புலம்பல் ஆகமம்

அதிகாரம் 01

1 முதல் புலம்பல்: ஆலேஃப்: மக்கள் மலிந்த நகரமாயிருந்தவள் எவ்வளவோ தனியள் ஆனாளோ! மக்கள் இனங்களின் பேரரசி கைம்பெண் நிலைக்கு நிகரானாள்; மாநிலங்களுக்குத் தலைவியாயிருந்தவள் அடிமை நிலைக்கு உள்ளானாள்.

2 பேத்: இரவெல்லாம் இடைவிடாது அழுத கண்ணீர் அவள் கன்னங்களில் ஒடி வழிகின்றது; காதலர் அவளுக்குப் பலரிருந்தும், தேற்றுவோன் அவருள் எவனுமில்லை, நண்பர்கள் யாவரும் அவளை வஞ்சித்துப் பகைவராய் மாறிப் போனார்கள்.

3 கீமேல்: யூதா, நாடுகடத்தப்பட்டுத் துன்பத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் ஆளானாள்; புறவினத்தார் நடுவில் குடியிருக்கின்றாள், அமைதி காணாதிருக்கின்றாள்; கொடுங்கோலர் அவளைத் துரத்திப் போய்த் துன்பத்தின் நடுவில் பிடித்தார்கள்.

4 தாலேத்: திருவிழாக்களுக்கு வருவோர் இல்லாமையால் சீயோன் செல்லும் வழிகள் புலம்புகின்றன; அவள் வாயில்கள் யாவும் கைவிடப்பட்டன, அவளுடைய அர்ச்சகர்கள் விம்முகின்றனர்; அவளுடைய கன்னிப் பெண்கள் துயருறுகின்றனர், அவளோ வேதனையால் நெருக்கப்படுகிறாள்.

5 ஹே: அவளுடைய எதிரிகள் தலைமை பெற்றார்கள், பகைவர்கள் வாழ்க்கையில் வளம் பெற்றார்கள்; அவளது எண்ணற்ற அக்கிரமத்தை முன்னிட்டு ஆண்டவரே அவளைத் துன்புறுத்தினார். அவளுடைய குழந்தைகள் கொடியவன் முன்னால் அடிமைத்தனத்திற்கு ஆளானார்கள்.

6 வெள: சீயோன் மகளின் சிறப்பெல்லாம் அவளை விட்டு நீங்கின; அவளுடைய தலைவர்கள் அனைவரும் மேய்ச்சலற்ற கலைமான்கள் போலாயினர்; துரத்துபவனின் முன்னிலையில் ஆண்மையிழந்து ஒடினார்கள்.

7 ஸாயின்: துன்பத்தின் கசப்பு நிறைந்த நாட்களில் பண்டை நாளில் அனுபவித்த இன்ப சுகங்களை, யெருசலேம் இன்று நினைத்துப் பார்க்கிறாள்; அவளுடைய மக்கள் பகைவர் கையில் சிக்கி உதவி செய்வாரின்றி அவள் வீழ்ந்த போது, அவளைப் பார்த்துப் பகைவர் நகையாடினர்.

8 ஹேத்: யெருசலேம் மாபாவம் செய்ததினால், தீட்டுப்பட்டவள் ஆகிவிட்டாள்; அவளை மதித்து வந்தவர் எல்லாரும் அவள் அம்மணத்தைக் கண்டு வெறுத்தார்கள். அவளோ விம்மி அழுது கொண்டு பின்புறம் திரும்பிக் கொள்கின்றாள்.

9 தேத்: அவளது அசுத்தம் முன்றானையிலும் ஒட்டிக் கொண்டது, தன் முடிவு இப்படியாகுமென அவள் நினைக்கவில்லை; அவளது வீழ்ச்சியோ கொடுமையானது, தேற்றுவார் அவளுக்கு யாருமில்லை; "ஆண்டவரே, பாரும் உன் வேதனையை, பகைவன் இறுமாந்து நிற்கின்றான்!"

10 இயோத்: அவளுடைய அரும் பெரும் பொருட்கள் அனைத்தின் மேலும் பகைவன் கை வைத்து விட்டான், யார் உம்முடைய பரிசுத்த இடத்தில் நுழைதலாகாதென்று நீர் கட்டளை கொடுத்திருந்திரோ அவர்களே- அந்தப் புறவினத்தாரே- அதனில் நுழைவதைக் கண்டாள்.

11 காஃப்: அவளுடைய மக்களெல்லாம் உணவு தேடிப் பெருமூச்சு விடுகின்றனர், உயிரைக் காக்கும் உணவுக்காக, அவர்கள் தம் அரும் பொருளெல்லாம் விற்றுவிட்டார்கள்; "ஆண்டவரே, பாரும், கண்ணோக்கியருளும்; ஏனெனில் நான் தாழ்மையுற்றேன்!"

12 லாமேத்: "இவ்வழியாய்க் கடந்து செல்வோரே, நீங்கள் அனைவரும் நின்று பாருங்கள்: என்னை வாதிக்கும் துயருக்கொப்பாய் வேறேதேனும் துயருண்டோ? அந்தத் துயரை ஆண்டவரே- தம் பெருங் கோபத்தின் நாளில் எனக்குத் தந்தார்.

