புனித தோமையாரின் பயணம்

"உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்'' என்று தம் அப்போஸ்தலர்களுக்குக் கட்டளையிட்டார் இயேசு. அந்தக் கட்டளையின்படி பன்னிரு அப்போஸ்தலரும் தாம் தாம் போகுமிடங்களைத் தெரிந்து கொள்ளும் பொருட்டுத் திருவுளச் சீட்டுப் போட்டனர்.

தோமையார் பேருக்கு இந்தியா விழுந்தது. அவருக்கு அங்கு செல்ல விருப்பமில்லாததால் "அவ்வளவு தூரம் போக எனக்கு வலிமையில்லை. பின்னும் நானோ எபிரேயன். இந்தியருக்குப் போதிப்பது எப்படியாகும்?'' என்று கூறினார். ஆயினும், தேவ சுதனைப் பின்பற்றித் தேவ ஊழியம் செய்ய ஆசை கொண்ட அப்போஸ்தலர் அவர். தம் ஆண்டவரின் மட்டில் பற்றுதல் உள்ளவர். அவரது அலுவலில் ஊக்கங் குன்றாதவர் இவை உண்மையென முன் கூறிய அத்தியாயத்தில் கண்ட வேதாகம வாக்கியங்களால் நன்கு விளங்கும் ஆகவே, சற்று ஆலோசித்த பின்னர் தடங்கல்களைத் தவிர்த்துச் சுவிசேஷத்தைப் போதிக்கத் தோமையார் இந்தியாவை நோக்கிப் புறப்பட்டார்.

முதன் முதல் காஸ்பியன் கடலுக்குத் தென்பாகமுள்ள நாடுகளிலும், அர்மேனியா திகிரிஸ் மலைச்சாரலின் கீழ்ப்பக்கமுள்ள நாடுகளிலும் தொடங்கித் தென் பெர்சியாவின் கண்ணுள்ள கார்மீனா வரையிலும் வேதம் போதித்தாரென்பது வரலாற்றின் கூற்று. கன்னிமரியாள் இறக்கும் போது அப்போஸ்தலர் திரும்பவும் பலஸ்தீன் நாட்டில் ஒன்று கூடினர். ஆதித் திருச்சபைக்குத் துணையாயிருந்து வந்த தேவதாயின் விண்ணேற்புக்குப்பின் அப்போஸ்தலர்கள் தத்தம் அலுவல்களை த் தொடர்ந்து நடத்த ஆரம்பித்தனர்.

இதுவரையில் தோமையார் மிதியர், பெர்சியர், ஹிரேனியர் பாக்திரீயர் முதலிய பல இனத்தார்களுக்கு ஞானவாழ்வு அளித்துள்ளார். இப்போது இந்தியாவுக்கே போவதாவென்று யோசித்துக் கொண்டிருக்கையில், ஆண்டவர் அவருக்குத் தோன்றி, “தோமா ! நீ இந்தியாவுக்கே போவாயாக! அவ்விடம் உள்ளோருக்கு நித்திய வாழ்வின் ஒளியை வீசுவாயாக'' என்று விளம்பினார். " என் ஆண்டவரே! வேறெந்த இடத்திற்காகிலும் போகும்படி கற்பிப்பீராக. இந்தியாவோ எனக்கு அச்சத்தை உண்டு பண்ணுகின்றது. அங்கு வேண்டாம்'' என்று கெஞ்சி மன்றாடினார் தோமையார். "தோமா! நான் அங்கேயிருப்பேன் அஞ்சாதே. உன்னால் என் பெயர் மகிமைப் படுத்தப்படும். இந்தியாவிலுள்ள பல இனத்தார் மத்தியில் என்னைப்பற்றிப் போதிப்பாய். எனக்காக நல் யுத்தம் செய்வாயாக. அதன் பின் உன் சகோதரர்களோடு நித்திய ஆனந்தம் சுகிக்க உன்னை அழைத்துக் கொள்வேன். நான் தான் அவர்களுடைய ஆண்டவரும் இரட்சகரும் என்று இந்தியர்களுக்குக் காட்ட நீ பெரும்பாடு பட வேண்டிவரும்; அஞ்சாதே'' என்று தைரியம் அளித்தார் இயேசு பரமன்.

தோமையார் : ஆண்டவரே! உம் அடியானை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டாம். வெகு தூரம்; வழியோ மிகக்கடினம்.

இயேசு: "தோமா! நீ போவாயாக! நான் உன்னுடன் இருப்பேன்''.

இதைக் கேட்டவுடன் தோமையார் இயேசுவின் பாதத்தில் வீழ்ந்து "என் ஆண்டவரே! என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேறக் கடவது'' என்று பணிவுடன் பகர்ந்தார்.

ஆகவே, அலெக்சாந்திரியா - சுயெஸ் வழியாகப் பயணம் செய்து இந்தியாவுக்கு வந்தார் என்பது பாரம்பரை. எங்கு சென்றாலும் தம் எஜமானனின் கட்டளையின்படி சுவிசேஷத்தைப் போதிக்கக் கங்கணங்கட்டி நின்றவராகையால், தோமையார் வரும் வழியில் ஏதென். சொக்கோத்ரா என்ற இடங்களில் சத்தியவேதத்தைப் போதித்துப், பலரை மெய்ம் மறையில் சேர்த்துள்ளார். 1542 ஆம் ஆண்டு புனித சவேரியார் சொக்கோத்ரா தீவுக்குப்போன பொழுது பெருந்தொகையான கிறிஸ்தவர்கள் அங்கு இருந்தது இதற்குச் சான்று.

நிற்க, புனித தோமையாரின் இந்தியப் பயணத்தைப் பற்றி விரிவாய் ஆராய்வோம்.