்பப்படுகின்றது.

20 விவேகியினுடைய வார்த்தை சபையில் தேடப்படுகின்றது. அவனுடைய வார்த்தைகளை அவர்கள் தங்கள் இதயங்களில் நினைப்பார்கள்.

21 ஞானம் மூடனுக்கு இடிந்து போன வீட்டைப் போல் இருக்கின்றது. அறிவிலியினுடைய கலை விபரீத வார்த்தைகளில் அடங்கியிருக்கின்றது.

22 கால்களில் தடைகளும், வலக் கையில் விலங்குகளும் போல மூடனுக்கு நற்போதனை இருக்கின்றது.

23 மூடன் சிரிக்கையில் உரத்த சத்தம் செய்கிறான். விவேகியோ ஓசைபடாமல் அரிதாய்ச் சிரிக்கிறான்.

24 நன்னெறி விவேகிக்குப் பொன் அணி போலவும், வலக்கையின் காப்புப் போலவும் இருக்கின்றது.

25 மூடனுடைய கால் அயலானுடைய மனையில் எளிதில் புகுகின்றது. ஆனால், பட்டறிவு உடைய மனிதன் பலவானைச் சந்திப்பதற்கு நாணம் கொள்கிறான்.

26 மூடன் சன்னல் வழியாக வீட்டிற்குள் எட்டிப் பார்ப்பான். அறிவுள்ளவனோ வெளியில் நிற்பான்.

27 கதவண்டை ஒற்றுக் கேட்பது மனிதனுடைய மூடத்தனம். விவேகியோ அதை மதிப்புக் குறைவென்று எண்ணுவான்.

28 விவேகமற்றவர்களுடைய உதடுகள் மூடத்தனமான காரியங்களைச் சொல்கின்றன. விவேகிகளுடைய வார்த்தைகளோ தராசில் நிறுக்கப்படுகின்றன.

29 மூடர்களுடைய இதயம் அவர்களுடைய வாயில் இருக்கின்றது. ஞானிகளுக்கோ அவர்களுடைய வாய் இதயத்தில் இருக்கின்றது.

30 பாவி பேயைச் சபிக்கும் போது தன் ஆன்மாவையே சபித்துக் கொள்கிறான்.

31 அவதூறு சொல்கிறவன் தன் ஆன்மாவை அசுத்தப்படுத்துகிறான். அவன் அனைவராலும் பகைக்கப்படுவான்; அவனுடன் தங்குகிறவனும் பகைக்கு உகந்தவனாவான். ஆனால் மௌனமாய் இருப்பவனும் அறிவாளி என்று மதிக்கப்படுவான்.

அதிகாரம் 22

1 சோம்பேறி சகதி நிறை கல்லால் அடிபட்டவன். எல்லாரும் அவன் மீது நிந்தனையாய்ப் பேசுவார்கள்.

2 சோம்பேறி எருதுகளின் சாணத்தால் அடிபட்டவன். அவனைத் தொட்டவன் எவனும் தன் கைகளை உதறுவான்.

3 நெறிகெட்ட மகனால் தந்தைக்கு வெட்கமுண்டாகும். அத்தகைய மகளோ அவமதிப்பிற்கு உள்ளாவாள்.

4 விவேகமுள்ள பெண் கணவனுடைய செல்வம். ஆனால், வெட்கம் கெட்டவளோ தன் தந்தைக்கு அவமானம் வருவிக்கிறாள்.

5 துடுக்குள்ளவள் தந்தையையும் கணவனையும் வெட்கத்திற்கு உள்ளாக்குகிறாள்; அவள் அக்கிரமிகள் முன்பாகத் தோற்றவள் அல்லள்; ஆனால், இரு திறத்தாராலும் அவமதிக்கப்படுவாள்.

6 சமயத்திற்குப் பொருந்தாத உரையாடல் துக்க வீட்டில் பாடுவது போலாகும். ஆனால், ஞானமோ எப்போதும் தண்டனையையும் போதனையையும் பயன்படுத்துகின்றது.

7 மூடனுக்கு அறிவுரை கூறுபவன் உடைந்து போன ஓடுகளை ஒட்டுகிறவன் போலாம்.

8 செவிகொடாதவனிடம் பேசுகிறவன் ஆழ்ந்த தூக்கத்தில் அயர்ந்து கிடப்பவனை எழுப்புகிறவன் போலாம்.

9 மூடனுக்கு ஞானத்தைப் போதிக்கிறவன் உறங்குகிறவனோடு பேசுகிறான். பேச்சு முடிவில் அவன் உன்னை நோக்கி: இவன் யார் என்பான்.

10 இறந்தவனைப் பற்றிக் கண்ணீர் விடு; ஏனென்றால் அவனுடைய ஒளி அவிந்து போனது. மூடனைப் பற்றி அழு; ஏனென்றால், அவன் அறிவு அற்றுப் போனது.

11 இறந்தவனைப்பற்றிக் கொஞ்சமாய் வருத்தப்படு; ஏனென்றால், அவன் இளைப்பாற்றி அடைந்தான்.

12 ஆனால், நெறிகெட்ட மூடனுடைய வாழ்க்கையோ மரணத்தை விட மிகக் கெடுதியாய் இருக்கின்றது.

13 இறந்தவனுடைய துக்கம் ஏழு நாள் வரைக்குமே; மூடனுடையவும் அக்கிரமியினுடையவும் துக்கமோ அவர்கள் வாழ்நாட்களெல்லாம்.

14 மூடனோடு அதிகமாய்ப் பேசாதே. அறிவற்றவனோடு சேராதே.

15 உனக்கு இடையூறு உண்டாகாதபடி அவனிடமிருந்து உன்னைக் காப்பாற்றிக் கொள்; அவன் பாவத்தால் நீ அழுக்கடையமாட்டாய்.

16 அவனை விட்டு அகன்று போனால், நீ கலக்கமற்றவனாய் இருப்பாய்; அவன் மூடத்தனத்தால் நீ துன்பம் அடையமாட்டாய்.

17 ஈயத்தை விட அதிகக் கனமானது என்ன? மூடன் என்பதை விட அவனுக்கு வேறு பெயர் என்ன?

18 விவேகமற்ற மனிதனையும் மூடனையும் அக்கிரமியையும் சகிப்பதை விட, மணலையும் உப்பையும் இரும்புத் துண்டையும் அதிக எளிதாய்ச் சுமக்கலாம்.

19 ஒரு கட்டிடத்தின் அடித்தளத்தில் ஒன்றாய்க் கட்டிப் போடப்பட்ட மரக்கட்டு அவிழ்ந்து போவதில்லை. அவ்வண்ணமே, நல்ல யோசனையின் எண்ணத்தில் உறுதிப்பட்ட இதயமும் தளர்ந்து போகாது.

20 அறிவாளியின் மனவுறுதி எக்காலத்திலும் அச்சத்தினால் அசைக்கப்படாது.

21 ஆனால், உயரமான இடத்தில் கட்டப்பட்ட பலகையும், வேகாத செங்கல்லாலான சுவரும் கொடுங் காற்றின் முன் எப்படி நில்லாதோ,

22 அப்படியே மூடனுடைய கோழை மனம் கொடிய அச்சத்தால் அசைக்கப்படும்.

23 மூடனுடைய கோழை மனம் எப்பொழுதும் காரணமில்லாமல் அஞ்சிக்கொண்டிருக்கும்; அதற்கு மாறாகக் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறவன் நியாயத்தோடு அஞ்சி நடப்பான்.

24 கண்ணைக் குத்திக் கொள்கிறவன் கண்ணீர் வரச் செய்கிறான். அது போலவே, இதயத்தைக் குத்துகிறவனும் துன்பத்தை உண்டாக்குகிறான்.

25 பறவைகளின் மேல் கல்லெறிகிறவன் அவைகளை ஓட்டி விடுகிறான். அது போலவே, நண்பனை நிந்திக்கிறவனும் நட்பை ஒழித்து விடுகிறான்.

26 நண்பனுக்கெதிராக நீ கத்தி உருவியிருந்த போதிலும், அவநம்பிக்கைப்படாதே; ஏனென்றால், நட்பு திரும்பவும் உண்டாகலாம்.

27 துன்பமும் வருத்தமும் தரும் வார்த்தைகளை நண்பனுக்குச் சொல்லியிருந்தாலும், அஞ்சாதே; ஏனென்றால், மீண்டும் சமாதானம் ஏற்படலாம். ஆனால், மானக்குறைவான பேச்சுகள், அவதூறு, அகந்தை பாராட்டுதல், இரகசியங்களை வெளிப்படுத்தல், கபடான தந்திரங்கள்- இவைகளை- நேரவிட்டிருந்தால், நண்பன் உன்னை வெறுத்து விலகுவான்.

28 உன் நண்பனுக்கு உண்டாகும் செல்வாக்கில் அவனோடு மகிழ்ச்சி அடையும்படியாய், அவன் வறுமையிலும் அவனிடம் பிரமாணிக்கமாய் இரு.

29 அவனுடைய துன்ப காலத்திலும் அவனிடம் பிரமாணிக்கமாய் நிலைத்திரு; அவன் மகிழ்ச்சிக்கும் பங்காளியாவாய்.

30 காளவாய் நெருப்புக்கு முந்தி ஆவியும், நெருப்பு காணப்படுமுன் புகையும் எழும்புவது போல், இரத்தப் பழிக்கு முன் சாபங்களும் நிந்தைகளும் அச்சுறுத்தல்களும் உண்டாகும்.

31 நண்பனுக்கு மரியாதை செய்ய நான் கூச்சப்பட மாட்டேன்; அவனுக்கு முன்பாக நான் ஒளிந்து கொள்ள மாட்டேன். அவன் பொருட்டு எனக்கு நட்டமுண்டானாலும் அதை நான் பொறுத்துக் கொள்வேன் என்று,

32 சொல்லக் கேட்கிற எவனும் அவன் காரியத்தில் எச்சரிக்கையாய் நடந்து கொள்வான்.

33 என் வாயால் எனக்கு நட்டம் வராதபடிக்கும், என் உதடுகள் உரைக்கும் வார்த்தைகளில் நான் சிக்கிக் கொள்ளாத படிக்கும், என் வாய்க்குக் காவலும், என் உதடுகளுக்கு உடைபடா முத்திரையும் போடுகிறவன் யார்?

அதிகாரம் 23

1 தந்தையாகிய கடவுளே, என் வாழ்வின் ஆண்டவரே, என் வார்த்தையின் அவிவேகத்தில் அகப்படும்படி என்னைக் கைவிடாதீர்; அதில் சிக்கிக் கொள்ளாதபடிக்கு என்னைக் காப்பாற்றியருளும்.

2 என் அறிவீனங்களைக் கண்டித்து, என் அக்கிரமங்கள் அதிகரிக்காதபடிக்கு என் அறிவுக்கு அச்சுறுத்துகிறவன் யார்? என் மன நினைவுகளுக்கும் வரம்பு கட்டுகிறவன் யார்?

3 என் அறிவீனங்கள் அதிகரிக்காதபடிக்கும், என் குற்றங்கள் பெருகாதபடிக்கும், என் பாவங்கள் மிகுதியாகாதபடிக்கும், என் எதிரிகள் முன்பாக நான் விழாதபடிக்கும், என் பகைவர் என்னைப்பற்றி மகிழாதபடிக்கும் எனக்கு உதவுகிறவன் யார்?

4 தந்தையாகிய கடவுளே, என் வாழ்வின் ஆண்டவரே, அவர்கள் விருப்பத்துக்கு என்னைக் கையளியாதேயும்.

5 என் கண்களின் பெருமிதத்தை எனக்குக் கொடாதேயும்; எல்லா ஆசைகளையும் என்னிடமிருந்து அகற்றும்.

6 உண்டிப் பிரியத்தையும் என்னிடமிருந்து நீக்கிவிடும். ஆசையுணர்வின் செயல்கள் என்னை அணுகாதிருக்கட்டும். நாணமற்றதும் அவிவேகமுள்ளதுமான ஆன்மாவின் அக்கிரமங்களுக்கு என்னைக் கையளியாதேயும்.

7 மக்களே, வாயடக்கம் பற்றிய போதகத்திற்குச் செவிகொடுங்கள். அதை காப்பவன் உதடுகளால் அழியமாட்டான். அக்கிரமச் செயல்களில் விழமாட்டான்.

8 பாவி தன் வீண் பெருமிதத்தினால் கண்டுகொள்ளப்படுவான். அகந்தையுள்ளவனும் அவதூறு பேசுகிறவனும் அவைகளால் குற்றத்திற்கு ஆளாவார்கள்.

9 உன் வாய் ஆணையிடுவதற்குப் பழகாதிருக்கக்கடவது; ஏனென்றால், அதனால் குற்றங்கள் பல நேரிடும்.

10 கடவுளுடைய பெயர் இடைவிடாமல் உன் வாயில் இராதிருக்கக் கடவது. புனிதருடைய பெயர்களையும் வீணில் சொல்லாதே; ஏனென்றால், குற்றத்திற்கு ஆளாவாய்.

11 இடைவிடாமல் வதைக்கப்படும் அடிமையிடத்தில் அவன் பட்ட வாதைகளின் அடையாளம் எப்பொழுதும் காணப்படுமாப்போல், ஆணையிடுபவனும் கடவுளை நிந்திப்பவனும் முழுதும் சுத்தமாக மாட்டார்கள்.

12 அதிகமாய் ஆணையிடும் மனிதன் அக்கிரமத்தால் நிரப்பப்படுவான். அவன் இல்லத்தினின்று பொல்லாப்பு அகன்று போகாது.

13 ஒருவன் ஆணையின்படி நடவாதிருப்பின், அவன் குற்றம் அவன் மீது இருக்கும். அவன் யாதொன்றும் அறியாதவன் போல நடப்பானேயாகில், இருவிதமாய்க் குற்றவாளியாகிறான்.

14 பொய் ஆணையிடுவானாயின், அவன் மன்னிக்கப்படமாட்டான்; அவன் குடும்பமும் தண்டனையால் நிரப்பப்படும்.

15 மரண தண்டனைக்கு உகந்ததான வேறொரு வார்த்தையும் உண்டு. யாக்கோபு சந்ததியில் அது காணப்படாதிருக்கக்கடவது.

16 ஏனென்றால், புண்ணியவான்களிடம் இவையெல்லாம் ஒருபோதும் காணப்படா. அவர்கள் இந்தப் பாவங்களில் சிக்கிக் கொள்ள மாட்டார்கள்.

17 நெறிகெட்ட பேச்சில் உன் வாய் பழகாதிருக்கக்கடவது; ஏனென்றால், அதில் பாவமான வார்த்தை உண்டு.

18 பெரியோருடைய சபையில் நீ இருந்தாலும், உன் தாய் தந்தையரை நினைத்துக் கொள்.

19 ஏனென்றால், சிலவேளை அவர்கள் பார்க்க, கடவுள் உன்னை மறந்துபோவார்; நீயும் உனக்கு உண்டான பெரியோர் கூட்டுறவால் மதியீனமடைந்து நிந்திக்கப்படுவாய். அப்போது நீ: நான் பிறவாதிருந்தால் நலம் என்பாய்; உன் பிறந்த நாளையும் சபிப்பாய்.

20 அகந்தை மொழிகளைச் சொல்லப் பழக்கப்பட்ட மனிதன் ஒரு போதும் திருந்துவதில்லை.

21 இருவித மனிதர் பாவங்களில் மிகுந்திருக்கிறார்கள்; மூன்றாவது விதத்தார் கோபமும் அழிவும் சம்பாதித்துக் கொள்கிறார்கள்.

22 நெருப்பைப் போன்ற பேராசையால் எரிகிற ஆன்மா நிறைவு அடையாது.

23 உடலின் தீய ஆசையுணர்வுகளுக்குத் தன்னை அளிக்கும் நெறிகெட்டவன், இவைகளின் வேகம் தணியும் வரைக்கும் தீநெறியை விடான்.

24 விபசாரனுக்கு அப்பமெல்லாம் இனிப்பானதுதான். அவன் சாகிற வரைக்கும் பாவ வழியில் நடந்தாலும் களைத்துப்போவதில்லை.

25 தன் மனைவியை மீறி விபசாரம் செய்கிறவன் தன் ஆன்மாவையே புறக்கணித்து: என்னைப் பார்க்கிறவன் யார் என்கிறான்.

26 அவன்: இருள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; சுவர்கள் என்னை மூடியிருக்கின்றன; ஒருவரும் என்னைப் பார்க்கிறதில்லை; யாருக்கு நான் அஞ்சுவேன்? உன்னத கடவுள் என் பாவங்களை நினைக்க மாட்டார் என்பான்.

27 ஆனால், அவருடைய கண் அனைத்தையும் பார்க்கிறதென்று அவன் சிந்திப்பதில்லை. மனிதனுக்கு மட்டும் அஞ்சுவதும், மனிதனுடைய பார்வைக்கு அஞ்சி நடப்பதும் தெய்வ பயத்தைத் தன்னிடத்தினின்று ஓட்டி விடுவதாம் என்று அவன் அறியான்.

28 ஆண்டவருடைய கண்கள் கதிரவனைக் காட்டிலும் மிக்க ஒளியோடு இருக்கின்றனவென்றும், மனிதருடைய எல்லா வழிகளையும், பாதாளத்தின் ஆழத்தையும் பார்க்கின்றனவென்றும், மனிதருடைய இதயங்களையும் இரகசியங்களையும் ஆராய்ந்து அறிகின்றனவென்றும் அவன் கண்டுபிடிப்பதில்லை.

29 ஏனென்றால், அனைத்தும் படைக்கப்படுவதற்கு முன்பே ஆண்டவரான கடவுள் அவைகளை அறிந்திருக்கிறார். அது போலவே, படைத்த பிறகும் அனைத்தையும் பார்க்கிறார்.

30 ஆதலால், விபசாரன் நகரத்தின் தெருக்களில் தண்டிக்கப்படுவான்; குதிரைக் குட்டியைப் போலத் துரத்தப்படுவான்; நினையாத நேரத்தில் பிடிபடுவான்.

31 தெய்வ பயம் எத்தகையதென்று அவன் கண்டுபிடியாததால் அனைவராலும் நிந்திக்கப்படுவான்.

32 இவ்வாறே தன் கணவனை விட்டு, விபசாரத்தினால் உரிமை ஏற்படுத்திக்கொள்கிற ஒவ்வொரு பெண்ணுக்கும் நேரும்;

33 ஏனென்றால், முதன் முதலாக, உன்னத கடவுளுடைய கட்டளைக்கு அவள் கீழ்ப்படிகிறதில்லை; இரண்டாவது, தன் கணவனுக்குத் துரோகம் செய்கிறாள்; மூன்றாவது, விபசாரம் என்னும் குற்றத்தைக் கட்டிக்கொள்கிறாள்; வேறு ஆடவனால் தனக்குப் பிள்ளைகள் உண்டாகும்படி செய்து கொள்கிறாள்.

34 அவள் சபைக்குக் கூட்டிக்கொண்டு வரப்படுவாள்; அவள் பிள்ளைகளைப் பற்றி விசாரிக்கப்படுவாள்.

35 அவள் மக்கள் வேரூன்ற மாட்டார்கள்; அவள் கிளைகளும் கனிகொடா.

36 அவள் ஞாபகம் எல்லாருக்கும் வெறுப்பைத் தரும்; அவளுடைய அவமானம் ஒரு போதும் அற்றுப் போகாது.

37 அவளுக்குப் பிற்காலத்தில் இருக்கிறவர்கள் தெய்வ பயத்தை விட உத்தமமானது ஒன்றுமில்லை என்று அறிவார்கள்; ஆண்டவருடைய கட்டளைகளைக் கவனிப்பதை விட இனிதானது ஒன்றுமில்லை என்றும் கண்டுகொள்வார்கள்.

38 ஆண்டவரைப் பின்பற்றுவது பெரும் மாட்சி; ஏனென்றால், நீடிய ஆயுளை அவரிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள்.

அதிகாரம் 24

1 ஞானம் தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும்; கடவுளிடத்தில் மகிமைப்படுத்தப்படும்; மனிதர்கள் நடுவில் மேன்மைப்படுத்தப்படும்.

2 உன்னத ஆண்டவரை வாழ்த்தும் சபைகளில் தன் வாய் திறக்கும்; அவருடைய வல்லமையின் முன்பாக மேன்மைப்படுத்தப்படும்.

3 மக்கள் நடுவில் மகிமைப்படுத்தப்படும்; அதன் புனித மேன்மையைக் கண்டுபிடிக்கிறவர்கள் வியப்படைவார்கள்.

4 தேர்ந்து கொள்ளப்பட்டவர்களுடைய கூட்டத்தில் அது புகழ்ச்சிபெறும். பேறு பெற்றவர் நடுவில் ஆசி பெற்று அதுவே சொல்வதாவது:

5 உன்னத கடவுள் வாயினின்று நான் புறப்பட்டேன். நானே படைப்புகளுக்கெல்லாம் முன்பே படைக்கப்பட்டேன்.

6 வானங்களில் மங்காத ஒளி உதிக்கும்படி செய்தது நானே. மண்ணுலகம் முழுவதையும் மேகத்தைப் போல மூடினதும் நானே.

7 நான் வான மண்டலங்களில் தங்கியிருந்தேன். என் அரியணை மேகத் தூணின் மேல் நிறுவப்பட்டிருக்கின்றது.

8 நான் வான மண்டலங்களைத் தனியே சுற்றி வந்தேன்; பாதாளத்தின் ஆழத்தை ஊடுருவினேன்; கடலின் அலைகள் மேல் உலாவினேன்.

9 மண்ணுலகம் முழுவதும் நான் நின்றேன்; எல்லா மக்களிடத்திலும்,

10 எல்லா இனத்தாரிடத்திலும் மேன்மையடைந்தேன்.

11 பெரியோர், சிறியோர் அனைவரின் இதயங்களையும் என் பலத்தால் கீழ்ப்படுத்தினேன்; அவர்களிடத்தில் இளைப்பாற்றியைத் தேடினேன்; ஆண்டவருடைய உரிமையில் தங்கியிருப்பேன்.

12 அப்போது எல்லாம் படைப்பவர் எனக்குத் தம் கட்டளைகளைத் திருவுளம்பற்றினார்; என்னைப் படைத்தவர் என் கூடாரத்தில் இளைப்பாறினார்.

13 அவர் என்னை நோக்கி: யாக்கோபிடம் வாழ்ந்திரு; இஸ்ராயேலைச் சொந்தமாக்கிக்கொள்; தேர்ந்து கொள்ளப்பட்ட என்னுடையவர்களிடம் வேரூன்று என்றார்.

14 தொடக்கத்திலும் உலகத்திற்கு முன்னும் நான் படைக்கப்பட்டேன்; எக்காலமும் இருப்பேன்; புனித உறைவிடத்தில் அவர்முன் பணி செய்தேன்.

15 ஆதலால், சீயோனில் உறுதிப்படுத்தப்பட்டேன்; புனித நகரிலும் இளைப்பாறினேன்; யெருசலேமில் என் அதிகாரம் சென்றது.

16 மாட்சிப்படுத்தப்பட்ட குடிகளிடத்தில் நான் வேரூன்றினேன். என் கடவுளின் உரிமை என் உடைமை. புனிதருடைய கூட்டத்தில் என் உறைவிடம்.

17 லிபானில் கேதுரு என்னும் மரத்தைப்போல நான் உயர்த்தப்பட்டேன்; சீயோன் மலையில் சிப்பிரேஸ் என்னும் மரத்தைப் போல் ஆனேன்.

18 காதேஸ் பனைமரத்தைப்போல் உயர்த்தப்பட்டேன். யெரிக்கோ ரோசாத் தோட்டம் போல் ஆனேன்.

19 சமவெளியிலுள்ள அழகான ஒலிவமரம் போலவும், மைதானங்களில் தண்ணீரருகேயுள்ள பிளாத்தான் மரத்தைப் போலவும் உயர்த்தப்பட்டேன்.

20 நறுமணம் கமழும் இலவங்கப்பட்டை போலும், பரிமளத் தைலம் போலும் வாசனை வீசினேன்; விலையுயர்ந்த வெள்ளைப் போளம் போல வாசனையின் இன்பத்தைத் தந்தேன்.

21 நறுமணப் பன்னீர் போலும், பரிமளப் பிசின் போலும், கோமேதகம் போலும், வெள்ளைப் போளம் போலும், சாம்பிராணித் துளி போலும், காயப்படாத லிபானைப் போலும் என் உறைவிடத்தைக் கமழச் செய்தேன். என் நறுமணம் கலப்பில்லாத பரிமளத் தைலம் போன்றது.

22 தைலம் தரும் தெரேபிந்து மரம் போல என் கிளைகளை விரித்தேன். என் கிளைகள் மகிமையும் நன்மையும் பொருந்தியவை.

23 கொடிமுந்திரிச் செடி போல வாசனையின் இன்பத்தை வீசச் செய்தேன். என்னுடைய மலர்களோ பெருமையினுடையவும் நன்மதிப்பினுடையவும் கனிகள்.

24 நான் அரிய அன்பினுடையவும் அச்சத்தினுடையவும் அறிவினுடையவும் புனித தெய்வ நம்பிக்கையினுடையவும் தாயாய் இருக்கிறேன்.

25 நன்னெறியினுடையவும் உண்மையினுடையவும் அழகெல்லாம் என்னிடம் உண்டு. வாழ்வினுடையவும் புண்ணியத்தினுடையவும் முழு நம்பிக்கை என்னிடமே உள்ளது.

26 என்னை நாடுகிறவர்கள் எல்லாரும் என்னிடம் வந்து சேருங்கள்; என் கனிகளால் நிரப்பப்படுங்கள்.

27 என் அறிவு தேனை விட இனிப்பாய் இருக்கின்றது. என் உரிமை தேனையும் அதன் இனிய சுவையையும் விட மேலானதாய் இருக்கின்றது.

28 எக்காலத்துக்கும் என் நினைவு நிலைத்திருக்கும்.

29 என்னை உண்பவர்கள் இன்னமும் ஆவல் கொள்வார்கள். என்னை அருந்துகிறவர்கள் இன்னமும் தாகமாய் இருப்பார்கள்.

30 என்னைக் கேட்கிறவன் மோசம் போகமாட்டான். என்னைக் கொண்டு தங்கள் செயல்களைச் செய்கிறவர்கள் பாவம் செய்யமாட்டார்கள்.

31 என்னை மற்றவர்களுக்குப் போதிக்கிறவர்கள் நித்திய வாழ்வை அடைவார்கள்.

