இசையாஸ் ஆகமம்

அதிகாரம் 01

1 யூதாவின் அரசர்களாகிய ஓசியாஸ், யோவாத்தான், ஆக்காஸ், எசேக்கியாஸ் ஆகியோரின் காலத்தில், யூதா, யெருசலேம் இவற்றைக் குறித்து, ஆமோஸ் என்பவரின் மகன் இசையாஸ் கண்ட காட்சி.

2 வான்வெளியே கேள், வையகமே செவிசாய்; ஏனெனில் ஆண்டவரே திருவாய் மலர்ந்தருளினார்: "பிள்ளைகளைப் பேணினோம், வளர்த்தோம்; அவர்களே நம்மை எதிர்த்தார்கள்;

3 எருது தன் உரிமையாளனை அறிந்து கொள்கிறது, கழுதை தன் தலைவனின் கொட்டகையைத் தெரிந்துகொள்கிறது; ஆனால் இஸ்ராயேல் நம்மை அறிந்து கொள்ளவில்லை, நம் மக்களோ ஒன்றும் உணர்வதில்லை."

4 இதுவோ பாவிகளான மக்களினம், அக்கிரமம் நிறைந்த மக்கள், தீமை செய்பவர்களின் சந்ததி, கெட்டுப்போயிருக்கும் மக்கள்; ஏனெனில் தங்கள் ஆண்டவரைக் கைவிட்டனர். இஸ்ராயேலின் பரிசுத்தரை அவமதித்தனர், அவருக்கு அந்நியராய் ஆகிவிட்டனர்.

5 உங்கள் உடலில் இன்னும் நாம் அடிக்க இடமேது? நீங்கள் அக்கிரமங்களை அடுக்கிக் கொண்டே போகிறீர்களே! தலையெல்லாம் நோயால் நிறைந்துள்ளது, இதயமெல்லாம் தளர்ச்சியுற்றுள்ளது.

6 உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை உடலில் நலமே கிடையாது; ஆனால் காயங்களும் கன்றிப்போன வீக்கமும் ஆறாப் புண்களுமே நிறைந்துள்ளன; சீழ் பிதுக்கப்படவில்லை, கட்டுப் போடப்படவில்லை, எண்ணெய் விட்டுப் புண்ணை ஆற்றவுமில்லை.

7 உங்கள் நாடு பாழாகியே கிடக்கிறது; உங்கள் நகரங்கள் தீக்கிரையாயின; அந்நியர் உங்கள் கண் முன்னாலேயே உங்களது நாட்டை விழுங்குகிறார்கள்; அந்நியரால் வீழ்த்தப்பட்ட நாட்டைப் போல, உங்கள் நாடு பாழாகிக் கிடக்கின்றது.

8 திராட்சைத் தோட்டத்துப் பந்தல் போலும், வெள்ளரித் தோட்டத்தின் குடிசை போலும், முற்றுகையிடப்பட்ட நகரம் போலும், சீயோன் மகள் கைவிடப் பட்டாள்.

9 சேனைகளின் ஆண்டவர் நம்முள் சிலரேனும் எஞ்சியிருக்கும்படி விடாதிருந்தால், சோதோமைப் போல் நாம் ஆகியிருப்போம், கொமோராவுக்கு நாம் ஒத்திருப்போம்.

10 சோதோமை ஆளுகிறவர்களே, ஆண்டவருடைய வாக்கைக் கேளுங்கள்; கொமோரா நாட்டின் மக்களே, நம் கடவுளின் கட்டளைக்குச் செவிசாயுங்கள்.

11 கணக்கற்ற உங்கள் பலிகள் நமக்கு எதற்காக என்கிறார் ஆண்டவர்; ஆட்டுக் கடாக்களின் தகனப் பலிகளும், கொழுத்த மிருகங்களின் கொழுப்பும் நமக்குப் போதுமென்றாகி விட்டன; காளைகளின் இரத்தத்திலும், ஆட்டுக்குட்டிகளின் குருதியிலும், வெள்ளாட்டுக் கடாக்களின் இரத்தத்திலும் நமக்கு விருப்பமில்லை;

12 நீங்கள் நம் திருமுன் வரும் போது, நம் முற்றத்தை வலம் வந்து இவற்றைத் தரும்படி கேட்டவர் யார்?

13 இனி மேல் பயனில்லாக் காணிக்கைகளைக் கொணர வேண்டாம், நீங்கள் காட்டும் தூபம் எனக்கு அருவருப்பையே தருகின்றது; அமாவாசை, ஓய்வு நாள், வழிபாட்டுக் கூட்டங்கள் முதலிய அக்கிரமங்களையும் கொண்டாட்டத்தையும் சகிக்க மாட்டோம்.

14 உங்கள் அமாவாசை, திருவிழாக் கொண்டாட்டங்களையும் முழு உள்ளத்தோடு நாம் வெறுத்துத் தள்ளுகிறோம்; அவை நமக்கொரு சுமையாகி விட்டன; அவற்றைச் சுமந்து சோர்ந்து போனோம்.

15 நம்மை நோக்கி நீங்கள் கைகளை உயர்த்தும் போது, உங்களிடமிருந்து நம் முகத்தைத் திருப்பிக் கொள்கிறோம். நீங்கள் எவ்வளவு தான் மன்றாடினாலும் நாம் செவி சாய்ப்பதில்லை. உங்கள் கைகளோ இரத்தத்தில் தோய்ந்துள்ளன.

16 உங்களைச் சுத்திகரியுங்கள், தூய்மைப்படுத்துங்கள். நம் கண் முன்னிருந்து உங்கள் தீச்செயலை அகற்றுங்கள்; தீமை செய்வதை விட்டு ஓயுங்கள்;

17 நன்மை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்; நீதியைத் தேடுங்கள், ஒடுக்கப்பட்டவனுக்கு உதவி செய்யுங்கள், திக்கற்ற பிள்ளைக்கு நீதி வழங்குங்கள், கைம்பெண்ணுக்காக வழக்கு நடத்துங்கள்.

18 வாருங்கள், இப்பொழுது வழக்காடுவோம் என்கிறார் ஆண்டவர்; உங்கள் பாவங்கள் செந்தூரம் போல் இருந்தாலும், உரைந்த பனி போல வெண்மையாகும்; இரத்த நிறமாய் அவை சிவந்திருந்தாலும், பஞ்சைப் போல் அவை வெண்மையாகும்.

19 மனமுவந்து நீங்கள் நமக்குக் கீழ்ப்படிந்தால், நாட்டில் விளையும் நற் கனிகளை உண்பீர்கள்;

20 கீழ்ப்படிய மறுத்து நமக்குக் கோபத்தை மூட்டினால், திண்ணமாய் வாளுக்கு இரையாவீர்கள்; ஏனெனில் ஆண்டவரே திருவாய் மலர்ந்தார்."

21 பிரமாணிக்கமாய் இருந்த நகரம், நீதி நிறைந்திருந்த சீயோன், எப்படித் தான் வேசியாயினளோ! முன்னே, அந்நகரில் நீதி குடிகொண்டிருந்தது, இப்பொழுதோ கொலைகாரர் மலிந்துள்ளனர்.

22 உன்னுடைய வெள்ளி களிம்பேறி விட்டது, உன் திராட்சை இரசமோ நீர்த்துப் போயிற்று.

23 உன் தலைவர் பிரமாணிக்கமற்றவர்கள், திருடர்களுக்குத் தோழர்களாய் இருக்கிறார்கள்; ஒவ்வொருவனும் கையூட்டு வாங்க ஏங்குகிறான்; அன்பளிப்புகளைத் தேடி ஓடுகிறான்; திக்கற்றவர்களுக்கு அவர்கள் நீதி வழங்குவதில்லை, கைம்பெண்களின் வழக்கைத் தீர்ப்பதுமில்லை.

24 ஆதலால் சேனைகளின் ஆண்டவரும் இஸ்ராயேலின் வல்லவருமாகிய ஆண்டவர் கூறுகிறார்: "நம் பகைவர் மேல் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்வோம், நம்முடைய எதிரிகளைப் பழிவாங்குவோம்;

25 உனக்கெதிராய் உன் மேல் நம்முடைய கைகளை நீட்டுவோம், நன்றாகப் புடம் போட்டு உன் களிம்பை நீக்குவோம், உன்னிடமுள்ள கலவையுலோகத்தைப் போக்குவோம்.

26 முன்னாளில் இருந்தது போல நீதிபதிகளை ஏற்படுத்துவோம், தொடக்கத்தில் இருந்தவாறு ஆலோசனைக்காரரைத் தருவோம். அதற்குப் பின் நீதியின் நகரமெனப் பெயர் பெறுவாய்; பிரமாணிக்கமுள்ள பட்டணம் எனப்படுவாய்."

27 சீயோன் நீதியினால் மீட்கப்படும், அங்கே மனந்திரும்புவோர் நியாயத்தால் மீட்படைவர்;

28 ஆனால் கலகக்காரரும் பாவிகளும் ஒருங்கே ஒழிக்கப்படுவர்; ஆண்டவரைப் புறக்கணித்தவர்கள் அனைவரும் அழிக்கப்படுவர்.

29 நீங்கள் விரும்பிய தேவதாரு மரங்களை முன்னிட்டு நாணுவீர்கள், நீங்கள் உகந்ததாகக் கருதும் சோலைகளைக் குறித்து உங்கள் முகம் வெட்கத்தால் சிவந்து போகும்.

30 ஏனெனில் இலையுதிர்ந்த தேவதாரு போலவும், நீரற்ற சோலை போலவும் ஆவீர்கள்.

31 வலிமை மிக்கவன் சணற் கூளம் போலவும், அவனுடைய வேலைப்பாடு தீப்பொறி போலவும் ஆகும்; அவை இரண்டும் ஒருங்கே எரிந்து போகும், அணைப்பவர் யாரும் இருக்கமாட்டார்கள்.

அதிகாரம் 02

1 யூதாவையும் யெருசலேமையும் குறித்து ஆமோஸ் என்பவரின் மகனான இசையாஸ் கண்ட காட்சி.

2 இறுதி நாட்களில்- ஆண்டவரின் கோயில் அமைந்துள்ள மலை மலைகளுக்கெல்லாம் உயர்ந்ததாய் நாட்டப்படும், குன்றுகளுக்கெல்லாம் மேலாக உயர்த்தப்படும், மக்களினங்கள் யாவும் அதை நோக்கி ஓடிவரும்;

3 பலநாட்டு மக்கள் கூடிவந்து, "வாருங்கள், ஆண்டவரின் மலைக்கு ஏறிச் செல்வோம், யாக்கோபின் கடவுளது கோயிலுக்குப் போவோம்; தம்முடைய வழிகளை அவர் நமக்குக் கற்பிப்பார், நாமும் அவர் நெறிகளில் நடப்போம்" என்பார்கள். ஏனெனில் சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளியாகும், யெருசலேமிலிருந்தே ஆண்டவர் வாக்கு புறப்படும்.

4 மக்களினங்களுக்கிடையில் அவரே தீர்ப்பிடுவார், பல்வேறு மக்களுக்கு நீதி வழங்குவார்; அவர்களோ தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள். நாட்டுக்கு எதிராய் நாடு வாள் எடுக்காது, அவர்களுக்கு இனிப் போர்ப் பயிற்சியும் அளிக்கப்படாது.

5 யாக்கோபின் வீட்டாரே, வாருங்கள்; ஆண்டவரின் ஒளியிலே நாம் நடப்போம்.

6 ஆம், யாக்கோபின் வீட்டாரான உம்முடைய மக்களை நீர் புறக்கணித்தீர்; ஏனெனில், அவர்கள் நடுவில் நிமித்தகம் பார்த்தல் பெருகியுள்ளது, பிலிஸ்தியரைப் போன்ற மந்திரவாதிகள் மலிந்துள்ளனர், அந்நியரோடு ஒப்பந்தம் செய்கிறார்கள்.

7 அவர்கள் நாடு பொன் வெள்ளியால் நிறைந்துள்ளது, அவர்களுடைய கருவூலத்திற்கு அளவு இல்லை;

8 அவர்களது நாட்டில் குதிரைப் படையும் மிகுதி, அவர்களின் தேர்ப் படைகள் எண்ணிறந்தவை. அவர்களின் நாட்டில் சிலைகள் மலிந்துள்ளன, தாங்களே செய்த கைவேலைகளை வணங்குகின்றனர்.

9 ஆகவே மனிதன் தாழ்த்தப்படுவான், மக்கள் சிறுமையுறுவார்கள், அவர்களுக்கு மன்னிப்புத் தராதீர்!

10 ஆண்டவருடைய அச்சம் தரும் திருமுன்னிருந்து விலகி, அவருடைய மாண்புறு மகிமையினின்று ஒதுங்கிக் கற்குகைகளில் நுழைந்து கொள்ளுங்கள், மண்ணில் பதுங்கி மறைந்து கொள்ளுங்கள்.

11 இறுமாப்பான மனித கண்கள் அவமானமடையும், மனிதர்களின் செருக்கு தாழ்த்தப்படும்; ஆண்டவர் ஒருவரே அந்நாளில் உயர்த்தப்படுவார்.

12 ஆம், அந்த நாள் சேனைகளின் ஆண்டவரது நாள்; பெருமையும் செருக்குமுடைய யாவற்றின் மேலும், உயர்த்தப்பட்டவை, உயர்ந்தவை அனைத்தின்மேலும்,

13 லீபானில் உயர்ந்தோங்கி வளர்ந்த எல்லாக் கேதுருகளின் மேலும், பாசானில் உள்ள எல்லாக் கருவாலி மரங்கள் மேலும்,

14 வானளாவிய மாமலைகள் யாவற்றின் மேலும், உயர்ந்த குன்றுகள் அனைத்தின் மேலும்,

15 தலை நிமிர்ந்தோங்கிய கோபுரங்கள் யாவற்றின் மேலும், வலுவுடைய எல்லா மதில்களின் மேலும்,

16 தர்ஸீசின் எல்லா மரக்கலங்கள் மேலும், கண்ணுக்கினிய வேலைப்பாடுகள் அனைத்தின் மேலும், அந்த நாள் வரும்.

17 மனிதனின் அகந்தையெல்லாம் அடங்கும், மனிதர்களின் இறுமாப்பு தாழ்த்தப்படும்; ஆண்டவர் ஒருவரே அந்நாளில் உயர்த்தப்படுவார்.

18 சிலைகள் தவிடுபொடியாக்கப்படும்;

19 ஆண்டவர் உலகைத் தண்டிக்க வரும் போது, அவருடைய அச்சந்தரும் திருமுன்னிருந்து விலகி, அவருடைய மாண்புறு மகிமையினின்று ஒதுங்கி, மனிதர்கள் கற்குகைகளில் நுழைந்து கொள்வார்கள், பூமியின் குழிகளில் புகுந்து கொள்வார்கள்.

20 அந் நாளில் மனிதர்கள் தாங்கள் வழிபடுவதற்காகத் தங்களுக்கெனச் செய்து வைத்திருந்த வெள்ளிச் சிலைகளையும், தங்கப் பதுமைகளையும் அகழெலிகளுக்கும் வெளவால்களுக்கும் எறிந்து விடுவார்கள்.

21 ஆண்டவர் உலகைத் தண்டிக்க வரும் போது, அவருடைய அச்சந்தரும் திருமுன்னிருந்து விலகி, அவருடைய மாண்புறு மகிமையினின்று ஒதுங்கி, மனிதர்கள் பாறைகளின் வெடிப்புகளில் பதுங்கிக் கொள்வார்கள்; குன்றுகளின் பிளவுகளில் புகுந்து கொள்வார்கள்.

22 மனிதனில் இனி மேல் நம்பிக்கை வைக்காதீர்கள்; அவன் உயிர் நிலையற்ற வெறும் மூச்சு தான்; மதிக்கப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்?

அதிகாரம் 03

1 இதோ, சேனைகளின் ஆண்டவரான இறைவன் யெருசலேமினின்றும் யூதாவினின்றும், எவ்வகை நலத்தையும் எவ்வகைப் பலத்தையும், உணவாகிய பலத்தையும் நீராகிய பலத்தையும்,

2 வலிமைமிக்க மனிதனையும் வீரனையும், நீதிபதியையும் இறைவாக்கினரையும், நிமித்திகனையும் முதியோரையும்,

3 ஐம்பதின்மர் தலைவனையும் சேனையில் உயர்ந்த பதவியுள்ளவனையும், ஆலோசனைக் காரனையும் திறன் வாய்ந்த மந்திர வாதியையும், மாய வித்தை வல்லோனையும் ஆண்டவர் அகற்றி விடுவார்.

4 சிறுவர்களை அவர்களுக்குத் தலைவர்களாக்குவோம், விளையாட்டுப் பிள்ளைகள் அவர்களை ஆளுவார்கள்.

5 மக்கள் ஒருவரையொருவர் ஒடுக்குவார்கள், ஒவ்வொருவனும் தன் அயலானைத் துன்புறுத்துவான், இளைஞர் முதியோரை அவமதிப்பார்கள், கீழ்மக்கள் மேன்மக்களை அசட்டை செய்வார்கள்.

6 ஒருவன் தன் தந்தை வீட்டில் வாழும் சகோதரன் ஒருவனைப் பிடித்து, "உனக்கு ஆடையிருக்கிறது, ஆகவே நீ எங்கள் தலைவனாய் இருக்க வேண்டும்; பாழடைந்து கிடக்கும் இந்த அரசு உன் ஆட்சியில் இருக்கட்டும்" என்று சொல்வான்.

7 அப்போது அந்த மனிதன் மறுமொழியாக, "நான் மருத்துவனாய் இருக்கமாட்டேன்; என் வீட்டில் உணவோ ஆடையோ ஒன்றுமில்லை; என்னை மக்களுக்குத் தலைவனாய் வைக்க வேண்டாம்" என்று சொல்லி மறுத்து விடுவான்.

8 யெருசலேம் இடறித் தடுமாறுகிறது, யூதா கீழே விழுகிறது; ஏனெனில், அவர்களுடைய சொல்லும் செயலும் ஆண்டவருக்கு எதிராயுள்ளன, அவர் மகிமையின் கண்களுக்குச் சினமூட்டின.

9 அவர்களின் ஓரவஞ்சனையே அவர்களுக்கெதிராய்ச் சாட்சி கூறுகிறது, சோதோமைப் போல் தங்கள் பாவத்தைப் பறைசாற்றுகின்றனர், அதை மறைத்து வைப்பதில்லை. அவர்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில் தங்கள் மேல் தீமையைத் தாங்களே வருவித்தனர்.

10 ஆனால் நீதிமான் பேறுபெற்றவன் என்று சொல்லுங்கள், ஏனெனில், தன் நற்செயல்களின் பலனைக் கண்டடைவான்;

11 தீயவனுக்கு ஐயோ கேடு! அவனுக்கு நன்மை வராது, ஏனெனில் அவன் தன் செயல்களுக்கேற்பத் தண்டனை பெறுவான்.

12 எம் மக்களே, சிறுவன் ஒருவனால் நீங்கள் ஒடுக்கப்படுகிறீர்கள், பெண்கள் உங்களை ஆளுகிறார்களே! எம் மக்களே, உங்களை ஆள்பவர்களே தவறான நெறியைக் காட்டுகிறார்கள், உங்கள் நெறிகளின் போக்கைக் குழப்புகிறார்கள்.

13 ஆண்டவர் தீர்ப்புச் சொல்ல எழுந்து நிற்கிறார், மக்களினங்களுக்கு நீதி வழங்கத் தயாராய் இருக்கிறார்.

14 மூப்பரோடும் தம் மக்களின் தலைவர்களோடும் ஆண்டவர் முதற்கண் வழக்காடுகிறார்: "திராட்சைத் தோட்டக் கனிகளைத் தின்றவர்கள் நீங்களே, எளியவர்களைக் கொள்ளையிட்டப் பொருட்கள் உங்கள் வீடுகளில் நிறைந்துள்ளன;

15 நம்முடைய மக்களை நீங்கள் நசுக்குவதன் பொருள் என்ன? எளியோரின் முகத்தை நொறுக்க உங்களுக்கு உரிமையேது?" என்கிறார் சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர்.

16 யெருசலேம் பெண்களுக்கு எச்சரிக்கை: ஆண்டவர் தொடர்ந்து கூறினார்: சீயோனின் மங்கையர் அகந்தை கொண்டவர்கள், கழுத்தை நீட்டி நீட்டி நடக்கிறார்கள், கண் வீச்சுகளை வீசித் திரிகிறார்கள், நடக்கும் போது காற்சிலம்பு ஒலிக்கும்படி ஒய்யார நடை நடந்து உலவுகிறார்கள்;

17 ஆதலால் ஆண்டவர் சீயோன் மங்கையரின் தலைகளில் புண்ணும் பொருக்கும் உண்டாக்குவார், ஆண்டவர் அவர்கள் மானத்தைக் குலைப்பார்.

18 அந்நாளில் அவர்களுடைய அணிகலன்களாகிய காற்சிலம்புகளையும் பிறை வடிவமான அணிகளையும்,

19 ஆரங்களையும் கழுத்துப் பொற் சங்கிலிகளையும் கை வளையல்களையும் தலைச் சோடினைகளையும்,

20 கூந்தல் கட்டும் பட்டு நாடாக்களையும் அரைக்கச்சைகளையும் பொற் சங்கிலிகளையும் நறுமணச் சிமிழ்களையும் காதணிகளையும்,

21 மோதிரங்களையும் மூக்குத்திகளையும்,

22 அழகான ஆடைகளையும் மேற்போர்வைகளையும் நாடோறும் மாறுதலடையும் உடைகளையும் கொண்டையூசிகளையும்,

23 கண்ணாடிகளையும் மெல்லிய சட்டைகளையும் நாடாக்களையும் சல்லா முக்காடுகளையும் ஆண்டவர் உரிந்து போடுவார்.

24 நறுமணத்திற்குப் பதிலாக நாற்றமும், பொன் ஒட்டியாணத்திற்குப் பதிலாகக் கயிறும், வாரி முடித்த கூந்தலுக்குப் பதிலாய் வழுக்கையும் இருக்கும். ஆடம்பர உடைகளுக்குப் பதில் கோணி ஆடையும், அழகுக்குப் பதிலாக சூட்டுத் தழும்பும் இருக்கும்.

25 அழகு வாய்ந்த ஆண்கள் வாளுக்கிரையாவார்கள், வலிமை மிக்க வீரர்கள் போர் முகத்தில் மடிவார்கள்.

26 அதன் வாயில்கள் புலம்பி அழும், நகரமோ வறிதாகித் தரையில் அமரும்.

அதிகாரம் 04

1 அந் நாளில் ஓர் ஆணை ஏழு பெண்கள் பிடித்துக் கொண்டு, "நாங்கள் எங்கள் சொந்த உணவைச் சாப்பிடுவோம், நாங்களே எங்கள் உடைகளைத் தேடிக் கொள்வோம், உமது பேர் எங்களுக்கு வழங்கச் செய்யும், எங்கள் நிந்தை நீங்கச் செய்தால் போதும்" என்பார்கள்.

2 அந் நாளில் ஆண்டவரின் தளிர் அழகும் மகிமையும் வாய்ந்திருக்கும்; நாட்டில் விளையும் நற்கனி, இஸ்ராயேலில் எஞ்சியோரின் மகிமையும் பெருமையுமாயிருக்கும்.

3 சீயோனில் எஞ்சி யிருப்பவர்களும் யெருசலேமில் விடப்பட்டவர்களும் புனிதர்கள் என்றே சொல்லப்படுவர்; யெருசலேமில் வாழ்வதற்கெனப் பேரெழுதப்பட்டவன் ஒவ்வொருவனும் புனிதன் எனப்படுவான்.

4 ஆண்டவர் சீயோன் மகளின் அசுத்தத்தையும், யெருசலேமின் இரத்தக் கறைகளையும், நீதியின் ஆவியாலும் நெருப்பின் ஆவியாலும், அதினின்று கழுவித் தூய்மைப் படுத்துவார்;

5 பின்னர், சீயோன் மலையின் முழுப் பரப்பின் மேலும், ஆங்கே கூடிவரும் சபைகள் மேலும், பகலில் மேகமும் இரவில் புகைப் படலமும், கொழுந்து விட்டெரியும் நெருப்பின் ஒளிச்சுடரும் ஆண்டவர் தாமே படைத்தருள்வார்; ஏனெனில், அனைத்திற்கும் மேலே ஆண்டவரின் மகிமை கவிகையாகவும் கூடாரமாகவும் இருக்கும்;

6 அது பகலில் வெப்பத்தினின்று காக்கும் நிழலாகவும், மழைக்கும் காற்றுக்கும் தப்பிக்கப் புகலிடமும் பாதுகாப்புமாயிருக்கும்.

அதிகாரம் 05

1 என்னுடைய நண்பருக்கொரு கவிதை பாடுவேன், அவரது திராட்சைத் தோட்டத்தைக் குறித்துக் காதல் பாட்டொன்று இசைப்பேன். வளம் நிறைந்த குன்று ஒன்றின் மேல் என் நண்பருக்குத் திராட்சைத் தோட்டம் ஒன்றிருந்தது.

2 அவர் நன்றாக அதைக் கொத்தி விட்டுக் கற்களை அகற்றி, தேர்ந்தெடுத்த திராட்சைக் கொடிகளை அதில் நட்டு வைத்தார்; அதன் நடுவில் கோபுரம் ஒன்றையும் கட்டினார், அதில் திராட்சை பிழியும் ஆலையையும் அமைத்தார்; நற் திராட்சைக் குலைகள் காய்க்குமெனக் காத்திருந்தார், காட்டுத் திராட்சைக் குலைகளே காய்த்தன.

3 இப்பொழுது யெருசலேமின் குடிமக்களே, யூதாவின் மனிதர்களே, நமக்கும் நம் திராட்சைத் தோட்டத்துக்கும் இடையில் நீதி வழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

4 நமது திராட்சைத் தோட்டத்திற்கு இன்னும் என்ன செய்யாமல் விட்டோம்? நற் கனிகளைத் தருமென்று நாம் காத்திருக்க, நமக்குக் காட்டுக் கனிகளை அது தந்தது ஏன்?

5 இனி நமது திராட்சைத் தோட்டத்திற்கு நாம் செய்யப்போவதைக் கேளுங்கள்: நாமே அதன் வேலியைப் பிடுங்கியெறிவோம், அதுவோ பிறரால் சூறையாடப்படும்; அதன் சுற்றுச் சுவரை நாம் தகர்த்திடுவோம், அதுவோ மனிதர் கால்களில் மிதிபடும்.

6 நாம் அதனைப் பாழாக்குவோம், கிளைகள் கழிக்கப்படா, பூமி கொத்தப்படாது; முட்களும் முட்புதர்களுமே அதில் வளரும்; அதன் மீது மழை பெய்யாதிருக்கும்படி மழை மேகங்களுக்கு நாம் கட்டளை தருவோம்.

7 சேனைகளின் ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸ்ராயேல் வீட்டாரே. அவருக்கு விருப்பமான நாற்று யூதாவின் மனிதர்களே. அறம் விளையுமெனக் காத்திருந்தார், விளைந்ததோ மறம்! முறைமை தழைக்குமெனப் பார்த்திருந்தார், எழுந்ததோ முறைப்பாடு!

8 வீட்டோடு வீடு சேர்ப்பவர்களே, பிறருக்கெனக் கொஞ்சமும் இடமில்லாதபடி எல்லை வரை வயலோடு வயல் இணைத்துக் கொள்பவர்களே, உங்களுக்கு ஐயோ கேடு! பரந்த இந்த நாட்டின் நடுவிலே நீங்கள் மட்டுமே வாழ இருப்பதாய் எண்ணமோ?

9 என் காதுகளில் கேட்கும்படிக்குச் சேனைகளின் ஆண்டவர் ஆணையிட்டுக் கூறினார்: "மெய்யாகவே பெருந்தொகையான வீடுகள் பாழாகிக் கிடக்கும், பெரியவையும் அழகியவையுமான வீடுகள் குடியிருக்க ஆளின்றிக் கிடக்கும்.

10 ஏனெனில் பத்துக் காணி திராட்சைத் தோட்டம் ஒரே குடம் இரசந்தான் கொடுக்கும்; ஒரு கலம் விதை நிலத்தில் போட்டால், ஒரே மரக்கால் விளைபலனே கிடைக்கும்."

11 விடியற் காலையிலேயே விழித்தெழுந்து போதை தரும் பானத்தைத் தேடியலைந்து, நள்ளிரவு வரை குடிவெறியில் இருப்பவர்களுக்கு ஐயோ கேடு!

12 அவர்களுடைய விருந்துகளில் கிண்ணாரம், வீணை, தம்புரு, குழல், திராட்சை இரசம் எல்லாமுண்டு; ஆனால் ஆண்டவரின் செயல்களை அவர்கள் நினைப்பதுமில்லை, அவருடைய கைவேலைகளை அவர்கள் காண்பதுமில்லை.

13 ஆகவே நம் மக்கள் அறிவின்மையால் அடிமைகளாய் நாடு கடத்தப்பட்டார்கள்; மதிப்பிற்குரிய மனிதர்கள் பசியால் வாடினார்கள், பொதுமக்கள் தாகத்தால் தவித்தார்கள்.

14 ஆதலால் பாதாளக் குழி தன் பசியை வளர்த்துக் கொண்டது, அளவு கடந்து தன் வாயைப் பிளந்துள்ளது; அதற்குள் வலிமையுடையவர்களும் பொது மக்களும் உயர்ந்தோரும் பெரியோரும் ஒருங்கே இறங்குகிறார்கள்.

15 மனிதர்கள் தலை நாணினர், அவர்கள் குன்றிப் போனார்கள்; இறுமாப்புக் கொண்டவர்களின் கண்கள் தாழ்த்தப்பட்டன.

16 ஆனால் சேனைகளின் ஆண்டவர் நீதியினால் உயர்த்தப்பட்டார், பரிசுத்த கடவுள் நீதியால் தம்மைப் பரிசுத்தரெனக் காட்டினார்.

17 அப்போது ஆட்டுக்குட்டிகள் தங்கள் சொந்த மேய்ச்சல் நிலத்தில் மேய்வது போல மேயும்; கொழுத்தவையும் வெள்ளாட்டுக் குட்டிகளும் பாழடைந்த இடங்களில் மேயும்.

18 அவர் விரைந்து வரட்டும், நாம் பார்க்கும்படி தம் வேலையைத் துரிதமாய்ச் செய்யட்டும்; இஸ்ராயேலின் பரிசுத்தருடைய நோக்கம் நிறைவேறட்டும், அதுவும் நடக்கட்டும், நாம் அறிந்துகொள்வோம்" என்று சிலர் சொல்லுகிறார்கள்;

19 சொல்லி, பொய்மை என்னும் கயிற்றால் தண்டனையைத் தங்கள் மேல் இழுத்து, வண்டியைக் கயிற்றால் இழுப்பதுபோல பாவத்தை இழுக்கிற அவர்களுக்கு ஐயோ கேடு!

20 தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை வெளிச்சமாக்கி, வெளிச்சத்தை இருளாக்கி, கசப்பை இனிப்பாக்கி, இனிப்பைக் கசப்பாக்குகிறவர்களுக்கு ஐயோ கேடு!

21 தங்கள் கண்களுக்கு மட்டும் தாங்கள் ஞானிகளாகவும், தங்கள் பார்வைக்கு மட்டும் தாங்கள் விவேகிகளாகவும் இருக்கிறவர்களுக்கு ஐயோ கேடு!

22 திராட்சை இரசம் குடிப்பதில் வீரர்களாயும், மதுபானம் கலப்பதில் வல்லவர்களாயும் இருப்பவர்களுக்கு ஐயோ கேடு!

23 அவர்கள் கையூட்டு வாங்கிக் கொண்டு குற்றவாளியை நீதிமானாகத் தீர்ப்பிடுகிறார்கள், நீதிமானின் நீதியைப் பறிக்கிறார்கள்.

24 ஆதலால் நெருப்புத் தணல் வைக்கோலை விழுங்குவது போலவும், காய்ந்த புல் தீக்கிரையாவது போலவும், அவர்களுடைய ஆணிவேர் தீய்ந்து சாம்பலாகும், அவர்களின் சந்ததி துரும்பு போல பறந்துபோம்; ஏனெனில் சேனைகளின் ஆண்டவரது திருச்சட்டத்தைப் புறக்கணித்தனர்; இஸ்ராயேலின் பரிசுத்தருடைய வார்த்தையை வெறுத்துத் தள்ளிப் போட்டனர்.

25 ஆதலால் ஆண்டவரின் சினம் அவருடைய மக்களுக்கு எதிராக மூண்டெழுந்தது; அவர்களுக்கு எதிராக அவர் தம் கையை நீட்டி அவர்களை நொறுக்கினார்; மலைகள் நடுங்கின; அவர்களுடைய உயிரற்ற உடல்கள் குப்பை போல தெருக்களின் நடுவில் கிடந்தன; இதெல்லாம் செய்தும் அவர் சினம் ஆறவில்லை; நீட்டிய கோபக் கை இன்னும் மடங்கவில்லை.

26 தொலை நாட்டு மக்களுக்கு அவர் அடையாளக்கொடி காட்டுவார், உலகின் எல்லையிலிருந்து சீழ்க்கை யொலியால் கூப்பிடுவார்; இதோ, காற்றாய்ப் பறந்து வருகிறார்கள்.

27 அவர்களுள் எவனும் களைக்கவில்லை, இடறவில்லை, தூங்கவில்லை, உறக்கம் கொள்ளவில்லை, இடைக் கச்சை தளரவில்லை, மிதியடிகளின் வாரொன்றும் அறுந்து போகவில்லை.

28 அவர்களுடைய அம்புகள் கூராயுள்ளன, விற்கள் நாணேறியே இருக்கின்றன. அவர்களுடைய குதிரைகளின் குளம்புகள் கருங்கல் போல கெட்டியானவை; அவர்களுடைய தேர்களின் சக்கரங்கள் புயற் காற்றைப் போல வேகமானவை.

29 அவர்களுடைய கர்ச்சிப்பு சிங்கம் சீறுவது போலிருக்கிறது, இளஞ்சிங்கங்களைப் போல் அவர்கள் கர்ச்சிக்கிறார்கள்; உறுமிக் கொண்டு பாய்ந்து தங்கள் இரையைப் பிடிப்பார்கள்; இரை தூக்கிப் போய்விடுவர், யாரும் அதை மீட்க முடியாது.

30 கடலின் பேரிரைச்சல் போல் அந்நாளில் அவர்கள் கர்ச்சித்து உறுமுவார்கள்; இந்த உலகத்தை ஏறெடுத்துப் பார்த்தாலோ, இதோ, எங்கும் இருளும் துன்பமுமே நிறைந்திருக்கும். மேகங்கள் ஒளியை இருளச் செய்யும்.

அதிகாரம் 06

1 ஓசியாஸ் அரசன் இறந்த ஆண்டில், மிகவும் உயரமான ஓர் அரியணையின் மேல் ஆண்டவர் வீற்றிருப்பதைக் கண்டேன்; அவருடைய தொங்கலாடை திருக்கோயிலை நிரப்பி நின்றது.

2 அவருக்கு மேலே உயரத்தில் சேராபீன்கள் நின்றனர். ஒவ்வொருவருக்கும் ஆறு இறக்கைகள் இருந்தன; இரண்டு இறக்கைகளால் முகத்தை மூடிக்கொண்டனர்; இன்னும் இரண்டினால் கால்களை மறைத்துக் கொண்டனர்; மற்ற இரண்டினால் பறந்தனர்.

3 ஒருவரை ஒருவர் உரத்த குரலில் கூப்பிட்டு, "சேனைகளின் ஆண்டவர் பரிசுத்தர், பரிசுத்தர், பரித்தர்; உலக முழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்துள்ளது" என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.

4 கூறியவரின் குரலொலியால் வாயில் நிலைகளெல்லாம் அதிர்ந்தன; கோயில் முழுவதும் புகை நிறைந்தது.

5 அப்பொழுது நான்: "ஐயோ, நான் அழிந்தேன்; ஏனெனில் அசுத்த உதடுகள் கொண்டவன் நான்; அசுத்த உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்கிற நான், சேனைகளின் ஆண்டவராகிய அரசரை, என் கண்களால் கண்டேனே!" என்றேன்.

6 அப்பொழுது, சேராபீன்களுள் ஒருவர் பீடத்திலிருந்து எரி நெருப்புப் பொறியொன்றைக் குறட்டினால் எடுத்துக் கொண்டு என்னிடம் பறந்து வந்தார். அதனால் என் வாயைத் தொட்டு,

7 இதோ, இந் நெருப்புத் தழல் உன் இதழ்களைத் தொட்டது; ஆதலின் உன் குற்றம் நீக்கப்பட்டது; உன் பாவம் மன்னிக்கப்பட்டது" என்றார்.

8 மேலும் ஆண்டவருடைய குரலைக் கேட்டேன்; அவர், "யாரை அனுப்புவோம்? நமக்காக எவன் போவான்?" என்றார். உடனே நான், "இதோ, அடியேன் என்னை அனுப்பும்" என்றேன்.

9 அப்பொழுது அவர், "நீ போய் இந்த மக்களுக்கு, 'கேட்டுக் கேட்டும் நீங்கள் உணராதீர்கள், பார்த்துப் பார்த்தும் நீங்கள் அறியாதீர்கள்' என்று சொல்.

10 அவர்கள் கண்ணால் காணாமலும் காதால் கேட்காமலும் உள்ளத்தால் உணராமலும் அவர்கள் மனந்திரும்பிக் குணமாகாமலும் இருக்கும்படி இம்மக்களின் உள்ளத்தை மழுங்கச் செய்; காதுகளை மந்தமாக்கு; கண்களை மூடு" என்றார்.

11 அதற்கு நான், "எவ்வளவு காலத்திற்கு, ஆண்டவரே?" என்று கேட்டேன். அதற்கு அவர், "பட்டணங்கள் பாழாகிக் குடியிருப்பாரற்று, வீடுகளில் மனிதர்களின்றி, நாடு முற்றிலும் பாழடைந்து

12 ஆண்டவர் மனிதர்களைத் தொலை நாட்டுக்குக் கொண்டு போனபின், கைவிடப்பட்ட இடங்கள் நாட்டில் பலவாகும் வரையில்!

13 பத்தில் ஒரு பகுதி அதில் எஞ்சியிருந்தாலும் அதுவும் அழிக்கப்படும், தேவதாரு மரமோ கருவாலி மரமோ வெட்டி வீழ்த்தப்பட்டபின் அதில் அடித் தண்டு எஞ்சியிருப்பது போலவே அதுவும் இருக்கும்" என்றார். அந்த அடித் தண்டு பரிசுத்த வித்தாகும்.

அதிகாரம் 07

1 யூதாவின் அரசனான ஓசியாஸ் என்பவனின் மகன் யோவாத்தானின் மகன் ஆக்காஸ் அரசனுடைய நாட்களில் சீரியாவின் அரசனான இராசீன் என்பவனும், இஸ்ராயேலின் அரசனாகிய ரொமேலியின் மகன் பாசே என்பவனும் யெருசலேமுக்கு எதிராகப் படையெடுத்து வந்து, அதைப் பிடிக்கப் பார்த்தனர்; ஆயினும் அதைப் பிடிக்க முடியவில்லை.

2 சீரியா எப்பிராயீமோடு சேர்ந்துகொண்டது" என்னும் செய்தி தாவீதின் வீட்டாருக்கு எட்டியதும், ஆக்காஸ் உள்ளமும், அவன் நாட்டினரின் உள்ளங்களும் காட்டு மரங்கள் காற்றில் அலைக்கழிக்கப் படுவது போல் அலைக்கழிக்கப் பட்டன.

3 அப்போது ஆண்டவர் இசையாசை நோக்கிக் கூறினார்: "நீயும் உன் மகன் ஷூயார் யஷபூ என்பவனும் 'வண்ணான் வயல்' என்னுமிடத்திற்குப் போகும் சாலையில், மேற்குளத்துக்குப் போகும் கட்டுக் கால்வாயின் மறுமுனைக்குப் போய் அங்கே ஆக்காசைச் சந்தித்து,

4 அவனுக்கு இதைச் சொல்: 'அமைதியாய் இரு, அஞ்சாதே; சீரியாவின் அரசனான இராசீனுடையவும் ரொமேலியின் மகனுடையவும் பொங்கியெழும் கடுஞ்சினமாகிய புகையும் இரண்டு கொள்ளிகளைக் கண்டு உன் உள்ளம் கலங்காதிருக்கட்டும்.

5 சீரியாவும் எப்பிராயீமும் ரொமேலியின் மகனும், உனக் கெதிராகச் சதித்திட்டம் தீட்டி,

6 யூதாவுக்கு எதிராகப் படையெடுத்துப் போய், அதனை அச்சுறுத்திப் போர் புரிந்து கைப்பற்றுவோம்; தபேயேல் என்பவனின் மகனை அதற்கு அரசனாக்குவோம்" என்று பேசிக் கொண்டார்கள்.

7 ஆதலால் ஆண்டவராகிய இறைவன் கூறுவது இதுவே: அவர்களின் திட்டம் நிலைபெறாது, அது நிறைவேறாது;

8 ஏனெனில் சீரியாவுக்குத் தலைநகரம் தமஸ்குப் பட்டணம், தமஸ்குப் பட்டணத்தின் தலைவன் இராசீன் அரசன். (இன்னும் அறுபத்தைந்து ஆண்டுகளில் எப்பிராயீம் தவிடு பொடியாக்கப்படும்: அதன் பின் அது ஒரு மக்களினமாகவே இராது.)

9 எப்பிராயீமுக்குத் தலைநகரம் சமாரியாப் பட்டணம், சமாரியாப் பட்டணத்தின் தலைவன் ரொமேலியின் மகன். உங்களிடம் விசுவாசம் இல்லாவிட்டால், நீங்கள் நிலைபெற்றிருக்க மாட்டீர்கள்."

10 ஆண்டவர் மீண்டும் ஆக்காசிடம் பேசி,

11 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஓர் அடையாளம் காட்டும்படி கேள்; பாதாளத்தின் கீழோ, வானத்தின் மேலோ தோன்றும் படி கேட்கலாம்" என்றார்.

12 அதற்கு ஆக்காஸ் மறுமொழியாக, "நான் கேட்க மாட்டேன்; ஆண்டவரை நான் சோதிக்கமாட்டேன்" என்று சொன்னான்.

13 அப்பொழுது அவர் சொன்னார்: "அப்படியானால் தாவீதின் வீட்டாரே, கேளுங்கள்; மனிதரைச் சலிப்படையச் செய்தது போதாதென்றா என் கடவுளையும் சலிப்படையச் செய்கிறீர்கள்?

14 ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கோர் அடையாளம் தருவார்: இதோ, கன்னிப் பெண் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்; அவன் எம்மானுவேல் என்னும் பெயர் பெறுவான்;

15 தீமையை விலக்கி நன்மையைத் தேர்ந்து கொள்ள அறியும் வரை, அவன் வெண்ணெயும் தேனும் சாப்பிடுவான்.

16 குழந்தை தீமையை விலக்கி நன்மையைத் தேர்ந்து கொள்ள அறிவதற்கு முன், நீ அஞ்சி நடுங்கும் அரசர்கள் இருவரின் நாடு அழிந்து பாழாய்ப் போகும்;

17 யூதாவினின்று எப்பிராயீம் பிரிந்து போன நாட்களிலிருந்து இன்று வரையில் வந்திராத நாட்களை ஆண்டவர் உன் மேலும், உன் நாட்டு மக்கள் மேலும், உன் தந்தையின் வீட்டார் மேலும் வரச் செய்வார்." (அதாவது - அசீரியா அரசன் வருவான் என்பது.)

18 அந்நாளில், எகிப்து நதிகளின் ஊற்று முனையிலிருந்து கொசுக்களையும், அசீரியா நாட்டினின்று தேனீக்களையும் சீழ்க்கையொலி செய்து ஆண்டவர் கூப்பிடுவார்.

19 உடனே அவை யாவும் ஓடிவந்து, கணவாய்களின் நீர்த்தாரைகளிலும், கற்பாறைகளின் பொந்துகளிளிலும் முட்புதர்கள் அனைத்தின் மேலும், எல்லா மேய்ச்சல் நிலங்களிலும், ஏராளமாய் வந்திறங்கும்.

20 அந்நாளில் பேராற்றுக்கு அப்பாலிலிருந்து வாங்கிய கத்தியைக் கொண்டு, (கத்தி - அசீரிய அரசனைக் குறிக்கிறது) தலையிலும் உடலிலும் உள்ள மயிரையும், தாடி அனைத்தையும் ஆண்டவர் மழித்து விடுவார்.

21 அந்நாளில் இளம்பசு ஒன்றையும் இரண்டு ஆடுகளையுமே ஒரு மனிதன் வைத்திருப்பான்;

22 அவை கொடுக்கும் பாலின் மிகுதியினால் அவன் வெண்ணெய் சாப்பிடுவான்; ஏனெனில் நாட்டில் விடப்பட்டவன் ஒவ்வொருவனும் வெண்ணெயும் தேனுமே சாப்பிடுவான்.

23 அந் நாளில், ஆயிரம் வெள்ளிக்காசு பெறுமானமுள்ள ஆயிரம் திராட்சைக் கொடிகள் இருந்த இடமெல்லாம் முட்களும் புதர்களுமே முளைத்திருக்கும்;

24 வில்லோடும் அம்போடும் மனிதர்கள் அங்கே வருவார்கள், ஏனெனில் நாடெங்கும் முட்களும் முட்புதர்களுமே இருக்கும்.

25 மண்வெட்டியால் பண்படுத்தப்பட்டுப் பயிரிடப்பட்டு வந்த மலைகளுக்கெல்லாம், முட்களுக்கும் முட்புதர்களுக்கும் அஞ்சி யாருமே வரத் துணியமாட்டார்கள்; அவை மாடுகள் மேயும் இடமாகும், ஆடுகள் நடமாடும் காடாகும்.

அதிகாரம் 08

1 பின்னர் ஆண்டவர் என்னைப்பார்த்து, "நீ வரைபலகை ஒன்று எடுத்து, அதில் சாதாரண எழுத்துகளில், 'மாஹெர்-ஷலால்-ஹாஷ்-பாஸ்' என எழுது" என்றார்.

2 இதற்குப் பிரமாணிக்கமுள்ள சாட்சிகளாக ஊரியாஸ் என்னும் அர்ச்சகரையும், பராக்கியாஸ் என்பவனின் மகனான சக்கரியாவையும் ஏற்படுத்தினேன்.

3 பின்பு நான் இறைவாக்கினளுடன் கூடினேன்; அவள் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றாள். அப்போது ஆண்டவர் என்னை நோக்கி, "அவனுக்கு மாஹெர்-ஷலால்-ஹாஷ் -பாஸ் எனப் பெயரிடு.

4 ஏனெனில் குழந்தை, 'அப்பா, அம்மா' என்று கூப்பிடக் கற்றுக் கொள்வதற்குள் தமஸ்குவின் செல்வங்களும், சமாரியாவின் கொள்ளைப் பொருளும் அசீரிய அரசனுக்கு முன் வாரிக் கொண்டு போகப்படும்" என்று சொன்னார்.

5 ஆண்டவர் மீண்டும் என்னிடத்தில் பேசினார்:

6 அமைதியாக ஓடும் சிலோயே நீரை இம்மக்கள் வேண்டாமென மறுத்து விட்டு, இராசீனுக்கும் ரொமேலியின் மகனுக்கும் முன்பாக அஞ்சி நடுங்குவதால்,

7 இதோ ஆண்டவர் இம் மக்களுக்கு எதிராக, ஆற்றல் மிக்க பேராற்றின் பெருவெள்ளத்தை அதாவது, அசீரியா அரசனையும் அவன் மகிமை அனைத்தையும் திரண்டுவரச் செய்திடுவார்; எல்லாக் கால்வாய்களிலும் அதன் வெள்ளம் பெருகும், கரைகள் அனைத்திலும் புரண்டு பாயும்.

8 யாண்டும் ஒரே வெள்ளக் காடாய்ப் பெருகியோடி, யூதா நாட்டிலும் பாய்ந்து அதன் கழுத்தை எட்டும்; எம்மானுவேலே, உன் நாட்டின் பரப்பையெல்லாம் அது நிரப்பி நிற்கும்."

9 மக்களினங்களே, அறிந்து கொள்ளுங்கள்; நீங்கள் தோல்வியுறுவீர்கள்; தொலை நாடுகளே, நீங்களெல்லோரும் செவி சாயுங்கள்; நீங்கள் போர்க்கோலம் கொள்ளுங்கள், தோல்வியே அடைவீர்கள்; நீங்கள் போர்க்கோலம் கொள்ளுங்கள், தோல்வியே அடைவீர்கள்;

10 ஒன்றுகூடி ஆலோசனை செய்யுங்கள்; அதுவும் விழலுக்கு இறைத்த நீராய்த் தான் போகும். நீங்கள் ஆணை பிறப்பியுங்கள், அதுவும் நிலை நிற்காது; ஏனெனில் கடவுள் நம்மோடிருக்கிறார்.

11 தமது வலிமையுள்ள கையை என் மேல் வைத்து, ஆண்டவர் எனக்கு எச்சரிக்கை செய்தார்; இந்த மக்கள் நடக்கின்ற அந்த வழியிலேயே நானும் நடக்காதபடி எனக்குச் சொன்னார்:

12 இந்த மக்கள் சதித் திட்டம் என்று சொல்வதையெல்லாம், நீங்களும் சதித் திட்டம் என்று சொல்லாதீர்கள். அவர்கள் அஞ்சுவதற்கு நீங்கள் அஞ்சாதீர்கள், அஞ்சி நடுக்கம் கொள்ளாதீர்கள்.

13 ஆனால், சேனைகளின் ஆண்டவர் ஒருவரையே பரிசுத்தர் என்று நீங்கள் போற்ற வேண்டும்; அவரைக் கண்டே நீங்கள் அஞ்ச வேண்டும்; அவர் முன்பே நீங்கள் நடுங்க வேண்டும்.

14 அவரே பரிசுத்த இடமாய் இருப்பார், இஸ்ராயேலின் இரு வீட்டாருக்கும் இடறி விடும் கல்லாகவும் தடுக்கிவிடும் பாறையாகவும் இருப்பார்; யெருசலேம் குடிகளுக்குப் பொறியாகவும் கண்ணியாகவும் இருப்பார்.

15 அதன் மேல் பல பேர் இடறி வீழ்வர், வீழ்ந்து நொறுக்கப்படுவர்; கண்ணியில் சிக்குண்டு அகப்பட்டுக் கொள்வர்.

16 இந்த அறிக்கையைக் கட்டி வை; என் சீடர்கள் நடுவில் இந்தப் படிப்பினையை முத்திரையிட்டு வை.

17 யாக்கோபின் வீட்டாருக்குத் தம் முகத்தை மறைத்துக் கொள்ளும் ஆண்டவருக்காக நான் காத்திருப்பேன்; அவரை நான் நம்பியிருக்கிறேன்.

18 சீயோன் மலை மேல் கோயில் கொண்டுள்ள சேனைகளின் ஆண்டவர் இஸ்ராயேலில் ஏற்படுத்திய அடையாளங்களாகவும் முன்னறிகுறிகளாகவும், இதோ நானும், ஆண்டவர் எனக்கீந்த பிள்ளைகளும் இருக்கிறோம்.

19 மை வித்தைக்காரரையும் முணுமுணென்று ஓதிக் குறிசொல்லும் மந்திரவாதிகளையும் குறி கேளுங்கள்" என்று உங்களிடம் அவர்கள் சொல்லுகிறார்களே, குலதெய்வத்தை ஆலோசிப்பதல்லவா மக்களுக்கு முறைமை? வாழ்வோருக்காகச் செத்தவரையல்லவா குறி கேட்பார்கள்?

20 அதை விடத் திருச் சட்டத்தையும் இறைச் சான்றையும் ஆலோசியுங்கள்; அந்த வாத்த்தைகளின்படி அவர்கள் விடை கூறாவிடில், மறுநாள் ஒளியை அவர்கள் காணமாட்டார்கள்.

21 பெருந்துன்பத்தோடும் பசியோடும் அவர்கள் நாட்டைக் கடந்து செல்வர்; அவர்கள் பசியினால் வாடும் போது, ஆத்திரங் கொண்டு தங்கள் அரசனையும் கடவுளையும் சபிப்பார்கள்; மேலே அண்ணாந்து பார்ப்பார்கள்,

22 கீழே தரையைக் குனிந்து நோக்குவார்கள், கடுந் துயரும் இருளும் மன வேதனையின் காரிருளும் புலப்படும், எங்கும் இரவே பரவியிருக்கும், மன வேதனையில் இருப்பது காரிருளில் இருப்பதன்றோ?

அதிகாரம் 09

1 முற்காலத்தில் ஆண்டவர் சபுலோன் நாட்டிடையும், நெப்தாலிம் நாட்டையும் அவமதிப்புக்கு உள்ளாக்கினார்; ஆனால் பிற்காலத்தில் கடல் நோக்கும் வழியையும், யோர்தான் அக்கரைப் பகுதியையும் புறவினத்தார் வாழும் கலிலேயாவையும் மகிமைப்படுத்துவார்.