13 மேம்: "வானிலிருந்து என் மேல் தீயைப் பொழிந்தார், என் எலும்புகளுக்குள் அதை இறங்கச்செய்தார்; என் கால்களுக்கு வலை வீசினார், என்னைப் பின்புறமாய் வீழ்த்தினார்; அவர் என்னைப் பாழாக்கினார், நாளெல்லாம் துயரத்தில் அமிழ்ந்திருக்கச் செய்தார்.

14 நூன்: "என் அக்கிரமங்களின் நுகத்தடி என்னை அழுத்துகின்றது, அவற்றைப் பிணைத்தவை அவர் கைகளே; அவை என் கழுத்தில் வைக்கப்பட்டன. என் வலிமையெல்லாம் இழக்கச் செய்தார்; நான் எதிர்க்க முடியாத எதிரிகள் கையில் ஆண்டவர் என்னைக் கையளித்தார்.

15 சாமேக்: "திறமை மிக்க வீரர் அனைவரையும், ஆண்டவர் என்னிடமிருந்து எடுத்து விட்டார். இளங்காளைகளை அழிக்க எனக்கெதிராய் மாபெரும் கூட்டத்தை வரச் செய்தார்; திராட்சை ஆலையில் மிதிப்பது போலக் கன்னிப் பெண் யூதாவை ஆண்டவர் மிதித்தார்.

16 ஆயீன்: "ஆதலால் தான் நான் அழுகின்றேன், என் கண்களும் கண்ணீர் பெருக்குகின்றன; ஏனெனில் தேற்றுகிறவர் எனக்குத் தெலைவிலிருக்கிறார், புத்துயிரூட்டக் கூடியவர் அகன்று போனார்; என் மக்கள் நொறுங்குண்டு நாசமானார்கள், ஏனெனில் பகைவன் கை வலுத்துவிட்டது."

17 பே: தன் கைககளை சீயோன் நீட்டுகின்றாள், அவனைத் தேற்றுவார் யாருமில்லை. சுற்றுப்புறப் பகைவர்களை யாக்கோபுக்கு எதிராய் எழும்பும்படி ஆண்டவர் ஆணை தந்தார்; யெருசலேம் அவர்கள் நடுவினிலே, அசுத்தமான ஒரு பொருளுக்கு ஒப்பானாள்.

18 சாதே: "ஆண்டவர் நீதி தவறாதவர், அவரது ஆணையை நான் எதிர்த்தேன்; மக்களே, நீங்கள் அனைவரும் செவிகொடுங்கள், எனது துன்பத்தைப் பாருங்கள், என் கன்னிப் பெண்களும் இளங்காளைகளும் அடிமைகளாய்க் கடத்தப்பட்டனர்.

19 கோப்: "என்னுடைய காதலர்களை நான் கூப்பிட்டேன், ஆனால் அவர்கள் என்னை ஏய்த்தார்கள்; உயிரைக் காத்துக் கொள்ள உணவைத் தேடி நகரத்தினுள் போயிருக்கும் போதே என்னுடைய அர்ச்சகர்கள், முதியோர்கள் ஆகியோர் அங்கேயே மாய்ந்து போயினர்.

20 ரேஷ்: "ஆண்டவரே, பாரும், நான் துன்புறுகிறேன், என் வயிறு கலங்கி நடுங்குகிறது; என் இதயம் குழம்பிக் கலங்குகிறது, ஏனெனில் நான் துரோகம் செய்தேன்; வெளியிலே வாள் வெட்டி வீழ்த்துகின்றது, வீட்டிலே இருப்பது சாவதைப் போன்றுள்ளது.

21 ஷின்: "நான் விம்முவதை நீர் கேட்டருளும், தேற்றுவார் எனக்கு யாருமில்லை; என் துன்பத்தைப் பகைவரெல்லாம் கேள்விப்பட்டார், நீர் இதைச் செய்ததற்காக அகமகிழ்ந்தார்; நீர் குறிப்பிட்ட நாள் வரச் செய்யும், அப்போது அவர்கள் என்னைப் போல் ஆவார்கள்.

22 தௌ: "அவர்கள் செய்த தீமையெல்லாம் உம்முன் வரட்டும்; என்னுடைய எல்லா அக்கிரமங்களுக்காகவும் என்னை நீர் எவ்வாறு தண்டித்தீரோ, அவ்வாறே அவர்களையும் தண்டித்தருளும்; ஏனெனில் என் விம்மல்கள் மிகப் பல, என் மனத் துயர் மிகக் கொடிது."

அதிகாரம் 02

1 இரண்டாம் புலம்பல்: ஆலேஃப்: ஆண்டவர் தமது ஆத்திரத்தில், சீயோன் மகளை இருளால் மூடினாரே! இஸ்ராயேலின் மகிமையை வானினின்று தரைமட்டும் அவர் தாழ்த்தி விட்டார்; அவருக்குக் கோபம் வந்த போது தம் கால்மணையை முற்றிலும் மறந்து விட்டார்.

2 பேத்: யாக்கோபின் வீடுகள் யாவற்றையும் ஆண்டவர் இரக்கமின்றி அழித்துவிட்டார்; யூதா என்னும் மகளின் கோட்டைகளைத் தம்முடைய கோபத்தில் தகர்த்து விட்டார்; அரசையும் அதை ஆள்வோரையும் வீழ்த்திச் சாபத்துக்குள்ளாக்கினார்.