32 இவையெல்லாம் வாழ்க்கையின் நூல்; உன்னத கடவுளின் உடன்படிக்கை; உண்மையின் அறிவிப்பு.

33 மோயீசன் நீதிக் கட்டளைகளின் சட்டத்தையும், யாக்கோபு கோத்திரத்துக்கு உரிமையையும், இஸ்ராயேலர்க்கு வாக்குறுதிகளையும் கொடுத்தார்.

34 கடவுள் தம் ஊழியரான தாவீதுக்கு அவர் குடும்பத்தினின்று பேராற்றல் மிகுந்த அரசரை எழுப்பி, மகிமையின் அரியணையில் நிந்தியத்திற்கும் வீற்றிருக்கச் செய்வதாக வாக்குறுதி செய்தார்.

35 பீசோன் நதியைப் போலும், பலன் காலத்தில் திகிரிஸ் நதியைப் போலும், ஞானத்தை நிரப்புகிறார்.

36 அது அறுவடைக் காலத்தில் யோர்தான் நதியைப் போலப் பெருகும். அவர் எப்பிராத்தெஸ் நதியைப் போல் அறிவை நிரப்புகிறார்.

37 கொடிமுந்திரி விளைச்சல் காலத்தில் ஜெயோன் நதியைப் போல் ஒளியாகிய ஞானத்தை அனுப்பி உதவுகிறார்.

38 அதை முழுமையாக முதன் முதல் அறிந்தவர் அவர்தாம். அவரினும் சிறியோர் அதைக் கண்டுபிடியார்.

39 அதனுடைய எண்ணம் கடல்போலப் பரந்ததாய் இருக்கின்றது. அதனுடைய அறிவுரை ஆழ்ந்த பாதாளத்தைப் போல் இருக்கின்றது.

40 ஞானமாகிய நான் நதிகளை ஓடச்செய்தேன்.

41 நான் நதியினின்று ஓடும் தண்ணீர் நிறைந்த வாய்க்கால் போலும், நதியின் ஓடை போலும், தண்ணீர் கொண்டு போகப்படும் சுரங்கம் போலும் விண்ணினின்று புறப்பட்டேன்.

42 செடிகளுள்ள என் தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சுவேன்; என் வயலின் பயிர்களைத் தண்ணீரால் நிரப்புவேன் என்று சொன்னேன்.

43 உடனே என் வாய்க்காலில் நீர் பெருகினது. என்னுடைய நதி கடலைப் போல் ஆனது.

44 ஏனென்றால், என் போதனையை உதய காலத்து வெளிச்சம் போல் ஒளிர்வித்தேன்; அதை எப்போதைக்கும் விரிவாய்ப் போதிப்பேன்.

45 பூமியின் திக்கு திசைகளெல்லாம் ஊடுருவி, துயில்கிறவர்களைச் சோதிப்பேன்; ஆண்டவரை நம்புகிறவர்களை ஒளிர்விப்பேன்.

46 இன்னும் இறைவாக்குப்போலப் போதகத்தைப் பொழிவேன்: ஞானத்தைத் தேடுகிறவர்களுக்கு அதை அளிப்பேன்; அவர்கள் சந்ததி யாருக்கும் புனித உலகம் வரைக்கும் அதை அளித்து வரத் தவறேன்.

47 நான் எனக்கு மட்டுமல்ல, உண்மையைத் தேடும் அனைவருக்காகவும் உழைத்தேனென்று தெரிந்து கொள்ளுங்கள்.

அதிகாரம் 25

1 கடவுளுக்கும் மனிதருக்கும் முன்பாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, என் மனத்துக்கு விருப்பமான காரியங்கள் மூன்று உண்டு:

2 சகோதர ஒற்றுமை, பிறரன்பு, ஒருவரோடொருவர் ஒத்து வாழும் கணவன் மனைவியர்.

3 மூன்று வித மனிதரை என் ஆன்மா பகைத்தது; அவர்களுடைய ஆன்மாவைப் பற்றி எனக்கு மிகவும் வெறுப்பு உண்டு.

4 அவர்கள் யாரென்றால்: செருக்குடைய வறியவன், பொய்காரச் செல்வன், பேதையும் மதியற்றவனுமான முதியவன்.

5 உன் இளவயதில் நீ சேகரியாததை எவ்விதம் உன் முதுமையில் காணப்போகிறாய்?

6 நரைத்தோருடைய தீர்மானம் எத்துணைச் சிறந்தது! பெரியோரின் அறிவுரையை அறிவதும் எத்துணைச் சிறந்தது!

7 வயதில் முதிர்ந்தோருக்கு ஞானமும், தலைமை வாய்ந்தோருக்கு அறிவும் அறிவுரையும் எவ்வளவோ அழகுள்ளவை!

8 தேர்ந்த பட்டறிவு முதியவர்களுடைய முடி; தெய்வ பயமோ அவர்களுடைய மாட்சி.

9 என் அறிவால் நன்மையான காரியங்களாக மதிக்கப்பட்டவை ஒன்பது; பத்தாவதைப் பற்றியோ மனிதருக்கு என் நாவினால் சொல்லுவேன்.

10 தன் மக்களால் மகிழ்ச்சியடையும் மனிதன் பேறுபெற்றவன்; தன் பகைவருடைய அழிவைக் காண்பவன் பேறுபெற்றவன்;

11 அறிவுள்ள பெண்ணோடு வாழ்பவன், தன் நாவினால் தவறாதவன், தகாதவர்களைத் தன் உதவியாகக் கொள்ளாதவன்- இவர்கள் பேறுபெற்றோர்;

12 உண்மையான நண்பனைக் கண்டுகொண்டவன், செவி கொடுத்தவனுக்கு நீதியைப் போதிப்பவன்- இவர்கள் பேறுபெற்றோர்.

13 ஆயினும், ஞானத்தையும் அறிவையும் கண்டவன் எவ்வளவோ மேலானவன் எனினும், தெய்வ பயமுள்ளவனை விட அவன் மேலானவன் அல்லன்.

14 தெய்வ பயம் மற்ற யாவற்றையும் விட மேலானது.

15 தெய்வ பயம் உடைய மனிதன் பேறு பெற்றவன்; அதனை உடையவன் எவனுக்கு ஒப்பிடப்படுவான்?

16 தெய்வ பயமோ அவருடைய அன்பின் தொடக்கம். ஆனால், விசுவாசத்தின் தொடக்கமும் அதனுடன் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

17 எல்லா வருத்தமும் இதயத்தைத் துன்புறுத்தும். பெண்ணின் கெட்ட குணமோ கொடிய கெடுதியை உண்டாக்கும். எல்லாக் கெடுதியும் பெண்ணின் கெட்ட குணத்தாலேயாம்.

18 எந்த வருத்தமும் இதய வருத்தத்திற்கு நிகராகாது.

19 எந்தக் கெட்ட குணமும் பெண்ணின் கெட்ட குணத்திற்கு ஒப்பாகாது.

20 எவ்விதத் துன்பமும் நம் பகைவரால் நமக்கு உண்டாகும் துன்பத்திற்குச் சமமாகாது.

21 எந்தப் பழியும் நம் பகைவர் வாங்கும் பழிக்கும் நிகராகாது.

22 நாகப் பாம்பின் தலையை விடக் கெடுதியான தலை ஒன்றுமில்லை என்பது போல,

23 பெண்ணின் கோபத்தை மிஞ்சிய கோபம் இல்லை. கெட்ட குணமுள்ள பெண்ணுடன் வாழ்வதை விடச் சிங்கத்துடனும் பூத நாகத்துடனும் வாழலாம்.

24 பெண்ணின் கெட்ட குணம் அவள் முகத்தை வேறுபடுத்துகிறது; கரடியைப் போல் அவள் பார்வையை மறைக்கின்றது; காக்கை போலக் கருநிறமாய்க் காண்பிக்கின்றது.

25 அவள் கணவன் அயலாரிடம் முறையிடுகிறான்; அவர்கள் சொல்வதைக் கேட்டு அதிகமாய் வருத்தப்படுகிறான்.

26 பெண்ணின் கெட்ட குணத்திற்கு முன்பாக எல்லாக் கெட்ட குணங்களும் இலகுவானவை. பாவிகளுடைய கதி அவள் மேல் விழும்.

27 மணல் மேட்டில் நடக்க முதியவனுடைய கால்களுக்கு எப்படியோ, அப்படியே அமைதியுள்ள கணவனுக்கு வாயாடிப் பெண்ணுடன் வாழ்வது கடினமாய் இருக்கும்.

28 பெண்ணின் அழகைப் பாராதே; அழகின் பொருட்டுப் பெண்ணை விரும்பாதே.

29 பெண்ணின் கோபம், அவமரியாதை, அதனால் உண்டாகும் வெட்கக்கேடு- இவை பெரியவை.

30 பெண்ணுக்கு அதிகாரமிருந்தால் தன் கணவனுக்கு விரோதியாவாள்.

31 கெட்ட பெண் மன வருத்தத்திற்கும், கவலை தோய்ந்த முகத்திற்கும், இதயக் கொடுந் துன்பத்திற்கும் காரணமாய் இருக்கிறாள்.

32 தன் கணவனை மகிழ்விக்காத பெண் சோர்ந்த கைகளைப் போலவும், வலுவற்ற முழங்கால்களைப் போலவும் இருக்கிறாள்.

33 பெண்ணால் பாவம் பிறந்தது. அவளால் நாம் எல்லோரும் சாகிறோம்.

34 தண்ணீருக்குத் துவாரம் எவ்வளவு சொற்பமாயிருந்தாலும், விட்டு வைக்காதே. அது போலவே, கெட்ட குணமுள்ள பெண்ணுக்குச் சிறிதேனும் அதிகாரம் கொடாதே.

35 அவள் உன் கைக்கு அடங்காவிட்டால், உன் பகைவர் முன்பாக உன்னை வெட்கத்திற்கு உள்ளாக்குவாள்.

36 அவளால் உனக்கு ஒருபோதும் தீங்கு நேராதபடி உன் வசத்தினின்று அவளைத் தறித்துவிடு.

அதிகாரம் 26

1 நல்ல பெண்ணின் கணவன் பேறு பெற்றோன். ஏனென்றால், அவன் வாழ்நாட்களின் எண்ணிக்கை இரு மடங்காகும்.

2 சுறுசுறுப்புள்ள பெண் தன் கணவனை மகிழச் செய்கிறாள்; தன் வாழ்நாளையும் சமாதானத்தில் கழிக்கிறாள்.

3 தெய்வ பயமுள்ள மனிதன் செய்த நற்செயல்களுக்கு வெகுமதியாக அவனுக்கு ஒரு நல்ல மனைவி நியமிக்கப்படுவாள்.

4 செல்வனானாலும் வறியவனானாலும், எப்போதும் அவன் இதயம் நற்குணமுள்ளதாயும், அவன் முகம் மகிழ்ச்சியுள்ளதாயும் இருக்கும்.

5 மூன்று காரியங்களைப் பற்றி என் இதயம் அஞ்சியது; நான்காவதைப் பற்றியோ என் முகம் வெளுத்தது.

6 நகரத்தின் பகை, கலகக்காரருடைய கூட்டம்,

7 பொய்யான புறணி- இம் மூன்றும் சாவிலும் கொடியவை.

8 ஆனால், பொறாமையுள்ள பெண் மன வேதனையும் தொல்லையுமாய் இருப்பாள்.

9 பொறாமையுள்ள பெண்ணிடம், அனைவரிடமும் முறையிடும் தாற்றுக் கோல் போன்ற நாவு உண்டு.

10 கெட்ட குணமுள்ள பெண் எருதுகள் பூட்டின அசையும் நுகத்தடியைப் போல் இருக்கிறாள். அவளை அடக்குகிறவன் தேளைப் பிடிப்பவன் போல் ஆவான்.

11 மதுவினால் மயங்கின பெண் மிகுந்த கோபத்திற்கு ஆளாவாள். அவள் மீது உண்டான வெறுப்பும், அதனால் உண்டான வெட்கமும் மறைக்கப்படா.

12 கண் பார்வையாலும் கண் இமைகளினாலும் விபசாரி அறியப்படுகிறாள்.

13 அடக்கமற்ற உன் புதல்வியை வெகு கவனமாய்ப் பார்த்துக்கொள். ஏனென்றால், வாய்ப்பு கிட்டும் போது அவள் தவறுவாள்.

14 நாணமற்ற கண்கள் உடையவளைக் கவனி. அப்படிக் கவனிக்காவிடில், அவள் விபசாரி ஆவாள்.

15 ஏனென்றால், தாகமுள்ள வழிப்போக்கன் நீரூற்றைக் காணும் போதெல்லாம் எப்படி வாய் திறப்பானோ, தன் வாய்க்கு எட்டும் எந்த நீரையும் குடிப்பானோ, அவ்வண்ணமே அவள் எல்லா மரத்தடிகளிலும் உட்கார்ந்து தோல்வியடையுமட்டும் எல்லா அம்புக்கும் தூணியைத் திறப்பாள்.

16 நாணமுள்ள பெண்ணின் நற்குணம் அவள் கணவனை மகிழ்விக்கும்; அவன் எலும்புகளுக்கும் வலுக்கொடுக்கும்.

17 அவளுடைய நன்னெறி கடவுளுடைய வரம்.

18 அறிவும் நாவடக்கமுமுள்ள பெண்ணின் அறிவுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை.

19 புனிதமும் நாணமுமுள்ள பெண் நன்மையிலும் நன்மை.

20 எல்லா (பொன்) நிறையும், அடக்கமுமுள்ள ஆன்மாவுக்குச் சமமன்று.

21 நல்ல பெண்ணின் அழகு வானமண்டலங்களில் ஒளிரும் கதிரவனைப் போல், அவள் வீட்டின் அணிகலனாய் இருக்கும்.

22 தக்க பருவத்தில் முகத்தின் அழகு, கடவுள் ஆலயத்தில் ஒளிரும் விளக்கைப் போல் இருக்கின்றது.

23 பருவப் பெண்ணின் பாதங்கள் மேலுள்ள உறுதியான கால்கள், வெள்ளிப் பாதங்களின் மேல் பொருத்தப்பட்ட பொற்றூண்களைப் போல் இருக்கின்றன.

24 உறுதியான கல்லின் மேல் போடப்பட்ட அடிப்படையைப் போல, புண்ணியமுள்ள பெண்ணின் இதயத்தில் கடவுளுடைய கட்டளைகள் இருக்கின்றன.

25 இரண்டு காரியங்களைப் பற்றி என் இதயம் கலங்கினது; மூன்றாவதைப் பற்றி எனக்குக் கோபம் மூண்டது.

26 (இரண்டு) வறுமையால் வருந்தும் போர்வீரன், புறக்கணிக்கப்படும் அறிவாளி.

27 (மூன்றாவது) நன்னெறியைத் தள்ளி விட்டுப் பாவ நெறிக்கு உட்படுகிறவனைக் கடவுள் வாளுக்கு இரையாக நியமித்தார்.

28 இருவித காரியங்கள் அரிதானவையும் ஆபத்துள்ளவையுமாக எனக்குத் தோன்றின. எவையென்றால்: வியாபாரி அநியாயத்தை அரிதாய் விலக்குவான்; மதுபானம் விற்கிறவன் வாய்ப் பாவங்களுக்கு அரிதாய்த் தப்புவான்.

அதிகாரம் 27

1 வறுமையால் பலர் பாவத்தில் விழுந்தார்கள். செல்வனாகத் தேடுகிறவன் தன் கண்ணைத் திருப்பிக் கொள்கிறான்.

2 கற்சுவர் மத்தியில் அடிக்கப்பட்ட முளை போல, விற்றல் வாங்குதல் மத்தியில் பாவம் நிற்கும்.

3 குற்றவாளியோடு குற்றம் தண்டிக்கப்படும்.

4 தெய்வ பயத்தில் நீ உறுதியாய் நிலைத்திராவிட்டால், வெகு சீக்கிரத்தில் உன் வீடு இடிந்து விழும்.

5 சல்லடையில் சலிக்கும்போது உமி நின்று போவது போல, மனிதனுடைய எண்ணத்தில் சஞ்சலம் நின்று போகும்.

6 குயவனின் பாண்டங்களைச் சூளை பரிசோதிக்கின்றது. துன்ப சோதனைகள் நீதிமான்களைப் பரிசோதிக்கின்றன.

7 மரத்தின் கண்காணிப்பை அதன் கனி காண்பிப்பது போல, மனிதன் வாயினின்று புறப்படும் வார்த்தைகள் அவன் மனத்திலுள்ள எண்ணத்தைக் காண்பிக்கும்.

8 பேசுவதற்கு முன்னரே மனிதனைப் புகழாதே. ஏனென்றால், வார்த்தைகளைக் கொண்டு தான் அவனை அறிய வேண்டும்.

9 நீதியைப் பின்பற்றி நடந்தால் அதைக் கைக்கொள்வாய். அது உன்னைப் பரந்த ஆடை போல் போர்த்திக் கொள்ளும். நீ அதனுடன் வாழ்வாய். அது என்றென்றைக்கும் உன்னைக் காக்கும். எல்லாம் வெளியாகும் நாளில் அதை உன் உற்ற துணையாகக் காண்பாய்.

10 பறவைகள் தங்களைப் போன்றவைகளோடு சேர்கின்றன. உண்மையும் தன்னைப் பேணுகிறவர்களிடம் திரும்புகிறது.

11 சிங்கம் இரைக்காக எப்போதும் பதுங்கியிருக்கின்றது. அது போல், பாவங்களும் அக்கிரமங்களைச் செய்பவர்களுக்காகக் காத்திருக்கின்றன.

12 புனிதனான மனிதன் சூரியனைப் போல மாறாமல் ஞானத்தில் நிலைக்கிறான். மூடனோ சந்திரனைப் போல மாறுபடுகிறான்.

13 மூடர் மத்தியில் இருக்கும் போது மௌனம் சாதித்து, காலம் அறிந்து பேசும் அறிவாளிகள் மத்தியில் இருக்க அடிக்கடி நாடு.

14 பாவிகளுடைய பேச்சு பகைக்கத் தக்கது. பாவத்தின் இன்பங்களில் அவர்களுக்கு அக்களிப்பு.

15 அடிக்கடி ஆணையிடுகிறவனின் பேச்சு தலைமயிர் சிலிர்க்கச் செய்கின்றது; அவனுடைய அவமரியாதை காதுகளை மூடிக் கொள்ளும்படி செய்கின்றது.

16 அகந்தையுள்ளவர்களுடைய சண்டையில் இரத்தம் சிந்தப்படும்; அவர்களுடைய சாபமோ கேட்பதற்கு அவமானம்.

17 நண்பனுடைய இரகசியங்களை வெளிப்படுத்துகிறவன் நம்பிக்கையை இழக்கிறான். அவன் மனத்துக்கொத்த நண்பனைக் காணமாட்டான்.

18 அயலானை நேசி; அவனுடன் பிரமாணிக்கமாய் ஒன்றித்திரு.

19 அவன் இரகசியங்களை நீ வெளியாக்கியிருப்பாயானால், அவன் பின் செல்லாதே.

20 ஏனென்றால், தன் நண்பனை இழந்தவன் போலவே தன் அயலானுடைய நட்பை இழந்தவனும் ஆவான்.

21 தன் கையிலிருந்த பறவையைப் பறக்க விட்டவன் போல, நீ உன் அயலானையும் விட்டு விட்டாய்; அவனை நீ பிடிக்க மாட்டாய்.

22 அவனைப் பின்தொடராதே. ஏனென்றால், அவன் வெகுதூரம் போய் விட்டான்; கண்ணியினின்று தப்பியோடும் காட்டாடு போல் ஓடிவிட்டான். ஏனென்றால், அவன் ஆன்மா காயப்பட்டது.

23 இனி மேல் அவனை நீ உன் வயப்படுத்துதல் இயலாது. சாபத்திற்குச் சமாதானம் உண்டு.

24 ஆனால், நண்பனுடைய இரகசியங்களை வெளிப்படுத்துவதோ, நற்பேறற்ற ஆன்மாவின் நம்பிக்கைக் கேடு.

25 கண்ணால் சாடை காண்பிக்கிறவன் அநியாயங்களைத் தோற்றுவிப்பான். ஆனால், அவன் மோசக் கருத்திற்குத் தப்பிக் கொள்வார் இல்லை.

26 உன் கண்கள் முன்பாக அவன் வாய் அமுதம் பொழியும்; உன் பேச்சுகளைப் பற்றி ஆச்சரியப்படுவான். முடிவிலோ அவன் நாக்கு புரளும்; உன் வார்த்தைகளில் குற்றம் காண்பான்.

27 பலவற்றை நான் பகைத்தேன்; ஆனால், இதற்கு அவை இணையல்ல. ஆண்டவரும் அவனைப் பகைப்பார்.

28 யாரேனும் ஒருவன் உயரத்தில் கல்லை எறிவானேயானால் அது அவன் தலை மேல் விழுமாப்போல, வஞ்சக துரோகமும் வஞ்சகனைக் காயப்படுத்தும்.

29 படுகுழி தோண்டுகிறவன் அதிலேயே விழுவான். அயலானுக்குப் போட்ட கல்லில் தானே மோதிக் கொள்வான். பிறருக்குக் கண்ணி வைக்கிறவன் தானே அதில் பிடிப்படுவான்.

30 தீய யோசனை செய்கிறவனுக்கு அவன் மீது தானே அந்தத் தீங்கு வரும். அது எவ்விடமிருந்து தனக்கு வருகிறதென்று அவன் அறியான்.

31 செருக்குற்றோரின் வஞ்சகமும் அகந்தையும் அவர்களைப் பழிவாங்கச் சிங்கத்தைப் போலப் பதுங்கியிருக்கும்.

32 நீதிமான்களுடைய தாழ்வைப்பற்றி மகிழ்கிறவர்கள் கண்ணியில் மடிவார்கள். ஏனென்றால், அவர்கள் சாகிறதற்கு முன்பே வருத்தம் அவர்களை விழுங்கி விடும்.

33 கோபம், வெறி இவை இரண்டும் வெறுப்புக்குரியவை. ஆனால், பாவிகளிடம் இவை இரண்டும் உண்டு.

அதிகாரம் 28

1 பழிவாங்க ஆசைப்படுகிறவனைக் கடவுள் தாமே பழிவாங்குவார். அவன் பாவங்களை அவர் ஒருபோதும் மறக்கமாட்டார்.

2 உனக்குத் தீமை செய்யும் அயலானுக்கு மன்னிப்புக் கொடு; அப்போது தான் நீ மன்றாடும் போது உனக்கும் பாவங்கள் மன்னிக்கப்படும்.

3 மனிதன் மற்றொருவனை மன்னிக்காது இருக்கிறான். ஆனால், தன்னை மன்னிக்கும்படி கடவுளைக் கேட்கிறான்.

4 தன்னைப் போன்ற மனிதன் மீது அவனுக்கு இரக்கம் இல்லை; ஆனால் தன் பாவங்களுக்காக மன்றாடுகிறான்.

5 அழிவுள்ள மனிதனான அவன் கோபம் பாராட்டுகிறான்; கடவுளிடமோ மன்னிப்புக் கேட்கிறான். அவன் குற்றங்களுக்காக மன்றாடுகிறவன் யார்?

6 உன் முடிவுகளை நினைத்துப் பகைமையை விட்டு விடு.

7 கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காதவர் மேல் அழிவும் சாவும் அடுத்திருக்கின்றன.

8 தெய்வ பயத்தோடு நட. அயலான் மேல் கோபம் கொள்ளாதே.

9 உன்னத கடவுளின் உடன்படிக்கையை நினைத்துக்கொள். அயலானுடைய அறியாமையைப் பொருட்படுத்தாதே.

10 வழக்காடாதே. அதனால், உன் பாவங்களைக் குறைப்பாய்.

11 ஏனென்றால், கோபமுள்ள மனிதன் தன் வழக்கை மூட்டுகிறான். பாவி நண்பரைக் கலைப்பான்; சமாதானமுள்ளவர்கள் நடுவில் பகையை விளைவிக்கிறான்.

12 ஏனென்றால், காட்டு மரங்களைப் போல் நெருப்பு பற்றி எரியும்; மனிதனுடைய வலிமை எத்தன்மையோ அத்தன்மையே அவன் கோபமும். அவன் தன் செல்வத்துக்குத் தகுந்தவண்ணம் தன் கோபத்தைப் பெருகச் செய்வான்.

13 தீடீர்ச் சண்டை நெருப்பை மூட்டுகின்றது. திடீர் வழக்கு இரத்தத்தைச் சிந்துவிக்கின்றது. சான்று பகரும் நாவு சாவைக் கூட்டி வருகின்றது.

14 நெருப்புப் பொறியை ஊதுவாயாகில், அது நெருப்பாகப் பற்றிக்கொள்ளும்; அதன் மீது துப்பினால் அவிக்கப்படும். இரண்டும் வாயினின்றே புறப்படுகின்றன.

15 புறணி சொல்கிறவனும், இரட்டை நாவுள்ளவனும் சபிக்கப்பட்டவர்கள். ஏனென்றால், அவர்கள் சமாதானமுள்ள பலரைக் கலகப்படுத்துவார்கள்.

16 மூன்றாவது நாவு பலரைக் கெடுத்தது; அவர்களை நாடு நாடாய்ச் சிதறடித்தது.

17 செல்வருடைய பலமான நகரங்களை அழித்தது; பிரபுக்களுடைய வீடுகளை விழத்தாட்டியது.

18 மக்களுடைய பலமான சேனைகளை ஒழித்தது; தைரியமுள்ள இனத்தாரை வேரறுத்தது.

19 மூன்றாவது நாவு பலமுள்ள பெண்களை ஓட்டி விட்டது; அவர்கள் உழைப்புகளின் பலன்களை இழக்கச் செய்தது.

20 அதைப் பார்க்கிறவன் இளைப்பாற்றி அடைய மாட்டான்; சமாதானம் சொல்லும் நண்பனையும் அடைய மாட்டான்.

21 கசையின் அடி தழும்பை உண்டாக்குகின்றது. நாவின் அடியோ எலும்புகளை ஒடித்து விடுகின்றது.

22 வாள் முனையில் பலர் இறந்தார்கள். தங்கள் நாவினால் மாண்டவர்களோ இன்னும் பலர்.

23 தீய நாவினின்று காக்கப்பட்டவனும், அதன் கோபத்திற்குள் அகப்படாதவனும், அதன் நுகத்தடியை இழுக்காதவனும், அதன் சங்கிலிகளால் கட்டப்படாதவனும் பேறு பெற்றோர்.