2 இருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியைக் கண்டனர்; மரண நிழல் படும் நாட்டில் உள்ளோர்க்கு ஒளி உதித்துச் சுடர் வீசிற்று.

3 மக்களினத்தைப் பலுகச் செய்தீர், அதன் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறுவடையின் போது உழவன் மகிழ்வது போலும், கொள்ளைப் பொருளைப் பங்கிடுவோர் அக்களிப்பது போலும், உம் முன்னிலையில் அவர்கள் அக்களிக்கிறார்கள்.

4 ஏனெனில் மாதியான் நாட்டுப் போர்க் காலத்தில் செய்தது போல், அவர்கள் தோள் மேல் சுமத்தப்பட்ட நுகத்தையும், தோளைக் காயப்படுத்திய தடியையும், அவர்களை ஒடுக்கியவனின் கொடுங்கோலையும் நீர் ஒடித்தெறிந்தீர்.

5 ஏனெனில் போர்க்களத்தில் பயன்பட்ட ஒவ்வொரு மிதியடியும், இரத்த வெள்ளத்தில் தோய்ந்த ஆடைகள் யாவும் நெருப்புக்கு விறகாகப் பயன்பட்டு எரிக்கப்படும்.

6 ஏனெனில் நமக்காக ஒரு குழந்தை பிறந்துள்ளது, நமக்கு ஒரு மகன் தரப்பட்டுள்ளான்; ஆட்சியின் பொறுப்பு அவருடைய தோள் மேல் இருக்கும், அவருடைய பெயரோ, "வியத்தகு ஆலோசனையாளர், வல்லமையுள்ள இறைவன், முடிவில்லாத் தந்தை, அமைதியின் மன்னன்" என வழங்கப்படும்.

7 அவருடைய ஆட்சியின் வளர்ச்சிக்கும் அமைதியின் பெருக்கிற்கும் முடிவு என்பதே இராது. தாவீதின் அரியனையில் அமர்வார்; அவரது அரசை நிறுவுவார்; இன்று முதல் என்றென்றும் நீதியாலும் நியாத்தாலும் அதை நிலைபெயராது காத்திடுவார்; சேனைகளின் ஆண்டவரது ஆர்வம் இதைச் செய்யும்.

8 ஆண்டவர் யாக்கோபுக்கு எதிராக ஒரு வாக்குரைத்திருக்கிறார்; அப்படியே அது இஸ்ராயேலுக்குப் பலிக்கும்.

9 அப்போது எல்லா மக்களும் அறிந்து கொள்வார்கள், எப்பிராயீமும் சமாரியாவின் குடிகளும் தெரிந்து கொள்வர். செருக்கிலும் உள்ளத்தின் அகந்தையிலும் அவர்கள்,

10 செங்கற் கட்டடம் தகர்ந்து வீழ்ந்தது, ஆனால் செதுக்கிய கற்களால் கட்டுவோம்; காட்டத்தி மரங்கள் வெட்டுண்டு சாய்ந்தன, ஆனால் அவற்றுக்குப் பதிலாகக் கேதுரு மரங்கள் வைப்போம்" என்று சொல்லுகிறார்கள்.

11 ஆகவே இராசீனின் எதிரிகளை அவர்களுக்குகெதிராய் ஆண்டவர் எழும்பச் செய்வார், அவர்களின் பகைவர்களைத் தூண்டிவிடுவார்;

12 கிழக்கிலே சீரியர்களும் மேற்கிலே பிலிஸ்தியர்களும், வாயைப் பிளந்து இஸ்ராயேலை விழுங்குவார்கள். இதெல்லாம் செய்தும் அவர் சினம் ஆறவில்லை. நீட்டிய கோபக் கை இன்னும் மடங்கவில்லை.

13 தங்களை நொறுக்கியவரிடம் மக்கள் திரும்பவில்லை, சேனைகளின் ஆண்டவரை அவர்கள் தேடவில்லை.

14 ஆதலால் ஆண்டவர் ஒரே நாளில், இஸ்ராயேலின் தலையையும் வாலையும், கிளையையும் மெல்லிய நாணலையும் தறித்து விட்டார்.

15 முதியோரும் மதிப்புக்குரியவரும் தலையாவர், பொய்யுரைக்கும் தீர்க்கதரிசி வால் ஆவான்.

16 ஏனெனில், இந்த மக்களை நடத்துகிறவர்கள் தவறான வழியில் நடத்திச் செல்லுகிறார்கள், அவர்களால் நடத்தப்படுகிற மக்களோ விழுங்கப் படுகிறார்கள்.

17 ஆதலால் ஆண்டவர் அவர்களின் இளைஞரைக் குறித்து மகிழ்வதில்லை, திக்கற்றவர் மேலும் கைம்பெண்கள் மேலும் இரங்குவதில்லை. ஏனெனில் ஒவ்வொருவனும் கடவுட் பற்றில்லாதவன், கொடியவன், ஒவ்வொருவன் வாயும் பேதமையே பேசுகிறது; இதிலெல்லாம் அவர் சினம் ஆறவில்லை, நீட்டிய கோபக் கை இன்னும் மடங்கவில்லை.

18 ஏனெனில் அக்கிரமம் தீயைப் போல் எரிகின்றது, முட்களையும் முட்புதர்களையும் தீய்க்கின்றது, காட்டில் அடர்ந்துள்ள செடிகளைப் பிடிக்கின்றது, தூண் போல புகைப்படலம் எழும்புகின்றது.

19 சேனைகளின் ஆண்டவருடைய ஆத்திரத்தினால் நாடெல்லாம் தீப்பற்றி எரிகின்றது; மக்களோ நெருப்புக்கு விறகானார்கள், சகோதரன் சகோதரனுக்கு இரங்குவதில்லை.

20 வலப்பக்கம் பிடுங்கித் தின்றும் பசி தீரவில்லை; இடப்பக்கம் எடுத்து விழுங்கியும் திருப்தியில்லை. ஒவ்வொருவனும் தன் அயலானின் சதையைப் பிடுங்கித் தின்பான்; மனாசே எப்பிராயீமைப் பிடுங்கித்தின்பான், எப்பிராயீம் மனாசேயைப் பிடுங்கித் தின்பான், இருவரும் ஒன்றாக யூதாவின் மேல் பாய்வார்கள்.

21 இதிலெல்லாம் அவர் சினம் ஆறவில்லை, நீட்டிய கோபக் கை இன்னும் மடங்கவில்லை.

அதிகாரம் 10

1 அநீதியான சட்டங்களை ஆக்குவோர்க்கும், அநியாயங்களை எழுதி வருவோர்க்கும் ஐயோ கேடு!

2 அவர்கள் ஏழைகளுக்கு நீதி வழங்காமல் ஒடுக்குகிறார்கள், நம் மக்களுள் எளியோரின் உரிமையைப் பறிக்கிறார்கள். கைப்பெண்களைக் கொள்ளைப் பொருள் போல பறிக்கிறார்கள், திக்கற்றவர்களை இரையாக்கிக் கொள்ளுகிறார்கள்!

3 தண்டனை கிடைக்கும் நாளிலே என்ன செய்வீர்கள்? தொலைவிலிருந்து அழிவு வரும் போது என்ன ஆவீர்கள்? உதவி தேடி யாரிடம் ஓடிச் செல்வீர்கள்? உங்கள் செல்வங்களை எவ்விடத்தில் வைத்துச் செல்வீர்கள்?

4 கைதியாய் விலங்குக்குத் தலை வணங்காமலோ, மடிந்தவர்களோடு மடியாமலோ தப்ப முடியாது; இதிலெல்லாம் அவர் சினம் ஆறவில்லை, நீட்டிய கோபக் கை இன்னும் மடங்கவில்லை.

5 அசீரியாவுக்கு ஐயோ கேடு! கோபத்தில் நாம் எடுக்கும் கோல் அது, ஆத்திரத்தில் நாம் ஏந்தும் தடி அந் நாடு.

6 இறைப் பற்றில்லா இனத்திற்கெதிராய் அதை அனுப்புகிறோம், நம் ஆத்திரத்துக்கு ஆளான மக்களுக்கு விரோதமாய் அதற்கு நாம் ஆணை கொடுக்கிறோம்; அவர்களைக் கொள்ளையடித்துப் பொருட்களைப் பறித்துக் கொள்ளவும், தெருவிலிருக்கும் சேற்றைப் போல் அவர்களை மிதிக்கவும் அந்நாட்டுக்கு நாம் கட்டளையிடுகிறோம்.

7 ஆனால் அந்நாட்டினர் அவ்வாறு நினைக்கவில்லை, அவர்கள் மனம் அவ்வாறு கருதவில்லை; ஆனால் அவர்கள் மனம் மக்களினம் பலவற்றை அழித்து நாசமாக்கவே விரும்புகிறது.

8 ஏனெனில் அவர்கள் சொல்வது இதுவே: "எங்கள் படைத் தலைவர் அனைவரும் அரசர்கள் அல்லரோ?

9 கால்னோ நகரம் கார்க்கேமிஷ் போலானதில்லையோ? ஏமாத்தோ அர்பாத்தைப் போல் இல்லையோ? சமாரியா தமஸ்குவைப் போல் இல்லையோ?

10 யெருசலேம், சமாரியா இவற்றிலுள்ள படிமங்களை விடச் சிறப்பு வாய்ந்த சிலைகளுடைய அரசுகள் வரை நம்முடைய கை எட்டியிருக்க,

11 சமாரியாவுக்கும் அதன் படிமங்களுக்கும் நாம் செய்தது போல, யெருசலேமுக்கும் அதன் சிலைகளுக்கும் செய்யமாட்டோமா?"

12 ஆண்டவர் சீயோன் மலை மீதும் யெருசலேமின் மேலும் தம் வேலைகளையெல்லாம் முடித்த பிறகு அசீரியாவின் அரசனுடைய ஆணவம் நிறைந்த உள்ளத்தின் சிந்தனை மேலும், இறுமாப்பு நிறைந்த அவன் செருக்கின் மேலும் தண்டனையை வரச் செய்வார்.

13 ஏனெனில் அவன் இவ்வாறு சொல்லி வந்தான்: "என்னுடைய கையின் வல்லமையால் அதைச் செய்து முடித்தேன், என் ஞானத்தால் அதற்கான திட்டங்கள் தீட்டினேன்; மக்களினங்களின் எல்லைகளை அகற்றி விட்டேன், அவர்களுடைய கருவூலங்களைச் சூறையாடினேன், அரியணைகளில் அமர்ந்திருந்தவர்களைக் கீழே தள்ளினேன்.

14 குருவிக் கூட்டைப் பிரித்தெடுப்பது போல் என் கை மக்களினங்களின் செல்வங்களை எடுத்துக் கொண்டது; கைவிடப்பட்ட முட்டைகளைச் சேர்த்தெடுப்பது போல் உலக முழுவதையும் நான் சேர்த்துக்கொண்டேன்; எனக்கெதிராய் இறக்கையடிக்க யாருமில்லை, வாய் திறக்கவோ கீச்சிடவோ துணிந்தாரில்லை."

15 பிளப்பவனுக்கும் மேலாகக் கோடரி பெருமை கொள்வதுண்டோ? அறுப்பவனுக்கு எதிராக வாள் மேன்மை பாராட்டுமோ? தன்னைத் தூக்கியவனைக் கைத்தடி சுழற்றியது போலும், மரமல்லாத மனிதனை மரக்கோலானது தூக்கியது போலுமாகும்!

16 ஆதலால் ஆண்டவர்- சேனைகளின் ஆண்டவர், அவனுடைய கொழுத்த வீரர்கள் நடுவில் பாழாக்கும் நோயை அனுப்புவார்; அவனுடைய மகிமைக்குக் கீழே தணல் பற்ற வைக்கப்படும், அது நெருப்பைப் போல் எரியும்.

17 இஸ்ராயேலின் ஒளியானவர் நெருப்பாவார்; அதனுடைய பரிசுத்தர் தீக்கொழுந்தாய் இருப்பார்; அவனுடைய முட்களையும் முட்புதர்களையும் ஒரே நாளில் சுட்டுத் தீய்த்துச் சாம்பலாக்கி விடும்.

18 அவனுடைய காட்டின் மகிமையையும் வளம் நிறைந்த சோலையின் மாண்பினையும் ஆண்டவர் முற்றிலும் அழித்து விடுவார், உடலும் உயிரும் அழிக்கப்படும்; நோயாளி ஒருவன் மெலிந்து தேய்வது போல் அதுவும் அவ்வாறே ஆகி விடும்.

19 அவனுடைய காட்டின் மரங்களுள் மிகச் சிலவே எஞ்சியிருக்கும், ஒரு குழந்தை கூட அவற்றைக் கணக்கிட்டு எழுதி விடலாம்.

20 அந்நாளில் இஸ்ராயலின் வீட்டாருள் எஞ்சியவரும், யாக்கோபின் வீட்டாருள் தப்பியவரும், தங்களைத் துன்புறுத்தியவனைச் சார்ந்திராமல், உண்மையில் இஸ்ராயேலின் பரிசுத்தராகிய ஆண்டவரையே இனிச் சார்ந்திருப்பார்கள்.

21 எஞ்சினோர் திரும்பி வருவார்கள், யாக்கோபின் வீட்டாருள் எஞ்சினோர் வல்லமை மிக்க கடவுளிடம் திரும்பி வருவர்.

22 இஸ்ராயேலே, உன் மக்கள் கடற்கரை மணி போல் எண்ணிறந்தாராயினும், அவர்களுள் எஞ்சினோர் மிகச் சிலரே திரும்பிவருவர். அழிவு முடிவு செய்யப்பட்டு விட்டது; இதிலெல்லாம் இறைவனின் நீதி விளங்கும்.

23 ஏனெனில் இறைவன் சேனைகளின் ஆண்டவர் தம் தீர்மானத்தின்படியே நாடெங்கினும் அழிவைக் கொண்டுவருவார்.

24 ஆதலால் இறைவன்- சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "சீயோனில் வாழ்கின்ற எம் மக்களே, எகிப்தியர் முன்பு செய்தது போல் அசீரியர்கள் உங்களைத் தடியினால் அடிக்கும் பொழுதும், உங்களுக்கெதிராய்த் தங்கள் கோலை உயர்த்தும் பொழுதும் நீங்கள் அவர்களுக்கு அஞ்ச வேண்டாம்.

25 ஏனெனில் இன்னும் கொஞ்ச காலத்தில் நமது ஆத்திரம் தணிந்து விடும்; அவர்களை அழிக்கும்படியாக நமது கோபம் திருப்பப்படும்.

26 ஓரேப் பாறையருகில் முன்பு மாதியானைத் தண்டித்தது போலும், எகிப்தியரை அழிக்கச் செங்கடல் மீது கோலை நீட்டியது போலும், சேனைகளின் ஆண்டவர் அவர்களுக்கெதிராய்ச் சாட்டையை எடுப்பார்.

27 அந்நாளில் உங்கள் தோள் மேல் அவன் வைத்த சுமை நீங்கும், உங்கள் கழுத்திலிருந்து அவனுடைய நுகத்தடி எடுக்கப்படும்"; ரிம்மோனிலிருந்து புறப்பட்டு வந்துள்ளான்,

28 அயாத்துக்கு அவன் வந்து விட்டான், மகிரோனைக் கடந்து சென்றுள்ளான், மக்மாஸ் அருகில் தன் மூட்டை முடிச்சுகளை வைத்திருக்கிறான்.

29 கணவாயை அவர்கள் கடந்து விட்டார்கள், காபாவின் அருகில் தங்கி இரவைக் கழிக்கிறார்கள்; ராமா திடுக்கிட்டு அஞ்சுகிறது, சவுலின் நகரான கபாஹாத் ஓட்டமெடுத்தது.

30 கால்லீம் என்னும் மங்கையே கூக்குரலிடு! லாயிசாவே கூர்ந்து கேள்! அநாத்தோத்தே மறுமொழி சொல்!

31 மெத்மேனா ஓட்டம் பிடித்தது, காபீம் குடிமக்கள் புகலிடம் தேடி ஓடுகிறார்கள்.

32 இன்றைக்கே அவன் நேபேயில் தங்குவான், சீயோன் மகளின் மலையையும், யெருசலேமின் குன்றையும் கையசைத்து அச்சுறுத்துவான்.

33 இதோ, சேனைகளின் ஆண்டவராகிய இறைவன், பயங்கரமான வல்லமையோடு கிளைகளை வெட்டுவார், ஓங்கி வளர்ந்தவை வெட்டிக் கீழே தள்ளப்படும், உயர்ந்திருப்பவை தாழ்த்தப்படும்.

34 அடர்ந்த காட்டினை அவர் கோடரியால் வெட்டித் தள்ளுவார், லீபான் நிமிர்ந்து நிற்கும் மரங்களுடன் கீழே சாயும்.

அதிகாரம் 11

1 யெஸ்ஸேயின் தண்டிலிருந்து ஒரு தளிர் கிளம்பும், அவன் வேரிலிருந்து ஒரு கிளை தோன்றும்:

2 ஆண்டவருடைய ஆவி அவர்மேல் தங்கும், ஞானமும் மெய்யுணர்வும் தரும் ஆவி, ஆலோசனையும் வல்லமையும் தரும் ஆவி, அறிவும் ஆண்டவரைப் பற்றிய அச்சமும் தரும் ஆவி, இந்த ஆவி அவர் மேல் தங்கும்.

3 ஆண்டவருக்கு அஞ்சுவதில் அவர் மகிழ்ந்திருப்பார். அவர் தம் கண்ணால் கண்டதைக் கொண்டு மட்டும் தீர்ப்பிடமாட்டார்; காதால் கேட்டதைக் கொண்டு மட்டும் தீர்ப்புச் செய்ய மாட்டார்.

4 ஆனால், நீதி பிறழாமல் எளியோரைத் தீர்ப்பிடுவார், நாட்டின் ஏழைகளுக்கு நடுவு நிலையோடு தீர்ப்புச் சொல்வார், தமது வாய் மொழியால் உலகத்தைச் சாடுவார், தமது மூச்சினால் தீயோரை அழிப்பார்.

5 நீதி அவருக்கு அரைக் கச்சை, உண்மை அவருக்கு இடைக் கச்சை.

6 அந்நாளில், செம்மறியோடு ஓநாய் தங்கியிருக்கும், வெள்ளாட்டுக் குட்டியோடு சிறுத்தைப் புலி படுத்துறங்கும், கன்றும் சிங்கமும் ஒன்றாய் மேயும், சிறு பிள்ளை ஒன்று அவற்றை நடத்தும்.

7 பசுவும் கரடியும் கூடி மேயும், பசுவின் கன்றும் கரடிக் குட்டியும் ஒன்றாய் இளைப்பாறும், சிங்கமும் எருதைப் போல வைக்கோல் தின்னும்.

8 பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்பின் வளையில் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டு விரியன் வளையில் தன் கையை விடும்;

9 நம் பரிசுத்த மலையெங்கும் தீங்கு செய்வதோ, கேடு விளைவிப்பதோ யாதுமிராது; ஏனெனில் தண்ணீர் கடலை நிரப்பியிருப்பது போல், ஆண்டவரைப் பற்றிய அறிவு நாட்டை நிரப்பும்.

10 அந்நாளில், யெஸ்ஸேயின் தளிர் மக்களினங்களுக்கொரு விருதுக்கொடியாய் விளங்கும்; புறவினத்தாரெல்லாம் அவரைத் தேடிச் செல்வர், அவருடைய இருப்பிடம் மகிமையுள்ளதாய் இருக்கும்.

11 அந்நாளில் ஆண்டவர் இரண்டாம் முறையாகத் தம் கையை நீட்டுவார்; நீட்டி அசீரியாவிலிருந்தும் எகிப்திலிருந்தும் பாத்துரோசிலிருந்தும், எத்தியோப்பியாவிலிருந்தும் ஏலாமிலிருந்தும் சென்னாரிலிருந்தும், ஏமாத்திலிருந்தும் கடலிலுள்ள தீவுகளிலிருந்தும் தம் மக்களுள் எஞ்சியிருப்போரை மீட்டுக் கொள்வர்.

12 மக்களினங்களுக்கு ஒரு கொடியை ஏற்றுவார், இஸ்ராயேலில் வெளியேற்றப்பட்டவர்களை ஒன்று சேர்ப்பார்; யூதாவிலிருந்து சிதறுண்டு போனவர்களை உலகின் நான்கு மூலைகளினின்றும் ஒன்று கூட்டுவார்.

13 எப்பிராயீமின் பொறாமை அகன்றுபோகும், யூதாவுக்குத் துன்பம் விளைப்போர் அழிவுறுவர்; எப்பிராயீம் யூதாவின் மேல் அழுக்காறு கொள்ளாது, யூதாவும் எப்பிராயீமுக்குத் துன்பம் தராது.

14 ஆனால் மேற்கிலுள்ள பிலிஸ்தியர் மேல் இருவரும் பாய்வர், கீழ்த்திசை நாட்டினரை இருவரும் சேர்ந்து கொள்ளையிடுவர்; இதுமேயாவுக்கும் மோவாபுக்கும் எதிராகக் கையுயர்த்துவர், அம்மோன் மக்கள் அவர்களுக்கு அடிபணிந்திருப்பர்.

15 ஆண்டவர் எகிப்து நாட்டின் வளைகுடாவை முற்றிலும் வற்றச் செய்வார்; வற்றச்செய்யும் காற்றினால் ஆற்றின்மேல் தம் கையை நீட்டுவார்; கால் நனையாமல் மனிதர் கடக்கும்படி அவ்வாற்றை ஏழு கால்வாய்களாய்ப் பிரித்து விடுவார்.

16 எகிப்து நாட்டிலிருந்து இஸ்ராயேல் மக்கள் வந்த போது எவ்வாறு அவர்களுக்கு வழி உண்டானதோ, அவ்வாறே அவர் மக்களுள் எஞ்சினோர் வருவதற்கு அசீரியாவிலிருந்து நெடுஞ்சாலை ஒன்று அமைக்கப்படும்.

அதிகாரம் 12

1 அந்நாளில், நீ இவ்வாறு சொல்லுவாய்: "ஆண்டவரே, நான் உமக்கு நன்றி கூறுகிறேன், ஏனெனில் நீர் என் மீது சினங்கொண்டாலும், இப்பொழுது உமது சினம் தணிந்து விட்டது, நீரும் எனக்கு ஆறுதல் தந்தீர்.

2 இதோ கடவுள் தான் என் மீட்பு, அவர் மேல் நம்பிக்கை வைக்கிறேன், அஞ்சேன்; ஏனெனில் ஆண்டவரே என் வலிமை, அவரையே பாடுவேன், என் மீட்பு அவரே."

3 மீட்பின் ஊற்றுகளினின்று தண்ணீரை அகமகிழ்வோடு நீங்கள் முகந்து கொள்வீர்கள்,

4 அந்நாளில் நீங்கள் இவ்வாறு சொல்லுவீர்கள்: "ஆண்டவருக்கு நன்றி கூறுங்கள், அவரது பெயரைப் போற்றிப் புகழுங்கள்; புறவினத்தார்க்கு அவர் செயல்களை அறிக்கையிடுங்கள், அவர் பெயர் உயர்ந்ததெனப் பறைசாற்றுங்கள்.

5 ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள், ஏனெனில் மகிமைக்குரிய செயல்களைச் செய்தார்; உலகெங்கும் இதனைத் தெரியப்படுத்துங்கள்.

6 சீயோனின் குடிகளே ஆர்ப்பரியுங்கள், மகிழ்ச்சியினால் பாடுங்கள்; ஏனெனில் இஸ்ராயேலின் பரிசுத்தர் உன் நடுவில் மேன்மையோடு விளங்குகிறார்."

அதிகாரம் 13

1 ஆமோஸ் என்பவரின் மகனான இசையாஸ் பபிலோனுக்கு எதிராகக் கூறிய இறைவாக்கு.

2 மொட்டை மலை மீது கொடியேற்றுங்கள், அவர்களை நோக்கி உரக்கக் கூவுங்கள்; பெருங்குடி மக்களின் வாயில்களில் நுழையும்படி அவர்களுக்குக் கையசைத்துச் சைகை காட்டுங்கள்.

3 போருக்கென அர்ச்சிக்கப்பட்ட நம் வீரர்களுக்கு நாமே ஆணை பிறப்பித்திருக்கிறோம்; நம்முடைய கோபத்தின் கட்டளையை நிறைவேற்றிட, வலிமையில் பெருமை கொள்ளும் நம் வீரர்களை அழைத்திருக்கிறோம்;

4 இதோ, மலைகளின் மேல் பேரிரைச்சல்! பெருங் கூட்டம் வருவது போல் ஆரவாரம்! இதோ, அரசுகளின் எழுச்சிக் குரல்! மக்களினங்கள் ஒன்றாகக் கூடுகின்றன! சேனைகளின் ஆண்டவர் போருக்காக, ஆள் சேர்த்துச் சேனையொன்றைத் திரட்டுகின்றார்.

5 தொலை நாட்டினின்று அவர்கள் வருகின்றார்கள், தொடுவானத்து எல்லையிலிருந்து வருகின்றார்கள்; ஆண்டவரும் அவரது ஆத்திரத்தின் படைக்கலங்களும் உலகத்தை முழுவதும் அழிக்கவே வருகின்றனர்.

6 கதறியழுங்கள், ஏனெனில் ஆண்டவரின் நாள் அருகில் உள்ளது; பேரழிவைப் போல் எல்லாம் வல்லவரிடமிருந்து அது வரும்!

7 ஆதலால், கைகள் யாவும் தளர்ந்து போகும், மனிதரின் உள்ளமெல்லாம் சோர்வடையும்.

8 அவர்கள் திகில் அடைவார்கள், வேதனைகளும் துயரமும் அவர்களைப் பிடித்தலைக்கும், பிள்ளை பெறும் பெண்ணைப் போல் அவர்கள் வேதனையுறுவர்; ஒருவரையொருவர் திகிலோடு உற்று நோக்குவர், அவர்களுடைய முகங்களில் தீப்பறக்கும்.

9 இதோ, ஆண்டவருடைய நாள் வருகின்றது. கொடுமையும் ஆத்திரமும் கடுஞ்சினமும் நிறைந்த நாள் அது; உலகத்தைப் பாழாக்கி அது வெறுமையாக்கும், அதிலிருக்கும் பாவிகளை அழித்தகற்றும்.

10 வானத்து மீன்களும் விண்மீன் கூட்டங்களும், தம் ஒளியினை வீசமாட்டா; தோன்றும் போதே கதிரவன் இருண்டு போவான். வெண்ணிலவும் தன்னொளியைப் பரப்பிடாது.

11 உலகத்தை அதன் தீமைக்காகத் தண்டித்திடுவோம், தீயோரை அவர்களின் அக்கிரமத்துக்காகப் பழிவாங்குவோம்; இறுமாப்புக் கொண்டவரின் செருக்கை அடக்குவோம்; முரடர்களின் ஆணவத்தை அழித்துத் தாழ்த்துவோம்.

12 சுத்தத் தங்கத்தை விட மனிதர்களை அரிதானவர்கள் ஆக்குவோம், ஓப்பீரின் தங்கத்தை விட மனித உயிர் அரிதாகும்.

13 ஆதலால், வானத்தை நடுங்கச் செய்வோம், பூமியும் தன்னிலையில் ஆட்டங்கொடுக்கும்; சேனைகளின் ஆண்டவருடைய ஆத்திரத்தினால், அவர் கடுஞ் சினத்தின் நாளிலே இவை நடக்கும்.

14 துரத்தப்பட்டுத் தப்பியோடும் மான் கன்று போல், சேர்ப்பாரின்றி சிதறுண்ட ஆடுகளைப் போல், அவனவன் தன் மக்களிடம் திரும்பியோடுவான் அவனவன் சொந்த நாட்டை நோக்கி ஓடுவான்,

15 அகப்பட்டுக் கொள்பவன் எவனும் கொல்லப்படுவான், பிடி படுபவன் எவனும் வாளால் மடிவான்.

16 அவர்களின் கண்கள் காணும்படியே அவர்களுடைய குழந்தைகள் நசுக்கப்படுவர்; அவர்களின் வீடுகள் கொள்ளையிடப்படும், அவர்களின் மனைவியர் கற்பழிக்கப்படுவர்.

17 மேதியரை அவர்களுக்கெதிராய் இதோ நாம் தூண்டுகிறோம், அவர்கள் வெள்ளியைப் பொருட்படுத்தாதவர்கள்; பொன்னை விரும்பித் தேடாதவர்கள்.

18 ஆனால் அம்புகளால் இளைஞரைக் கொல்வர், பால் குடிக்கும் குழந்தைகள் மேல் இரக்கம் காட்டார், குழந்தைகளுக்கு அவர்கள் கண்கள் இரங்கமாட்டா.

19 அரசுகளின் மகிமையும், கல்தேயரின் பெருமிதமும், பேரழகுமான பபிலோன் பட்டணம், கடவுள் கவிழ்த்து வீழ்த்திய சோதோம், கொமோரா நகரங்களைப் போலவே ஆகிவிடும்.

20 மக்கள் இனி ஒரு போதும் அங்கே குடியேற மாட்டார்கள், எல்லாத் தலைமுறைகளுக்கும் அது குடியற்றுக் கிடக்கும்; அராபியர் தம் கூடாரத்தை அங்கு அடிக்க மாட்டார், இடையர் தம் ஆடுகளை அங்கு மடக்க மாட்டார்.

21 ஆனால் காட்டு மிருகங்கள் அங்கே படுத்துக் கிடக்கும், ஆந்தைகள் அவர்களுடைய வீடுகளில் அடைந்து கிடக்கும், தீக்கோழிகள் அங்கு வந்து குடி கொண்டிருக்கும், கூளிகள் அவ்விடத்தில் கூத்துகள் ஆடும்.

22 அவர்களின் அரண்மனைகளில் கழுதைப் புலிகள் கத்தும், இன்ப மாளிகைகளில் குள்ள நரிகள் ஊளையிடும்; அதற்குரிய காலம் நெருங்கி விட்டது; அதற்குரிய நாட்களோ தொலைவில் இல்லை.

அதிகாரம் 14

1 ஆண்டவர் யாக்கோபின் மேல் இரக்கம் காட்டுவார்; இஸ்ராயேலை மறுபடியும் தேர்ந்து கொள்வார்; அவர்களை அவர்களுடைய சொந்த நாட்டில் நிலைநாட்டுவார்; அந்நியரும் அவர்களோடு கூடிவந்து யாக்கோபின் வீட்டாரோடு சேர்ந்து கொள்வார்கள்.

2 புறவினத்தார் வந்து அவர்களை அவர்களுடைய சொந்த நாட்டுக்குக் கூட்டிப் போவார்கள்; இஸ்ராயேல் மக்கள் ஆண்டவருடைய நாட்டில் அவர்களை வேலைக்காரர்களாகவும் வேலைக்காரிகளாகவும் வைத்துக் கொள்வார்கள்; தங்களை அடிமைப்படுத்தியவர்களை அடிமைகளாக்குவார்கள்; தங்களை ஒடுக்கினவர்களை அடக்கி ஆளுவார்கள்.

3 ஆண்டவர் உன் வேதனையையும் நெருக்கடியையும், உன் மேல் சுமத்தப்பட்டிருந்த அடிமை வாழ்வையும் அகற்றி உனக்கு அமைதி தந்த பிறகு,

4 பபிலோனிய அரசனுக்கு எதிராக இந்த வசைப் பாடலைக் கூறு: "கொடுங்கோலன் என்ன கதியானான்? அவனுடைய ஆணவம் என்ன ஆயிற்று?

5 கொடியவர்களின் தடியையும் ஆட்சி செய்தவர்களின் கோலையும் ஆண்டவர் ஒடித்தெறிந்தார்.

6 ஆத்திரத்தோடு மக்களை ஓயாமல் அடி மேல் அடியாக அடித்து நொறுக்கி, கோபத்தோடு மக்களினங்களை இரக்கமின்றித் துன்புறுத்தி ஆண்டு வந்த கொடுங்கோலை முறித்து விட்டார்.

7 உலகமெலாம் இளைப்பாறி அமைதியடைகிறது; பூரிப்பால் அக்களித்துப் பாடுகின்றனர்.

8 தேவதாரு மரங்களும் லீபானின் கேதுரு மரங்களும், உன் வீழ்ச்சியால் மகிழ்ந்து உன்னைப்பற்றி, 'நீ வீழ்ந்தாய், எமை வீழ்த்த எமக்கெதிராய் வருபவர் யாருமில்லை' எனக் கூறும்.

9 நீ வரும்போது எதிர் கொண்டு சந்திக்கும்படி கீழுள்ள பாதாளம் துள்ளி எழுகிறது; உலகத்தின் தலைவர்களின் நிழல்கள் எல்லாம் வந்துன்னை வரவேற்க எழுப்புகின்றது; பல நாட்டு மன்னர்களாய் இருந்தவரெல்லாம் அரியணை விட்டு எழுந்திருக்கச் செய்கின்றது.

10 அவர்கள் அனைவரும் உன் முன் வந்து, 'நீயுமா எங்களைப் போல் வலுவிழந்தாய்! நீயும் எங்களைப் போல் ஆகிவிட்டாயே!' என்று அவர்கள் உன்னை நோக்கிக் கூறுவார்கள்.

11 உன் ஆடம்பரம் தரைமட்டம் ஆகிவிட்டது, இசை முழக்கம் பாதாளம் வரைத் தாழ்த்தப்பட்டது. அரி புழுக்கள் உன் கீழ் படுக்கையாகும், பூச்சிகளே உனக்குரிய போர்வையாகும்,

12 வைகறைப் புதல்வனே, விடி வெள்ளியே, வானின்று நீ வீழ்ந்த வகை தான் என்னே! புண்பட மக்களை வாட்டி வந்த நீ எவ்வாறு தரை மீது வீழ்த்தப்பட்டாய்?

13 வானுலகத்திற்கு நான் ஏறிப் போவேன், கடவுளின் விண்மீன்களுக்கும் அப்பால் உயரத்தில் என் அரியணையை அமைத்திடுவேன், தொலைவான வடபுறத்தின் எல்லையிலே, சபை கூடும் மலை மேலே வீற்றிருப்பேன்;

14 மேகங்களுக்கும் மேலாக ஏறிடுவேன், உன்னதற்கு ஒப்பாக என்னை ஆக்கிக்கொள்வேன்' என்று நீ உன்னுள்ளத்தில் சொல்லிக்கொண்டாய்.

15 ஆயினும் நீ பாதாளம் வரைத் தாழ்த்தப்பட்டாய், படுகுழியின் ஆழத்தில் வீழ்த்தப்பட்டாய்.

16 காண்பவர்கள் உன்னை இன்னும் உற்றுப் பார்ப்பர்; 'உலகமெலாம் நடு நடுங்கச் செய்தவனும், அரசுகள் ஆட்டங்கொள்ளச் செய்தவனும்,

17 பூமியினைப் பாலை நிலம்போல் ஆக்கிவிட்டு அதனுடைய நகரங்களை வீழ்த்தியவனும், தன்னிடம் சிறைப்பட்டவர் வீடு திரும்ப விடுதலை தராமல் வைத்திருந்தவனும் இவன் தானோ' என்று சொல்லுவார்கள்.

18 மக்களினங்களின் அரசலெல்லாரும் மகிமையோடு படுத்துள்ளனர், ஒவ்வொருவரும் தத்தம் கல்லறையில் படுத்துள்ளனர்;

19 நீயோ கல்லறையினின்று புறம்பே எறியப்பட்டு அருவருப்பான அழுகல் போல விடப்பட்டாய்; வாளால் வெட்டுண்டு இறந்தவர்களின் உடல்களால் மூடப்பட்டாய்; பாதாளத்தில் இறங்குகிறவர்களோடு நாற்றமெடுத்த பிணம் போலக் கிடக்கின்றாய்.

20 அவர்களோடு சேர்த்து உன்னை அடக்கம் செய்ய மாட்டார்கள், ஏனெனில் உனது நாட்டை நீ பாழாக்கினாய், உன் நாட்டு மக்களை நீ கொன்று போட்டாய். "தீமை செய்வோர் சந்ததியின் பெயர் எந்நாளும் சொல்லப்படாது,

21 கொலைகளத்துக்கு அவன் மக்களைத் தயாரியுங்கள், ஏனெனில் அவர்களுடைய தந்தையர் அக்கிரமம் செய்தனர்; இனிமேல் அவர்கள் உலகத்தைத் தங்களுக்குக் கீழ்ப்படுத்தத் தலையெடுக்கவே கூடாது; பூமியின் நகரங்களை நிரப்பவும் கூடாது."

22 சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "அவர்களுக்கு எதிராக நாம் கிளம்புவோம்; பபிலோனின் பெயரையும், அங்கே எஞ்சியிருப்போரையும், வழித் தோன்றல்களையும் சந்ததியையும் அழிப்போம் என்கிறார் ஆண்டவர்.

23 அதை முள்ளம் பன்றிகளின் உரிமையாக்குவோம்; நீரும் சேறும் நிறைந்த இடமாக்குவோம்; அழிவு என்னும் துடைப்பம் கொண்டு முழுவதும் பெருக்குவோம் என்கிறார் சேனைகளின் ஆண்டவர்."

24 சேனைகளின் ஆண்டவர் ஆணையிட்டுக் கூறுகிறார்: "நாம் திட்டமிட்டவாறே நிகழ்ந்து வரும், நாம் எண்ணியபடியே நிறைவேறி வரும்;

25 நம்முடைய நாட்டில் அசீரியனை அழிப்போம், நம் மலைகளின் மேல் அவனைக் காலால் மிதிப்போம்; அவனுடைய நுகத்தடி அவர்களிடமிருந்து அகலும், அவன் வைத்த சுமை அவர்கள் தோளினின்று இறங்கும்."

26 பூமியனைத்தையும் பற்றி நாம் கொண்டுள்ள உட்கருத்து இதுவே. மக்களினம் அனைத்தின் மேலும் நீட்டிய கையும் இதுவே.

27 சேனைகளின் ஆண்டவர் ஆணை தந்திருக்க, அதைத் தடுக்க வல்லவன் யார்? அவர் தமது கையை நீட்டியிருக்க, அதை மடக்கக் கூடியவன் யார்?

28 ஆக்காஸ் அரசன் இறந்து போன ஆண்டில் இந்த இறைவாக்கு அருளப்பட்டது:

29 பிலிஸ்தேயா நாடே, நீ அக்களிக்காதே, உன்னை அடித்த தடி முறிந்ததென மகிழாதே; ஏனெனில் பாம்பென்னும் வேரிலிருந்து ஒரு கட்டு விரியன் புறப்பட்டு வரும்; அதனுடைய கனியாக ஒரு பறவை நாகம் வெளிப்படும்.

30 எளியவர்களில் எல்லாம் எளியவர்கள் உணவு பெறுவர், ஏழைகள் நம்பிக்கையோடு இளைப்பாறுவர்; ஆனால் உன் இனத்தைப் பசியால் மடியச் செய்வோம், உன் சந்ததியில் எஞ்சியோரை நாசமாக்குவோம்.

31 வாயிலே புலம்பியழு, நகரமே கதறியழு; பிலிஸ்தேயா நாடே நடுநடுங்கு! ஏனெனில் வடதிசையிலிருந்து புகை எழும்புகிறது, அந்த அணிவகுப்புகளை விட்டகல்வோன் எவனுமில்லை."

32 அந்நாட்டுத் தூதுவர்க்கு என்ன பதில் சொல்வது? "ஆண்டவர் சீயோனை உறுதியாக நிலை நாட்டினார், அவருடைய மக்களுள் துன்புறுவோர் அங்கே புகலிடம் பெறுகின்றனர்."

அதிகாரம் 15

1 மோவாபைப் பற்றிய இறைவாக்கு: ஆர் நகரம் அழிவுற்ற அந்த இரவிலேயே மோவாப் வீழ்ச்சியுற்றது; கீர் நகரம் அழிவுற்ற அந்த இரவிலேயே மோவாப் வீழ்ச்சியுற்றது.

2 அழுது புலம்புவதற்காக அரச வீட்டாரும் தீபோன் மக்களும் உயர்ந்த இடங்களுக்குப் போகிறார்கள்; நாபோ, மேதாபா இவற்றின் அழிவைக் குறித்து மோவாப் நாட்டினர் அழுகின்றார்கள்; தலைகள் யாவும் மழிக்கப்படும், தாடிகள் அனைத்தும் சிரைக்கப்படும்.

3 தெருக்களில் கோணி உடுத்திக்கொண்டு திரிவார்கள், வீடுகளின் மாடிகளிலும் பொதுவிடங்களிலும், அனைவரும் புலம்பிக் கண்ணீர் வடிக்கின்றார்கள்.

4 எசேபோன், எலயாலே ஓலமிடுகின்றன, யாசா வரை அவற்றின் குரல் கேட்கின்றது; அதைக் கேட்டு மோவாப் வீரர்களும் புலம்புகிறார்கள், அவர்களின் இதயமும் உள்ளுக்குள் குமுறுகிறது.

5 மோவாபுக்காக என்னுள்ளமும் கதறுகிறது, தப்பிப் பிழைத்தவர்கள் சேகோர், எக்லாத் - ஷூலிஷியா முதலிய இடங்களுக்கு ஓடுகின்றனர்; லூவித் குன்றின் மேல் அழுது கொண்டே ஏறுகின்றனர், ஒரோநாகிம் வழியிலெல்லாம் உள்ளம் உருகும்படி புலம்புகின்றனர்.

6 நெம்ரிம் நீர் நிலைகள் வறண்டு போயின. புல் உலர்ந்தது, முளைகள் கருகிவிட்டன, பசுமை என்பதே இல்லாமற் போனது.

7 ஆதலால் தங்கள் சொத்தில் மிகுந்திருந்ததையும், தாங்கள் சேமித்து வைத்திருந்ததையும், அராவிம் நீரோடையின் அக்கரைக்குத் தூக்கிக் கொண்டு கடக்கிறார்கள்.

8 மோவாபின் எல்லையெங்கும் அழுகைக் குரல் கேட்கிறது, அவர்களின் புலம்பல் கல்லிம் வரையில் எட்டுகிறது, அவர்களின் ஓலம் எலிம் கேணிகள் வரைக் கேட்கிறது.

9 தீபோன் நீர் நிலைகள் இரத்தம் நிறைந்துள்ளன, தீபோன் மேல் வேதனை மேல் வேதனை கொண்டு வருவோம்; மோவாப் மக்களுள் தப்பினவர் மேலும், நாட்டிலே எஞ்சியிருப்போர் மேலும் சிங்கத்தை வரச் செய்வோம்.

அதிகாரம் 16

1 சேலாவிலிருந்து பாலை நிலத்தின் வழியாய் சீயோன் மகளின் மலைக்கு நாடாளும் மன்னனுக்குச் செலுத்த வேண்டிய செம்மறிகளை அனுப்புங்கள்.

2 அலைந்து திரியும் பறவைகள் போலும், கூட்டை விட்டோடும் குஞ்சுகள் போலும் மோவாப் நாட்டின் மங்கையர்கள் அர்னோன் ஆற்றுத் துறையில் நின்று கொண்டு,

3 கூட்டங் கூடுங்கள், ஆலோசனை செய்யுங்கள்; நண்பகலில் இரவு போல நிழல் உண்டாக்குங்கள், துரத்தப்பட்டவர்களுக்குப் புகலிடம் கொடுங்கள், தப்பியோடுகிறவர்களைக் காட்டிக் கொடுக்காதீர்கள்.

4 மோவாபிலிருந்து தப்பி வந்தவர்கள் உங்கள் நடுவில் தங்கியிருக்கட்டும்; அழிக்க வருபவனிடமிருந்து தப்புவதற்கு நீங்கள் அவர்களுக்கு அடைக்கலமாய் இருங்கள்" என்கிறார்கள். ஒடுக்குபவன் ஒழிந்த பிறகு, அழிவு முடிவெய்திய பின்பு காலால் மிதித்துக் கொடுமை செய்பவன் நாட்டினின்று ஒழிந்து போன பின்னர்,

5 நிலையான அன்பினால் ஓர் அரியணை அமைக்கப்படும்; அதன் மேல் தாவீது மன்னனின் கூடாரத்தில் உண்மையுள்ள ஒருவர் அமர்வார்; அவர் தீர்ப்புக் கூறுவார், நீதியை நாடுவார், நியாயம் வழங்குவதில் காலந்தாழ்த்த மாட்டார்.

6 மோவாபின் செருக்கு எவ்வளவெனக் கேள்வியுற்றோம், பெரிதே அதன் இறுமாப்பு! அதன் இறுமாப்பும் செருக்கும் திமிரும் பற்றிக் கேள்விப் பட்டோம், அதனுடைய தற்புகழ்ச்சிகள் யாவும் பொய்.

7 ஆதலால் மோவாப் நாட்டினர் மோவாபுக்காகப் புலம்பட்டும், எல்லாரும் அலறியழட்டும்; அழுங்கள்; கிர்ஹாரெசெத் திராட்சை அடைகளை நினைத்து, மனமுடைந்து பெருமூச்செறியுங்கள்.

8 எசேபோனின் வயல்கள் வாடுகின்றன, சபாமா திராட்சைக் கொடிகள் உலருகின்றன; அவற்றின் திராட்சைக் குலைகள் பல நாட்டு மன்னர்களைப் போதையால் கீழே விழத்தாட்டின; அந்தத் திராட்சைக் கொடிகள் ஒரு பக்கத்தில் யாசேர் வரையிலும் மறுபக்கத்தில் பாலை நிலம் வரையிலும் எட்டின; அவற்றின் தளிர்கள் கடலுக்கப்பாலும் படர்ந்து சென்றன.

9 ஆதலால் யாசேரைப் போலவே நானும் சபாமா திராட்சைக் கொடிக்காகப் புலம்பியழுவேன்; எசேபோனே, ஏலயாலே, உங்களை என் கண்ணீரால் நனைத்திடுவேன்; ஏனெனில் உன் கனிகள் மேலும், அறுவடை மேலும் போர்க்களத்தின் ஆரவாரம் கேட்டதே.

10 வளமான வயலினின்று அக்களிப்பும் மகிழ்ச்சியும் எடுபட்டன; திராட்சைத் தோட்டங்களில் பாட்டுகள் கேட்கவில்லை, ஆரவாரங்கள் எழும்பவில்லை; ஆலைகளில் திராட்சைப் பழங்களை மிதிப்பாரில்லை, மிதிப்பவரின் ஆர்ப்பரிப்பு அடங்கி விட்டது.

11 ஆதலால், வீணையின் அழுசுரம் போல் என் உள்ளம் மோவாபுக்காகக் குமுறியழுகிறது; என் இதயம் கிர்ஹாரெசெத் அழிவைக் குறித்து பதறுகின்றது.

12 மோவாப் நாட்டினர் உயரமான இடங்களுக்கு வந்து பரிசுத்த இடத்தில் மன்றாடுவது பயனொன்றும் தராது.

13 இதுவே கடந்த காலத்தில் ஆண்டவர் மோவாபைக் குறித்துக் கூறிய இறைவாக்கு.

14 ஆனால் இப்பொழுது ஆண்டவர் கூறுகிறார்: "கூலியாள் கணக்கின்படி, இன்னும் மூன்று ஆண்டுகளில் மோவாபின் மகிமை நாசமாகும்; திரளான மக்கட் கூட்டம் இருந்தும் அதைக் காக்க முடியாது; அவர்களுள் எஞ்சியிருப்போர் மிகச் சிலரே ஆவர்; அவர்களும் வலுவிழந்திருப்பர்.

அதிகாரம் 17

1 தமஸ்குப் பட்டணத்தைப் பற்றிய இறைவாக்கு: இதோ, தமஸ்கு ஒரு நகரமாய் இராமற் போகும், பாழடைந்த மண்மேடாய்க் கிடக்கும்.

2 அரோயர் பட்டணங்கள் கைவிடப்படும், மந்தைகளுக்கு மேய்ச்சலிடமாய் விட்டுவிடப்படும்; அவை அவ்விடத்திலேயே அடைந்திருக்கும், அவற்றை அச்சுறுத்துபவன் எவனுமில்லை.

3 எப்பிராயீமின் அரண்காவல் அழிந்து விடும், தமஸ்குவின் அரசுரிமை பறிக்கப்படும்; சீரியா நாட்டிலே எஞ்சியிருப்போர் இஸ்ராயேல் மக்களின் மகிமையைப் போல் ஆவார்கள் என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.

4 மேலும் அந் நாளில், யாக்கோபின் மகிமை தரைமட்டமாய்த் தாழ்த்தப்படும், அவனுடைய உடல் வலிமை குன்றிப் போகும்.

5 அறுப்பவன், நிற்கின்ற தானிய மணிகளைச் சேர்ப்பது போலும், கையால் கதிர்களை எளிதாகக் கொய்வது போலும், ரப்பாயீம் பள்ளத்தாக்கில் தப்புக் கதிர்களைத் தேடிப் பொறுக்குவதுபோலும் இருக்கும்;

6 ஒலிவ மரத்தின் காய்களைப் பறிக்கும் போது உயர்ந்தோங்கிய கிளை நுனியில் ஒன்றிரண்டும், பழமரத்துக் கிளைகளிலே நாலைந்தும் காய்கள் தப்புவது போல், அவர்களிலும் தப்பியவர்கள் எஞ்சியிருப்பார் என்கிறார் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர்.

7 அந்நாளில் தன்னைப் படைத்தவர் முன் மனிதன் தலைவணங்குவான்; அவனுடைய கண்கள் இஸ்ராயேலின் பரிசுத்தரை நோக்கும்;

8 தன்னுடைய கை வேலைப்பாடுகளான பீடங்களைப் பொருட்படுத்தமாட்டான்; தானே தன் கைகளால் செய்த மரச் சிலைகளையும் கற்கூம்புகளையும் ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்.

9 அந் நாளில், இஸ்ராயேல் மக்களின் முன்னிலையில் அமோரியர், ருவிதியர் இவர்களின் நகரங்கள் கைவிடப்பட்டது போல் அரண் சூழ்ந்த உன் நகரங்களும் கைவிடப்படும். அவை யாவும் பாலை வெளியாகும்.

10 ஏனெனில் உன்னுடைய மீட்பின் கடவுளை நீ மறந்துவிட்டாய்; உன் புகலிடமான பாறையை நீ நினைவுகூரவில்லை; ஆதலால், இனிய செடிகளையே நீ நட்டு வைத்தாலும், அந்நிய தெய்வங்களுக்குரிய நாற்றுகளைப் பயிரிட்டாலும்,

11 நீ அவற்றை நட்ட நாளிலேயே வளரச் செய்தாலும், விதைத்த நாள் காலையிலேயே பூக்கச் செய்தாலும், துயரத்தின் நாளில் ஆற்ற முடியாத வேதனை வரும் போது, அறுவைடையே கிடைக்காமல் போய்விடுமே!

12 இதோ, பல நாட்டு மக்களின் பேரிரைச்சல்: கடல் கொந்தளிப்பின் இரைச்சல் போல முழங்குகிறார்கள்; இதோ, மக்களினங்களின் கர்ச்சனை கேட்கின்றது; வெள்ளப் பெருக்கின் கர்ச்சனை போல கர்ச்சிக்கிறார்கள்! 13 பெரு வெள்ளம்போல பல நாட்டினர் கர்ச்சிக்கிறார்கள், ஆயினும் அவர் அதட்டுவார், அவர்கள் ஓடிப் போவார்கள், பெருங் காற்றால் மலை மேலே பறந்தோடும் பதர் போலும், புயல் காற்றில் சுழன்றோடும் தூசு போலும் சிதறிப் போவார்கள்.

14 மாலையில், இதோ, திகிலுண்டாகும்! விடியுமுன் அவர்கள் அழிந்துபோவர்கள்! நம்மைக் கொள்ளையடிப்பவர்கள் பாடு இதுவாகும், நம்மைச் சூறையாடுவோர் கதி இவ்வாறாகும்.

அதிகாரம் 18

1 எத்தியோப்பியா ஆறுகளுக்கு அப்பாலுள்ள சிறகடிக்கும் ஒலி நிறைந்த நாட்டுக்கு ஐயோ கேடு!

2 அது நாணல் படகுகளில் நீரின்மேலே கடல் கடந்து தூதுவரை அனுப்புகின்றது! விரைந்தோடும் தூதர்களே, உயர்ந்து வளர்ந்த, வலிமை மிக்க மக்களைக் கொண்டதும், அருகிலும் தொலைவிலும் அச்சம் விளைக்கும் மக்களுள்ளதும், படைப்பலத்தால் பல நாடுகள் மேல் வெற்றி கொண்டதும், ஆறுகளால் பிரிக்கப்படுவதுமான அந்த நாட்டுக்கு விரைந்து செல்லுங்கள்.

3 உலகமெலாம் பரவியிருக்கும் குடிமக்களே, பூமியின் மேல் வாழ்ந்து வரும் நீங்களனைவரும், மலைகள் மேல் கொடியேற்றப்படும் போது உற்று நோக்குங்கள்! எக்காளம் ஊதப்படும் போது கூர்ந்து கேளுங்கள்!