3 கீமேல்: தம்முடைய கோபத்தின் ஆத்திரத்தில் இஸ்ராயேலின் வலிமை யெல்லாம் முறித்து விட்டார்; பகைவன் எதிர்த்து வந்தபோது தம் வலக் கையைப் பின்னாலே வாங்கிக் கொண்டார்; சுற்றிலும் பிடித்தெரியும் பெருந்தீயை யாக்கோபின் நடுவிலே மூட்டிவிட்டார்;

4 தாலேத்: எதிரியைப்போல வில்லை நாணேற்றினார், தம்முடைய வலக் கையைப் பலப்படுத்தினார்; பார்ப்பதற்கு அழகாயிருந்த அனைத்திற்கும் அவரே பகைவனாகி அழித்துவிட்டார்; சீயோன் மகளுடைய கூடாரத்தின் மேல் தம் கோபத்தைத் தீ மழைபோலக் கொட்டி விட்டார்.

5 ஹே: ஆண்டவர் பகைவனைப் போல் ஆகி விட்டார், இஸ்ராயேலை வீழ்த்தி விட்டார்; அரண்கள் அனைத்தையும் தகர்த்தெறிந்தார், அதனுடைய கோட்டைகளைப் பாழாக்கினார்; யூதா என்னும் மகளுக்கு அழுகையும் ஒப்பாரியும் பெருகச் செய்தார்.

6 வெள: தோட்டத்துக் குடிசை போலத் தன் கூடாரத்தைப் பாழாக்கினார், தம்முடைய இருப்பிடத்தைத் தகர்த்தெறிந்தார்; திருநாட்களும் ஒய்வு நாட்களும் சீயோனில் ஆண்டவர் மறக்கப்படச் செய்து விட்டார். அரசரையும் அர்ச்சகரையும் தம் கோபத்தின் ஆத்திரத்தில் புறக்கணித்துத் தள்ளி விட்டார்.

7 ஸாயின்: ஆண்டவர் தம் பீடத்தின்மேல் வெறுப்புக்கொண்டார், இந்தப் பரிசுத்த இடமே வேண்டாமென்றார்; அவளுடைய அரண்மனை மதில்களையும் மாற்றானின் கைகளில் ஒப்புவித்தார்; திருவிழா நாள் போலப் பேரிரைச்சல் ஆண்டவரின் கோயிலில் எழுப்பினார்கள்.

8 ஹேத்: சீயோன் மகளின் மதிற் சுவரை ஆண்டவர் தகர்த்திடத் தீர்மானித்தார். நூல் போட்டு எல்லைகளை வரையறுத்தார், அழிக்காமல் கையை மடக்க மாட்டார்; அரணும் அலங்கமும் புலம்பச் செய்தார், இரண்டும் ஒருமிக்கச் சரிந்து விழுகின்றன.

9 தேத்: வாயில்கள் விழுந்து மண்ணில் அழுந்தின, தாழ்ப்பாள்களை அவர் முறித்தழித்தார்; அரசர்களும் தலைவர்களும் புறவினத்தாரிடை வாழ்கின்றனர், திருச்சட்டம் இல்லாமல் போயிற்று; சீயோனின் இறைவாக்கினர் காட்சியொன்றும் ஆண்டவரிடமிருந்து கண்டாரல்லர்.

10 இயோத்: சீயோன் மகளின் முதியவர்கள் பேச்சற்றுத் தரையில் அமர்ந்துள்ளார்கள்; தலையினில் சாம்பலைத் தெளித்துக் கொண்டு இடையினில் கோணி உடுத்தியுள்ளனர்; யெருசலேமின் கன்னிப் பெண்களெல்லாம் தலைகளைத் தரையில் நட்டுக் கொண்டார்கள்.

11 காஃப்: கண்ணீர் சிந்தி என் கண்கள் சோர்ந்து போயின, என்னுள்ளம் கலங்கித் துடிக்கின்றது; என் மக்களாம் மகளுடைய துயரங் கண்டு, சிறுவரும் குழந்தைகளும் தெருக்களிலே விழுவதைக் கண்டு உள்ளம் உருகிப் பாகாய்ப் பூமியில் ஒடிச் சிதைகின்றது.

12 லாமேத்: கத்தியால் குத்துண்டோர் சாய்வது போல நகரத்தின் தெருக்களில் வீழும் போதும், தங்களின் தாய்மார் மடிதனிலே ஆவியைத் துறக்கச் சாயும் போதும், தாய்மாரை நோக்கி, "உணவெங்கே?" எனக் கேட்டுக் கதறினார்கள்.

13 மேம்: யெருசலேம் மகளே! யாருக்கு நீ நிகரென்பேன்? உன்னை நான் யாருக்கு ஒப்பிடுவேன்? சீயோன் மகளே கன்னிப் பெண்ணே, உன்னை யாருக்குச் சமமாக்கித் தேற்றுவேன்? உன் அழிவு கடல் போலப் பெரிதாயிற்றே! உன்னைக் குணமாக்க வல்லவன் யார்?