24 ஏனென்றால், அதன் நுகத்தடி இரும்பாலானது. அதன் சங்கிலி பித்தளையால் ஆனது.

25 அதனால் வரும் சாவு அவலமானது. இச்சாவை விட நரகம் தாவிளை.

26 அது (தீய நாவு) நீண்ட நாள் நீடிக்காது. அநீதருடைய வழிகளை அடையும். நீதிமான்களைத் தன் நெருப்பால் எரிக்காது.

27 கடவுளை விட்டு விட்டவர்கள் அதில் விழுவார்கள். அவர்களிடம் அது எரியும்; அவிக்கப்படாது. அது சிங்கத்தைப் போல் அவர்கள் மேல் அனுப்பப்படும்; வேங்கையைப் போல் அவர்களைக் காயப்படுத்தும்.

28 உன் செவிகளை முட்களால் அடைத்து விடு. தீய நாவைக் கேளாதே. உன் வாய்க்குக் கதவும் பூட்டும் போடு.

29 உன் பொன்னையும் வெள்ளியையும் உருக்கி, உன் வார்த்தைகளுக்கு ஒரு தராசும், உன் வாய்க்குத் தகுந்த கடிவாளங்களும் செய்து கொள்.

30 நாவினால் கெடுத்து உனக்குத் தீங்கு புரியத் தேடும் பகைவர் முன்பாக நீ விழாதபடிக்கும், உன் தாழ்வு தீராமலேயே சாவுக்கு உள்ளாகாதபடிக்கும், அதிக எச்சரிக்கையாய் இரு.

அதிகாரம் 29

1 இரக்கம் காண்பிக்கிறவன் அயலானுக்குக் கடன் கொடுக்கிறான். இவ்வாறு, பணம் படைத்தவன் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறான்.

2 உன் அயலானுக்கு அவனது தேவையில் கடன் கொடு. நீயும் குறித்த காலத்தில் அயலானுக்குத் திருப்பிக் கொடுத்து விடு.

3 வார்த்தையைக் காப்பாற்றி அவனுடன் நம்பிக்கையாய் நடந்துகொள்; உனக்குத் தேவையானதை எப்போதும் நீ கண்டடைவாய்.

4 வாங்கின கடனைக் கண்டெடுத்த பொருள் போல் பலர் எண்ணினார்கள்; தங்களுக்கு உதவினவர்களுக்குத் தொல்லை வருவித்தார்கள்.

5 வாங்குகிற வரையிலும் கொடுக்கிறவனுடைய கைகளை முத்தமிடுகிறார்கள்; பணிவான வார்த்தைகளைக் கொண்டு வாக்குக் கொடுக்கிறார்கள்.

6 திருப்பிக் கொடுக்க வேண்டிய காலத்திலோ தவணை கேட்பார்கள். சலிப்பும் முறைப்பாடுமான வார்த்தைகளைப் பேசுகிறார்கள்.

7 காலத்தைக் குற்றம் சாட்டுவார்கள். திருப்பித் தரக் கூடுமானாலோ தகராறு செய்வார்கள்; வருத்தப்பட்டுக் கொண்டு தொகையில் பாதி கொடுப்பார்கள். அதையும் கண்டெடுத்த பொருளென்று எண்ணிக் கொள்வார்கள்.

8 திருப்பித் தரக் கூடாமற் போனால், பணம் கொடாமல் அவனை மோசம் செய்வார்கள். வலிய அவனைத் தம் பகைவனாக்கிக் கொள்வார்கள்.

9 மேலும் நிந்தையையும் சாபத்தையுமே அவனுக்குக் கொடுப்பார்கள். மரியாதைக்கும் நன்மைக்கும் பதிலாக அவனை நிந்திப்பார்கள்.

10 பலர் கடன் கொடாதிருப்பது கெட்ட மனத்தினால் அன்று; மாறாக, வலிய மோசம் போக அஞ்சுவதனாலேயே.

11 ஆனாலும், கேடுற்றவன் மேல் மன இரக்கம் வைத்து, அவன் பிச்சையெடுத்து வருத்தமடையும்படி விடாதே.

12 கட்டளையின் பொருட்டு வறியவனை ஆதரி; வறுமையின் பொருட்டு அவனை வெறுமனே அனுப்பி விடாதே.

13 சகோதரனையும் நண்பனையும் முன்னிட்டுப் பணத்தை இழந்து போ. நீ தண்டனை அடையாதபடி கல்லின் கீழ் அதை ஒளிக்காதே.

14 உன் செல்வத்தை உன்னத கடவுளின் கட்டளைகளில் வை; பொன்னை விட அது உனக்கு அதிகப் பயன் தரும்.

15 உன் பிச்சையை வறியவனுடைய இதயத்திற்கு இடு. எல்லாத் தீமையினின்றும் அது உனக்காக மன்றாடும்.

16 வலியவனுடைய கேடயத்தையும் ஈட்டியையும் விட

17 உன் பகைவனுக்கு விரோதமாய்

18 அது சண்டை செய்யும்.

19 நல்ல மனிதன் தன் அயலானுக்காகப் பிணையாகிறான். வெட்கம் கெட்டவன் அவனைக் கைவிட்டு விடுவான்.

20 பிணையாளியினுடைய உதவியை மறந்து விடாதே. ஏனென்றால், அவன் தன் ஆன்மாவை உனக்காகக் கொடுத்தான்.

21 பாவியும் தூய்மையற்றவனும் தன் பிணையாளியை விட்டகல்வான்.

22 பாவி பிணையாளியின் பொருட்கள் தனக்கே உரியன என்பான். நன்றி கெட்ட மனத்தை உடையவன் தன்னைக் காக்கிறவனைக் கைவிட்டு விடுவான்.

23 தன் அயலானுக்காக மனிதன் பிணையாளியாகிறான். அவன் மரியாதை கெட்டவனாய் இருந்தால், அவனால் கைவிடப்படுவான்.

24 நீதியற்ற பிணையாளி திறமையுள்ள பலரைப் போக்கடித்திருக்கின்றான். கடலின் அலைகளைப் போல் அவர்களை அலைக்கழித்தான்.

25 வலிமையுள்ளவர்களை ஊர் ஊராய்ச் சுற்றி அலையும்படி செய்தான். அவர்கள் புற இனத்தாரிடத்தில் அலைந்தார்கள்.

26 ஆண்டவருடைய கட்டளையை மீறி நடக்கும் பாவி நீதியற்ற பிணையாளியுடன் சேர்வான். பல காரியங்களைச் செய்ய முயல்கிறவன் மற்றவரின் தீர்ப்புக்கு உள்ளாவான்.

27 உன் ஆற்றலுக்குத் தக்கபடி அயலானுக்கு உதவி செய். நீயே அகப்பட்டுக் கொள்ளாதபடிக்குக் கவனமாய் இரு.

28 மனிதனுடைய வாழ்க்கைக்கு வேண்டிய தலையான காரியங்களாவன: தண்ணீர், அப்பம், உடை, மானத்தைக் காப்பாற்றும் வீடு.

29 சொந்த வீடில்லாமல் பிறர் வீட்டில் உண்ணும் சிறந்த விருந்தை விடப் பலகைகள் மறைவில் உண்ணப்படும் வறியவனுடைய உணவு மேலானது.

30 சொற்பத்தையும் பெரிது என மகிழ்வுடன் ஏற்றுக்கொள்; அப்போது அன்னிய குடியிருப்பின் நிந்தையைக் கேட்க மாட்டாய்.

31 வீடு வீடாய்க் குடியிருக்கிறவன் வாழ்க்கை கேடானது. ஒருவன் எவ்விடம் விருந்தாடியாய்ப் போகிறானோ அவ்விடம் துணிவுடன் எதுவும் செய்யான்; வாயையும் திறவான்.

32 நன்றி கெட்டவர்களைத் தன் வீட்டில் ஏற்றுக் கொண்டு, உணவும் பானமும் கொடுப்பான்; இதைப் பற்றிப் பழிக்குரிய வார்த்தைகளையும் கேட்பான்.

33 விருந்தாடியே, போய் மேசையைத் தயார் செய்; உன் கையிலுள்ளதைக் கொண்டே மற்றவர்களுக்குச் சாப்பாடு போடு.

34 மாட்சி நிறை என் நண்பரை விட்டுப் போய் விடு; அவன் என் சகோதரனானபடியால், அவனை ஏற்றுக் கொள்ள என் வீடு வேண்டியதாயிருக்கின்றது என்று சொல்லப்படுவான்.

35 அறிவுள்ள மனிதனுக்கு வீட்டுத் தலைவன் கண்டிப்பும், கடன் கொடுத்தவனுடைய நிந்தையும் பெரும் காரியங்களே.

அதிகாரம் 30

1 தன் மகனை நேசிக்கிறவன் இறுதியில் மகிழ்ச்சி அடையும்படிக்கும், பிறருடைய வாயிலில் பிச்சை ஏற்காதபடிக்கும் அவனை அடிக்கடி தண்டிக்கக் கடவான்.

2 தன் மகனுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கிறவன் அவன் பொருட்டுப் புகழப்படுவான்; உறவினருக்கு முன்பாக அவன் பொருட்டு மேன்மைப் படுத்தப்படுவான்.

3 தன் புதல்வனுக்குக் கல்வி அளிப்பவன் தன் பகையாளியைப் பொறாமைப்படச் செய்கிறான்; நண்பர் சபையில் மேன்மைப் படுத்தப்படுவான்.

4 அவன் தந்தை இறந்தாலும் இறவாதவனைப் போல் இருக்கிறான். ஏனென்றால், தன்னையொத்தவனைத் தனக்குப் பின் விட்டு வைத்திருக்கிறான்.

5 அவன் தன் வாழ்நாளில் தன் மகனைப் பார்த்து மகிழ்ச்சி கொண்டான்; தன் மரண நேரத்தில் துன்பப்படவுமில்லை; பகைவர் முன்பாக வெட்கமடையவுமில்லை.

6 ஏனென்றால், பகையாளிகளுக்கு விரோதமாய் வீட்டைக் காக்கிறவனையும், நண்பருக்குப் பதில் நன்றி செய்கிறவனையும் விட்டு வைத்திருக்கிறான்.

7 அவன் தன் மக்களுடைய ஆன்மாக்களுக்காகத் தன் காயங்களைக் கட்டிக் கொண்டான். எல்லாச் செய்திகளிலும் அவன் குலை நடுங்கினது.

8 அடங்காத குதிரை மூர்க்கமாய்ப் போகின்றது. தன் விருப்பத்திற்கு விடப்பட்ட மகனும் துரிதமாய்ச் செல்வான்.

9 உன் மகனின் மனத்தின்படியே நீ விட்டு விட்டால் உன்னைத் தனக்கு அஞ்சும்படி செய்வான். அவனுடன் விளையாடினால் உனக்குத் துன்பம் வருவிப்பான்.

10 நீ துன்பம் அடையாதபடிக்கு அவனுடன் சேர்ந்து சிரிக்காதே; ஏனென்றால், இறுதியில் உன் பற்களைக் கடிப்பாய்.

11 இள வயதில் அவனுக்கு அதிகாரம் கொடுக்காதே; அவன் எண்ணங்களை அசட்டை செய்யாதே.

12 அவன் பிடிவாதக்காரன் ஆகாதபடிக்கும், உன்னை அசட்டை செய்யாதபடிக்கும், அதனால் நீ மனவருத்தம் அடையாதபடிக்கும் இள வயதிலேயே அவன் கழுத்தை வளைத்து, சிறுவனாயிருக்கும் போதே அவனை அடித்து வளர்ப்பாயாக.

13 உன் மகனின் ஒழுக்கக் கேட்டால் நீ அவமானம் அடையாதபடிக்கும், அவனுக்குக் கற்பித்துக் கொடுத்து நன்னெறியில் பழக்கு.

14 பலவீனனும் நோயில் அடிபடுகிறவனுமான செல்வனை விட, உடல் நலமும் பலமுமுள்ளவனுமான வறியவன் மேலானவன்.

15 ஆன்ம நலம் நீதியின் புனிதத் தன்மையில் அடங்கியிருக்கின்றது; அது எல்லாப் பொன்னையும் வெள்ளியையும் விட உயர்ந்தது. திரண்ட செல்வத்தை விட வலுவுள்ள உடல் மேலானது.

16 உடல் நலமாகிய செல்வத்தை விட மேலான செல்வம் இல்லை; இதய மகிழ்ச்சியை விட மேலான மகிழ்ச்சி இல்லை.

17 கசப்பான வாழ்வை விடச் சாவு தாவிளை. தீராத நோயை விட நித்திய இளைப்பாற்றி மேலானது.

18 மூடப்பட்ட வாயில் மறைக்கப்பட்ட பொருட்கள், கல்லறையைச் சுற்றிலும் வைக்கப்பட்ட விருந்துப் பண்டங்கள் போன்றவையாம்.

19 சிலைக்குக் காணிக்கையால் வரும் பயன் என்ன? அது உண்பதுமில்லை; நுகர்வதுமில்லை.

20 தன் பாவத்திற்குத் தண்டனையைச் சுமந்து கொண்டு, ஆண்டவரை விட்டகன்று போகிறவனும் அத்தன்மை உள்ளவன்.

21 (இவன்), அண்ணகன் கன்னிப் பெண்ணைத் தழுவிப் பெருமூச்சு விடுவது போலக் கண்களால் பார்த்துத் தவிக்கிறான்.

22 உன் ஆன்மாவிற்கு வருத்தம் கொடாதே; உன் யோசனையில் உன்னைத் தானே துன்பப்படுத்திக் கொள்ளாதே.

23 இதய மகிழ்ச்சியே மனிதனுக்கு வாழ்வு; புனிதத் தன்மையின் நிலைமையே செல்வம். மனிதனுடைய மகிழ்ச்சியே நீடிய வாழ்வு.

24 கடவுளுக்கு விருப்பப்படுமாறு உன் ஆன்மாவின் மீது இரக்கமாய் இருந்து, உன்னைத் தானே அடக்கு; அவருடைய புனிதத் தன்மையில் உன் இதயத்தைச் சேர்த்திடு; வருத்தத்தை உன்னை விட்டுத் தூர அகற்றி விடு.

25 ஏனென்றால், வருத்தம் பலரைக் கொன்றது; அதில் பயன் யாதொன்றும் இல்லை.

26 பொறாமையும் கோபமும் வாழ்நாட்களைக் குறைக்கின்றன; கவலை காலத்துக்கு முந்தியே முதுமையைக் கூட்டி வரும்.

27 தூய்மையும் அமைதியும் உள்ள இதயம் விருந்தில் அமர்ந்திருக்கின்றது; ஏனென்றால், பண்டங்கள் வெகு நேர்த்தியாய்ச் செய்யப்பட்டுள்ளன.

அதிகாரம் 31

1 செல்வங்களின் மீதுள்ள விழிப்பு உடலை வாடச் செய்கின்றது; அவைகளைப் பற்றிய கவலை தூக்கத்தைக் கெடுக்கிறது.

2 வருங்காலத்தின் மீதுள்ள கவலை புத்தியை மாற்றுகின்றது; கடும் நோய் ஆன்மாவை நிதானப்படுத்துகின்றது.

3 பொருட்களைச் சேர்ப்பதற்காகச் செல்வன் உழைப்பான்; அவன் இளைப்பாற்றியில் பொருட்களால் இன்பம் அடைவான்.

4 வறியவன் உணவில்லாமையால் உழைப்பான்; மேலும் அதிக வறுமையால் வருந்துவான்.

5 பொன்னை நேசிக்கிறவன் நீதிமான் ஆகான். அழிவைப் பின்செல்கிறவன் அதனாலேயே நிரப்பப்படுவான்.

6 பொன்னால் பல கேடுகள் உண்டாயின; அதன் அழகால் பலருடைய அழிவு ஏற்பட்டது.

7 பொன்மீது அடாத பற்றுக் கொள்வது பாவத்திற்கு ஏதுவாய் இருக்கின்றது. அதைப் பின்செல்கிறவர்களுக்குக் கேடாம்! அவிவேகி எவனும் அதிலேயே மடிவான்.

8 குற்றமில்லாது காணப்படும் செல்வன் பேறு பெற்றோன்; பொன்னை நாடிப் போகாதவனும், பணத்திலும் செல்வத்திலும் நம்பிக்கை வைக்காதவனும் பேறு பெற்றோன்.

9 அவன் யார்? அவனைப் புகழ்வோம்; ஏனென்றால் தன் வாழ்நாளில் வியப்புக்குரியனவற்றைச் செய்தான்.

10 அதில் பரிசோதிக்கப்பட்டு உத்தமனானவன் எவனோ, அவனுக்கு நித்திய மகிமை கிடைக்கும். அவன் மீறி நடந்திருக்கக் கூடும்; ஆனால், மீறினவன் அல்லன். தீமை செய்திருக்கக் கூடும்; ஆனால், செய்யவில்லை.

11 ஆதலால், அவன் பொருட்கள் ஆண்டவரிடத்தில் நிலைமையாக்கப்பட்டன. புனிதருடைய சபை முழுவதும் அவன் நற்செயல்களை வெளிப்படுத்தும்.

12 நீ அறுசுவைப் பண்டங்களை வைத்த மேசையில் உட்கார்ந்தாயோ? முதற்கண் உன் வாயின் உண்டிப் பிரியத்திற்கு ஆளாகாதே.

13 பல பண்டங்கள் அதன் மேல் இருக்கின்றன என்று சொல்லாதே.

14 உதவாத பார்வை கெடுதியானதென்று நினைத்துக்கொள்.

15 கண்ணை விடக் கெடுதி வாய்ந்த படைப்பு யாது? ஆகையால், பார்க்கும் போது முகமெல்லாம் நனையக் கண்ணீர் சொரியும்.

16 முந்தி நீ கை நீட்டாதே; நீட்டினால், பொறாமையால் குற்றம் சாட்டப்பட்டு வெட்கமடைவாய்.

17 பந்தியில் அவசரப்படாதே.

18 உன்னைக் கொண்டே அயலானுடைய குணத்தையும் அறிந்து கொள்.

19 உன்னிடம் கொண்டுவரப்பட்டவைகளை அளவுள்ள மனிதனைப் போல் பயன்படுத்து; மிகுதியாய் உண்பதனால் பகைக்கு ஆளாகாதே.

20 மரியாதையை முன்னிட்டு, முந்தியே நிறுத்தி விடு; உன் மதிப்பு குறையாதபடிக்கு, மிகுதியாய் உண்ணாதே.

21 பலருடைய சபையில் இருந்தால், முந்தி நீ கை நீட்டாதே; குடிப்பதற்கும் கேளாதே.

22 அளவுள்ள மனிதனுக்குக் கொஞ்சம் மதுபானமே எவ்வளவோ போதுமானது; தூங்குகையில் அதனால் தொல்லைப்பட மாட்டாய்; நோக்காடும் அனுபவிக்கமாட்டாய்.

23 தூக்கக் கேடு, வயிற்று வலி, நோய் நோக்காடு- இவை மட்டுத்திட்டமில்லாதவனுக்கு உண்டாகின்றன.

24 அளவோடு உண்கிற மனிதனுக்கு நல்ல தூக்கம் வருகின்றது. அவன் காலை வரையிலும் தூங்குவான்; அவன் ஆன்மாவும் அவனோடு மகிழும்.

25 அதிகமாய் உண்ணக் கட்டாயப் படுத்தப்பட்டால், இடையே எழுந்து போய் வாந்தி செய்து விடு. அது உனக்கு நலம் பயக்கும்; உன் உடலுக்கும் நோயுண்டாக்க மாட்டாய்.

26 மகனே, நான் சொல்வதைக் கேள்; என்னை நிந்தியாதே. கடைசியில் என் வார்த்தைகளைக் கண்டுபிடிப்பாய்.

27 உன் எல்லாச் செயல்களிலும் சுறுசுறுப்பாய் இரு; நோய் ஒன்றும் உன்னை அண்டாது.

28 விருந்தளிப்பவனின் தாராளத் தன்மையையும், அவனது நம்பத் தகுந்த உண்மையின் சாட்சியத்தையும் பலர் ஆசீர்வதிப்பர்.

29 கஞ்சத்தனமாய் விருந்து செய்கிறவன் மீது ஊர் முறையிடும்; அவனுடைய கஞ்சத்தனத்தின் சாட்சியம் மெய்யானது.

30 மதுபானப் பிரியர்களைத் தூண்டிவிடாதே. ஏனென்றால், மதுபானம் பலரைக் கெடுத்தது.

31 நெருப்பு இரும்பின் உறுதியைப் பரிசோதிக்கின்றது; மிதமிஞ்சிக் குடித்த மதுவும் அகந்தையுள்ளவர்களுடைய இதயங்களை வெளியாக்குகின்றது.

32 அளவோடு குடிக்கப்பட்ட மது மனிதருக்குத் தகுந்த வாழ்வு. திட்டமாய் அதைக் குடிப்பாயானால், மட்டாய் இருப்பாய்.

33 மதுவினால் வலுக் குறைந்தவனுடைய வாழ்க்கை எதற்கு உதவும்?

34 உயிரைப் போக்கடிப்பது என்ன? சாவு.

35 ஆதியில் மகிழ்ச்சிக்காக மது உண்டாக்கப்பட்டதே தவிர, மயக்கத்திற்காக அன்று.

36 அளவோடு அருந்தப்பட்ட மது ஆன்மாவிற்கும் இதயத்திற்கும் மகிழ்ச்சி தரும்.

37 மட்டான பானம் ஆன்மாவிற்கும் உடலுக்கும் நலம் தரும்.

38 மிதமிஞ்சி அருந்தப்பட்ட மது கோபம், ஆத்திரம் முதலிய பல நட்டங்களுக்குக் காரணமாய் இருக்கின்றது.

39 மிதமிஞ்சி அருந்திய மது ஆன்மாவிற்குத் துயரத்தையே தருகிறது.

40 அது ஆத்திரத்தை உண்டாக்குகின்றது; அவிவேகியைக் குற்றத்திற்கு உள்ளாக்குகின்றது; பலத்தைக் குறைக்கின்றது; பலரைக் காயப்படுத்துகின்றது.

41 மதுபானம் அருந்தும் பந்தியில் அயலானிடம் குற்றம் கண்டுபிடிக்காதே; அவன் மகிழ்ச்சியில் அவனை நிந்தியாதே.

42 பழிச் சொற்களை அவனுக்குச் சொல்லாதே; திரும்பக் கேட்டு, அவனை நெருக்காதே.

அதிகாரம் 32

1 விருந்து விசாரணைக்காரனாக நியமிக்கப்பட்டிருந்தால் நீ அகந்தை கொள்ளாதே. அவர்களில் ஒருவனைப் போல நீயும் அவர்களோடு இரு.

2 அவர்களைப் பற்றிய கவலை உனக்கு இருக்கட்டும்; அதன் பிறகு உட்கார்; உன் வேலையெல்லாம் முடிந்த பிறகு நீயும் பந்தியில் அமர்.

3 அவர்களைப்பற்றி நீ மகிழவும், மகுடம் போலிருக்கும் நன்றியறிதலின் அணிகலனை அடையவும், விருந்தினர் உன்னைப் புகழும் பேறு பெறவும் தகுந்த விதமாய் நடந்து கொள்.

4 எல்லாருக்கும் மூத்தவனே, நீ பேசு; ஏனென்றால், அது உனக்குத் தகும்.

5 அது தேர்ந்த ஞானமுள்ள பேச்சாய் இருக்கட்டும். இன்னிசைக் கருவிகளைத் தடை செய்யாதே.

6 கேட்க விருப்பமில்லாவிட்டால், வார்த்தைகளைக் கொட்டாதே. தகாத சமயத்தில் வீணாய் உன் ஞானத்தைப் பாராட்டாதே.

7 பொன்னணிகலனில் மாணிக்கம் பதித்திருப்பது போல, மதுபானம் செய்யும் விருந்தில் இன்னிசைக் கருவி அமைகிறது.

8 பொன்னணிகலனில் இரத்தினக் கல்லின் முத்திரையைப் போல, மகிழ்ச்சியும் மட்டானதுமான மதுவில் இசைக் கருவியாளருடைய பங்கு அமைகின்றது.

9 மௌனமாய்க் கேள்; உன் மரியாதைக்காக உன் மீது விருப்பம் கொள்வார்கள்.

10 இளைஞனே, உன்னைப் பற்றிய காரியங்களிலே முதலாய் அரிதாய்ப் பேசு.

11 இரு முறை உன்னைக் கேள்வி கேட்டால், உன் மறுமொழி சுருக்கமாய் இருக்கட்டும்.

12 பல காரியங்களில் அறியாதவனைப் போல் இரு; மௌனமாய் இருந்து, சொல்வதற்குச் செவி கொடுத்து, அவசியமான போது கேள்வி கேள்.

13 பெரியோர் சபையில் மிஞ்சாதே; முதியோர் கூட்டத்தில் அதிகமாய்ப் பேசாதே.

14 இடிக்கு முன் மின்னல்; அடக்கவொடுக்கத்திற்கு முன் கூச்சம். இந்த மரியாதைக்காக உனக்கு எல்லாருடைய அன்பும் கிடைக்கும்.

15 எழுந்திருக்கும் நேரம் ஆன போது மயங்காதே. ஆனால், உடனே உன் வீட்டிற்கு விரைந்து போய், அவ்விடத்தில் உல்லாசமாய் இரு; அவ்விடத்தில் விளையாடு.

16 உன் மன விருப்பத்தை நிறைவேற்று. ஆனால், குற்றமானதையல்ல; அகந்தையானதையுமல்ல.

17 இவை யாவையும் பற்றி, உன்னை உண்டாக்கித் தம் நன்மைகளால் உன்னை நிரப்பின ஆண்டவரைப் புகழ்வாய்.

18 ஆண்டவருக்கு அஞ்சுகிறவன் அவர் போதனையை ஏற்றுக் கொள்கிறான். அவருக்காக விழித்திருந்தவர்கள் அவரது ஆசி பெறுவர்.

19 கட்டளையைத் தேடுகிறவன் அதனால் நிரப்பப்படுவான். கள்ளத்தனமாய்ச் செய்கிறவன் அதிலேயே இடையூறடைவான்.

20 ஆண்டவருக்கு அஞ்சுகிறவர்கள் நீதியான தீர்வையைக் காண்பார்கள்; ஒளியைப் போல் நீதியைக் கொளுத்துவார்கள்.