4 ஏனெனில் ஆண்டவர் என்னிடம் இவ்வாறு சொன்னார்: "பட்டப்பகலின் வெப்பம் போலும் அறுவடைக்கால வெயிலில் படரும் பனி மேகம் போலும், நம் இருப்பிடத்தில் இருந்து கொண்டே நாம் கலக்கமின்றிக் கவனித்துப் பார்ப்போம்."

5 ஏனெனில் அறுவடைக்கு முன் பூக்கள் பூத்து மாறிய பின், பூக்கள் காய்த்துத் திராட்சைக் கனிகள் பழுக்கும் போது, இளந்தளிர்கள் அரிவாளால் தறிக்கப்படும், படர்ந்தோடும் கிளைகளெல்லாம் கழிக்கப்படும்.

6 அவையனைத்தும் மலைகளில் பிணந்தின்னும் பறவைகளுக்கும், பூமியிலே வாழும் மிருகங்களுக்கும் விடப்படும்; பிணந்தின்னும் பறவைகள் கோடைக் காலத்திலும், பூமியின் மிருகமெல்லாம் குளிர் காலத்திலும், அவற்றின் மேல் வந்து தங்கியிருக்கும்.

7 அந்நாளில், உயர்ந்து வளர்ந்த வலிமை மிக்க மக்களைக் கொண்டதும், அருகிலும் தொலைவிலும் அச்சம் விளைக்கும் மக்களுள்ளதும், படைப்பலத்தால் பல நாடுகள் மேல் வெற்றி கொண்டதும், ஆறுகளால் பிரிக்கப்படுவதுமான அந்த நாட்டிலிருந்து காணிக்கைகள் சேனைகளின் ஆண்டவருக்குக் கொண்டு வரப்படும்; சேனைகளின் ஆண்டவரது திருப்பெயர் போற்றப்படும் இடமாகிய சீயோன் மலைக்குக் கொண்டு வரப்படும்.

அதிகாரம் 19

1 எகிப்து நாட்டுக்கு எதிராகக் கூறப்பட்ட இறைவாக்கு: இதோ, விரைந்து செல்லும் கார்மேகத்தில் ஏறிக் கொண்டு, ஆண்டவர் எகிப்துக்கு வருகின்றார்; எகிப்து நாட்டின் சிலைகள் அவர் முன்னிலையில் அஞ்சி நடுங்கும், எகிப்தியரின் இதயம் உள்ளுக்குள் பாகாய் உருகும்.

2 எகிப்தியருக்கு எதிராய் எகிப்தியரையே தூண்டிவிடுவோம், சகோதரனுக்கு விரோதமாய்ச் சகோதரனும், தன் அயலானுக்கு எதிராய் ஒவ்வொருவனும், நகருக்கெதிராய் நகரமும், அரசுக் கெதிராய் அரசும் அவர்களுக்குள்ளே போரிடுவார்கள்.

3 எகிப்தியரின் ஆற்றல் அவர்களுக்குள்ளே வற்றிப் போகும், அவர்களுடைய திட்டங்களை நாம் குழப்பி விடுவோம்; சிலைகளையும் குறிசொல்பவர்களையும் ஆலோசனை கேட்பார்கள்; மை வித்தைக்காரரையும் மந்திரவாதிகளையும் வழி கேட்பார்கள்.

4 கொடுமையாக வேலை வாங்கும் தலைவர்களிடம் எகிப்து நாட்டினரைக் கையளிப்போம்; கொடுங்கோலனான அரசன் ஒருவன் அவர்களை ஆள்வான் என்கிறார் சேனைகளின் ஆண்டவராகிய கடவுள்.

5 கடல் நீர் வற்றிப் போகும், ஆற்று நீர் வறண்டு காய்ந்து போகும்.

6 அதனுடைய கால்வாய்கள் நாற்றம் வீசும், எகிப்து நாட்டின் நைல் ஆற்றுக் கிளை நதிகள் நீர் குறைந்து மௌ;ள மௌ;ள வற்றிப் போகும், கோரைகளும் நாணல்களும் வதங்கிப் போகும்.

7 நைல் நதியருகிலும், நைல் நதியின் கரைகளிலும், இருக்கின்ற புல்தரைகள் யாவும், நைல் நதியருகில் விதைக்கப் பட்டவை அனைத்தும் வறண்டு போம், வாடிப்போம், மடிந்து போகும்.

8 செம்படவர்கள் அழுவார்கள், புலம்புவார்கள்; நைல் நதியில் தூண்டில் போடுவோர் அனைவரும் துக்கம் கொள்வர்; தண்ணீரில் வலை வீசுவோர் கலங்கி நிற்பர்.

9 மெல்லிய சணலாடை செய்வோர் நம்பிக்கையிழப்பர், வெண்பருத்தியில் துணி நெய்வோர் சோர்வு கொள்வர்.

10 நெசவுத் தொழில் செய்பவர்கள் நசுக்கப்படுவர், கூலி வேலை செய்வோர் அனைவரும் துக்கம் கொள்வார்கள்.

11 தானீஸ் பட்டணத்துத் தலைவர்கள் அறிவிலிகள், பார்வோனின் ஞானமிக்க மந்திரிகள் மடமையான ஆலோசனை கொடுத்தார்கள்; "நான் ஞானிகளின் புதல்வனல்லனோ? பழங்கால மன்னர்களின் மைந்தன் அல்லனோ?" என்று நீங்கள் பார்வோனிடம் எவ்வாறு சொல்லக்கூடும்?

12 அப்படியானால் உன் ஞானிகள் எங்கே? சேனைகளின் ஆண்டவர் எகிப்துக்கு எதிராக என்ன திட்டம் தீட்டியுள்ளார் என்பதை அவர்கள் உனக்கு வெளியாக்கிக் கூறட்டுமே!

13 தானீஸ் பட்டணத்துத் தலைவர்கள் அறிவிலிகள் ஆனார்கள், மெம்பீஸ் நகரத்துத் தலைவர்கள் ஏமாந்து போனார்கள்; எகிப்து மக்களுக்கு மூலைக்கல் போல் இருந்தவர்களே எகிப்தைத் தவறான நெறியில் நடத்தினார்கள்.

14 ஆண்டவர் அதன் நடுவில் மனக்குழப்பத்தை உண்டாக்கினார், போதை வெறி கொண்டவன் வாந்தியெடுத்துத் தள்ளாடுவது போல், எகிப்தை அதனுடைய செயல்களிலெல்லாம் தள்ளாடச் செய்தனர்.

15 எகிப்து நாட்டின் தலையோ வாலோ, கிளையோ நாணலோ, யாரும் எதையும் செய்து பயன் விளையாது.

16 எகிப்தும் அசீரியாவும் மனந்திரும்பும்: அந்நாளில், எகிப்தியர் பேடிகளாகி, ஆண்டவர் அவர்கள் மேல் நீட்டியுள்ள கையின் வல்லமையைக் கண்டு அஞ்சி நடுங்குவார்கள்.

17 யூதா நாடு எகிப்து நாட்டுக்கொரு திகிலாய் இருக்கும்; யூதா என்னும் பெயரைக் கேட்பவர் அனைவரும், சேனைகளின் ஆண்டவர் அவர்களுக்கு எதிராகக் தீட்டியுள்ள திட்டத்தை முன்னிட்டு அஞ்சுவார்கள்.

18 அந்நாளில் கானான் நாட்டின் மொழியைப் பேசும் நகரங்கள் எகிப்து நாட்டில் ஐந்து இருக்கும்; அவை சேனைகளின் ஆண்டவர் பேரால் ஆணையிடும்; அவற்றுள் ஒன்று சூரியபட்டணம் எனச் சொல்லப்படும்.

19 அந்நாளில், எகிப்து நாட்டின் நடுவில் ஆண்டவருக்கென ஒரு பீடம் இருக்கும்; நாட்டின் எல்லைப்புறத்தில் ஆண்டவருக்கென ஒரு தூண் நாட்டப்பட்டிருக்கும்.

20 அது எகிப்து நாட்டில் சேனைகளின் ஆண்டவருக்கு ஓர் அடையாளமாகவும் சாட்சியாகவும் விளங்கும்; கொடியவர்கள் ஒடுக்கும் போது ஆண்டவரை நோக்கி அவர்கள் கூக்குரலிடுவார்கள்; அவரோ அவர்களுக்கு மீட்பர் ஒருவரை அனுப்பி, அவர்களை விடுவித்துக் காப்பாற்றுவார்.

21 அப்போது ஆண்டவர் தம்மை எகிப்தியருக்கு வெளிப்படுத்துவார்; எகிப்தியர் ஆண்டவரை அந்நாளில் அறிந்துகொள்வர்; பலிகளும் தகனப் பலிகளும் தந்து அவரை வழிபடுவார்கள்; ஆண்டவருக்கு நேர்ச்சிக் கடன் வைத்துக் கொண்டு, அவற்றை நிறைவேற்றுவார்கள்.

22 ஆண்டவர் எகிப்தியரைத் துன்பத்தால் வதைப்பார்; வதைத்தாலும் துன்பத்தை ஆற்றிடுவார்; அவர்களும் ஆண்டவரிடம் திரும்புவர்; அவர் அவர்களுடைய மன்றாட்டுகளைக் கேட்டு அவர்களை நலமாக்குவார்.

23 அந்நாளில் எகிப்துக்கும் அசீரியாவுக்கும் ஒரு நெடுஞ்சாலை அமைக்கப்படும்; அசீரியர் எகிப்துக்கும், எகிப்தியர் அசீரியாவுக்கும் தாராளமாய்ப் போய் வருவார்கள்; எகிப்தியரும் அசீரியரும் சேர்ந்து வழிபாடு செய்வார்கள்.

24 அந்நாளில், இஸ்ராயேல் எகிப்தோடும் அசீரியாவோடும் முக்கூட்டு ஒப்பந்தம் செய்து, உலகத்தின் நடுவில் ஆசீர்வாதமாய் விளங்கும்;

25 அதையே சேனைகளின் ஆண்டவர் ஆசீர்வதித்து, "நம் மக்களாகிய எகிப்தும், நமது கைவேலைப்பாடாகிய அசீரியாவும், நமது உரிமைச் சொத்தாகிய இஸ்ராயேலும் ஆசிர்வதிக்கப்படுவனவாக!" என்று சொல்லி யிருக்கிறார்.

அதிகாரம் 20

1 அசீரியாவின் அரசனான சார்கோன் என்பவனால் அனுப்பப்பட்டு, அசோத் பட்டணத்துக்கு வந்த சேனைத் தலைவனாகிய தார்த்தான் என்பவன் போரிட்டு அந்தப் பட்டணத்தைப் பிடித்த அந்த ஆண்டில் -

2 அந்தக் காலத்திலேயே- ஆமோஸ் என்பவனின் மகனான இசையாஸ் வாயிலாக ஆண்டவர் சொல்லியிருந்தார்: "நீ உன் இடையிலிருந்து சாக்கு உடையை அகற்றிவிட்டு, உன் கால்களிலிருந்து செருப்புகளையும் கழற்றி விட்டு நடமாடு" என்றார்; அவரும் அவ்வாறே செய்து, ஆடையின்றியும் வெறுங்காலோடும் நடமாடி வந்தார்.

3 ஆண்டவர் கூறினார்: "நம் ஊழியனாகிய இசையாஸ் ஆடையின்றியும் வெறுங்காலேடும் மூன்றாண்டுகள் நடமாடினது எகிப்துக்கும் எத்தியோப்பியாவுக்கும் ஓர் அடையாளமும் முன்குறியும் ஆகும்;

4 (எவ்வாறெனில்) அசீரியாவின் அரசன் எகிப்தியரையும் எத்தியோப்பியரையும் சிறைபிடித்து, இளைஞரையும் முதியோரையும் ஆடையின்றியும் வெறுங்காலோடும் மறைக்கப்படாத பிட்டத்தினராய் நாடு கடத்துவான். இது எகிப்துக்கு மானக்கேடாய் இருக்கும்.

5 அப்போது அவர்கள் தங்கள் நம்பிக்கையான எத்தியோப்பியாவை முன்னிட்டும், தங்கள் பெருமையான எகிப்தை முன்னிட்டும் திகைப்புற்று நாணுவார்கள்.

6 அந் நாளில் இந்தக் கடற்கரை நாட்டில் வாழ்கிறவர்கள், 'இதோ, யாரிடத்தில் நாம் நம்பிக்கை வைத்திருந்தோமோ, அசீரிய அரசனிடமிருந்து நம்மைக் காப்பாற்றும்படி யாரிடத்தில் உதவி தேடி ஓடினோமோ, அவர்களுக்கு நேர்ந்த கதி இதுவானால், நாம் எவ்வாறு தப்பிக்கப் போகிறோம்' என்பார்கள்."

அதிகாரம் 21

1 கடலையடுத்த பாலைவெளி பற்றிய இறைவாக்கு: தென்மேற்கிலிருந்து கிளம்பி வரும் சூறாவளி போல் அச்சந்தரும் நாடான பாலை நிலத்திலிருந்து படை வருகிறது.

2 கொடிய காட்சியொன்று எனக்குக் காட்டப்பட்டது; கொள்ளைக்காரன் கொள்ளையடிக்கிறான், நாசக்காரன் பாழாக்குகிறான். ஏலாம் நாடே போருக்கெழு, மேதியா நாடே முற்றுகையிடு; பபிலோன் விளைவித்த பெருமூச்சுகளெல்லாம் முற்றுப்பெறச் செய்யப் போகிறோம்.

3 ஆதலால் என் அடிவயிறு கலங்கிக் குமுறுகிறது, பிள்ளைபெறும் பெண்ணின் வேதனைக் கொத்த வேதனை என்யையும் வாட்டுகின்றது; உடல் குன்றினேன், செவிடன் போல் ஆனேன்; திகில் கொண்டேன், குருடன்போல் ஆனேன்;

4 என் உள்ளம் குழம்புகின்றது, திகில் என்னை ஆட்கொண்டுள்ளது; நான் விரும்பிய இரவின் மங்கிய ஒளி எனக்கு நடுக்கத்தையே தந்தது.

5 பந்தி தயார் செய்கிறர்கள், கம்பளங்களைப் பரப்புகின்றார்கள்; சாப்பிடுகிறார்கள், குடிக்கிறார்கள். தலைவர்களே, எழுந்திருங்கள்; கேடயங்களுக்கு எண்ணெய் பூசுங்கள்.

6 ஏனெனில் ஆண்டவர் எனக்குச் சொன்னது இதுவே: "போய் ஒரு சாமக்காவலனை வை; தான் காண்பதை அவன் அறிவிக்கட்டும்.

7 இருவர் இருவராய் அணிவகுத்த குதிரைப் படை வருவதையும், கழுதைகள் மேலும் ஒட்டகங்கள் மேலும் வீரர்கள் வருவதையும் அந்தக் காவலன் காணும்போது, உற்றுக் கேட்கட்டும்; மிகவும் கவனமாய் உற்றுக் கேட்கட்டும்."

8 அப்பொழுது பார்த்துக் கொண்டிருந்தவன் கூச்சலிட்டான்: "ஆண்டவனே, பகல் முழுதும் காவல் மாடத்தில் நான் நின்றுகெண்டிருக்கிறேன்; இரவெல்லாம் காவல் காக்கும் வேலையில் நான் கருத்தாய் இருக்கிறேன்.

9 இதோ, இருவர் இருவராய் அணிவகுத்த குதிரைப்படை வந்து கொண்டிருக்கிறது!" தொடர்ந்து அவன் எனக்குச் சொன்னது இதுவே: "விழுந்தது, பபிலோன் வீழ்ச்சியுற்றது; அதனுடைய தெய்வங்கள் படிமங்கள் யாவும் தரையில் விழுந்து நொறுங்கி விட்டன."

10 போரடிக்கப்பட்ட களத்தில் அகப்பட்டவர்களே, தூற்றப்பட்ட களத்தில் சிதறியவர்களே, இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவரிடமிருந்து நான் கேள்விப்பட்டதை உங்களுக்கு அறிவிக்கிறேன்.

11 தூமாவைப் பற்றிய இறைவாக்கு: "சாமக்காவலனே, இரவில் நேரம் எவ்வளவு? சாமக்காவலனே, இரவில் நேரம் எவ்வளவு?" என்றொருவன் சேயீரிலிருந்து என்னை நோக்கிக் கத்துகிறான்.

12 காலை புலர்கிறது, அவ்வாறே இரவும் வருகிறது; விசாரிக்க விரும்பினால், விசாரியுங்கள்; வேண்டுமானால் திரும்பி வாருங்கள்" என்று சாமக்காவலன் விடைகொடுத்தான்.

13 அராபியாவைப் பற்றிய இறைவாக்கு: தேதான் நாட்டு வணிகர்களின் கூட்டங்களே, அராபியாவின் காடுகளில் நீங்கள் இராத் தங்குவீர்கள்.

14 தேமா நாட்டின் குடிமக்களே, தாகமுற்றோர்க்கு எதிர்வந்து தண்ணீர் கொடுங்கள், தப்பியோடி வருவோர்க்கு முன்வந்து உணவளியுங்கள்.

15 ஏனெனில் அவர்கள் வாள்களுக்குத் தப்பியோடுகிறார்கள், உருவிய வாளுக்குத் தப்பிப் பிழைத்தும், நாணேற்றிய வில்லுக்கு இரையாகாமலும், போர்க்களத்தின் கொடுமைக்கு அஞ்சியும் ஓடுகிறார்கள்.

16 (ஏனெனில்) ஆண்டவர் எனக்குச் சொன்னது இதுவே: "கூலியாளின் கணக்குப்படியே இன்னும் ஓராண்டில் செதாரின் மகிமையெல்லாம் எடுபட்டுப் போகும்.

17 செதார் மக்களுள் வலிமை வாய்ந்த வில்வீரர்களில் மிகச் சிலரே எஞ்சியிருப்பர்; ஏனெனில் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரே இதைச் சொன்னார்."

அதிகாரம் 22

1 காட்சியின் பள்ளத்தாக்கைப்பற்றிய இறைவாக்கு: நீங்கள் அனைவரும் வீட்டுக் கூரைகளின் மீது ஏறிப் போயிருப்பதற்குக் காரணம் என்ன?

2 ஆரவாரமிக்க நகரமே, அக்களிப்பு கொள்ளும் பட்டணமே, மகிழ்ச்சியின் ஆர்ப்பரிப்பு உன்னில் நிறைந்திருப்பது ஏன்? கொலையுண்ட உன் மக்கள் வாளாலும் மடியவில்லை, போர்க்களத்திலும் மாண்டாரல்லர்.

3 உன்னுடைய தலைவர்கள் அனைவரும் ஒன்றாய் ஓட்டமெடுத்தனர், வில்லை நாணேற்றாமுன்பே பிடிபட்டார்கள்; உன்னில் காணப்பட்ட யாவரும் பிடிபட்டுக் கட்டுண்டனர்.

4 ஆதலால் நான் சொன்னேன்: "நீங்கள் என்னைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டா; ஆறாத்துயர் கொண்டு நான் அழப்போகிறேன், என் மக்களாகிய மகளின் அழிவைக் குறித்து எனக்குத் தேறுதல் சொல்ல யாரும் முயல வேண்டா."

5 அமளியும் திகிலும் நிறைந்தது அந்நாள், சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர் அதை வரச்செய்தார்; இன்னோம் பள்ளத்தாக்கில் மதிற்சுவர் தகர்க்கப்பட்டது, மக்கள் மலைகள்மேல் நின்று உதவிக்குக் கூவுகிறார்கள்.

6 ஏலாம் அம்பறாத் தூணியை எடுத்துக் கொண்டது, தேர்ப்படையும் குதிரைவீரரும் புறப்பட்டுவிட்டனர், கீர் நகர மக்கள் கேடயத்தை எடுத்து வந்தனர்.

7 செழுமையான உன் பள்ளத்தாக்குகள் தேர்ப்படைகளால் நிரப்பப்பட்டன; குதிரை வீரர் உன் வாயில்களிலே வந்து அணிவகுத்து நின்றனர்.

8 யூதாவின் மதில் இடிபட்டுத் திறக்கப்பட்டது, அந்நாளில் 'வனவீடு' என்னும் படைக்கலச் சாலையை நோக்கினாய்;

9 தாவீதின் நகரத்து மதில்களில் உடைப்புகள் பல இருந்ததைக் கண்டீர்கள்; கீழ்குளத்தின் தண்ணீரைச் சேர்த்து வைத்தீர்கள்.

10 யெருசலேமின் வீடுகளை எண்ணினீர்கள், அரணைப் பலப்படுத்த வீடுகளை இடித்தீர்கள்.

11 பழங்குளத்தின் தண்ணீருக்கென்று இரண்டு மதில்களுக்கு நடுவில் ஒரு நீர்த் தேக்கம் அமைத்தீர்கள். ஆனால் படைத்தவரை நீங்கள் நோக்க மறந்தீர்கள்; முற்காலத்திலேயே அனைத்தையும் திட்டமிட்டவரைப் பார்க்கவுமில்லை.

12 அந்நாளில் சேனைகளின் கடவுளான ஆண்டவர் அழும்படியும் புலம்பும்படியும், தலையை மழித்துக் கொள்ளவும், சாக்குத் துணி உடுத்தவும் உங்களை அழைத்தார்.

13 ஆனால், இதோ நீங்கள் மகிழ்ச்சியும் அக்களிப்பும் பொங்க எருதுகளை அடித்து, ஆடுகளை வெட்டி, இறைச்சியுண்டு இரசங் குடிக்கிறீர்கள்: "உண்போம், குடிப்போம், நாளைக்கு மடிவோம்" என்கிறீர்கள்.

14 சேனைகளின் ஆண்டவர் எனக்குச் சொன்னார், நான் காதால் கேட்டேன்: "நீங்கள் சாகும் வரையில் இந்த அக்கிரமத்துக்கு மன்னிப்பு என்பது உங்களுக்குக் கிடைக்கவே கிடைக்காது" என்கிறார் சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர்.

15 சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: "வீட்டுக் காரியங்களைக் கவனிக்கின்ற காரியக்காரனான சொப்னா என்பவனிடம் போய், அவனுக்கு நீ இதைச் சொல்லவேண்டும்:

16 உனக்கு இங்கே என்ன வேலை? உனக்கு இங்கே யார் இருக்கிறார்கள்? உனக்கென்று நீ இங்கே கல்லறை வெட்டியிருக்கிறாய், உயர்ந்த இடத்தில் உனக்குக் கல்லறை அமைக்கிறாய், பாறையில் உனக்கோர் இருப்பிடம் குடைந்துள்ளாயே!

17 மனிதா, இதோ உன்னை ஆத்திரத்தோடு ஆண்டவர் பிடித்துத் தள்ளுவார், உன்னைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொள்ளுவார்.

18 சுற்றிச் சுற்றி உன்னைச் சுழற்றுவார், பரந்த வெளியில் உன்னைப் பந்தாடுவார், அங்கேயே நீ சாவாய்; உன் தலைவனுடைய வீட்டுக்கோர் அவமானமாய் இருந்தவனே, உன் அழகிய தேர்களும் அங்கேயே கிடக்கும்.

19 உன் பதவியிலிருந்து உன்னைக் கீழே தள்ளுவோம், உன் நிலையிலிருந்து உன்னை விழத்தாட்டுவோம்.

20 அந் நாளில் எல்கியாவின் மகனான நம் ஊழியன் எலியாக்கீமை அழைப்போம்.

21 உன் உடைகளை அவனுக்கு உடுத்துவோம், உன் இடைக் கச்சையை அவனுக்குக் கட்டுவோம், உன் அதிகாரத்தை அவன் கையில் ஒப்படைப்போம், யெருசலேமின் குடிகளுக்கும், யூதாவின் வீட்டாருக்கும் அவன் ஒரு தந்தையைப் போல் இருப்பான்.

22 தாவீதின் வீட்டுத் திறவுகோலை நாம் அவனுடைய தோள் மேல் வைப்போம்; அவன் திறந்தால், யாரும் அதை மூடமாட்டார்கள்; அவன் மூடினால், யாரும் அதைத் திறக்கமாட்டார்கள்.

23 உறுதியான சுவரில் முளை போல் அவனை அடித்து வைப்போம்; அவன் தன் தந்தையின் வீட்டுக்கு மகிமையின் அரியணையாவான்;

24 முளையாணியாகிய அவன் மேல் அவனுடைய தந்தையின் வீட்டு மகிமையெல்லாம்- சந்ததியும் வழித் தோன்றல்களும் கிண்ணங்கள் முதல் குடங்கள் வரையுள்ள எல்லாக் கலங்களும்- மாட்டித் தொங்கும்.

25 அந் நாளில், உறுதியான சுவரில் அடிக்கப்பட்டிருந்த முளை பிடுங்கிக்கொள்ளும்; முளையானது முறியுண்டு கீழே விழும்; அதில் தொங்கியவை அனைத்தும் அழியும்; ஏனெனில் ஆண்டவரே இதைச் சொல்லியிருக்கிறார் என்கிறார் சேனைகளின் ஆண்டவர்."

அதிகாரம் 23

1 தீர் நகரத்தைப் பற்றிய இறைவாக்கு: தர்ஸீசின் மரக் கலங்களே, கதறியழுங்கள்; ஏனெனில் உங்கள் துறைமுகம் அழிக்கப்பட்டு விட்டது; சேத்திம் நாட்டினின்று அவை வரும் போது, இந்தச் செய்தி எட்டியது.

2 கடற்கரை நாட்டில் வாழும் மக்களே, சீதோன் வியாபாரிகளே, மௌனமாயிருங்கள்; உங்கள் தூதுவர்கள் நீர்மேல் பயணம் செய்து கடல் கடந்து வெளிநாடு போயிருந்தார்கள்;

3 நைல் நதி நீர்பாசனத்தால் விளைந்தவையும், ஆற்றுப்பாசனத்தால் அறுவடையானவையும் உனது வருமானம்; மக்களினம் பலவற்றோடு நீ வியாபாரத் தொடர்பு வைத்துக் கொண்டாய்.

4 சீதோனே, நீ வெட்கப்படு; "நான் பிரசவ வேதனை அடையவுமில்லை, பிள்ளை பெறவுமில்லை; இளைஞர்களை உண்பிக்கவுமில்லை, கன்னிப் பெண்களை வளர்க்கவுமில்லை" என்று கடல் சொல்லுகிறது, கடற்கரைக் கோட்டை கூறுகிறது.

5 தீர் நாட்டைப் பற்றிய செய்தி எகிப்துக்கு எட்டும் போது, அச் செய்தியைக் கேட்டு அவர்கள் நடுங்குவார்கள்.

6 கடலைக் கடந்து ஓடி விடுங்கள், கடற்கரை நாட்டில் வாழ்பவர்களே, கதறியழுங்கள்.

7 பண்டைக்கால முதல் நிலைத்திருந்து மகிழ்ச்சி பொங்கும் உங்கள் நகரம் இது தானோ! தொலை நாடுகளுக்குச் சென்று குடியேற இந்த நகரத்தார் கிளம்பினார்களே!

8 மணிமுடிகளை மன்னர்களுக்கு வழங்கி வந்ததும், இளவரசர் போன்ற வணிகர்களைக் கொண்டிருந்ததும், உலகத்தில் மதிப்பு வாய்ந்த வியாபாரிகளைப் பெற்றிருந்ததுமான தீர் நகருக்கெதிராக இதைத் திட்டமிட்டவர் யார்?

9 எல்லா மகிமையின் ஆணவத்தைப் பங்கப்படுத்தவும், உலகத்தில் மதிப்பு வாய்ந்தவர்களை அவமதிக்கவும், சேனைகளின் ஆண்டவர் தாம் இதைத் திட்டமிட்டார்.

10 தர்சீஸ் ஈன்றெடுத்த மகளே, நைல் நதி போல் உன் நாட்டில் பரவியோடு, இனி மேல் உனக்குத் தடையே இல்லை.

11 கடல் மீது தம் கையை அவர் நீட்டியுள்ளார், அரசுகளை அவர் ஆட்டி வைத்திருக்கிறார், கானானின் பலமான கோட்டைகளைப் பாழ்படுத்துமாறு அதற்கெதிராக ஆண்டவர் கட்டளை தந்தார்.

12 ஒடுக்கப்பட்ட கன்னிப் பெண்னே, சீதோன் மகளே, இனிமேல் நீ அக்களிப்பு அடையமாட்டாய்; எழுந்து, கடல் கடந்து செத்தீமுக்குப் போ; அங்கேயும் உனக்கு அமைதி இராது" என்று அவர் சொல்லியிருக்கிறார்.

13 இதோ, கல்தேயர் நாட்டைப் பார்; இப்பொழுது அது ஒரு நாடாகவே இல்லை, அசீரியர்கள் அதைக் காட்டு மிருகங்களுக்கு விட்டு விட்டனர், முற்றுகையிட அதைச் சுற்றிக் கொத்தளங்கள் எழுந்தன, அரண்மனைகள் இடித்துத் தகர்க்கப்பட்டன, நாடும் பாழாகிக் கிடக்கின்றது.

14 கடல் வாணிக மரக்கலங்களே, கதறியழுங்கள்; ஏனெனில் உங்கள் அரண் அழிவுற்றது.

15 அப்போது, எழுபது ஆண்டுகளுக்கு தீர் நகரம் மறக்கப்பட்டு விடும்; ஆனால் எழுபது ஆண்டுகளுக்குப் பின்னர், வேறொரு அரசனுடைய நாட்களில், தீர் நகருக்கு விலைமகளின் கவிதையில் சொல்லியுள்ளபடி நிறைவேறும்:

16 மறக்கப்பட்ட விலைமகளே, வீணையை எடுத்துக்கொள், நகரத்தைச் சுற்றி வா, இனிய இசை எழுப்பு, பாடல்கள் பல பாடு, உன்னை அனைவரும் நினைக்கச் செய்."

17 எழுபது ஆண்டுகளுக்குப் பின் ஆண்டவர் தீர் பட்டணத்தைச் சந்திப்பார்; அவள் திரும்பவும் தன் பழைய தொழிலிலேயே ஈடுபடுவாள்; பூமியின் மேலுள்ள உலகத்து அரசுகள் எல்லாவற்றுடனும் வேசித்தனம் செய்வாள்.

18 ஆனால் அவளுடைய வாணிகப் பொருட்களும் வருமானமும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்படும்; அவற்றைச் சேர்த்து வைக்க மாட்டார்கள்; அவை குவிந்து கிடக்க மாட்டா; ஆனால் அவளுடைய வாணிகப் பொருட்களைக் கொண்டு ஆண்டவர் திருமுன் வாழ்பவர்க்கு ஏராளமான உணவும் நல்ல உடையும் வழங்கப்படும்.

அதிகாரம் 24

1 இதோ ஆண்டவர் பூமியைப் பாழாக்கப் போகிறார்; அதனை வெறுமையாக்கப் போகிறார்; அதன் முகத்தை மாற்றமடையச் செய்வார், அதில் வாழ்பவர்களைச் சிதறடிப்பார்.

2 பொதுமக்களுக்கு எப்படியோ அப்படியே அர்ச்சகருக்கும், ஊழியனுக்கு எவ்வாறோ அவ்வாறே அவன் தலைவனுக்கும், பணிப் பெண்ணுக்கு எங்ஙனமோ அங்ஙனமே அவள் தலைவிக்கும், வாங்குபவனுக்கு எப்படியோ அப்படியே விற்பவனுக்கும், கடன் கொடுப்பவனுக்கு எவ்வாறோ அவ்வாறே கடன் வாங்குபவனுக்கும், வட்டி வாங்குபவனுக்கு எங்ஙனமோ அங்ஙனமே வட்டி தருபவனுக்கும், அனைவர்க்கும் தீர்ப்பு நடக்கும்.

3 பூமி முற்றிலும் அலைக்கழிக்கப்படும், கொள்ளையடிக்கப்பட்டுப் பாழாகும்; ஏனெனில் ஆண்டவரே இவ்வார்த்தையைச் சொல்லியிருக்கிறார்.

4 பூமி அழுது புலம்புகிறது, வாடி வதங்குகிறது; உலகம் வேதனையுறுகிறது, சோர்வுற்றுச் சாய்கிறது; வானமும் பூமியுடன் சேர்ந்து துன்புறுகிறது.

5 பூமி அதனுடைய குடிமக்களால் தீட்டுப்பட்டு, அசுத்தத்தால் நாறுகிறது; ஏனெனில் அவர்கள் சட்டங்களை மீறினார்கள், கட்டளைகளுக்குக் கட்டுப்படவில்லை, முடிவில்லா உடன்படிக்கையை முறித்து விட்டார்கள்.

6 ஆதலால் உலகத்தைச் சாபனை விழுங்குகின்றது, அதன் குடிகள் தங்கள் குற்றத்துக்காகத் துன்புறுகிறார்கள். ஆதலால் தான் அதில் வாழ்வோர் வெப்பத்தால் தீய்கிறார்கள், அதிலிருந்து மிகச் சிலரே தப்புவார்கள்.

7 திராட்சை இரசம் அழுகிறது, திராட்சைக் கொடி வேதனைப்படுகிறது, மகிழ்ந்திருந்த உள்ளமெல்லாம் பெருமூச்செறிகின்றது.

8 மேளத்தின் மகிழ்ச்சியொலி அடங்கி விட்டது, மகிழ்ச்சியுற்றோர் ஆரவாரம் ஓய்ந்து விட்டது, வீணையின் இன்னிசை அடங்கிப் போயிற்று.

9 பாடலோடு இரசபானஞ் செய்ய மாட்டார்கள், போதை தரும் பானமும் குடிப்போர்க்குக் கசப்பாயிருக்கும்.

10 ஒழுங்கீனத்தின் நகரம் தகர்க்கப்பட்டது, வீடுகள் எல்லாம் அடைபட்டன, அவற்றினுள் நுழைபவன் எவனுமில்லை.

11 இரசமின்மையால் தெருக்களில் கூச்சல் உண்டாகும், மகிழ்ச்சியெல்லாம் மௌ;ள மௌ;ள மங்கிப் போகிறது, பூமியின் அக்களிப்பு அகற்றப்பட்டது.

12 பாழாக்கப்பட்ட நிலைமையே நகரத்தில் காணப்படும், வாயில்கள் இடித்துத் தகர்க்கப்படும்.

13 ஒலிவ மரத்தில் காய்களை அடிக்கும் போது இருப்பது போலும், திராட்சை அறுவடையில் பழம் பறிக்கும் போது இருப்பது போலும், பூமியில் மக்களினங்களின் நடுவிலும் இருக்கும்.

14 அவர்களோ தங்கள் குரல்களை உயர்த்தி மகிழ்ச்சி பொங்கப் பாடுவார்கள், ஆண்டவரின் மகிமையைக் குறித்து மேற்குத் திசையிலிருந்து ஆரவாரம் செய்வார்கள்.

15 ஆதலால் கீழ்த்திசையில் ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள். கடலையடுத்துள்ள கடற்கரை நாடுகளில், இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரின் பெயரைப் புகழ்ந்து போற்றுங்கள்.

16 உலகத்தின் இறுதி எல்லைகளினின்று புகழ்ப்பாடல் எழுகின்றது, 'நீதியுள்ளவர்க்கு மகிமை' என்று கேட்கின்றது; அப்போது நான் சொன்னேன்: "ஐயோ ஐயோ, போதும் போதும், துரோகிகள் துரோகம் செய்தனர், துரோகிகள் கொடிய துரோகம் செய்தனர்."

17 பூமியில் வாழும் மனிதனே, உனக்கெதிராய்த் திகில், படுகுழி, கண்ணி இவை காத்திருக்கின்றன.

18 திகில் தரும் இரைச்சல் கேட்டு ஓடுபவன் படுகுழியில் விழுவான், படுகுழிக்குத் தப்பி ஏறியோடுபவன் கண்ணியில் மாட்டிக் கொள்வான். தீர்ப்புப்பற்றிய கவிதையின் தொடர்ச்சி: வானத்து நீர்மடைகள் திறக்கப்படும், பூமியின் அடிப்படைகள் ஆட்டங்கொள்ளும்.

19 பூமியானது முற்றிலும் முறிக்கப்படும், நிலவுலகம் இரண்டாகக் கிழிக்கப்படும். மண்ணுலகம் பலமாக ஆட்டப்படும்.

20 குடியனைப் போல் உலகம் தள்ளாடும், வயல் வெளிக் குடிசை போல் அலைக்கழிக்கப்படும், அதன் அக்கிரமம் அதனை அழுத்தும், அது வீழ்ச்சியுறும்; அது இனி மேல் ஒருநாளும் எழும்பாது.

21 அந்நாளில் ஆண்டவர் வானத்தில் வான் படையையும், பூமியில் உலகத்தின் அரசர்களையும் தண்டிப்பார்.

22 எல்லாரும் ஒன்றாகக் கூட்டப்பட்டுப் படுகுழியில் கைதிகளாய் அடைக்கப்படுவர்; சிறைக்கூடத்தில் அவர்கள் மூடப்படுவார்கள், பல நாட்கள் சென்றபின் தண்டனை பெறுவர்.

23 அப்போது நிலா வெட்கமுறும், கதிரவன் தலை நாணுவான்; ஏனெனில், சேனைகளின் ஆண்டவர் சீயோன் மலை மேலும் யெருசலேமிலும் அரசாளுவார்; அவருடைய மூப்பர்கள் முன்னிலையில் அவர் தமது மகிமையை வெளிப்படுத்துவார்.

அதிகாரம் 25

1 ஆண்டவரே, நீரே என் கடவுள்; உம்மை நான் மகிமைப் படுத்துவேன், உமது திருப்பெயரைப் போற்றிப் புகழ்வேன்; ஏனெனில் நீர் வியத்தகு செயல்களைச் செய்தீர்; பழங்காலத்திலேயே வகுத்திருந்த உம் திட்டங்களைப் பிரமாணிக்கமாகவும் திண்ணமாகவும் செய்து முடித்தீர்.

2 ஏனெனில் அந் நகரத்தை நீர் மண்மேடாக்கினீர், அரண் சூழ்ந்த பட்டணத்தைப் பாழாக்கினீர்; திமிர் கொண்டவர்களின் கோட்டையாய் இருந்த அது இனி ஒரு நகரமாயிராது; மீண்டும் கட்டப்படாது.

3 ஆதலால் வலிமை மிக்க மக்கள் உம்மை மகிமைப்படுத்துவார்கள், முரட்டினத்தாரின் பட்டணங்கள் உமக்கு அஞ்சியிருக்கும்.

4 ஏனெனில் எளியவனுக்கு நீர் அரணாய் இருந்தீர், ஏழைக்கு அவன் துன்பத்தில் அரணாய் இருந்தீர்; கடும் புயலில் புகலிடமாகவும், கொடிய வெப்பத்தில் குளிர் நிழலாகவும் விளங்கினீர். ஏனெனில் முரடர்களின் சீற்றம் மதிலைத் தாக்கும் புயல் போலும், வறண்ட நிலத்தின் வெப்பம் போலும் இருக்கிறது.

5 கார்மேகத்தின் தண்ணிழல் வெப்பத்தை அடக்குவது போல, நீர் திமிர்கொண்டவர்களின் ஆர்ப்பாட்டத்தை அடக்குகிறீர், முரடர்களின் ஆரவாரமும் அடங்கிவிடும்.

6 சேனைகளின் ஆண்டவர் இந்த மலை மேலே எல்லா மக்களுக்கும் விருந்தொன்று தயாரிப்பார்; அறுசுவை உணவும் சிறந்த பழ ரசமும், கொழுப்பு நிறைந்த இறைச்சியும், வடிகட்டிச் சுத்தம் செய்த திராட்சை இரசமும் அவ்விருந்திலே பரிமாறப்படும்.

7 எல்லா மக்களையும் மூடியிருக்கிற மூடியையும், எல்லா இனத்தவர் மேலிருக்கும் அழுகையின் முக்காட்டையும் இந்த மலையின் மேல் அவர் அகற்றிடுவார்.

8 என்றென்றைக்கும் சாவை அழித்து விடுவார், கடவுளாகிய ஆண்டவர் எல்லா முகங்களினின்றும் கண்ணீரைத் துடைத்துவிடுவார்; உலகத்தில் எங்குமே இராதபடி தம் மக்களின் நிந்தையை அகற்றிவிடுவார்; ஏனெனில் ஆண்டவரே இதைச் சொல்லியிருக்கிறார்.

9 அந் நாளில் மக்கள் அனைவரும், "இதோ, இவரே நம் கடவுள், இவரையே நாம் எதிர்பார்த்திருந்தோம், இவரே நம்மை மீட்பார், இவரே ஆண்டவர், இவரையே நாம் எதிர்ப்பார்த்திருந்தோம், இவர் தரும் மீட்பைக் குறித்து அகமகிழ்ந்து அக்களிப்போம்" என்பார்கள்.

10 ஏனெனில் ஆண்டவருடைய கைவன்மை இம் மலை மேல் அமரும்; குப்பைக் குழியில் வைக்கோல் மிதிக்கப்படுவது போல, மோவாப் அதனுடைய இடத்திலேயே மிதிக்கப்படும்.

11 நீந்துபவன் நீந்தத் தன் கைகளை விரிப்பது போல மோவாப் அதன் நடுவில் தன் கைகளை விரிப்பான்; ஆயினும் ஆண்டவர் அவன் ஆணவத்தையும், கையினால் செய்யும் முயற்சிகளையும் தாழ்த்துவார்.

12 உயர்வான மதில்களுடைய கோட்டைகள் அழிக்கப்படும், தரைமட்டமாகும்; அவை தூசியாய்த் தரையோடு தரையாய்த் தாழ்த்தப்படும்.

அதிகாரம் 26

1 அந்நாளில் யூதா நாட்டில் இந்தப் பாடல் பாடப்படும். "நமக்கொரு வலிமையான நகரமுண்டு, நம்மைக் காக்க அதில் மதிலும் அரணும் அமைத்தார்.

2 வாயில்களைத் திறந்து விடுங்கள்; உண்மையைக் கடைப்பிடிக்கும் நீதியுள்ள மக்களினம் உள்ளே வரட்டும்.

3 மன உறுதியுள்ளவனை நீர் சமாதானத்தில் உறுதிப்படுத்துகிறீர், ஏனெனில் உம்மீது அவன் நம்பிக்கை வைக்கிறான்.

4 ஆண்டவர் பேரில் என்றென்றும் நம்பிக்கை வையுங்கள்; ஏனெனில் ஆண்டவர் என்றென்றும் நிலைத்திருக்கும் பாறை!

5 உயர்வான இடத்தில் வாழ்ந்தவர்களைத் தாழ்த்தினார், மேலோங்கியிருந்த கோட்டையைத் தகர்த்தார், புழுதியில் அதை வீழ்த்தினார்.

6 காலால் அது மிதிபடும், ஏழையின் கால்களும் எளியவர்களின் அடிகளும் அதனை மிதிக்கும்."

7 நீதிமானின் நெறி நேரானது. நீதிமானின் பாதை நடப்பதற்குச் செவ்வையானது.

8 ஆண்டவரே, உம்முடைய கற்பனைகளின் நெறி நடந்து, உம்மீது நம்பிக்கை வைக்கிறோம்; உமது திருப்பெயரும் உமது நினைவும் எங்கள் ஆன்மாவின் ஆவலாய் இருக்கின்றன.

9 என் ஆன்மா இரவில் உம்மேல் ஆவல் கொள்ளுகிறது, என் ஆவி எனக்குள்ளே ஏக்கத்தோடு உம்மைத் தேடுகிறது; உம்முடைய நீதித்தீர்ப்புகளை நீர் பூமியின் மேல் செலுத்தும் போது, பூமியின் மக்கள் நீதி என்ன என்பதை அறிகின்றனர்.

10 இறைப்பற்றில்லாதவனுக்கு இரக்கம் காட்டினாலும் அவன் நீதியைக் கற்றுக் கொள்ளமாட்டான்; பரிசுத்தர்களின் நாட்டில் அவன் பாவங்களைச் செய்தான், ஆண்டவருடைய மகிமையை அவன் காணவில்லை.

11 ஆண்டவரே, உமது கை ஓங்கியுள்ளது, அவர்களோ அதைப் பார்க்கவில்லை. உம் மக்கள் மேல் உமக்குள்ள ஆர்வத்தைக் கண்டு, அவர்கள் வெட்சி நாணட்டும். உம்முடைய எதிரிகளுக்கென மூண்ட தீ அவர்களை விழுங்கட்டும்.

12 ஆண்டவரே, நீர் எங்களுக்குச் சமாதானம் அளிப்பீர், ஏனெனில் எங்கள் வேலைகளையெல்லாம் எங்களுக்காக நீரே செய்து முடித்தீர்.

13 எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, உம்மையன்றி வேறே ஆளுநர்கள் எங்கள் மேல் ஆட்சி செய்தனர்; ஆனால் உமது திருப்பெயரை மட்டுமே நாங்கள் ஏற்றுக் கொள்ளுகிறோம்.

14 இறந்த கொடுங்கோலர் வாழ்வு பெறமாட்டார்கள், அரக்கரையொத்த அவர்கள் உயிர்த்தெழமாட்டார்கள்; ஏனெனில் அவர்களைத் தண்டித்து நொறுக்கினீர், அவர்களைப்பற்றிய ஞாபகமே இராதபடி அழித்தீர்.

15 இந்த மக்களைப் பலுகச் செய்தீர், ஆண்டவரே, இந்த மக்களைப் பலுகச் செய்தீர்; உமது மகிமையை விளங்கச் செய்தீர், நாட்டின் எல்லைகளை விரிவுபடுத்தினீர்.

16 ஆண்டவரே, துன்பத்தில் உம்மைத் தேடினோம், தண்டனை பெறும் போது உம்மைப் பார்த்து மன்றாடினோம்.

17 பேறுகாலம் நெருங்கும் போது தன் வேதனையில் துயருற்றுக் கதறுகின்ற கர்ப்பவதியைப் போலவே, ஆண்டவரே, உம் முன்னிலையில் நாங்களும் இருக்கிறோம்.

18 நாங்களும் கர்ப்பமானோம், வேதனைப்பட்டோம், ஆனால் காற்றைப் பெற்றவர்களைப் போலத் தான் இருக்கிறோம்; நாட்டுக்கு எங்களால் மீட்பு கிட்டவில்லை, உலகத்தின் மக்கள் வீழ்ச்சியடையவில்லை.

19 இறந்து போன உம் மக்கள் வாழ்வு பெறுவார்கள், கொலையுண்ட என் இனத்தார் உயிர்தெழுவர். புழுதியில் குடியிருப்பவர்களே, விழித்தெழுங்கள், மகிழ்ச்சியினால் புகழ்பாடுங்கள்; ஏனெனில் நீர் பெய்யும் பனி ஒளி வீசும் பனி, கீழ் உலகமானது உயிர் கொடுக்கும்.

20 எம் மக்களே, உங்கள் அறைகளில் நுழைந்து கொள்ளுங்கள், உள்ளிருந்து கதவைச் சாத்திக்கொள்ளுங்கள்; ஆத்திரம் தணியும் வரையில் கொஞ்ச நேரம் நீங்கள் மறைந்திருங்கள்.

21 ஏனெனில், இதோ தம்முடைய இடத்திலிருந்து ஆண்டவர் வெளியே வருகிறார்; உலக மக்கள் அவருக்கெதிராய்ச் செய்த அக்கிரமத்துக்காக அவர்களைத் தண்டிக்க வருகிறார்; தன்மேல் சிந்தப்பட்ட இரத்தத்தை நிலம் வெளிப்படுத்தும்; கொலையுண்டவர்களை மறைத்து வைக்காது.

அதிகாரம் 27

1 அந் நாளில் ஆண்டவர் தம்முடைய கெட்டியான, பெரிய, உறுதியான வாளினால் லெவியாத்தான் என்னும் விரைந்தோடும் பாம்பை, நௌிந்தோடும் லெவியாத்தான் என்னும் பாம்பைத் தண்டிக்க வருவார்; வந்து கடலில் வாழும் பெரும் பாம்பைக் கொன்று போடுவார்.

2 அந் நாளில் மக்கள் இவ்வாறு பாடுவர்: "இன்ப இரசம் தரும் திராட்சைத் தோட்டத்தைப்பற்றிப் பாடுங்கள்!

3 ஆண்டவராகிய நாமே அதைக் கண்காணிப்பவர், இடைவிடாமல் அதற்கு நாம் நீர் பாய்ச்சுகிறோம்; ஒருவரும் அதற்குத் தீங்கு செய்யாதபடி, இரவும் பகலும் நாம் காவல் காக்கிறோம்.

4 நமக்கு அதன் மேல் கோபமில்லை; முட்களும் முட்செடிகளும் கிளம்புமானால், அவற்றுக்கு எதிராக நாம் போர் தொடுப்போம், அவற்றைச் சேர்த்துக் கொளுத்தி விடுவோம்.

5 அதை விட அவர்கள் நம்மிடம் புகலிடம் தேடட்டும், நம்மோடு சமாதானம் செய்து கொள்ளட்டும், நம்மோடு சமாதானம் செய்து கொள்ளட்டும்."

6 யாக்கோபுக்கு மன்னிப்பு; கொடியவனுக்குத் தண்டனை: எதிர் காலத்தில் யாக்கோபு வேர்கள் விடும், இஸ்ராயேல் தளிர்த்துப் பூக்கும்; உலகத்தையெல்லாம் கனிகளால் நிரப்பும்.

7 கொடுங்கோலரைத் தண்டித்தது போல் ஆண்டவர் இஸ்ராயேலைத் தண்டித்தது உண்டோ? அவர்களின் கொலைகாரரைக் கொன்றது போல் அவர்களை அவர் கொன்றாரோ?

8 இஸ்ராயேலை நாட்டை விட்டு விரட்டி, அதை நீர் அளவோடே தண்டித்தீர்; கீழ்க்காற்று அடிக்கும் நாளில் தம் கடுமையான சீற்றத்தால் அம்மக்களை ஓட்டிவிட்டார்.

9 ஆதலால் இவ்வாறு யாக்கோபின் அக்கிரமத்திற்குப் பரிகாரம் செய்யப்படும், அதனுடைய பாவம் மன்னிக்கப்பட்டதன் முழுப் பலன் இதுவாயிருக்கும்: சுண்ணாம்புக் கற்களை உடைத்தெறிவது போல் இஸ்ராயேல் சிலைகளின் பீடத்துக் கற்களையெல்லாம் நொறுக்கி, மரச் சிலைகளையும் கற்கூம்புகளையும் நாசமாக்கிவிடும்.

10 அரண் சூழ்ந்த நகரம் பாழாகிக் கிடக்கும், அழகிய அந்நகரம் கைவிடப்படும், பாலை நிலத்தைப் போலப் புறக்கணிக்கப்படும்; ஆங்கே கன்று வந்து மேயும், படுத்துறங்கும், அதில் தழைத்துள்ளவற்றைத் தின்னும்.

11 அதன் கிளைகள் காய்ந்து முறிக்கப்படும், பெண்கள் வந்து அவற்றை விறகுக்குப் பயன்படுத்துவர்; ஏனெனில் அவர்கள் விவேகமற்ற மக்கள், ஆதலால் அவர்களைப் படைத்தவர் அவர்களுக்கு இரக்கம் காட்டார், அதை உருவாக்கினவர் அதனை விட்டு வைக்கமாட்டார்.

12 அந்நாளில், ஆண்டவர் பேராற்றின் வாய்க்கால் முதல், எகிப்து நாட்டின் ஓடை வரையில் புணையடித்துத் தூற்றுவார்; இஸ்ராயேல் மக்களே, நீங்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராய் சேர்க்கப்படுவீர்கள்.

13 அந்நாளில், பெரும் ஓசையோடு எக்காளம் ஊதப்படும், அசீரியா நாட்டில் கைதியானவர்கள் வந்து கூடுவார்கள்; எகிப்து நாட்டுக்கு விரட்டப்பட்டவர்களும் வருவார்கள்; யெருசலேமில் பரிசுத்த மலை மீது ஆண்டவரை வணங்குவர்.

அதிகாரம் 28

1 எப்பிராயீமுடைய குடிவெறியரின் செருக்குள்ள மணிமுடிக்கு ஐயோ கேடு! அதன் மகிமை மிக்க அழகாகிய வாடிப் போகும் மலருக்கும் ஐயோ கேடு! இரசப் போதையால் மேற்கொள்ளப்பட்டவர்களின் செழிப்பான பள்ளத்தாக்கில் அது அமைந்துள்ளதே.

2 இதோ, ஆண்டவர் அனுப்பிய ஆற்றலும் வல்லமையுமுள்ள ஒருவன், அவன் ஆலங்கட்டி மழை போலும், அழித்துப் பாழாக்கும் புயல் போலும், கரை புரண்டு பாயும் வெள்ளப்பெருக்குப் போலும், தன் கை வன்மையால் அவர்களைத் தரையில் வீழ்த்துவான்.

3 எப்பிராயீமுடைய குடிவெறியரின் செருக்குள்ள மணிமுடி இவ்வாறு காலால் மிதிக்கப்படும்.

