மூன்றாம் காட்சிக்குரிய நாளும் நெருங்கி விட்டது! ஜூலை மாதம் 12-ம் நாள். அன்று பிற்பகலில் லூஸியா கோவா தா ஈரியா வுக்குத் தான் வரவில்லை என்று மற்ற இருவரிடமும் அறிவித்தாள். லூஸியா இப்படிச் சொல்வாள் என்று பிரான்சிஸும், ஜஸிந்தாவும் எதிர்பார்க்கவில்லை.
அவர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியும், வேதனையுமாயிருந்தது. அவர்கள் கண்டது கேட்டது எல்லாம் பசாசின் தந்திரமாக இருக்க முடியும், முடியாது என்பது பற்றி மூவருக்குள்ளும் ஒரு விவாதமே நடைபெற்றது.
“அது பசாசென்று உனக்கு எப்படித் தெரியும்? அந்தப் பெரிய ஒளியில் நம் அம்மாவையும், நமதாண்டவரையும் நீ பார்க்க வில்லையா? நீ இல்லாமல் நாங்கள் அங்கே எப்படிப் போக முடியும்? நீதானே பேச வேண்டும்?” என்று கேட்டான் பிரான்சிஸ்.
“நான் வரவில்லை” என்றாள் லூஸியா.
“நான் போகத்தான் போகிறேன்” என்றான் பிரான்சிஸ் உறுதியுடன்.
“நானும் போவேன். அந்த அம்மா வரச் சொன்னார்கள் தானே?” என்றாள் ஜஸிந்தா.
பின்னர் சற்று நேரம் கழித்து பிரான்சிஸ் லூஸியாவைக் கண்டு,
“லூஸியா, நாளைக்கு நீ வருவாயல்லவா?” என்றான்.
“நான் வர மாட்டேன். இனிமேல் அங்கு போவதில்லை என்று நான் சொல்லவில்லையா?” என்றாள் லூஸியா.
பிரான்சிஸ் மீண்டும் லூஸியாவின் மனதை மாற்ற முயன்றான். “அது பசாசாக இருக்க முடியாது என்பது உனக்குத் தெரியவில்லையா? சர்வேசுரன் ஏற்கெனவே எத்தனையோ பாவங்களைப் பற்றி மிகத் துயரமாயிருக்கிறார். இப்போ நீ அங்கு வராவிட்டால், அவர் மேலும் அதிக துயரமடைவார்” என்றான்.
“நான் திட்டமாகச் சொல்கிறேன், அங்கு நான் வர மாட்டேன்.”
இந்தத் தீர்மானத்துடனேயே லூஸியா இருந்தாள். மறுநாள் காலையிலும் அவள் தீர்மானம் தளரவில்லை. ஆடுகளை மேய்ச் சலுக்கு அவிழ்க்கும் நேரம் வந்தது. அப்போதுதான் லூஸியாவின் மனதில் ஒரு திடீர் மாற்றம் ஏற்பட்டது. ஜஸிந்தாவையும், பிரான்சிஸையும் உடனே பார்க்க வேண்டும் போலிருந்ததால் அவள் நேரே மார்ட்டோ வீட்டை நோக்கி ஓடினாள். அங்கே ஒரு கட்டிலருகில் ஜஸிந்தாவும், பிரான்சிஸும் முழங்காலிலிருந்தபடி ஒரே அழுகையாக அழுது கொண்டிருந்தார்கள்.
“நீங்கள் போகவில்லையா?” என்று கேட்டாள் லூஸியா.
“நீ இல்லாமல் அங்கு செல்ல எங்களால் முடியவில்லை.”
“என் எண்ணத்தை மாற்றிவிட்டேன். நான் வருகிறேன்” என்று லூஸியா அறிவித்தாள். லூஸியா இப்படிச் சொல்லவும் மற்ற இருவரும் மகிழ்ச்சியுடன் எழுந்தனர். முந்திய இரவு முழுவதும் அவர்கள் லூஸியாவுக்காகச் செய்த மன்றாட்டு கேட்கப்பட்டது. மூவரும் துரிதமாகப் புறப்பட்டனர்.
அல்யுஸ்திரலிலிருந்து கோவா தா ஈரியாவுக்குள்ள இரண்டு மைல் தூரத்தையும் சீக்கிரமே நடந்து அங்கு சேரவும், அங்கு முன்கூட்டியே கூடியிருந்த பெருந்திரளான மக்களைக் கண்டனர். 2000 முதல் 3000 வரை கொண்ட பெருங்கூட்டம்! ஆட்கள் இன்னும் வந்து கொண்டேயிருந்தனர்.
குழந்தைகள் வீட்டிலிருந்து புறப்பட்ட பின் ஒலிம்பியாவும், மரிய ரோஸாவும் சேர்ந்து கோவா தா ஈரியாவுக்குச் சென்றார்கள். தங்கள் பிள்ளைகள் காட்சி காண்பதை நேரடியாகப் பார்க்க அவர்களுக்கும் விருப்பம் இருந்தது. ஆனால் காட்சிகள் பசாசின் வேலையென்று பங்குக் குரு கூறியதால் அவர்கள் மந்திரித்த மெழுகு திரிகளையும் தங்களுடன் எடுத்துச் சென்றார்கள்.
மார்ட்டோவும் யாரிடமும் சொல்லாமல் அங்கு வந்தார். கூட்டத்தைப் பார்த்ததும் மலைத்து விட்டார். சற்று சிரமத்துக்குப் பின் அக்கூட்டத்தில் தம் மனைவியையும், மரிய ரோஸாவையும் கண்டது அவருக்கு ஆச்சரியமாயிருந்தது. அவர் தம் பிள்ளைகளின் அருகாமையில் நின்றுகொண்டார்.