21 பாவியான மனிதன் கண்டனையை விலக்குவான்; தன் விருப்பம் போல் சாக்குப் போக்குகளைக் காண்பான்.

22 யோசனையுள்ள மனிதன் அறிவைச் சிதறவிடான். அன்னியனும் அகந்தையுள்ளவனும் அஞ்சவே மாட்டார்கள்.

23 பாவி யோசனையில்லாமல் செய்திருந்த போதிலும் அஞ்சமாட்டான்; ஆனால், தன் சொந்தச் செயல்களாலேயே குற்றம் சாட்டப்படுவான்.

24 மகனே, எதையும் சிந்திக்காமல் செய்யாதே. அப்படியானால், செய்த பிறகு மன வருத்தப்படமாட்டாய்.

25 கெடுதியின் வழி போகமாட்டாய்; கற்களிலே மோதிக்கொள்ளமாட்டாய்; உன் ஆன்மாவிற்குத் தீமை செய்யாதபடி வருத்தமான வழிக்கு உன்னைக் கையளிக்கமாட்டாய்.

26 உன் பிள்ளைகளிடமிருந்து உன்னைக் காப்பாற்றிக் கொள்; உன் ஊழியக்காரர்களிடமிருந்து உன்னைக் காத்துக் கொள்.

27 எல்லாச் செயல்களிலும் உன் ஆன்ம உறுதியை நம்பு; ஏனென்றால், அதுவே கட்டளைகளைக் கடைப்பிடித்தலாம்.

28 கடவுளை விசுவசிக்கிறவன் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறான்; அவர் மீது தன் நம்பிக்கையை வைக்கிறவன் கெடுதிக்கு உள்ளாக மாட்டான்.

அதிகாரம் 33

1 தெய்வ பயமுள்ளவனுக்குத் தீமைகள் நேரிடா. ஆனால், சோதனையில் கடவுள் அவனைக் காத்து, தீமையினின்று மீட்பார்.

2 ஞானமுள்ளவன் கட்டளைகளையும் நீதி மொழிகளையும் பகைக்க மாட்டான்; புயலில் கப்பலைப் போல் உடைபட மாட்டான்.

3 அறிவுள்ள மனிதன் கடவுளுடைய கட்டளைக்குப் பிரமாணிக்கமாய் நடக்கிறான். கட்டளையும் அவனுக்குப் பிரமாணிக்கத்துடன் இருக்கின்றது.

4 கேள்விக்குத் தெளிவான மறுமொழி சொல்கிறவன் மறுமொழியைத் தயார் செய்வான்; இப்படி மன்றாடின பிறகு கேட்கப்படுவான்; போதகத்தைக் காப்பாற்றுவான்; அப்போது மறுமொழி சொல்வான்.

5 மூடனுடைய மனம் வண்டியின் சக்கரத்தைப் போல் இருக்கின்றது; அவன் எண்ணம் சுழலும் அச்சுப் போல் இருக்கின்றது.

6 கேலி செய்யும் நண்பன், தன் மேல் யார் ஏறி உட்கார்ந்தாலும் கனைக்கும் அடங்காக் குதிரைக்கு ஒத்தவனாவான்.

7 ஒரு நாள் மற்றொரு நாளை விடவும், ஒரு நேரம் மற்றொரு நேரத்தை விடவும், ஓர் ஆண்டு மற்றோர் ஆண்டை விடவும் நல்லது என்பதற்குக் காரணம் என்ன?

8 கதிரவன் படைக்கப்பட்டுக் கடவுளுடைய ஏற்பாட்டை நிறைவேற்றும் போது, அவருடைய கட்டளையால் அவை சிறப்படைந்தன.

9 அவரே காலங்களையும், அவைகளின் திருநாட்களையும் நியமித்தார். குறிக்கப்பட்ட நேரத்தில் அந்தந்த நாட்களில் மக்கள் திருநாட்களைக் கொண்டாடினார்கள்.

10 அந்நாட்களில் சிலவற்றைக் கடவுள் உயர்த்தி மகிமைப்படுத்தினார்; சிலவற்றைச் சாதாரண நாட்களின் கணக்கில் வைத்தார். ஆதாம் உண்டாக்கப்பட்ட சேற்றிலும் மண்ணிலுமிருந்து, உண்டான மனிதர் யாவரும் அவ்வண்ணமே.

11 பலவித ஒழுங்குகளால் ஆண்டவர் அவர்களைப் பிரித்தார்; அவர்கள் வழிகளை மாற்றினார்.

12 அவர் சிலரை ஆசீர்வதித்து உயர்த்தினார்; சிலரைப் புனிதமாக்கித் தம்முடன் சேர்த்துக் கொண்டார்; சிலரைச் சபித்துத் தாழ்த்தி, அவர்களே பிரிந்து போன பிறகு அவர்களை விட்டு விட்டார்.

13 குயவன் கையில் களிமண் மிருதுவாகி உருவாகிறது போல,

14 மனிதன் வழிகளெல்லாம் கடவுள் விருப்பப்படியே அமைகின்றன. ஏனெனில் மனிதனை உண்டாக்கித் தமது தீர்மானத்தின்படியே நடத்துகிறவருடைய கையில் அவன் இருக்கிறான்.

15 தீமைக்கு எதிரானது நன்மை; சாவுக்கு எதிரானது வாழ்வு. அது போலவே, நீதிமானுக்கு எதிராகப் பாவி இருக்கிறான். இவ்வண்ணமே உன்னதமானவரின் எல்லாச் செயல்களிலும் இரண்டு இரண்டாகவும், அவை ஒன்றுக்கொன்று எதிரானவையுமாய் இருக்கக் காண்பாய்.

16 நானும் கடைசியாக விழித்தேன்; அறுத்தவர்கள் பின்னால் தப்பிய கொடி முந்திரிப் பழங்களைச் சேகரிக்கிறவன் போல் ஆனேன்.

17 ஆண்டவர் அருளை நான் நம்பினேன்; அறுக்கிறவன் போலத் தொட்டியை நிரப்பினேன்.

18 எனக்காக மட்டுமல்ல- ஆனால், நன்னெறியைத் தேடும் எல்லாருக்காகவும் உழைத்தேனென்று கண்டு கொள்ளுங்கள்.

19 பெரியோரே, அனைத்து மக்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். சபையின் தலைவர்களே, எனக்குச் செவிகொடுங்கள்.

20 புதல்வனுக்கும் மனைவிக்கும் சகோதரனுக்கும் நண்பனுக்கும் உன் வாழ்நாளில் உன் மேல் அதிகாரம் கொடாதே. பிறகு நீ மன வருத்தப்படாதபடிக்கும், உனக்குத் தேவையானவைகளைக் கெஞ்சாதபடிக்கும் உன் செல்வத்தை மற்றொருவனுக்குக் கொடுத்து விடாதே.

21 நீ உயிரோடிருந்து ஆவியை விடும் வரையிலும் எவனும் உன்னை மாற்றாதிருக்கட்டும்.

22 உன் மக்களுடைய கைகளை எதிர்பார்ப்பதை விட உன் மக்கள் உன்னைக் கேட்பது நலம்.

23 உன் எல்லாச் செயல்களிலும் முதன்மையாய் இரு.

24 உன் மகிமைக்குப் பழுது வருவிக்காதே. உன் வாழ்க்கையின் முடிவு நாளில், நீ சாகிற நேரத்தில் உன் செல்வத்தைப் பங்கு பிரித்து விடு.

25 வைக்கோலும் அடியும் சுமையும் கழுதைக்கு; உணவும் கண்டிப்பும் வேலையும் அடிமைக்கு.

26 அவன் கண்டிப்பில் வேலை செய்கிறான்; ஓய்வு தேடுகிறான். அவனைக் கைசோரவிடு; அப்பொழுது தன் விருப்பத்தைத் தேடுவான்.

27 நுகத்தடியும் வடமும் முரட்டுக் கழுத்தை வளைக்கின்றன. ஓயாத வேலைகள் அடிமையை அடக்குகின்றன.

28 கெட்ட மனமுள்ள அடிமைக்கு வேதனையும் விலங்குகளும். சோம்பேறியாய் இராதபடி அவனுக்கு வேலை ஏவு.

29 சோம்பல் மிகுந்த கெடுதிக்குக் காரணமாயிற்று.

30 வேலைகளில் அவனை நிறுத்து; அதுதான் அவனுக்குத் தகுதி. கேளாவிட்டால், விலங்குகளினால் அவனை வளைத்துப்போடு. ஆனால், எவன் மீதும் மிதமிஞ்சி நடவாதே. உண்மையாகவே முக்கியமான யாதொன்றையும் யோசனையில்லாமல் செய்யாதே.

31 உன் அடிமை உனக்குப் பிரமாணிக்கமுள்ளவனானால், அவன் உன் ஆன்மாவைப் போல் உனக்கு இருக்கக் கடவான்; சகோதரனைப் போல் அவனை நடத்து. ஏனென்றால், உன் ஆன்ம இரத்தத்தினால் அவனைக் கண்டடைந்தாய்.

32 அவனை நீ அநியாயமாய் நோகச் செய்தால் ஓடி விடுவான்.

33 ஆத்திரப்பட்டு ஓடிப்போவானேயாகில், நீ தேடுகிறவனை எவ்விடத்தில் தேடுகிறதென்று நீ அறியாய்.

அதிகாரம் 34

1 அறிவில்லாத மனிதனுக்கு வீணான நம்பிக்கையும் பொய்யும் ஆதாரம்; அவிவேகிகள் கனவுகளைப் பெரிதாய் எண்ணுகிறார்கள்.

2 நிழலைப் பிடிக்கிறவன் போலும், காற்றைத் தொடர்ந்து ஓடுகிறவனைப் போலும் பொய்யான காட்சிகளைக் கவனிக்கிறவன் நடந்து கொள்கிறான்.

3 கனவின் தோற்றமும் அதைப் போன்றது. அது மனிதன் முகத்திற்கு முன்பாக அவனது சாயலாக இருக்கின்றது.

4 அசுத்தத்தால் எது சுத்தமாக்கப்படும்? பொய்யினின்று என்ன உண்மை வெளிப்படும்?

5 தவறுள்ள சகுனங்களும் பொய்யான குறிகளும் தீயோருடைய கனவுகளும் வீணாய் இருக்கின்றன.

6 கருவுற்றவளுடைய கனவுகளைப் போல் உன் நினைவிலும் வீண் தோற்றங்கள் உண்டாகின்றன. உன்னத கடவுளிடமிருந்து காட்சி உண்டானாலொழிய, உன் மனத்தை அவைகளில் வைக்காதே.

7 கனவுகள் பலரை மோசம் போகச் செய்தன. அவைகளில் நம்பிக்கை வைத்தவர்கள் ஏமாந்தார்கள்.

8 பொய்யில்லாமலே கட்டளையின் வார்த்தை நிறைவேறும். பிரமாணிக்கமுள்ள வாயில் ஞானம் தெளிவாக்கப்படும்.

9 பரிசோதிக்கப்படாதவன் என்ன அறிவான்? பலவற்றில் பட்டறிந்தவன் பலவற்றை யோசிப்பான். பல கற்றவன் அறிவுச் செறிவாய்ப் பேசுவான்.

10 பட்டறியாதவன் சொற்பமானவைகளை அறிந்திருக்கிறான். பலவற்றைப் பயின்றவனோ அறிவைப் பெருகச் செய்கிறான்.

11 பட்டறியாதவன் எவ்வித காரியங்களை அறிவான்? மோசம் செய்யப்பட்டவன் உபாயம் நிறைந்திருப்பான்.

12 பல இடம் போனதால் நான் பல காரியங்களைக் கண்டேன்; வார்த்தைகளில் பல வழக்கங்களை அறிந்தேன்.

13 சில சமயங்களில் இவைகளைப்பற்றி உயிரிழக்க முதலாய் இருந்தேன்; ஆனால், கடவுள் அருளால் காப்பாற்றப்பட்டேன்.

14 கடவுளுக்கு அஞ்சுகிறவர்களுடைய இதயம் தேடப்படுகின்றது. அவர் பார்வையிலும் அது ஆசீர்வதிக்கப்படும்.

15 அவர்களுடைய நம்பிக்கை தங்களைக் காப்பாற்றுகிறவர் மேல் இருக்கிறது. கடவுளுடைய கண்களும் தம்மை நேசிக்கிறவர்கள் மேல் இருக்கின்றன.

16 ஆண்டவருக்கு அஞ்சுகிறவன் ஒன்றுக்கும் அசையான்; அஞ்சான். ஏனென்றால், அவரே அவன் நம்பிக்கையாய் இருக்கிறார்.

17 ஆண்டவருக்கு அஞ்சுகிறவனுடைய ஆன்மா பேறு பெற்றது.

18 அவன் யாரைப் பார்க்கிறான்? அவனுக்குப் பலமாய் இருக்கிறவர் யார்?

19 ஆண்டவருடைய கண்கள் தமக்குப் பயப்படுகிறவர்கள் மேல் இருக்கின்றன. அவரே வல்லமையுள்ள பாதுகாவலர்; பலத்தின் உறுதி; வெப்பத்தின் போர்வை; நண்பகல் வெயிலின் நிழல்.

20 அவரே தாழ்வில் ஆறுதல்; இழிவில் உதவி; ஆன்மாவை உயர்த்துகிறார்; கண்களை ஒளிர்விக்கிறார்; நலமும் உயிரும் ஆசியும் கொடுக்கிறார்.

21 அநியாயச் சம்பாத்தியத்தைக் கொண்டு பலி கொடுக்கிறவனுடைய காணிக்கை வெறுப்புக்குரியது. அநீதருடைய நிந்தனைகள் அவருக்கு விருப்பமானவை அல்ல.

22 உண்மையினுடையவும் நீதியினுடையவும் வழிகளில் தங்களை நிலை நிறுத்துகிறவர்களுக்கு மட்டுமே கடவுள்.

23 அநீதருடைய ஈகைகளைக் கடவுள் ஏற்றுக் கொள்கிறதில்லை. அக்கிரமிகளுடைய காணிக்கைகளை அவர் பார்க்கிறதில்லை. அவர்களுடைய பலவிதப் பலிகளிலும் அவர்களுக்குப் பாவ மன்னிப்புக் கொடுக்க மாட்டார்.

24 வறியவருடைய பொருட்களைக் கொண்டு பலி ஒப்புக்கொடுக்கிறவன், தந்தை கண் முன்பாக மகனைக் கொலை செய்கிறவன் போல் இருக்கிறான்.

25 வறியோருடைய உணவு அவர்களுடைய உயிர். அவர்களிடமிருந்து அதைப் பறிக்கிறவன் இரத்தத்தின் மனிதனாய் இருக்கிறான்.

26 வேர்வையின் உணவை அபகரிக்கிறவன் தன் அயலானைக் கொல்கிறவன் போல் ஆகிறான்.

27 இரத்தத்தைச் சிந்துகிறவனும், கூலிக்காரனை மோசம் செய்கிறவனும் சகோதரராய் இருக்கிறார்கள்.

28 ஒருவன் கட்டுகிறான்; மற்றொருவன் இடிக்கிறான். வீண் உழைப்பே தவிர அவர்களுக்கு இலாபம் என்ன?

29 ஒருவன் மன்றாடுகிறான்; ஒருவன் சபிக்கிறான். எவன் வார்த்தையைக் கடவுள் கேட்பார்?

30 இறந்தவனைத் தொட்டுக் குளித்துக் கொண்டவன் திரும்பவும் அவனைத் தொடுவானேயாகில், அவன் குளித்ததால் பயன் என்ன?

31 அப்படியே, தன் பாவங்களுக்காக நோன்பு பிடிக்கிறவன் திரும்பவும் அவைகளையே செய்தால், தன்னைத் தாழ்த்திக்கொள்வதனால் என்ன பயன்? அவன் மன்றாட்டைக் கேட்பவர் யார்?

அதிகாரம் 35

1 கட்டளையைக் காப்பாற்றுகிறவன் காணிக்கையைப் பெருகச் செய்கிறான்.

2 கட்டளைகளைக் கவனிப்பதும், எல்லா அக்கிரமத்தினின்றும் அகல்வதும் பயனுள்ள பலியாகும்.

3 அநீதத்தை விட்டகன்று போவது பொறுத்தலை மன்றாடும் பலியாகவும், பாவங்களுக்கு மன்னிப்பாகவும் இருக்கின்றது.

4 மாவுக் காணிக்கை கொடுக்கிறவன் நன்றியறிந்த வணக்கம் செய்கின்றான். இரக்கம் காண்பிக்கிறவன் பலி ஒப்புக்கொடுக்கிறான்.

5 அக்கிரமத்தினின்று அகன்று போவது ஆண்டவருக்கு விருப்பமானது. அநீதத்தினின்று விலகுவது பாவ நிவாரணம்.

6 அப்பொழுது நீ ஆண்டவருடைய முன்னிலையில் வெறுங்கையனாய்க் காணப்பட மாட்டாய்.

7 இவைகளெல்லாம் கடவுள் கட்டளையைப் பற்றிச் செய்யப்படுகின்றன.

8 நீதிமானுடைய காணிக்கை பலிபீடத்தைச் செழிப்பிக்கின்றது; உன்னத கடவுள் திருமுன் இனிய மணமாய் இருக்கின்றது.

9 நீதிமானுடைய பலி விருப்பமாய் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. ஆண்டவர் அவனை மறந்துவிட மாட்டார்.

10 நல்ல மனத்தோடு கடவுளுக்கு வணக்கம் செலுத்து. உன் கைகளின் முதற் காணிக்கைகளைக் குறைக்காதே.

11 ஈகையிலெல்லாம் மகிழ்ந்த முகம் காண்பி; உன் பத்திலொரு பாகங்களை மகிழ்ச்சியாய்க் காணிக்கை கொடு.

12 உன்னத கடவுள் கொடுத்திருப்பதற்குத் தக்க வண்ணம் நீயும் அவருக்குக் கொடு. நல்ல முகத்தோடு உன் கைகளில் உள்ளதைக் கொடு.

13 ஏனென்றால், ஆண்டவர் பதிலளிப்பவராய் இருக்கிறார்; ஏழு மடங்கு உனக்குத் திரும்பக் கொடுப்பார்.

14 தகாத காணிக்கைகளை ஒப்புக்கொடுக்காதே. ஏனென்றால், அவர் அவைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்.

15 அநீதப் பலியைக் கவனியாதே. ஏனென்றால், ஆண்டவர் நீதிபதியாய் இருக்கிறார்; அவரிடம் மனித ஒருதலைச் சார்பு இல்லை.

16 அவர் வறியவனுக்கு விரோதமாய் எவனையும் ஒருதலைச் சார்பாய் ஏற்றுக்கொள்ள மாட்டார்; துன்புறுத்தப் பட்டவனுடைய மன்றாட்டைக் கேட்பார்.

17 அனாதைப் பிள்ளையினுடைய வேண்டுதலைப் புறக்கணிக்க மாட்டார். பெருமூச்சு விட்டு முறையிடும் விதவையைத் தள்ளிவிட மாட்டார்.

18 விதவையின் கண்ணீர்கள் கன்னத்திற்கு இறங்குவதில்லையா? அவைகளைச் சிந்த வைப்பவனுக்கு அவள் அழுகுரல் கேட்பதில்லையா?

19 ஏனென்றால், அவை கன்னத்தினின்று வானம் வரைக்கும் ஏறுகின்றன. மன்றாட்டைக் கேட்கும் ஆண்டவர் அவைகளால் மகிழ்ச்சி அடைவதில்லை.

20 மகிழ்ச்சியோடு கடவுளை ஆராதிக்கிறவன் ஏற்றுக்கொள்ளப்படுவான். அவன் மன்றாட்டு மேகங்கள் வரையிலும் எட்டும்.

21 தன்னைத் தாழ்த்துகிறவனுடைய வேண்டுதல் மேகங்களை ஊடுருவிப் போகும். அது அங்குச் சேர்கிற வரையிலும் ஆறுதல் அடையாது; உன்னத கடவுள் பார்க்கிறவரையிலும் திரும்பிப் போகாது.

22 ஆண்டவரும் தூரமாய்ப் போகமாட்டார்; நீதிமான்களை ஆதரித்துத் தீர்ப்பிடுவார். வல்லமை மிக்கவர் அவர்கள் மீது பொறுமை கொள்ளார்; ஆனால், அவர்கள் முதுகை ஒடிப்பார்.

23 அவர் அகந்தையுள்ளவர்களுடைய கூட்டத்தை ஒழிக்கிற வரைக்கும் அநீதரைப் பழிவாங்குவார்; அக்கிரமிகளுடைய செங்கோல்களை ஒடித்து விடுவார்.

24 அவர் மனிதர்களுக்கு அவரவர் செயல்களுக்குத் தக்கபடியும், ஆதாமுடைய செய்கைகளுக்குத் தக்கபடியும், அவன் வீண் அகந்தைக்குத் தக்கபடியும் கைம்மாறு அளிக்கும் வரைக்கும்,

25 தம் மக்களுக்கு நீதித் தீர்ப்புச் செய்யும் வரைக்கும் பழிவாங்குவார்; நீதிமான்களைத் தம் இரக்கத்தினால் மகிழ்விப்பார்.

26 கோடைக்காலத்தில், மழை மேகங்களைப் போல, துன்ப காலத்தில் கடவுளுடைய இரக்கம் விரும்பத் தக்கதாய் இருக்கின்றது.

அதிகாரம் 36

1 எல்லாவற்றிற்கும் ஆண்டவரான கடவுளே, எங்கள் மீது இரக்கமாயிரும்; எங்களை நோக்கிப் பார்த்து, உம் இரக்கங்களின் தன்மையை எங்களுக்குக் காண்பியும்.

2 உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லையென்று அறியவும், உம் மகத்துவங்களை வெளிப்படுத்தவும் தேடாத அஞ்ஞானிகள் மீது உமது பயத்தை வரவிடும்.

3 உமது வல்லமையைக் காணும்படி புற இனத்தவர் மேல் உமது கையை நீட்டும்.

4 அவர்களுக்கு முன்பாக எங்களிடையே நீர் கொண்டாடப்பட்டது போல, எங்களுக்கு முன்பாக அவர்களிடையே நீர் மகிமைப்படுத்தப்படுவீர்.

5 உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லையென்று, ஆண்டவரே, நாங்கள் அறிந்திருப்பது போல, அவர்களும் உம்மை அறியக்கடவார்கள்.

6 நீர் புதுமைகளைப் புதுப்பியும்; புதிய அற்புதங்களைச் செய்யும்.

7 உமது கையையும், வலக்கையையும் மகிமைப்படுத்தும்.

8 உக்கிரத்தைத் தூண்டிக் கோபத்தைப் பொழியும்.

9 விரோதியை ஒழித்துப் பகைவனைத் துன்பத்திற்குள்ளாக்கும்.

10 உம் மகத்துவங்களை அவர்கள் வெளிப்படுத்தும்படியாய், முடிவை நினைத்துக் காலத்தை தீவிரியும்.

11 தப்பினவன் கோப நெருப்பால் விழுங்கப்படக்கடவான். உம் மக்களுக்குத் தீங்கு செய்கிறவர்கள் அழிவைக் காணக்கடவார்கள்.

12 எங்களை மிஞ்சிய வேறொருவரும் இல்லை என்று சொல்லும் பகைவர்களுடைய தலைவரின் தலையை நசுக்கும்.

13 உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லையென்று அறியவும், உம் மகத்துவங்களை வெளிப்படுத்தவும் யாக்கோபின் கோத்திரத்தையெல்லாம் ஒன்றாய்ச் சேரும்; தொடக்கத்தில் இருந்தது போல் அவர்களை உரிமையாய் ஏற்றுக் கொள்வீர்.

14 உமது பெயரால் அழைக்கப்பட்ட மக்கள் மீதும், உம்முடைய மூத்த பிள்ளைக்கு ஒத்த இஸ்ராயேல் மீதும் நீர் இரக்கமாயிரும்.

15 நீர் புனிதப்படுத்திய நகரமும், இளைப்பாறும் நகரமுமாகிய யெருசலேமின் மீது இரக்கமாயிரும்.

16 உம் அற்புத வார்த்தைகளால் சீயோனையும், உமது மகிமையால் உம் மக்களையும் நிரப்பும்.

17 உமது படைப்பின் தொடக்க முதல் இருக்கிறவைகளுக்குச் சான்று கொடும். முன்னிருந்த இறைவாக்கினர்கள் உமது பெயரால் உரைத்த இறைவாக்குகளை மெய்யாக்கும்.

18 உம் இறைவாக்கினர்கள் உண்மையுள்ளவர்களென்று நிரூபிக்க உம் ஊழியருக்குச் சம்பாவனை அளியும்; உம் ஊழியர்களின் மன்றாட்டைக் கேட்டருளும்.

19 உம் மக்களின் மேல் ஆரோனின் ஆசிக்குத் தகுந்தாற் போல, எங்களை நீதியின் வழியில் நடத்தும். இம்மண்ணிலுள்ள யாவரும், நீரே எக்காலத்தையும் காணும் கடவுள் என்று அறியக்கடவார்கள்.

20 வயிறு எல்லா உணவையும் உண்கின்றது; ஆனால், ஓர் உணவு மற்றொன்றை விட மேலானது.

21 தொண்டை காட்டு மிருகத்தின் இறைச்சியை அறிகிறது; அது போலவே, பக்தியுள்ள இதயமும் பொய்யான வார்த்தைகளை அறிகின்றது.

22 கெட்ட இதயம் வருத்தம் கொடுக்கும்.

23 துணிவுள்ளவன் அதை எதிர்ப்பான். பெண் எவ்வித மனிதனையும் ஏற்றுக் கொள்வாள். ஆனால், ஓர் இளம் பெண் மற்றொருத்தியை விட நல்லவள்.

24 பெண்ணின் அழகு அவள் கணவன் முகத்தை மகிழ்விக்கும். மனிதனுடைய எல்லா ஆசையுணர்விலும் ஆசையே முந்தினது.

25 நலப்படுத்தும் நாவானால், சாந்தமும் இரக்கமும் காண்பிக்கும்; அவளுடைய கணவன் மனிதர் மக்களைப் போலல்லன்.

26 நல்ல மனைவியை அடைந்தவன் பொருள் சேர்க்கத் தொடங்குகிறான்; அவளுக்குத் தகுந்த துணையாய் இருக்கிறான்; இளைப்பாறும் தூணாய் இருக்கிறான்.