4 செழிப்பான பள்ளத்தாக்கில் அமைந்திருக்கின்ற அதன் மகிமை மிக்க அழகாகிய வாடிப்போகும் மலர், கோடைக்காலம் வருமுன் பருவந் தப்பிப்பழுத்த அத்திப்பழம் போலாகும்; அதைக் கண்டவன் கையால் பறித்து அப்பொழுதே உண்டு விடுவான்.

5 அந்நாளில் சேனைகளின் ஆண்டவர் தம் மக்களுள் எஞ்சியிருப்போருக்குத் தாமே மகிமையின் மணிமுடியாகவும் அழகு வாய்ந்த மகுடமாகவும் இருப்பார்.

6 நீதி வழங்க, இருக்கையில் அமர்கிறவனுக்கு நீதியின் வரமாகவும், போர்க்களத்தை விட்டு வாயில் நோக்கித் திரும்புகிறவர்களுக்குப் பலமாகவும் இருப்பார்.

7 இவர்கள் கூட மதுவருந்தி அறிவிழந்தனர், குடிவெறியால் தடுமாறுகின்றனர்; அர்ச்சகரும் தீர்க்கதரிசியும் குடிவெறியால் அறிவிழந்தனர், மதுபானத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர், குடிபோதையில் தடுமாறுகின்றனர்; காணும் காட்சியில் தவறுகின்றனர், தீர்ப்புச் சொல்வதில் தடுமாறுகின்றனர்.

8 ஏனெனில் மேசைகள் யாவும் வாந்தியால் நிறைந்துள்ளன, அசுத்தமில்லாத இடமே கிடையாது.

9 யாருக்கு அவன் அறிவைப் புகட்டுவான்? யாருக்குச் செய்தியை விளக்கிக் கூறுவான்? பால் மறக்கடிக்கப்பட்ட சிறிய குழந்தைகளுக்கா? தாய் மார்பினின்று நீக்கப்பட்ட குழந்தைகளுக்கா?

10 ஏனெனில் கட்டளை மேல் கட்டளை, கட்டளை மேல் கட்டளை, ஒழுங்கு மேல் ஒழுங்கு, ஒழுங்கு மேல் ஒழுங்கு, இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம்" என்கிறார்கள்.

11 ஆம் விளங்காத வார்தைகளிலும், தெரியாத அந்நிய மொழியிலுமே இந்த மக்களிடம் ஆண்டவர் பேசுவார்;

12 அவர் அவர்களுக்குச் சொல்லியிருந்தார்: "இதோ, இருக்கிறது இளைப்பாற்றி, களைத்தவன் இளைப்பாறட்டும்; இதோ, இருக்கிறது ஓய்வு; "ஆனால், அவர்கள் கேட்கவில்லை.

13 ஆண்டவரின் வாக்கு அவர்களுக்கு இதுவே: "கட்டளை மேல் கட்டளை, கட்டளை மேல் கட்டளை, ஒழுங்கு மேல் ஒழுங்கு, ஒழுங்கு மேல் ஒழுங்கு, இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம்." அவ்வாறே அவர்களும் புறப்பட்டுப் போய்ப் புறங்காட்டி வீழ்வர், நொறுக்கப்பட்டுக் கண்ணியில் சிக்குண்டு பிடிபடுவார்கள்.

14 யெருசலேமிலுள்ள நம் மக்களை ஆண்டு வரும் ஏளனக்காரர்களே, ஆண்டவருடைய வாக்கைக் கேளுங்கள்!

15 நாங்கள் சாவோடு ஓர் உடன்படிக்கை செய்துள்ளோம், பாதாளத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டோம், தீமை மடை புரண்டு வந்தாலும், அது எங்கள்மேல் வராது; ஏனெனில் பொய்மையில் நாங்கள் நம்பிக்கை வைத்தோம், பொய்மையாலேயே நாங்கள் காப்பாற்றப்பட்டோம்" என்று நீங்கள் சொன்னீர்களே.

16 ஆதலால் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: "இதோ, சீயோனில் ஓர் அடிப்படைக் கல்லை- பரிசோதித்து உறுதியானது எனக் கண்ட ஒரு கல்லை, விலையுயர்ந்த மூலைக்கல்லாய், உறுதியான அடிப்படையாய் நாம் நாட்டுவோம்: அது 'விசுவாசிக்கிறவன் இடறி விழ மாட்டான்' எனப்படும்.

17 நீதியை அளவு கோலாகவும், நேர்மையைத் தூக்கு நூலாகவும் ஏற்படுத்துவோம்; ஆனால் பொய்மையில் வைத்த நம்பிக்கையைக் கல்மழை அழிக்கும், புகலிடத்தை வெள்ளப்பெருக்கு அடித்துப் போகும்.

18 அப்போது, சாவோடு நீங்கள் செய்த உடன்படிக்கை உடைபடும், பாதாளத்தோடு செய்துகொண்ட ஒப்பந்தம் ஒழிந்துபோம்; தீமை மடைபுரண்டு வரும் பொழுது, நீங்கள் அதனால் அடித்து நொறுக்கப்படுவீர்கள்.

19 தீமை பெருக்கெடுத்து வரும் போதெல்லாம் உங்களை அது வாரிக்கொண்டு போகும்; அதுவும் வைகறையிலே கிளம்பி, பகலிலும் இரவிலும் பெருக்கெடுத்தோடும்; இந்தச் செய்தியைக் கேட்டுக் கண்டு பிடிப்பதே ஒரு பெருந்திகிலாக இருக்கும்.

20 கால் நீட்டிப் படுக்கக் கட்டில் போதாது, போர்த்துக்கொள்ளப் போர்வையின் அகலம் பற்றாது.

21 பெராசீம் மலை மீது நின்றது போல் ஆண்டவர் உங்களுக்கு விரோதமாய் எழுந்து நிற்பார்; கபாவோன் பள்ளத்தாக்கில் கோபங்கொண்டது போல், அவர் கோபங்கொள்வார். அவர் தமது செயலைச் செய்வார்; அச்செயல் புதுமையானதே! வேலையைச் செய்வார்; அவ்வேலை விந்தையானதே!

22 ஆகையால் இப்பொழுது ஏளனம் செய்வதை நிறுத்துங்கள்; இல்லையேல் உங்கள் தளைகள் இறுகிப்போகும்; ஏனெனில் நாடு முழுவதையும் அழிக்கும்படியாகச் சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர் இட்ட ஆணையை நான் கேட்டிருக்கிறேன்.

23 செவிசாயுங்கள், என் குரலொலியைக் கேளுங்கள்; நான் சொல்வதைக் கூர்ந்து கவனியுங்கள்:

24 விதைப்பதற்காக உழுகிறவன் நாள் முழுவதுமா உழுகிறான்? நிலத்தை நாள் முழுதுமா கொத்திக்கொண்டும் வெட்டிக்கொண்டும் இருக்கிறான்?

25 நிலத்தின் மேல்பரப்பை நிரவிய பின், சதகுப்பையை விதைத்துச் சீரகத்தைத் தெளிப்பானன்றோ? அதற்குரிய இடத்தில் கோதுமை, வாற் கோதுமை, துவரை, பயறு இவற்றை முறைப்படி விதைப்பானன்றோ?

26 இந்த முறைமை அவன் கற்றுக்கொண்டான், கடவுளே அதை அவனுக்குச் சொல்லிக் கொடுத்தார்.

27 சதகுப்பை இருப்பு முட்களால் அடிக்கப்படுவதில்லை, சீரகமானது வண்டி உருளையால் புணையடிக்கப்படுவதில்லை; ஆனால் சதகுப்பை கோலால் அடிக்கப்படும், சீரகம் தடியால் அடிக்கப்படும்.

28 அப்பத்திற்குரிய கோதுமை இடிக்கப்படுமோ? படாது; அதை இடைவிடாமல் புணையடித்துக்கொண்டே இருக்கிறதில்லை. வண்டி உருளையையும் குதிரைகளையும் அதன் மேல் செலுத்தும் போது, அதை நொறுக்கி விடுவதில்லை.

29 சேனைகளின் கடவுளான ஆண்டவரின் போக்கும் இதுவே; அவ்வாறு அவர் அறிவை விளங்கச் செய்கிறார், அவர் ஞானம் தலைசிறந்ததெனக் காட்டுகிறார்.

அதிகாரம் 29

1 தாவீது முற்றுகையிட்டுப் பிடித்த நகரமாகிய அரியேலே, அரியேலே, உனக்கு ஐயோ கேடு! ஓராண்டுக்குப் பின் இன்னோராண்டு வரட்டும், ஆண்டின் விழாக்கள் ஒன்றின்பின் ஒன்றாய் நடக்கட்டும்.

2 அரியேலை நாம் சுற்றி வளைப்போம், அது துன்பமும் துயரமும் நிறைந்திருக்கும், அது நமக்கு அரியேல் போலவே இருக்கும்.

3 உன் அரணைச் சுற்றி நாம் வளைத்துக் கொள்வோம், உனக்கு விரோதமாய்க் கொத்தளம் எழுப்புவோம்; உன்னை முற்றுகையிடக் கொத்தளங்கள் ஏற்படுத்துவோம்.

4 நீ தாழ்த்தப்படுவாய்; அப்போது தரையிலிருந்து பேசுவாய்; உன் வார்த்தைகள் பூமியிலிருந்து வருவது போலக் கேட்கும்; தரையிலிருந்து உன் குரல் செத்தவனது ஆவியின் குரல் போலக் கேட்கும், மண்ணிலிருந்து உன் பேச்சு முணுமுணுக்கும்.

5 உன்னை அலைக்கழிப்போரின் கூட்டமானது நுண்ணிய தூசி போல் எண்ணிறந்தது; அரக்கர்களின் திரளானது காற்றில் பறக்கும் பதர் போலக் கணக்கற்றது.

6 இவை யாவும் திடீரென ஒரு நெடியில் நிகழும்; இடிகளிலும் நில நடுக்கத்திலும் பேரிரைச்சலிலும், சூறாவளியிலும் புயல் காற்றிலும் விழுங்கும் நெருப்பழலிலும் சேனைகளின் ஆண்டவர் அதனைச் சந்தித்துத் தண்டிப்பர்.

7 அரியேலுக்கு எதிராகப் போரிடும் எல்லா மக்களினங்களின் கூட்டமும், அதற்கெதிராய்ப் போரிட்டுக் கோட்டையைத் தாக்கி, அதனைத் துன்புறுத்தும் அனைவரும், இரவில் கண்ட காட்சி போலும், கனவு போலும் இருப்பர்.

8 பசியால் வருந்தியவன் சாப்பிடுவதாய்க் கனவு கண்டு விழிக்கும் போது வயிறு வெறுமையாயிருக்கக் காண்பது போலும், தாகமுற்றவன் தண்ணீர் குடிப்பதாய் கனவு கண்டு விழிக்கும் போது களைத்துத் தாக மடங்காதவனாய் இருப்பது போலும், சீயோன் மலைக்கு விரோதமாய்ப் போர் தொடுக்கிற எல்லா மக்களினங்களின் கூட்டமும் இருக்கும்.

9 திகிலுற்று நில்லுங்கள், திகிலடையுங்கள்; கண்காணாது நில்லுங்கள்- குருடர் போல் ஆகுங்கள். போதை அடையுங்கள், ஆனால் இரசத்தினாலன்று; தடுமாறுங்கள், ஆனால் குடிவெறியாலன்று.

10 ஏனெனில் ஆண்டவர் உங்களுக்குத் தூக்க மயக்கத்தைத் தருவார்; உங்கள் கண்களை மறைத்து விடுவார், காட்சிகள் காணும் உங்களுடைய தீர்க்கதரிசிகளையும் தலைவர்களையும் மூடி மறைப்பார்.

11 இவையனைத்தின் காட்சியும் முத்திரையிடப்பட்ட ஒரு நூலைப் போல் உங்களுக்கு இருக்கும்; அதை எழுதப் படிக்கத் தெரிந்தவனிடத்தில் கொடுத்து, "இதை வாசி" என்றால், அவன், "அது முத்திரையிடப் பட்டிருப்பதால், என்னால் படிக்க முடியாது" என்பான்.

12 எழுதப் படிக்கத் தெரியாதவனிடம் புத்தகத்தைக் கொடுத்து, "இதை வாசி" என்றால், அவன், "எனக்குப் படிக்கத் தெரியாதே!" என்று சொல்லி விடுவான்.

13 ஆண்டவர் கூறுகிறார்: "வாயால் இம்மக்கள் நம்மை அணுகி வருகின்றனர், உதட்டால் நம்மைப் போற்றுகின்றனர்; அவர்கள் உள்ளமோ நம்மை விட்டுத் தொலைவில் இருக்கின்றது. நம்மைப்பற்றிய அவர்களுடைய அச்சம் வெறும் மனித கற்பனை, மனப்பாடமாய்க் கற்றது தான்.

14 ஆதலால், இதோ இந்த மக்களுக்கு மீண்டும் வியத்தகு செயல்களைச் செய்வோம், பெரியதும் விந்தையானதுமான புதுமை செய்வோம். அவர்களுடைய ஞானிகளின் ஞானம் அழிந்துபோம், அவர்களுடைய விவேகிகளின் விவேகம் மங்கிப்போம்."

15 ஆண்டவரிடமிருந்து தங்கள் யோசனையை மறைக்கும்படி ஆழத்தில் தங்களை ஒளித்துக்கொண்டு, "நம்மைப் பார்ப்பவர் யார்? நம்மை அறிபவர் யார்?" என்று சொல்லிக்கொண்டு இருளில், திட்டங்கள் தீட்டுபவர்களுக்கு ஐயோ கேடு!

16 இதென்ன முறைகேடு! குயவனுக்குக் களிமண் சமமாகுமோ? கைவேலை தொழிலாளியை நோக்கி, "என்னைச் செய்தவன் நீயல்ல" என்று சொல்லலாமோ? மண்ணால் செய்த உருவம் சிற்பியை நோக்கி, "உனக்கு அறிவில்லை" என்று சொல்வதெப்படி?

17 இன்னும் கொஞ்ச நாளில், குறுகிய காலத்தில், லீபான் மலை வளமான வயலாகவும், வளமான வயல் காடாகவும் மாறிப் போகுமன்றோ?

18 அந்நாளில் செவிடர் சுவடியின் வாக்கியங்களைக் கேட்பர்; குருடரின் கண்கள் காரிருளிலிருந்து விடுதலையாகிப் பார்வை பெறும்.

19 சாந்தமுள்ளோர் ஆண்டவரிடம் புதிய மகிழ்ச்சியைப் பெறுவர், எளியோர் இஸ்ராயேலின் பரிசுத்தரிடம் அகமகிழ்ந்து அக்களிப்பர்.

20 ஏனெனில் கொடியவன் மாய்வான், ஏளனம் செய்தவன் ஒழிவான்; தீமை செய்வதிலேயே சிந்தை செலுத்தியவர்கள் வெட்டுண்டு அழிந்து போவார்கள்

21 தங்கள் வார்த்தையால் மனிதரைக் குற்றத்துக்கு உள்ளாக்குபவர்களும், ஊர்ச்சபையில் நீதி வழங்குபவனை இடறச் செய்பவர்களும், குற்றமற்றவனின் வழக்கைக் காரணமின்றித் தள்ளச் செய்பவர்களும் பூமியிலிருந்து களைந்தெறியப்படுவர்.

22 ஆதலால், ஆபிரகாமை மீட்டருளிய ஆண்டவர், யாக்கோபின் வீட்டாரைக் குறித்துக் கூறுகிறார்: "யாக்கோபு இனி நாணமடையான், அவன் முகம் இனி வெட்கத்தால் வெளுக்காது.

23 நம் கைகளின் வேலைப்பாட்டைத் தன் மக்கள் நடுவில் காணும் போது, நமது பெயரைப் பரிசுத்தமானதெனப் போற்றுவான்; யாக்கோபின் பரிசுத்தரை அவர்கள் பரிசுத்தரெனப் போற்றுவர், இஸ்ராயேலின் கடவுளுக்கு அஞ்சியிருப்பர்.

24 உள்ளத்துணர்வில் தவறுகிறவர்கள் உண்மையறிவைக் கண்டுபிடிப்பார்கள், முணுமுணுத்துப் பேசுகிறவர்கள், போதனையை ஏற்றுக் கொள்வார்கள்"

அதிகாரம் 30

1 ஆண்டவர் கூறுகிறார்: "எதிர்த்துக் கலகம் செய்யும் மக்களுக்கு ஐயோ கேடு! நாம் கொடுக்காத ஆலோசனையை அவர்கள் செயல்படுத்துகிறார்கள்; நம் உள்ளத்திற்கு ஒவ்வாத ஒப்பந்தத்தைச் செய்கிறார்கள், இவ்வாறு பாவத்தின் மேல் பாவம் கட்டிக் கொள்ளுகிறார்கள்.

2 நம்மிடம் ஒரு வார்த்தை கேட்காமலே எகிப்துக்குப் போவதற்குப் புறப்படுகிறார்கள்; பார்வோனின் பாதுகாப்பில் அடைக்கலம் புகவும், எகிப்தின் நிழலில் புகலிடம் தேடவும் போகிறார்கள்!

3 ஆதலால் நீங்கள் நம்பிய பார்வோனின் அடைக்கலம் உங்களுக்கு வெட்கக்கேடாக மாறும்; எகிப்து நாட்டு நிழலின் புகலிடமானது உங்களுக்கு அவமானதாக இருக்கும்.

4 தானி என்னுமிடத்தில் உன் தலைவர்கள் இருந்தார்கள், ஆனேஸ் வரையில் உன் தூதர்கள் போயிருந்தார்கள்.

5 அவர்களுக்கு உதவிபுரிய இயலாத மக்களைக் குறித்து அனைவரும் வெட்கப் படுவார்கள்; அவர்களால் யாதொரு பயனோ உதவியோ கிடையாது. ஆனால் அவமானமும் அவமதிப்புமே கிடைக்கும்."

6 தெற்கு நோக்கிப் போகும் மிருகங்களைப் பற்றிய இறைவாக்கு: துன்பமும் நெருக்கடியும் நிறைந்திருக்கும் நாட்டின் வழியாய், ஆண்சிங்கமும் பெண்சிங்கமும், விரியனும் பறவை நாகமும், வெளிவந்து நடமாடும் நாட்டின் வழியாய்ப் பொதி மிருகங்களின் மேல் தங்கள் கருவூலங்களையும், ஒருவகையிலும் பயன் தராத மக்களுக்குக் கொண்டு போகிறார்கள்.

7 ஏனெனில் எகிப்து செய்யும் உதவியானது வீண் முயற்சி, பயனற்றது; ஆதலால் தான் அதை "செயலிழந்த ராகாப்" என்கிறேன்.

8 இப்பொழுது நீ போய் அவர்கள் முன்னிலையில் ஒரு பலகையில் எழுதி வை; புத்தகமொன்றில் குறித்து வை. இறுதிக் காலத்தில் அது என்றென்றைக்கும் ஒரு சாட்சியாக விளங்கட்டும்.

9 ஏனெனில் இம் மக்கள் கலகக்காரர்கள், இவர்கள் பொய் சொல்லுகிற பிள்ளைகள்; ஆண்டவர் கொடுக்கின்ற படிப்பினையைக் காது கொடுத்துக் கேட்காத முரட்டுப் பிள்ளைகள்.

10 அவர்கள் காட்சி காண்பவர்களை நோக்கி, "நீங்கள் காட்சி காணவேண்டா" என்கிறார்கள்; தீர்க்கதரிசிகளிடம், "நேர்மையானவற்றை எங்களுக்குத் தீர்க்கதரிசனம் கூற வேண்டா; எங்கள் ஆசைக்கு உகந்தவற்றைப் பேசுங்கள், கற்பனைக் காட்சிகளைப் பார்த்துச் சொல்லுங்கள்.

11 வழியை விட்டு விடுங்கள், பாதையை விட்டு ஒதுங்குங்கள், இஸ்ராயேலின் பரிசுத்தர் எங்கள் கண்ணில் படாதிருக்கட்டும்" என்கிறார்கள்.

12 ஆதலால் இஸ்ராயேலின் பரிசுத்தர் கூறுகிறார்: "நீங்கள் இவ்வாக்கியத்தை இகழ்ந்தீர்கள், அபாண்டத்திலும் கலகத்திலும் நம்பிக்கை வைத்து, அவற்றிலேயே ஊன்றியிருக்கிறீர்கள்.

13 ஆகவே, உயர்ந்த மதிற் சுவரில் நாசம் விளைவிக்கும் பிளவு திடீரென எதிர்பாராமல் இடிந்து விழுவது போல், இந்த அக்கிரமச் செயல் உங்கள் மேல் விழும்.

14 அதனுடைய உடைப்பு, குயவனின் மண் பாத்திரம் சுக்கு நூறாய் உடைந்து அடுப்பிலிருந்து நெருப்பெடுக்கவோ பள்ளத்திலிருந்து கொஞ்சம் நீர் எடுக்கவோ பயன்படாததற்கு ஒப்ப, நீங்களும் நொறுக்கப்படுவீர்கள்."

15 ஏனெனில் இஸ்ராயேலின் பரிசுத்தரும் கடவுளுமான ஆண்டவர் கூறுகிறார்: "நீங்கள் திரும்பி வந்து அமைதியாய் இருந்தால் மீட்கப்படுவீர்கள்; அமரிக்கையிலும் நம்பிக்கையிலும் உங்கள் வலிமை இருக்கும்." ஆனால் உங்களுக்கு மனமில்லாமற் போயிற்று.

16 நீங்கள் "ஒருக்காலும் முடியாது, நாங்கள் குதிரை மேல் ஏறி ஓடிப்போவோம்" என்கிறீர்கள். அவ்வாறே ஓடிப்போங்கள். "விரைந்து செல்லும் வாகனங்களில் ஏறிச் செல்வோம்" என்கிறீர்கள். ஆகவே, உங்களைத் துரத்தி வருகிறவர்களும் உங்களை விட விரைவாக வருவார்கள்.

17 உங்களுள் ஆயிரம் பேர் ஒருவனுக்குப் பயந்தோடுவர்; ஐந்து பேருக்குப் பயந்து கொண்டு மலையுச்சியில் நிற்கும் கொடி மரம் போலும் குன்றின் மேலிருக்கும் அடையாள மரம் போலும் விடப்படும் வரை நீங்கள் ஓடுவீர்கள்.

18 ஆதலால் உங்களுக்கு இரக்கம் காட்டுவதற்காக ஆண்டவர் உங்களுக்காகக் காத்திருக்கிறார்; அவ்வாறு உங்களுக்கு மன்னிப்பு அளிப்பதால் அவர் மகிமைப்படுத்தப் பெறுவார்; ஏனெனில் ஆண்டவர் நீதியின் கடவுள், அவருக்குக் காத்திருப்பவர்கள் பேறு பெற்றோர்.

19 யெருசலேமில் குடியிருக்கும் சீயோன் குடிகளே, இனிமேல் நீங்கள் எப்பொழுதும் அழமாட்டீர்கள்; அவர் உங்கள் மேல் திண்ணமாய் இரக்கம் காட்டுவார்; உங்கள் கூக்குரலுக்கு உடனே செவிசாய்த்து அருள் செய்வார்.

20 ஆண்டவர் உங்களுக்குத் துன்பம் என்கிற அப்பத்தையும் வேதனை என்கிற நீரையும் கொடுத்தாலும், உங்களுடைய போதகர் இனி உங்களை விட்டு ஒருபோதும் விலக மாட்டார்; உங்கள் கண் முன்னாலேயே உங்கள் போதகர் இருப்பார்.

21 நீங்கள் எப்பக்கம் போனாலும், உங்களுக்குப் பின்னாலிருந்து, "இதுதான் வழி, இதிலேயே நடந்து போங்கள்" என்னும் வார்த்தையைக் கேட்பீர்கள்.

22 அப்போது, வெள்ளி முலாம் பூசிய படிமங்களையும், தங்க முலாம் பூசிய சிலைகளையும் வெறுத்து ஒதுக்குவீர்கள்; அசுத்தமானவை என்று சொல்லி அவற்றை வாரி வீசி, "தொலைந்து போங்கள்" என்பீர்கள்.

23 நீங்கள் நிலத்தில் விதை தெளித்துள்ள இடங்களிலெல்லாம், ஆண்டவர் உங்கள் விதைகளுக்கு மழை தருவார்; நிலம் மிகுதியான விளைவைத் தரச் செய்வார்; உணவுக்குப் பஞ்சமே இராது; அந்நாளில் ஆடுகள் உங்கள் மேய்ச்சல் நிலத்தில் தாராளமாய் மேயும்;

24 உங்கள் நிலத்தை உழுகின்ற காளைகளும் கழுதைகளும் களத்தில் தூற்றப்பட்டாற் போலக் கலந்து கிடக்கும் தானியங்களையெல்லாம் சாப்பிடும்.

25 கோட்டைகள் இடிந்து விழுந்த பின்னர், பகைவர்கள் மாய்ந்து விழும் அந்த நாளில், உயர்ந்த மலை ஒவ்வொன்றிலும், ஓங்கிய குன்றுகள் அனைத்திலும் நீரோடைகள் வழிந்தோடும்.

26 ஆண்டவர் தம் மக்களின் காயங்களைக் கட்டி, அடிகளால் உண்டான புண்களை ஆற்றும் போது, நிலாவின் ஒளி கதிரவனின் ஒளியைப் போலும், கதிரவனின் ஒளி ஏழு நாட்களின் ஒளியெல்லாம் ஒன்று திரண்டாற் போல் ஏழு மடங்காகவும் இருக்கும்.

27 இதோ, தொலைவிலிருந்து ஆண்டவரின் பெயர் வருகின்றது; பொங்கியெழும் கோபத்தோடும் தாங்க முடியாத வேகத்தோடும் வருகிறது. சினத்தால் அவருடைய உதடுகள் துடிக்கின்றன, நாக்கில் கோபக் கனல் பறக்கின்றது.

28 கழுத்து வரையில் உயர்ந்து எழும் வெள்ளம் போல் அவருடைய மூச்சானது எழுந்து வருகிறது; மக்களினங்களை ஒன்றுமில்லாமையாய் அழிக்கவும், பொய்யான வழியில் இட்டுச் செல்லும் கடிவாளத்தை மக்களின் வாயில் மாட்டவும் வருகிறது.

29 அப்போது ஆரவாரமான கொண்டாட்டத்தின் இரவு காலத்திய இசை போலப் பாட்டு பாடுவீர்கள்; உங்கள் உள்ளத்தின் மகிழ்ச்சியானது, இஸ்ராயேலின் கற்பாறையாகிய ஆண்டவரின் மலைக்குத் தொழுகைக்குச் செல்பவன் கொண்டு போகும் இசைக் குழல் முழக்கத்தை ஒத்திருக்கும்.

30 ஆண்டவர் தமது வல்லமை மிக்க குரல் எங்கும் ஒலிக்கும்படி செய்வார்; அடிப்பதற்கு ஓங்கிய கையைக் கடுங்கோப மிரட்டலிலும், விழுங்கும் நெருப்புத் தழலிலும் காண்பிப்பார்; அப்போது பெருமழையும் சுழற்காற்றும் கல்மழையும் இருக்கும்.

31 அசூர் என்பவன் ஆண்டவர் குரலுக்கு நடுங்குவான்; கசையால் அடிக்கப்படுவான்.

32 அந்தக் கசை ஓயாமல் அடிக்கும், உங்களுடைய வீணையோசைக்கும் தாளத்திற்கும் ஏற்ப ஆண்டவர் அவர்கள் மேல் கசையால் அடிப்பார். ஓங்கிய கரங்களுடன் அவர்களோடு போர் புரிவார்.

33 ஏனெனில் ஏற்கனவே அவர்களுக்காக வேள்விக் குண்டம் ஏற்பாடாகியுள்ளது; அதுவே அரசனுக்கும் தயாராக்கப்பட்டுள்ளது; ஆழ்ந்து அகன்ற அக்குழியில் விறகும் வைக்கோலும் நிறைந்துள்ளன; ஆண்டவரின் கோபக் கனல் வீசும் மூச்சு கந்தக மழை போல் அவற்றை பற்ற வைக்கும்.

அதிகாரம் 31

1 உதவி நாடி எகிப்துக்குப் போகிறவர்களுக்கு ஐயோ கேடு! அவர்கள் குதிரைகளின் மேல் நம்பிக்கை வைக்கிறார்கள்; மிகப் பலவாய் இருப்பதால் தேர்ப்படையை நம்புகிறார்கள், வலிமையுள்ளவர்களாதலால் குதிரை வீரர்களை நம்பியுள்ளனர்; இஸ்ராயேலின் பரிசுத்தர்மேல் நம்பிக்கை வைக்கவில்லை; ஆண்டவரிடம் ஆலோசனை கேட்கவுமில்லை.

2 ஆயினும் அழிவு வருவிப்பதில் அவர் திறமை வாய்ந்தவர், தம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றாமல் விடவில்லை. கொடியவர்களின் வீட்டுக்கெதிராகக் கொதித்தெழுவார். அக்கிரமிகளுக்கு உதவியாய் வருகிறவர்களுக்கு விரோதமாய் எழும்புவார்.

3 எகிப்தியன் வெறும் மனிதன், கடவுள் அல்லன்; அவர்களுடைய குதிரைகள் வெறும் சதைப் பிண்டங்கள், ஆவியல்ல; ஆண்டவர் தம் கையை நீட்டும் போது உதவி செய்கிறவன் இடறி வீழ்வான், உதவி பெறுகிறவன் கூடவே சாய்வான், யாவரும் ஒருங்கே அழிந்து போவார்கள்.

4 ஏனெனில் ஆண்டவர் எனக்குக் கூறுகிறார்: சிங்கமோ சிங்கக் குட்டியோ தன் இரை மேல் பாய்ந்து கர்ச்சிக்கையில் அதற்கெதிராய் இடையர் கூட்டம் ஓடி வந்தால், அவர்களுடைய அதட்டலுக்கு அஞ்சாமலும், அவர்களின் குரலைக் கேட்டுப் பயப்படாமலும் இருப்பது போல, சேனைகளின் ஆண்டவர் இறங்கி வந்து சீயோன் மலை மேலும் அதன் குன்றின் மேலும் போர் புரிவார்.

5 குஞ்சுகளைக் காக்கப் பறந்தோடும் பறவைகளைப் போல, சேனைகளின் ஆண்டவர் யெருசலேமைக் காப்பார்; அதைப் பாதுகாப்பார், விடுதலை தருவார்; வட்டமிடுவார், அதற்கு விடுதலை கொடுப்பார்.

6 இஸ்ராயேல் மக்களே, பாதாளம் வரையில் அகன்று போனீர்களே, இப்பொழுது ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்.

7 ஏனெனில் அந்நாளில் உங்களுள் ஒவ்வொருவனும் பாவத்திற்குக் காரணமாகத் தன் கைகளால் செய்த வெள்ளிச் சிலைகளையும் தங்கச் சிலைகளையும் தூக்கித் தொலைவில் எறிந்து விடுவான்.

8 அசீரியன் வாளால் வீழ்வான், ஆனால் மனிதனின் வாளாலன்று; வாளொன்று அவனை விழுங்கும், ஆனால் மனிதனின் வாளன்று; வாள் முகத்துக்கு அஞ்சி ஓடுவான்; அவனுடைய இளம் போர் வீரர் அடிமைகளாய் வேலை செய்வர்.

9 பயத்தினால் அவன் பலம் பறந்தோடும்; அவனுடைய தலைவர்கள் திகிலடைந்து ஓடிப் போவார்கள்" என்று சீயோனில் நெருப்பையும், யெருசலேமில் தீச் சூளையையும் மூட்டியுள்ள ஆண்டவர் கூறுகின்றார்.

அதிகாரம் 32

1 இதோ நீதியோடு ஓர் அரசர் ஆட்சி செய்வார், அவருடைய தலைவர்கள் அனைத்தையும் நேர்மையாய் நடத்துவர்.

2 ஒவ்வொருவரும் காற்றிலிருந்து காப்பாற்றும் ஒதுக்கிடமாகவும், புயலுக்கு மறைந்து கொள்ளும் புகலிடமாகவும், வறட்சியான இடத்திலே நீரோடை போலவும், பாலை நிலத்தில் கற்குகையின் நிழல் போலவும் இருப்பர்.

3 காட்சி காண்போரின் கண்கள் மறைக்கப்பட்டிருக்கா; கேட்பவர்களின் செவிகள் கூர்ந்து கவனமாய்க் கேட்கும்.

4 பேதைகளின் உள்ளம் அறிவைக் கண்டுணரும், தெற்று வாயர்களின் நாக்கு விரைவாயும் தெளிவாயும் பேசும்.

5 அறிவிலி இனி மேல் பெருந்தலைவர் என்று பெயர்பெற மாட்டான். கயவன் இனி மேல் பெரிய மனிதன் என்று சொல்லப்படான்.

6 ஏனெனில் அறிவிலி மடமையானவற்றைப் பேசுவான், அவன் உள்ளம் அக்கிரமத்தைச் சிந்திக்கும்: அவனுடைய சிந்தனையெல்லாம் அக்கிரமம் செய்வதும், ஆண்டவரைக் குறித்துக் கபடமாய்ச் பேசுவதும், பசியுற்றவனின் ஆவலை நிறைவு செய்யாமலே விடுவதும், தாகமுற்றவனுக்கு நீர் தராமல் மறுத்து விடுவதுமே.

7 கயவனின் கயமைச் செயல்கள் பொல்லாதவை; ஏனெனில் எளியவனின் வழக்கு நீதியானதாலும், இவன் அந்த ஏழையைப் பொய் வார்த்தைகளால் கெடுக்கும்படி வஞ்சகத் திட்டங்களை வகுத்துக் கொள்ளுகிறான்.

8 ஆனால் சான்றோன் சான்றோனுக்குத் தகுதியானவற்றையே சிந்திப்பான், சான்றாண்மையினின்று நிலை பெயரான்.

9 சோம்பிக் கிடக்கும் பெண்களே, எழுந்திருங்கள்; நான் சொல்வதைக் கேளுங்கள். மிஞ்சின நம்பிக்கை கொண்ட மங்கையரே, என் சொற்களுக்குச் செவிசாயுங்கள்.

10 ஓராண்டும் சில நாட்களும் கடந்த பின்னர், மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த நீங்கள் கலக்க மடைவீர்கள்; ஏனெனில் திராட்சை அறுவடை முடிந்து விட்டது, கனி கொய்தலும் இனி வராது.

11 சோம்பிக் கிடக்கிறவர்களே, அஞ்சி நடுங்குங்கள், மிஞ்சின நம்பிக்கையுள்ளவர்களே, பயந்து கலங்குங்கள்; உடைகளை உரித்து விடுங்கள், ஆடைகளை அகற்றி விடுங்கள்; இடையில் மயிராடையை வரிந்து கட்டுங்கள்;

12 செழிப்பான நாட்டைக் குறித்தும், வளமான திராட்சைத் தோட்டத்தைக் குறித்தும் மாரடித்துக் கொண்டு புலம்புங்கள்.

13 முட்களும் முட்புதர்களும் கிளம்புகின்ற நம் மக்களின் நிலத்தைப் பற்றியும், மகிழ்ச்சி பொங்கிய நகரத்தின் இன்பம் நிறைந்த வீடுகள் அனைத்தைப் பற்றியும் புலம்புங்கள்.

14 ஏனெனில் அதன் அரண்மனை கைவிடப்படும், மக்கள் மலிந்த நகரம் வெறுமையாய் விடப்படும்; ஒப்பெல் குன்றும் காவல் கோட்டைகளும் என்றென்றைக்கும் குகைகளாய் மாறி விடும்; காட்டுக் கழுதைகளுக்கு உல்லாச இடமாகவும், மந்தைகளுக்கு மேய்ச்சலிடமாகவும் ஆகிவிடும்.

15 உன்னதத்திலிருந்து மீண்டும் ஆவியானது நம் மேல் பொழியப்படும், பாலை நிலம் வளமான வயலாகவும், வளமான வயல் காடாகவும் மாறும்.

16 நேர்மை பாழ்வெளியில் குடிகொள்ளும், நீதியானது செழிப்பான வயல் வெளியில் வீற்றிருக்கும்.

17 நீதியால் விளையும் பயன் சமாதானம், நீதியின் பலன் அமைதியும், என்றென்றும் நீடிக்கும் அச்சமில்லா வாழ்வுமே.

18 சமாதானமான இருப்பிடத்திலும், அச்சமறியாத கூடாரங்களிலும், அமைதி நிறைந்த இல்லங்களிலும் நம் மக்கள் குடியிருப்பார்கள்.

19 காடு அழிக்கப்படும், பட்டணம் தாழ்த்தப்படும்.

20 நீங்கள் பேறு பெற்றவர்களாய் இருப்பீர்கள், நீரருகிலெல்லாம் விதைப்பீர்கள், மாடுகளையும் கழுதைகளும் தாராளமாய் மேய விடுவீர்கள்.

அதிகாரம் 33

1 கொள்ளையடிப்பவனே, உனக்கு ஐயோ கேடு! நீயும் கொள்ளையடிக்கப்பட மாட்டாயோ! மற்றவர்களுக்குத் துரோகம் செய்கிறவனே, உனக்கும் துரோகம் செய்ய மாட்டார்களோ! நீ கொள்ளையடித்து முடிந்ததும் பிறர் உன்னைக் கொள்ளையடிப்பர், துரோகம் செய்த உனக்கும் துரோகம் செய்வர்.

2 ஆண்டவரே, எங்கள்மேல் இரக்கமாயிரும், ஏனெனில் உமக்காகவே காத்திருந்தோம்; காலை தோறும் எங்கள் புய பலமாகவும், துன்ப காலத்தில் எங்கள் மீட்பாகவும் இரும்.

3 பேரிரைச்சல் கேட்டு வேற்று நாட்டினர் ஓட்டமெடுக்கிறார்கள், நீர் எழுந்து வரும் பொழுது மக்களினங்கள் சிதறிப் போகின்றன.

4 தத்துக் கிளி சேர்ப்பது போல நம் மக்கள் கொள்ளைப் பொருட்களைச் சேர்க்கிறார்கள். வெட்டுக் கிளிகள் பாய்வது போல் அவற்றின் மேல் பாய்கிறார்கள்.

5 ஆண்டவர் மேன்மையுள்ளவர், ஏனெனில் அவர் உன்னதத்தில் வாழ்கிறார்; சீயோனை நீதியாலும் நேர்மையாலும் அவர் நிரப்புகிறார்.

6 நீ என்றென்றும் நிலைப்பாய் என்பது உறுதியாயிற்று, ஞானமும் அறிவுமே மீட்பு தரும் செல்வங்களாம்; ஆண்டவரைப் பற்றிய அச்சமே அவர்கள் கருவூலம்.

7 இதோ, வலிமை மிக்க வீரர்கள் வீதியில் ஓலமிடுகிறார்கள், சமாதானத்தின் தூதுவர் கதறி அழுகிறார்கள்.

8 நெடுங்சாலைகள் பாழாகிக் கிடக்கின்றன, வழிப் போக்கர்களும் இல்லாமற் போயினர்; உடன்படிக்கைகள் முறிக்கப்படுகின்றன, சாட்சிகள் அவமதிக்கப்படுகின்றனர், மனிதனுக்கு மதிப்பே கிடையாது.

9 நாடு கதறியழுது சோர்வடைகிறது, லீபான் கலங்கித் தளர்ச்சியடைகிறது; சாரோன் பாலைநிலம் போல் இருக்கிறது, பாசானும் கார்மேலும் இலைகளையுதிர்க்கின்றன.

10 ஆண்டவர் சொல்லுகிறார்: "இப்பொழுது நாம் எழுந்திடுவோம், இப்பொழுது நாம் நம்மை உயர்த்துவோம், இப்பொழுது நாம் நம்மை மகிமைப்படுத்துவோம்.

11 நீங்கள் செத்தையைக் கருத்தரித்து வைக்கோலைப் பெற்றெடுப்பீர்கள்; உங்கள் மூச்சு தீயைப் போல் உங்களையே விழுங்கும்.

12 மக்களினங்கள், எரித்து பூத்த சாம்பல் போலும், வெட்டுண்டு நெருப்புக்கிரையான முட்கள் போலும் இருப்பர்."

13 தொலைவில் இருப்பவர்களே, நாம் செய்தவற்றைக் கேளுங்கள், அருகில் உள்ளவர்களே, நமது வல்லமையை அறிந்து கொள்ளுங்கள்.

14 சீயோனில் உள்ள பாவிகள் அச்சங் கொண்டனர், இறைப்பற்றற்றோரைத் திகில் ஆட்கொண்டது. "உங்களில் எவன் விழுங்கும் நெருப்போடு வாழக் கூடும்? என்றென்றும் எரியும் தழலோடு குடியிருக்கக் கூடும்?"

15 நீதி நெறியில் நடப்பவனும் நேர்மையைப் பேசுபவனும், புறணியால் கிடைக்கும் பணத்தின் ஆசையை வெறுப்பவனும், கையூட்டு வாங்காமல் கையை உதறி விடுபவனும், இரத்தப் பழியின் செய்தியைக் கேட்காமல் காதை மூடுபவனும், தீமையைப் பார்க்காமல் கண்ணைப் பொத்திக் கொள்பவனும்,

16 உன்னதத்தில் குடியிருப்பான்; அவனது காவலரண் பாறைகளின் கோட்டைகளாகும், அவனுக்குத் தவறாமல் உணவு தரப்படும், தண்ணீரும் அவனுக்குக் குறைபடாது.

17 உன்னுடைய கண்கள் அரசனை அவனது மகிமையில் அழகில் பார்க்கும்; மிகுந்த பரப்பும் நீளமும் உடைய நாட்டை அந்தக் கண்கள் நோக்கும்.

18 உன்னுடைய உள்ளம் பண்டைய திகிலையே இன்னும் நினைத்து, "நாம் செலுத்தும் திறையைக் கணக்குப் பார்ப்பவன் எங்கே? திறைப் பொருளை நிறுத்துப் பார்ப்பவன் எங்கே? நகைகளைச் சோதித்து வாங்குபவன் எங்கே?" என்று வியக்கும்.

19 இனித் திமிர்பிடித்த மக்களைக் காணமாட்டாய்; விளங்காத மொழி பேசுகிறவர்களையும், புரிந்து கொள்ள முடியாதபடி தெற்றித் தெற்றிப் பேசுகிறவர்களையும் நீ பார்க்க மாட்டாய்.

20 நாம் திருவிழாக்கள் கொண்டாடும் நகரமாகிய சீயோனைப் பார்! உன் கண்கள் யெருசலேமைப் பார்க்கும், அது அமைதியான இருப்பிடம், அசைக்க முடியாத கூடாரம்; அதனுடைய முளைகள் எக்காலத்தும் பிடுங்கப்பட மாட்டா, அவற்றில் பிணைத்துள்ள கயிறுகள் அறுந்து போகவு மாட்டா.

21 ஏனெனில் அங்கு தான் நம் ஆண்டவர் மகிமையோடு விளங்குவார்; அகலமான ஆறுகளையும் விரிந்த நீரோடைகளையும் உடைத்தான இடம் அது; துடுப்புகளால் செலுத்தப்படும் படகு அங்கே போகாது, போர்க்கப்பல் அவ்விடத்தில் நுழையாது.

22 ஏனெனில் ஆண்டவர் நம்முடைய நீதிபதி, ஆண்டவர் நமக்குச் சட்டம் இயற்றுகிறவர், ஆண்டவர் நம்முடைய அரசர், அவரே நம்முடைய மீட்பர்.

23 உன்னுடைய கப்பற் கயிறுகள் தளர்ந்து போயின, பாய் மரத்தைக் கெட்டியாய் அவை பிடித்திருக்கவில்லை, அதில் உங்களால் பாயைப் பரப்பவும் முடியாது. உன் திரளான கொள்ளைப் பொருட்கள் பங்கிடப்படும், முடவர்களும் அதில் பாகம் பெறுவார்கள்.

24 நான் நோய்வாய்ப் பட்டிருக்கிறேன்" என்று எவனும் சொல்ல மாட்டான், அங்கு வாழ்கிற மக்களின் அக்கிரமம் அகற்றப்படும்.

அதிகாரம் 34

1 மக்களினங்களே, நெருங்கி வந்து கேளுங்கள், பல நாட்டு மக்களே, காது கொடுத்துக் கவனியுங்கள்; பூமியும் அதில் நிறை யாவும் கேட்கட்டும், நிலமும் அதில் முளைக்கும் அனைத்தும் செவி சாய்க்கட்டும்.

2 ஏனெனில் ஆண்டவரின் கோபம் எல்லா மக்களினங்கள் மேலும் விழும், அவருடைய ஆத்திரம் அவர்களுடைய படைகள் அனைத்தின் மேலும் விழும். அவர்களை அவர் கொன்று போடுவார், அவர்களைப் படுகொலைக்குக் கையளிப்பார்.

3 கொல்லப்பட்டவர்கள் ஆங்காங்கு எறியப்படுவர், அவர்களுடைய பிணங்களினின்று நாற்றம் எழும்; அவர்களுடைய இரத்தம் மலைகள் மேலும் வழிந்தோடும்.

4 வானத்தின் படைகள் யாவும் சோர்வடையும், வான்வெளி ஏட்டுச் சுருள் போல் சுருட்டப்படும்; திராட்சைச் செடியின் இலைகளும் அத்திமரத்தின் இலைகளும் உதிர்வது போல வான் படைகள் யாவும் வீழும்.

5 ஏனெனில் வானகத்தில் நமது வாள் குடிவெறி கொண்டுள்ளது, இதோ, நீதி விளங்கும்படியாக இதுமேயா மேலும், படுகொலைக்கென நாம் தீர்மானித்த மக்கள் மேலும் இறங்கப் போகிறது.

6 ஆண்டவருடைய வாள் செந்நீர் நிறைந்துள்ளது, கொழுப்பால் அது தழும்பேறியுள்ளது; செம்மறிகள், வெள்ளாடுகள் இவற்றின் இரத்தத்தாலும், ஆட்டுக்கடாக்களின் கொழுப்பினாலும் நிறைந்துள்ளது. போஸ்ராவில் ஆண்டவருக்குப் பலி கிடைக்கப் போகிறது, இதுமேயாவில் படுகொலை நடக்கப் போகிறது.

7 அவற்றுடன் காட்டெருதுகளும் விழும், வலிய எருதுகளுடன் இளைய காளைகளும் வந்து மடியும்; அவற்றின் இரத்தத்தால் பூமி நிரம்பி வெறி கொள்ளும், மண் தரையில் அவற்றின் கொழுப்பு ஏறியிருக்கும்.

8 ஏனெனில் ஆண்டவர் பழிவாங்கும் நாளிதுவே, சீயோனுக்காக நீதி வழங்கிப் பலனளிக்கும் காலமாகும்.

9 ஏதோமின் நீரோடைகள் கீலாக மாறும், அதனுடைய நிலத்தின் மண் எரியும் கந்தகமாகும்; அதன் நிலம் தணல் பறக்கும் குங்கிலியமாகும்.

10 இரவும் பகலும் அது அணையாமல் எரியும், அதிலிருந்து புகை இடைவிடாது எழும்பிக் கொண்டிருக்கும்; தலைமுறை தலைமுறைக்கும் அது பாழாய்க் கிடக்கும், என்றென்றைக்கும் அவ்வழியாய் எவனும் செல்லமாட்டான்.

11 நாரையும் முள்ளம் பன்றியும் அதை உரிமையாக்கிக் கொள்ளும்; ஆந்தையும் காதமும் அங்கே குடிகொள்ளும்; ஒன்றுமில்லாமையாய் அதைப் பாழாக்கத் தண்டனைக் கோல் நீட்டப்படும், அதை முற்றிலும் அழிக்கும்படி தூக்கு நூல் இடப்படும்.

12 கூளிகள் அவ்விடத்தில் குடிகொள்ளும், பெருங்குடி மக்கள் அங்கிருக்க மாட்டார்கள்; அரசனுக்கு முடிசூட்டும் விழா அங்கே நடைபெறாது, அதன் தலைவர்கள் யாவரும் ஒன்றுமில்லாமை ஆவார்கள்.

13 அதன் வீடுகளில் முட்களும் காஞ்சொறிப் பூண்டுகளும் முளைக்கும், அதன் கோட்டைகள் மீது நெருஞ்சில்கள் கிளம்பும்; குள்ள நரிகள் அங்கே குடிகொள்ளும், தீக் கோழிகளுக்கு அது மேய்ச்சலிடாமகும்.

14 காட்டு மிருகங்களும் கழுதைப்புலிகளும் அங்கே கூடிவரும், கூளிகள் ஒன்றை ஒன்று கூப்பிடும். பெண் பேய் அங்கே வந்து தங்கியிருக்கும், அவ்விடத்தில் வந்து இளைப்பாறும்.

15 விரியன் பாம்பு அங்கே வளை பறித்து அதில் குட்டிகள் போட்டு வளர்க்கும்; சுற்றிக் குடைந்து, அவற்றை தன் நிழலில் காக்கும், பருந்துகள் தங்கள் துணைகளோடு கூடிவரும்.

16 ஆண்டவரின் நூலில் கவனமாய்த் தேடிப் படியுங்கள், இவற்றுள் ஒன்றும் குறைந்து போகாது; ஒன்றுக்கொன்று துணையின்றிப் போய் விடாது; ஏனெனில் அவர் வாயிலிருந்து வந்தது அவரது ஆணையே, அவரது ஆவி தான் அவற்றை ஒன்று சேர்த்தது.

17 அவரே அவற்றுக்குச் சீட்டுப் போட்டுப் பங்கு பிரித்தார், அவரது கையே அளவுக்கேற்பப் பகிர்ந்து கொடுத்தது. அவை அதனை என்றென்றைக்கும் உடைமையாக்கிக் கொள்ளும், தலைமுறை தலைமுறையாய் அங்கே குடியிருக்கும்.

அதிகாரம் 35

1 பாழ்வெளியும் வறண்ட நிலமும் அகமகிழும், பாலை நிலம் அக்களிப்பால் பூரித்து லீலி போல மலரும்.

2 வளமாக முளை கிளம்பித் தளிர் கொள்ளும், மகிழ்ச்சி பொங்கப் புகழ் கூறி நடனமாடும்; லீபானின் மகிமை பாலைக்குக் கிடைக்கும், கர்மேல், சாரோன் அழகு அதனில் ஒளிரும், ஆண்டவருடைய மகிமை அங்கே விளங்கும், நம் கடவுளின் அழகொளி அங்கே புலனாகும்.

3 தளர்ந்துபோன கைகளை வலிமைப் படுத்துங்கள், நடுக்கமுற்ற முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்.

4 உள்ளத்தில் உரமில்லாதவர்களை நோக்கி, "உறுதியாய் இருங்கள், அஞ்சவேண்டா; இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருகிறார், வந்து கைம்மாறு கொடுப்பார், கடவுள் தாமே வந்து உங்ளை மீட்பார்" என்று சொல்லுங்கள்.

5 அப்போது குருடருடைய கண்கள் திறக்கப்படும், செவிடரின் காதுகள் கேட்கும் ஆற்றல் பெறும்;

6 அப்போது முடவன் மான் கன்று போலத் துள்ளுவான், ஊமைகளின் நாக்கு மகிழ்ச்சியால் பாடும்; பாழ்வெளியில் நீரூற்றுகள் பீறிட்டுக் கிளம்பும், பாலை நிலத்தில் நீரோடைகள் வழிந்தோடும்.

7 கொதிக்கும் மணல் பரப்பு நீர் நிறைந்த குளமாகும், வறண்ட பூமி நீரூற்றுகள் நிறைந்திருக்கும்; குள்ள நரிகள் குடியிருந்த குகைகளிலும் நாணல், கோரை முதலியவை முளைத்து வளரும்.

8 நெடுஞ்சாலையும் வழியும் அங்கே உண்டாகும். 'திருப்பாதை' என்று அது பெயர் பெறும்; அசுத்தர் அதன் வழியாய்ச் செல்ல மாட்டார்கள், உங்களுக்கு நேர் வழி அதுவே ஆகும், பேதைகளும் அதில் வழி தவற முடியாது.

9 சிங்கம் அங்கே இருக்காது, கொடிய மிருகம் அவ்வழியாய் ஏறிப் போகாது; அப்படிப் பட்டது எதுவும் அங்குத் தென்படாது, மீட்படைந்தவர்களே அவ்வழியாய் நடந்து போவார்கள்.

10 ஆண்டவரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி வருவர், வாழ்த்திக் கொண்டு சீயோனுக்கு வந்து சேருவர்; அவர்கள் தலை மேல் அகமகிழ்ச்சி என்றென்றும் நிலைத்திருக்கும், அவர்கள் மகிழ்ச்சியும் அக்களிப்பும் பெற்றுக் கொள்வர், துன்பமும் அழுகையும் பறந்து போய்விடும்.