குழந்தைகளோ யாரையும் கவனிக்கவில்லை. அவர்கள் ஜெபமாலை சொல்வதில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் பார்வை கிழக்குத் திசையை எதிர்நோக்கிய வண்ணம் இருந்தது. அவர்களருகில் ஒரு முரட்டுப் பெண் வந்து அவர்களை ஏமாற்றுக்காரர்கள் என்று வைததைக் கூட அவர்கள் கவனித்ததாகத் தெரியவில்லை.
லூஸியாவின் முகம் வெளிறிப் போயிருந்தது.
“உங்கள் தொப்பிகளை அகற்றுங்கள். அம்மா வருவதைக் காண்கிறேன்” என்று அவள் கூறியதை மார்ட்டோ கேட்டார். அதோடு ஒரு சிறு மேகம் அந்த அஸின்ஹேரா மரத்தில் வந்து தங்குவதையும் கண்டார். திடீரென சூரிய வெளிச்சம் மங்கியது. ஒரு குளிர்ந்த காற்று வீசி வெப்பத்தைத் தணித்தது. ஏதோ ஒரு வண்டின் இரைச்சல் போல் ஒலி கேட்டது. ஆனால் எந்த வார்த்தையும் கேட்க வில்லை.
இதற்குள் அம்மூன்று குழந்தைகளும் உலகத்தை விட்டுப் பிரிக்கப்பட்டவர்கள் போல் பரவச நிலையடைந்தனர். தேவ அன்னையின் காட்சியைக் கண்டனர்.
“உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டாள் லூஸியா.
“அடுத்த மாதம் 13-ம் நாளில் நீங்கள் இங்கு வர வேண்டும். உலகிற்கு சமாதானத்தைப் பெற்றுக்கொள்ளவும், யுத்தம் முடிவடையவும், தேவதாயின் மகிமைக்காக ஜெபமாலையைத் தினமும் தொடர்ந்து சொல்லி வாருங்கள். ஏனென்றால் தேவதாய் மட்டுமே இவற்றைப் பெற்றுத் தர முடியும்” என்றார்கள் தேவ அன்னை.
“அம்மா, நீங்கள் யார் என எங்களுக்குச் சொல்லுங்கள். நீங்கள் எங்களுக்குக் காணப்படுகிறீர்கள் என்று எல்லாரும் நம்பும்படி ஒரு புதுமை யைச் செய்யுங்கள்” என்றாள் லூஸியா.
“இங்கு மாதந்தோறும் தொடர்ந்து வாருங்கள். அக்டோபர் மாதம் நான் யாரென்றும், என்ன விரும்புகிறேன் என்றும் சொல்வேன். எல்லோரும் நம்பும்படி ஒரு புதுமையும் செய்வேன்” என்று கூறினார்கள் அன்னை.
இதன்பின் லூஸியாவிடம் சிலர் கூறியிருந்த விண்ணப்பங்களை அவள் தேவதாயிடம் தெரிவித்தாள். 1941-ம் ஆண்டில் இதுபற்றி அவள் எழுதும்போது, அவ்விண்ணப்பங்கள் எவை என்பது தனக்கு மறந்து விட்டதாகக் குறிப்பிடுகிறாள். அவற்றுள் ஒன்று இதுவாக இருக்கலாம். அதாவது மரிய கரெய்ரா என்ற பெண்ணின் மகன் அங்கயீனமுற்றிருந்தான். அவனுக்கு சுகமளிக்குமாறு அப்பெண் லூஸியா வழியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
லூஸியா அதுபற்றி தேவ அன்னையிடம் கூறியபோது, அவனைத் தான் குணமாக்கப் போவதில்லை. ஆனால் அவன் தினமும் ஜெபமாலை ஜெபித்து வந்தால், அவன் வாழ்க்கைக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதாக தேவதாய் கூறினார்கள்.
இக்காட்சியில் மிக முக்கியமாக லூஸியாவுக்கு உணர்த்தப் பட்டது யாதெனில், ஆண்டு முழுவதும் கடவுளின் அருள் வரங்களைப் பெற்றுக் கொள்வதற்கு தினமும் ஜெபமாலை செய்ய வேண்டும் என்பதே.
மீண்டும் நம் அன்னை அம்மூன்று குழந்தைகளையும் பார்த்து: “பாவிகளுக்காக உங்களைப் பலியாக்குங்கள். அடிக்கடி, குறிப்பாக நீங்கள் ஏதாவது ஒரு பரித்தியாகம் செய்யும்போது: “ஓ சேசுவே! உமது அன்பிற் காகவும், பாவிகள் மனந்திரும்பவும், மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு எதிராகச் செய்யப்படும் பாவங்களுக்குப் பரிகாரமாகவும் இதைச் செய்கிறேன்” என்று சொல்லுங்கள்” என்றார்கள்.
✠ காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம் ✠ கத்தோலிக்கத்தின் பாரம்பரியம் காப்போம் ✠
- 🏠 முகப்பு பக்கம்
- திருப்பலி
- திவ்விய நற்கருணை
- பரிசுத்த வேதாகமங்கள்
- வேதாகமங்கள் அப்ளிகேஷன்
- தேவமாதா
- புத்தக அப்ளிகேஷன்
- YouTube
- கூகிள் பிளே ஸ்டோர்
- தேவமாதா சர்வதேச வானொலி
- வானொலி அப்ளிகேஷன்
- ஆலயம் அறிவோம்
- செபங்கள்
- தவக்காலம்
- புனிதர்கள்
- பாடல்கள்
- ஞானோபதேசம்
- Kilachery Parish
- இசைத்தட்டு
- English Books
- Disclaimer
- Contact Us
- Donation
பாத்திமா காட்சிகள் - அன்னையின் மூன்றாம் காட்சி
Posted by
Christopher