27 வேலியில்லாத இடத்தில் பொருள் பறிமுதலாகும். பெண் இல்லாத இடத்தில் மனிதன் வறுமையுற்றுப் பெருமூச்சு விடுவான்.

28 ஊரூராய் ஓடி ஒளிந்து தீவிரிக்கும் திருடனைப் போலத் தங்கும் இடம் இல்லாதவனையும், இரவிலே கண்ட இடமெல்லாம் தங்குகிறவனையும் நம்புவார் யார்?

அதிகாரம் 37

1 எவ்வித நண்பனும்: நான் நட்பால் கட்டுண்டேன் என்பான். ஆயினும், நண்பன் பேருக்கு மட்டும் நண்பனாய் இருக்கிறான். இது மரணம் வரையிலும் வருத்தத்திற்குரிய காரியம் அன்றோ?

2 அன்றியும், தோழனும் நண்பனும் பகைவர்களாக மாறுகிறார்கள்.

3 ஓ வீணான, வெறுக்கத்தக்க எண்ணமே! நிலத்தை உன் தீய குணத்தாலும் கபடத்தாலும் மூடுவதற்கு எவ்விடத்தினின்று நீ தோன்றினாய்?

4 தோழன் நண்பனோடு செல்வத்தில் மகிழ்கிறான். இக்கட்டுக் காலத்திலோ பகைவனாகிறான்.

5 வயிற்றைப் பற்றித் தோழன் நண்பனோடு அனுதாபம் கொள்கிறான்; பகைவனுக்கு விரோதமாய்க் கேடயம் எடுக்கிறான்.

6 உன் மனத்தில் உன் நண்பனை மறவாதே; உன் செல்வத்தில் அவனை நினையாதிராதே.

7 உனக்குத் தீங்கு செய்யத் தேடுகிறவனோடு ஆலோசனை செய்யாதே; உன் மீது பொறாமையுள்ளவர்களிடத்தினின்று உன் கருத்தை மறைத்துக் கொள்.

8 அறிவுரையாளர் அனைவரும் அறிவுரை கொடுப்பார்கள்;

9 ஆனால், தனக்கே அறிவுரை கொடுத்துக் கொள்பவனிடத்தினின்று உன் ஆன்மாவைக் காத்துக் கொள்; அவனுக்குத் தேவையானது என்னவென்று முன்பே அறிந்துகொள்; ஏனென்றால், அவன் தன் நலத்தையே கருதுவான்.

10 சில வேளை பூமியில் முளையடித்து உனக்குச் சொல்வான்.

11 உன் வழி நல்ல வழி தான் என்று உனக்குச் சொல்லி, அதற்கு விரோதமாய் உனக்கு என்ன நேர்கிறதென்று பார்க்க நின்று கொண்டிருப்பான்.

12 மறைப்பற்று இல்லாதவனிடம் புனிதத் தன்மையைப் பற்றியும், அநீதனோடு நீதியைப் பற்றியும், பெண்ணிடம் அவள் பொறாமைப்படுகிறவளைப் பற்றியும், கோழையிடம் சண்டையைப் பற்றியும், வியாபாரியிடம் விலைகளைப் பற்றியும், கொள்கிறவனிடம் விற்பனையைப் பற்றியும், பொறாமையுள்ளவனிடம் நன்றியறிதலைப் பற்றியும்,

13 பக்தியில்லாதவனிடம் பக்தியைப் பற்றியும், அயோக்கியனிடம் யோக்கியத்தைப் பற்றியும், குடியானவனிடம் அவன் வேலைகளைப் பற்றியும்,

14 ஆண்டு வேலைக்காரனிடம் ஆண்டு முடிவைப் பற்றியும், சோம்பேறியான ஊழியனிடம் ஓயாத வேலையைப் பற்றியும் பேசு. எல்லா அறிவுரைகளையும் பின்பற்றத் தேவையில்லை.

15 ஆனால், தெய்வ பயத்தைக் கைக்கொண்டு நடக்கிறானென்று உனக்குத் தெரிந்திருக்கிற புண்ணியவானையும்,

16 உன் ஆன்மாவிற்குத் தகுந்த ஆன்மா உள்ளவனையும், நீ இருளில் தடுமாறும் போது உன்னுடன் அனுதாபப் படுகிறவனையும் அடிக்கடி கண்டுகொள்.

17 நல்லெண்ணமுடைய இதயத்தை உன்னிடத்தில் நிலைப்படுத்து; ஏனென்றால், அதை விட வேறு யாதொன்றும் உனக்கு மிக்க பயனுள்ளதன்று.

18 பார்வையிடுவதற்கு உயர்ந்த இடத்தில் உட்கார்ந்திருக்கும் ஏழு கண்காணிகளை விடப் புண்ணியவானின் ஆன்மா உண்மையைத் தெளிவாய்த் தெரிவிக்கின்றது.

19 இவைகளிலெல்லாம் உன்னத கடவுள் உன் வழியை உண்மையில் நடத்தும்படி அவரை மன்றாடு.

20 எல்லாச் செயல்களுக்கும் முன் உண்மையான வார்த்தையையும் உறுதியான எண்ணத்தையும் கொண்டிரு.

21 செருக்குள்ள வார்த்தை இதயத்தை மாற்றும். வார்த்தையினின்று நான்கு காரியங்கள் புறப்படுகின்றன: நன்மையும் தீமையும், வாழ்வும் சாவும். இவைகளை எப்போதும் நடத்துவது நாவு தான். ஒருவன் திறமையுள்ளவனாய் இருந்து பலருக்குக் கற்றுக்கொடுக்கிறான்; தன் ஆன்மாவிற்கோ பயனற்றவனாய் இருக்கிறான்.

22 தேர்ந்தவன் ஒருவன் பலரைக் கற்பித்து வைக்கிறான்; தன் ஆன்மாவிற்கு இன்பமாய் இருக்கிறான்.

23 நியாயப் புரட்டாய்ப் பேசுகிறவன் பகைக்கு உரியவன்; அவன் எந்தக் காரியத்திலும் கைவிடப்படுவான்.

24 ஆண்டவரிடமிருந்து அவனுக்கு வரம் அளிக்கப்படவில்லை. ஏனென்றால், ஞானம் என்பதே அவனிடம் இல்லை.

25 தன் ஆன்மாவிற்கு ஞானமுள்ளவனே உண்மையான ஞானி. அவன் அறிவின் கனி புகழத் தக்கது.

26 ஞானமுள்ளவன் தன் மக்களுக்குப் போதிக்கிறான். அவன் அறிவின் கனிகள் நிலையானவை.

27 ஞானமுள்ளவன் ஆசியால் நிரப்பப்படுவான். பார்க்கிறவர்கள் அவனைப் புகழ்வார்கள்.

28 மனிதன் வாழ்க்கை நாட்களின் எண்ணிக்கையில் அமைந்துள்ளது. இஸ்ராயேலின் நாட்களோ கணக்கில்லாதவை.

29 ஞானமுள்ளவன் குடிகளுக்குள் புகழை உரிமை கொள்வான். அவன் பெயர் நித்தியத்திற்கும் நிலைக்கும்.

30 மகனே, உன் வாழ்நாளில் உன் ஆன்மாவைப் பரிசோதித்துப் பார். தீய குணமுள்ளதாய் இருந்தால், அதற்கு அதிகாரம் கொடாதே.

31 ஏனென்றால், அனைத்தும் அனைவர்க்கும் தகுந்தவை அல்ல. எல்லா ஆன்மாக்களுக்கும் எல்லா விதமும் விருப்பப்படா.

32 எல்லா விருந்திலும் ஆவல் கொள்ளாதே. எவ்விதப் பண்டத்தையும் ஆவலாய் உண்ணாதே.

33 ஏனென்றால், பல பண்டங்களில் நோய் உண்டு. ஆவலோடு உண்பது வயிற்று நோக்காடு வருவிக்கும்.

34 உண்டிப் பிரியத்தால் பலர் மாண்டார்கள். மட்டுணவு கொள்பவனோ வாழ்நாளை அதிகரிப்பான்.

அதிகாரம் 38

1 தேவையின் பொருட்டு மருத்துவனுக்கு மரியாதை செய். ஏனென்றால், உன்னத கடவுள் அவனைப் படைத்தார்.

2 கடவுளிடமிருந்து எல்லா மருந்தும் உண்டாகின்றன. மருத்துவன் அரசனிடமிருந்து வெகுமதி பெறுவான்.

3 மருத்துவனுடைய கலை அவன் தலையை உயர்த்துகின்றது. அவன் பெரியோர் முன்பாகக் கொண்டாடப்படுவான்.

4 பூமியினின்று கடவுள் மருந்து வகைகளைப் படைத்தார். விவேகமுள்ள மனிதன் அவைகளை வெறுக்கமாட்டான்.

5 கசப்பான தண்ணீர் மரத்துண்டால் இனிமையாக்கப் பட்டதில்லையா?

6 அவைகளுடைய குணம் மனிதனுடைய அறிவுக்கு வெளிப்பட்டது. தம் அற்புதச் செயல்களில் மகிமைப் படுத்தப்படும்படி கடவுள் அவைகளின் கலையை மனிதருக்குக் கொடுத்தார்.

7 அவைகளைக் கொண்டு மருத்துவம் செய்கிறவன் வேதனையைத் தணிப்பான். மருந்து கூட்டுகிறவன் இன்பமான மருந்தைச் செய்வான்; நலம் தரும் தைலங்களைக் கூட்டுவான்; அவனுடைய வேலைகள் முடிவு பெறா.

8 ஏனென்றால், பூமியின் முகத்தே கடவுளின் தயவு இருக்கின்றது.

9 மகனே, உன் நோயில் உன்னைத் தானே அசட்டை செய்யாதே. ஆனால், ஆண்டவரை மன்றாடு; அவரும் உன்னைக் குணமாக்குவார்.

10 பாவத்தை அகற்று; கைகளை மாசுபடுத்தாதே; உன் இதயத்தை எல்லாக் குற்றத்தினின்றும் தூய்மைப்படுத்து.

11 மாவினுடைய இனிப்பையும் நினைவையும் ஒப்புக்கொடு; உன் காணிக்கையை அதிகரி; மருத்துவனுக்கும் இடம் கொடு.

12 ஏனென்றால், ஆண்டவர் அவனைப் படைத்தார். அவனுடைய வேலைகள் தேவையாய் இருக்கிறபடியால், உன்னை விட்டு அவன் போகாதிருக்கட்டும்.

13 ஏனென்றால், மருத்துவர்களுடைய கைகளில் விழ வேண்டிய காலம் உண்டு.

14 இவர்களும் அவர்கள் வாழ்நாளைக் கழிக்க வேண்டி, ஓய்வும் நலமும் அவர்களுக்குத் தந்தருள ஆண்டவரை மன்றாடுவார்கள்.

15 தன்னைப் படைத்தவர் முன்னிலையில் குற்றம் கட்டிக் கொள்கிறவன் மருத்துவனுடைய கையில் விழுவான்.

16 மகனே, இறந்தவனுக்காகக் கண்ணீர் விடு; கொடுமைகளை அனுபவித்தவன் போல் அழத்தொடங்கு; வழக்கப்படி அவனுடைய பிணத்தை மூடி, அவனுடைய அடக்கத்தை அசட்டை செய்யாதே.

17 ஆனால், புறணியைத் தவிர்க்க ஒருநாள் முழுவதும் கடுந் துக்கம் கொண்டாடு. துன்பத்தைப்பற்றி ஆறுதல் அடை.

18 புறணியைத் தவிர்க்க, அவனுடைய நிலைக்குத் தக்கபடி ஒரு நாளோ இரண்டு நாளோ துக்கம் கொண்டாடு.

19 ஏனென்றால், துன்பத்தினால் சாவு தீவிரிக்கின்றது; பலத்தை மூடுகின்றது. இதய வருத்தம் தலை குனியச் செய்கின்றது.

20 இரகசியத்தில் துன்பம் நிலைக்கும். வறியவனுடைய பொருள் அவனுடைய இதயத்திற்குத் தக்கதாய் இருக்கும்.

21 உன் இதயத்தை வருத்தத்திற்குக் கையளிக்காதே; அதை உன்னை விட்டு அகற்றி விடு; மேலும் முடிவுகளை நினைத்துக் கொள்.

22 மறந்துவிடாதே; ஏனென்றால், திரும்புவதில்லை; அவனுக்கு உன்னால் யாதொரு பயனும் இல்லை; உனக்குத் தானே நட்டம் வருவித்துக் கொள்வாய்.

23 என் தீர்மானத்தை நினைத்துக் கொள்; உன்னுடையதும் இவ்வண்ணம் தான் இருக்கும்: நேற்று எனக்கு; இன்று உனக்கு.

24 இறந்தவனுடைய இளைப்பாற்றியில் அவனுடைய ஞாபகத்தை இளைப்பாற வை. அவன் உயிர் பிரிந்து போகையில் அவனுக்கு ஆறுதல் கொடு.

25 படித்தவனுடைய ஞானத்தை ஓய்வு காலத்தில் அறியலாம். செயலை மட்டுப்படுத்துகிறவன் ஞானத்தை அடைவான்; அந்த ஞானத்தால் நிரப்பப்படுவான்.

26 ஆனால், ஏர் பிடிக்கிறவனும், கழியில் பெருமை கொள்கிறவனும், தாறு போட்டு எருதுகளை ஓட்டுகிறவனும் தன் தன் வேலைகளில் காலம் கழிக்கிறான்; தன் மக்களிடத்திலும் எருதுகளைப் பற்றிப் பேசுகிறான்.

27 படைச்சால் ஓட்டுவதில் தன் இதயத்தைச் செலுத்துகிறான்; பசுக்களைக் கொழுக்க வைப்பதில் அவனுக்குக் கவனம் உண்டு.

28 இப்படியே தச்சனும் சிற்பியும். அவன் இரவைப் பகலைப் போலக் கழிக்கிறான்; சித்திர அடையாளங்களைச் சித்தரிக்கிறான். அவனுடைய கவனமான வேலை உருவத்தை மாற்றுகிறது. அவன் உருவத்தின் சாயலில் தன் இதயத்தைச் செலுத்துகிறான். அவன் கவனிப்பு வேலையை நிறைவாக்குகின்றது.

29 பட்டடை அண்டை உட்கார்ந்து இரும்பு வேலையைக் கவனிக்கும் கொல்லனும் அப்படியே. நெருப்பின் வெப்பம் அவன் தசையைச் சுடுகின்றது. உலையின் வெப்பத்தில் அவன் போராடுகிறான்.

30 சம்மட்டியின் சத்தம் அவன் காதைக் கிழிக்கிறது. கருவியின் உருவத்தின் மீது அவன் கண் இருக்கின்றது.

31 வேலைகளின் முடிவின் மீது அவன் தன் இதயத்தை வைப்பான். அவன் விழிப்பு வேலையை நிறைவாய் அலங்கரிக்கும்.

32 தன் வேலையில் உட்கார்ந்து தன் கால்களால் சக்கரத்தைச் சுற்றும் குயவனும் அப்படியே. தன் வேலையின் நிமித்தம் எப்போதும் அவன் கவலை கொள்கிறான். அவன் வேலையெல்லாம் அளவு முறையில் இருக்கின்றது.

33 தன் கையில் களிமண்ணை உருவாக்குகிறான்; தன் கால்களால் அதனைப் பதமாக்குகிறான்.

34 பூச்சுப் பூசுதலில் தன் கவனத்தைச் செலுத்துகிறான். அவன் விழிப்பு சூளையைச் சுத்தப்படுத்துகின்றது.

35 இவர்கள் எல்லாரும் தங்கள் கைகளை நம்பினார்கள். ஒவ்வொருவனும் தன் தொழிலில் ஞானியாய் இருக்கிறான்.

36 இவர்கள் இல்லாது நகரங்கள் கட்டப்படுவதில்லை.

37 ஆனால், அவர்கள் அங்கு வாழ்வதில்லை; உலாவுவதில்லை சங்கத்திலும் புகுவதில்லை.

38 நீதிபதியின் இருக்கையில் அவர்கள் அமர மாட்டார்கள்; தீர்மானத்தின் தீர்ப்பை அவர்கள் கண்டுபிடிக்கமாட்டார்கள்; போதகத்தையும் நன்னெறியையும் வெளிப்படையாய் அறிவிக்க மாட்டார்கள்; உவமைகளிலும் அவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

39 ஆனால், காலத்துக்கும் நிற்கும் பொருட்கள் அவர்களால் உறுதியடைகின்றன. அந்தத் தொழிலில் அவர்களுடைய மன்றாட்டு கேட்கப்படும். தன் ஆன்மாவை அதில் செலுத்துகிறவனும் ஆண்டவருடைய கட்டளைகளைத் தேடுகிறவனும் அப்படியே.

அதிகாரம் 39

1 ஞானி முன்னோர் எல்லாருடைய ஞானத்தையும் தேடுவான்; இறைவாக்கினர் உரைகளை வாசிப்பதில் தன் காலத்தைக் கழிப்பான்.

2 பேர்போன மனிதருடைய உரைகளைக் காப்பாற்றுவான்; உவமைகளை நுட்பமாகப் பரிசோதிப்பான்.

3 பழமொழிகளின் இரகசியங்களை ஆராய்வான்; உவமைகளின் மறை பொருட்களின் பயிற்சி செய்வான்.

4 பெரியோர் நடுவே வேலையில் அமர்வான்; அதிகாரிகள் முன்னிலையில் தோன்றுவான்.

5 புற இனத்தாருடைய நாட்டில் பயணம் செய்வான்; மனிதரிடத்தில் நன்மையும் தீமையும் சோதித்துப் பார்ப்பான்.

6 தன்னைப் படைத்த கடவுள்பால் விழித்திருப்பதற்குத் தன் இதயத்தைக் கையளிப்பான்; உன்னத ஆண்டவருடைய முன்னிலையில் மன்றாடுவான்.

7 செபத்தில் தன் வாயைத் திறப்பான்; தன் குற்றங்களுக்காக மன்றாடுவான்.

8 ஏனென்றால், மகத்தான ஆண்டவர் மனம் வைப்பாராயின், அறிவுடைமையால் அவனை நிரப்புவார்.

9 தமது ஞானத்தின் போதகங்களை மழையைப் போல வரவிடுவார். அவனும் தன் செபத்தில் ஆண்டவரைப் போற்றுவான்.

10 அவர் அவனுடைய எண்ணத்தையும் நெறியையும் நடத்துவார். அவன் மறை பொருட்களை சிந்தித்துப் பார்ப்பான்.

11 அவர் தமது போதகத்தின் நெறியை வெளிப்படுத்துவார். அவன் ஆண்டவர் உடன்படிக்கையின் கட்டளையில் மகிமை கொள்வான்.

12 பலர் அவனுடைய ஞானத்தைப் புகழ்வார்கள். அவன் எக்காலத்திற்கும் அழிவடைய மாட்டான்.

13 அவன் நினைவு போய்விடாது. தலைமுறை தலைமுறைக்கும் அவன் பெயர் கொண்டாடப்படும்.

14 அவன் ஞானத்தைக் குடிகளும் சொல்லிக் காட்டுவார்கள்; சபையும் அவன் புகழ்ச்சியைக் கொண்டாடும்.

15 அவன் நெடுங்காலம் வாழ்ந்தால் ஆயிரம் பேரைவிடப் புகழ் அடைவான்; இறந்தாலும் அவனுக்கு மகிமை உண்டு.

16 இன்னும் பேசுவதற்கு நான் ஆர்வம் நிறைந்தவனாய் இருக்கிறபடியால் சிந்தித்துப் பார்ப்பேன்.

17 எனக்குக் கேட்கப்படும் குரலாவது: கடவுளின் கனிகளே, நான் சொல்வதைக் கேளுங்கள். தண்ணீர்க் கரைகளில் நடப்பட்ட ரோசாவைப் போலக் கனிகளைக் கொடுங்கள்.

18 லீபானைப் போல இனிய மணத்தைக் கொடுங்கள்.

19 லீலியைப் போல மலர்களைக் கொடுங்கள்; மணத்தைக் கொடுங்கள்; அழகை அணிந்து கொள்ளுங்கள்; இன்னிசை பாடுங்கள்; ஆண்டவரை அவருடைய செயல்களில் போற்றுங்கள்.

20 அவருடைய பெயருக்கு மகிமை கொடுங்கள்; உங்கள் உதடுகளின் ஓசையால் அவருக்குத் துதி பாடுங்கள். உதடுகளின் இன்னிசைகளிலும் வீணைகளிலும் போற்றிப் புகழுங்கள்.

21 ஆண்டவரின் எல்லாச் செயல்களும் மிகச் சிறந்தவை.

22 அவர் வார்த்தையால் தண்ணீர் மேடை போல் நின்றது; அவரது கட்டளையால் நீர்த்திரள் குளங்களைப் போல் ஆயிற்று.

23 ஏனென்றால், அவர் ஆணையால் அனைத்தும் நலம் பெறுகின்றன; அவருடைய செயலில் குறை எதுவும் இல்லை.

24 எல்லா மனிதருடைய செயல்களும் அவருக்கு முன்பாக இருக்கின்றன. அவருடைய கண்களுக்கு மறைவானது யாதொன்றும் இல்லை.

25 காலா காலமும் அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருடைய முன்னிலையில் அற்புதமானது ஒன்றும் இல்லை.

26 இதென்ன, அதென்ன என்று சொல்லத்தகாது. ஏனென்றால், அனைத்தும் தத்தம் காலத்தில் தேடப்படும்.

27 அவருடைய ஆசி ஆறு போலப் பெருகும்.

28 வெள்ளப் பெருக்கு எப்படிப் பூமியைக் கவர்ந்து கொண்டதோ, அப்படியே அவரைத் தேடாத மக்களை அவருடைய கோபமும் கைப்பற்றிக் கொள்ளும்.

29 நீர்த்திரளை மாற்றி, பூமியை உலர்த்தி, தம் மக்களுக்குப் பாதையாக ஏற்படுத்தினார். அதுவே பாவிகளுக்கு அவரது கோபத்தின் தண்டனைகளாகவும் அமைந்தது.

30 ஏனென்றால், நல்லவர்களுக்கு நன்மையான காரியங்கள் தொடக்கத்தில் உண்டாக்கப்பட்டன. அவ்வாறே தீயோருக்கு நன்மையும் தீமையும் உண்டாக்கப்பட்டன.

31 மனிதருடைய வாழ்க்கைக்கு இன்றியமையாதவைகளாவன: தண்ணீர், நெருப்பு, இரும்பு, உப்பு, பால், கோதுமை, உரொட்டி, தேன், கொடிமுந்திரிக்குலை,

32 எண்ணெய், உடை- இவையெல்லாம் புண்ணியவான்களுக்கு நன்மையாக இருப்பது போல, அக்கிரமிகளுக்கும் பாவிகளுக்கும் தீமையாக மாற்றப்படுகின்றன.

33 பழிக்காக உண்டாக்கப்பட்ட படைப்புகளும் உண்டு. அவை தங்கள் அக்கிரமத்தில் தங்கள் வாதைகளை நிலைப்படுத்தின.

34 முடிவு காலத்தில் அகோரத்தைப் பொழிந்து, தங்களை உண்டாக்கினவருடைய கோபத்தை அவை நிறைவு செய்யும்.

35 நெருப்பு, கல்மழை, பஞ்சம், சாவு- இவையெல்லாம் பழிக்காக உண்டாக்கப்பட்டன.

36 மிருகங்களுடைய பற்களும் தேள்களும் பாம்புகளும் அக்கிரமிகளை வேரறுக்கப் பழிவாங்கும் வாளைப் போல் இருக்கின்றன.

37 அவருடைய கட்டளைகளில் உண்டு இன்புற்றிருக்கின்றன; தேவையிருப்பின் பூமியில் தயாராக்கப்படுகின்றன. காலம் வரும் போது அவை கட்டளையை மீறா.

38 ஆதலால், தொடக்கத்திலேயே நான் உறுதிப்படுத்தப்பட்டேன்; ஆலோசித்தேன்; நினைத்தேன்; எழுதி வைத்தேன்.

39 ஆண்டவருடைய செயல்களெல்லாம் சிறந்தவை. அவர் அததன் காலத்தில் ஒவ்வொன்றையும் கொடுத்தருள்கிறார்.

40 இது அதை விடக் கெடுதியானது என்று சொல்லலாகாது. ஏனென்றால், காலம் வரும் போது அனைத்தும் வெளிப்படுத்தப்படும்.

41 இப்போதோ முழு இதயத்தோடும் வாக்கினாலும் ஆண்டவருடைய பெயரைப் போற்றித் துதியுங்கள்.

அதிகாரம் 40

1 எல்லா மனிதருக்கும் பெரும் வேலை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆதாமின் மக்கள் மேல் அவர்கள் தாய் வயிற்றினின்று வெளிப்பட்ட நாள் முதல், எல்லாருக்கும் அன்னையாகிய (பூமியில்) அடக்கமாகும் நாள் வரையிலும் பாரச்சுமை வைக்கப்பட்டிருக்கின்றது.

2 அவர்களுடைய எண்ணங்களும், இதயத்தின் பயங்கரமும், வருங்காரியங்களின் கவலையும், முடிவு நாளும் பாரச்சுமை போல் ஆகும்.

3 மகிமையின் அரியணையில் அமர்ந்திருப்பவன் முதல் தூசியிலும் சாம்பலிலும் தாழ்த்தப்பட்டவன் வரையில் எல்லாரும் இவ்வித ஏக்கமுள்ளவராகவே இருக்கிறார்கள்.

4 பட்டுடுத்தி முடி தரிப்பவன் முதல் முரட்டுத் துணியால் மூடப்பட்டவன் வரையில் எல்லாரும் கோபம், பொறாமை, கலகம், கலக்கம், சாவின் பயம், தீராத கோபம், சச்சரவு ஆகியவைகளுக்கு உள்ளாகிறார்கள்.

5 படுக்கையில், இளைப்பாற்றி நேரத்தில் இரவுத் தூக்கம் அவன் எண்ணத்தை மாற்றுகின்றது.

6 இளைப்பாற்றியில் சிறிதும் இளைப்பாற்றி இல்லை. தூக்கத்திலும் பகலிற் போலவே கவலை கொண்டிருக்கிறான்.

7 சண்டை நாளில் தப்பியோடினவனைப் போலத் தன் இதயப் பார்வையில் கவலை கொண்டிருக்கிறான்; அவன் தன் மீட்புக் காலத்தில் எழுந்திருந்தான்; பயமின்மையைப்பற்றி ஆச்சரியப்படுகிறான்.