அதிகாரம் 36

1 எசேக்கியாஸ் அரசனின் பதினான்காம் ஆண்டில் அசீரியாவின் மன்னனாகிய சென்னாக்கெரிப் என்பவன் யூதாவின் அரண் சூழ்ந்த நகரங்கள் அனைத்தையும் முற்றுகையிட்டுப் பிடித்தான்.

2 அசீரிய அரசன், இரப்சாசேஸ் என்பவனை இலக்கீசினின்று யெருசலேமுக்கு எசேக்கியாஸ் அரசனுக்கு எதிராகப் பெரும் படையுடன் அனுப்பினான்; அவனும் புறப்பட்டு 'வண்ணான் வயல்' என்னுமிடத்திற்குப் போகும் சாலையில் மேல் குளத்தின் கால்வாயருகில் வந்து நின்றான்.

3 அவனிருந்த இடத்திற்கு அரண்மனைக் காரியக்காரனாயிருந்த எல்சியாசின் மகன் எலியாசிமும், செயலாளனாகிய சொப்னாவும், பதிவு செய்பவரான அசாப் என்பவரின் மகன் யோவாஹே என்பவனும் புறப்பட்டுப் போனார்கள்.

4 இரப்சாசேஸ் என்பவன் அவர்களைப் பார்த்து, "நீங்கள் எசேக்கியாசிடம் போய் இவ்வாறு சொல்லுங்கள்: 'அசீரியாவின் அரசனாகிய மாமன்னர் சொல்லுகிறார்: நீ எதன் மீது உன் நம்பிக்கையை வைத்திருக்கிறாய்?

5 எந்த யோசனையோடு அல்லது எந்தப் பலத்தோடு நமக்கு எதிராகக் கலகம் செய்ய நீ காத்திருக்கிறாய்?

6 இதோ முறிந்த நாணலையொத்த எகிப்தின் மீது நம்பிக்கை கொள்ளுகின்றாய் போலும்; மனிதன் அதன் மேல் ஊன்றி நின்றானாகில், அது அவனுடைய கையைப் பொத்துக் காயமாக்கும்; எகிப்தின் அரசனாகிய பார்வோனும் தன்னை நம்பியிருக்கிறவர்களுக்கு அவ்வாறு தான் செய்வான்.

7 அல்லது, "எங்கள் ஆண்டவராகிய கடவுள் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம்" என்பாயாகில், அவருடைய உயரிடங்களையும் பீடங்களையுந்தானே எசேக்கியாஸ் இடித்து விட்டு, யூதாவையும் யெருசேமையும் பார்த்து, "நான் அமைத்த இந்தப் பீடத்தின் முன்பாகவே நீங்கள் வழிபாடு செய்ய வேண்டும்?" என்று சொன்னான்.

8 இப்போது அசீரியாவின் அரசராகிய எம் தலைவரிடத்தில் சரணடைந்து விடு; அவரை எதிர்க்க உன்னால் இயலாது; உனக்கு இரண்டாயிரம் குதிரைகளை நானே கொடுக்கிறேன். ஆனால் அவற்றின் மேலேறிப் போர் புரியக் கூடியவர்களை ஏற்படுத்தவும் உன்னால் முடியாது.

9 அப்படியிருக்க, எம் தலைவரின் ஊழியர்களுள் மிகக் கடையரில் ஒரே ஒரு படைத் தலைவனைக் கூட எப்படி நீ எதிர்த்து நிற்கக்கூடும்? இப்படிப்பட்ட நீ தேர்ப்படைக்கும் குதிரை வீரர்களுக்கும் எகிப்தின் கையைப் பார்த்துக் கொண்டிருக்கிறாயே!

10 மேலும், ஆண்டவரின் ஆணையின்றியா இந்த நாட்டை அழிக்கப் படையெடுத்து வந்தேன்? நீ அந்த நாட்டின் மேல் படையெடுத்துப் போய் அதை அழி என்று ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டார்'" என்று சொல்லியனுப்பினான்.

11 அப்போது எலியாசின், சொப்னா, யோவாஹே என்பவர்கள் இரப்சாசேசை நோக்கி, "உம்முடைய ஊழியர்களான எங்களிடத்தில் சீரியா மொழியில் (அரமாயிக் மொழியில்) பேசும்; ஏனெனில் அது எங்களுக்குத் தெரியும். ஆனால், மதிலின் மேல் இருக்கும் மக்களுக்குக் கேட்கும்படி யூத மொழியில் (எபிரேய மொழியில்) எங்களுடன் பேச வேண்டா" என்று கேட்டுக் கொண்டனர்.

12 அதற்கு அவன், "உங்கள் தலைவனிடமும் உங்களிடமுந்தான் இவ்வாக்கியங்களை எல்லாம் சொல்லும்படி எம் தலைவர் என்னை அனுப்பினார் என்று நினைக்கிறீர்களா? உங்களோடு கூட தங்கள் மலத்தையே தின்று, தங்கள் சிறுநீரையே குடிக்கப் போகிறவர்களாகிய, மதில் மேலிருக்கும் இந்த மக்களுக்குந்தான் சொல்லும்படி என்னை அனுப்பினார்" என்றான்.

13 பின்னர், இரப்ராசேஸ் எழுந்து நின்று உரத்த குரலில் யூத மொழியில் பேசினான்: "அசீரியாவின் அரசனாகிய மாமன்னரின் வார்த்தைகளை கேளுங்கள்:

14 அரசர் கூறுகிறார்: 'எசேக்கியாஸ் உங்களை ஏமாற்றாமல் பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனெனில் உங்களை விடுவிக்க அவனால் முடியவே முடியாது.

15 ஆண்டவர் திண்ணமாய் நம்மை மீட்பார், இந்தப் பட்டணம் அசீரிய அரசனுக்குக் கைவிடப்படாது" என்று சொல்லி, எசேக்கியாஸ் ஆண்டவர் மேல் உங்களுக்குப் போலி நம்பிக்கை உண்டாக்க முயல்வான்; அதை நம்பாதீர்கள்.

16 எசேக்கியாசுக்குச் செவி மடுக்காதீர்கள்; ஏனெனில் அசீரியாவின் அரசர் கூறுகிறார்: வெளியே வந்து நம்மோடு சமாதானம் செய்து கொள்ளுங்கள். நாம் வந்து உங்கள் நாட்டைப் போன்ற நாட்டுக்கு -

17 கோதுமையும் திராட்சை இரசமும் மிகுதியாய்க் கிடைப்பதும், அப்பமும் திராட்சையும் மலிந்திருப்பதுமான நாட்டுக்கு- உங்களைக் கொண்டு போகும் வரையில், நீங்கள் ஒவ்வொருவரும் தத்தம் சொந்தத் தோட்டத்தையும் திராட்சைக் கனியையும், சொந்த அத்திமரத்தின் பழங்களையும் சாப்பிடுவீர்கள்; சொந்தக் கேணியின் தண்ணீரையும் பருகுவீர்கள்.

18 ஆதலால், "ஆண்டவர் நம்மை மீட்பார்" என்று சொல்லி, எசேக்கியாஸ் உங்களை ஏமாற்றி விடாதபடி எச்சரிக்கையாய் இருங்கள். மக்களினங்களின் தெய்வங்களில் ஒன்றேனும் தன் நாட்டை அசீரிய அரசரின் கையிலிருந்து விடுவித்ததுண்டோ?

19 ஏமாத்தினுடைய தெய்வங்களும், அர்பாத்தினுடைய தெய்வங்களும் எங்கே? செபர்வாஹீமின் தெய்வங்கள் எங்கே? சமாரியாவை எம் கையினின்று அவை விடுவித்தனவோ?

20 இந்த நாடுகளின் தெய்வங்கள் எல்லாவற்றிலும் ஒன்றேனும் தன் நாட்டை எம் கையிலிருந்து விடுவித்திருந்தால் தானே, ஆண்டவரும் எம் கையினின்று யெருசலேமை விடுவிப்பார் (எனலாம்)?" என்றான்.

21 அவர்களோ மௌனமாய் இருந்தனர்; ஒரு வார்த்தையும் அவனுக்கு மறுமொழியாய்ச் சொல்லவில்லை; ஏனெனில், "அவனுக்கு மறுமொழி கூறவேண்டா" என்று அரசன் கட்டளையிட்டிருந்தான்.

22 அரண்மனைக் காரியக்காரனான எல்சியாஸ் மகன் எலியாசிமும், செயலாளனான சொப்னாவும், பதிவு செய்வோனான அசாப் என்பவனின் மகன் யோவாஹே என்பவனும் ஆடைகள் கிழிபட்ட கோலமாய் எசேக்கியாசிடம் வந்து, இரப்சாசேஸ் சொன்ன வார்த்தைகளையெல்லாம் அவனிடம் கூறினர்.

அதிகாரம் 37

1 எசேக்கியாஸ் அரசன் இவற்றைக் கேட்டதும், தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, கோணி ஆடை உடுத்தி ஆண்டவரின் கோயிலுக்குள் போனான்.

2 மேலும் அரண்மனைக் காரியக்காரனான எலியாசிமையும், செயலாளனான சொப்னாவையும், அர்ச்சகர்களுள் மூப்பரையும் கோணி ஆடை போர்த்தியவர்களாய், ஆமோசின் மகனான இசையாஸ் இறைவாக்கினரிடம் அனுப்பினான்.

3 அவர்கள் போய் அவரைப் பார்த்து, "எசேக்கியாஸ் கூறுகிறார்: 'இந்த நாள் வேதனையும் கண்டிப்பும் பழிச் சொல்லும் நிறைந்த நாளாக இருக்கிறது. குழந்தைகளைப் பெற்றெடுக்கும் நேரம் நெருங்கி விட்டது, பெறுவதற்கோ பலமில்லை.

4 உயிருள்ள கடவுளைப் பழிக்கும்படி அசீரியாவின் அரசனாகிய தன் தலைவனால் அனுப்பப்பட்ட இரப்சாசேஸ் கூறிய வார்த்தைகளை உம் கடவுளாகிய ஆண்டவர் ஒரு வேளை கேட்டிருப்பார்; உம் கடவுளாகிய ஆண்டவர் கேட்ட அந்த வார்த்தைகளைக் கண்டித்தாலும் கண்டிப்பார்; ஆதலால் இன்னும் மீதியாய் விடப்பட்ட எஞ்சினோருக்காக உமது மன்றாட்டை உயர எழுப்பியருளும்" என்றார்கள்.

5 எசேக்கியாஸ் அரசனின் ஊழியர்கள் இசையாசிடம் வந்து இவ்வாறு சொன்னதும்,

6 இசையாஸ் அவர்களை நோக்கி, "உங்கள் தலைவனிடம் போய் நீங்கள் சொல்ல வேண்டியது இதுவே: 'ஆண்டவர் கூறுகிறார்: அசீரியாவின் அரசனுடைய ஊழியர்கள் நம்மைப் பழித்துரைத்த வார்த்தைகளைக் கேட்டு நீ அஞ்சாதே.

7 இதோ, நாம் அவனுக்குள் ஓர் ஆவியை அனுப்புவோம்; அவனும் வதந்தி ஒன்றைக் கேள்விப்பட்டுத் தன் சொந்த நாட்டுக்குத் திரும்பி விடுவான். அவனுடைய சொந்த நாட்டில் அவன் வாளுக்கிரையாகி மடியச் செய்வோம்" என்றார்.

8 அவ்வாறே, அசீரியாவின் அரசன் லாக்கீசினின்று புறப்பட்டுப் போய் விட்டான் என்று இரப்சாசேஸ் கேள்விப்பட்டுத் திரும்பிப் போய், லொப்னாவுக்கு விரோதமாகப் போர் செய்து கொண்டிருந்த அரசனைக் கண்டான்.

9 அப்போது, "உனக்கு விரோதமாய்ப் போர் புரியக் கிளம்பி விட்டான்" என்னும் செய்தியை எத்தியோப்பாவின் அரசனான தராக்கா என்பவனைக் குறித்து அரசன் கேள்வியுற்றான்; உடனே அவன் எசேக்கியாஸ் அரசனிடம் தன் தூதுவர்களை அனுப்பி,

10 அவர்களிடம், "யூதாவின் அரசனான எசேக்கியாசிடம் நீங்கள் போய், 'நீ நம்பிக்கை வைத்திருக்கும் உன் கடவுள், யெருசலேம் அசீரிய அரசன் கையில் விடப்படாது என்று உனக்கு வாக்குறுதி செய்து உன்னை ஏமாற்றாமல் பார்த்துக் கொள்.

11 இதோ அசீரியாவின் அரசர்கள் தாங்கள் அழித்த நாடுகளுக்கெல்லாம் என்னென்ன செய்தார்கள் என்று நீ கேட்டிருப்பாய்; அப்படியிருக்க நீ மட்டும் தப்பித்துக் கொள்ளக் கூடுமோ?

12 என் தந்தையர்கள் அழித்த கோசாம், ஆராம், இரசேப் முதலிய நாட்டு மக்களையும் தாலாசாரிலிருந்த ஏதோம் மக்களையும் அந்த மக்களின் தெய்வங்கள் காப்பாற்றினவோ?

13 ஏமாத்தின் அரசன் எங்கே? அர்பாதின் மன்னன் எங்கே? செபர்வாரும், ஆனா, ஏவா பட்டணங்களின் அரசர்கள் எங்கே?' என்று சொல்லுங்கள்" எனச் சொல்லியனுப்பினான்.

14 எசேக்கியாஸ் தூதர்கள் கையிலிருந்து கடிதத்தை வாங்கிப் படித்தான்; அதன் பிறகு, எசேக்கியாஸ் ஆண்டவரின் கோயிலுக்குள் அதை எடுத்துச் சென்று ஆண்டவர் முன்னால் அதை விரித்து வைத்தான்.

15 வைத்து எசேக்கியாஸ் ஆண்டவரைப் பார்த்து மன்றாடினான்:

16 இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவரே, கெரூபீம்களுக்குமேல் வீற்றிருப்பவரே, உலகத்தின் அரசர்களுக்கெல்லாம் ஒரே கடவுளாய் இருப்பவர் நீரே; விண்ணையும் மண்ணையும் உண்டாக்கினவர் நீரே.

17 ஆண்டவரே, செவிசாய்த்துக் கேளும், ஆண்டவரே, கண் திறந்து பாரும், உயிருள்ள கடவுளைப் பழிக்கும்படி சென்னாக்கெரிப் சொல்லியனுப்பியுள்ள வார்த்தைகளையெல்லாம் காதால் கேளும்.

18 ஆண்டவரே, அசீரிய அரசர்கள் மக்களினங்களை அழித்து அவர்களுடைய நாடுகளைப் பாழாக்கியது உண்மையே.

19 அவர்களுடைய தெய்வங்களை நெருப்பில் எறிந்தார்கள்; ஏனெனில் அவை தெய்வங்கள் அல்ல; மரத்தாலும் கல்லாலும் மனிதரால் செய்யப்பட்ட கைவேலைப்பாடுகள்; ஆகவே அவை தவிடு பொடியாக்கப்பட்டன.

20 இப்போது, எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, உலகத்தின் அரசுகள் யாவும் நீர் ஒருவரே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்ளும்படியாக, அவனுடைய கையிலிருந்து எங்களை மீட்டருளும்."

21 அப்போது ஆமோஸ் மகனான இசையாஸ் எசேக்கியாசுக்கு இவ்வாறு சொல்லியனுப்பினார்: "இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: அசீரியாவின் அரசனான சென்னாக்கெரிபின் காரணமாய் நீ நம்மிடம் மன்றாடினதைக் கேட்டோம்;

22 அவனைக் குறித்து ஆண்டவர் கூறிய வாக்கு இதுவே: 'கன்னிப் பெண்ணாகிய சீயோன் மகள் உன்னை அவமதித்தாள், உன்னைப் பழித்தாள்; யெருசலேம் என்னும் புதல்வி உன் பின்னால் தலையசைத்தாள்.

23 யாரை நீ ஏளனம் செய்தாய்? யாரைப் பழித்துரைத்தாய்? யாருக்கு எதிராய் நீ உன் குரலை உயர்த்தினாய்? இறுமாப்பாக உன் கண்களை உயர்த்திப் பார்த்தாய்? இஸ்ராயேலின் பரிசுத்தருக்கு எதிராய்த் தானே!

24 உன் ஊழியர்கள் வழியாய் நீ ஆண்டவரைப் பழித்தாய், நீ சொன்னாய்: திரளான என் தேர்ப்படைகளோடு மலைகளின் உச்சிகளுக்கும் லீபான் குன்றின் கொடு முடிக்கும் நான் ஏறிப் போனேன்; அதன் மிக உயரமான கேதுரு மரங்களை வீழ்த்தினேன், அதன் மிகச் சிறந்த தேவதாரு மரங்களை வெட்டினேன்; மிகத் தொலைவான அதன் உச்சியையும் அடைந்தேன், அடர்ந்த அதன் காடுகளையும் அழித்தேன்.

25 கிணறுகள் வெட்டினேன், அவற்றின் தண்ணீரைப் பருகினேன்; என் காலடிகளின் சுவடுகளாலேயே எகிப்தின் நீரோடைகளையெல்லாம் உலரச் செய்தேன், என்றாய்.

26 முற்காலத்திலேயே நாம் அதைத் திட்டமிட்டோம் என்பதை நீ கேட்டதில்லையோ? பண்டை நாள் முதல் திட்டமிட்டிருந்ததையே இன்று நாம் செயல் படுத்துகின்றோம்: அரண் சூழ்ந்த பட்டணங்களை நீ மண்மேடாக்குவது உனக்கு நாம் வகுத்த திட்டம் தான்.

27 அவற்றின் குடிமக்கள் கை சோர்ந்து, விடவிடத்து வெட்கிப்போயினர்; அவர்கள் வயல்வெளிச் செடிகள் போலும், மேய்ச்சல் நிலத்து அறுகு போலும், கூரை மீது முளைத்து முற்றுவதற்குள் உலர்ந்துபோகும் புற்கள் போலும் ஆயினர்.

28 உன் இருப்பிடத்தையும், உன் புறப்பாட்டையும், உன் வருகையையும், நமக்கெதிராய் நீ கொண்ட கோப வெறியையும் அறிந்துள்ளோம்.

29 நீ நமக்கெதிராய் ஆத்திரங்கொண்டு பொங்கினாய், உன் ஆணவச் சொற்கள் நம் செவிக்கெட்டின; ஆதலால் நாம் உன் மூக்கில் வளையம் போட்டு, உன் வாயில் கடிவாளம் மாட்டி, நீ வந்த வழியே திரும்பிச் செல்லும்படி, உன்னைக் கூட்டிப் போய் விடுவோம்.'

30 உனக்கு ஓர் அடையாளம் இருப்பது இதுவே: அறுவடையில் சிதறியதை இவ்வாண்டில் சாப்பிடுவாய், அடிக்கட்டையில் கிளைப்பதன் பலன் தான் அடுத்த ஆண்டிற்குக் கிடைக்கும். மூன்றாம் ஆண்டிலோ விதைத்து, அறுவடை செய்தும், திராட்சை நட்டுக் கனிகளைப் பறித்தும் சாப்பிடுவாய்.

31 யூதாவின் வீட்டில் விடுவிக்கப்பட்டு எஞ்சியிருப்பது மீண்டும் கீழே வேர் விட்டு மேலே கனி கொடுக்கும்.

32 ஏனெனில் எஞ்சியிருப்போர் யெருசலேமிலிருந்து புறப்படுவர், தப்பியவர்கள் கூட்டம் சீயோன் மலையிலிருந்து வெளியே போகும், சேனைகளின் ஆண்டவரது வைராக்கியம் இதைச் செய்து முடிக்கும்.

33 ஆதலால் அசீரியாவின் அரசனைக் குறித்து ஆண்டவர் கூறுகிறார்: இப்பட்டணத்தில் அவன் நுழைய மாட்டான், அதற்குள்ளே அம்பு எய்ய மாட்டான்; கேடயம் தாங்கி அதன் முன் வரமாட்டான், அதைச் சுற்றி முற்றுகையும் இடமாட்டான்;

34 தான் வந்த வழியே அவன் திரும்பி விடுவான், இந்த நகரத்தினுள் நுழைய மாட்டான், என்கிறார் ஆண்டவர்.

35 நம்மை முன்னிட்டும், நம் ஊழியன் தாவீதை முன்னிட்டும் இந்த நகரத்தை நாமே காப்போம், மீட்போம்."

36 ஆண்டவரின் தூதரோ அசீரியர்களின் பாளையங்களுக்குப் போய் நூற்றெண்பத்தையாயிரம் பேரைக் கொன்று போட்டார்; மறுநாட் காலையில் மற்றவர்கள் எழுந்து பார்த்த போது, அவர்கள் அனைவரும் செத்துக் கிடந்தார்கள்.

37 பிறகு அசீரிய அரசனான சென்னாக்கெரிப் தன் நாட்டுக்குத் திரும்பிப் போய் நினீவேயில் வாழ்ந்து வந்தான்.

38 ஒரு நாள் அவன் தன் குல தெய்வமான நெஸ்ரோக்கின் கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருக்கையில், அவனுடைய சொந்த மக்களான அதிராமெலக், சாராசார் என்பவர்கள் அவனை வாளால் வெட்டிக் கொன்று விட்டு, ஆரராத் நாட்டுக்கு ஓட்டம் பிடித்தனர்; அவன் மகனாகிய அசாராதோன் என்பவன் அவனுடைய இடத்தில் அரசாளத் தொடங்கினான்.

அதிகாரம் 38

1 அந்நாட்களில் எசேக்கியாஸ் நோய்வாய்ப் பட்டுச் சாகும் நிலையில் இருந்தான்; ஆமோஸ் மகனான இசையாஸ் இறைவாக்கினர் அவனைக் காண வந்து, அவனை நோக்கி, "ஆண்டவர் கூறுகிறார்: உன் வீட்டுக் காரியங்களை ஒழுங்குபடுத்து; ஏனெனில் சாகப் போகிறாய், நீ பிழைக்க மாட்டாய்" என்றார்.

2 அப்போது எசேக்கியாஸ் சுவர்ப் பக்கமாய் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டு,

3 ஆண்டவரை நோக்கி, "ஆண்டவரே, உமது முன்னிலையில் நான் எவ்வாறு உண்மையோடு முழு உள்ளத்தோடும் நடந்து வந்தேன் என்பதையும், உம் கண்களுக்கு நல்லதெனப் பட்டதையே செய்து வந்தேன் என்பதையும் நினைத்தருளும்படி உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்" என்று சொல்லி வேண்டிக் கொண்டு, ஏராளமாய்க் கண்ணீர் வடித்தான்.

4 அப்போது ஆண்டவருடைய வாக்கு இசையாசுக்கு உண்டாயிற்று:

5 போய், நீ எசேக்கியாசிடம் சொல்: உன் தந்தை தாவீதின் கடவுளான ஆண்டவர் கூறுகிறார்: நாம் உன் மன்றாட்டைக் கேட்டோம்; உன் கண்ணீரைக் கண்டோம்; இதோ, உன் வாழ்நாட்களோடு பதினைந்து ஆண்டுகளைக் கூட்டுவோம்.

6 உன்னையும் இந்த நகரத்தையும் அசீரிய அரசனுடைய கையினின்று விடுவிப்போம்; நாம் இந்நகரத்தைப் பாதுகாப்போம்.

7 ஆண்டவர் தாம் வாக்களித்ததைச் செய்வார் என்பதற்கு ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் அடையாளம் இதுவே:

8 இதோ,ஆக்காசின் நிழற் கடிகையில் சாய்ந்திருக்கும் கதிரவனால் உண்டாகும் நிழல் பத்துப் பாகை பின்னுக்குப் போகச் செய்வோம்." அவ்வாறே, சாய்ந்திறங்கிக் கொண்டிருந்த கதிரவன் பத்துப் பாகை மேலேறினான்.

9 யூதாவின் அரசனான எசேக்கியாஸ் நோய்வாய்ப்பட்டு, அந்நோயிலிருந்து நலமான போது இயற்றிய பாடல்:

10 நான் சொன்னேன்: என் வாழ் நாட்களின் நடுவில் பாதாளத்தின் வாயில்களுக்குப் போக வேண்டுமே! இன்னும் நான் வாழக்கூடிய ஆண்டுகள் எனக்குக் கிட்டாமற் போகுமே!

11 மேலும் சொன்னேன்: வாழ்வோருக்குரிய இவ்வுலகில் ஆண்டவரை நான் இனிக் காணமுடியாதே! வையத்தின் குடிகளுள் எவரையும் இனி நான் பார்க்க இயலாது.

12 என்னுடைய இருப்பிடம் தகர்க்கப்படும், இடையர்களின் கூடாரம்போலப் பெயர்க்கப்படும்; நெசவாளனைப் போல நான் என் வாழ்வைச் சுருட்டுகிறேன்; அவரோ என்னைத் தறியிலிருந்தே வெட்டுகிறார்.

13 காலை முதல் மாலை வரை என்னை வாதிக்கிறீர். காலை வரையில் நான் கதறிக் கொண்டிருக்கிறேன். சிங்கத்தைப் போல் என் எலும்புகளையெல்லம் முறிக்கிறார், காலை முதல் மாலை வரை என்னை வாதிக்கிறீர்.

14 மாடப்புறாவைப் போல விம்முகிறேன்; அண்ணாந்து பார்த்து என் கண்கள் மெலிவடைகின்றன. ஆண்டவரே, வேதனைப்படுகிறேன், எனக்குத் துணைபுரியும்!

15 நான் என்ன சொல்வேன்? ஏனெனில் அவரே சொன்னார், அவரே அதைச் செய்தாரே! என் மனக் கசப்பையும் மேற்கொண்டு, என் நாட்களையெல்லாம் தொடர்ந்து வாழ்வேன்.

16 ஆண்டவரே, நான் உமக்காகவே வாழ்கிறேன், என் உள்ளம் உமக்காக மட்டுமே வாழ்கின்றது! என்னை நீர் நலமாக்கினீர், உயிரோடு என்னைக் காப்பாற்றினீர்.

17 இதோ, என்னுடைய மனக்கசப்பே எனக்கு மீட்பாக மாறிற்று, அழிவின் குழியினின்று என்னுயிரைக் காத்தருளினீர், என் பாவங்களையெல்லாம் உமக்குப் பின்னால் எறிந்து விட்டீர்.

18 பாதாளம் உம்மைப் போற்றாது, சாவு உம்மைப் புகழாது; பாதாளத்தினுள் இறங்குகிறவர்களோ உமது பிரமாணிக்கத்தை நம்புவதில்லை.

19 இன்று நான் உம்மைப் புகழ்வது போல, வாழ்வோரே உம்மைப் புகழ்ந்திடுவார்; உமது பிரமாணிக்கத்தைத் தகப்பன் தன் மக்களுக்கு அறிவிப்பான்.

20 ஆண்டவர் என்னைக் காக்கிறார், ஆண்டவருடைய கோயிலிலே எங்களுடைய வாழ் நாட்களெல்லாம் திருப்பாசுரங்களைப் பாடிடுவோம்.

21 இசையாஸ் என்பவரோ, எசேக்கியாஸ் நலம் பெறும்படிக்கு அத்திப் பழத்தைக் கொண்டு வந்து அரைத்துப் பிளவையின் மேல் வைத்துக் கட்டு கட்டச் சொன்னார்.

22 அப்போது எசேக்கியாஸ் அவரைப் பார்த்து, "நான் ஆண்டவரின் கோயிலுக்கு ஏறிப் போவேன் என்பதற்கு அடையாளம் யாது?" என்று கேட்டான்.

அதிகாரம் 39

1 அக்காலத்தில், பபிலோன் பட்டணத்து அரசனான பலாதான் என்பவனின் மகன் மேரோதாக் பலாதான் என்பவன், எசேக்கியாஸ் நோய்வாய்ப் பட்டதையும், நோயினின்று குணமானதையும் கேள்விப்பட்டு அவனிடம் கடிதங்களும் அன்பளிப்புகளும் கொடுத்தனுப்பினான்.

2 அந்தத் தூதுவர்களை எசேக்கியாஸ் அன்போடு வரவேற்றான்; மேலும் அவர்களுக்குத் தன் கருவூல அறையையும், வெள்ளி, பொன், நறுமணப் பொருட்கள், பரிமளத் தைலம் இவற்றையும், படைக்கலங்களின் கொட்டிலையும், தன் கிடங்குகளில் இருந்த எல்லாவற்றையும் காட்டினான். எசேக்கியாஸ் தன் அரண்மனையிலோ தன் ஆதீனத்திலோ அவர்களுக்குக் காட்டாதது ஒன்றுமே இல்லை.

3 அப்போது இசையாஸ் இறைவாக்கினர் எசேக்கியாஸ் அரசனிடம் வந்து, "இவர்கள் என்ன சொன்னார்கள்? எங்கிருந்து வந்தார்கள்?" என்று கேட்டார். எசேக்கியாஸ், மிகத் தொலைவிலுள்ள நாடாகிய பபிலோனிலிருந்து என்னைக் காண வந்தனர்" என்று மறுமொழி சொன்னான்.

4 உன் அரண்மணையில் அவர்கள் என்ன பார்த்தார்கள்?" என்று அவர் கேட்க, எசேக்கியாஸ், "என் வீட்டிலுள்ள யாவற்றையும் பார்த்தார்கள்; அவர்களுக்கு நான் காட்டாதது என் கிடங்குகளில் ஒன்றுமே இல்லை" என விடை கொடுத்தான்.

5 அப்போது, இசையாஸ் எசேக்கியாசைப் பார்த்து, "சேனைகளின் ஆண்டவரது வாக்கைக் கேள்:

6 இதோ நாட்கள் வருகின்றன; அப்போது உன் வீட்டிலுள்ள எல்லாப் பொருட்களும், உன் தந்தையர் சேர்த்து வைத்திருந்த செல்வங்கள் யாவும் பபிலோனுக்குக் கொண்டு போகப்படும்; ஒன்றும் விடப்படாது என்கிறார் ஆண்டவர்.

7 உனக்குப் பிறக்கும் உன் சொந்த மக்களுள் சிலரும் கொண்டுபோகப்படுவர்; அவர்கள் பபிலோன் அரசருடைய அரண்மனையில் அண்ணகராய் இருப்பார்கள்" என்று சொன்னார்.

8 எசேக்கியாஸ் இசையாசை நோக்கி, "நீர் கூறிய ஆண்டவருடைய வாக்கு நல்லது தான்" என்றான். மேலும், "என்னுடைய வாழ்நாட்களில் சமாதானமும் உண்மையும் நிலவினால் போதும்" என்று நினைத்துக் கொண்டான்.

அதிகாரம் 40

1 ஆறுதல் கொடுங்கள், நம் மக்களைத் தேற்றுங்கள், என்கிறார் உங்கள் கடவுள்.

2 யெருசலேமின் இதயத்தோடு உரையாடி உரத்த குரலில் அதற்குச் சொல்லுங்கள்: அதனுடைய அடிமை வேலை முடிந்து போயிற்று. அதன் அக்கிரமம் மன்னிக்கப்பட்டது; ஆண்டவரின் கையிலிருந்து தன் பாவங்கள் அனைத்திற்காகவும் இரு மடங்கு தண்டனை அது பெற்றுக் கொண்டது.

3 கூக்குரல் ஒன்று ஒலிக்கிறது: "பாலை நிலத்தில் ஆண்டவர் வழியை ஆயத்தப்படுத்துங்கள், பாழ்வெளியில் நம் கடவுளின் பாதைகளைச் செம்மைப்படுத்துங்கள்.

4 பள்ளத் தாக்குகள் எல்லாம் நிரவப்படுக! மலை, குன்று யாவும் தாழ்த்தப்படுக! கோணலானவை நேராக்கப் படுக! கரடு முரடானவை சமமான வழிகள் ஆகுக!

5 அப்போது ஆண்டவரின் மகிமை வெளிப்படுத்தப்படும், மனிதர் அனைவரும் ஒருங்கே அதைக் காண்பர்; ஏனெனில், ஆண்டவர் தாமே திருவாய் மலர்ந்தார்"

6 உரக்கக் கூவிச் சொல்" என்றது ஒரு குரலொலி; "உரக்கக் கூவி எதைச் சொல்வேன்?" என்றேன் நான். மனிதர் அனைவரும் புல்லுக்குச் சமம், அவர்களின் மகிமையெல்லாம் வயல் வெளிப்பூவேயாகும்.

7 ஆண்டவரின் ஆவி அதன் மேல் அடிக்கும் போது, புல் உலர்ந்து போகிறது, பூ உதிர்ந்து போகிறது; உண்மையாகவே மக்கள் புல்லைப் போன்றவர்கள் தான்.

8 புல் உலர்ந்து போகிறது, பூ உதிர்ந்து போகிறது, நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்.

9 சீயோனுக்கு நற்செய்தி அறிவிப்பவனே, உயர்ந்த மலைமேல் நீ ஏறிப்போய் நில்; யெருசலேமுக்கு நற்செய்தி அறிவிப்பவனே, உன் குரலையெழுப்பி முழங்கு; அஞ்சாமல் உன் குரலையுயர்த்தி, யூதாவின் பட்டணங்களுக்கு, "இதோ, உங்கள் கடவுள்" என்று சொல்லி அறிவி.

10 இதோ, ஆண்டவராகிய கடவுள் வல்லமையோடு வரப்போகிறார், அவருடைய கை செங்கோல் செலுத்தும்; இதோ, அவருடைய வெற்றிப் பரிசு அவரோடு இருக்கிறது, அவர் முன்னால் அவருடைய வெற்றிச் சின்னங்கள் வருகின்றன.

11 ஆயனைப் போல் அவர் தமது மந்தையை மேய்ப்பார், ஆட்டுக் குட்டிகளை தம் கையால் கூட்டிச் சேர்ப்பார்; சினையாடுகளை இளைப்பாறுமிடத்திற்குக் கூட்டிச் செல்வார்.

12 கடல் நீரை உள்ளங்கையால் அளந்தவர் யார்? வானத்தின் நீள அகலங்களைக் கணித்தவர் யார்? மரக்காலால் மண்ணுலகை முகர்ந்தவர் யார்? மலைகளை எடைக்கல்லால் நிறுத்துக் குன்றுகளைத் துலாக்கோலால் தூக்கியவர் யார்?

13 ஆண்டவரின் ஆவிக்கு உதவி செய்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாக இருந்தவன் யார்?

14 யாரிடம் அவர் ஆலோசனை கேட்டார்? எவன் அவருக்குப் படிப்பித்தான்? நீதி நெறியை அவருக்குக் கற்பித்தவன் எவன்? அறிவு புகட்டி, அவருக்கு விவேக நெறியைக் காட்டினவன் எவன்?

15 இதோ மக்களினங்கள் வாளியிலிருந்து சொட்டும் நீர்த்துளி போலும், தராசில் ஒட்டியுள்ள தூசு போலவும் கருதப்படுகின்றன; இதோ தீவுகள் அவர் முன்னால் சிறிய அணுவாகக் காணப்படுகின்றன.

16 லீபானின் மரங்கள் நெருப்பு வளர்க்கப் போதா, அதன் மிருகங்கள் தகனப் பலிக்குப் பற்றா.

17 மக்களினங்கள் யாவும் அவர் முன் இல்லாதவை போலும், ஒன்றுமில்லாமை போலும் விழலாகவும் கருதப்படுகின்றன.

18 அப்படியிருக்க, யாருடைய சாயலாய் ஆண்டவரை ஆக்குவீர்கள்? எந்த உருவத்தை அவருக்கு அமைப்பீர்கள்?

19 சிலை வடிவத்தையோ? சிலையைச் சிற்பி வார்க்கிறான், பொற்கொல்லன் அதைப் பொன் தகட்டால் வேய்கிறான். வெள்ளிச் சங்கிலிகள் அதற்குச் செய்து போடுகிறான்.

20 திறமையுள்ள தச்சன் உளுத்துப் போகாத வைரமேறிய மரத்தைத் தேர்ந்து கொள்ளுகிறான்; அசைக்க முடியாதபடி சிலையொன்றைச் செய்து, நிலை நாட்டுவதெப்படி எனத் தேடுகிறான்.

21 உங்களுக்கு இது தெரியாதா? நீங்கள் கேட்டதில்லையா? தொடக்கத்திலிருந்தே உங்களுக்கு அறிவிக்கப்படவில்லையா?

22 அவர் பூமியுருண்டைக்கு மேல் வீற்றிருக்கிறார். அதில் வாழ்வோர் அவர்முன் வெட்டுக் கிளிகளைப் போல்வர்; வான் வெளியை ஆடை போல விரிக்கிறவர் அவரே, தங்கியிருக்கும்படி கூடாரம் போல அதை அமைக்கிறவர் அவரே.

23 இரகசியங்களின் ஆள்வோரை இல்லாதவர் போல் ஆக்குகிறார், உலகத்தின் தலைவர்களை வீணர்களாகச் செய்கிறார்.

24 நடப்பட்டு, விதைக்கப்பட்டு, வேரூன்றினார்களோ இல்லையோ, உடனே அவர்கள் மேல் தம் ஆவியை ஊதினார்; ஊதியதும் அவர்கள் உலர்ந்து போயினர், புயலில் சிக்கிய துரும்பென அவர்களை வாரிச் சென்றது.

25 யாருக்கு நம்மை நீங்கள் ஒப்பிடுவீர்கள்? யாருக்குச் சமமாக்குவீர்கள் என்கிறார் பரிசுத்தர்.

26 உங்கள் கண்களை உயர்த்தி மேலே பாருங்கள் இவற்றைப் படைத்தவர் யார்? இவற்றின் படைகளை ஒன்றன் பின் ஒன்றாய் வெளி நடத்தி, இவையனைத்தையும் பெயரிட்டழைக்கிறவரே அன்றோ? தம்முடைய பலத்தின் மகத்துவத்தாலும் ஆற்றலின் வல்லமையாலும், ஒன்றேனும் குறைவுறாதபடி பார்த்துக் கொள்ளுகிறார்.

27 என் நடத்தை ஆண்டவருக்கு மறைவாயுள்ளது, எனக்கு நீதி செலுத்தாமல் என் கடவுள் விட்டு விட்டார்" என்று யாக்கோபே, நீ சொல்வதெப்படி? இஸ்ராயேலே, நீ பேசுவதெப்படி?

28 உனக்குத் தெரியாதா? நீ கேட்டதில்லையோ? ஆண்டவர் தான் முடிவில்லாத கடவுள்; பூமியின் எல்லைகளைப் படைத்தவர் அவரே, அவர் சோர்ந்து போவாரல்லர், களைப்படைவாரல்லர்; அவருடைய ஞானமோ புத்திக்கு எட்டாதது.

29 அவரே களைத்தவனுக்குப் பலம் தருகிறார், வலிமையும் சக்தியும் அற்றவர்க்கு அவற்றை ஊட்டுகிறார்.

30 இளைஞரும் சோர்ந்து போவார்கள், களைப்படைவார்கள்; வாலிபர்கள் நோய்வாய்ப்பட்டு விழுவார்கள்.

31 ஆனால் ஆண்டவர் மேல் நம்பிக்கை வைப்பவர்கள், புதிய வலிமையைப் பெற்றுக்கொள்வர்; கழுகுகளைப் போல் இறக்கைகள் பெற்றுப் பறந்திடுவர், ஓடுவார்கள், ஆனால் களைக்கமாட்டார்கள்; நடப்பார்கள், ஆனால் சோர்வடைய மாட்டார்கள்.

அதிகாரம் 41

1 தீவுகளே, என் முன் மௌனமாயிருங்கள், மக்களினங்கள் வலிமையைப் புதுப்பிக்கட்டும்; அருகில் நெருங்கி வந்து பேசட்டும்; வழக்காட ஒருங்கே நாம் நெருங்கி வருவோம்.

2 செல்லுமிடமெல்லாம் வெற்றி எதிர்கொள்ளும் வீரரைக் கீழ்த்திசையில் எழுப்பியவர் யார்? அவருக்கு மக்களினங்களைக் கையளித்து, அரசர்களை அவருக்குக் கீழ்ப்படுத்தியவர் யார்? அவருடைய வாள் அவர்களை தவிடு பொடியாக்குகிறது, அவரது வில் அவர்களைப் புயலில் அகப்பட்ட வைக்கோலைப் போலச் சிதைக்கிறது.

3 அவர்களைத் துரத்திச் செல்கிறார், கலக்கமின்றித் தம் வழியில் முன்னேறுகிறார், அவருடைய அடிச்சுவடுகள் வழியில் காணப்படா.

4 இவற்றையெல்லாம் செயல்படுத்தி முடித்தவர் யார்? தொடக்கத்திலிருந்து தலைமுறைகளை அழைத்தவரே அன்றோ? முதலும் முடிவுமாயிருக்கிற ஆண்டவராகிய நாமே இவற்றைச் செய்தோம்.

5 தீவுகள் இவற்றைக் கண்டன, கண்டு அஞ்சின; பூமியின் எல்லைகள் பார்த்துத் திகில் கொண்டன; அருகில் நெருங்கி அணுகி வந்தன.

6 அவனவன் தன் அயலானுக்குத் துணையாய் நிற்பான், "தைரியமாயிரு" என்று தன் சகோதரனுக்குச் சொல்வான்.

7 கன்னான் தட்டானுக்கு ஊக்கமூட்டுவான், சுத்தியால் தட்டுபவன் சம்மட்டியால் அடிப்பவனிடம், பொருந்தும்படி பற்ற வைத்து, "நன்று" என்று சொல்லி உற்சாகப்படுத்துவான்; அசையாதபடி அதை ஆணிகளால் இணைப்பான்.

8 ஆனால் நம் ஊழியனாகிய இஸ்ராயேலே, நாம் தேர்ந்தெடுத்த யாக்கோபே, நம் அன்பன் ஆபிரகாமின் வழித்தோன்றலே,

9 உலகின் கடைசிப் பகுதிகளிலிருந்து உன்னைக் கூட்டி வந்தோம், தொலைநாடுகளிலிருந்து உன்னை வரவழைத்தோம்; "நீ நம்முடைய ஊழியன்; உன்னைத் தேர்ந்து கொண்டோம், உன்னைத் தள்ளிவிட வில்லை" என்றுனக்குச் சொன்னோம்.

10 நீ அஞ்சாதே, ஏனெனில் நாம் உன்னோடிருக்கிறோம்; நம்பிக்கையில் தளராதே, ஏனெனில் நாம் உன் கடவுள்; உன்னை உறுதிப்படுத்துவோம், உனக்கு உதவி செய்வோம்; நம்முடைய வலக்கை உன்னைத் தாங்கிக் கொள்ளும்.

11 இதோ, உனக்கெதிராய்ப் போர் புரிகிறவர் அனைவரும், வெட்கி நாணிப்போவார்கள்; உன்னுடன் முரண்படும் மனிதரெல்லாம் ஒன்றுமில்லாமையாய் அழிந்து போவார்கள்.

12 உன்னுடைய விரோதிகளை நீ தேடுவாய், ஆனால் அவர்களைக் காணமாட்டாய்; உன்னை எதிர்த்துப் போரிடுவோர் அழிந்தொழிவார்கள்.

13 ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவர் நாமே உன்னுடைய வலக் கையைப் பிடித்துக் கொண்டு, "அஞ்சாதே, நாமே உனக்குத் துணையாயிருப்போம்" என்று உன்னிடம் சொல்லுகின்றோம்.

14 புழுவுக்கு நிகரான யாக்கோபே, அற்பமான இஸ்ராயேலே, அஞ்சவேண்டா; நாமே உனக்குத் துணை நிற்போம், என்கிறார் ஆண்டவர், இஸ்ராயேலின் பரிசுத்தரே உன் மீட்பர்.

15 புதிய, கூரிய பற்களையுடைய புணையடிக்கும் எந்திரம் போல் உன்னை ஆக்குவோம்; மலைகளை மிதித்து நொறுக்குவாய், குன்றுகளைத் தவிடு பொடியாக்கிடுவாய்.

16 அவற்றை நீ தூற்றுவாய், காற்று அடித்துச் செல்லும், புயல் அவற்றைச் சிதறடிக்கும்; ஆண்டவரில் நீ அக்களிப்பாய், இஸ்ராயேலின் பரிசுத்தரில் அகமகிழ்வாய்.

17 ஏழைகளும் எளியவரும் தண்ணீர் தேடுகின்றனர், ஆனால் கிடைக்கவில்லை; தாகத்தால் அவர்கள் நாக்கு வறண்டுள்ளது; ஆண்டவராகிய நாம் அவர்கள் மன்றாட்டைக் கேட்போம், இஸ்ராயேலின் கடவுளாகிய நாம் அவர்களைக் கைவிட மாட்டோம்.

18 மொட்டைக் குன்றுகளைப் பிளந்து ஆறுகளையும், பள்ளத் தாக்குகள் நடுவில் ஊற்றுகளையும் புறப்படச் செய்வோம்; பாலை நிலத்தை நீர் நிலைகளாகவும், வறண்ட பூமியை நீரோடைகளாகவும் ஆக்குவோம்.

19 பாலை நிலத்தில் கேதுரு மரங்களையும் வேலமரம், மீர்ச்செடி, ஒலிவ மரங்களையும் உண்டாக்குவோம்; பாழ்வெளியில் தேவதாரு மரங்களையும் புன்னை மரங்களையும் ஊசியிலை மரங்களையும் வைப்போம்.

20 அப்போது, ஆண்டவருடைய கையே இதைச் செய்தது, இஸ்ராயேலின் பரிசுத்தரே இதை உண்டாக்கினார் என்பதை எல்லாரும் பார்த்துத் தெரிந்து கொள்வர், சிந்தித்து ஒருங்கே கண்டுபிடிப்பர்.

21 உங்கள் வழக்கை இப்பொழுது சொல்லுங்கள், என்கிறார் ஆண்டவர்; உங்கள் சார்பான சான்றுகளை எடுத்துக் காட்டுங்கள், என்கிறார் யாக்கோபின் மாமன்னர்.

22 அவர்களே வரட்டும், வந்து நடக்கப் போவதை நமக்கு எடுத்துச் சொல்லி அறிவிக்கட்டும்; முன்னே நிகழ்ந்தவற்றை எடுத்துச் சொல்லுங்கள், நாம் சிந்தித்து அவற்றின் விளைவுகளை அறிந்துகொள்வோம்; அல்லது நிகழப் போவதை நீங்களே நமக்குக் கூறுங்கள்.

23 நீங்கள் தெய்வங்களென நாம் அறியும் பொருட்டு, எதிர்காலத்தில் நடக்கப் போவதை அறிவியுங்கள்; நன்மையோ தீமையோ முடிந்தால் செய்யுங்கள், நாமே பார்த்து ஒருங்கே பேசிக்கொள்வோம்.

24 இதோ, நீங்கள் வெறுமையினின்று புறப்பட்டவர்கள், உங்கள் செயல் ஒன்றுமில்லாமையிலிருந்து செய்யப்பட்டது, உங்களைத் தேர்ந்து கொள்பவன் அருவருப்பானதைச் செய்கிறான்.

25 வடதிசையில் ஒருவனைத் தூண்டி விட்டோம், அவன் கீழ்த்திசையிலிருந்து வருவான்; அவன் நமது திருப்பெயரைப் போற்றுவான், மன்னர்களைச் சேற்றைப் போலும், குயவன் காலால் மிதித்துத் துவைக்கும் களிமண்ணைப் போலும் நடத்துவான்.

26 நாம் அறியும் பொருட்டுத் தொடக்கத்திலிருந்து அறிவித்தவன் யார்? "நீ சொன்னது சரி" என்று நாம் ஒப்புக் கொள்ளும்படி முதலிலிருந்தே கூறியவன் யார்? அவ்வாறு அறிவித்தவனோ, முன்னுரைத்தவனோ யாருமில்லை, உங்கள் சொற்களைக் கேட்டவனோ எவனுமில்லை

27 ஆனால், "இதோ, திரும்பி வருகிறார்கள்" என்று நாம் தாம் முதலில் சீயோனுக்கு அறிவித்தோம்; நற்செய்தித் தூதனை யெருசலேமுக்கு அனுப்பினோம்.

28 நாம் கவனித்துப் பார்த்தோம்; அவர்களுள் ஆலோசனை தருபவனோ, கேள்விக்குப் பதில் சொல்பவனோ இல்லை.

29 இதோ, அவர்கள் அனைவரும் ஒன்றுமில்லை; அவர்களின் செயல்கள் வீணே; அவர்களின் சிலைகள் வெறும் காற்றும் வியர்த்தமும் தான்.

அதிகாரம் 42

1 இதோ தம் ஊழியன், அவரை நாம் ஆதரிக்கிறோம், அவர் நம்மால் தேர்ந்து கொள்ளப்பட்டவர், அவரிடத்தில் நம் உள்ளம் பூரிப்படைகின்றது, அவர் மேல் நம்முடைய ஆவியைத் தங்கச் செய்தோம், அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார்.

2 அவர் சச்சரவு செய்யமாட்டார், கூக்குரலிடவும் மாட்டார்; அவர் குரல் தெருவிலே கேட்காது.

3 அவர் நெறிந்த நாணலை முறியார், புகையும் திரியை அணையார். உண்மையுள்ளவராய் அறத்தைக் கொணர்வார்.

4 உலகில் அறத்தை நிலைநாட்டும் வரை, அவர் மனந்தளர மாட்டார், ஊக்கங்குறைய மாட்டார்; அவருடைய சட்டத்திற்காகத் தீவுகளும் காத்திருக்கின்றன.

5 வான்வெளியைப் படைத்து அதை விரித்தவரும், மண்ணுலகை நிலைநிறுத்தி, அதில் செடிகளை முளைப்பித்தவரும், அதன் மேல் இருப்பவர்களுக்கு மூச்சைக் கொடுத்து, நடமாடுகிறவர்களுக்கு ஆவியைத் தந்தவருமான ஆண்டவராகிய கடவுள் கூறுகிறார்:

6 ஆண்டவராகிய நாமே அறத்தை நிலை நாட்ட உன்னை அழைத்திருக்கிறோம், உன் கையைப் பிடித்து உன்னைக் காத்தோம்;

7 குருடர்களுக்குக் கண்களைத் திறக்கவும், கட்டுண்டவரைத் தளையினின்று விடுவிக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும், உன்னை மக்களுக்கு உடன்படிக்கையாகவும், புறவினத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்தினோம்.

8 ஆண்டவர் நாமே' இதுவே நமது பெயர்; நமது மகிமையைப் பிறருக்கோ நமது புகழைச் சிலைகளுக்கோ விடவே மாட்டோம்.

9 முன்பே அறிவிக்கப்பட்டவை இதோ நிகழ்ந்துவிட்டன, இப்பொழுது புதியனவும் நாம் அறிவிக்கிறோம், அவை நடைபெறுவதற்கு முன்னமேயே உங்களுக்கு நாம் சொல்லி வைக்கிறோம்."

10 கடலே, கடல் வாழ் உயிரினங்களே, தீவுகளே, அவற்றில் வாழும் மனிதர்களே, ஆண்டவருக்குப் புதிய பாட்டைப் பாடுங்கள், பூமியின் எல்லைகளிலிருந்து அவர் புகழைக் கூறுங்கள்.

11 பாலை நிலமும் அதன் நகரங்களும், கேதார் மக்கள் வாழும் ஊர்களும் குரலை உயர்த்தட்டும்; சேலாவில் வாழ்பவர்களே, மகிழ்ச்சியால் பாடுங்கள், மலைகளின் உச்சியினின்று ஆர்ப்பரியுங்கள்.

12 ஆண்டவருக்கு மகிமை செலுத்துவார்கள், தீவுகளில் அவர் புகழை அறிவிப்பார்கள்.

13 வல்லவனைப் போல் ஆண்டவர் கிளம்பிடுவார், போர் வீரனைப் போலச் சினங் கொண்டெழுவார்; உரத்த குரலில் அதட்டுவார், முழக்கம் செய்வார், தம் எதிரிகள் மீது வல்லமையை வெளிப்படுத்துவார்.

14 நெடுங்காலமாய்ப் பேசாமலிருந்தோம், மௌனம் காத்துப் பொறுமையாய் இருந்தோம்; பிள்ளை பெறுகிற பெண்ணைப் போலக் கூக்குரலிடுகிறோம், வேதனையால் மூச்சுத் திணறுகிறோம்.

15 மலைகளையும் குன்றுகளையும் பாழாக்குவோம், அவற்றின் பசும்புல் அனைத்தையும் உலரச் செய்வோம்; நதிகளை மணல் திட்டுகளாக மாற்றுவோம், நீர் நிலைகளை வறண்டு போகச் செய்வோம்.

16 குருடர்களை அவர்கள் அறியாப் பாதையில் நடத்திச் செல்வோம், அவர்களுக்குத் தெரியாத வழிகளில் அவர்களை நடக்கச் செய்வோம்; அவர்கள் முன் இருளை ஒளியாக்குவோம், கோணலான வழிகளை நேராக்குவோம்; ஆம், இதெல்லாம் அவர்களுக்காகச் செய்வோம், அவர்களை நாம் கைவிட மாட்டோம்.

17 செதுக்கப்பட்ட சிலைகள் மேல் நம்பிக்கை வைப்போரும், வார்த்துச் செய்த உருவங்களிடம், "எங்கள் தெய்வங்கள் நீங்களே" என்போரும், பின்னடைந்து போவார்கள், வெட்கி நாணமடைவார்கள்.