14 உன் தீர்க்கதரிசிகள் உனக்குப் பொய்களையும் மடைமகளையும் பார்த்துச் சொன்னார்கள்; அடிமைத்தனத்திற்கு உள்ளாகாதபடி உன் அக்கிரமத்தை உனக்கெடுத்துக் காட்டவில்லை; பொய்யான வாக்குகளும் கற்பனைகளும் உனக்குச் சொல்லி உன்னை வஞ்சித்தார்கள்.

15 சாமேக்: இவ்வழியாய்க் கடந்து செல்லும் மக்களெல்லாம் உன்னைக் கண்டு கைகளைத் தட்டினார்கள்; யெருசலேம் மக்களைப் பார்த்துச் சீழ்க்கையடித்துத் தலையசைத்து, "நிறையழகு நகரிதுவோ? உலகுக்கெல்லாம் மகிழ்ச்சியாய் விளங்குமந்த நகரிதுவோ?" என்று அவர்கள் சொன்னார்கள்.

16 பே: பகைவரெல்லாம் உனக்கெதிராய் வாய்திறந்து பற்களை நற நறவெனக் கடித்தார்கள்; "நாமதனை விழுங்கிடுவோம், நாம் காத்திருந்த நாளும் இதோ வந்திட்டது, அதனைக் கண்டடைந்தோம், கண்களால் பார்த்தோம்" என்றார்கள்; சீழ்க்கையடித்துப் பரிகாசம் செய்திட்டார்கள்.

17 ஆயின்: ஆண்டவர் நினைத்ததை நிறைவேற்றி விட்டார், எச்சரித்ததைச் செயலிலே காட்டிவிட்டார், நெடுநாளாய்த் திட்டமிட்டிருந்தவாறே, அழித்திட்டார், இரக்கமே காட்டவில்லை; பகைவன் உன்னைப் பற்றி மகிழச் செய்தார், எதிரிகளின் வலிமையைப் பெருகச் செய்தார்.

18 சாதே: சீயோன் மகளே, ஆண்டவரை நோக்கிப் புலம்பிக் கூக்குரலிடு; இரவும் பகலும் உன் கண்களினின்று வெள்ளம் போலக் கண்ணீர் வழிந்தோடட்டும்; ஓய்வென்பது உனக்கிருக்கக் கூடாது, கண்விழிகள் சும்மாயிருக்க விட்டிடாதே.

19 கோப்: எழுந்திரு, இரவில் முதற் சாமத்தின் தொடக்கத்திலேயே குரலெழுப்பு; ஆண்டவரின் திருமுன் உன் இதயத்தை வழிந்தோடும் தண்ணீராய் வார்த்திடுக! தெரு தோறும் மூலையினில் பசியால் வாடி மயங்கிடும் உன் மக்களின் உயிருக்காக உன்னுடைய கைகளை மேலுயர்த்தி அவரிடத்தில் இப்பொழுது இறைஞ்சிடுவாய்.

20 ரேஷ்: ஆண்டவரே, பார்த்தருளும், கடைக்கண்ணோக்கும்! யாருக்கிதைச் செய்தீரென எண்ணிப்பாரும்? தம் வயிற்றின் கனிகளை- கையிலேந்திய குழந்தைகளைப் பெற்றவளே பசியினால் உண்ணவேண்டுமா? ஆண்டவரின் கோயிலில் அர்சசகரும் இறைவாக்கினரும் கொல்லப்பட வேண்டுமா?

21 ஷின்: இளைஞரும் முதியோரும் தெருக்களிலே தரையில் வீழ்ந்து கிடக்கின்றார்கள்; என்னுடைய கன்னிப் பெண்கள், வாலிபர்கள் வாளுக்கு இரையாகி மாய்ந்து விட்டார்; உம்முடைய கோபத்தின் நாளினிலே அவர்களை இரக்கமின்றிக் கொன்று போட்டீர்.

22 தௌ: எப்பக்கமும் நடுக்கம் தரும் தன் எதிரிகளைத் திருவிழாக் கூட்டம்போல் கொண்டு வந்தீர்; ஆண்டவர் சினங்கொண்ட அந்த நாளில் ஒருவனும்- தப்பவில்லை, பிழைக்க வில்லை; அவர்களைச் சீராட்டி நான் வளர்த்தேன், பகைவனோ அவர்களைக் கொன்றெழித்தான்.

அதிகாரம் 03

1 முன்றாம் புலம்பல்: ஆலேஃப்: அவருடைய கோபத்தின் கோலால் வருந்தி என் வறுமையைக் காணும் மனிதன் ஆனேன்;

2 அவர் என்னை ஒளியிலன்று, காரிருளிலேயே கொண்டுவந்து விட்டுவிட்டார்;

3 நாள் முழுதும் மீண்டும் மீண்டும் என் மேலேயே தமது கையை நீட்டித் தண்டிக்கிறார்.

4 பேத்: என் தோலையும் சதையையும் சிதைத்து விட்டார், என்னுடைய எலும்புகளை நொறுக்கி விட்டார்;

5 என்னை வளைத்து முற்றுகையிட்டுத் துன்பத்தாலும் கசப்பாலும் நிரப்பி விட்டார்;

6 என்றென்றைக்கும் மரித்தவர்களுக்கு ஒப்பாய் என்னை காரிருள் நிறைந்துள்ள இடத்தில் வைத்தார்.