8 இவ்வித ஏக்கம் எல்லாப் படைப்புகளிலும்- மனிதன் முதல் மிருகங்கள் வரையிலும்- உண்டு. ஆனால், பாவிகளிடத்திலோ அது ஏழு மடங்கு அதிகமாக இருக்கிறது.

9 மேலும் சாவு, இரத்தம், சண்டை, வாள், கொடுமைகள், பஞ்சம், அழிவு, கொள்ளைநோய்-

10 இவை யாவும் அக்கிரமிகளின் பொருட்டு உண்டாக்கப்பட்டன. அவர்களின் பொருட்டே வெள்ளப் பெருக்கும் உண்டானது.

11 மண்ணினின்று தோன்றின யாவும் மண்ணாக மாற்றப்படும். நீர்த்திரளெல்லாம் கடலுக்குத் திரும்பி விடும்.

12 எல்லா அநீத ஈகையும் அக்கிரமமும் அழித்தொழிக்கப்படும்; விசுவாசமோ நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும்.

13 அநீதருடைய செல்வம் ஆற்றைப் போல் வற்றிப் போகும்; மழையில் பெரிய இடியைப் போலக் காணப்படும்.

14 மனிதன் தன் கைகளைத் திறப்பதனால் மகிழ்ச்சி அடைவான். ஆனால், கட்டளைகளை மீறி நடக்கிறவர்கள் முடிவில் வேரறுக்கப்படுவார்கள்.

15 அக்கிரமிகளுடைய சந்ததியார் கிளைகளை அதிகரிக்கச் செய்யார்கள். அசுத்த வேர்கள் கற்பாறையின் உச்சியில் உலர்ந்து போகும்.

16 தண்ணீர் மேலும் ஆற்றங்கரையிலுமுள்ள எல்லாப் பசுஞ் செடிகளும் மற்றப் பயிர்ச் செடிகளுக்கு முன்பே பிடுங்கி எறியப்படும்.

17 தயாள குணம் ஆசியால் சிங்காரவனத்தைப் போல் இருக்கின்றது. இரக்கம் நித்தியத்திற்கும் நிலை நிற்கும்.

18 தனக்குப் போதுமான மட்டும் சம்பாதிக்கும் தொழிலாளியின் வாழ்க்கை இன்பமுள்ளதாய் இருக்கின்றது. அவன் அதில் செல்வத்தைக் காண்பான்.

19 ஒருவன் தன் பிள்ளைகள் மூலமும், நகரத்தைக் கட்டுவதன் மூலமும் பேரெடுப்பான். மாசற்ற மனைவியோ இவைகளுக்கு மேலாக மதிக்கப்படுவாள்.

20 மதுவும் இன்னிசையும் இதயத்தை மகிழ்விக்கின்றன. ஞானத்தின் நேசமோ இவ்விரண்டுக்கும் மேலானது.

21 புல்லாங்குழல்களும் வீணையும் இனிய இசையை எழுப்புகின்றன. ஆனால், இனிய நாவு இவ்விரண்டுக்கும் மேலாக இருக்கின்றது.

22 அழகையும் எழிலையும் உன்னுடைய கண் நாடுகின்றது. இவைகளுக்கு மேலானது பசுமையான விளைச்சல்.

23 நண்பனும் தோழனும் தக்க நேரத்தில் உதவுகிறார்கள். ஆனால், இவ்விருவருக்கும் மேலாவாள் கணவனோடு இருக்கிற மனைவி.

24 துன்ப காலத்தில் சகோதரர் உதவி புரிகிறார்கள். இரக்கமோ அவர்களை விட அதிகமாய்க் காப்பாற்றும்.

25 பொன்னும் வெள்ளியும் கால்களின் உறுதி. ஆனால், இவ்விரண்டையும் விட மேலானது பயனுள்ள அறிவுரை.

26 செல்வமும் ஆற்றலும் இதயத்தை உயர்த்துகின்றன. தெய்வ பயமோ இவைகளை விட மேலானது.

27 தெய்வ பயத்தில் குறை ஒன்றும் இல்லை. அதில் உதவி தேட வேண்டியதன் தேவை இல்லை.

28 தெய்வ பயம் ஆசி நிறைந்த சிங்காரவனத்தைப் போல் இருக்கின்றது. எல்லா மகிமையையும் விடப் பெரிய மகிமையால் அவனை மூடினது.

29 மகனே, உன் வாழ்நாளில் பிச்சை எடுக்காதே. ஏனென்றால், பிச்சை எடுப்பதை விடச் சாவது நல்லது.

30 பிறரின் உணவை நாடுகின்றவனுடைய வாழ்க்கை வாழ்க்கையன்று. ஏனென்றால், அவன் பிறனுடைய உணவுப் பொருட்களால் தன் ஆன்மாவைப் பேணுகிறான்.

31 நன்னெறியும் கல்வியுமுள்ள மனிதன் தன்னைத் தானே காத்துக் கொள்கிறான்.

32 அவிவேகியின் வாயில் பிச்சையெடுத்தல் போற்றப்படும். அவனுடைய வயிற்றில் நெருப்பு பற்றி எரியும்.

அதிகாரம் 41

1 ஓ சாவே, தன் செல்வங்களில் ஆர்வம் வைத்திருக்கும் மனிதனுக்கு உன் நினைவு எவ்வளவோ கசப்பாய் இருக்கிறது!

2 எல்லாவற்றிலும் தப்பின்றித் தன் வழிகளைச் செலுத்தும் அமைதியுள்ள மனிதனுக்கும், இன்னும் உணவு உட்கொள்ள வலுவுள்ள மனிதனுக்கும் எவ்வளவோ கசப்பானது!

3 ஆனால், ஓ சாவே, வறுமையுள்ள மனிதனுக்கும், வலிமை குன்றியவனுக்கும் உன் தீர்மானம் நலமாய் இருக்கின்றது.

4 வயதால் தளர்ந்தவனுக்கும், எல்லாவற்றிலும் கவலையுள்ளவனுக்கும், நம்பிக்கையற்றவனுக்கும், பொறுமையை இழந்தவனுக்கும் நலமாய் இருக்கின்றது.

5 சாவின் தீர்மானத்திற்கு அஞ்சாதே. உனக்கு முன் இருந்தவர்களையும், உனக்குப் பிறகு வரப்போகிறவர்களையும் நினைத்துக் கொள். இந்தத் தீர்மானம் எல்லா மனிதருக்குமே ஆண்டவரால் விதிக்கப்பட்டது.

6 உன்னத கடவுளின் திருவுளத்தின் முன் உன்னால் நடக்கப்போவது என்ன? பத்து அல்லது நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் என்ன?

7 மறுவுலகத்தில் வாழ்க்கையைப் பற்றிக் குற்றம் சாட்ட முடியாது.

8 பாவிகளின் சந்ததியாரும் அக்கிரமிகளின் வீடுகளில் வாழ்கிறவர்களும் வெறுப்புக்குரிய மக்களாவர்.

9 பாவிகளுடைய மக்களின் உரிமை அழிந்து போகும். அவர்களுடைய சந்ததியில் தீராத நிந்தையே இருக்கும்.

10 தீய நெறியுடைய தந்தையைப் பற்றிப் பிள்ளைகள் முறையிடுகிறார்கள்; ஏனென்றால், அவனால் இவர்கள் நிந்தைக்கு ஆளானார்கள்.

11 உன்னத ஆண்டவருடைய கட்டளையை விட்டு விட்ட அக்கிரமிகளான மனிதரே, உங்களுக்குக் கேடாம்.

12 நீங்கள் பிறக்கையில் சாபத்தில் பிறக்கிறீர்கள்; நீங்கள் சாகும் போது சாபத்தை உரிமையாக்கிக் கொள்வீர்கள்.

13 மண்ணினின்று உண்டாகிறதெல்லாம் மண்ணுக்கே திரும்பும். அவ்வாறே அநீதரும் சாபத்தினின்று அழிவுக்கு உள்ளாவார்கள்.

14 மனிதருடைய துக்கம் அவர்கள் உடலில் உள்ளது. ஆனால், அக்கிரமிகளுடைய பெயர் அழிக்கப்படும்.

15 நல்ல பெயரைப் பற்றிக் கவலைப்படு. ஏனென்றால், ஆயிரம் பெரிய விலையுயர்ந்த செல்வங்களை விட அது உனக்கு அதிகம் நிலைத்திருக்கும்.

16 இன்பம் அனுபவிக்கும் வாழ்நாட்கள் கொஞ்சமானவை. நல்ல பெயரோ நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும்.

17 மக்களே, நன்னெறியை அமைதியுடன் காப்பாற்றுங்கள். ஏனென்றால், காணப்படா ஞானமும் புதைக்கப்பட்ட செல்வமும் பயனற்றவை.

18 தன் ஞானத்தை மறைக்கும் மனிதனை விடத் தன் மூடத்தனத்தை மறைக்கிறவன் சிறந்தவன்.

19 ஆதலால், என் வாயினின்று புறப்படுகிறவைகளைக் கேட்டு நாணம் அடையுங்கள்.

20 ஏனென்றால், எல்லாவற்றிலும் நாணத்தை ஏற்றுக்கொள்வது நன்றன்று. உண்மையாகவே எல்லாருக்குமே எல்லாம் விரும்பப்படுவன அல்ல.

21 தாய் தந்தையருக்கு முன்பாக விபசாரத்தைப் பற்றியும், வல்லவனிடத்திலும் தலைவரிடத்திலும் பொய்யைப் பற்றியும் வெட்கப்படுங்கள்.

22 பிரபு இடத்திலும் நீதிபதி இடத்திலும் குற்றத்தைப் பற்றியும், செபக்கூடத்திலும் மக்களிடத்திலும் அநீதியைப் பற்றியும்,

23 தோழனிடத்திலும் நண்பனிடத்திலும் அநியாயத்தைப் பற்றியும்,

24 நீ வாழும் இடத்திலே, திருட்டைப் பற்றியும், பொய்யாணை, பொய் உடன்படிக்கையைப் பற்றியும், சாப்பாட்டு மேசையில் சாய்வதைப் பற்றியும், கொடுக்கல் வாங்கலில் மோசடியைப் பற்றியும்,

25 வணக்கம் செய்பவர்களுக்கு மௌனத்தைப் பற்றியும், விபசாரப் பெண்ணை நோக்குவது பற்றியும், உறவினனுக்கு முகத்தைத் திருப்பிக் கொள்வதைப் பற்றியும் வெட்கப்படுங்கள்.

26 அயலானிடத்தினின்று உன் முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே; அவனுக்குச் சொந்தமானதை அபகரித்த பிறகு ஈடு செய்யாமல் இராதே.

27 அயலானுடைய மனைவியை நோக்காதே; அவன் ஊழியக்காரியுடன் தகாத பழக்கம் வைத்துக் கொள்ளாதே; அவள் கட்டிலின் கிட்ட நிற்காதே.

28 நண்பரிடம் நிந்தைக்குரிய வார்த்தைகளைச் சொல்ல வெட்கப்படு. நீ அவர்களுக்குக் கொடுத்ததைப் பற்றி அவர்களை நிந்தியாதே.

அதிகாரம் 42

1 நீ கேள்விப்பட்டதை வெளியே சொல்லாதே. இரகசியமாய் இருக்கிறதை வெளிப்படுத்தாதே. அப்போது தான் வெட்கமடைய மாட்டாய்; எல்லா மனிதருக்கும் முன்பாக நேர்மையாளனாக மதிக்கப்படுவாய். நான் சொல்லப் போகிறவைகளைப் பற்றி வெட்கப்படாதே.

2 முகத் துதியினால் தவற்றில் விழாதே. உன்னத கடவுளுடைய கட்டளையைப் பற்றியும் உடன்படிக்கையைப் பற்றியும் வெட்கப்படாதே. அக்கிரமியை நீதிமானாக்கும் தீர்மானத்திற்கு இடம் கொடாதே.

3 தோழர்களோடும் வழிப்போக்கரோடும் உரையாடுவதிலும், நண்பருக்குச் சேரவேண்டிய உரிமைகளிலும்,

4 தராசினுடையவும் நிறையினுடையவும் சமனைப் பற்றியும், அதிக, சொற்பச் சம்பாத்தியத்தைப் பற்றியும்,

5 கொள்வதிலும் கொடுப்பதிலும் நடக்கும் மோசடியைப் பற்றியும், மக்களைக் கண்டிப்பாய் நடத்துவதிலும், கெட்ட ஊழியனை இரத்தம் வர அடிப்பதிலும் நீதியாய் நடந்து கொள்வதற்கு அஞ்சாதே.

6 கெட்ட பெண்ணை அடைத்து வைத்திருப்பது நலம்.

7 எவ்விடம் பல கைகளுண்டோ அவ்விடம் பூட்டி வை. கொடுப்பதெல்லாவற்றையும் கணக்கிட்டு நிறுத்துக் கொடு. கொடுத்தது வாங்கினவற்றையெல்லாம் குறித்து வை.

8 மூடனுடையவும் பேதையினுடையவும் நெறியைப் பற்றியும், இளைஞரால் தீர்ப்பிடப்படுகிற முதியவரைப் பற்றியும் கவனி. எல்லாவற்றிலும் அறிவுடையவனாய் நடந்து கொள்வாய். அப்பொழுது எல்லாருக்கும் முன்பாக ஏற்றுக் கொள்ளப்படுவாய்.

9 மகள் தந்தையின் தனிக் கவலையாய் இருக்கிறாள். அவளைப் பற்றிய கவலை அவன் தூக்கத்தை நீக்கி விடுகின்றது. ஏனென்றால், இளம் பருவத்திலேயே அவளுக்குக் கன்னிப் பருவம் வந்து விடக் கூடும்; அவள் ஆடவனோடு இருப்பதில் சிலவேளை வெறுக்கப்படுவாள்.

10 அவள் தன் கன்னிமையில் அசுத்தப்படாதபடிக்கும், தன் தந்தையின் வீட்டிலேயே கருவுற்றவளாய்க் காணப்படாதபடிக்கும், கணவனோடு வாழ்கையில் கட்டளையை மீறாதபடிக்கும், அல்லது மலடியாகவே ஆகாதபடிக்கும் கவனமாய் இரு.

11 காம வெறியுள்ள மகளின் மேல் கண்ணும் கருத்துமாய் இரு. உன் பகைவர் முன் உனக்கு நிந்தை வரும்படியாகவும், ஊரில் புறணியும் மக்களிடையே வெறுப்பும் வரும்படியாகவும் அவள் செய்யாதிருக்கக்கடவாள்; மக்கட் கூட்டத்திற்கு முன்பாக உனக்கு வெட்கம் வருவியாதிருக்கக்கடவாள்.

12 எவரிடத்திலும் அழகைப் பாராதே. பெண்கள் நடுவில் தாமதித்து நில்லாதே.

13 ஆடையினின்று பூச்சி புறப்படுகின்றது. பெண்ணிடமிருந்து ஆண் பிள்ளையின் தீச்செயல் உண்டாகின்றது.

14 உனக்கு நன்மை செய்யும் பெண்ணை விடவும், உன்னை நிந்தைக்கு உள்ளாக்கி வெட்கப்படுத்தும் பெண்ணை விடவும் ஆண் மகனின் கெட்ட குணம் தாவிளை.

15 ஆதலால், ஆண்டவருடைய செயல்களை நினைத்துக் கொள். நான் பார்த்தவைகளை அறிவிப்பேன். ஆண்டவருடைய வார்த்தைப்படியே அவர் உண்டாக்கினவை செய்கின்றன.

16 கதிரவன் அனைத்தையும் ஒளிர்வித்துப் பார்த்தது. ஆண்டவருடைய செயல் அவர் மகிமையால் நிறைந்திருக்கின்றது.

17 தமது மகிமையில் நிறுத்தி நிலைப்படுத்தின தம் எல்லா அதிசயங்களையும் புண்ணியவான்கள் அறிவிக்கும்படி எல்லாம் வல்ல ஆண்டவர் செய்யவில்லையா?

18 அவர் பாதாளத்தையும் மனிதர் இதயத்தையும் பரிசோதித்தார்; அவர்களுடைய சூழ்ச்சி நிறை எண்ணங்களை அறிந்து கொண்டார்.

19 ஏனென்றால், ஆண்டவர் எல்லாக் கலைகளையும் அறிந்தவர்; யுகங்களின் அடையாளங்களைக் கண்டவர். அவர் கடந்தவைகளையும் வருங்காரியங்களையும் அறிவிக்கிறார்; மறைக்கப் பட்டவைகளின் குறிப்புகளைத் தெரிவிக்கிறார்.

20 எவ்வித எண்ணமும் அவருக்குத் தெரியாமல் போவதில்லை; எவ்வித வார்த்தையும் அவரிடத்தினின்று தன்னை மறைப்பதில்லை.

21 அவர் தமது ஞானத்தின் மகத்துவங்களை அலங்கரித்தார். அவரே யுகங்களுக்கு முன்னும் நித்திய காலத்திற்கும் இருக்கிறவர். யாதொன்றும் அவருக்குச் சேர்க்கப்படவில்லை; குறைக்கப்படுவதில்லை.

22 மற்றவர்களுடைய அறிவுரையும் அவருக்குச் வேண்டுவதில்லை.

23 அவருடைய செயல்கள் யாவும் எவ்வளவோ விரும்பத்தக்கவை. ஆனால், அவைகளைப் பற்றி நாம் சிந்திப்பதோ ஒரு துளி அளவேயாம்.

24 இவை யாவும் வாழ்ந்திருக்கின்றன; என்றும் நிலைத்திருக்கின்றன. தேவையான போது, எல்லாம் அவருக்குக் கீழ்ப்படிகின்றன.

25 எல்லாம் இரட்டையாயும் ஒன்றுக்கொன்று எதிரானவையாயும் இருக்கின்றன. அவர் யாதொன்றையும் குறைவாய்ச் செய்யவில்லை.

26 ஒவ்வொன்றின் நன்மையையும் அவர் நிலைப்படுத்தினார். அவருடைய மகிமையைக் கண்டு சலித்துப்போகிறவன் யார்?

அதிகாரம் 43

1 வான மண்டலம் அதன் உயரத்தில் அழகாய் இருக்கின்றது. மகிமையின் காட்சியில் வானத்தின் அணிகலனாய் இருக்கின்றது.

2 கதிரவன் காலையில் தோன்றி நாளை அறிவிக்கின்றது; உன்னத கடவுளின் அதிசய வேலையாகிய வியத்தகு கருவியாக இருக்கின்றது.

3 அது நண்பகலில் பூமியைச் சுட்டெரிக்கின்றது. அதன் வெப்பத்தின் முன்பாகச் சகித்து நிற்கக் கூடியவன் யார்? அது வெப்பத்தின் தன்மையில் சூளையைப் போல் இருக்கின்றது.

4 கதிரவன் மூவிதமாய் மலைகளை எரித்து, நெருப்புக் கதிர்களை வீசி, தன் கதிர்களால் கண்களைக் கூசச் செய்கின்றது.

5 அதைப் படைத்த கடவுள் மகத்தானவர். அவர் கட்டளையால் அது பிரயாணத்தைத் தீவிரித்தது.

6 வெண்ணிலாவும் எல்லாக் காரியங்களிலும் சமயத்திற்குத் தகுந்த வண்ணம் காலத்தைக் காண்பித்து, ஆண்டின் குறிப்புகளைக் காட்டுகின்றது.

7 அதனைக் கொண்டு தான் திருநாட்கள் குறிக்கப்படுகின்றன. அது முடிவில் குறைந்து போகும் விண்மீன்.

8 அதன் பெயரைக் கொண்டு தான் மாதம் ஏற்படுகிறது. அது வரவர அதிசயமான விதமாய் வளர்கின்றது;

9 வான மண்டலங்களில் படைக்கூடாரம் போலத் தோன்றி, வெகு மகிமையாய் வானத்தில் ஒளிர்கின்றது.

10 வானத்தின் அழகு விண்மீன்களுடைய மகிமை. ஆண்டவர் வானத்தினின்று மண்ணுலகை ஒளிர்விக்கிறார்.

11 அவை புனிதரின் கட்டளைகளை நிறைவேற்ற நிற்கின்றன; தங்கள் எச்சரிக்கையில் குன்றிப்போவதில்லை.

12 வானவில்லைப் பார். அதை உண்டாக்கினவரை வாழ்த்து. அது தன் மாட்சிமையில் வெகு அழகுள்ளதாய் இருக்கின்றது.

13 தன் மகிமையின் சுற்றால் வானத்தைச் சுற்றினது. மேலான கடவுளுடைய கைகள் அதைத் திறந்தன.

14 அவர் தமது கட்டளையால் பனியைத் தீவிரித்து உண்டாக்கினார்; தமது தீர்மானத்தை நிறைவேற்ற மின்னல்களைத் துரிதப்படுத்தினார்.

15 ஆதலால், கருவூலங்கள் திறக்கப்பட்டன. பறவைகளைப் போல மேகங்கள் பறந்தன.

16 அவர் தமது வல்லமையால் மேகங்களைச் சேர்த்தார்; மலையின் கற்களை உடைத்தார்.

17 அவர் பார்வைக்கு முன்பாக மலைகள் அதிர்ந்தன. அவருடைய திருவுளத்தால் தென்றல் வீசும்;

18 இடியின் ஓசை பூமியை அதிரச் செய்யும்; வாடைப் பெருங்காற்று அடிக்கும்; நான்கு பக்கத்துக் காற்றும் உண்டாகும். உட்கார இறங்கும் பறவையைப் போலவும்,

19 தாழ இறங்கி வரும் வெட்டுக்கிளியைப் போலவும் அவர் உறைபனியைத் தெளிக்கிறார்.

20 அதன் வெண்மையின் அழகைக் கண்டு கண் வியப்படையும்; அதன் மிகுதியைக் கண்டு இதயம் திகைக்கும்.

21 அவர் உறைந்த பனியை உப்பைப் போல மண்ணுலகின் மேல் சிந்துகிறார். அது உறைந்த போது கூர்மையுள்ள கற்களைப் போல் ஆகின்றது.

22 வாடை குளிர்ந்த காற்றாய் அடித்தது. தண்ணீர் மேலே பளிங்கு போல் உறைந்தது. அது நீரின் மேல் மிதக்கின்றது; நீரின் மேல் கேடயத்தைப் போல் ஆகின்றது.

23 (கதிரவன்) நெருப்பைப் போல மலைகளை விழுங்கும்; பாலைவனத்தைச் சுட்டெரிக்கும்; பசுமையை ஒழித்து விடும்.

24 இவைகள் எல்லாம் ஏற்படாதிருக்க மேகங்கள் தீவிரித்து வர வேண்டும். வெப்பத்தைத் தணிக்கும் பனியும் எதிர்த்து வர வேண்டும்.

25 அவர் கட்டளையால் காற்று அமர்ந்தது. அவர் தமது எண்ணத்தால் பாதாளத்தை அமர்த்தினார். ஆண்டவர் அதில் தீவுகளை ஏற்படுத்தினார்.

26 கடல் பயணம் செய்கிறவர்கள் அதன் ஆபத்துக்களைச் சொல்லக் கடவார்கள். நாம் நம்முடைய காதுகளால் கேட்டு வியப்படைவோம்.

27 அவ்விடத்தில் உள்ள மகத்தானவையும் ஆச்சரியத்திற்குரியவையுமான பொருட்களாவன: மிருகங்களின் பல இனங்களும், எல்லாவித மீன்களும், பென்னம் பெரிய மிருகப் படைப்புகளும் உண்டு.

28 அவருடைய கட்டளையால் அவைகளின் முடிவு தீர்மானிக்கப்பட்டது. அவருடைய வார்த்தையால் அனைத்தும் ஒழுங்குபடுத்தப்பட்டது.

29 நாம் எவ்வளவு சொன்னாலும் வார்த்தைகளில் குறைவுபடும். முடிவான வார்த்தை என்னவென்றால், அவர் அனைத்திலும் இருக்கிறார்.

30 அவர் மகிமையை உயர்த்த நம்மால் ஆகுமோ? ஏனென்றால், அவர் தம் படைப்புகளுக்கெல்லாம் மேலாக எல்லா வல்லமையும் உள்ளவராய் இருக்கிறார்.

31 பயங்கரத்திற்குரிய ஆண்டவர் மிக மேன்மையுள்ளவர்; வல்லமையில் அதிசயிக்கத் தக்கவர்.

32 உங்களால் கூடுமான மட்டும் ஆண்டவரை வாழ்த்திய போதிலும், அவர் உங்கள் வாழ்த்துகளுக்கெல்லாம் மேலானவர்; தமது மகிமையில் ஆச்சரியப்படத் தக்கவர்.

33 ஆண்டவரை வாழ்த்தி, உங்களால் கூடுமான மட்டும் அவரை உயர்த்துங்கள். அவர் எல்லாப் புகழ்ச்சிக்கும் மேலானவர்.

34 அவரை உயர்த்தி முழுத் திடம்கொள்ளுங்கள்; சலிக்க வேண்டாம். ஏனென்றால், நீங்கள் அவரைக் கண்டுபிடிக்கப் போவதில்லை.

35 அவரைப் பார்ப்பவன் யார்? அவரது இயல்பை எடுத்துரைப்பவன் யார்? ஆதியில் இருந்தது போல் அவரை மகிமைப்படுத்துபவன் யார்?

36 இவைகளை விடப் பெரிதான இன்னும் பல காரியங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன. ஏனென்றால், அவருடைய படைப்புகளில் சிலவற்றை மட்டுமே பார்த்தோம்.

37 அனைத்தையும் ஆண்டவரே படைத்தார். நன்னெறியில் நடக்கிறவர்களுக்கு ஞானத்தைத் தந்தருளினார்.

அதிகாரம் 44

1 மகிமை பொருந்திய மனிதரையும், நம் முன்னோரையும் அவர்களுடைய சந்ததியில் வாழ்த்துவோம்.

2 தொடக்கத்திலிருந்து ஆண்டவர் தமது வல்லமையினால் மிகுந்த மகிமையை வெளிப்படுத்தினார்.

3 அவர்கள் தங்களுடைய நாடுகளில் அதிகாரம் செலுத்தினார்கள்; வலியோரும் விவேகிகளுமாய் இருந்தார்கள். இறைவாக்குகளால் இறைவாக்கினர்களுடைய உயர்ந்த நிலையை அறிவித்தார்கள்.