18 செவிடர்களே, கேளுங்கள்; குருடர்களே, பார்ப்பதற்குக் கண்ணைத் திறங்கள்;

19 யார் அந்தக் குருடன்? நம் ஊழியன் தான். யார் அந்தச் செவிடன்? நாம் அனுப்பும் தூதன் தான். நம்மால் அனுப்பப்பட்டவனைப் போலக் குருடன் யார்? ஆண்டவரின் ஊழியனைப் போலச் செவிடன் யார்?

20 பல காரியங்களைப் பார்க்கிறாய், ஆனால் அவற்றைக் கடைப்பிடிக்கிறதில்லை; உன் செவிகள் திறந்திருக்கின்றன, ஆனால் நீ கேட்கிறதில்லை.

21 தம்முடைய நீதியை முன்னிட்டு ஆண்டவர், திருச்சட்டத்தை மகிமைப்படுத்தி உயர்த்த ஆவலுற்றார்.

22 ஆனால் இந்த மக்கள் கொள்ளையடிக்கப்பட்டனர், பொருட்களைப் பறிகொடுத்தனர்; அவர்கள் அனைவரும் படுகுழிகளில் அகப்பட்டனர், சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்; அவர்களும் கொள்ளைப் பொருளாயினர், அவர்களை விடுவிப்பவன் எவனுமில்லை; அவர்கள் சூறையாடப்பட்டனர், "திருப்பிக் கொடு" என்று சொல்பவர் யாருமில்லை.

23 உங்களில் இதைக் கேட்கிறவன் யார்? வரப்போகின்றவற்றைக் கவனித்துக் கேட்பவன் எவன்?

24 யாக்கோபைச் சின்னா பின்னமாக்கும்படியும், இஸ்ராயேலைக் கொள்ளையடிக்கும்படியும், எதிரிகளுக்குக் கையளித்தவர் யார்? யாருக்கு விரோதமாய் நாம் பாவஞ் செய்தோமோ அந்த ஆண்டவரன்றோ கையளித்தார்? அவருடைய வழிகளில் நடக்க மறுத்தார்கள், அவரது சட்டத்தை அவர்கள் கேட்கவில்லை.

25 ஆகவே இஸ்ராயேல் மீது தம் சினத்தையும் ஆத்திரத்தையும் கொட்டினார், போரின் கொடுமையைக் காட்டினார்; அதைச் சுற்றிலும் அது தீ மூட்டிற்று, இஸ்ராயேலோ அதை உணரவில்லை; தீ இஸ்ராயேலைச் சுட்டெரித்தது, ஆயினும் அதைப்பற்றிச் சிந்திக்கவில்லை.

அதிகாரம் 43

1 யாக்கோபே, உன்னைப் படைத்தவரும், இஸ்ராயேலே, உன்னை உருவாக்கியவருமான ஆண்டவர் இப்பொழுது உனக்குக் கூறுகிறார்: "அஞ்சாதே; ஏனெனில் நாமே உன்னை மீட்டோம்; உன்னைப் பெயரிட்டு நாமே அழைத்தோம், ஆகவே நீ நமக்கே சொந்தம்.

2 நீ கடலைக் கடந்து செல்லும் போது நாம் உன்னோடிருப்போம்; ஆறுகளும் உன்னை மூழ்கடிக்கமாட்டா; தீ நடுவே நீ நடந்து போனாலும் எரிந்து போக மாட்டாய்; நெருப்பும் உன் முன் தணலற்று நிற்கும்.

3 ஏனெனில், உன் கடவுளாகிய ஆண்டவர் நாமே, இஸ்ராயேலின் பரிசுத்தராகிய நாமே உன் மீட்பர்; உன்னுடைய மீட்புக்கு ஈடாக எகிப்தையும், எத்தியோப்பியாவையும், சாபாவையும் கையளிக்கிறோம்.

4 நமது கண்ணுக்கு நீ விலையேறப் பெற்றவன், மதிப்புக்குரியவன், உன் மேல் மிகுந்த அன்பு கொண்டோம்; ஆதலால் தான் உனக்காக மனிதரைக் கையளிப்போம், உன் உயிருக்காக மக்களை மாற்றிக் கொள்வோம்.

5 அஞ்சாதே, ஏனெனில் நாம் உன்னோடிருக்கிறோம், கிழக்கிலிருந்து உன் பிள்ளைகளைக் கூட்டி வருவோம், மேற்கிலிருந்து உன்னை ஒன்று சேர்ப்போம்.

6 'கொடு' என்று வட திசைக்குச் சொல்வோம்; 'தடுக்காதே' என்று தென் திசைக்குச் சொல்வோம்; தொலைவிலிருந்து நம் புதல்வர்களையும் பூமியின் எல்லையிலிருந்து நம் புதல்வியரையும் கொண்டு வா;

7 நமது திருப்பெயரை அவர்கள் கொண்டிருக்கின்றனர், அவர்களை நமது மகிமைக்காகவே உண்டாக்கினோம், உருவாக்கினோம், அவர்கள் நம் வேலைப்பாடு." ஆண்டவர் ஒருவரே கடவுள்

8 கண்கள் இருந்தும் குருடராயும், காதுகள் இருந்தும் செவிடராயும் இருக்கின்ற மக்களை வெளியில் கொண்டு வாருங்கள்.

9 மக்களினங்கள் யாவும் ஒன்று கூடட்டும், எல்லா இனத்தவரும் ஒன்று சேரட்டும்; அவர்களுள் யார் இதை அறிவிக்கக்கூடும்? முன்னைய காரியங்களை நமக்கு அறியச் செய்யமுடியும்? அவர்கள் காட்சிகளைக் கொண்டு வந்து மெய்ப்பிக்கட்டும், அதைக் கேட்டு, மக்கள் 'உண்மை' எனச் சொல்லட்டுமே.

10 நீங்களே நமக்குச் சாட்சிகள் என்கிறார் ஆண்டவர், நாம் தேர்ந்து கொண்ட நம் ஊழியனும் நீங்களே. நம்மை அறிந்து நம் மேல் விசுவாசம் வைத்து, நாமே இருக்கிறவர் என்பதைக் கண்டு பிடிக்கச் செய்வது உங்கள் ஊழியமே. நமக்கு முன் தெய்வம் ஏதும் உண்டானதில்லை, நமக்குப் பின் ஏற்படப் போவதுமில்லை.

11 நாமே கடவுள், நாமே ஆண்டவர்; நம்மையன்றி வேறு மீட்பரே இல்லை.

12 நாமே அறிவித்தோம், மீட்பு தந்தோம், தெரியப்படுத்தினோம்; உங்கள் நடுவில் இதையெல்லாம் செய்தது வேறு தெய்வமன்று; நீங்களே நமக்குச் சாட்சிகள், நாமே கடவுள் என்கிறார் ஆண்டவர்.

13 ஆதியிலிருந்து இருக்கிறவர் நாமே, நமது கையிலிருப்பதைப் பறிப்பவன் எவனுமில்லை; நாம் செயலாற்றுகிறோம், அதைத் தடுக்கிறவன் எவன்?"

14 இஸ்ராயேலின் பரிசுத்தரும், உங்கள் மீட்பருமான ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: "உங்களை முன்னிட்டுப் பபிலோனுக்கு எதிராகப் பகைவர்களை அனுப்புவோம்; அதன் தாழ்ப்பாள்களையெல்லாம் தகர்த்து விடுவோம், தங்கள் மரக்கலங்களைக் குறித்துப் பெருமை பாராட்டிக் கொள்ளும் கல்தேயர்களை முறியடிப்போம்.

15 நாமே ஆண்டவர், உங்கள் பரிசுத்தர், இஸ்ராயேலைப் படைத்தவர், உங்கள் மாமன்னர்."

16 பெருங்கடலில் வழி ஏற்படுத்தியவரும், பொங்கியெழும் நீரின் நடுவில் பாதை விட்டவரும்,

17 எகிப்தின் தேர்ப் படைகளையும் குதிரைகளையும், வலிமையுள்ள வீரர்களையும் கூட்டி வந்து, அவர்கள் மறுபடி எழுந்திராமல் முடிவில்லா உறக்கத்தில் ஆழும்படியும், விளக்குத் திரி போல் நசுங்கி அழியும்படியும் செய்தவருமான ஆண்டவர் இன்னும் கூறுகிறார்:

18 கடந்து போனவற்றைச் சிந்திக்க வேண்டா, முற்காலத்து நிகழ்ச்சிகளைப்பற்றி எண்ண வேண்டா;

19 இதோ, நாம் புதியன செய்கிறோம், இப்பொழுது அவை தோன்றும், நீங்களும் காண்பீர்கள்; பாழ்வெளியில் நாம் பாதையொன்று அமைப்போம், பாலை நிலத்தில் ஆறுகள் ஓடச் செய்வோம்.

20 காட்டு மிருகங்களும் குள்ள நரிகளும், தீக் கோழிகளும் நம்மை மகிமைப்படுத்தும்; ஏனெனில் தேர்ந்து கொள்ளப்பட்ட நம் மக்களின் தாகந்தீர்க்கப் பாழ்வெளியில் நீர் சுரக்கச் செய்வோம், பாலை நிலத்தில் ஆறுகள் புறப்படச் செய்வோம்.

21 நமது மகிமையைப் பரப்பும்படி நமக்கென்றே இந்த மக்களை உண்டாக்கினோம்.

22 யாக்கோபே, நம்மை நீ மன்றாடவில்லை, இஸ்ராயேலே, நம்மைப் போற்ற நீ சிரத்தை கொள்ளவில்லை.

23 தகனப்பலியாக ஆடுகளை நமக்கு ஒப்புக் கொடுக்கவில்லை. உங்கள் பலிகளால் நம்மை மகிமைப்படுத்தவுமில்லை; காணிக்கைகளைச் செலுத்தும்படி நாம் உங்களை வற்புறுத்தவில்லை, நமக்குத் தூபம் காட்டும்படி உங்களை நாம் கட்டாயப்படுத்தவில்லை.

24 பணம் போட்டு நமக்காக நீங்கள் நறுமணப் பொருள் வாங்கவில்லை, பலி மிருகங்களின் கொழுப்பால் நம்மை நிறைவுபடுத்தவில்லை; அதற்கு மாறாக உங்கள் பாவங்களால் நம்மை வருத்தினீர்கள், உங்கள் அக்கிரமங்களால் நமக்கு வேதனை தந்தீர்கள்.

25 நாமே, நம்மை முன்னிட்டு நாம் தாமே உங்கள் அக்கிரமங்களை அழிப்போம், உங்கள் பாவங்களை மறுபடி நினைவு கூரவும் மாட்டோம்.

26 நமக்கு இப்பொழுது சொல்லிக் காட்டுங்கள், ஒருமிக்க நாம் வழக்காடுவோம்; நீங்கள் நீதிமான்கள் என்பதை எண்பிக்க ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள்.

27 உங்கள் குலத்தந்தை பாவஞ் செய்தான், உங்களை நடத்துகிறவர்கள் நமக்கெதிராய் கிளர்ச்சி செய்தனர்.

28 ஆதலால் பரிசுத்த இடத்தின் தலைவர்களைப் பங்கப்படுத்தினோம், யாக்கோபை அழிவுக்கும், இஸ்ராயேலை நிந்தைக்கும் ஆளாக்கினோம்.

அதிகாரம் 44

1 நம் ஊழியனாகிய யாக்கோபே, நாம் தேர்ந்து கொண்ட இஸ்ராயேலே, கேள்.

2 உன்னைப் படைத்துத் தாய் வயிற்றில் உருவாக்கிக் காத்து வரும் ஆண்டவர் கூறுகிறார்: நம் ஊழியனாகிய யாக்கோபே, நாம் தேர்ந்து கொண்ட நேர்மையாளனே, அஞ்சவேண்டா.

3 ஏனெனில் வறண்ட இடத்தில் நீரைப் பொழிவோம், ஈரமற்ற நிலத்தில் ஆறுகள் ஓடச் செய்வோம். உனது வித்தின் மேல் நம்முடைய ஆவியையும், உனது சந்ததியின் மேல் நமது ஆசியையும் பொழிவோம்.

4 செடிகளைப் போல் அவர்கள் தளிர்ப்பார்கள், நீரருகில் உள்ள மரம் போலத் தழைப்பார்கள்.

5 'நான் ஆண்டவருக்குச் சொந்தம்' என்பார் ஒருவன்; யாக்கோபின் பெயரைச் சூடிக்கொள்வான் மற்றொருவன். 'ஆண்டவர்' என்று இன்னொருவன் தன் கையில் எழுதி, 'இஸ்ராயேல்' என்று புனைப்பெயர் சூடிக்கொள்வான்." ஒரே கடவுள் என்னும் கோட்பாடு

6 இஸ்ராயேலின் மாமன்னரும், அதன் மீட்பரும், சேனைகளின் ஆண்டவருமாகிய ஆண்டவர் கூறுகிறார்: "முதலும் நாமே, முடிவும் நாமே; நம்மையன்றி வேறு தெய்வம் இல்லை.

7 நமக்குச் சமமானவன் யார்? அறிவிக்கட்டும்; எடுத்துக்காட்டி எண்பிக்கட்டும்; நடக்கப்போகின்றவற்றை முதலிலிருந்தே முன்னறிவித்தவன் யார்? வரப்போவதை இப்பொழுதே நமக்கு அறிவிக்கட்டும்!

8 நீங்கள் கலங்காதீர்கள், அஞ்சாதீர்கள்; துவக்கத்திலிருந்தே உங்களுக்குச் சொன்னோம், அறிவித்தோம் அன்றோ? நீங்களே நமக்குச் சாட்சிகள்! நம்மையன்றி வேறு தெய்வம் உண்டோ? புகலிடம் வேறில்லை; அப்படியொன்றையும் நாம் அறியோம்."

9 சிலை செய்யும் அனைவரும் வீணராவர்; அவர்களுடைய விலையுயர்ந்த வேலைப்பாடுகள் பயனற்றவை; அவர்களே, அவை காண்பதில்லை, கண்டுபிடிப்பதில்லை என்பதைக் குறித்து வெட்கி நாணவேண்டிய சாட்சிகளாய் இருக்கின்றனர்.

10 ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை எவனாவது உருவாக்குவதுண்டா? அல்லது செதுக்குவதுண்டா?

11 இதோ அவ்வேலையில் ஈடுபடுவோர் யாவரும் நாணமடைவர்; அந்த வேலைக்காரர் வெறும் மனிதர் தானே! அவர்கள் எல்லாரும் ஒன்றாய்க் கூடிவந்து நம்முன் நிற்கட்டும்; அப்போது தம் மடமைக்காக நடுங்குவார்கள்; அனைவரும் வெட்கமடைவார்கள்.

12 கொல்லன் இரும்பை வாள் போன்ற அரத்தால் அராவி வேலை செய்கிறான்; அதை உலையிலிட்டுச் சம்மட்டியால் அடித்து அந்தச் சிலையை உருவாக்குகிறான்; தன் கைப் பலத்தைப் பயன்படுத்தி வேலை செய்கிறான்; பசியுறுகிறான், சோர்ந்து போகிறான்; தண்ணீர் குடிப்பதில்லை; களைத்துப் போகிறான்.

13 மரத்தில் சிலை செய்யும் தச்சன் மரத்தின் மீது நூலிட்டு, உளியால் பக்குவப்படுத்தி, மூலமட்டப்பலகையால் சரிபார்த்து, கவராயம் என்னும் கருவியால் அளவாகப் பிரித்து ஓர் அழகான மனித உருவத்தைச் செய்கிறான்; அதையெடுத்து ஒரு மாடத்தில் வைக்கிறான்.

14 அவன் கேதுரு மரங்களை வெட்டுகிறான்; அல்லது காட்டிலுள்ள மரங்களின் நடுவில் நிற்கும் காஞ்சி மரத்தையோ ஆலமரத்தையோ தேர்ந்தெடுக்கிறான்; அல்லது தான் நட்டு, மழை வளர்த்த கேதுரு மரத்தைத் தேர்ந்து கொள்கிறான்.

15 அது மனிதர்களுக்கு விறகாகப் பயன்படும்படி உண்டாக்கப்பட்டது; குளிர்காய்வதற்கும் அதிலிருந்தே விறகு எடுக்கிறான்; அப்பஞ் சுடவும் அதையே பயன்படுத்துகிறான்; அதிலும் மீதியாய் இருப்பதைக் கொண்டு தான் தெய்வத்தை உருவாக்கி வணங்குகிறான்; உளியால் ஒரு சிலை செதுக்கி அதன் முன் தெண்டனிடுகிறான்.

16 அதில் பாதியை அடுப்பெரிக்கிறான்; மற்றொரு பாகத்தைப் பயன்படுத்தி இறைச்சி சமைத்துச் சுவையான உணவுப் பொருட்களைத் தயாரித்து வயிறாரச் சாப்பிடுகிறான்; சாப்பிட்ட பின் குளிர்காய்கிறான்: "நன்றாகக் குளிர்காய்ந்தேன், நல்ல தீ வளர்த்தேன்" என்று சொல்லிக் கொள்ளுகிறான்.

17 மீதியைக் கொண்டோ தனக்கொரு தெய்வமாகச் சிலை செதுக்கி, அதன்முன் குப்புற விழுந்து வணங்கி, "நீரே என் கடவுள், என்னை மீட்டருளும்!" என மன்றாடுகிறான்.

18 அவர்கள் ஒன்றும் அறியவில்லை; கண்டுபிடிக்கவுமில்லை. காணமுடியாதபடி அவர்களின் கண்கள் கட்டப்பட்டன; உணரமுடியாதபடி அவர்களின் உள்ளம அடைபட்டது.

19 ஆதலால் அவர்கள் மனத்தில் சிந்திப்பதில்லை; கண்டுபிடிப்பதில்லை; உணர்வதும் கிடையாது: "ஒரு பாதியை அடுப்பெரித்தேன்; அதன் நெருப்புக் பொறிகளில் அப்பம் சுட்டேன்; இறைச்சி சமைத்துச் சாப்பிட்டேன். அதில் மீதியானதைக் கொண்டு சிலை செதுக்குவேனோ? மரக்கட்டை முன் குப்புற விழுந்து வணங்குவேனா?" என்று சொல்லக் கூடத் தெரியாமல் உணர்ச்சியற்றுப் போயினர்.

20 வெறும் சாம்பலில் பற்ற வைக்கிறான்; அதன் உள்ளம் உணர்விழந்து போகிறது; அவன் தவறுகிறான்; "என் கைவேலைப்பாடு சுத்தப் பொய்" என்று சொல்லித் தன்னையே அவன் விடுவித்துக் கொள்ளமாட்டான்.

21 யாக்கோபே, இவற்றை றினைவில் வைத்துக் கொள்: இஸ்ராயேலே, நீ நம் ஊழியன் என்பதை மறவாதே; நாமே உன்னை உருவாக்கினோம், நீ நம்முடைய ஊழியன்; இஸ்ராயேலே, உன்னை மறவேன்.

22 கார்மேகம் கலைவது போல் உன் அக்கிரமங்களைப் போக்கினோம், பனிப்படலம் போல் உன் பாவங்கள் பறந்தன; நம்மிடத்தில் நீ திரும்பி வா, ஏனெனில் உன்னை நாம் மீட்டிருக்கிறோம்.

23 வானமே, அக்களித்து ஆர்ப்பரி, ஆண்டவர் செயலாற்றினார்; மண்ணுலகின் எல்லைகளே, அகமகிழுங்கள், மலைகளே, காடுகளே, அங்குள்ள மரங்களே, மகிழ்ச்சியால் ஆரவாரஞ் செய்யுங்கள்; ஏனெனில் ஆண்டவர் யாக்கோபை மீட்டார், இஸ்ராயேலில் தம் மகிமையை வெளிப்படுத்தினார்.

24 உன் மீட்பரும், தாய் வயிற்றில் உன்னை உருவாக்கியவருமான ஆண்டவர் கூறுகிறார்: "நாமே ஆண்டவர், நாமே அனைத்தையும் படைத்தோம்; தனியாகவே வானத்தை விரித்தோம், பூமியை நிலைநாட்டினோம்; நமக்கு உதவினவன் ஒருவனுமில்லை.

25 நிமித்தகர் சொல்லும் குறிகளைப் பொய்யாக்குகிறோம், மந்திரவாதிகளை மடயராக்குகிறோம்; ஞானிகளை விழத்தாட்டுகிறோம், அவர்களது அறிவை மடமையாக்குகிறோம்.

26 நம் ஊழியனின் வாக்கியத்தையோ உறுதிப்படுத்துகிறோம், நம் தூதர்களின் மொழிகளை நிறைவேற்றுகிறோம்; யெருசலேமைப் பார்த்து, 'நீ குடியிருப்பு ஆவாய்' என்றும், யூதாவின் நகரங்களுக்கு, 'நீங்கள் கட்டப்படுவீர்கள், அதன் பாழடைந்த இடங்களை எழுப்புவோம்' என்றும், சொல்லுகிறவர் நாமே.

27 பாதாளத்தைப் பார்த்து, 'நீ வற்றிப்போகக்கடவாய், உன் ஆறுகளை நாம் வற்றச் செய்வோம்' என்பவர் நாமே;

28 சீருஸ் அரசனுக்கு, 'நீ நமது மந்தையின் மேய்ப்பன், நம் விருப்பத்தையெல்லாம் நிறைவேற்றுவாய்' என்று சொல்லுகிறவர் நாமே; யெருசலேமை நோக்கி, 'நீ மறுபடி கட்டப்படுவாய்' என்றும், திருக்கோயிலைப் பார்த்து, 'உன் அடிப்படை மறுபடி இடப்படும்' என்றும் சொல்லுகிறவர் நாமே."

அதிகாரம் 45

1 ஆண்டவர் அபிஷேகம் செய்த சீருசுக்கு முன்பாக மக்களினங்களைக் கீழ்ப்படுத்தவும், அரசர்கள் புறங்காட்டி ஓடச் செய்யவும், அவன் முன் கோட்டைக் கதவுகள் திறக்கப்படவும், கோட்டை வாயில்கள் மூடப்படாதிருக்கவும், அவனுடைய வலக் கையைப் பிடித்துக் கொண்டு, ஆண்டவர் அவனுக்குக் கூறுவது:

2 உனக்கு முன்னால் நாம் செல்வோம், உயரமான இடங்களையெல்லாம் தாழ்த்துவோம்; செப்புக் கதவுகளை உடைத்தெறிவோம், இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்திடுவோம்.

3 உன்னைப் பெயர் சொல்லி அழைக்கிற இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் நாமே என்பதை நீ அறியும்படி, மக்கள் மறைத்து வைத்துள்ள புதையல்களையும், மறைவிடத்திலிருக்கும் கருவூலங்களையும் கையளிப்போம்.

4 நம் ஊழியனாகிய யாக்கோபை முன்னிட்டும், நாம் தேர்ந்து கொண்ட இஸ்ராயேலின் பொருட்டும், உன்னை நாம் பெயரிட்டு அழைத்தோம்; நம்மை நீ அறியாதவனாயிருந்தும், உனக்குச் சிறப்புப் பெயர் தந்தோம்.

5 நாமே ஆண்டவர், வேறு எவனுமில்லை; நம்மையன்றி வேறு கடவுள் கிடையாது; நம்மை நீ அறியாதவனாயிருந்தும், உனக்குச் சிறப்புப் பெயர் தருவோம்.

6 கதிரவன் தோன்றும் திசையிலிருந்து மறையும் திசை வரையில் வாழ்வோர் அனைவரும், நம்மையன்றி வேறில்லையென அறியுமாறு இவ்வாறு செய்தோம்

7 நாமே ஆண்டவர், வேறு எவனுமில்லை, ஒளியை உருவாக்குகிறவரும், இருளைப் படைக்கிறவரும், வாழ்வை வழங்குகிறவரும், தாழ்வைத் தருகிறவரும் நாமே; இவற்றையெல்லாம் செய்கிற நாமே ஆண்டவர்.

8 வானமே, மேலிருந்து பனிமழை பெய், மேகங்கள் நீதியைப் பொழிக! நிலம் திறக்கப்படுக! மீட்பு முளைப்பதாக! அதனோடு நீதி தளிர்ப்பதாக! ஆண்டவராகிய நாமே அதைச் செயலாற்றுகிறோம்

9 தன்னை உருவாக்கியவனுடன் வாதாடுகிற மட்கலத்திற்கு ஐயோ கேடு! களிமண் குயவனை நோக்கி, 'நீ என்ன செய்கிறாய்? உன் வேலைப்பாட்டில் கைத்திறமையில்லை' என்று சொல்வதுண்டோ?

10 தந்தையை நோக்கி, 'எதைப் பிறப்பிக்கிறாய்?' என்றும், தாயைப் பார்த்து, 'எதைப் பெற்றெடுக்கிறாய்?' என்றும் சொல்பவனுக்கு ஐயோ கேடு!

11 இஸ்ராயேலின் பரிசுத்தரும், அதைப் படைத்தவருமான ஆண்டவர் கூறுகிறார்: நம் பிள்ளைகளைப் பற்றி நம்மைக் கேட்பதும், நம் கைவேலையைக் குறித்து நமக்குக் கட்டளையிடுவதும் உங்கள் வேலையா?

12 நாமே உலகத்தை உண்டாக்கினோம், அதில் மனிதனைப் படைத்தவரும் நாமே; நம் கைகளே வானத்தை விரித்தன, அதன் படைகளுக்கெல்லாம் கட்டளை தந்தவரும் நாமே.

13 வெற்றிக்கென்று சீருசை நாமே தூண்டினோம், அவன் பாதைகளையெல்லாம் சீர்ப்படுத்தினோம்; நமது திருநகரைத் திரும்பவும் அவனே கட்டுவான், மீட்புக் கிரயமோ கையூட்டோ இன்றியே நாடுகடத்தப்பட்ட நம் மக்களை விடுதலை செய்வான்" என்கிறார் சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர்.

14 இன்னும் ஆண்டவர் கூறுகிறார்: "எகிப்து தன் வேலைப் பயனாகிய செல்வங்களோடும், எத்தியோப்பியா தன் வணிகத்தால் கிடைத்த வருமானத்தோடும், சாபா தன் உயர்ந்து வளர்ந்த குடிகளோடும் இஸ்ராயேலே, உன்னிடம் வந்து சேரும்; உனக்கு அவை யாவும் உரிமையாகும், உன்னைப் பின்தொடர்வார்கள்; விலங்கிடப்பட்டவர்களாய் உன் முன் வந்து, உன்னை வணங்கி மன்றாடி, 'உன்னிடத்தில் மட்டுமே கடவுள் இருக்கிறார், உன்னிடத்திலன்றி வேறெங்கும் கடவுள் இல்லை' என்பார்கள்."

15 மெய்யாகவே மறைவாயிருக்கும் கடவுள் நீரே, இஸ்ராயேலின் கடவுளாகிய மீட்பரும் நீரே;

16 அதன் பகைவர்கள் யாவரும் வெட்கி நாணிப் போயினர்; சிலைகளைச் செய்தவர்கள் அனைவரும் வெட்கம் நிறைந்து வெளியேறினர்.

17 முடிவில்லா மீட்பினால் இஸ்ராயேல் ஆண்டவரால் மீட்கப்பட்டது; என்றென்றைக்கும் நீங்கள் கலங்க மாட்டீர்கள், வெட்கமடையவும் மாட்டீர்கள்.

18 ஏனெனில் வானத்தைப் படைத்த ஆண்டவர் கூறுகிறார்: (அவரே கடவுள், அவர் தான் பூமியை உருவாக்கினார், அதைப் படைத்து நிலை நாட்டினார்; வெறுமையாய் இருக்கும்படி அதை உண்டாக்கவில்லை, அதில் மனிதர் வாழவே அதை உருவாக்கினார்): "நாமே ஆண்டவர், வேறு எவனுமில்லை;

19 மறைவிலோ, மண்ணுலகின் இருட்டான இடத்திலோ நாம் பேசினதில்லை; 'வீணாக நம்மைத் தேடுங்கள்' என்று யாக்கோபின் வித்துக்கு நாம் சொல்லவில்லை; ஆண்டவராகிய நாம் உண்மையைப் பேசுகிறோம், நேர்மையானவற்றை அறிவிக்கிறோம்.

20 புறவினத்தாருள் தப்பிப் பிழைத்தவர்களே, ஒன்றுகூடி எல்லாரும் சேர்ந்து வாருங்கள்; மரச் சிலையைத் தூக்கிக் கொண்டு வலம் வருவோரும், மீட்க முடியாத தெய்வத்திடம் வேண்டிக் கொள்வோரும் மதியீனர்கள் ஆவர்.

21 அறிவியுங்கன், உங்கள் நியாயத்தைக் கூறுங்கள், ஒன்றாய்க் கூடி ஆலோசனை செய்யுங்கள்; முதலிலிருந்தே இதை அறிவித்தவர் யார்? தொடக்கக் காலத்திலேயே தெரிவித்தவர் யார்? ஆண்டவராகிய நாமல்லவோ? நம்மையல்லால் வேறு தெய்வம் இல்லை. நீதியுள்ளவரும், மீட்கிறவருமான கடவுள் நம்மையல்லால் வேறு யாருமில்லை.

22 உலகத்தின் எல்லைகளில் வாழும் மக்களே, நீங்கள் அனைவரும் நம்மிடம் திரும்பி வாருங்கள், நீங்கள் மீட்பு அடைவீர்கள். ஏனெனில் நாமே கடவுள், வேறு எவனுமில்லை.

23 நம் மேலேயே நாம் ஆணையிட்டோம், நம் வாயிலிருந்து புறப்படுவது உண்மையே, பொய்யா மொழியே:

24 எல்லா முழந்தாளும் நமக்கு மண்டியிடும், எல்லா நாவும் நம் பெயரால் ஆணையிடும்.'

25 நம்மைப் பற்றி மக்கள் சொல்வது இதுவே: ஆண்டவர் ஒருவரிடம் மட்டுமே நீதியும் வல்லமையும் இருக்கின்றன; அவருக்கு எதிராய் எழுந்தவர் அனைவரும், வெட்கத்தோடு அவர் முன் வருவர்.

26 இஸ்ராயேலின் வழித்தோன்றல் அனைத்திற்கும் ஆண்டவர் வழியாகவே நீதி வழங்கப்படும்; அவர் வழியாகவே அவர்களுடைய புகழோங்கும்."

அதிகாரம் 46

1 பேல் தெய்வம் உடைபட்டது, நாபோ நொறுக்கப்பட்டது; அவர்களுடைய சிலைகள் மிருகங்கள் மீதும் மாடுகள் மேலும் ஏற்றப்பட்டன; உங்களுடைய இந்தச் சுமைகள் பெரும் பாரமாய் உங்களை அழுத்திச் சோர்ந்து போகச் செய்கின்றன.

2 சிலைகள் எல்லாம் உடைபட்டு ஒருங்கே தவிடு பொடியாய் ஆகிவிட்டன; தங்களைச் சுமந்தவர்களை அவற்றால் காப்பாற்ற முடியவில்லை, அவர்களோடு அவர்களின் சிலைகளும் சிறைப்பட்டன.

3 தாய் வயிற்றிலிருந்தே நம்மால் தாங்கப்பட்டு, கருவிலிருந்தே நம்மால் தூக்கி வைக்கப்பட்ட யாக்கோபு வீட்டாரே, இஸ்ராயேல் வீட்டாரில் எஞ்சினோரே, அனைவரும் நமக்குச் செவிசாயுங்கள்.

4 நீங்கள் முதுமையடையும் வரையில் நாம் மாறமாட்டோம், உங்கள் தலை நரைக்கும் வரை உங்களைத் தூக்கிச் செல்வோம்; நாமே படைத்தோம் நாமே உங்களைத் தாங்கினோம், நாமே தூக்கிப் போவோம், உங்களை விடுவிப்போம்.

5 யாருக்கு நம்மை நிகராக்குவீர்கள்? யாருக்கு நம்மைச் சமமாக்குவீர்கள்?யாருக்கு நம்மை ஒப்பிடுவீர்கள்? நம்மை யாருக்கு இணையாக்குவீர்கள்?

6 பையிலிருந்து பொன்னைக் கொட்டியும், தராசில் வெள்ளியை நிறுத்தும் கொடுத்துத் தெய்வமொன்று செய்து தரத் தட்டானை அமர்த்துகிறீர்கள்; செய்த பின் யாவரும் அதன் முன் விழுந்து வணங்குகிறார்கள்!

7 அதைத் தோளில் சுமந்துகொண்டு போகிறார்கள், அதற்குரிய இடத்தில் கொண்டுபோய் வைக்கிறார்கள்; அது அங்கேயே இருக்கும்; தன் இடம் விட்டுப் பெயராது; அதனிடம் கூக்குரலிட்டாலும் அது, கேட்காது, துன்பத்தினின்று அவர்களைக் காப்பாற்றாது.

8 துரோகிகளே, இதை நினைத்து வெட்கப்படுங்கள், உங்கள் உள்ளத்தில் நுழைந்து பாருங்கள்.

9 பண்டைக் காலத்தில் நிகழ்ந்தவற்றை நினைத்துப் பாருங்கள், நாமே கடவுள், நம்மையல்லால் வேறு தெய்வமில்லை, நமக்கு நிகரானது கிடையாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

10 ஆதியிலிருந்தே இறுதிக் காலத்தில் நடப்பவற்றையும், தொடக்கத்திலிருந்தே இன்னும் நிகழவிருந்தவற்றையும் அறிவித்தோம். 'நமது தீர்மானம் உறுதியாய் நிற்கும், நம் விருப்பமெல்லாம் நிறைவேறும்' என்று சொன்னோம்.

11 கிழக்கிலிருந்து பறவையொன்றைக் கூப்பிடுவோம், நமது சித்தத்தைச் செய்யும் ஒருவனைத் தொலைவிலிருந்து வரச் செய்வோம்; இதோ, (நாமே) சொன்னோம், சொன்னபடியே செய்வோம், தீர்மானம் செய்தோம், அதைச் செயல்படுத்துவோம்.

12 கடின இதயம் கொண்டவர்களே, நீதிக்குத் தொலைவில் நிற்பவர்களே, கேளுங்கள்:

13 நம்முடைய நீதியை அருகில் கொணர்ந்துள்ளோம், இனித் தொலைவில் இராது; நமது மீட்பு காலந் தாழ்த்தாது, சீயோனில் மீட்பையும், இஸ்ராயேலில் நம் மகிமையையும் நாட்டுவோம்."

அதிகாரம் 47

1 பபிலோன் என்னும் மகளே, கன்னிப் பெண்ணே, அரியணை விட்டிறங்கிப் புழுதியில் உட்கார்; தரை மீது அமர்ந்துகொள்; கல்தேயர் மகளுக்கு அரியணை கிடையாது; ஏனெனில், மெல்லியலாள், இளநங்கை என இனி நீ அழைக்கப் படமாட்டாய்.

2 எந்திரக் கல்லைச் சுற்றி, மாவரைக்கக் கடவாய், முக்காட்டை அகற்றிவிடு; தோள் மீதுள்ள ஆடையை நீக்கிவிடு; உன் உடையைத் தூக்கிக் கொண்டு ஆற்றைக் கட.

3 உனது நிருவாணம் வெளிப்படும், உன் மானக்கேடு காணப்படும்; இங்ஙனம் நாம் பழிவாங்குவோம், மனிதன் எவனும் நம்மை எதிர்க்க முடியாது.

4 நம்முடைய மீட்பர்- சேனைகளின் ஆண்டவர் என்பது அவர் பெயர்- இஸ்ராயேலின் பரிசுத்தர் ஆவர்.

5 கல்தேயரின் மகளே, இருளில் நுழைந்து மவுனமாய் உட்கார்ந்திரு; ஏனெனில், அரசுகளின் தலைவி என இனி நீ அழைக்கப்படமாட்டாய்.

6 நம் மக்கள் மீது கோபமுற்றோம், நம் உரிமைச் சொத்தைப் பங்கப்படுத்தினோம்; அவர்களை உன் கையில் விட்டுவிட்டோம், அவர்களுக்கு நீ இரக்கம் காட்டவில்லை; வயதில் முதிர்ந்தவர் மேல் கூட உன் நுகத்தை வைத்து அழுத்தினாய்

7 என்றென்றும் நான் தலைவியாய் விளங்குவேன்" என்றாய்; ஆதலால் நீ இவற்றை உன் உள்ளத்தில் சிந்தித்துப் பார்க்கவில்லை; உனக்கு வரவேண்டியதை எண்ணிப் பார்க்கவில்லை.

8 மென்மையானவளே, கலக்கமின்றி வாழ்பவளே, "நானே தனிப்பெரும் அரசி, என்னையன்றி வேறில்லை; நான் கைம்பெண்ணாய் ஆகமாட்டேன், மலடியாகவும் இருக்கமாட்டேன்" என்று உன் உள்ளத்தில் எண்ணுபவளே, நாம் சொல்வதை இப்போது கேள்:

9 மலட்டுத்தன்மை, கைம்மை இவ்விரண்டும் நெடிப்பொழுதில் ஒரே நாளில் உனக்கு நேரும்; நீ கணக்கற்ற பில்லி சூனியங்களைக் கையாண்டாலும், உன் மந்திரவாதங்களுக்கு மிதிமிஞ்சிய ஆற்றலிருப்பினும், இந்த தீமைகளெல்லாம் உனக்கு வந்தே தீரும்.

10 என்னைப் பார்க்கிறவர் ஒருவருமில்லை" என்று சொல்லிக் கொண்டு, அஞ்சாமல் கொடுமைகளைச் செய்துவந்தாய்; உன் ஞானமும் உன் கல்வியறிவும் உன்னை மோசஞ் செய்து விட்டன; நீயோ, "நானே தனிப்பெருந் தலைவி, என்னையன்றி வேறில்லை" என்று உன் உள்ளத்தில் எண்ணினாய்.

11 தீமை உன் மேல் திண்ணமாய் வரும், எங்கிருந்து வருமென உனக்குத் தெரியாது; வேதனை உன் மேல் பெருக்கெடுத்து வரும், அதற்குப் பரிகாரம் தேட உன்னால் இயலாது; அழிவு உன் மேல் திடீரென விழும், அதைப் பற்றி ஒன்றும் அறியமாட்டாய்.

12 உன் மந்திரவாதிகளோடும், நீ இளமை முதல் உன் தொழிலாய்க் கொண்டிருக்கும் பில்லி சூனியங்களோடும் நின்றுகொள்; அவை உனக்குப் பயன்படுமோ என்றும், அவற்றால் இன்னும் ஆற்றல் பெறுவாயோ என்றும் பார்ப்போம்.

13 உன் ஆலோசனைகளின் எண்ணிக்கையால் சோர்வடைந்தாய், கிரகங்களைக் கணிக்கும் சோதிட நூல் அறிஞரும், நாள் நட்சத்திரத்தை ஆராய்ந்து, எதிர் காலத்தை உனக்குச் சொல்பவரும், இப்போது வரட்டும், வந்து உன்னை மீட்கட்டும் பார்ப்போம்.

14 இதோ, அவர்கள் வைக்கோலைப் போல் இருக்கிறார்கள், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும்; தீயின் அழலினின்று அவர்கள் தங்கள் உயிரை விடுவிக்க மாட்டார்கள்; குளிர்காயப் பயன்படும் தீப்பொறியில்லை இவை, எதிரே உட்காரத் தக்க நெருப்புமில்லை இது.

15 யாரோடு உழைத்துழைத்துச் சோர்ந்தாயோ அவர்களும், இளமை முதல் உன்னோடு வணிகம் நடத்தியவர்களும், ஒவ்வொருவரும் ஒரு திசையில் ஓட்டமெடுப்பர், உன்னை மீட்க ஒருவனும் இருக்க மாட்டான்.

அதிகாரம் 48

1 இஸ்ராயேல் என்னும் பெயரால் அழைக்கப்பட்டு, யூதாவின் வித்திலிருந்து புறப்பட்டு, ஆண்டவர் திருப்பெயரால் ஆணையிடுகிறவர்களும், உண்மையிலும் நீதியிலும் இஸ்ராயேலின் கடவுளை நினைவு கூராதவர்களுமான யாக்கோபின் வீட்டாரே, இவற்றைக் கேளுங்கள்;

2 ஏனெனில் பரிசுத்த நகரத்தினர் என்னும் பெயரால் அவர்கள் குறிக்கப்பட்டு வருகின்றனர்; இஸ்ராயேலின் கடவுள்மேல் ஊன்றியுள்ளனர்; சேனைகளின் ஆண்டவர் என்பது அவருடைய பெயர்.

3 முற்காலத்து நிகழ்ச்சிகளை அப்பொழுதிலிருந்தே அறிவித்தோம், நம் வாயினின்று அவை வெளிப்பட்டன; அவற்றை உங்கள் செவிகளில் புகுத்தினோம்; பின்பு, திடீரென நாம் அவற்றைச் செயல்படுத்தினோம், அவை நிகழ்ந்ததையும் கண்டீர்கள்.

4 நீ கடுமையானவன் என்றும், உன் கழுத்து இருப்புக் கம்பி என்றும், நெற்றி வெண்கலம் என்றும், நாம் முன்னமே அறிவோம்.

5 ஆகவே, நீ, 'என் சிலைகளே இவற்றைச் செய்தன, செதுக்கப்பட்ட உருவங்களும், வார்க்கப்பட்ட படிமங்களுமே இவற்றைத் திட்டம் செய்தன' என்று சொல்லாதபடி, முதலிலிருந்தே உனக்கு முன்னறிவித்தோம், நிகழா முன்பே அவற்றை உனக்குக் குறிப்பிட்டோம்.

6 நீ கேள்வியுற்றவை அனைத்தும், நிகழ்ந்தனவா இல்லையா என்று பார்; ஆனால் நீங்கள் அவற்றை அறிவிக்கிறீர்களா? நீ அறியாதவையும், நமக்குரியனவாய் வைக்கப் பட்டிருந்தவையுமான புதியனவற்றை இனி மேல் முன்னறிவிப்போம்.

7 இவை இப்பொழுது தான் படைக்கப்பட்டன, முற்காலத்து நிகழ்ச்சிகள் அல்ல; 'இதோ, முன்பே இவற்றை நான் அறிவேன்' என்று ஒரு வேளை நீ சொல்லாதவாறு, இன்று வரை இவற்றை நீ கேட்டதே இல்லை.

8 ஆம், இவற்றை நீ கேட்டதுமில்லை, அறிந்ததுமில்லை; அன்று முதல் உன் செவி திறக்கப்படவுமில்லை; ஏனெனில் நீ கண்டிப்பாய்க் கட்டளையை மீறுவாய் எனத் தெரியும், தாய் வயிற்றிலிருந்தே உன்னைக் கலகக்காரன் என்றழைத்தோம்.

9 ஆயினும் நமது திருப்பெயரை முன்னிட்டு நமது கோபத்தைத் தொலைவில் தள்ளுவோம்; நமது மகிமைக்காகவே உனக்குக் கடிவாளமிட்டு, நீ அழியாதபடி உன்னை நிறுத்துவோம்.

10 இதோ, உன்னைச் சுத்தமாக்கினோம், ஆனால் வெள்ளியைக் காய்ச்சுவது போலன்று; துன்பம் என்னும் உலையில் சுத்தம் செய்து, உன்னை நாம் தேர்ந்து கொண்டோம்.

11 நம்மை முன்னிட்டே, நம்மை யாரும் பழித்துரைக்காதபடி - நம்மை முன்னிட்டே இதைச் செய்வோம்; நமது மகிமையைப் பிறனொருவனுக்கு விட்டுக் கொடோம்.

12 யாக்கோபே, நாம் அழைத்திருக்கிற இஸ்ராயேலே, நமக்குச் செவிகொடு; நாமே அவர், முதலும் நாமே, முடிவும் நாமே.

13 நமது கை தான் பூமியை நிலைநிறுத்தினது, நமது வலக்கையே வான்வெளியை அளந்தது; நாம் அவற்றை அழைக்கும் போது, அவை யாவும் ஒருமிக்க வந்து நிற்கும்.

14 நீங்கள் யாவரும் ஒன்றுகூடி நாம் சொல்வதைக் கேளுங்கள்: அந்தத் தெய்வங்களுள் எது இவற்றை அறிவித்தது? ஆண்டவர் சீருசுக்கு அன்பு செய்தார், அவனும் அவருடைய விருப்பத்தைப் பபிலோனில் செயலாற்றுவான், அவருடைய கை வன்மையைக் கல்தேயரிடம் காட்டுவான்.

15 நாமே, சொன்னவர் நாமே; நாமே அவனை அழைத்து வந்தோம்; நாமே அவனை நடத்திக் கொண்டு வந்தோம், அவனது பாதையைச் செவ்வையாக்கினோம்.

16 நம்மிடம் அணுகி வந்து வந்து இதைக் கேளுங்கள்; முதலிலிருந்தே நாம் மறை பொருளாய்ப் பேசினதில்லை; இவை நிகழத்தொடங்கிய காலத்திலிருந்தே நாம் பார்த்துக்கொண்டு வருகிறோம்." இப்பொழுது கடவுளாகிய ஆண்டவரும், அவருடைய ஆவியும் என்னை அனுப்புகின்றனர்.

17 இஸ்ராயேலைக் குறித்து ஆண்டவர் திட்டமிட்டது: இஸ்ராயேலின் பரிசுத்தரும், உன்னுடைய மீட்பருமான ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: "உனக்குப் பயனுள்ளவற்றைப் போதித்து நீ நடக்க வேண்டிய நெறியில் உன்னை நடத்துகின்ற உன் கடவுளாகிய ஆண்டவர் நாமே.

18 நம் கட்டளைகளைக் கடைப்பிடிக்க நீ மாத்திரம் முயற்சி எடுத்திருந்தால், உன் சமாதானம் ஆறு போலப் பெருக்கெடுத்திருக்கும், உன் நீதி கடலலைகள் போலப் பொங்கியிருக்கும்;

19 உன் வித்து கடற்கரை மணல்கள் போலும், உன் சந்ததி கரையோரத்துக் கற்கள் போலும் இருந்திருப்பர். அதனுடைய பெயர் நம் திருமுன்னிருந்து அழிந்திருக்காது, மறைந்திருக்காது."

20 பபிலோனிலிருந்து புறப்படுங்கள், கல்தேயாவை விட்டு வெளியேற்றுங்கள். உங்கள் விடுதலையை அக்களிப்பின் ஆரவாரத்தோடு அறிவியுங்கள், உலகின் எல்லைகள் வரை இச் செய்தியைப் பரப்புங்கள்; "தம் ஊழியனாகிய யாக்கோபை ஆண்டவர் மீட்டுக்கொண்டார்" என்று சொல்லுங்கள்.

21 அவர்களை அவர் பாலைநிலத்தின் வழியாய்க் கூட்டி வந்த போது அவர்கள் தாகத்தால் வருந்தவில்லை; அவர்களுக்கெனப் பாறையிலிருந்து தண்ணீர் புறப்படச் செய்தார், கற்பாறையைப் பிளந்தார், நீர்த்தாரைகள் பீறிட்டன.

22 பொல்லாதவர்களுக்குச் சமாதானம் இல்லை" என்கிறார் ஆண்டவர்.

அதிகாரம் 49

1 தீவுகளே, செவிகொடுத்துக் கேளுங்கள், தொலை நாட்டவரே, கூர்ந்து கவனியுங்கள்: கருப்பையிலேயே ஆண்டவர் என்னை அழைத்திருக்கிறார், என் தாய் வயிற்றிலேயே எனக்குப் பெயரிட்டிருக்கிறார்.

2 என் நாவைக் கூரிய வாளாக்கினார், தமது கையின் நிழலில் என்னைக் காத்தருளினார்; தீட்டிய அம்பாக என்னைச் செய்து, தமது அம்பறாத் தூணியில் ஒளித்து வைத்தார்.

3 என்னைப் பார்த்து: "இஸ்ராயேலே, நீ நம் ஊழியன், உன்னில் நாம் மகிமை யடைவோம்" என்றார்.

4 அதற்கு நான்: "பயனின்றி வீணாக உழைத்துச் சோர்ந்தேன், என் ஆற்றலைப் பயனின்றிச் செலவழித்தேன்; ஆயினும் என் நியாயம் ஆண்டவரின் பொறுப்பு, எனக்குரிய கைம்மாறு கடவுளிடம் உள்ளது" என்றேன்.

5 யாக்கோபைத் தம்மிடம் அழைத்து வர, இஸ்ராயேலைத் தம்மிடம் கூட்டி வர, என்னைத் தம் ஊழியனாய் என் தாய் வயிற்றில், உருவாக்கிய ஆண்டவர் கூறுகிறர்; ஏனெனில் ஆண்டவர் திரு முன் நான் மகிமையடைந்தேன், என் கடவுள் என்னுடைய வலிமை ஆனார்.

6 அவர் சொன்னார்: "யாக்கோபின் கோத்திரங்களை எழுப்பவும், இஸ்ராயேலில் எஞ்சினோரைத் திருப்பிக் கொணரவும், நமக்கு நீ ஊழியனாய் இருத்தல் பெரிதன்று. உலகத்தின் எல்லை வரையில் நமது மீட்பு எட்டும் படி, புறவினத்தார்க்கு ஒளியாக உன்னை ஏற்படுத்தினோம்."

7 மனிதரால் நிந்தித்துப் புறக்கணிக்கப்பட்டுப் புறவினத்தாரால் அருவருத்துத் தள்ளப்பட்டவனும், மன்னர்களுக்கு ஊழியனுமானவனுக்கு இஸ்ராயேலின் மீட்பரும், அதன் பரிசுத்தருமாகிய ஆண்டவர் கூறுகிறார்: "பிரமாணிக்கமுள்ள ஆண்டவரை" முன்னிட்டும், உன்னைத் தேர்ந்து கொண்ட இஸ்ராயேலின் பரிசுத்தரை முன்னிட்டும், அரசர்கள் உன்னைக் கண்டு எழுந்திருப்பார்கள், தலைவர்கள் உன் முன் விழுந்து வணங்குவார்கள்."

8 ஆண்டவர் கூறுகிறார்: "உகந்த காலத்தில் உன் மன்றாட்டைக் கேட்டருள்வோம், மீட்பின் நாளில் உனக்கு உதவி புரிவோம்; உன்னைக் காத்தோம், மக்களுக்கு உடன்படிக்கையாய் உன்னை ஏற்படுத்தினோம்; உலகத்திற்குப் புத்துயிர் தரவும், சிதறுண்ட உரிமைச் சொத்துகளை உடைமையாக்கவும்,

9 விலங்கிடப்பட்டவர்களைப் பார்த்து, 'வெளியே வாருங்கள்' என்று சொல்லவும், இருளில் இருப்பவர்களை நோக்கி, 'வெளிச்சத்திற்கு வாருங்கள்' என்று சொல்லவும் ஏற்படுத்துவோம். அப்போது வழிகளில் தாராளமாய் நம் ஆடுகள் மேயும், எல்லாச் சமவெளிகளிலும் அவை மேய்ச்சலைக் காணும்.

10 பசி தாகத்தால் அவை வருந்தமாட்டா, வெப்பமும் வெயிலும் அவற்றைத் தாக்கமாட்டா; ஏனெனில் அவற்றின் மேல் இரக்கமுள்ளவர் அவற்றைக் கண்காணித்து நடத்துவார்; நீரூற்றுகளுக்கு அவற்றைக் கூட்டிச் செல்வார்.

11 நம்முடைய மலைகளை யெல்லாம் சமபாதையாக்குவோம், நம்முடைய வழிகள் யாவும் உயர்த்தப்படும்.

12 இதோ, இவர்கள் தொலைவிலிருந்து வருவர், இதோ, அவர்கள் வடக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும், மற்றவர்கள் தென் திசையினின்றும் வருவார்கள்."

13 வானமே அக்களித்து ஆர்ப்பரி, மண்ணுலகே மகிழ்ந்து துள்ளு; மலைகளே, மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்யுங்கள்; ஏனெனில் ஆண்டவர் தம் மக்களைத் தேற்றினார், தம் எளியார் மட்டில் இரக்கங் கொள்வார்.

14 சீயோன் மகளோ, "ஆண்டவர் என்னைக் கைவிட்டு விட்டார், ஆண்டவர் என்னை மறந்து போய் விட்டார்" என்றாள்.

15 பெற்ற தாய்க்கு அன்பு வற்றிப் போகுமோ? பால் குடிக்கும் குழந்தையை அவள் மறப்பதுண்டோ? அப்படியே பெற்றவள் தன் பிள்ளையை மறந்து விட்டாலும், நான் உன்னை ஒரு போதும் மறக்க மாட்டோம்!

16 இதோ, நம்கைகளில் உன்னைப் பொறித்துள்ளோம், உன் பட்டணத்து மதில்கள் நம் கண் முன் எப்போதும் இருந்து கொண்டிருக்கும்.

17 உன்னை மறுபடியும் கட்டுகிறவர்கள் விரைந்து வருகிறார்கள், உன்னை நாசஞ் செய்து சிதறடித்தோர் உன்னை விட்டுப் போகிறார்கள்.