7 கீமேல்: வெளியேற முடியாமல் என்னைச் சுற்றிச் சுவர் எழுப்பி என் கைவிலங்கையும் பளுவாக்கினார்;

8 கூவியழைத்தும் இரந்து மன்றாடியும், என் மன்றாட்டைப் புறக்கணித்துத் தள்ளிவிட்டார்.

9 சதுரக் கற்களால் என் வழிகளைத் தடுத்து விட்டார்; என் பாதைகளைக் கோணலாக்கிக் கெடுத்துவிட்டார்.

10 தாலேத்:பாய்வதற்காகப் பதுங்கியிருக்கும் கரடி போலும், ஒளிந்திருக்கும் சிங்கம் போலும் எனக்கு ஆனார்;

11 என் வழிகளைப் புரட்டி என்னைப் பீறிக் கிழித்தார்; என்னை முற்றிலும் பாழாக்கினார்;

12 தமது வில்லை நாணேற்றினார், என்னை அம்புக்கு இலக்காக்கினார்.

13 ஹே: தமது அம்பறாத் தூணியில் உள்ள அம்புகைளை என் மார்பில் எய்தார்;

14 என் இனத்தார் அனைவர்க்கும் முற்றிலும் நான் நகைப்புக்கும் வசைப் பாடலுக்கும் இலக்கானேன்;

15 கசப்பினால் என்னை நிரம்பச் செய்தார், கசப்பு மதுவால் எனக்குப் போதை ஏற்றினார்.

16 வெள: கற்களைக் கடித்து என் பற்களை உடையச்செய்தார், சாம்பலை உணவாக எனக்கு ஊட்டினார்;

17 என் ஆன்மா அமைதியை இழந்துவிட்டது, எனக்கு மகிழ்ச்சி என்றால் என்ன என்பது மறந்துபோயிற்று.

18 என் வலிமைக்கு முடிவு வந்தது, ஆண்டவர் மேலுள்ள என் நம்பிக்கையும் போயிற்று" என்றேன்.

19 ஸாயின்: என் வறுமையையும் அலைச்சலையும் கசப்பையும், தாங்க முடியாத துன்பத்தையும் நினைத்தருளும்;

20 நான் அதையே நினைத்து நினைத்து வாடுகிறேன், என் உயிர் என்னில் மாய்கிறது;

21 இவற்றை என்னிதயத்தில் சிந்திக்கிறேன், ஆகவே நம்பிக்கை கொள்ளுகிறேன்.

22 ஹேத்: ஆண்டவரின் இரக்கம் என்றென்றும் அழிவுறாது, அவருடைய பரிவுக்கு முடிவு இல்லை.

23 காலைதோறும் அவை புதுப்பிக்கப் படுகின்றன, நீர் மிக்கப் பிரமாணிக்கமுள்ளவர்;

24 ஆண்டவர் என் பங்கு, ஆதலால் அவரிடம் நம்பிக்கை வைப்பேன்" என்றது என் ஆன்மா.

25 தேத்: தம்மில் நம்பிக்கை வைக்கிறவர்களுக்கும், தம்மைத் தேடும் ஆன்மாவுக்கும் ஆண்டவர் நல்லவர்;

26 கடவுள் நம்மை மீட்பாரென்று, அமைதியாய்க் காத்திருத்தல் நல்லது;

27 இளமை முதல் அவரது நுகத்தைச் சுமந்து கொள்ளுதல் மனிதனுக்கு நன்று;

28 இயோத்: தன்மேல் அதனைச் சுமந்து கொண்ட பின் தனிமையில் அமைதியாய் அமர்ந்திருக்கட்டும்;

29 தரையில் முகம்படியக் குப்புற விழட்டும், நம்பிக்கைக்கு இன்னும் இடமிருக்கலாம்;

30 தன்னை அறைபவர்க்கும் கன்னத்தைக் காட்டட்டும், நிந்தைகளால் அவன் நிரம்பட்டும்,

31 காஃப்: ஏனெனில் ஆண்டவர் எப்போதைக்குமே ஒருவனை வெறுத்துத் தள்ளுவதில்லை;

32 ஒருவேளை அவனைத் தள்ளினாலும் பின்னர் தம் இரக்கப் பெருக்கத்திற்கேற்பத் தயை கூருவார்.

33 ஏனெனில் மனப்பூர்வமாய் அவர் மனிதர்களைத் தாழ்த்தினதுமில்லை, தள்ளிவிட்டதுமில்லை.

34 லாமேத்: உலகத்தின் கைதிகள் எல்லாரும் காலின் கீழ் நசுக்கப்படுவதையோ,

35 உன்னதரின் திருமுன்பு ஒருவனுக்கு நியாயம் மறுக்கப்படுவதையோ,

36 ஒரு மனிதன் வழக்கில் கவிழ்க்கப் படுவதையோ ஆண்டவர் பாராமல் இருக்கிறாரோ?

37 மேம்: ஆண்டவரின் ஆணையில்லாமல், தன் சொல்லால் மட்டும் ஒன்றை நிகழும்படி செய்யக் கூடியவன் யார்?

38 நன்மைகளும் தீமைகளும் உன்னதரின் வாயிலிருந்தன்றோ புறப்படுகின்றன?

