இந்திய நாடு - இந்திரபட்டணம்

தோமையார் இந்தியாவுக்குப் போகவேண்டும் என்பது இயேசுநாதர் இட்ட கட்டளை. அதனைச் சிரமேற் கொண்டு உடனே எழுந்து சென்றார் இராயப்பரிடம்; பெற்றார் விடை; புறப்பட்டார் பயணம். செசரேயாவுக்கு வந்ததும், அங்கு ஒரு வியாபாரியைச் சந்தித்தார். அவன் பெயர் ஹாபான், யூதகுலத்தோன். கொந்தபோரஸ் அரசனின் தூதன். சிரியா நாட்டிற்கு வணிகக் கப்பலோடு இந்திய அரசனாகிய கொந்தபோரஸ் அவனை அனுப்பியிருந்தான். கடலோரமாக உலாவிக் கொண்டிருந்த ஹாபான், அப்போஸ்தலரைக் கண்டதும் அருகில் சென்று, "புண்ணியரே, என்னிடத்தில் உமக்குத் தேவையானது என்ன?" என்று வினவினான்.

தோமையார் "உமது கப்பலில் என்னை இந்தியாவுக்கு ஏற்றிக்கொண்டு போகத் தயை செய்வீரா?"

ஹாபான்: "நல்லது, அப்படியே ஆகட்டும்” என்றான்.

இருவரும் கப்பலில் ஏறிக்கொள்ளவே பயணம் ஆரம்பித்தது. காற்றும் அநுகூலமாயிருந்தது. கப்பல் செவ்வனே சென்றது. வரும் வழியில் ஏதேனிலும், சொக்கோத்ராவிலும் இறங்கினர் : அங்கு தோமையார் பலரை மனந்திருப்பினார். அங்கிருந்து புறப்பட்டு ஏறக்குறைய மூன்று மாதகாலம் கடற் பிரயாணம் செய்து, கடைசியாக இந்தியா கிட்டியதை அறியவே, கண்டார் கரையை; கொண்டார் ஆனந்தம் கப்பலுங் கரைசேர்ந்தது. இந்திரபட்டணத்தின் துறை முகத்தில் நங்கூரம் இறக்கப்பட்டது.

பண்டைய காலத்தில் அந்திரப் போலிஸ் என்றும் அதற்குப்பின் இந்திரபட்டணம் என்றும் வழங்கப்பட்டு வந்த ஊர் ஒன்றே: அவ்வூரானது இப்போது கராச்சி என்று அழைக்கப்படுகின்றது என்பது வரலாற்று ஆசிரியரின் துணிபு. இந்திரபட்டணம் இந்தியாவின் ஒரு பாகமாகிய சிந்துவுக்கு முக்கியமான ஒரு பட்டண ம். ஆகவே தோமையார் இந்தியாவிற்குள் வந்துவிட்டது வெளிப்படை.

பிரயாணிகள் கப்பலைவிட்டுக் கரையிலிறங்கிப் பட்டணத்தை நோக்கிச் செல்கின்றார்கள். மேளதாள வாத்திய தொனி காதிற்கு எட்டுகின்றது. தோமையார், "இந் நகரில் இன்று என்ன கொண்டாட்டம்?" என்று வினவினார். "உமக்கு மகிழ்ச்சி உண்டாகும் படி இன்று உம்மைத் தேவர்கள் தான் இந்த இடத்திற்குக் கொண்டுவந்திருக்க வேண்டும். ஏனெனில், எங்கள் அரசனின் ஒரே மகளுக்கு இன்று திருமணம். நீர் கேட்டதெல்லாம் கலியாணக் கொண்டாட்டத்தின் ஆரவாரமே " என்று பதில் அளிக்கப்பட்டது.

ஹாபானும் அப்போஸ்தலரும் ஊரில் வந்திறங்கி விடுதியிலிருப்பதை அறிந்த அரசன் அவர்களைக் கலியாண விருந்திற்கு அழைத்தான். அவர்கள் அரண்மனை அடைந்ததும் அரசன் அப்போஸ்தலரை அணுகி, பூமாலை சூட்டி உபசரித்து, மேசையின் முதன்மையான இடத்தில் இருக்கச் செய்தான். ஹாபானுக்குக் கீழிடம் அளிக்கப்பட்டது. அங்கு பரிமாறப்பட்ட உணவுப் பொருட்களையாவது, பானங்களையாவது புனித அப்போஸ்தலர் அருந்தவில்லை. ஆனால் விருந்தினர் கள் மீது தேவ ஆசீர்வாதம் இறங்கும் வண்ணம் தன் இருதயத்தில் தேவனைப்பார்த்துச் செபித்திருந்தார்.

உணவு அருந்திய பின் அப்போஸ்தலர் எழுந்து எபிரேய மொழியில் செபம் செய்தார். அதன் பொருள் ஒருவருக்கும் விளங்கவில்லை. ஆனால் குழல் ஊதும் ஒரு சிறு யூதப் பெண் மட்டும் அறியலானாள். விருந்தினர் விடைபெற்று ஏகியபின், அரசன் தோமையாரை நோக்கி, "கடவுளுக்கு உகந்த புண்ணியரே! என் மகளை ஆசீர்வதித்தருள உம்மை மன்றாடுகிறேன். ஏனெனில், அவள் என் ஒரே புதல்வி; இன்று அவளுக்குக் கலியாணமாகின்றது" என்றான்.

உடனே கலியாணப் பந்தலுக்கு அழைத்துக் கொண்டு போகப்பட்டார். தம்பதிகள் அவர் முன் முழந்தாளிட்டு தலை குனிந்திருக்க, அப்போஸ்தலர் அவர்கள் தலையின் மேல் கை வைத்துப் பின் வருமாறு செபிக்கலானார் " ஆபிரகாம், ஈசாக், யாக்கோபின் கடவுளே, இவ்விருவரையும் ஆசீர்வதித்தருளும். அவர்கள் இருதயத்தில் நித்திய வாழ்வின் விதையை விதைத்தருளும். அவர்களுக்கு எவை எவை நன்மையாயிருக்குமோ அவற்றை அருள்வீராக. அவர்கள் எஞ்ஞான்றும் உமது திருவுளப்படி நடப்பார்களாக அவர்கள், இரட்சகராகிய இயேசுவின் பெயரால் பரிசுத்த ஆவியின் கொடைகளால் நிரப்பப்பெற்று உமது அருளால் நடத்தப்பட்டு வருவார்களாக '' பின்னர் கை விரித்த வண்ண ம், "எங்கள் ஆண்டவர் உங்களோடிருப்பாராக'' என்று மனமுவந்து ஆசீர்வதித்தார். இது முடிந்ததும் கலியாண வீட்டை விட்டு வெளியே சென்றார்.