18 உன் கண்களை ஏறெடுத்துச் சுற்றிலும் பார், யாவரும் ஒன்றுகூடி உன்னிடம் வருகிறார்கள்; - நம் உயிர் மேல் ஆணை! என்கிறார் ஆண்டவர் - இவர்களெல்லாம் உனக்கு அணிகலனாய் இருப்பார்கள், மணப்பெண் போல் இவர்களால் உன்னை அழகு செய்வாய்.

19 உன்னில் கைவிடப்பட்ட இடங்களும், உன்னுடைய பாழடைந்த நிலங்களும், உன்னுடைய இடிந்து போன மனைகளும் குடியிருக்க வரும் கும்பலுக்கு நெருக்கமாயிருக்கும்; உன்னை விழுங்கினவர் தொலைவாகத் துரத்தப்படுவர்.

20 கைவிடப்பட்டவளாய் நீ இருந்த போது உனக்குப் பிறந்தவர்கள் உன்னிடத்தில் காதோடு காதாய் 'எனக்கு இடம் நெருக்கமாய் இருக்கிறது, குடியிருக்க எனக்கு இட வசதி செய்' என்பார்கள்.

21 அப்போது நீ உன் இதயத்தில் சொல்வாய்: 'எனக்கு இந்தப் பிள்ளைகளைப் பெற்று கொடுத்தது யார்? நான் மலடியாயும் பிள்ளை பெறாதவளாயும் இருந்தேன், நாடு கடத்தப்பட்டு அடிமையாய் இருந்தேன், இவர்களை வளர்த்து வந்தது யார்? நானோ திக்கற்றவளாயும் தனியளாயும் இருந்தேன், இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்"

22 கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: "இதோ, புறவினத்தாரை நோக்கி நமது கையை நீட்டுவோம், மக்களினங்களுக்கு நம் கொடியை உயர்த்திக் காட்டுவோம்; அவர்கள் உன் புதல்வர்களைக் கைகளிலேந்திக் கொணர்வார்கள், உன் புதல்வியரைத் தோளின் மேல் தூக்கி வருவார்கள்.

23 அரசர்கள் உன் வளர்ப்புத் தந்தையர்களாயும், அரசிகள் உன் செவிலித் தாயாராகவும் இருப்பர்; முகம் தரையில் படிய உன்னை விழுந்து வணங்குவர், அவர்கள் உன் காலடியில் கிடப்பார்கள். அப்போது, நாமே ஆண்டவர் என்பதையும், நமக்காகக் காத்திருப்போர் அவமானமடையார் என்பதையும் நீ அறிந்து கொள்வாய்."

24 வல்லவனிடமிருந்து கொள்ளைப் பொருளைப் பறித்தல் இயலுமோ? வெற்றிவீரனிடம் சிறைப்பட்டவர்களைத் தப்புவிக்கக் கூடுமோ?

25 ஆனால் ஆண்டவர் கூறுகிறார்: "வல்லவனிடம் சிறைப்பட்டவர்கள் கூடப் பறிக்கப்படுவர், வெற்றி வீரனிடமிருந்து கொள்ளைப்பொருள் தப்புவிக்கப்படும். ஏனெனில் உன்னுடன் போராடுகிறவர்களோடு நாமும் போராடுவோம், உன்னுடைய மக்களை நாம் திண்ணமாய் மீட்போம்.

26 உன் எதிரிகள் தங்கள் சதையையே பிடுங்கித் தின்னும்படி செய்வோம்; சொந்த இரத்தத்தையே புது இரசம் போலக் குடித்து வெறியேறும்படி செய்வோம்; அப்போது, எல்லா மனிதர்களும் உனக்கு மீட்பளிக்கும் ஆண்டவர் நாமே என்பதையும், உன்னை விடுவிப்பவர் யாக்கோபின் வல்லவர் என்பதையும் அறிந்து கொள்வர்."

அதிகாரம் 50

1 ஆண்டவர் கூறுகிறார்: "உங்கள் தாயைத் தள்ளி விடுவதற்காக நாம் எழுதிய மணமுறிவுச் சீட்டு எங்கே? உங்களை விற்று விடும்படிக்கு நமக்குக் கடன் கொடுத்தவன் எவன்? இதோ, உங்கள் அக்கிரமங்களால் தான் விற்கப்பட்டீர்கள், உங்கள் பாவங்களுக்காகவே உங்கள் தாயைத் தள்ளி விட்டோம்.

2 ஏனெனில் நாம் வந்த போது, ஒருவனையும் காணோமே! நாம் அழைத்த போது, ஒருவனும் பதில் தரவில்லையே! உங்களை மீட்க முடியாத அளவுக்கு நமது கை குறுகிச் சிறியதாகி விட்டதோ? உங்களை மீட்க நமக்கு ஆற்றல் இல்லையோ? இதோ, நமது பயமுறுத்தலால் கடலை மணல் திடலாக்குவோம், ஆறுகளை வற்றிப் போகச் செய்வோம்; தண்ணீரில்லாமல் மீன்கள் நொந்து போகும், தாகத்தினால் யாவும் செத்துப் போகும்.

3 வான்வெளியை இருளால் போர்த்துவோம், அதற்குப் போர்வையாய்க் கம்பளியாடையைத் தருவோம்."

4 களைத்தவனை வார்த்தையால் ஊக்கும்படி, கற்றதையுணர்த்தும் நாவை ஆண்டவர் எனக்களித்தார்; நாடோறும் காலையில் என்னை எழுப்புகிறார்; எழுப்பி, ஆசானுக்குச் செவி மடுப்பது போல் அவருக்கும் செவிமடுக்கும்படி என் செவிப்புலனைத் தூண்டுகிறார்.

5 கடவுளாகிய ஆண்டவர் என் காதுகளைத் திறந்தார், நானோ அவரை எதிர்த்துப் பேசவில்லை, அவரை விட்டுப் பின்வாங்கிப் போகவில்லை.

6 துன்புறுத்துகிறவர்களுக்கு என் உடலைக் கையளித்தேன், தாடியைப் பிய்க்கிறவர்களுக்கு என் கன்னங்களைக் காட்டினேன்; நிந்தை கூறுவோர்க்கும், காறி உமிழ்வோர்க்கும், என் முகத்தை மறைத்துக் கொள்ளவில்லை.

7 கடவுளாகிய ஆண்டவர் எனக்குத் துணை நிற்கிறார், ஆதலால் நான் கலக்கம் கொள்ளேன்; ஆதலால் என் முகத்தைக் கருங்கல் போல வைத்துக் கொண்டேன், அதற்காக வெட்கப்படேன் என்பது எனக்குத் தெரியும்.

8 என் சார்பில் தீர்ப்பு வழங்குபவர் அருகில் நிற்கிறார், எனக்கு எதிராய் வழக்குத் தொடுப்பவன் எவன்? நடுவர் முன் ஒருமிக்க எழுந்து நிற்போம். என் மேல் குற்றம் சுமத்துகிறவன் யார்? அவன் என்னை அணுகி வரட்டும்.

9 இதோ, கடவுளாகிய ஆண்டவர் எனக்குத் துணை நிற்கிறார், என்னைக் குற்றவாளியெனத் தீர்ப்பிடுகிறவன் யார்? இதோ, பழைய ஆடை போல் அனைவரும் நைந்து போவார்கள், அரிபுழுக்கள் அவர்களைத் தின்று விடும்.

10 ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவன் உங்களுள் எவன்? அவருடைய ஊழியன் பேச்சைக் கேட்பவன் யார்? ஒளியில்லாமல் இருளில் நடக்கிறவன் எவனோ, அவன் ஆண்டவரின் பெயரில் நம்பிக்கை வைக்கட்டும், தன் கடவுளின் மேல் ஊன்றியிருக்கட்டும்.

11 இதோ, நெருப்பு மூட்டிய நீங்கள் அனைவரும், தீயின் தழலால் சூழப்பட்ட நீங்கள் யாவரும், உங்கள் நெருப்பின் வெளிச்சத்திலேயே நடங்கள், நீங்கள் மூட்டிய தீயின் ஒளியிலேயே போங்கள்; நமது கையின் வல்லமையாலேயே உங்களுக்கு இது நடக்கும், வேதனைகளின் நடுவில் உறங்கிக் கிடப்பீர்கள்.

அதிகாரம் 51

1 நீதியைக் கடைப்பிடித்து ஆண்டவரைத் தேடுகிறவர்களே, நமக்குச் செவிகொடுங்கள்; நீங்கள் எந்தப் பாறையினின்று செதுக்கப்பட்டீர்களோ, எந்தக் குழியினின்று வெட்டியெடுக்கப் பட்டீர்களோ, அவற்றைச் சிந்தித்துப் பாருங்கள்.

2 உங்கள் தந்தை ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற சாராவையும் கருதுங்கள்; தனியனாய் அவனை அழைத்தோம், ஆனால் ஆசிர்வதித்துப் பலுகச் செய்தோம்.

3 ஆம், ஆண்டவர் சீயோனுக்கு ஆறுதல் தருவார், பாழடைந்த அந்நகரத்துக்கு ஆறுதல் தருவார்; அதனுடைய பாழ்வெளியை இன்பமான இடமாக்குவார், அதன் பாலை நிலத்தை ஆண்டவரின் சோலையாய் மாற்றுவார்; அக்களிப்பும் மகிழ்ச்சியும் எப்பக்கமும் காணப்படும், நன்றியறிதல் பாடலும் புகழொலியும் கேட்கப்படும்.

4 நம் மக்களே, நமக்குச் செவிசாயுங்கள், நம் இனத்தாரே, நமது வார்த்தையைக் கேளுங்கள்; ஏனெனில் திருச்சட்டம் நம்மிடமிருந்தே புறப்படும், நமது நீதி மக்களினங்களுக்கு ஒளியாய் விளங்கும்.

5 நாம் தரும் விடுதலை அருகில் இருக்கிறது, நாம் அளிக்கும் மீட்பு வந்துகொண்டிருக்கிறது; நம்முடைய கைவன்மை மக்களினங்களுக்குத் தீர்ப்பு வழங்கும், தீவுகள் நம்மை எதிர்பார்த்திருக்கின்றன, நம்முடைய வல்லமைக்காகக் காத்திருக்கின்றன.

6 வானத்தை நோக்கிக் கண்களை உயர்த்திப் பாருங்கள், பூமியை நோக்கிப் பார்வையைத் தாழ்த்துங்கள்; ஏனெனில் வானம் புகை போல மறைந்து போகும், பூமி பழந்துணிபோல நைந்து போகும்; அதன் குடிகளும் இவற்றைப்போல் அழிந்து போவர், நாம் அளிக்கும் மீட்போ என்றென்றும் நிலைத்திருக்கும், நாம் வழங்கும் விடுதலைக்கு முடிவே இராது.

7 நீதியை உணர்ந்திருக்கும் மக்களே, நம் திருச்சட்டம் எழுதப்பட்ட இதயத்தைக் கொண்டவர்களே, நாம் சொல்வதைக் கேளுங்கள்: மனிதர்களின் நிந்தைக்கு அஞ்சவேண்டா, அவர்களுடைய பழிப்புரைக்குக் கலங்க வேண்டா.

8 ஏனெனில், ஆடையைப் போல் அவர்களைப் பூச்சிகள் தின்னும், ஆட்டு மயிரைப் போல் அவர்களை அரி புழுக்கள் தின்று விடும். நாம் அளிக்கும் விடுதலை என்றென்றைக்கும் இருக்கும், நாம் தரும் மீட்பு தலைமுறை தலைமுறையாய் நிலைக்கும்."

9 ஆண்டவரின் புயமே, விழித்தெழு, விழித்தெழு, ஆற்றலை அணிந்துகொள்: பண்டை நாட்களில் கிளம்பியது போல முந்தின தலைமுறைகளில் எழுந்தது போல விழித்தெழு. ராகாபை முன்னாளில் சிதைத்து வாட்டியதும், பறவை நாகத்தை ஊடுருவக் குத்தியதும் நீ தானன்றோ?

10 பாதாளம் வரை ஆழமான கடல்நீரை வற்றச் செய்து, மீட்கப்பட்டவர்கள் கடக்கும்படி கடலின் ஆழத்தில் வழியமைத்ததும் நீ தானன்றோ?

11 அவ்வாறே இப்பொழுதும் ஆண்டவரால் மீட்கப்பட்டவர்கள் மகிழ்ச்சியாய்ப் பாடிக்கொண்டு சீயோனுக்குத் திரும்புவார்கள்; முடிவில்லா மகிழ்ச்சி அவர்களுக்கு மணிமுடியாகச் சூட்டப்படும், அக்களிப்பும் அகமகிழ்ச்சியும் அடைவார்கள்; துன்பமும் அழுகையும் ஒழிந்துபோம்.

12 நாமே, நாமே உங்களைத் தேற்றுவோம், சாகக்கூடிய மனிதனுக்கு நீ அஞ்சுவானேன்? புல்லைப் போல் உலர்ந்து போகும் மனிதனுக்குப் பயப்படுவானேன்?

13 வானத்தை விரித்து மண்ணுலகை நிலைநாட்டி, உன்னையும் படைத்த ஆண்டவரை நீ மறந்தாயோ? உன்னைத் துன்புறுத்தி, உன்னை அழிக்கத் தேடியவனின் கோபத்தின் முன் நாள் முழுதும் இடை விடாது நடுங்கினாயே; இப்போது அந்தக் கொடியவனின் கோபம் எங்கே?

14 சிறைப்பட்டவர்களை மீட்க வருகிறவர் காலந்தாழ்த்தாமல் விரைந்து வருகிறார்; ஆகவே அவர்கள் செத்துப் படுகுழிக்குப் போகமாட்டார்கள்; அவர்களுக்கு உணவு இல்லாமற் போகாது.

15 ஆனால் நாமே உன் கடவுளாகிய ஆண்டவர்; கடலைக் கலக்கி அலைகள் எழச் செய்பவர் நாமே; சேனைகளின் ஆண்டவர் என்பது நமது பெயர்.

16 உன் வாயில் நம் வார்த்தைகளை ஊட்டினோம்; வான்வெளியை விரித்து, மண்ணுலகை நிலைநாட்டிய போதும், சீயோனை நோக்கி 'நீங்கள் நம் மக்கள்' என்று சொன்ன போதும் நமதுகையின் நிழலில் உன்னைப் பாதுகாத்தோம்."

17 எழுந்திரு, எழுந்திரு, ஆண்டவரின் கையிலிருந்து அவரது கோபத்தின் கிண்ணத்தைக் குடித்த யெருசலேமே, எழுந்து நில்; மயங்கி விழச் செய்யும் கிண்ணத்தின் அடிவரையில், கடைசித்துளி வரையில் குடித்தாய்.

18 அவள் பெற்ற பிள்ளைகள் அனைவருள்ளும் அவளைத் தாங்குபவன் எவனுமில்லை; அவள் வளர்த்த புதல்வர்கள் அனைவருள்ளும் அவளைக் கைதூக்கி விடுபவன் எவனுமில்லை.

19 இரண்டு தீமைகள் உனக்கு வந்து நேர்ந்தன: உன் மேல் அனுதாபம் கொள்பவன் யார்? கொடுமையும் அழிவும், பஞ்சமும் வாளும் வாட்டின; உனக்கு ஆறுதல் கொடுப்பவன் யார்?

20 உன் பிள்ளைகள் தரையில் வீழ்ந்தனர், வலையில் பட்ட கலைமான் போல் எல்லாத் தெருக்களின் முனைகளிலும் மூர்ச்சித்துக் கிடக்கிறார்கள்; ஆண்டவருடைய கோபத்திற்கும், உன் கடவுளின் தண்டனைக்கும் அவர்கள் ஆளாகிக் கிடக்கிறார்கள்.

21 ஏழ்மையானவளே, இரசத்தாலன்றித் துன்பத்தால் போதை வெறி கொண்டவளே, இதைக்கேள்.

22 தம் மக்களைப் பாதுகாக்கும் உன் இறைவனாகிய ஆண்டவர்- உன் கடவுள் கூறுகிறார்: "இதோ, உன்னை மயங்கி விழச்செய்யும் கிண்ணத்தை உன் கையினின்று எடுத்து விட்டோம்; நமது கோபத்தை அடிவரையில் குடித்த உன் கையினின்று அதை அகற்றி விட்டோம்; இனி நீ அதைக் குடிக்கும்படி நேராது.

23 நாங்கள் கடந்து போகும்படி நீ குப்புற விழுந்து கிட' என்று உன்னிடம் யார் சொன்னார்களோ, நீயும் உன் உடலைத் தரையாகவும், கடந்து செல்லும் வழியாகவும் யாருக்காக ஆக்கினாயோ, அவர்கள் கையில் - அவ்வாறு உன்ணைக் கொடுமைப் படுத்தியர்வர்கள் கையில், அந்தக் கிண்ணத்தைக் கொடுப்போம்."

அதிகாரம் 52

1 எழுந்திரு, சீயோனே எழுந்திரு, எழுந்து உன்னுடைய ஆற்றலை அணிந்து கொள்; பரிசுத்தரின் பட்டணமாகிய யெருசலேமே, உனது மகிமையின் ஆடைகளை உடுத்திக் கொள்; ஏனெனில் விருத்தசேதனம் செய்யாதவனும், தீட்டுப்பட்டவனும் உன் நடுவே போகும்படி இனி நேரிடாது.

2 அடிமையாய் அமர்ந்திருக்கும் யெருசலேமே, தூசியைத் தட்டி விட்டுத் துள்ளியெழு; கைதியாய்க் கிடக்கும் சீயோன் மகளே, உன் கழுத்துச் சங்கிலியை அறுத்து விடு.

3 ஏனெனில் ஆண்டவர் கூறுகிறார்: "விலையின்றி விற்கப்பட்டீர்கள்; பணமின்றியே மீட்கப்படுவீர்கள்.

4 ஏனெனில் கடவுளாகிய ஆண்டவர் மீண்டும் கூறுகிறார்: முன்னாளில் நம் மக்கள் அந்நியராய்க் குடியேறி வாழ்வதற்காக எகிப்துக்கு இறங்கிப் போனார்கள்; அசீரியன் காரணம் ஏதுமில்லாமலே அவர்களை வதைத்தான்;

5 இப்பொழுதோ காரணமின்றி நம் மக்கள் கொண்டு போகப்பட்ட பின், நமக்கு இங்கே என்ன வேலை, என்கிறார் ஆண்டவர். அவர்களை ஆளுகிறவர்கள் அநியாயமாய் நடக்கிறார்கள், நாள் முழுதும் இடைவிடாமல் நம் திருப்பெயரைப் பழித்துரைக்கிறார்கள், என்கிறார் ஆண்டவர்.

6 ஆகையால் நம் மக்கள் ஒரு நாள் நம் திருப்பெயரை அறிந்து கொள்வார்கள்; அப்போது அவர்கள், இதோ இருக்கிறோம் என்று சொன்னவர் நாமே என்பதைக் கண்டுபிடிப்பார்கள்."

7 நற்செய்தியை அறிவிக்கவும், சமாதானத்தைத் தெரிவிக்கவும், மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை அறிவிக்கவும், மீட்பைத் தெரிவிக்கவும், சீயோனைப் பார்த்து, "உன் கடவுள் அரசாளுகிறார்" என்று பறைசாற்றவும் வருகிறவருடைய மலரடிகள் மலைகள் மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன!

8 இதோ, உன் சாமக்காவலர் குரல் கேட்கிறது, அவர்கள் தம் குரலை உயர்த்தி மகிழ்ச்சியோடு ஆர்பரிக்கிறார்கள்; ஏனெனில் ஆண்டவர் சீயோனுக்குத் திரும்பி வருவதை நேருக்கு நேராய்க் காண்கிறார்கள்.

9 யெருசலேமின் பாழடைந்த இடங்களே, நீங்கள் அனைவரும் அக்களித்து ஆர்ப்பரியுங்கள்; ஏனெனில், ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் தந்தார், யெருசலேமை அவர் மீட்டருளினார்.

10 மக்களினங்கள் அனைத்தின் கண்களுக்கும், ஆண்டவர் தம் பரிசுத்த கைவன்மையைக் காட்டினார். உலகின் கடைக் கோடி நாடுகள் எல்லாம், நம் கடவுள் தரும் மீட்பைக் காணப்போகின்றன.

11 வெளியேறுங்கள், வெளியேறுங்கள், பபிலோனிலிருந்து புறப்படுங்கள், தீட்டானதொன்றையும் தொடாதீர்கள்; அந்நாட்டினின்று புறப்பட்டு வெளியேறுங்கள், ஆண்டவருடைய பாத்திரங்களைத் தாங்கி நிற்பவர்களே, உங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.

12 நீங்கள் விழுந்தடித்து அவசரமாய்ப் புறப்பட மாட்டீர்கள், ஓட்டம் ஓட்டமாய் ஓடவும் மாட்டீர்கள்; ஏனெனில் ஆண்டவர் உங்களுக்கு முன்னால் நடப்பார், இஸ்ராயேலின் கடவுள் காவற்படை போல் உங்களைப் பின்தொடர்வார்.

13 இதோ, நம் ஊழியன் சிறப்படைவார், உயர்த்தப்படுவார், மேலோங்குவார், மிக உன்னதராவார்;

14 பலபேர் அவரைக் கண்டு திடுக்கிட்டார்கள்- அவரது தோற்றம் அவ்வளவு சீர்குலைந்திருந்தது, மனித சாயலே அவரிடம் இல்லை- மனிதர்களின் வடிவே அவரிடம் காணப்படவில்லை.

15 அதே அளவுக்கு மக்களினங்கள் பல திடுக்கிடும், அரசர்களும் அவரைப் பார்த்து, வாய்பொத்தி நிற்பர்; ஏனெனில் சொல்லப்படாத ஒன்றைக் காண்பார்கள், இதுவரை கேட்டிராத ஒன்றைப் பார்ப்பார்கள்.

அதிகாரம் 53

1 நாம் கேள்விப்பட்டதை யார் நம்பியிருக்கக் கூடும்? ஆண்டவரின் கைவன்மை யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?

2 இளந்தளிர் போல் அவர் வளர்ந்தார், வறண்ட நிலத்திலிருக்கும் வேர் போலத் துளிர்த்தார்; அவரைப் பார்த்தோம், அவரிடம் அழகோ அமைப்போ இல்லை; கவர்ச்சியான தோற்றமும் இல்லை.

3 இகழப்பட்டவர், மனிதரால் புறக்கணிக்கப்பட்டவர்; அவர் துன்புறும் மனிதனாய் துயரத்திலாழ்ந்தவராய் இருந்தார்; கண்டோர் கண் மறைத்து அருவருக்கும் ஒரு மனிதனைப் போல், அவர் இகழப்பட்டார், நாம் அவரை மதிக்கவில்லை.

4 மெய்யாகவே அவர் நம் பிணிகளை ஏற்றுக் கொண்டார், நம்முடைய நோய்களைச் சுமந்துகொண்டார்; ஆனால் அவர் தண்டனைக்குள்ளானவர் எனவும், கடவுளால் ஒறுக்கப்பட்டவர் எனவும், வாதிக்கப் பட்டவர் எனவும் நாம் எண்ணினோம்.

5 ஆனால் நம் பாவங்களுக்காகவே அவர் காயப்பட்டார், நம் அக்கிரமங்களுக்காகவே அவர் நொறுக்கப்பட்டார்; நம்மை நலமாக்கும் தண்டனை அவர் மேல் விழுந்தது, அவருடைய காயங்களால் நாம் குணமடைந்தோம்.

6 ஆடுகளைப் போல நாம் அனைவரும் வழி தவறி அலைந்தோம், கால் போன வழியே ஒவ்வொருவரும் போனோம்; நம் அனைவருடைய அக்கிரமங்களையும் ஆண்டவர் அவர் மேல் சுமத்தினார்.

7 அவர் கொடுமையாய் நடத்தப்பட்டார்; தாழ்மையாய் அதைத் தாங்கிக்கொண்டார்; அவர் வாய்கூடத் திறக்கவில்லை; கொல்வதற்காக இழுத்துச் செல்லப்படும் ஆட்டுக்குட்டிபோலும், மயிர் கத்தரிப்போன் முன்னிலையில் கத்தாத செம்மறியாடு போலும் அவர் வாய் திறக்கவில்லை.

8 கொடிய தீர்ப்புக்குப் பின் அவர் கொண்டு செல்லப்பட்டார், அவருக்கு நேர்ந்ததைப் பற்றி அக்கறை கொண்டவன் யார்? ஆம், அவர் வாழ்வோர் உலகினின்று எடுக்கப்பட்டார், தம் இனத்தாரின் அக்கிரமங்களுக்காகவே அவர் வதைக்கப்பட்டார்.

9 பொல்லாதவர்களோடு அவருக்குக் கல்லறை தந்தார்கள், சாகும் போது அவர் தீமை செய்கிறவர்களோடு இருந்தார்; ஆயினும் வன்முறைச் செயல் ஏதும் அவர் செய்தவர் அல்லர், அவருடைய வாயில் பொய்யே வந்ததில்லை.

10 அவரை வேதனையிலாழ்த்தி நொறுக்க ஆண்டவர் விரும்பினார். தம்மையே பாவத்திற்காக அவர் பலியாக்கினால், பெரியதொரு சந்ததியைக் கண்டு நீடுவாழ்வார்; ஆண்டவரின் திருவுளம் அவர் கையால் நிறைவேறும்.

11 தம் ஆன்மா பட்ட வேதனையின் பலனை அவர் கண்டு நிறைவு கொள்வார்; நம் ஊழியனாகிய அந்த நீதிமான் தமது அறிவினால் பலரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்து கொள்வார்.

12 ஆதலால் பலபேரை அவருக்கு நாம் பங்காகத் தருவோம், அவரும் வல்லவர்களோடு கொள்ளைப் பொருளைப் பங்கிட்டுக் கொள்வார்; ஏனெனில் சாவுக்குத் தம் ஆன்மாவைக் கையளித்தார், பாவிகளுள் ஒருவனாய்க் கருதப்பட்டார்; ஆயினும் பலருடைய பாவத்தைத் தாமே சுமந்து கொண்டு பாவிகளுக்காகப் பரிந்து பேசினார்.

அதிகாரம் 54

1 பிள்ளை பெறாத மலடியே, மகிழ்ச்சியால் கூச்சலிடு! பிரசவ வேதனையுறாத மங்கையே, அக்களித்து ஆர்ப்பரி! ஏனெனில் கைவிடப்பட்டவளின் மக்கள் கணவனைக் கொண்டுள்ளவளின் மக்களை விடப் பலராயினர், என்கிறார் ஆண்டவர்.

2 உன் கூடாரத்தின் இடத்தை அகலப்படுத்து, உன் கூடாரத் துணிகளைத் தாராளமாய் விரித்து விடு; இன்னும் கயிறுகளை நீளமாக்கு, கயிறு கட்டும் முளைகளை உறுதிப்படுத்து.

3 நீ வலப்புறம் இடப்புறமாய்ப் பெருகி விரிவாய், உன் சந்ததியார் மக்களினங்களை உடைமையாக்கிக் கொள்வர்; பாழடைந்த நகரங்களில் குடியேறி வாழ்வர்.

4 அஞ்சாதே, ஏனெனில் நீ அவமானம் அடையமாட்டாய், கலங்காதே, ஏனெனில் நீ வெட்கத்துக்கு உள்ளாகமாட்டாய்; உன் இளமையின் வெட்கத்தை மறந்துவிடுவாய், உன் கைம்மையின் நிந்தையை இனி நினைக்கமாட்டாய்;

5 ஏனெனில் உன்னைப் படைத்தவரே உனக்குக் கணவன், சேனைகளின் ஆண்டவர் என்பது அவர் பெயர்; இஸ்ராயேலின் பரிசுத்தரே உன் மீட்பர், உலகுக்கெல்லாம் கடவுள் என அழைக்கப்படுகிறார்.

6 ஏனெனில், கைவிடப்பட்டு மனம் நொந்தவளான மனைவியை அழைப்பது போலும், இளமை முதலே துணைவியாய் இருந்த ஒருத்தியை மணமுறிவுக்குப் பின் அழைப்பது போலும் ஆண்டவர் உன்னை அழைக்கிறார், என்கிறார் உன்னுடைய கடவுள்.

7 குறுகிய காலந்தான் நாம் உன்னைக் கைவிட்டோம், ஆனால் மிகுந்த இரக்கத்தோடு உன்னைச் சேர்த்துக் கொள்வோம்.

8 பொங்கிய கோபத்தில் ஒரு நொடிப் பொழுது உன்னிடமிருந்து நம் முகத்தைத் திருப்பிக் கொண்டோம்; ஆயினும், முடிவில்லாத அன்போடு உன் மேல் இரக்கம் கொள்வோம், என்கிறார் உன் மீட்பராகிய ஆண்டவர்.

9 நோவே நாட்களில் நாம் செய்தது போல் இன்றும் செய்வோம்; நோவே காலத்துப் பெருவெள்ளம் இனி மேல் மண்ணுலகை மூழ்கடிக்காது என்று ஆணையிட்டுச் சொன்னது போல், உன் மேல் சினங்கொள்ளவே மாட்டோம் என்றும், உன்னைக் கண்டனம் செய்யமாட்டோம் என்றும் ஆணையிட்டு உனக்கும் சொல்லியுள்ளோம்.

10 மலைகள் நிலைபெயரலாம், குன்றுகள் அசைந்து போகலாம், ஆனால் உன்மீது நாம் கொண்ட அன்பு நிலை பெயராதிருக்கும்; நம் சமாதானத்தின் உடன்படிக்கை அசையாதிருக்கும், என்கிறார் உன் மேல் இரக்கம் கொள்ளும் ஆண்டவர்.

11 புயலால் அலைக்கழிக்கப்பட்டு ஆறுதலின்றித் தவிக்கும், ஏழைப் பெண்ணான யெருசலேமே, இதோ நாமே உன் கற்களை மாணிக்கங்கள் மேல் அடுக்குவோம்; உனக்கு நீலக் கற்களால் அடிப்படை இடுவோம்.

12 உன் கோட்டைச் சுவரின் முகடுகளைச் சலவைக் கற்களாலும், உன் வாயில்களைப் பளிங்குக் கற்களாலும், உன் சுவர்களையெல்லாம் விலையுயர்ந்த கற்களாலும் கட்டுவோம்.

13 உன் மக்கள் அனைவருக்கும் ஆண்டவரே போதிப்பார், உன் புதல்வர்களுக்கு நிரம்பச் சமாதானம் இருக்கும்.

14 நீதியில் நீ நிலைநாட்டப் படுவாய், கொடுமை அகன்று போம், நீ அஞ்சமாட்டாய், பயம் ஒழிந்திருப்பாய், அது உன்னை அணுகாது.

15 எவனாவது போர்புரிய வந்தால், அவன் நம்மால் தூண்டப்பட்டு வரமாட்டான்; உன்னோடு எவனெவன் போர் தொடுப்பானோ அவனெல்லாம் உன் பொருட்டு வீழ்ச்சியடைவான்.

16 இதோ, தீயில் கரிகளைப் போட்டு ஊதி வேலை செய்து, போர்க்கருவி செய்யும் கொல்லனை நாமே படைத்தோம்; பாழாக்க வரும் கொலைகாரணையும் நாமே உண்டாக்கினோம்.

17 உனக்கு விரோதமாய்த் தயாரிக்கப்பட்ட படைக்கலம் உன்மேல் பயன்படுத்தப்படாது; உனக்குத் தண்டனை விதிக்க வழக்காடும் நாவை நீயே கண்டனம் செய்து அடக்கி விடுவாய். ஆண்டவருடைய ஊழியர்களின் உரிமைச் சொத்தும் அவர்களுக்கு எம்மிடம் கிடைக்கும் நீதியும் இதுவே, என்றார் ஆண்டவர்.

அதிகாரம் 55

1 தாகமாயிருப்பவர்களே, அனைவரும் நீரருகில் வாருங்கள், கையில் பணமில்லாதவர்களே, விரைந்து வந்து வாங்கிச் சாப்பிடுங்கள்! வாருங்கள், பணமுமின்றி விலையுமின்றி திராட்சை இரசமும் பாலும் வாங்கிப் பருகுங்கள்!

2 அப்பமல்லாத ஒன்றுக்காகப் பணஞ் செலவிடுவானேன்? உங்களுக்கு நிறைவு தராத ஒன்றுக்காக உழைப்பானேன்? நாம் சொல்வதைக் கவனமாய்க் கேளுங்கள்; அப்போது சுவையானதை உண்பீர்கள், கொழுப்புள்ளதைப் புசித்து மகிழ்வீர்கள்.

3 செவிசாயுங்கள், நம்மிடம் வாருங்கள்; நாம் சொல்வதைக் கேளுங்கள், நீங்கள் வாழ்வீர்கள்; "தாவீதுக்கு நாம் வாக்களித்த அருள் வரங்களை நிலைப்பிக்க, உங்களோடு முடிவில்லா உடன்படிக்கை செய்து கொள்வோம்.

4 இதோ, மக்களுக்கு அவரைச் சாட்சியாகவும், புறவினத்தார்க்குத் தலைவராகவும் ஆளுநராகவும் ஏற்படுத்தினோம்.

5 யெருசலேமே, இதோ, நீ அறியாத மக்களைக் கூப்பிடுவாய், உன்னை அறிந்திராத இனத்தார், உன்னை மகிமைப்படுத்திய இஸ்ராயேலின் பரிசுத்தரும், உன் கடவுளுமாகிய ஆண்டவரை முன்னிட்டு உன்னிடம் ஓடி வாருவார்கள்.

6 ஆண்டவர் அருகிலும் தொலைவிலும் இருக்கிறார்: "ஆண்டவரைக் கண்டடையக் கூடிய போதே, அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும் போதே, அவரைக் கூவியழையுங்கள்

7 தீயவன் தன் தீநெறியையும், அநீதன் தன் எண்ணங்களையும் தள்ளிவிட்டு, ஆண்டவரிடம் திரும்பி வரட்டும், அவன் மேல் அவர் இரக்கம் காட்டுவார்; நம்முடைய கடவுளிடம் வரட்டும், ஏனெனில் மன்னிப்பு வழங்குவதில் அவர் வள்ளல்.

8 நம்முடைய எண்ணங்கள் உங்கள் எண்ணங்களல்ல, நம்முடைய வழிகள் உங்கள் வழிகளல்ல, என்கிறார் ஆண்டவர்.

9 மண்ணிலிருந்து விண் மிக உயர்ந்திருப்பது போல் உங்கள் வழிகளை விட நம்முடைய வழிகளும், உங்கள் எண்ணங்களை விட நம்முடைய எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன.

10 மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்திற்குத் திரும்பாமல், நிலத்தை நனைத்து, செழிப்பாக்கி, அதில் முளை கிளம்பி விளையும்படி செய்து, விதைப்பவனுக்கு விதையும், உண்பவனுக்கு உணவும் தருகிறது.

11 அவ்வாறே, நம் வாயினின்று புறப்படும் வார்த்தையும் இருக்கும்; அது பயன் தராமல் நம்மிடம் திரும்பாது; நாம் விரும்பியதையெல்லாம் செய்து முடிக்கும்; எதற்காக நாம் அதை அனுப்பினோமோ, அதை நிறைவேற்றும்.

12 நீங்கள் மகிழ்ச்சியோடு புறப்படுவீர்கள், சமாதானத்தில் நடத்திச் செல்லப் படுவீர்கள்; மலைகளும் குன்றுகளும் உங்கள் முன் புகழ்பாடும், காட்டு மரங்களெல்லாம் கைகொட்டி ஆர்ப்பரிக்கும்.

13 முட்செடிக்குப் பதிலாய்த் தேவதாரு முளைக்கும், காஞ்சொறிக்குப் பதிலாய் நறுமணச்செடி கிளம்பும்; இச்செயல் ஆண்டவர்க்குப் புகழ் தேடிக் கொடுக்கும், முடிவில்லா அடையாளமாய் என்றென்றும் நிலைக்கும்."

அதிகாரம் 56

1 ஆண்டவர் கூறுகிறார்: "நீதியைக் கடைப்பிடியுங்கள், நேர்மையானதைச் செய்யுங்கள்; ஏனெனில் நாம் தரப்போகும் மீட்பு அண்மையில் இருக்கிறது, நமது நீதி வெளியாகப் போகிறது.

2 இவ்வாறு செய்கிறவன் பேறு பெற்றவன்; இதைக் கைக்கொண்டு ஓய்வு நாளை அவசங்கை செய்யாமல் அதைக் கடைப் பிடித்து, எவ்வகையிலும் தீமை செய்யாமல் தன் கைகளைக் காத்துக்கொள்ளுகிற மனிதனும் பேறு பெற்றவன்!"

3 ஆண்டவரை அணுகி வரும் அந்நியன், "தம் மக்களிடமிருந்து திண்ணமாய் ஆண்டவர் என்னைப் பிரித்து விடுவார்" என்று சொல்லாதிருக்கட்டும்; அவ்வாறே அண்ணகனும், "இதோ, நான் பட்ட மரந்தானே" என்று கூறாதிருக்கட்டும்.

4 ஏனெனில் ஆண்டவர் கூறுவது இதுவே: "நமது ஓய்வு நாளைக் கடைப்பிடித்து, நமக்குகந்தவற்றையே தேர்ந்து கொண்டு, நமது உடன்படிக்கையை உறுதியாய்ப் பற்றியிருக்கும் அண்ணகர்களுக்கு,

5 நமது கோயிலுக்குள் நம் சுற்றுக் கட்டடங்களில் ஓர் இடமும், மனிதர்களின் புதல்வர், புதல்வியரின் பெயர்களிலும் சிறந்ததொரு பெயரும் கொடுப்போம்; ஒருபோதும் அழியாத, முடிவில்லாத பெயரை அவர்களுக்குச் சூட்டுவோம்.

6 ஆண்டவரிடம் அவரை வழிபடுவதற்காக அணுகி வந்து, அவருடைய அடியார்களாய் இருக்கும்படி ஆண்டவரின் திருப்பெயர் மேல் அன்பு கூர்கிற அந்நியர்கள் ஓய்வு நாளை அவசங்கை செய்யாமல் அதைக் கடைப்பிடித்து நமது உடன்படிக்கையை உறுதியாய்ப் பற்றியிருந்தால் -

7 அவர்களை நமது பரிசுத்த மலைக்குக் கூட்டி வந்து, நம் செப வீட்டில் அவர்கள் மகிழ்ந்திருக்கச் செய்வோம்; நமது பீடத்தின் மேல் அவர்கள் தரும் தகனப் பலிகளும் மற்றப் பலிகளும் நமக்குகந்தவையாய் ஏற்கப்படும்; ஏனெனில் நம் வீடு எல்லா மக்களினங்களுக்கும் செப வீடு என வழங்கப்படும்.

8 இஸ்ராயேலில் சிதறிப் போனவர்களைக் கூட்டிச் சேர்க்கும் இறைவனாகிய ஆண்டவர் கூறுகிறார்: ஏற்கெனவே கூட்டிச் சேர்க்கப்பட்டவர்கள் தவிர, இன்னும் மற்றவர்களையும் அவர்களோடு கூட்டிச் சேர்ப்போம்."

9 வயல்வெளி மிருகங்களே, காட்டில் வாழும் விலங்குகளே, இரையை விழுங்க அனைவரும் வாருங்கள்;

10 நம் சாமக் காவலர்கள் யாவரும் குருடர்கள், அவர்கள் எல்லாரும் அறிவில்லாப் பேதைகள்; அவர்கள் அனைவரும் ஊமை நாய்கள், அவர்களுக்குக் குரைக்கத் தெரியாது; பகற்கனவு காண்பதிலும் படுத்துக் கிடப்பதிலும் தூங்கி விழுவதிலுமே விருப்பமுள்ளவர்கள்.

11 பேராசை கொண்ட ஈன நாய்கள், போதுமென்ற மனமே அவர்களுக்கில்லை; மேய்ப்பவர்களுக்குக் கூட கொஞ்சமும் அறிவில்லை, அனைவரும் தத்தம் போக்கில் நெறி தவறிப் போயினர்; பெரியவன் முதல் சிறியவன் வரையில் ஒவ்வொருவனும் தன் தன் ஆதாயத்தையே கருதுகிறான்.

12 வாருங்கள், திராட்சை இரசம் குடிப்போம், குடிவெறியால் நிரம்பப் பெறுவோம்; இன்று போலவே நாளைக்கும் குடிப்போம், இன்னும் மிகுதியாய்ப் பருகுவோம்" என்கிறார்கள்.

அதிகாரம் 57

1 நீதிமான் மடிந்து போகிறான், அதை எவனும் உள்ளத்தில் எண்ணிப் பார்ப்பதில்லை; இறையடியார்கள் இவ்வுலகினின்று எடுக்கப்படுகிறார்கள், அதை எவனும் கவனிக்கிறதில்லை; தீமை பெருகியிருப்பதால் நீதிமான் இவ்வுலகினின்று எடுக்கப்படுகிறான்;

2 சமாதானத்திற்குள் இடம் பெறுகிறான்; நேர்மையான நெறியில் நடக்கிறவர்கள் படுக்கையில் இளைப்பாறுகிறார்கள்.

3 மந்திரக்காரியின் மக்களே, வேசியின் சந்ததியே, விலைமகளின் பிள்ளைகளே, இங்கே வாருங்கள்;

4 யாரை நீங்கள் ஏளனம் செய்தீர்கள்? நாக்கை நீட்டி யாரை நையாண்டி செய்தீர்கள்? நீங்கள் துரோகத்தின் மக்கள் அல்லரோ? பொய்யில் முளைத்த சந்ததியல்லவா?

5 கருவாலிமரத் தோப்பினுள்ளும், தழையடர்ந்த மரம் ஒவ்வொன்றின் கீழும், காமத் தீயால் எரிகிறீர்கள்; மலையிடுக்குகளிலும், கற்பாறைகளின் பிளவுகளிலும், உங்கள் குழந்தைகளைக் கொன்று பலியிடுகிறீர்கள்.

6 நீரோடையின் கூழாங்கற்கள் நடுவில் தான் உன் பங்குள்ளது, அவையே உன் பாகம்; அவற்றுக்குத் தான் பானப் பலியை ஊற்றினாய், பலியையும் ஒப்புக் கொடுத்தாய்; இவற்றால் நமக்குக் கோபம் மூளாதோ?

7 உயர்ந்தெழுந்த மலையின் மேல் உன் மஞ்சத்தை விரித்தாய், அங்கும் பலிகளை ஒப்புக்கொடுக்க ஏறிப்போனாய்.

8 கதவுக்கும் கதவு நிலைக்குப் பின்னும் உன் நினைவுச் சிலையை வைத்தாய், நம்மைக் கைவிட்டு விட்டு உன் மஞ்சத்தைத் திறந்தாய்; விபசாரிகளுக்கு நீ நல்வரவு தந்தாய், உன் படுக்கையை விரிவுபடுத்தினாய்; அவர்களோடு ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டாய், அவர்கள் அவமானத்தை நோக்கினாய்.

9 மோலெக் தெய்வத்துக்காக உன்னை எண்ணெய் தடவி அழகுபடுத்தினாய், நறுமணத் தைலங்களை நிரம்பப் பூசிக்கொண்டாய்; தொலை நாடுகளுக்கு உன் தூதுவர்களை அனுப்பினாய், பாதாளம் வரையில் அவர்களை அனுப்பினாய்.

10 நெடுந்தொலைவுப் பயணம் செய்து களைத்திருந்தும், "போதும், ஓய்வெடுப்போம்" என்று நீ சொல்லவில்லை; உன் வலிமை புத்துயிர் பெற்றுவிட்டது, ஆகவே நீ சோர்ந்து போகவில்லை.

11 யாருக்காக நீ பயந்து நடுங்கிக் கொண்டு, நம்மைப் பொய் சொல்லி ஏமாற்றினாய்? நம்மைக் கொஞ்சமும் நினைவு கூரவில்லை? உன்னைப் பார்க்காதது போல நாம் மௌனமாயிருந்தால், நீ நமக்கு அஞ்சவில்லை!

12 உன் நீதி யாதென விளக்கிக் காட்டுவோம், உன்னுடைய செயல்கள் உனக்குப் பயன்படமாட்டா.

13 நீ கூவியழைக்கும் போது, நீ சேர்த்து வைத்திருக்கும் சிலைகள் உன்னை மீட்கட்டும்! அவற்றையெல்லாம் காற்று அடித்துப் போகும், மூச்சும் அவற்றை வாரிச் செல்லும், ஆனால் நம்மட்டில் நம்பிக்கை கொள்பவனோ பூமியை உரிமைச் சொத்தாய்ப் பெறுவான், நம் பரிசுத்த மலையை உடைமையாய்க் கொள்வான்.

14 அப்போது நாம்: "வழி விடுங்கள், பாதையைத் திறந்து விடுங்கள், நம் மக்களின் வழியிலிருக்கும் தடைகளையெல்லாம். அப்புறப்படுத்துங்கள், எடுத்து விடுங்கள்" என்போம்.

15 காலந்கடந்திருப்பவரும், மேன்மை தங்கிய உன்னதரும், பரிசுத்தர் என்னும் பெயரினருமானவர் கூறுகிறார்: "உயர்ந்ததும், பரிசுத்தமுமான இடமே நம் உறைவிடம்; ஆனால் பாவத்திற்காக வருந்தும் தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தினரோடும் நாம் குடிகொண்டிருக்கிறோம்; தாழ்மையுள்ளோரின் இதயத்தை ஊக்குவிக்கவும், மனஸ்தாபமுள்ளோரின் இதயத்தைத் திடப்படுத்தவுமே அவர்களோடு குடிகொண்டிருக்கிறோம்.

16 ஏனெனில் என்றென்றைக்கும் நாம் வழக்காட மாட்டோம், கடைசி வரையில் நாம் கோபமாய் இருக்க மாட்டோம்; இருப்போமாகில், ஆவியும் நாம் படைத்த ஆன்மாக்களும் நம் முன்னிலையில் மறைந்து போகுமே!

17 பேராசையாகிய அக்கிரமத்திற்காக நம் மக்கள் மேல் நாம் கோபங் கொண்டோம், அடித்து நொறுக்கினோம்; அவர்களிடமிருந்து நம் முகத்தைத் திருப்பிக் கொண்டு, அவர்கள் மேல் எரிச்சல் கொண்டிருந்தோம்; ஆனால் அவர்கள் நம்மை விட்டு விலகி மனம்போன போக்கிலேயே போனார்கள்.

18 அவர்களின் நடத்தையைக் கண்டோம், ஆயினும் அவர்களைக் குணப்படுத்துவோம்; திரும்பக் கூட்டி வந்து அவர்களுக்கும், அவர்களுக்காக அழுகிறவர்களுக்கும் ஆறுதல் அளிப்போம்.

19 அவர்கள் உதடுகளிலிருந்து புகழ் மொழிகள் உதிரச் செய்வோம்; சமாதானம்! தொலைவிலிருப்பவனுக்கும் அருகிலிருப்பவனுக்கும் சமாதானம்! அவர்களைக் குணமாக்குவோம், என்கிறார் ஆண்டவர்.

20 தீயவர்களோ பொங்கியெழும் கடல் போல் இருக்கிறார்கள்; அந்தக் கடல் அடங்கியிருக்காது, அதன் அலைகள் கரையில் அடித்து மோதிச் சேற்று நுரையைக் கக்குகிறது.

21 பொல்லாதவர்களுக்குச் சமாதானம் இல்லை, என்கிறார் என் கடவுள்."

அதிகாரம் 58

1 உரத்த குரலில் கத்திப் பேசு, நிறுத்தி விடாதே, எக்காளத்தைப் போல் உன் குரலை உயர்த்து; நம் மக்களுக்கு அவர்களுடைய அக்கிரமத்தை அறிவி, யாக்கோபின் வீட்டார்க்கு அவர்கள் பாவத்தைத் தெரிவி.

2 நீதியைக் கடைப்பிடிக்கும் மக்கள் போலவும், தங்கள் கடவுளின் கட்டளையைக் கைவிடாதவர்கள் போலவும் நடித்து, நாடோறும் நம்மைத் தேடுகிறார்கள், நீதியான முறைமைகளைப் பற்றி நம்மிடம் கேட்கிறார்கள், கடவுளை அணுகி வர விழைகிறார்கள்.

3 நாங்கள் உண்ணா நோன்பிருந்தோம், நீர் கண்ணோக்காததேன்? எங்களை நாங்களே ஒடுக்கினோம், நீர் அதை அறியாததேன்?' என்கிறார்கள். இதோ, நீங்கள் உண்ணா நோன்பிருக்கும் நாளிலும் உங்கள் விருப்பத்தையே தேடுகிறீர்கள்; உங்கள் கூலியாட்களை வாட்டி வதைக்கிறீர்கள்.

4 இதோ, நீங்கள் உண்ணா நோன்பிருக்கும் போது, சண்டை சச்சரவுகள் போட்டுப் பிறரை அநியாயமாய் அடிக்கிறீர்கள். இன்று வரை நீங்கள் நோன்பிருந்தது போல் இருந்தால், உங்கள் கூக்குரல் உன்னதத்திற்கு எட்டாது.

5 மனிதன் தன்னையே நாள் முழுவதும் வதைத்துக் கொள்வது தான் நமக்கு விருப்பமான நோன்பா? நாணலைப் போலத் தலை குணிவதும், கோணி ஆடையை உடுப்பதும், சாம்பலில் உட்காருவதுந்தான் நமக்கேற்ற நோன்பா? இதைத் தான் நோன்பென்றும், ஆண்டவருக்குகந்த நாளென்றும் சொல்லுகிறாயோ?

6 அக்கிரமத்தின் சங்கிலிகளை அறுத்துவிடு, அழுத்தியிறுத்தும் நுகத்தடிகளை இறக்கு; ஒடுக்கப்பட்டவர்களை உரிமை மக்களாய் விடுதலை செய், சுமையானதையெல்லாம் உடைத்தெறி;

7 பசித்திருப்பவனுக்கு உன் அப்பத்தைப் பகிர்ந்து கொடு, ஏழைகளுக்கும் அந்நியருக்கும் உன் வீட்டில் தங்குவதற்கு இடங்கொடு; ஆடையில்லாதவனைக் கண்டால் அவனைப் போர்த்து; உன் இனத்தானை அவமதிக்காதே; இதுவன்றோ நாம் விரும்பும் மேலான நோன்பு?

8 அப்போது, உன் ஒளி காலைக் கதிரவன் போலத் தோன்றும், விரைவில் உனக்கு நலம் கிடைக்கும்; உன் நீதி உனக்கு முன் நடக்கும், ஆண்டவருடைய மகிமை உன்னைப் பின்தொடரும்.

9 அப்போது, ஆண்டவரை கூவியழைப்பாய், அவரும் உன் மன்றாட்டைக் கேட்டருள்வார்; அவரை நோக்கிக் கூக்குரலிடுவாய், அவரும், 'இதோ இருக்கிறோம்' என்பார். "உன் நடுவிலிருந்து நுகத்தடியைத் தள்ளிவிட்டு, உன் அயலானுக்கு எதிராய்க் கையோங்காமல், அடாததொன்றையும் சொல்லாமல் இருந்தால்,

10 பசித்திருப்பவனுக்கு உன் உணவைப் பகிர்ந்து, துன்புற்றவன் விருப்பத்தை நிறைவு செய்தால், உன் வெளிச்சம் இருள் நடுவில் உதயமாகும், உன் காரிருள் பட்டப் பகல் போல் இருக்கும்.

11 ஆண்டவர் என்றென்றும் உன்னை வழி நடத்துவார், பாலை நிலத்தில் உன் உள்ளம் நிறைவு பெறச் செய்வார்; உன் எலும்புகளை உறுதிப்படுத்துவார், நீர் வளமிக்க தோட்டம் போலும் வற்றாத நீரூற்றுப் போலும் விளங்கச் செய்வார்.

12 பல்லாண்டுகளாய்ப் பாழடைந்து கிடந்த உன் இடங்கள் கட்டப்படும்; தலைமுறை தலைமுறையாய்க் கிடந்த அடிப்படைகளை நீ கட்டியெழுப்புவாய்; மதிற்சுவர் உடைப்புகளைக் கட்டுகிறவன் என்றும், மக்கள் குடியேறும்படி தெருக்களை அமைக்கிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய்.

13 ஓய்வு நாள் ஒழுங்குகளை உதறித் தள்ளாமல், நமது பரிசுத்த நாளில் உன் விருப்பம் போல் செய்யாமலிருந்தால்; ஓய்வு நாளை இன்ப நாள் என்றும், ஆண்டவருடைய பரிசுத்த நாளை மகிமையான நாள் என்றும் போற்றினால்; அன்று உன் மனம் போன போக்குப்படி செல்லாமல், உன் விருப்பம் போலச் செய்யாமல், வீண் பேச்சுகளைப் பேசாமல் அந் நாளை மதித்து நடந்தால்,

14 அப்போது ஆண்டவரில் பேரின்பம் அடைவாய், நாட்டின் உயரமான இடங்களிலெல்லாம் உன்னை வெற்றிப் பவனியாய்க் கொண்டு செல்வோம்; உன் தந்தையாகிய யாக்கோபின் உரிமைச் சொத்திலிருந்து உனக்கு உணவு வழங்குவோம்; ஆண்டவரே இதைத் திருவாய் மலர்ந்தார்."