39 மனிதன் எதற்காக முறையிட வேண்டும்? தன் பாவங்களின் முன் ஆண்மையோடு இருக்கட்டும்.

40 நூன்: நம் வழிகளைச் சோதித்துச் சிந்தித்து, ஆண்டவரிடம் திரும்பிடுவோம்.

41 ஆண்டவர்பால் வானகத்துக்கு நம்முடைய இதயங்களையும் கைகளையும் உயர்திதிடுவோம்.

42 நாங்கள் அக்கிரமம் செய்தோம், உமக்குக் கோப மூட்டினோம்; ஆதலால் தான் எங்களை நீர் மன்னிக்கவில்லை.

43 சாமேக்: "கோபத்தால் உம்மைப் போர்த்துக் கொண்டு எங்களை விரட்டி வந்து இரக்கமின்றிக் கொன்று மாய்த்தீர்.

44 எங்கள் மன்றாட்டு உம்மிடம் வராதபடி, உம்மை மேகத்தால் மறைத்துக்கொண்டீர்.

45 மக்களினங்களின் மத்தியிலே எங்களைக் குப்பை கூளங்களாய் ஆக்கிவிட்டீர்.

46 பே: "எங்கள் பகைவர்கள் அனைவரும் எங்களுக்கு விரோதமாய் வாய் திறந்தனர்.

47 திகிலும் படுகுழியும் எங்களுக்குத் தயாராயின, நாசமும் அழிவும் எங்கள் மேல் வந்தன.

48 என் மக்களாம் மகளின் அழிவைக் கண்டு என் கண்கள் கண்ணீரைப் பெருக்குகின்றன.

49 ஆயீன்: "எங்களுக்கு இளைப்பாற்றி இல்லாமையால் ஒயாமல் கண்கள் நீர் வடிக்கின்றன.

50 ஆண்டவர் வானத்தினின்று நோக்கும் வரையில் தொடர்ந்து அவ்வாறே நீர் வடிக்கும்.

51 என் நகரத்தின் மகளிர் அனைவர்க்கும் நேர்ந்ததைக் காண்பது எனக்குப் பெரும் துயரமாகும்.

52 சாதே: "காரணமின்றி என் பகைவர்கள் பறவையைப் போல வேட்டையாடி என்னைப் பிடித்தார்கள்.

53 என்னை உயிரோடு குழியில் தள்ளினார்கள், என்மீது கற்களை எறிந்தார்கள்.

54 வெள்ளப் பெருக்கு என் தலை மீது ஓடிற்று; 'நான் மடிந்தேன்' என்றேன்.

55 கோப்: "ஆண்டவரே, ஆழமான பாதாளத்தினின்று உமது திருப்பெயரைக் கூவியழைத்தேன்;

56 என் குரலொலியைக் கேட்டீர்; என் விம்மலுக்கும் கூக்குரல்களுக்கும் உம் செவியைத் திருப்பிக் கொள்ளாதீர்,

57 உம்மை நோக்கி நான் கூவியழைத்த நாளில் என்னை அணுகி, 'அஞ்சாதே' என்றீர்.

58 ரேஷ்: "ஆண்டவரே, எனக்காக வாதாடினீர்; நீரே என் உயிருக்கு மீட்பளித்தீர்.

59 எனக்கெதிராய் அவர்கள் செய்த அக்கிரமத்தைக் கண்டீர், ஆண்டவரே, எனக்கு நீதி வழங்கும்.

60 எனக்கெதிராய் அவர்கள் கொண்டிருக்கும் ஆத்திரத்தையும் எண்ணங்களையும் பார்த்தீர்.

61 ஷின்: "ஆண்டவரே, எனக்கெதிராய் அவர்கள் கொண்டுள்ள சிந்தனைகளையும் சொன்ன நிந்தைகளையும் கேட்டீர்.

62 என் பகைவர்கள் எனக்கெதிராய் நாள் முழுதும் முணு முணுத்த சொற்களை நீர் கேட்டீர்.

63 பாரும், அவர்கள் உட்கார்ந்தாலும் எழுந்தாலும், என்னைப் பற்றியே அவர்கள் வசை பாடுகிறார்கள்.

64 தௌ: "ஆண்டவரே, அவர்களுடைய செயலுக்கு எற்ப அவர்களுக்குக் கைம்மாறு தந்தருளும்.

65 இதய கடினத்தை அவர்களுக்குக் கொடும். உமது சாபனை அவர்கள் மேல் இருக்கட்டும்.

66 ஆண்டவரே, சீற்றத்துடன் அவர்களைத் துன்புறுத்தும், வானத்தின் கீழ் அவர்களை நசுக்கி விடும்."

அதிகாரம் 04

1 நான்காம் புலம்பல்: ஆலேஃப்: தங்கத்தின் பொன்னொளி மங்கிப் போனதே! சிறந்த பசும்பொன் மாறிப்போயிற்று, பரிசுத்த இடத்தின் கற்கள் சிதறித் தெருக்களின் மூலைகளில் கிடக்கின்றனவே!

2 பேத்: பத்தரை மாற்றுத் தங்கத்துக் கொத்த சீயோனின் சிறந்த மக்கள், குயவனது கைவேலைப்பாடான மட்கலங்கள் போல் எண்ணப்பட்டது எவ்வாறோ?

