பாரூக் ஆகமம்

அதிகாரம் 01

1 பாரூக் எழுதிய நூலின் வாக்கியங்கள் இவை: இவர் நேரியாசின் மகன்; இவர் மசியாஸ் என்பவரின் மகன்; இவர் செதேசியாசின் மகன்; இவர் செதேயி என்பவரின் மகன்; இவர் எல்சியாசின் மகன்.

2 பாரூக் என்பவர் பபிலோனில் இருந்த காலத்தில், ஐந்தாம் ஆண்டில் கல்தேயர் யெருசலேமைப் பிடித்துத் தீக்கிரையாக்கின மாதத்தின் ஏழாம் நாள் இந்நூலை எழுதி முடித்தார்.

3 பாரூக் இந்நுலில் அடங்கியுள்ள வார்த்தைகளை யூதா அரசனான யோவாக்கீமின் மகன் எக்கோனியாஸ் முன்பாகவும், இந்நுலின் வாசகத்தைக் கேட்க வந்திருந்த மக்கள் அனைவர் முன்பாகவும் வாசித்தார்.

4 தலைவர்கள், மூப்பர்கள் இவர்களுக்கு முன்பாகவும், சோதி நதிக்கு அருகிலுள்ள பபிலோனிய நாட்டில் வாழ்ந்த சிறியோர் முதல் பெரியோர் வரை எல்லா மக்களுக்கு முன்பாகவும் அதனை வாசித்தார்.

5 அவர்கள் இவ்வார்த்தைகளைக் கேட்டுக் கண்ணீர் சொரிந்தழுது, உண்ணா நோன்பிருந்து, ஆண்டவர் திருமுன்பு வேண்டிக் கொண்டார்கள்.

6 அவர்கள் ஒவ்வொருவரும் தம்மால் இயன்றளவு பொருள் சேர்த்து,

7 யெருசலேமிலிருந்த சலோம் என்பவரின் மகனான எல்சியாசின் மகன் யோவாக்கீம் என்கிற அர்ச்சகருக்கும், அவரோடு கூட யெருசலேமிலிருந்த மற்ற அர்ச்சகர்களுக்கும், மக்கள் யாவருக்கும் அனுப்பினார்கள்.

8 அதே சமயத்தில், திருக்கோயிலினின்று கொள்ளைப் பொருளாகக் கொண்டு போகப்பட்ட ஆண்டவருடைய கோயிலின் பாத்திரங்களையும், பாரூக் யூதா நாட்டுக்குத் திரும்பக் கொடுத்தனுப்புவதற்காக வாங்கி வைத்திருந்தார்; அவை யூதாவின் அரசனான யோசியாஸ் என்பவனின் மகனான செதேசியாஸ் மன்னனால் செய்யப்பட்ட வெள்ளிப் பாத்திரங்கள்;

9 பபிலோனிய அரசனான நபுக்கோதனசார் யெருசலேமிலிருந்து எக்கோனியாசையும் தலைவர்களையும் கைதிகளையும் வீரர்களையும் நாட்டு மக்களையும் பிடித்துப் பபிலோனுக்குக் கூட்டிச் சென்ற பின், அந்த வெள்ளிப் பாத்திரங்களைச் செதேசியாஸ் செய்து வைத்திருந்தான்.

10 பொருள் சேர்த்துக் கொடுத்தனுப்பினவர்கள் இவ்வாறு சொல்லியனுப்பினார்கள்: "நாங்கள் உங்களுக்கு அனுப்பியுள்ள பணத்தைக் கொண்டு, தகனப் பலிகளையும், நறுமணப் பொருட்களையும் வாங்கி, நம் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் பாவப் பரிகாரப் பலிகளையும் காணிக்கைகளையும் ஒப்புக்கொடுங்கள்.

11 மேலும், பபிலோனிய அரசனாகிய நபுக்கோதனசாரின் வாழ்நாட்களும், அவன் மகனான பல்தசாரின் வாழ்நாட்களும், இவ்வுலகில் வானுலக வாழ்வைப் போலப் பேறுபெற்ற வாழ்வாய் இருக்கும்படியாக வேண்டிக் கொள்ளுங்கள்;

12 பபிலோன் அரசனாகிய நபுக்கோதனசாரின் அடைக்கலத்திலும், அவன் மகனான பல்தசாரின் பாதுகாப்பிலும் நாங்கள் அமைதியாய் வாழ்ந்து, நெடுங்காலம் இவர்களுக்கு ஊழியம் செய்து, இவர்களுடைய கண்களுக்கு உகந்தவர்களாய் இருந்து, இவர்களுடைய தயவை அடைய எங்களுக்கு ஆண்டவர் மனத்திடனையும் நல்ல தெளிவையும் தரும்படியாக மன்றாடுங்கள்.