அதிகாரம் 59

1 இதோ, உங்களை மீட்க முடியாத அளவுக்கு ஆண்டவருடைய கை குறுகிவிடவில்லை; உங்கள் கூக்குரலைக் கேட்க முடியாத அளவுக்கு அவருடைய செவி மந்தமாகி விடவில்லை.

2 ஆனால் உங்கள் அக்கிரமங்கள் தான் உங்களுக்கும் ஆண்டவருக்கும் பிரிவு ஏற்படுத்தின; உங்கள் பாவங்களே அவர் செவி சாய்க்காதபடி உங்களிடமிருந்து அவரது முகத்தை மறைத்தன.

3 ஏனெனில் உங்கள் கைகள் இரத்தப்பழியால் கறைப்பட்டுள்ளன. உங்கள் விரல்களில் அக்கிரமம் நிறைந்துள்ளது; உங்கள் உதடுகள் பொய்களைப் பேசின, உங்கள் நாக்கு அக்கிரமத்தை முணுமுணுத்தது.

4 நீதியாய் வழக்காடுபவன் உங்களுள் எவனுமில்லை, உண்மையாகத் தீர்ப்பிடுபவன் ஒருவனுமில்லை; இல்லாத ஒன்றின் மேல் நம்பிக்கை வைக்கிறார்கள், பொய்யான சொற்களையே பேசுகிறார்கள்; தீமையைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெற்றெடுக்கிறார்கள்.

5 நச்சுப் பாம்பின் முட்டைகளை அடைகாக்கிறார்கள், சிலந்திப் பூச்சி வலைகளையும் நெய்கிறார்கள்; அவைகளின் முட்டையைச் சாப்பிடுகிறவன் செத்துப் போவான், உடைபடும் முட்டையிலிருந்து விரியன் பாம்பு வெளிப்படும்.

6 அவர்களுடைய வலைகள் உடுக்க உதவமாட்டா, அவர்கள் பின்னியவற்றை யாரும் போர்த்துக் கொள்ள முடியாது, அவர்கள் பின்னியவையெல்லாம் அக்கிரமச் செயல்களே. அவர்கள் கை செய்பவையெல்லாம் வன்முறைச் செயல்களே.

7 அவர்களுடைய கால்கள் தீமை செய்ய ஓடுகின்றன, குற்றமற்ற இரத்தம் சிந்த அவர்கள் விரைகிறார்கள்; அவர்கள் நினைவுகளோ அநீதியான நினைவுகளே, அவர்களுடைய வழிகளில் அழிவும் துன்பமுந்தான் உள்ளன.

8 சமாதான வழியினை அவர்கள் அறிந்தாரல்லர், அவர்களுடைய தடங்களில் நேர்மையில்லை; அவர்கள் போகும் நெறிகள் கோணலானவை, அவற்றில் நடப்பவன் சமாதானம் அறியான்.

9 ஆதலால், நீதி எங்களை விட்டு விலகிப் போனது. நேர்மையும் எங்களை நெருங்கவில்லை; ஒளியை எதிர்பார்த்தோம், காரிருள் தான் காணப்பட்டது, வெளிச்சத்தைத் தேடினோம், இருட்டிலேயே நடக்கிறோம்.

10 குருடரைப் போலச் சுவரைப் பிடித்துக் கொண்டு, கண்ணில்லாதவரைப் போல நாங்கள் வழியைத் தடவுகிறோம். இருளில் நடப்பது போலப் பகலிலும் இடறுகிறோம், வாழ்பவர்கள் நடுவில் செத்தவர் போலக் கிடக்கிறோம்.

11 கரடிகளைப் போல நாங்களனைவரும் உறுமுகிறோம், புறாக்களைப் போலப் புலம்பி விம்முகிறோம்; நீதிக்குக் காத்திருக்கிறோம், அது கிடைக்கவில்லை; மீட்பைப் பார்த்திருக்கிறோம், அது தொலைவில் நிற்கிறது.

12 உம் கண் முன்னால் எங்கள் அக்கிரமங்கள் பெருகிப்போயின, எங்கள் பாவங்களும் எங்களுக்கு எதிராய்ச் சாட்சி கூறுகின்றன; எங்கள் அக்கிரமங்கள் எங்களோடு இருக்கின்றன, எங்கள் அநீதிகளை நாங்களே அறிந்திருக்கிறோம்.

13 ஆண்டவருக்கு எதிராக எழும்பித் துரோகம் செய்தோம், எம் கடவுளைப் பின்பற்றாமல் திரும்பி விட்டோம்; புறணியையும் அக்கிரமத்தையும் பேசினோம், பொய்களை உள்ளத்தில் சிந்தித்துப் பேசினோம்.

14 நீதி எங்களை விட்டு அகன்று போயிற்று, நேர்மையும் எங்களுக்குத் தொலைவில் நின்றது; பொதுவிடங்களில் உண்மையானது வீழ்ச்சியடைந்தது, நியாயத்திற்கு அங்கெல்லாம் இடமே இல்லை.

15 வாய்மை மறக்கப்பட்டு விட்டது, தீமையை விட்டு விலகினவன் கொடியவர்க்கு இரையானான்; உலகில் நீதியில்லாததை ஆண்டவர் கண்டார், அவர் கண்களில் கோபத் தீ மூண்டது.

16 முன்வருபவன் யாருமில்லை என ஆண்டவர் கண்டார், சீர்திருத்த முன்வருபவன் இல்லாததால் திகைப்புக்கொண்டார்; அவருடைய கைப் புயமே அவருக்கு வெற்றி கொணர்ந்தது, அவருடைய நீதியே அவருக்குத் துணை நின்றது.

17 மார்க் கவசமாய் நீதியையும், தலைச் சீராவாய் மீட்பையும் அணிந்து கொண்டார்; பழி தீர்க்கும் சினத்தை உடையாய் அணிந்து, ஆத்திரத்தை மேலாடையாய்ப் போர்த்துக் கொண்டார்.

18 செயல்களுக்குத் தக்க கைம்மாறு தருவார், தம் எதிரிகளுக்கு ஆத்திரத்தைக் காட்டுவார்; தம் பகைவர்களுக்குத் தக்க தண்டனையும், தீவுகளுக்குத் தகுதியுள்ள பலனையும் தருவார்.

19 மேற்றிசையினர் ஆண்டவர் பெயருக்கு அஞ்சுவார்கள், கீழ்த்திசையினர் அவர் மகிமையைப் போற்றுவார்கள்; ஏனெனில் ஆண்டவரின் ஆவியால் உந்தித் தள்ளப்பட்ட காட்டாற்று வெள்ளம் போல் அவர் வருவார்.

20 ஆனால் சீயோனுக்கும், யாக்கோபின் வீட்டாருள் தீமையை விலக்கித் திரும்புகிறவர்களுக்கும் மீட்பராய் வருவார், என்கிறார் ஆண்டவர்.

21 ஆண்டவர் கூறுகிறார்: அவர்களோடு நாம் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே: உன் மேல் இருக்கும் நமது ஆவியும், உன் வாயில் நாம் ஊட்டிய நம்முடைய வார்த்தைகளும், உன் வாயினின்றும், உன் மக்கள் வாயினின்றும், உன் மக்களின் மக்கள் வாயினின்றும் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றைக்கும் அகலா, என்கிறார் ஆண்டவர்."

அதிகாரம் 60

1 யெருசலேமே எழுந்திரு, எழுந்து ஒளிவீசு, ஏனெனில் உனது ஒளி வந்து விட்டது, ஆண்டவரின் மகிமை உன் மேல் உதித்து விட்டது.

2 இதோ, காரிருள் பூமியை மூடிக்கொள்ளுகிறது; அடர்ந்த இருள் மக்களைச் சூழ்ந்து கொள்ளுகிறது; ஆனால் ஆண்டவர் உன் மேல் எழுந்தருள்வார், அவரது மகிமை உன் மீது உதயமாகும்.

3 மக்களினங்கள் உன் ஒளி நோக்கி வருவார்கள், உன்னில் உதிக்கும் சுடர் கண்டு மன்னர்கள் வருவர்.

4 கண்களை ஏறெடுத்துச் சுற்றிலும் பார், இவர்கள் அனைவரும் ஒன்று கூடி உன்னிடம் வருகின்றனர்; உன் புதல்வர்கள் தொலைவிலிருந்து வருகின்றனர். உன் புதல்வியர் இடுப்பில் தூக்கி வரப்படுகின்றனர்.

5 நீயோ அதைக் கண்டு அக்களிப்பாய், உன் உள்ளம் வியப்பினால் பூரிப்படையும்; ஏனெனில், கடல் வளம் உன்னிடம் கொணரப்படும். மக்களினங்களின் செல்வம் உன்னிடம் வந்து சேரும்.

6 ஒட்டகங்களின் கூட்டம் உன்னை நிரப்பும், மாதியான், எப்பா நாட்டு இளம் ஒட்டகங்களும் வரும்; சாபா நாட்டினர் அனைவரும் பொன்னும் தூபமும் ஏந்தியவராய் ஆண்டவருக்குப் புகழ் பாடிக் கொண்டு வருவார்கள்.

7 கேதாரின் மந்தைகள் யாவும் உன்னிடம் சேர்க்கப்படும், நாபாயோத்தின் செம்மறிகள் உனக்குப் பயன்படும்; நமக்கு ஏற்புடைய பீடத்தின் மேல் அவை ஒப்புக் கொடுக்கப்படும், நமது மாட்சிமையின் கோயிலை மகிமைப்படுத்துவோம்.

8 மேகங்கள் போலும், கூட்டுக்குப் பறந்தோடும் காட்டுப் புறாக்கள் போலும் விரைந்து பறந்து போகும் இவர்கள் யார்?

9 தீவுகள் நமக்காகக் காத்திருக்கின்றன; உன் பிள்ளைகளைத் தொலைவிலிருந்து ஏற்றி வரவும், அவர்களுடன் அவர்களுடைய வெள்ளியையும் பொன்னையும் கொண்டு வந்து உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கும், உன்னை மகிமைப்படுத்திய இஸ்ராயேலின் பரிசுத்தருக்கும் அர்ப்பணஞ் செய்யக் கடலின் மரக்கலங்களும் காத்திருக்கின்றன.

10 அந்நியரின் மக்கள் உன் சுவர்களைக் கட்டுவர், அவர்களின் அரசர்கள் உனக்குப் பணிபுரிவர்; கோபத்தில் நாம் உன்னை அடித்து நொறுக்கினோம், இப்போது சமாதானமாகி உன் மேல் இரக்கம் காட்டினோம்.

11 உன் வாயில்கள் எப்போதும் திறந்திருக்கும், இரவிலும் பகலிலும் அவை மூடப்படா; மக்களினங்களின் செல்வங்கள் கொண்டு வரப்படும், அவர்களின் அரசர்கள் கூட்டி வரப்படவும் அவை திறந்தே இருக்கும்.

12 உனக்கு அடிபணியாத மக்களினமோ அரசோ அழிந்து போகும், அவை அனைத்தும் முற்றிலும் பாழாக்கப்படும்;

13 லீபானின் மகிமை உன்னை நாடி வரும், தேவதாரு, புன்னைமரம், ஊசியிலைமரம் ஆகியவை நமது பரிசுத்த இடத்தை அழகுபடுத்தக் கொண்டு வரப்படும்; நம் கால்மணையின் இருப்பிடத்தை நாம் மகிமைப்படுத்துவோம்.

14 உன்னை தாழ்த்தியவர்களின் மக்கள் உன்னிடம் தலை வணங்கி வருவர்; உன்னை நிந்தித்தவர் அனைவரும் உன் அடிச்சுவடுகளை வணங்குவர்; ஆண்டவரின் நகரம் என உன்னை அழைப்பர், உன்னை இஸ்ராயேலின் பரிசுத்தருடைய சீயோன் என்பர்.

15 கைவிடப்பட்டு, மனிதரால் நீ வெறுக்கபட்டாய், உன் வழியாய்க் கடந்து செல்ல எவனும் கருதினானல்லன்; அப்படிப்பட்ட உன்னை முடிவில்லாத மாட்சிமையும், தலைமுறை தலைமுறையாய் நிலைக்கும் மகிழ்ச்சியுமாக்குவோம்.

16 மக்களினங்களின் பாலை நீ பருகுவாய், அரசர்களின் முலைப்பாலைக் குடிப்பாய்; உனக்கு மீட்பளிக்கும் ஆண்டவர் நாமே என்பதையும், உன்னை விடுவிப்பவர் யாக்கோபின் வல்லவரே என்பதையும் அறிவாய்.

17 செம்புக்குப் பதிலாக பொன்னும், இரும்புக்குப் பதிலாக வெள்ளியும், மரத்துக்குப் பதிலாய்ச் செம்பும், கற்களுக்குப் பதிலாய் இரும்பும் கொணர்வோம்; சமாதானம் உன்னை மேற்பார்வை பார்க்கவும், நீதி உனக்குத் தலைமை தாங்கவும் செய்வோம்.

18 இனி மேல் கொடுமை என்னும் சொல்லே உன் நாட்டில் கேட்கப்படாது; உன் எல்லைப் புறங்களில் அழிவு, துன்பம் என்னும் கூக்குரல் இருக்காது. உன் மதில்களுக்கு 'மீட்பு' என்றும், உன் வாயில்களுக்குப் 'போற்றி' என்றும் பெயரிடுவாய்.

19 பகலில் வெளிச்சந்தர உனக்குத் கதிரவன் தேவையில்லை, இரவில் உனக்கு ஒளி வீச வெண்ணிலவும் தேவையில்லை; ஏனெனில், ஆண்டவரே என்றென்றைக்கும் உன் ஒளியாயிருப்பார், உன் கடவுளே உனக்கு மகிமையாய் விளங்குவார்.

20 உன்னுடைய கதிரவன் இனி மறைய மாட்டான், உன்னுடைய வெண்ணிலவு இனித் தேய்ந்து போகாது; ஏனெனில், ஆண்டவரே என்றென்றைக்கும் உன் ஒளியாயிருப்பார், உன் கண்ணீரின் நாட்களும் முடிந்து போகும்.

21 உன் இனம் நீதிமான்களை மட்டுமே கொண்டிருக்கும், மண்ணுலகு என்றென்றும் அவர்களது உரிமையாகும்; நாம் நட்ட பசுந்தளிராய் உன் மக்கள் இருப்பர், நமக்கு மகிமை தரும் நம் கைவேலையாய் இருப்பர்.

22 உன்னில் சிறியவன் ஆயிரமாய்ப் பலுகுவான், அற்பனாய் இருப்பவனும் வலியதோர் இனமாவான்; ஆண்டவராகிய நாமே இந்த வித்தையைத் தக்க காலத்தில் திடீரெனச் செய்வோம்.

அதிகாரம் 61

1 ஆண்டவரின் ஆவி என்மேலே, ஏனெனில் ஆண்டவர் என்னை அபிஷுகம் செய்துள்ளார்; எளியோர்க்கு நற்செய்தி அறிவித்து, உள்ளம் நொந்தவர்களைக் குணப்படுத்தவும்: சிறைப்பட்டவர்களுக்கு விடுதலைச் செய்தியும், கட்டுண்டவர்களுக்கு மீட்புச் செய்தியும் அறிவிக்கவும்;

2 ஆண்டவர் தம் அருளைத் தரும் ஆண்டையும், நம் கடவுள் பழிவாங்கும் நாளையும் தெரிவிக்கவும், அழுகிறவர்கள் அனைவர்க்கும் ஆறுதல் அளிக்கவும்;

3 சீயோனில் அழுகிறவர்களை மகிழ்விக்கவும், சாம்பலுக்கு பதிலாய் மணிமுடியையும், அழுகைக்குப் பதிலாய் மகிழ்ச்சியின் தைலத்தையும், நைந்த உள்ளத்திற்குப் பதிலாய்ப் புகழ் என்னும் போர்வையையும் தரவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அவர்கள் நீதியில் அசையாதிருக்கும் மரங்கள் எனவும், ஆண்டவரை மகிமைப்படுத்த அவரால் நடப்பட்டது எனவும் அழைக்கப் படுவார்கள்.

4 பன்னெடுங்காலம் பாழாய்க் கிடந்தவற்றைக் கட்டுவார்கள், பண்டைக் காலத்திலிருந்து இடிந்து கிடந்தவற்றை எழுப்புவார்கள்; பாழாய்க் கிடந்த பட்டணங்களைப் பழைய நிலையில் ஏற்படுத்தி, தலைமுறை தலைமுறையாய்ச் சிதறுண்டவற்றைச் சீர்ப்படுத்துவார்கள்.

5 அந்நியர்கள் வந்து உங்கள் மந்தைகளை மேய்ப்பர், பிறநாட்டினரின் மக்கள் உங்களுக்கு உழவர்களாகவும், உங்கள் திராட்சைத் தோட்டக்காரராகவும் இருப்பர்.

6 நீங்களோ ஆண்டவருடைய அர்ச்சகர்கள் எனப்படுவீர்கள், நம் கடவுளின் திருப்பணியாளர்கள் எனப் பெயர் பெறுவீர்கள். புறவினத்தாரின் செல்வங்களைக் கொண்டு நீங்கள் சாப்பிடுவீர்கள், அவர்களுடைய மகிமையை உரிமையாக்கிக் கொள்வீர்கள்.

7 நீங்கள் அடைந்த வெட்கத்திற்குப் பதிலாக உங்களுக்கு இரு மடங்கு நன்மை விளையும்; உங்களுக்குக் கிடைத்த அவமானத்திற்குப் பதிலாக உங்கள் பாகத்தைக் குறித்து அகமகிழ்வீர்கள்; ஆதலால் உங்கள் நாட்டில் எல்லாவற்றையும் இரு மடங்கு பெறுவீர்கள்; முடிவில்லா மகிழ்ச்சி உங்களுக்குக் கிடைக்கும்.

8 ஏனெனில், ஆண்டவராகிய நாம் நேர்மையை விரும்புகிறோம், கொள்ளையையும் தவறுகளையும் வெறுக்கிறோம், உண்மையாய் அவர்களுக்குக் கைம்மாறு கொடுப்போம், அவர்களோடு முடிவில்லாத உடன்படிக்கை செய்வோம்.

9 அவர்களின் சந்ததி புறவினத்தார் நடுவிலும் அவர்களின் இனத்தார் மக்களினங்கள் மத்தியிலும் தெரிந்திருப்பர். அவர்களைப் பார்ப்பவர்கள் அனைவரும் ஆண்டவர் ஆசீர்வதித்த மக்களினம் இதுவே என அறிந்து கொள்வார்கள்.

10 ஆண்டவரில் நான் அகமகிழ்ந்து அக்களிப்பேன், என் கடவுளிடம் எனதான்மா களிகூரும்; மணிமுடி சூட்டப்பட்ட மணவாளனைப் போலும், அணிகலன்களால் அழகு செய்யப்பட்ட மணவாட்டியைப் போலும் மீட்பின் ஆடைகளை எனக்கு உடுத்தினார், நீதியின் மேலாடையை எனக்குப் போர்த்தினார்.

11 ஏனெனில், நிலமானது தன் விதைகளை முளைக்கச் செய்வது போலும், தோட்டமானது தன்னில் நட்டதைத் தளிர்க்கச் செய்வது போலும், எல்லா இனத்தாரின் முன்னிலையில் நீதியையும் புகழ் மொழியையும் கடவுளாகிய ஆண்டவர் தளிர்க்கச் செய்வார்.

அதிகாரம் 62

1 சீயோனைப் பற்றிப் பேசாமல் நான் மௌனமாய் இருக்கமாட்டேன், யெருசலேமின் காரியத்தில் சோர்வடைய மாட்டேன்; அன் நீதி சுடரொளி போல வெளிப்படு மட்டும், அதன் மீட்பு தீப்பந்தம் போலச் சுடர் விடும் வரையிலும் நான் அமைதியடைய மாட்டேன்.

2 புறவினத்தார் உன் நீதியைக் காண்பார்கள், அரசர்கள் அனைவரும் உன் மகிமையை நோக்குவார்கள்; புதுப் பெயர் ஒன்று உனக்கு வழங்கப்படும், ஆண்டவரின் நாவே அந்தப் பெயரைச் சூட்டும் .

3 ஆண்டவரின் கையில் நீ மகிமையின் மணி முடியாகவும், உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாகவும் இருப்பாய்.

4 தள்ளப்பட்டவள்' என நீ இனி அழைக்கப்படமாட்டாய், 'கைவிடப்பட்டவள்' என உன் நாடும் இனிச் சொல்லப்படாது, 'என் அன்புடையாள்' என நீ அழைக்கப்படுவாய், 'மணமானவள்' என உன் நாடும் சொல்லப்படும்; ஏனெனில் ஆண்டவர் உன் மேல் அன்பு கூர்ந்தார், உன் நாடு இறைவனுக்கு வாழ்க்கைப்படும்.

5 இளைஞன் கன்னிப் பெண்ணை மணந்து கொள்வது போல், உன்னை அமைத்தவர் உன்னை மணந்து கொள்வார்; மணவாளன் தன் மணவாட்டியைக் குறித்து மகிழ்வது போல், உன் கடவுள் உன்னைக் குறித்து மகிழ்ச்சியடைவார்.

6 யெருசலேமே, உன் மதில்கள் மேல் சாமக் காவலரை ஏற்படுத்தினோம், இரவும் பகலும் நாள் முழுதும் அவர்கள் மௌனமாய் இரார்கள்; ஆண்டவரை நினைவு கொள்ளும் நீங்கள், என்றென்றும் வாய் மூடிக் கிடக்காதீர்கள்.

7 அவர் யெருசலேமை நிலை நாட்டி, அதை உலகில் புகழுக்குரியதாய்ச் செய்யும் வரையில் அவரை அமைதியாய் இருக்க விடாதீர்கள்.

8 ஆண்டவர் தம் வலக்கையால் ஆணையிட்டு, வல்லமையுள்ள தம் கரமுயர்த்தி உறுதி சொன்னார்: "உன் கோதுமையைப் பகைவர்களுக்கு உணவாக இனி நாம் தரவே மாட்டோம்; நீ உழைத்து பிழிந்த திராட்சை இரசத்தைப் புறவினத்தாரின் மக்கள் குடிக்க விடமாட்டோம்.

9 ஆனால் அறுவடை செய்தவர்களே அதைச் சாப்பிடுவார்கள், அதற்காக ஆண்டவரை வாழ்த்துவார்கள்; திராட்சைப் பழங்களைச் சேர்த்தவர்களே அதன் இரசத்தை நமது திருக்கோயிலின் முற்றத்தில் பருகுவார்கள்."

10 புறப்படுங்கள், வாயில்கள் வழியாய்ப் புறப்படுங்கள், வருகின்ற மக்கட்கு வழியைத் தயாரியுங்கள் வழியைச் செவ்வைப்படுத்துங்கள், கற்களை அகற்றுங்கள், மக்களினங்களுக்கு அடையாளக் கொடி ஏற்றுங்கள்.

11 இதோ, உலகத்தின் எல்லை வரை கேட்கும்படி, ஆண்டவர் அறிவித்துச் சொன்னதாவது: "இதோ, உன் மீட்பர் வருகின்றார், அவருடைய வெற்றிப் பரிசு அவரோடு இருக்கிறது; அவர் முன்னால் அவருடைய வெற்றிச் சின்னங்கள் வருகின்றன" என்று சீயோன் மகளுக்குச் சொல்லுங்கள்.

12 அப்போது, 'பரிசுத்த மக்கள்' என அவர்களை அழைப்பார்கள், 'ஆண்டவரால் மீட்கப்பட்டவர்கள்' என்பார்கள்; நீயோ 'தேடிக் கொள்ளப்பட்டவள்' எனப்படுவாய், 'கைவிடப்படாத நகரம்' என்று பெயர் பெறுவாய்.

அதிகாரம் 63

1 ஏதோமிலிருந்து வருகிற இவர் யார்? செந்நீர் தோய்ந்த ஆடையினராய்ப் போஸ்ராவிலிருந்து வருகிற இவர் யார்; மகிமையான ஆடைகளை அணிந்தவராய் வல்லமையின் பெருமிதத்தோடு நடப்பவர் இவர் யார்? "நாம் தான்; நீதியை முழங்குகிற நாமே மீட்பளிக்கவும் வல்லவர்."

2 உமது மேலாடை செந்நிறமாய் இருப்பதேன்?- உம் ஆடைகள் திராட்சைப் பழங்களை மிதிப்பவரின் ஆடை போலக் காணப்படுவதேன்?

3 திராட்சைப் பழங்களை நாம் தனியாகவே மிதித்தோம், மக்களுள் யாரும் நமக்கு உதவியாய் வரவில்லை; நம் ஆத்திரத்தில் நாம் அவர்களை மிதித்தோம், நமது கோபத்தில் அவர்களைத் துவைத்தோம்; அவர்களின் செந்நீர் நம் ஆடைகளில் தெறித்தது, நம் மேலாடைகள் எல்லாம் கறைபட்டன.

4 ஏனெனில் பழி வாங்கும் நாள் நம் மனத்தில் இருந்தது, நம்முடைய மீட்பின் ஆண்டு வந்து விட்டது.

5 சுற்றிலும் பார்த்தோம், நமக்கு உதவி செய்பவன் எவனுமில்லை; ஆச்சரியம்! நமக்குத் துணை செய்பவன் ஒருவனுமில்லை; நம்முடைய கைப் புயமே நமக்கு வெற்றி கொணர்ந்தது, நமது சினமே நமக்குத் துணை நின்றது.

6 நமது ஆத்திரத்தில் மக்களினங்களை மிதித்துத் தள்ளினோம், நம் கோபத்தைப் பருகச் செய்து அவர்களுக்குப் போதையேறச் செய்தோம்; அவர்களுடைய செந்நீரைத் தரையில் வடியச் செய்தோம்."

7 ஆண்டவரின் இரக்கச் செயல்களை நினைவு கூர்வேன்; ஆண்டவர் நமக்குச் செய்த எல்லாவற்றிற்காகவும், இஸ்ராயேல் வீட்டாருக்குத் தம் கருணைக்கேற்றவாறும், வற்றா இரக்கப் பெருக்கத்திற்கேற்றவாறும் செய்த நன்மைகளுக்காகவும், ஆண்டவருக்கு புகழ் கூறுவேன்.

8 ஏனெனில் ஆண்டவர் தம் மக்களைக் குறித்து, மெய்யாகவே அவர்கள் நம் மக்கள், நம்மை மறுதலிக்காத பிள்ளைகள் என்றும் இவ்வாறு அவர் அவர்களுக்கு மீட்பரானார்.

9 அவர்களுடைய துன்பங்களைக் குறித்து அவர் கலங்கினார், அவருடைய திருமுன் இருக்கும் தூதர் அவர்களைக் காத்தார்; தம் அன்பினாலும் இரக்கத்தினாலும் அவர்களை அவரே மீட்டார், தொன்று தொட்டு அவர்களை ஆதரித்தார், அவர்களை உயர்த்தினார்.

10 அவர்களோ அவருக்குக் கோப மூட்டினார்கள், அவருடைய பரிசுத்தரின் ஆவிக்கு வருத்தம் தந்தனர்; ஆதலால் அவர்களுக்கே பகைவராய் அவர் மாறினார், அவரே அவர்களுக்கு எதிராய்ப் போர் புரிந்தார்.

11 அப்போது தம் ஊழியனாகிய மோயீசனின் நாட்களை நினைவுகூர்ந்தார்: தம் மந்தையின் மேய்ப்பனைக் கடலினின்று வெளியே கூட்டி வந்தவர் எங்கே?தம் பரிசுத்த ஆவியை மக்களுக்குள் நிலைத்திருக்கச் செய்தவர் எங்கே?

12 தமது மாட்சிமிக்க கைவன்மை மோயீசனின் வலக்கையோடு செல்லும்படி செய்தவர் எங்கே? தமக்கு முடிவில்லாத பேரும் புகழும் உண்டாகும்படி, அவர்கள் முன்னிலையில் தண்ணீரைப் பிரித்து,

13 பாலை நிலத்தில் இடறாமல் நடக்கும் குதிரை போல், ஆழ்கடல் வழியாய் அவர்களை நடத்தி வந்தவர் யார்?

14 சமவெளியில் இறங்கிப் போகும் மந்தை போல் ஆண்டவரின் ஆவி அவர்களைக் கூட்டிப் போனது. உமக்கு மகிமையான பெயர் விளங்கும்படி இவ்வாறு நீர் உம் மக்களைக் கூட்டிப் போனீர்.

15 விண்ணகத்தினின்று கண்ணோக்கியருளும், உமது பரிசுத்த இடத்தினின்று, மகிமையின் அரியணையினின்று பாரும்; உம்முடைய ஆர்வமும் வல்லமையும் எங்கே? உமது உள்ளத்தின் அன்பும் இரக்கப் பெருக்கமும் எங்கே? என் மேல் அவை பொழியாமல் அடக்கப்பட்டனவே!

16 ஏனெனில் நீரே எங்கள் தந்தை, ஆபிரகாம் எங்களை அறியார், இஸ்ராயேலுக்கு எங்களைத் தெரியாது; ஆண்டவரே, நீரே எங்கள் தந்தை, நீரே எங்கள் மீட்பர், தொன்று தொட்டு உமது பெயர் அதுவே.

17 ஆண்டவரே, உம் வழிகளிலிருந்து நாங்கள் பிறழும்படி விட்டதேன்? உமக்கு அஞ்சாதபடி எங்கள் உள்ளத்தைக் கடினமாக்கியதேன்? உம்முடைய ஊழியர்களை முன்னிட்டும் உம் உரிமைச் சொத்தாகிய கோத்திரங்களை முன்னிட்டும் எங்கள் பக்கமாய்த் திரும்பியருளும்.

18 பொல்லாதவர் உம் பரிசுத்த இடத்தில் கால் வைத்தது ஏன்? எங்கள் எதிரிகள் உமது பரிசுத்த இடத்தைக் காலால் மிதித்தது ஏன்?

19 நீர் எங்களை ஆளத் தொடங்குவதற்கு முன்பும், எங்கள் மேல் உமது திருப்பெயர் வழங்கப்படுவதற்கு முன்பும், தொடக்கத்தில் நாங்கள் எப்படி இருந்தோமோ அப்படியே இப்பொழுது ஆகிவிட்டோம்.

அதிகாரம் 64

1 வானத்தைக் கிழித்து நீர் இறங்கி வரமாட்டீரா! - மலைகள் உம் திருமுன் கரைந்து போகுமே!

2 அவை நெருப்பில் எரியும் விறகைப் போலவும், நெருப்பால் கொதிக்கும் தண்ணீரைப் போலவும் ஆகும். உமது பெயர் உம் பகைவர்களுக்கு விளங்கவும், புறவினத்தார் உம் திருமுன் நடுங்கவும் நீர் வரமாட்டீரா!

3 நாங்கள் எதிர்பாராத அச்சத்துக்குரிய விந்தைகளை நீர் செய்த போது, நீர் இறங்கி வந்தீர், உம் திருமுன் மலைகள் உருகிப் போயின.

4 தமக்காகக் காத்திருப்பவர்களுக்கென செயலாற்றும் கடவுள் உண்டோ? உம்மையன்றி வேறொருவர் உண்டென்று தொடக்கத்திலிருந்து யாரும் கேள்விப்பட்டதுமில்லை, செவியுற்றதுமில்லை, கண்ணால் கண்டதுமில்லை.

5 மகிழ்ச்சியோடு நீதியைக் கடைப்பிடிப்பவனையும், உம்முடைய வழிகளில் உம்மை நினைவு கூர்கிறவர்களையும், நீர் எதிர்கொண்டு வந்து சந்திக்கிறீர்; இதோ நீர் எங்கள் மேல் சினங்கொண்டீர், நாங்களோ பாவஞ்செய்தோம்; அவற்றிலேயே நாங்கள் நெடுங்காலமாய் உழல்கிறோம், எங்களுக்கும் மீட்புக் கிடைக்குமோ?

6 நாங்கள் அனைவரும் தீட்டுப்பட்ட மனிதனைப் போல் ஆனோம், எங்கள் நீதியின் செயல்கள் யாவும் கறைபட்ட ஆடை போலாயின; இலை போல நாங்கள் அனைவரும் உதிர்ந்து போனோம், காற்றைப் போல் எங்கள் அக்கிரமங்கள் எங்களை அடித்துப் போயின.

7 உமது பெயரைக் கூவியழைப்பவன் எவனுமில்லை, எழுந்து உம்மைப் பற்றிக்கொள்பவன் ஒருவனுமில்லை; எங்களிடமிருந்து உமது முகத்தை மறைத்துக் கொண்டீர், எங்கள் அக்கிரமங்களின் கையில் எங்களை விட்டு விட்டீர்.

8 ஆயினும், ஆண்டவரே, நீரே எங்கள் தந்தை, நாங்கள் களிமண், நீர் எங்களை வனைபவர்; நாங்கள் யாவரும் உம்முடைய கைவேலைப் பாடுகள்.

9 ஆண்டவரே, கடுமையாய் எங்கள் மேல் சினங்கொள்ளாதீர், இனியும் எங்கள் அக்கிரமத்தை நினைவு கூராதீர்; இதோ பாரும், நாங்கள் எல்லாரும் உம் மக்கள் தானே!

10 உம் பரிசுத்த பட்டணங்கள் பாலை நிலமாகி விட்டன, சீயோன் பாழடைந்து போயிற்று, யெருசலேம் பாழ்வெளியாகி விட்டது.

11 பரிசுத்தமும் மகிமையும் வாய்ந்த எங்கள் கோயில், எங்கள் தந்தையர் உம்மைப் புகழ்ந்து கொண்டாடிய அந்த இடம் தீக்கிரையாகி அழிந்ததே; எங்கள் சிறந்த கட்டடங்கள் அனைத்தும் பாழடைந்த நிலையில் கிடக்கின்றனவே.

12 ஆண்டவரே, இவற்றுக்குப் பின்னும் நீர் அமைந்திருப்பீரோ? மௌனங் காத்து, இன்னும் கடுமையாய் எங்களைத் துன்புறுத்துவீரோ?

அதிகாரம் 65

1 முன் நம்மை யார் என விசாரிக்காதவர்கள் நம்மைத் தேட இடங்கொடுத்தோம்; நம்மைத் தேடாதவர்கள் நம்மைக் கண்டுகொள்ள இடங்கொடுத்தோம்; நமது பெயரைக் கூவியழைக்காத மக்களினத்தை நோக்கி, நாம், "இதோ இருக்கிறோம், இதோ இருக்கிறோம்" என்று சொன்னோம்.

2 தங்களுடைய எண்ணங்களையே பின்பற்றிக் கொண்டு, தீய வழியில் நடக்கும்அவிசுவாசிகளான மக்கள்பால் நாள் முழுவதும் நம் கைகளை நீட்டி அழைத்தோம்.

3 அந்த மக்கள் நமக்குக் கோப மூட்டும்படியானதையே எந்நேரமும் நம் கண்கள்முன் செய்கின்றனர்; தோட்டங்களில் பலியிடுகின்றனர்; செங்கற் பீடங்கள் மேல் பலி நிறைவேற்றுகின்றனர்.

4 கல்லறைகளில் வாழ்கிறார்கள்; இருண்ட மூலைகளில் படுத்து உறங்குகிறார்கள்; பன்றி இறைச்சியைத் தின்கிறார்கள்; அருவருப்பான மதுவைத் தங்கள் பாத்திரங்களில் வைத்திருக்கிறார்கள்.

5 இவ்வாறிருந்தும் மற்றவர்களைப் பார்த்து, "எட்டி நில், கிட்டே வராதே; நீ தீட்டுள்ளவன், நானோ தூய்மையானவன்" என்று சொல்லுகிறார்கள்; இவர்கள் நமக்கு எரிச்சலூட்டும் புகை போலும், நாள் முழுவதும் எரிகிற நெருப்புப் போலும் இருக்கிறார்கள்.

6 இதோ, நமது முன்னிலையில் எழுதப்பட்டுள்ளது: "நாம் அமைதியாய் இருக்கப் போவதில்லை; அவர்களுக்குக் கைம்மாறு கொடுப்போம், மடியில் அளந்து போடுவோம்.

7 அவர்களின் அக்கிரமங்களையும், மலைகளின் மேல் பலியிட்டுக் குன்றுகளின் மேல் சிலை வழிபாடு செய்து நம்மை அவமானப்படுத்திய அவர்களுடைய தந்தையர்களின் அக்கிரமங்களையும் ஒருமிக்கத் தண்டிப்போம்; அவர்களுடைய முன்னைய செயல்களுக்குரிய பலனை அவர்கள் மடியில் அளந்து கொடுப்போம், என்கிறார் ஆண்டவர்."

8 திராட்சைக் குலையில் இரசம் இருந்தால், 'அதை அழிக்காதே, அது ஆசீர்வாதம்" என்று மக்கள் சொல்லுகிறார்கள்; அதுபோலவே, நம் அடியார்களை முன்னிட்டும் செய்வோம்; இஸ்ராயேல் முழுவதையுமே அழித்துவிட மாட்டோம்.

9 மேலும் யாக்கோபினின்று சந்ததியையும், யூதாவிலிருந்து நம் மலைகளை உடைமையாக்கிக் கொள்பவனையும் தோன்றச் செய்வோம்; நம்மால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் அந்நாட்டை உரிமைச் சொத்தாய் பெறுவார்கள்; நம் ஊழியர்கள் அங்கே வாழ்வார்கள்.

10 நம்மை தேடிவந்த நம்மக்களுக்குச் சாரோன் சமவெளி ஆட்டு மந்தைகளின் கிடையாகவும், ஆங்கோர் பள்ளத்தாக்கு மாட்டுத் தொழுவமாகவும் இருக்கும்.

11 ஆனால் ஆண்டவரை கைவிட்டு நமது பரிசுத்த மலையை மறந்தவர்களே, அதிர்ஷ்ட தேவதைக்குப் பீடம் சமர்ப்பித்து விதியின் தெய்வத்துக்குப் பானப்பலிகளை வார்க்கிறவர்களே,

12 உங்களை நாம் ஒருவர் பின் ஒருவராய் வாளுக்கிரையாக்குவோம், அந்தப் படுகொலையில் நீங்கள் யாவரும் மடிவீர்கள்; ஏனெனில் நாம் கூப்பிட்டோம், நீங்கள் பதில் தரவில்லை, நாம் பேசினோம், நீங்கள் கேட்கவில்லை; நம் கண்கள் முன்பாகத் தீமை செய்தீர்கள், நமக்கு விருப்பமில்லாதவற்றை நீங்கள் தேர்ந்துகொண்டீர்கள்."

13 ஆதலால் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: "இதோ, நம் ஊழியர்கள் உண்பார்கள், நீங்களோ பசியால் வாடுவீர்கள்;

14 இதோ, நம் ஊழியர்கள் பானம் அருந்துவார்கள், நீங்களோ தாகத்தால் வருந்துவீர்கள்; இதோ, நம் ஊழியர்கள் மகிழ்ச்சி கொண்டாடுவார்கள், நீங்களோ வெட்கத்தால் தலை கவிழ்வீர்கள்; இதோ, நம் ஊழியர்கள் இதய மகிழ்ச்சியால் பாடுவார்கள், நீங்களோ உள்ளத்தின் வருத்தத்தால் கூக்குரலிடுவீர்கள்; மனமொடிந்து புலம்பியழுவீர்கள்.

15 நம்மால் தேர்ந்து கொள்ளப் பட்டவர்களுக்கு உங்கள் பெயரைச் சாபனைப் பெயராக விட்டுச் செல்வீர்கள்; கடவுளாகிய ஆண்டவர் உங்களைக் கொன்று போடுவார்; தம்முடைய ஊழியர்களுக்கு வேறு பெயர் சூட்டுவார்.

16 இவ்வுலகில் ஆசீர்வதிக்கப்படுபவன் உண்மைக் கடவுளின் பெயரால் ஆசீர்வதிக்கப்படுவான்; இவ்வுலகில் ஆணையிடுபவன், உண்மைக் கடவுளின் திருப்பெயரால் ஆணையிடுவான்; ஏனெனில் முந்திய இடையூறுகள் மறதியாய்ப் போயின; என் கண்களுக்கு மறைந்து போயின.

17 இதோ, புதிய வானத்தையும் புதிய பூமியையும் நாம் படைக்கிறோம்; முன்னையவை நினைவில் இருக்கமாட்டா; எண்ணத்திலும் தோன்ற மாட்டா.

18 நாம் படைக்கப் போவதைக் குறித்து நீங்கள் என்றென்றும் மகிழ்ந்து அக்களிப்பீர்கள்; ஏனெனில், இதோ நாம் யெருசலேமை அக்களிப்பாகவும், அதன் குடிமக்களை மகிழ்ச்சியாகவும் படைக்கப் போகிறோம்.

19 நாமும் யெருசலேமைக் குறித்து அக்களிப்போம், நம் மக்களை நினைத்து அகமகிழ்வோம்; இனி ஆங்கே அழுகுரலோ கூக்குரலோ கேட்கப்படாது.

20 அதில் சில நாட்களே வாழ்ந்த சிறுவனோ, தன் வாழ்நாளை நிறைவு செய்யாக் கிழவனோ இருக்கமாட்டார்கள்; ஏனெனில் சிறுவன் நூறு வயதினனாய் இறப்பான்; நூறு வயதுள்ள பாவியோ சபிக்கப்படுவான்.

21 அவர்கள் வீடுகள் கட்டிக் குடியிருப்பார்கள்; திராட்சைச் கொடிகளை நட்டு அவற்றின் கனிகளை உண்பார்கள்.

22 வேறொருவன் குடியிருக்கும்படி அவர்கள் வீடு கட்ட மாட்டார்கள்; அந்நியன் சாப்பிடும்படி திராட்சைக் கொடிகளை நடமாட்டார்கள். மரங்களின் வயதைப் போல நம்முடைய மக்களின் நாட்களும் இருக்கும்; நம்மால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் தங்கள் வேலைகளின் பயனைத் துய்ப்பார்கள்.

23 அவர்கள் வீணுக்கு உழைப்பதில்லை; அழிவதற்கென்று பிள்ளைகளைப் பெற மாட்டார்கள்; ஏனெனில் அவர்கள் ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களின் வழித் தோன்றல்கள்; அவர்களுடைய புதல்வர்களும் அத்தகையவர்களே.

24 அவர்கள் கூக்குரலிடுவதற்கு முன்பே நாம் செவிசாய்ப்போம்; அவர்கள் இன்னும் பேசிக்கொண்டிருக்கும் போதே நாம் அவர்களுடைய மன்றாட்டைக் கேட்போம்.

25 ஓநாயும் செம்மறியும் ஒன்றாய் மேயும்; சிங்கமும் மாடும் வைக்கோலைத் தின்னும். பாம்புக்கு மண் உணவாகும்; நமது பரிசுத்த மலையெங்கும் அவை யாரையும் துன்புறுத்த மாட்டா, கொலை செய்யமாட்டா, என்கிறார் ஆண்டவர்."

அதிகாரம் 66

1 ஆண்டவர் கூறுகிறார்: "வானம் நம்முடைய அரியணை, பூமி நம்முடைய கால் மணை; அப்படியிருக்க, நீங்கள் நமக்கெனக் கட்டும் கோயில் எங்கே? நாம் வீற்றிருக்கும் இந்த இடந்தான் யாது?

2 இவற்றையெல்லாம் நமது கையே படைத்தது; இவையனைத்தும் நம்மால் உண்டாக்கப்பட்டவை, என்கிறார் ஆண்டவர். உள்ளம் வருந்தி, நம் சொற்களுக்கு அஞ்சி நடுங்குகிற எளியவனுக்கன்றி வேறெவனுக்கு இரக்கம் காட்டுவோம்?

3 "மாட்டை வெட்டிப் பலியிடுவோன் நமக்கு மனிதனைக் கொலை செய்பவன் போலாம்; ஆட்டை வெட்டுகிற ஒருவன் நாயை மூளை சிதற அடிப்பவன் போலாம்; காணிக்கை ஒப்புக்கொடுக்கிறவன் பன்றியின் இரத்தத்தை ஒப்புக் கொடுப்பவன் போலாம்; தூபக் காணிக்கை தரக் கருத்துள்ளவன் சிலையை வாழ்த்தித் தொழுபவன் போலாம்; தங்கள் போக்கின்படியே இவற்றையெல்லாம் தேர்ந்துகொண்டனர், அருவருப்பானவற்றில் அவர்களின் உள்ளம் இன்பம் கண்டது.

4 ஆதலால் நாம் அவர்களுக்குத் துன்பங்களைத் தருவோம், அவர்கள் அஞ்சுகின்றவற்றை அவர்கள்மேல் வரச் செய்வோம்; ஏனெனில் நாம் கூப்பிட்டோம், அவர்களுள் பதில் தருபவன் ஒருவனுமில்லை; நாம் பேசினோம், அவர்கள் கேட்கவில்லை; நம் கண்கள் முன்பாகத் தீமை செய்தார்கள், நமக்கு விருப்பமில்லாதவற்றில் அவர்கள் இன்பம் கண்டார்கள்."

5 ஆண்டவருடைய வாக்கைக் கேட்டு அஞ்சுகிறவர்களே, அவர் சொல்வதைக் கேளுங்கள்: "நமது திருப்பெயரை முன்னிட்டு உங்களைப் பகைத்து வெறுத்துத் தள்ளும் உங்கள் சகோதரர்கள், 'ஆண்டவர் மகிமைப்படுத்தப்படட்டும். உங்கள் மகிழ்ச்சியைக் கொண்டு அவரை நாங்கள் கண்டு கொள்வோம்' என்றார்கள்; ஆனால் அவர்கள்தான் வெட்கிப் போவார்கள்.

6 இதோ, நகரத்திலிருந்து ஓர் இரைச்சல்! திருக்கோயிலினின்று ஒரு குரலொலி கேட்கிறது! தம் பகைவர்களுக்குப் பிரதிபலன் கொடுக்கும் ஆண்டவரின் குரலொலி கேட்கின்றது!

7 சீயோன் பிரசவ வேதனைப்படு முன்னே பிள்ளை பெற்றாள், பிரசவ நேரம் வருமுன்பே ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள்.

8 இத்தகைய நிகழ்ச்சியை யாரேனும் கேட்டதுண்டோ? இதைப் போன்றது ஒன்றை யாரேனும் கண்டதுண்டோ? ஒரே நாளில் ஒரு நாட்டைப் பெற்றெடுக்க முடியுமோ? ஒரே நொடியில் மக்களினம் ஒன்றைப் பிறப்பிக்க முடியுமோ? ஆயினும் சீயோன் பிரசவ வேதனையுற்றவுடனே தன் பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள்.

9 பேறு காலத்தை நெருங்கச் செய்துவிட்டுப் பிள்ளை பிறக்காமல் செய்து விடுவோமோ? என்கிறார் ஆண்டவர்; பிரசவ வேதனையைக் கொடுத்து விட்டுப் பிள்ளை பிறக்காமல் தடுத்து விடுவோமோ? என்கிறார் உன் கடவுள்.

10 யெருசலேமுடன் சேர்ந்து மகிழ்ச்சியடையுங்கள், அவள் மேல் அன்பு கொண்ட அனைவரும் அக்களியுங்கள்; அவளைக் குறித்துத் துயரப்படும் நீங்கள் எல்லோரும் அவளோடு சேர்ந்து அகமகிழுங்கள்.

11 அப்பொழுது, அவளுடைய ஆறுதலின் கொங்கைகளில் பால் குடித்து நீங்கள் நிறைவடைவீர்கள்; அவளுடைய மகிமையின் பெருக்கினின்று இன்பமாய்ப் பருகி மிகுதியாய்த் திளைத்திருப்பீர்கள்."

12 ஏனெனில் ஆண்டவர் கூறுகிறார்: "இதோ, ஆற்றுப் பெருக்கு போல் அவள் மேல் சமாதானத்தை நாம் பொழிந்திடுவோம்; மடை புரண்டோடும் வெள்ளம் போல் அவள் மேல் மக்களினங்களின் மகிமையை ஓடச் செய்வோம்; அவள் பாலை அருந்துவீர்கள், மார்போடணைக்கப்படுவீர்கள், மடிமேல் சீராட்டப் பெறுவீர்கள்.

13 தாயானவள் தன் மகவைச் சீராட்டுவது போல நாம் உங்களுக்கு ஆறுதல் தருவோம், நீங்களும் யெருசலேமில் தேற்றப்படுவீர்கள்.

14 இவற்றை நீங்கள் காண்பீர்கள், உங்கள் இதயமும் மகிழ்ச்சி கொள்ளும்; உங்கள் எலும்புகள் புல்லைப் போலப் பசுமை பெற்றெழும், ஆண்டவர் தம்முடைய ஊழியர்களுக்கு தமது வல்லமையுள்ள கரத்தைக் காட்டுவா; தம் பகைவர் மேல் கோபத்தைக் கொட்டித் தீர்ப்பார்.

15 இதோ ஆண்டவர் நெருப்பு மயமாய் வருவார், அவருடைய தேர்கள் புயல்காற்றுப் போலக் கிளம்பும்; தமது கோபத்தைக் கடுமையாய்க் காட்டவும், தமது பழியைத் தீத்தழலில் செயலாற்றவும் வருவார்.

16 ஏனெனில் தீயினால் ஆண்டவர் தீர்ப்பிடுவார், தம் வாளினால் மனிதர் யாவர்க்கும் தீர்ப்பு வழங்குவார்; ஆண்டவரால் கொலையுண்டவரின் தொகை கணக்கிலடங்காது.

17 சோலைக்குள் சென்று தொழுவதற்காகத் தங்கள் நடுவிலுள்ள ஒருவன் சொற்படி தங்களைச் சுத்திகரம் செய்து தூய்மையாக்கிக் கொள்பவர்களும், பன்றி இறைச்சியையும் அருவருப்பானதையும் சுண்டெலியையும் தின்கிறவர்களும் ஒருங்கே அழிக்கப்படுவார்கள், என்கிறார் ஆண்டவர்.

18 அவர்களுடைய செயல்களையும் எண்ணங்களையும் நாம் அறிவோம்; வேற்றினத்தார், பிறமொழியினர் அனைவரையும் கூட்டிச் சேர்க்க நாமே வருகிறோம்; அவர்கள் கூடி வந்து நம்முடைய மகிமையைக் காண்பார்கள்.

19 அவர்கள் நடுவில் ஓர் அடையாளத்தை நாட்டுவோம்; அவர்களுள் மீதியாய் இருப்பவர்களை ஆப்பிரிக்காவுக்கும், வில் வீரர்கள் வாழும் லீதியாவுக்கும், தூபால், கிரீஸ் நாடுகளுக்கும், தொலைவிலுள்ள தீவுகளுக்கும், நம் திருப்பெயரைக் கேட்டிராதார், நம் மகிமையைக் கண்டிராதார் அனைவரிடமும் அனுப்புவோம்; அவர்களும் மக்களினங்களுக்கு நம் மகிமையை வெளிப்படுத்துவார்கள்.

20 அவர்கள் ஆண்டவருக்கு உகந்த காணிக்கையாக எல்லா மக்களினங்களினின்றும் உங்கள் சகோதரரைச் சேர்த்து, இஸ்ராயேல் மக்கள் காணிக்கைகளைச் சுத்தமான பாத்திரத்தில் ஏந்தி ஆண்டவரின் கோயிலுக்குக் கொண்டு வருவது போல் அவர்களைக் குதிரைகள் மேலும் தேர்களின் மீதும், பல்லக்குகளிலும், கழுதைகள் மேலும், ஒட்டகங்கள் மேலும் ஏற்றி யெருசலேமிலுள்ள நமது பரிசுத்த மலைக்குக் கொண்டுவருவார்கள், என்கிறார் ஆண்டவர்.

21 அவர்களுள் சிலரை அர்ச்சகர்களாகவும், லேவியராகவும் தேர்ந்து கொள்வோம், என்கிறார் ஆண்டவர்.

22 நாம் படைக்கும் புதிய வானமும் புதிய பூமியும் நம்முன் நிலைபெயராதிருக்கப் போவது போல், உங்கள் சந்ததியும் பெயரும் நிலைபெயராதிருக்கும், என்கிறார் ஆண்டவர்.

23 அமாவாசை தோறும் ஓய்வு நாள் தோறும் மனிதர் அனைவரும் வந்து, நம் திருமுன் வழிபாடு செய்வர், என்கிறார் ஆண்டவர்.

24 அவர்கள் புறப்பட்டுப் போய், நமக்கெதிராய்த் துரோகம் செய்தவர்களின் பிணங்களைக் காண்பர்; அவர்களைத் தின்னும் அரிபுழு சாகாது, அவர்களை எரிக்கும் நெருப்பு அவியாது; மனிதர் அனைவரும் அருவருக்கும் காட்சியாக எக்காலத்தும் இப்படியே இருப்பார்கள்."