4 தங்கள் காலத்து மக்களை நடத்தி வந்தார்கள்; ஞானத்தின் வலிமையைக் கொண்டு மக்களுக்குப் புனித போதனைகளைப் போதித்தார்கள்.

5 தங்கள் அறிவுடைமையால் பல சங்கீதங்களை ஆராய்ந்து, மறைநூல்களின் பாட்டுகளைப் பாடினார்கள்.

6 அவர்கள் புண்ணியத்தில் செல்வர்; அழகாகிய படிப்பைக் கொண்டவர்கள்; தங்கள் குடும்பங்களில் சமாதானம் செய்தவர்கள்.

7 அவர்கள் எல்லாரும் தங்கள் கோத்திரத்தின் சந்ததிகளில் மகிமை பெற்றார்கள்; தங்கள் நாட்களில் புகழ்ச்சிக்கு உகந்தவர்களாக மதிக்கப்பட்டார்கள்.

8 தங்களிடமிருந்து பிறந்தவர்கள், தங்கள் புகழ்ச்சிகளைச் சொல்லுமாறு தங்கள் பெயரை விட்டுச் சென்றார்கள்.

9 நினைவுகூரப்படாத சிலர் உண்டு. அவர்கள் இராதவர்களைப் போல் ஒழிந்தார்கள். அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் பிறவாதவர்களைப் போலப் பிறந்தார்கள்.

10 ஆனால், இரக்கத்தின் செயல்கள் குன்றாதவர்களோ இரக்கமுள்ள மனிதராய் இருக்கிறார்கள்.

11 அவர்கள் சந்ததியில் நன்மை நிலைத்திருக்கின்றது.

12 அவர்களுடைய பிள்ளைகளின் பிள்ளைகள் புனித உரிமையைக் கொண்டவர்கள். உடன்படிக்கைகளிலும் அவர்களுடைய சந்ததி நிலை கொண்டது.

13 அவர்களின் பொருட்டு அவர்கள் பிள்ளைகளும் நித்திய காலத்திற்கும் நிலைத்திருப்பார்கள். அவர்கள் சந்ததியும் அவர்கள் மகிமையும் கைவிடப்படா.

14 அவர்கள் பிணங்கள் சமாதானத்தில் அடக்கம் செய்யப்பட்டன. அவர்களுடைய பெயர் தலைமுறை தலைமுறையாய் வாழ்த்தப் பெறும்.

15 குடிகள் அவர்களுடைய ஞானத்தை வெளிப்படுத்துவார்கள். சங்கத்தார் அவர்களுடைய புகழ்ச்சியைச் சொல்வார்கள்.

16 ஏனோக் கடவுளுக்கு விருப்பமானார்; அஞ்ஞானிகளுக்குத் தவம் போதிக்க வானத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்.

17 நோவே உத்தமராகவும் நீதிமானாகவும் காணப்பட்டார்; கோபக்காலத்தில் சமாதானம் செய்பவரானார்.

18 ஆதலால், வெள்ளப்பெருக்கு உண்டான போது சிலர்மட்டும் மீதியாக்கப்பட்டார்கள்.

19 மனிதர் வெள்ளப் பெருக்கால் அழிக்கப்படுவதில்லை என்ற யுகங்களின் உடன்படிக்கைகள் அவரிடத்தில் வைக்கப்பட்டன.

20 ஆபிரகாம் திரளான மக்களின் மூதாதையராக இருந்தார். மகிமையில் அவருக்குச் சரியொத்தவர் ஒருவரையும் கண்டதில்லை. அவர் உன்னத கடவுளின் கட்டளையைக் காப்பாற்றினார்; அவருடைய உடன்படிக்கையில் இருந்தார்.

21 தம்முடைய உடலில் உடன்படிக்கை நிலைக்கும்படி செய்தார்; சோதனையில் பிரமாணிக்கம் உள்ளவராய்க் காணப்பட்டார்.

22 ஆதலால், கடவுள் ஆணையிட்டு, அவருடைய கோத்திரத்தில் அவருக்கு மகிமை தந்து, பூமியின் மணலைப் போல் அவரை அதிகரிக்கச் செய்வதாகவும்,

23 விண்மீன்களைப் போல் அவர் சந்ததியை உயர்த்துவதாகவும், ஒரு கடலினின்று மற்றொரு கடல் வரைக்கும், நதியினின்று பூமியின் எல்லைகள் வரைக்கும் அவர்களுக்கு உரிமை அளிப்பதாகவும் வாக்குறுதி கொடுத்தார்.

24 ஈசாக்கிடத்திலும் அவருடைய தந்தை ஆபிரகாமை முன்னிட்டு அவ்வாறே செய்தார்.

25 எல்லா இனத்தாருடைய ஆசியையும் ஆண்டவர் அவருக்குக் கொடுத்தார்; யாக்கோபின் தலை மீது உடன்படிக்கையை உறுதிப்படுத்தினார்;

26 தம்முடைய ஆசி கொண்டு அவரை ஏற்றுக் கொண்டார்; அவருக்கு உரிமையைக் கொடுத்தார்; பன்னிரண்டு கோத்திரங்களுக்காக அவருக்குப் பாகத்தைப் பிரித்தார்;

27 எல்லாருடைய கண்களுக்கும் விருப்பமுள்ள இரக்கமான மனிதரை அவருக்குக் காப்பாற்றினார்.

அதிகாரம் 45

1 கடவுளுக்கும் மனிதருக்கும் விருப்பமானவர் மோயீசன் என்பவர். அவருடைய நினைவு கொண்டாடப்பட்டது.

2 கடவுள் புனிதருடைய சபையில் அவரை நிறுத்தினார்; பகைவருடைய அச்சத்தில் அவரை மகிமைப்படுத்தினார்; தம் வார்த்தைகளால் கொடுமையான காரியங்களை அடக்கினார்.

3 அரசர் முன்பாக அவரை மகிமைப்படுத்தினார்; தம் மக்களுக்கு முன்பாக அவருக்குக் கற்பித்தார்; அவருக்குத் தமது மகிமையைக் காண்பித்தார்.

4 விசுவாசத்திலும் சாந்தத்திலும் அவரைப் புனிதராக்கினார்; மனிதர் அனைவரிடமிருந்தும் அவரைத் தேர்ந்துகொண்டார்;

5 அவருக்குச் செவி கொடுத்தார்; அவர் வேண்டுதலைக் கேட்டார்; அவரை மேகத்திற்குள் கூட்டிப்போனார்;

6 நேருக்கு நேராக அவருக்குக் கட்டளைகளைக் கொடுத்தார்; வாழ்க்கையினுடையவும் நடத்தையினுடையவும் சட்டத்தையும் தந்து, தம் உடன்படிக்கையை யாக்கோபுக்கும், தம் தீர்மானங்களை இஸ்ராயேலுக்கும் போதிக்கும்படி (நியமித்தார்)

7 அவருடைய சகோதரரான ஆரோனையும் உயர்த்தி, லேவி கோத்திரத்தில் அவருக்குச் சரியொத்தவர் ஆக்கினார்;

8 நித்திய உடன்படிக்கையை அவருக்கு நியமித்தார்; மக்களின் குருத்துவத்தை அவருக்குக் கொடுத்தார்; மகிமையில் அவரைப் பேறுபெற்றவராக ஆக்கினார்;

9 மகிமையின் கச்சையால் அவரைக் கட்டினார்; மகிமையின் ஆடையால் அவரை உடுத்தினார்; புண்ணிய அணிகலன்களால் அவருக்கு முடி சூட்டினார்;

10 பாதம் வரையிலும் தொங்கும் திருவுடையும் போர்வையும் அவருக்குக் கொடுத்தார்; அவருடைய இடுப்பைச் சுற்றிலும் பொன்மணிகளைக் கட்டினார்;

11 அவர் நடந்து போகையில் சத்தம் செய்யவும், கடவுளின் ஆலயத்தில் சத்தம் கேட்கும்படி செய்யவும், அவருடைய கோத்திரத்தின் மக்களுக்கு நினைவாகவும் அவற்றைக் கட்டினார்;

12 யோசனையும் உண்மையுமுள்ள ஞானியான மனிதனால் பொன்னாலும் பதுமராகத்தாலும், கருஞ்சிவப்பு நூலாலும் நெய்த அர்ச்சிக்கப்பட்ட மேலாடையைக் கொடுத்தார்.

13 இந்த ஆடை இஸ்ராயேல் கோத்திரங்களின் எண்ணிக்கையினுடைய நினைவாக மிக வியப்பான முறையில் செய்யப்பட்டு, பொன் கட்டுகளில் விலையுயர்ந்த இரத்தினங்கள் சேர்க்கப்பட்டு, கல் இழைக்கிறவனால் சித்திரிக்கப்பட்டிருந்தது.

14 புனிதத்துவத்தின் அடையாளமாகவும், உத்தியோகத்தின் மகிமையாகவும் அவருடைய தலையின் மேல் பொன் முடி இருந்தது. அது மிகப் பளுவானதாகவும் கண்ணைக் கவர்வதாகவும் இருந்தது.

15 அதற்கு முன் உலகத் தொடக்க முதல் அவ்வளவு அழகானது யாதொன்றும் இருந்ததில்லை.

16 அதை அன்னியன் ஒருவனும் அணிந்ததில்லை. ஆனால், அவர் மக்களும் பேரப்பிள்ளைகளும் மட்டுமே எக்காலத்திலும் அதை அணிந்திருந்தார்கள்.

17 அவருடைய பலிகள் நாள்தோறும் நெருப்பினால் பொசுக்கப்பட்டன.

18 மோயீசன் அவருடைய கைகளை அர்ச்சித்துப் புனித தைலத்தால் அவரைப் பூசினார்.

19 குருத்துவப் பணியை நிறைவேற்றவும் புகழ் பெறவும், அவர் பெயரால் தம் மக்களை மகிமைப்படுத்தவும், அவருடனும் அவர் சந்ததியுடனும் வானத்தின் நாட்களைப் போல நித்திய உடன்படிக்கை செய்யப்பட்டது.

20 கடவுளுக்குப் பலியும் தூபமும் நல்ல நறுமணமும் ஒப்புக் கொடுக்கவும், தம்முடைய மக்களைச் சமாதானப்படுத்த நினைத்துக் கொள்ளவும் எல்லா மனிதரிலும் அவரைத் தேர்ந்து கொண்டார்;

21 தம் கட்டளைகளிலும் தீர்மானங்களின் உடன்படிக்கைகளிலும் அதிகாரத்தையும், யாக்கோபுக்குத் தம் சட்டங்களைப் போதித்தலும் இஸ்ராயேலுக்குத் தம் கட்டளைகளை விளக்கம் செய்தலுமாகிய அலுவல்களையும் கொடுத்தார்.

22 ஏனென்றால், அன்னியர் அவருக்கு விரோதமாய் நின்றார்கள். பொறாமையால் பாலைவனத்தில் மனிதர் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். அம்மனிதர் தாத்தான், அபிரோன் என்பவர்களோடு இருந்தார்கள்; கோபத்தினால் கோரே என்பவனோடு சேர்ந்திருந்தார்கள்;

23 அதைப் பார்த்த ஆண்டவராகிய கடவுள் அதை விரும்பவில்லை. கோப உக்கிரத்தில் அவர்களை அழித்தார்.

24 புதிய தண்டனைகளை உண்டாக்கி, நெருப்புச் சுவாலையில் அவர்களை அழித்தொழித்தார்.

25 அவர் ஆரோனுக்கு மகிமையை அதிகப்படுத்தினார்; அவருக்கு உரிமையைக் கொடுத்து, நிலத்தின் கனிகளின் முதற் பலன்களை அவருக்குப் பகிர்ந்து கொடுத்தார்;

26 முதற் பலன்களைக் கொண்டு அவர்களுக்கு வேண்டுமான உணவு அளித்தார். ஏனென்றால், அவருக்கும் அவர் சந்ததிக்கும் ஆண்டவரால் கொடுக்கப்பட்டிருந்த பலிகளையே அவர்கள் உண்பார்கள்.

27 ஆனால், மண்ணுலகின் மற்ற இனத்தார் அவருடைய உரிமை ஆகார். மற்ற இனத்தாரிடத்தில் அவருக்குப் பங்கு இல்லை. அவரே அவருடைய பங்கும் உரிமையுமாய் இருக்கிறார்.

28 எலேயாசார் மகன் பினேயஸ் என்பவர் தெய்வ பயத்தில் ஆரோனைக் கண்டொழுகினமையால், மகிமையில் மூன்றாவதாக உயர்ந்திருக்கிறார்.

29 அவர் மக்களின் மரியாதையில் நின்றார்; இஸ்ராயேலுக்காக அவர் காண்பித்த ஆன்மீக நற்குணத்தாலும் சுறுசுறுப்பாலும் கடவுளுக்கு விருப்பமானார்.

30 ஆதலால் கடவுள் அவருடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார்; குருத்துவத்தின் பெருமை அவருக்கும் அவர் சந்ததியாருக்கும் எப்போதும் இருக்கும்படி, குருக்களுடையவும் மக்களுடையவும் தலைவராக அவரை நிறுவினார்.

31 யூதா கோத்திரத்தில் யெஸ்ஸே மகனான தாவீது அரசரோடு கடவுள் உடன்படிக்கை செய்தார்; அவருக்கும் அவர் சந்ததிக்கும் உரிமை கொடுத்தார்; நமது இதயத்தில் ஞானத்தை வைக்கவும், நீதியாய் மக்களுக்கு நீதி வழங்கவும் அவர்களுடைய பொருள் அழியாதபடி பாதுகாக்கவும் பதவியைத் தந்து, அவருடைய மகிமையை மக்களிடத்தில் நிலை நிறுத்தினார்.

அதிகாரம் 46

1 மோயீசனுக்குப் பின் வந்த இறைவாக்கினருள் ஒருவரும், நாவேயின் மகனுமான இயேசு போரில் வல்லவராய் இருந்தார். அவர் தம் பெயருக்கு ஏற்பவே பெரியவரானார்.

2 கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களுடைய மீட்பை முன்னிட்டு, இஸ்ராயேலை உரிமைப்படுத்திக் கொள்வதற்காக எழும்பின பகைவர்களை வெல்வதில் மகா வல்லமையுள்ளவராய் இருந்தார்.

3 தம் கைகளைத் தூக்கிப் பகைவர் நகரங்களுக்கு விரோதமாய் அம்புகளை எறிந்ததால் எவ்வளவோ மகிமை அடைந்தார்!

4 அவருக்கு முன்பாக எவன் எதிர்த்து நின்றான்? ஏனென்றால், பகைவர்களை ஆண்டவரே கூட்டி வந்தார்.

5 அவருடைய கோபத்தில் கதிரவன் தடைபடவில்லையோ? ஒரு நாள் இரண்டு நாளைப் போல் ஆகவில்லையோ?

6 எப்பக்கத்திலும் பகைவர்களை எதிர்க்கையில் அவர் வல்லபக் கடவுளை மன்றாடினார். மகிமையுள்ள புனித கடவுள் அவர் மன்றாட்டைக் கேட்டுப் பெருங்கல் மழையைப் பலமாய் அவர்கள் மேல் விழச் செய்தார்.

7 அவர் பகையாளியான இனத்தாரைத் தாக்கினார்; கீழிறங்கிப் பகைவர்களை அழித்தொழித்தார்;

8 கடவுளுக்கு விரோதமாய்ச் சண்டை செய்வது எளிதானதல்லவென்று, அன்னியர் அவருடைய பலத்தை அறியும்படியான விதமாய் நடத்தினார்; வல்லபமுள்ளவரையே பின்பற்றினார்.

9 மோயீசன் காலத்தில் இரக்கத்தைக் காண்பித்தார். யெப்போனின் மகனான காலேபு பகைவரை எதிர்க்கவும், மக்களைப் பாவத்தினின்று தடுக்கவும், தீய குணத்தின் முறுமுறுத்தலை அடக்கவும் செய்தார்.

10 ஆறு இலட்சம் காலாட்கள் கொண்ட படையினால் ஆபத்தினின்று காப்பாற்றப்பட்ட அவ்விருவரும் அவர்களை உரிமைக்கும், பாலும் தேனும் பொழியும் நாட்டுக்கும் அழைத்துப் போக நியமிக்கப்பட்டார்கள்.

11 காலேபுக்கும் ஆண்டவர் வலிமையைக் கொடுத்தார். முதுமை வரையிலும் பூமியின் உயர்ந்த இடத்தில் ஏறும்படியான வலிமை அவருக்கு இருந்தது. அவருடைய சந்ததி உரிமையை அடைந்தது.

12 அவர் புனித கடவுளுக்கு ஊழியம் செய்வது நலமானதென்று இஸ்ராயேல் மக்களெல்லாரும் அறியும்படி செய்தார்.

13 பிறகு நடுவர்கள் ஒவ்வொருவராய் வந்தனர். அவர்கள் இதயம் தீநெறிப்பட்டதன்று. அவர்கள் ஆண்டவரிடத்தினின்று அகன்று போகவில்லை.

14 அவர் அவர்களுடைய நினைவு புகழ்ச்சியில் இருக்கும்படியாகவும், அவர்களுடைய எலும்புகள் தங்களிடம் வளமுறவும்,

15 அவர்களுடைய பெயர் நித்தியத்திற்கும் நிலைத்திருக்கவும், புனித மனிதரின் மகிமை அவர்களுடைய பிள்ளைகளிடம் தங்கவும் செய்தார்.

16 ஆண்டவருடைய இறைவாக்கினரான சாமுவேல் ஆண்டவராகிய கடவுளால் நேசிக்கப்பட்டவர். அவர் அரசாட்சியைப் புதுப்பித்தார். தம்முடைய மக்களிடையே தலைவர்களை அபிஷுகம் செய்தார்.

17 ஆண்டவருடைய கட்டளைப்படியே மக்களுக்கு நீதி செலுத்தினார். அதை யாக்கோபின் கடவுள் கண்டார். பிரமாணிக்கமுள்ள இறைவாக்கினராக அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

18 வார்த்தைகளில் உண்மையுள்ளவராக அறியப்பட்டார். ஏனென்றால், அவர் ஒளியின் கடவுளைக் கண்டார்;

19 எப்பக்கத்திலும் சூழ்ந்திருந்த பகைவர்களை எதிர்ப்பதில் ஆண்டவரை மன்றாடினார்; மாசற்ற செம்மறிக் குட்டியின் காணிக்கையைச் செலுத்தினார்.

20 ஆண்டவர் பரலோகத்தினின்று குரல் கொடுத்தார்; பெரியதொரு தொனியால் தம் குரல் கேட்கும்படி செய்தார்.

21 தீரியருடைய தலைவர்களையும், பிலிஸ்தியருடைய எல்லாத் தலைவர்களையும் அவர் முறியடித்தார்.

22 தமது வாழ்க்கையினுடையவும் காலத்தினுடையவும் முடிவின் முன் ஆண்டவருடையவும் கிறிஸ்துவுடையவும் முன்னிலையில் சாட்சி தந்தார். அவர் பணமேனும் காலணியின் கயிறுகளேனும் எவனிடத்திலிருந்தும் வாங்கினவரல்லர். எவனும் அவரைக் குற்றம் சாட்டவில்லை.

23 இதன் பிறகு, அவர் துயில் கொண்டார்; அரசனுக்குத் தெரியப்படுத்தினார்; தமது வாழ்வின் முடிவை அவனுக்குக் காண்பித்தார்; மக்களுடைய அக்கிரமத்தை அழிக்க, இறைவாக்கில் மண்ணுலகினின்று தம் குரலை உயர்த்தினார்.

அதிகாரம் 47

1 அதன் பிறகு தாவீது என்பவர் காலத்தில் நாத்தான் என்ற இறைவாக்கினர் எழும்பினார்.

2 தசையினின்று பிரிக்கப்பட்ட கொழுப்பைப் போல், இஸ்ராயேல் மக்களிடையே தாவீது இருந்தார்.

3 அவர் செம்மறிக் குட்டிகளோடு விளையாடுவது போலச் சிங்கங்களோடு விளையாடினார்; தமது இளமையில் ஆட்டுக் குட்டிகளோடு நடந்து கொள்வது போலக் கரடிகளோடு நடந்து கொண்டார்.

4 அரக்கனை அவர் கொல்லவில்லையா? மக்களிடத்தினின்று நிந்தையை நீக்கிவிடவில்லையா?

5 அவர் கையைத் தூக்கிக் கவண் கல்லால் கோலியாத்தினுடைய அகந்தையைத் தாழ்த்தினார்.

6 ஏனென்றால், எல்லாம் வல்ல ஆண்டவரை மன்றாடினார். போரில் வீரனான மனிதனை அவர் கையளித்தார். அவர் மக்களின் கொம்பை உயர்த்தினார்.

7 இவ்வாறே பதினாயிரம் பேருக்குள்ளாக அவரை மகிமைப்படுத்தினார்; அவருக்கு மகிமையின் முடியைக் கொடுத்து, ஆண்டவருடைய ஆசியால் அவரை வாழ்த்தினார்.

8 ஏனென்றால், எப்பக்கத்திலும் பகைவர்களை முறியடித்தார்; எதிரிகளான பிலிஸ்தியரை இற்றைவரைக்கும் அழித்தொழித்தார்; எப்போதுமே அவர்களுடைய அதிகாரத்தை ஒழித்தார்.

9 அவர் எல்லாக் காரியங்களிலும் பரிசுத்தருக்குத் துதி செய்தார்; மகிமையின் வார்த்தையால் உன்னத கடவுளைப் புகழ்ந்தார்.

10 தம் முழு இதயத்தோடு ஆண்டவரைப் புகழ்ந்தார்; தம்மை உண்டாக்கின கடவுளை நேசித்தார். அவருக்கோ பகைவருக்கு விரோதமாய் ஆண்டவர் அதிகாரம் கொடுத்தார்.

11 அவர் பீடத்திற்கு முன்பாகப் பாடகர் நிற்கும்படி செய்தார்; அவர்களுடைய குரலால் இனிதான இராகங்களை எழுப்பினார்.

12 திருவிழாக்களில் ஆடம்பரத்தைப் புகுத்தினார். ஆண்டவருடைய புனித பெயரைத் துதிக்கவும், காலை முதல் கடவுளுடைய புனிதத்துவத்தை மேன்மைப்படுத்தவும் வாழ்வின் முடிவு வரையிலும் காலங்களை அலங்கரித்தார்.

13 ஆண்டவர் அவருடைய பாவங்களைப் பரிகரித்தார்; அவர் அதிகாரத்தை எப்போதைக்கும் உயர்த்தினார்; அரசின் உடன்படிக்கையையும், இஸ்ராயேலில் மகிமையின் அரியணையையும் அவருக்குக் கொடுத்தார்.

14 அவருக்குப் பிறகு ஞானியான அவர் மகன் எழுந்தார். அவர் பொருட்டுக் கடவுள் பகைவர்களின் எல்லா வல்லமையையும் ஒழித்தார்.

15 பகைவர் எல்லாரையும் கடவுள் சமாதானத்திற்கு உட்படுத்தின காலத்தில், தமது பெயரால் கடவுளின் ஆலயத்தைக் கட்டவும், எப்போதைக்கும் புனித இடத்தை ஏற்படுத்தவும் சாலமோன் ஆண்டு வந்தார். நீர் உமது இளமையில் எவ்வளவோ ஞானியாய் இருந்தீர்!

16 ஆற்றைப் போல ஞானத்தால் நிரப்பப்பட்டீர். உம்முடைய ஆன்மா பூமியைக் கவர்ந்து கொண்டது.

17 உவமைகளால் விடுகதைகளை நிரப்பினீர். வெகு தூரத் தீவுகளில் உமது பெயர் வெளியிடப்பட்டது. உமது சமாதானத்தால் நீர் நேசிக்கப்பட்டீர்.

18 உம் சங்கீதங்களிலும் பழமொழிகளிலும் உவமைகளிலும் விளக்கங்களிலும் மண்ணுலகம் வியப்படைந்தது.

19 இஸ்ராயேலின் கடவுளென்று பெயர் கொண்ட ஆண்டவரான கடவுளின் பெயரால்,

20 பொன்னைப் பித்தளையைப் பொலும், வெள்ளியை ஈயத்தைப் போலும் சேர்த்தீர்.

21 பிறகு பெண்களுக்கு உமது தொடையை வளைத்தீர்; அவர்கள் உமது உடலில் அதிகாரம் செலுத்தும்படி விட்டு விட்டீர்.

22 உமது மகிமையில் மாசு உண்டு பண்ணினீர்; உமது சந்ததியைக் கெடுத்தீர்; உம் பிள்ளைகளின் மேல் தெய்வ கோபத்தை வருவித்தீர்; உமது கெட்ட புத்தியைத் தூண்டிவிட்டீர்.

23 ஆதலால், அரசை இரண்டாகப் பிரித்தீர். எப்பிராயீம் கோத்திரத்தினின்று கொடிய ஆட்சி ஏற்பட்டது.

24 ஆனால், கடவுள் தமது இரக்கத்தை விடமாட்டார்; தம் செயல்களைக் கெடுக்கவும் மாட்டார்; அழிக்கவும் மாட்டார்; தம்மால் தேர்ந்து கொள்ளப்பட்டவருடைய கோத்திரத்தின் சந்ததியாரை அழித்தொழிக்கவும் மாட்டார்; ஆண்டவரை நேசிப்பவருடைய சந்ததியையும் கெடுக்க மாட்டார்.

25 ஆனால், அவர் யாக்கோபுக்கு மீதியைக் கொடுத்தார்; தாவீதுக்கும் அவர் குடும்பத்தில் சிலரை விட்டு வைத்தார்.

26 சாலமோன் தன் வாழ்க்கையை முடித்துத் தம் முன்னோரிடம் சேர்ந்தார்.

27 தமக்குப் பின் தம் சந்ததியில், மக்களில் மூடத்தனமும்,

28 விவேகக் குறைவுமுள்ள ரொபோவாமை விட்டார். அவனோ தன் தீய எண்ணத்தால் மக்களைக் கெடுத்தான்.

29 அவர் நாபாத் மகன் யெரோபோவாமையும் விட்டுச் சென்றார். அவனோ இஸ்ராயேல் பாவத்தில் விழும்படி செய்தான்; எப்பிராயீமுக்குப் பாவ வழியைக் காண்பித்தான். அவர்களுடைய பாவங்களோ மிகுந்து போயின;

30 அவர்களைத் தங்கள் நாட்டினின்று வெகுதூரம் போகும்படி செய்தன.