3 கீமேல்: குள்ளநரிகள் கூட முலை காட்டித் தங்கள் குட்டிகளுக்குப் பால் கொடுக்கின்றன; ஆனால் என் மக்களினமாகிய மகள் கொடியளாகிப் பாலைநிலத்தில் தீக் கோழியானாள்.

4 தாலேத்: பால் குடிக்கும் குழந்தையின் நாக்கு தாகத்தால் அன்னத்தில் ஒட்டிக்கொண்டது; சிறுவர்கள் உணவு கேட்கிறார்கள், அவர்களுக்குக் கொடுப்பார் ஒருவருமில்லை.

5 ஹே: அறுசுவையோடு உண்டவர்கள் தெருக்களில் திக்கற்று மடிகிறார்கள்; மெல்லிய பட்டாடை உடுத்தியவர்கள் குப்பை மேட்டில் கிடக்கின்றனர்.

6 வெள: ஒருவரும் கைவைக்காமல் நொடிப்பொழுதில் கவிழ்ந்து போன சோதோமின் பாவத்தை விட என்னுடைய இனத்தாராம் மகளுடைய அக்கிரமம் மிகப் பெரியது.

7 ஸாயின்: அந்நகரின் பெருங்குடி மக்கள் பனிக்கட்டியிலும் வெண்மையாயும், பாலை விடத் தூய்மையாயும், பவளத்தை விடச் சிவப்பாயும், நீல மணியிலும் சிறப்பாயும் இருந்தனர்.

8 ஹேத்: அவர்கள் முகம் இப்பொழுது கரியை விடக் கறுத்து விட்டது; தெருக்களில் அடையாளம் தெரியவில்லை; அவர்கள் தசை எலும்போடு ஒட்டிக்கொண்டது; காய்ந்த மரம்போல் உலர்ந்து போனது.

9 தேத்: பசியால் மடிந்தவர்களைக் காட்டிலும் வாளால் மாண்டவர்கள் பேறு பெற்றோர்; ஏனெனில் முன்னவர் பூமியின் வறட்சியால் கொஞ்சம் கொஞ்சமாய் மாய்ந்து மடிந்தார்கள்.

10 இயோத்: இரக்கமுள்ள பெண்களும் தங்கள் கையாலேயே தங்களின் பிள்ளைகளைக் கொதிக்க வைத்தனர்; என் இனத்தாரான மகளின் நெருக்கடியில் பிள்ளைகள் தாய்மார்க்கு உணவாயின.

11 காஃப்: ஆண்டவர் தம் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டார், தமது கோபத்தின் தீயைக் கொட்டி விட்டார்; சீயோனில் நெருப்பையும் மூட்டிவிட்டார், அதன் அடிப்படைகளையும் அது விழுங்கி விட்டது.

12 லாமேத்: பகைவரும் எதிரிகளும் யெருசலேமின் வாயில்களில் நுழைவாரென்று, பூமியின் அரசர்களும் உலகத்தின் குடிமக்களும் எவருமே நினைக்கவில்லை.

13 மேம்: அதன் நடுவில் நீதிமான்களின் இரத்தத்தைச் சிந்திய தீர்க்கதரிசிகளின் பாவமும், அர்ச்சகர்களின் அக்கிரமமுமே இவை நேர்ந்தமைக்குக் காரணம்.

14 நூன்: குருடரைப் போலத் தெருக்களில் தடுமாறினார்கள், இரத்தக் கறையால் தீட்டுப்பட்டார்கள்; ஆதலால் அவர்களுடைய ஆடைகளை யாராலும் தொட முடியவில்லை.

15 சாமேக்: "விலகுங்கள், தீட்டு, விலகுங்கள், எட்டிப்போங்கள், தொடாதீர்கள்" என்று அவர்களிடம் கூவினார்கள்; அவர்களும் நாடோடிகளாய் அலைந்து திரிந்தனர்; "இனி நம்முடன் குடியிரார் " என வேற்றினத்தார் கூறினர்.

16 பே: ஆண்டவர் அவர்களைத் தம் திருமுன்னிருந்து அகற்றினார், மீண்டும் அவர்களைக் கண்ணோக்க மாட்டார்; தங்கள் அர்ச்சகர்களை மக்கள் மதிக்கவில்லை, மூப்பர்கள்மேல் அவர்கள் இரங்கவில்லை.

17 ஆயீன்: நாங்கள் வீணில் உதவியை எதிர்பார்த்து, எங்கள் கண்களும் பூத்துப் போயின; எங்களை விடுவிக்க இயலாத மக்களை காவல் கோட்டை மேலிருந்து எதிர்பார்த்தோம்.

18 சாதே: பகைவர் நம் நடமாட்டங்களை விழிப்புடன் நோக்கினர், வீதிகளில் நாம் நடக்காதபடி தடுத்தனர்; முடிவு நமக்குக் கிட்டிவிட்டது, நம் நாட்கள் எண்ணப்பட்டு விட்டன; ஏனெனில், நமது முடிவு வந்துவிட்டது.

19 கோப்: வானத்தின் பருந்துகளை விட நம்மைத் துன்புறுத்துகிறவர்கள் விரைந்து வருகின்றனர்; மலைகளின் மேல் நம்மைத் துரத்தி வருகின்றனர், பாலைநிலத்தில் நமக்கும் கண்ணி வைத்தனர்.

20 ரேஷ்: ஆண்டவரால் அபிஷுகம் செய்யப்பட்டு நமக்கு வாழ்வின் மூச்சாய் இருந்தவர் அவர்களுடைய படுகுழியில் பிடிபட்டார்; "புறவினத்தார் நடுவில் உம் நிழலில் வாழ்வோம்" என்று அவரைக் குறித்தே நாம் சொல்லி வந்தோம்.

21 ஷின்: ஊஸ் நாட்டில் வாழும் ஏதோம் மகளே, அகமகிழ்ந்து அக்களிப்பாய் இருக்கிறாயோ? உனக்கும் துன்பத்தின் பாத்திரம் வரும், நீயும் போதையேறி மானமிழப்பாய்.

22 தௌ: சீயோன் மகளே, உன் அக்கிரமம் நிறைவுற்றது, இனி உன்னை நாடுகடத்த மாட்டார்; ஏதோம் மகளே, உன் அக்கிரமத்தைத் தண்டிப்பார், உன் பாவங்களை வெளிப்படுத்துவார்.

அதிகாரம் 05

1 ஜந்தாம் புலம்பல்: ஆண்டவரே, எங்களுக்கு நேரிட்டதை நினைவு கூரும், எங்களை நோக்கியருளும், எங்கள் நிந்தையைப் பார்த்தருளும்.

2 எங்கள் உரிமைச் சொத்து அந்நியர் கையில் அகப்பட்டது; எங்கள் வீடுகள் அயலார் கைவசமாயின.

3 நாங்கள் தந்தையில்லாத அனாதைகளானோம், எங்கள் தாய்மார் கைம்பெண்கள்போல் ஆயினர்.

4 நாங்கள் தண்ணீரை விலைக்கு வாங்கிக் குடிக்கிறோம், விறகும் பணம் கொடுத்துத் தான் வாங்குகிறோம்.

5 நுகத்தடி எங்கள் கழுத்தில் ஏறிற்று; பகைவர் எங்களை விரட்டுகின்றனர், தளர்ச்சியுற்று விழுந்தோம்; எங்களுக்கு இளைப்பாற்றி இல்லை.

6 பசி தீர உணவு கேட்டு எகிப்துக்கும் அசீரியாவுக்கும் நாங்கள் கை நீட்டினோம்.

7 பாவம் செய்த எங்கள் தந்தையர் மாய்ந்து போயினர், நாங்களோ அவர்களுடைய அக்கிரமத்தைச் சுமக்கிறோம்.

8 அடிமைகள் எங்களை ஆள்பவர்கள் ஆயினர்,அவர்கள் கையினின்று எங்களை மீட்பார் யாருமில்லை.

9 உயிராபத்திலும் பாலை நிலத்தின் வாள் முனையிலும் நாங்கள் எங்கள் உணவைத் தேடிக்கொள்ளுகிறோம்.

10 பஞ்சம் என்னும் புயலின் கொடுமைத் தீயால் எங்கள் மேனி கரி போலக் கறுத்துப் போயிற்று.

11 சீயோனின் மங்கையரும் யூதாவின் கன்னிப்பெண்களும் அவமானத்திற்கு உள்ளாயினர்.

12 பகைவர்கள் எங்கள் தலைவர்களைத் தூக்கிலிட்டனர், மூப்பர்களை அவர்கள் மதிக்கவே இல்லை.

13 இளைஞர்கள் எந்திரக் கல்லை இழுத்து வருந்தினர். சிறுவர்கள் விறகுச் சுமை சுமந்து தள்ளாடினர்.

14 மூப்பர் நீதிமன்றத்தை விட்டு அகன்று போயினர், இளைஞர்களும் இசைக் குழுவினின்று ஒழிந்தனர்.

15 எங்கள் உள்ளத்தின் மகிழ்ச்சி ஒழிந்தது, எங்கள் இசைக் கூட்டம் இழவுக் கூட்டமாயிற்று.

16 எங்கள் தலையினின்று மணிமுடி விழுந்து போயிற்று, பாவம் செய்த எங்களுக்கு ஐயோ கேடு!

17 ஆதலால் எங்கள் இதயம் துயரத்திலாழ்ந்தது, எங்கள் கண்களும் இருண்டு போயின.

18 ஏனெனில் சீயோன் மலை அழிவுற்றது, நரிகள் அங்கே நடமாடுகின்றன.

19 நீரோ, ஆண்டவரே, என்றென்றும் நிலைத்திருப்பீர், உமது அரியணையும் தலைமுறை தலைமுறையாய் நிலைநிற்கும்.

20 அவ்வாறிருக்க, எங்களை என்றென்றும் நீர் மறப்பானேன்? எங்களை நெடுநாளாய்க் கைவிட்டதேன்?

21 ஆண்டவரே, எங்களை உம்மிடம் திருப்பியருளும், நாங்கள் திரும்புவோம்; முன்பிருந்தது போல் எங்கள் நாட்களைப் புதுப்பித்தருளும்;

22 அல்லது எங்களைத் தொலைவில் புறக்கணித்துத் தள்ளிவிட்டீரோ? எங்கள்மேல் மிகுந்த கோபம் கொண்டீரோ?