31 தங்களுக்குத் தண்டனை வரும் வரையிலும் அவர்கள் எல்லா விதத் தீய நெறிகளையும் தேடினார்கள். ஆனால், கடவுள் எல்லாப் பாவங்களினின்றும் அவர்களை மீட்டார்.

அதிகாரம் 48

1 நெருப்பைப் போல் எலியாஸ் இறைவாக்கினர் எழுந்தார். பந்தம் போல் அவருடைய வார்த்தை பற்றி எரிந்தது.

2 அவர் மக்களுக்குப் பஞ்சம் வரும்படி செய்தார். அவர்கள் தங்கள் பொறாமையால் அவருக்குக் கோபம் மூட்டினார்கள். அவர்களோ சொற்பப் பேர் ஆனார்கள். ஏனென்றால், அவர்களால் ஆண்டவருடைய கட்டளைகளைச் சகிக்கக் கூடவில்லை.

3 அவர் ஆண்டவருடைய வார்த்தையால் வானத்தை மூடினார்; வானத்தினின்று மும்முறை நெருப்பு விழச் செய்தார்.

4 இவ்வாறே எலியாஸ் தம்முடைய புதுமைகளால் புகழ் பெற்றார். உம்மைப் போல மகிமை பாராட்டக் கூடியவன் யார்?

5 ஆண்டவரான கடவுளுடைய வார்த்தையால் இறந்தவனை மரணத் தீர்ப்பினின்றும் பாதாளத்தினின்றும் எழச் செய்தீர்.

6 மன்னர்களைக் கெடுதிக்குள் விழத்தாட்டினீர்; எளிதாய் அவர்கள் வல்லமையை ஒடித்தீர்; மகிமையில் வாழ்ந்தவர்களைப் படுக்கையில் வைத்தீர்.

7 சீனாயில் தீர்மானத்தைக் கேட்கிறீர். ஓரேபில் பழியின் தீர்ப்புகளைக் கேட்கிறீர்.

8 அரசரைத் தவம் செய்யும்படி அபிஷுகம் செய்கிறீர். உமக்குப் பின் இறைவாக்கினர்கள் வரும்படி செய்கிறீர்.

9 நெருப்புச் சுவாலையில் நெருப்புக் குதிரைகள் பூட்டின வண்டியில் எடுத்துக் கொள்ளப்பட்டீர்.

10 ஆண்டவருடைய கோபத்தைத் தணிக்கக் காலங்களின் தீர்மானங்களில் எழுதப்பட்டீர். தந்தையின் இதயத்தைப் பிள்ளையுடன் சமாதானப்படுத்தவும், யாக்கோபின் கோத்திரங்களைத் திரும்ப ஏற்படுத்தவும் நியமிக்கப்பட்டீர்.

11 உம்மைப் பார்த்தவர்கள் பேறுபெற்றோர். அவர்கள் உமது நேசத்தால் மகிமைப் படுத்தப்பட்டார்கள்.

12 ஏனென்றால், நாம் வாழ்வில் மட்டுமே வாழ்கிறோம். சாவுக்குப் பிறகோ நம் பெயர் அதைப் போல் இராது.

13 எலியாஸ் சுழல் காற்றால் மூடப்பட்டார். எலிசேயுசிடத்தில் அவருடைய கருத்து நிறைவு பெற்றது. தம் காலத்தில் தலைவர்க்கு அவர் அஞ்சியவரல்லர். வல்லமையில் ஒருவனும் அவரை வென்றவனல்லன்.

14 யாதொரு வார்த்தையும் அவரை மேற்கொள்ளவில்லை. இறந்த பின்பும் அவர் பிணம் இறைவாக்கு உரைத்தது.

15 அவர் தமது வாழ்நாளில் அற்புதங்களைச் செய்தார்; மரணத்தின் போது புதுமைகளை ஆற்றினார்.

16 இவை யாவும் பார்த்தும் மக்கள் மனந்திரும்பவில்லை. தங்கள் நாட்டினின்று துரத்தப்பட்டு உலகம் முழுதும் சிதறடிக்கப்படும் வரையிலும் அவர்கள் தங்கள் பாவங்களை விட்டவர்களல்லர்.

17 சிலர் தாவீதின் கோத்திரத்தில் அதிகாரிகளாய் விடப்பட்டார்கள்.

18 அவர்களில் சிலர் கடவுளுக்கு விருப்பமானதைச் செய்தார்கள். சிலரோ பற்பல பாவங்களைச் கட்டிக் கொண்டார்கள்.

19 எசேக்கியாஸ் தம் நகரத்தைப் பலப்படுத்தினார்; அதன் மத்தியில் தண்ணீர் கொண்டு வந்தார்; இரும்பினால் பாறையைப் பிளந்தார்; தண்ணீருக்காகக் கிணறு வெட்டினார்.

20 அவர் காலத்தில் சென்னாக்கெரிபு எழுந்து, ராப்சாசேனை அனுப்பினான்; அவர்களுக்கு விரோதமாய்ப் போர் தொடுத்தான்; சீயோனோடும் சண்டை செய்தான்; தன் வலிமையில் செருக்குக் கொண்டான்.

21 அப்போது அவர்கள் இதயங்களும் கைகளும் அதிர்ந்தன. பிள்ளை பெறும் பெண்களைப் போல் அவர்கள் வாதை அடைந்தார்கள்.

22 இரக்கமுள்ள ஆண்டவரை மன்றாடினார்கள்; கைகளை விரித்தார்கள்; வானத்தை நோக்கித் தூக்கினார்கள். பரிசுத்த ஆண்டவரான கடவுள் அவர்கள் கூக்குரலை உடனே கேட்டார்.

23 அவர்கள் அக்கிரமங்களை அவர் நினைத்தவரல்லர். அவர்களை அவர் பகைவர்களுக்குக் கையளிக்கவில்லை. ஆனால், புனித இறைவாக்கினரான இசையாஸ் கையால் அவர்களைத் தூய்மைப்படுத்தினார்.

24 அசீரியருடைய படைகளை முறியடித்தார். ஆண்டவருடைய வானவர் அவர்களை அழித்தொழித்தார்.

25 ஏனென்றால், எசெக்கியாஸ் கடவுளுக்கு விருப்பமானதைச் செய்தார்; தம்முடைய தந்தையாகிய தாவீதைப் பின்பற்றிப் பெரிய இறைவாக்கினராகிய இசையாசால் தமக்குக் காண்பிக்கப்பட்ட வழியில் உறுதியாய் நடந்தார்.

26 அவர் காலத்தில் சூரியன் பின்னால் போனது. அவர் அரசனுடைய வாழ்நாளை அதிகரித்தார்.

27 மிகுந்த அறிவினால் இறுதிக் காலங்களைக் கண்டார்; சீயோனில் துக்கமுற்றவர்களைத் தேற்றினார்; இறுதிக் காலம் வரையிலும் வரப்போகிறவைகளையும், நிகழ்வதற்கு முந்தியே மறைந்த காரியங்களையும் வெளிப்படுத்தினார்.

அதிகாரம் 49

1 யோசியாசின் நினைவு வாசனைத் திரவியங்களைக் கூட்டுகிறவனுடைய வேலையைப் போல மணம் நிறைந்ததாய் இருக்கின்றது.

2 எல்லாருடைய வாயிலும் தேனைப் போலவும், மது பருகும் விருந்தில் இன்னிசை போலவும் அவருடைய ஞாபகம் இனிப்பாய் இருக்கின்றது.

3 மக்கள் தவம் செய்யும்படி அவர் தெய்வச் செயலால் நியமிக்கப்பட்டார்; அக்கிரமத்தின் அநியாயங்களை நீக்கினார்.

4 ஆண்டவர் பக்கம் தம் இதயத்தைச் செலுத்தினார்; பாவிகளுடைய நாட்களில் பக்தியை உறுதிப்படுத்தினார்.

5 தாவீது, எசெக்கியாஸ், யோசியாஸ் இவர்களைத் தவிர மற்ற எல்லாரும் பாவத்தைக் கட்டிக்கொண்டார்கள்.

6 ஏனென்றால், யூதாவின் அரசர்கள் உன்னத கடவுளுடைய கட்டளையை மீறி நடந்தார்கள்.

7 ஏனென்றால், தங்கள் நாட்டை மற்றவர்களுக்கும், தங்கள் மகிமையைப் புறவினத்தாருக்கும் கொடுத்து விட்டார்கள்.

8 பரிசுத்தரின் தேர்ந்து கொள்ளப்பட்ட நகரத்தைச் சுட்டெரித்தார்கள்; எரெமியாஸ் சொல்லியபடி, அதன் வீதிகளைப் பாலைவனமாக்கினார்கள்.

9 தாய் வயிற்றிலேயே இறைவாக்கினராக அர்ச்சிக்கப்பட்டு, இடிக்கவும் எடுக்கவும் அழிக்கவும் திரும்பக் கட்டவும், புதுப்பிக்கவும் நியமிக்கப்பட்ட அவரைக் கொடுமையாய் நடத்தினார்கள்.

10 எசெக்கியேல் பத்திசுவாலகரின் இரதத்தில் தமக்குக் காண்பிக்கப்பட்ட மகிமையின் காட்சியைக் கண்டார்.

11 ஏனென்றால், மழையில் பகைவர்களை நினைவு கூர்ந்து கொண்டார்; செம்மையான வழி காட்டினவர்களுக்கு உதவி செய்தார்.

12 பன்னிரு இறைவாக்கினர்களுடைய எலும்புகளும் தங்கள் கல்லறையில் வளர்ந்து வரும். ஏனென்றால், அவர்கள் யாக்கோபைத் திடப்படுத்தினார்கள்; உறுதியான விசுவாசத்தால் தங்களையே காத்துக் கொண்டார்கள்.

13 ஜெரோபாபேலை எப்படிப் புகழ்ந்து கொண்டாடுவோம்? ஏனென்றால், வலக்கையில் மோதிரத்தைப் போல் அவர் இருக்கிறார்.

14 இவ்வாறே, யோசதெக் புதல்வர் யேசுவும் அல்லரோ? அவர்கள் தங்கள் நாட்களில் ஆலயத்தைக் கட்டினார்கள். ஆண்டவருடைய நித்திய மகிமைக்குப் புகழ்ச்சியாக அவருக்குப் புனித ஆலயத்தை எழுப்பினார்கள்.

15 நெகேமியாசும் வெகு காலங்களுக்கு நினைவில் இருப்பார். ஏனென்றால், அவர் வீழ்த்தப்பட்ட சுவர்களை நமக்கு எழுப்பித் தந்தார். கதவுகளையும் பூட்டுகளையும் போட்டார்; நம் வீடுகளைக் கட்டினார்.

16 ஏனோக் என்பவரைப் போலப் பிறந்தவன் மண்ணுலகில் எவனும் இல்லை. ஏனென்றால், அவர் மண்ணுலகினின்று எடுத்துக்கொள்ளப்பட்டார்.

17 மனிதனாய்ப் பிறந்து, சகோதரருடைய தலைவராகவும், மக்களுடைய ஆதரவாகவும், சகோதரரை நடத்துபவராகவும், மக்களுடைய உறுதித் துணையாகவும் இருந்த சூசையைப் போலப் பிறந்தவன் ஒருவனும் உலகில் இல்லை.

18 அவருடைய எலும்புகள் காப்பாற்றப்பட்டன; சாவுக்குப் பின்னும் இறைவாக்குகளை உரைத்தன.

19 சேத்தும் சேமும் மனிதரிடத்தில் மகிமை அடைந்தார்கள். தொடக்கத்தில் எல்லா உயிரினங்களுக்கும் மேலாக ஆதாம் இருந்தார்.

அதிகாரம் 50

1 ஓசியாஸ் மகனான சீமோன் தலைமைக் குருவாக இருந்தவர். அவர் தமது வாழ்நாளில் ஆலயத்தைக் காப்பாற்றினார்; தம் நாட்களில் கடவுளின் ஆலயத்தை உறுதிப்படுத்தினார்.

2 கடவுளின் ஆலயத்தின் அடிப்படை அவரால் போடப்பட்டது. கடவுள் ஆலயத்தின் இரு பக்கத்துக் கட்டடங்களும், உயர்ந்த சுவர்களும் அவரால் கட்டப்பட்டன.

3 அவருடைய காலத்தில் தண்ணீர்க் கிணறுகள் கடலைப் போல் நிறைந்திருந்தன.

4 அவர் தம் மக்களைப் பாதுகாத்தார்; அவர்களை அழிவினின்று காப்பாற்றினார்.

5 நகரத்தை விரிவுபடுத்துவதில் வல்லவரானார்; மக்களிடம் பழகுவதில் மகிமை அடைந்தார்; ஆலயத்தினுடையவும் மண்டபத்தினுடையவும் வழிகளை விரிவுபடுத்தினார்.

6 மேகத்தின் மத்தியில் விடிவெள்ளியைப் போலவும், காலத்தோடு வரும் முழு நிலவைப் போலவும் அவர் ஒளிர்ந்தார்.

7 மிகுந்த ஒளி வீசும் கதிரவனைப் போலக் கடவுளுடைய ஆலயத்தில் ஒளி வீசினார்.

8 மகிமையின் மேகங்களில் ஒளிரும் வில்லைப் போலவும், இளவேனிற் காலத்தில் ரோசாப் பூவைப் போலவும், தண்ணீர் ஓரத்தில் இருக்கும் லீலியைப் போலவும், கோடைக் காலத்தில் நறுமணம் தரும் தூபத்தைப் போலவும்,

9 சுவாலை விடும் நெருப்பைப் போலவும், நெருப்பில் எரியும் சாம்பிராணியைப் போலவும்,

10 கெட்டியாய்ச் செய்யப்பட்டு எல்லாவித விலையுயர்ந்த கற்களால் அணி செய்யப்பட்ட பொற்பாத்திரத்தைப் போலவும்,

11 தளிர் விடும் ஒலிவ மரத்தைப் போலவும், உயரமாய் வளர்ந்திருக்கும் சிப்பிரேசைப் போலவும் அவர் மகிமையின் மேலாடையைத் தரித்துத் தமது மேலான பதவியின் அணிகலன்களை அணிந்து காணப்பட்டார்.

12 அவர் புனித பீடத்தில் ஏறும் போது தமது புனித பணியின் உடைக்கு மகிமை தந்தார்;

13 பீடத்தின் பக்கத்தில் நின்று கொண்டு, குருக்கள் கையினின்று பலியின் பாகத்தைப் பெற்றுக் கொண்டார். அவர் நின்றது சகோதரருடைய மகுடத்தைப் போலும், அவரைச் சுற்றி அவர் சகோதரர் நின்றது லீபான் மலையில் கேதுரு மரங்களை நட்டது போலும் இருந்தது.

14 இவ்வண்ணமே, ஆரோனின் மக்கள் எல்லாரும் தங்கள் மகிமையில் பனையின் கிளைகளைப் போல் அவரைச் சுற்றி நின்றார்கள்.

15 இஸ்ராயேல் சபைக்கு முன்பாக ஆண்டவருடைய காணிக்கை அவர்களுடைய கையால் கொடுக்கப்பட்டது. பீடத்தில் பலியை முடிவுபெறச் செய்வதும், உன்னத அரசருடைய காணிக்கையை அதிகரிப்பதும் அவருடைய பணியாக இருந்தன.

16 அவர் பானப் பலியில் தம் கையை நீட்டிக் கொடிமுந்திரிப் பழச்சாற்றை ஒப்புக்கொடுத்தார்.

17 உன்னத கடவுளுக்குப் பீடத்தின் அடியில் தெய்வீக வாசனையைச் சிந்தினார்.

18 அப்போது ஆரோன் மக்கள் பேரொலியிட்டு, வெள்ளியினால் செய்யப்பட்ட எக்காளங்களை ஊதினார்கள்; கடவுளுடைய முன்னிலையில் நினைவில் நிலைக்கும்படி பெரும் சத்தமிட்டார்கள்.

19 அப்போது எல்லா மக்களும் விரைவில் ஒன்று சேர்ந்து, தங்கள் ஆண்டவரான கடவுளை ஆராதிக்கவும், மேலான எல்லா வல்லமையுமுள்ள கடவுளை மன்றாடவும் பூமியில் முகங்குப்புற விழுந்தார்கள்.

20 பாடகர்கள் தங்கள் குரலொலியை உயர்த்தினார்கள்; கடவுளின் பெரிய ஆலயத்தில் இனிதான சத்தம் அதிகப்பட்டு நின்றது.

21 ஆண்டவருடைய மகிமை நிறைவாகிற வரைக்கும், தங்களுடைய காணிக்கையை நிறைவேற்றுகிற வரைக்கும் மக்கள் செபங்களில் உன்னத ஆண்டவரை மன்றாடினார்கள்.

22 அப்போது அவர் ( சீமோன் ) இறங்கி வந்து, கடவுளுக்குத் தம் உதடுகளால் மகிமை கொடுப்பதற்கும், அவர் பெயரால் தாம் மகிமைப்படுத்தப்படவும், இஸ்ராயேல் மக்களுடைய சபை முழுவதன் மேல் தம் கைகளை விரித்தார்.

23 கடவுளுடைய வலிமையைக் காட்டவேண்டி, வேண்டுதலைத் திரும்பவும் செய்தார்.

24 பூமியெங்கும் மகத்தான காரியங்களைச் செய்து, நம் தாயின் வயிற்றினின்று நம் நாட்களை அதிகரித்து, தமது இரக்கத்தின்படியே நம்மை நடத்தின எல்லாம் வல்ல கடவுளை நோக்கி இப்போது மன்றாடுங்கள்.

25 இதய மகிழ்ச்சியை அவர் நமக்குக் கொடுப்பாராக; நமது காலத்தில் இஸ்ராயேலில் என்றென்றைக்கும் சமாதானம் இருக்கும்படி செய்வாராக.

26 நம்முடைய நாட்களில் நம்மைக் காப்பாற்றக் கடவுளின் இரக்கம் நம்முடன் இருக்கிறது என்று இஸ்ராயேல் விசுவசிக்கும்படி செய்வாராக.

27 இருவிதக் குடிகளை என் ஆன்மா பகைக்கின்றது; நான் பகைத்த மூன்றாம் விதக் குடியோ குடியன்று.

28 அவர்கள் யாரென்றால், செயீர் மலையில் இருக்கிறவர்களும், பிலிஸ்தியரும், சிக்கேமில் வாழும் மூடத்தனமுள்ள மக்களுமாம்.

29 தம் இதயத்தில் ஞானத்தைப் புதுப்பித்த யெருசலேம் வாசியான சீராக் மகன் இயேசு இந்நூலில் ஞானத்தினுடையவும் நன்னெறியினுடையவும் போதகத்தை எழுதினார்.

30 இந்த நற்போதகங்களைக் கடைப்பிடிப்பவன் பேறு பெற்றவன். தன் இதயத்தில் அவைகளைக் காப்பாற்றுகிறவன் எப்போதைக்கும் ஞானியாய் இருப்பான்.

31 ஏனென்றால், அவன் அவைகளைச் செய்தால் அனைத்திற்கும் ஆற்றல் உள்ளவன் ஆவான். ஏனென்றால், கடவுளுடைய ஒளியே அவன் குறிப்பு அடையாளமாய் இருக்கின்றது.

அதிகாரம் 51

1 ஆண்டவராகிய அரசரே, உமக்கு நன்றியறிந்த வணக்கம் செய்கிறேன். என் மீட்பராகிய கடவுளே, உம்மைத் துதிக்கிறேன்.

2 உமது பெயருக்கு வணக்கம் செலுத்துகிறேன். ஏனென்றால், நீர் எனக்குத் துணைவரும் பாதுகாவலரும் ஆனீர்.

3 அழிவினின்றும், அக்கிரம நாவின் வலையினின்றும், பொய்யருடைய உதடுகளினின்றும் என் உடலைக் காப்பாற்றினீர். என்னைச் சுற்றிலும் இருக்கிறவர்களுக்கு முன்பாக எனக்குத் துணைவர் ஆனீர்.

4 உமது பெயரின் இரக்கப் பெருக்கத்திற்குத் தகுந்த வண்ணம், என்னை விழுங்க நினைப்பவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றினீர்.

5 என் ஆன்மாவைத் தேடுகிறவர்களுடைய கைகளினின்றும், என்னைச் சுற்றிக் கொண்ட துன்பங்களின் வாயில்களினின்றும்,

6 என்னைச் சூழ்ந்து கொண்ட நெருப்பின் நெருக்குதலினின்றும் என்னைக் காப்பாற்றினீர்; நானும் நெருப்பில் வெந்து போகவில்லை.

7 நரகக் குழியின் பாதாளத்தினின்றும், அருவருப்பான நாவினின்றும், பொய்யான வார்த்தையினின்றும், அக்கிரம அரசனினின்றும், அநியாய நாவினின்றும் என்னைக் காப்பாற்றினீர்.

8 மரணமட்டும் என் ஆன்மா ஆண்டவரைத் துதிக்கும்.

9 என் உயிர் பாதாளத்தின் அண்மையில் இருந்தது.

10 நரக வேதனைகள் நாலா பக்கத்திலும் என்னைச் சூழ்ந்து கொண்டிருந்தன. எனக்கு உதவி செய்வார் ஒருவரும் இல்லை. நான் மனிதரிடத்தில் உதவி தேடினேன்.

11 ஒருவரும் உதவவில்லை. ஆண்டவரே, உமது இரக்கத்தையும், தொடக்க முதல் நீர் செய்தவைகளையும் நினைத்துக் கொண்டேன்.

12 ஆண்டவரே, உம் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறவர்களை நீர் விடுவிக்கிறீர்; அவர்களை மக்களுடைய கைகளினின்று காப்பாற்றுகிறீர்.

13 என் உறைவிடத்தைப் பூமியில் உயர்த்தினீர். வரவிருக்கும் சாவினின்று காப்பாற்ற உம்மை மன்றாடினேன்.

14 என் ஆபத்து நாளில் என்னைக் கைவிடாதபடிக்கும், செருக்குற்றோருடைய காலத்தில் என்னைத் துணைவரில்லாமல் விடாதபடிக்கும் என் ஆண்டவருடைய தந்தையாகிய கடவுளை மன்றாடினேன்.

15 நான் இடைவிடாமல் உமது பெயரைத் துதிப்பேன்; என் நன்றியறிதலோடு அதை வாழ்த்துவேன். என் வேண்டுதல் கேட்கப்பட்டது.

16 அழிவினின்று என்னைக் காப்பாற்றினீர், அக்கிரம காலத்தினின்று என்னை விடுவித்தீர்.

17 ஆகையால் உமக்கு நன்றியறிந்த புகழ்ச்சி கூறுவேன். ஆண்டவருடைய பெயரைத் துதிப்பேன்.

18 நான் இளைஞனாய் இருந்த போதே, தவறிப் போவதற்கு முந்தியே, என் செபத்தில் வெளிப்படையாய் ஞானத்தைத் தேடினேன்.

19 கடவுள் ஆலயத்திற்கு முன்பாக அதற்காக மன்றாடினேன். இறுதிவரை அதைப் பின்பற்றுவேன். காலத்திற்கு முன் பழுக்கும் கொடிமுந்திரிப் பழத்தைப் போல் அது என்னிடம் வளமுற்றது.

20 என் இதயம் அதன்பால் மகிழ்ச்சி கொண்டது. என் பாதம் செவ்வழி நடந்தது. என் இளமை முதல் நான் அதை ஆராய்ந்தேன்.

21 தாழ்மையாய் என் செவியைச் செலுத்தினேன்.

22 அதை அடைந்தேன். என்னிடம் மிகுந்த ஞானத்தைக் கண்டேன். அதில் மிகவும் விருத்தி அடைந்தேன்.

23 எனக்கு ஞானம் கொடுக்கிறவரை மகிமைப்படுத்துவேன்.

24 அதைச் செய்வதற்குத் தீர்மானம் செய்து கொண்டேன். நன்மை செய்வதில் பெரும் முயற்சியெடுத்தேன். நான் கலக்கம் அடைய மாட்டேன்.

25 என் ஆன்மா அதில் போராடினது. அதைச் செய்வதில் நான் உறுதிப்படுத்தப்பட்டேன்.

26 என் கைகளை உயர்த்தினேன். அவற்றின் மூடத்தனத்தைப்பற்றிப் புலம்பினேன்.

27 ஞானத்தை நோக்கி என் ஆன்மாவை நடத்தினேன். அறிவில் அதைக் கண்டேன்.

28 தொடக்கத்திலேயே அதனுடன் என் இதயத்தை ஒன்றித்தேன். ஆதலால், நான் கைவிடப்பட மாட்டேன்.

29 அதைத் தேடுவதில் என் உள்ளம் கலங்கினது. ஆதலால் மேலான நன்மையைக் கைக்கொள்வேன்.

30 வெகுமதியாக ஆண்டவர் எனக்கு நாவைக் கொடுத்தார். அதைக்கொண்டு அவரைப் போற்றுவேன்.

31 படிக்காதவர்களே, என்னிடம் அணுகி வாருங்கள். நன்னெறியின் வீட்டில் வந்து கேளுங்கள்.

32 ஏன் இன்னும் தாமதிக்கிறீர்கள்? இதற்கு என்ன சொல்கிறீர்கள்? உங்கள் ஆன்மாக்கள் வெகு தாகமாய் இருக்கின்றன. என் வாயைத் திறந்து பேசினேன்.

33 பணமில்லாமல் அதை அடைந்து கொள்ளுங்கள்.

34 உங்கள் கழுத்தை நுகத்தடிக்குக் கீழ்ப்படுத்துங்கள். உங்கள் ஆன்மா நன்னெறியை ஏற்றுக் கொள்ளக் கடவது. ஏனென்றால், அதைச் சீக்கிரம் கண்டடையலாம்.

35 உங்கள் கண்களால் பாருங்கள். ஏனென்றால், நான் சொற்ப முயற்சி செய்தேன்; ஆனால், வெகு இளைப்பாற்றியைக் கண்டேன்.

36 மிகுந்த பணத்தொகை போல நன்னெறியைப் பெற்றுக் கொள்ளுங்கள். திரளான பொன்னைப் போல அதை வைத்திருங்கள்.

37 ஆண்டவருடைய இரக்கத்தில் உங்கள் ஆன்மா மகிழ்ச்சியடையக்கடவது. அவருடைய புகழ்ச்சியில் கலக்கம் அடைய மாட்டீர்கள்.

38 காலத்திற்கு முந்தியே உங்கள் வேலையை நடத்துங்கள். காலம் வரும் போது அவர் உங்களுக்கு வெகுமதி அளிப்பார்.