13 இன்னும் எங்களுக்காகவும் நம் கடவுளாகிய ஆண்டவரிடம் இறைஞ்சுங்கள்: ஏனெனில் நம் கடவுளாகிய ஆண்டவருக்கு விரோதமாய் நாங்கள் பாவஞ் செய்தோம். அவருடைய கோபமும் ஆத்திரமும் இன்று வரையிலும் எங்களை விட்டு அகலாதிருக்கிறது.

14 உங்களுக்கு நாங்கள் அனுப்பியுள்ள இந்த நூலை ஆண்டவருடைய கோயிலில் திருநாளிலும், கொண்டாட்ட நாட்களிலும் பொதுவில் வாசித்து, பாவங்களை அறிக்கையிடுங்கள். அதற்காகவே இதை அனுப்பியுள்ளோம்.

15 "அப்போது நீங்கள் சொல்லவேண்டியது இதுவே: 'நீதி நம் கடவுளாகிய ஆண்டவருக்குரியது; ஆனால், இன்றிருப்பது போல, நாணித் தலை குனிதல் தான் நமக்கும், யெருசலேமின் குடிகளுக்கும் யூதாவின் மக்களுக்கும்,

16 நம்முடைய அரசர்கள், தலைவர்கள், அர்ச்சகர்கள், தீர்க்கதரிசிகள், நம் தந்தையர்கள் அனைவர்க்கும் உரியது;

17 ஏனெனில் நம் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் பாவம் கட்டிக்கொண்டோம்.

18 நாம் அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கவுமில்லை; நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கொடுத்த கற்பனைகளின் நெறியில் நடக்கும்படி நாம் அவருடைய குரலுக்குச் செவிசாய்க்கவுமில்லை.

19 எகிப்து நாட்டினின்று நம் தந்தையர்களை ஆண்டவர் மீட்டுக் கொண்டு வந்த நாள் முதல் இன்று வரையிலும் நம் கடவுளாகிய ஆண்டவருக்குக் கீழ்ப்படியவில்லை; நம்முடைய கவலையீனத்தால் அவருடைய குரலொலிக்குச் செவிசாய்க்கவில்லை.

20 பாலும் தேனும் பொழியும் நாட்டை நமக்குக் கொடுப்பதற்காக எகிப்து நாட்டிலிருந்து நம் தந்தையர்களை மீட்டுக் கூட்டி வந்த போது, ஆண்டவர் தம் ஊழியராகிய மோயீசன் வாயிலாக நமக்குத் தெரிவித்திருந்த துன்பங்களும் சாபனைகளும் நம்மைப் பீடிக்கின்றன.

21 நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்கு அறிவுறுத்தும்படி நம்மிடம் அனுப்பிய இறைவாக்கினர்களின் வார்த்தைகளையெல்லாம் பொருட்படுத்தாமல், அவருடைய குரலொலிக்குச் செவிகொடுக்க மறுத்தோம்.

22 நாம் ஒவ்வொருவரும் நம் உள்ளத்தின் தீய போக்கின்படியே அந்நிய தெய்வங்களுக்கு ஊழியம் செய்தோம்; நம் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் தீமைகள் புரிந்தோம்.

அதிகாரம் 02

1 நம் கடவுளாகிய ஆண்டவர் யூதா, இஸ்ராயேல் மக்கள் அனைவர்க்கும் நம் அரசர்களுக்கும் தலைவர்களுக்கும், இஸ்ராயேலுக்குத் தீர்ப்பு வழங்கி வந்த நம் நடுவர்களுக்கும், நமக்கும் கூட எதிராக முன்னறிவித்திருந்த தம் வார்த்தைகளை நிறைவேற்றினார்;

2 யெருசலேமில் அவர் நிகழும்படி செய்த கொடிய தீமைகளைப் போல வானத்தின் கீழ் நிகழ்ந்ததே இல்லை; இவை யாவும் மோயீசனுடைய நூலில் எழுதப்பட்டுள்ளவாறே நேர்ந்தன:

3 ஒருவன் தன் மகனுடைய சதையைப் பிடுங்கித் தின்று, இன்னொருவன் தன் மகளுடைய சதையைப் பிடுங்கித் தின்னும் அளவுக்கு நமக்கு நெருக்கடி வந்தது.

4 ஆண்டவர் அவர்களைப் புறவினத்தார் அனைவர் நடுவிலும் சிதறடித்து, அவர்கள் நடுவில் அவர்களைப் பாழடைந்தவர்களாகவும், இழிவான பேச்சுக்கு இலக்காகவும், நம்மைச் சுற்றிலுமுள்ள அரசுகள் எல்லாவற்றிற்கும் அவர்களை அடிமைகளாகவும் கையளித்தார்.

5 நம் கடவுளாகிய ஆண்டவரின் குரலொலிக்குக் கீழ்ப்படியாமல் அவருக்கு விரோதமாய்ப் பாவம் செய்ததால், நாம் உயர்த்தப்படாமல் தாழ்த்தப்பட்டோம்.

6 நீதி நம் கடவுளாகிய ஆண்டவருக்குரியது; ஆனால், இன்றிருப்பது போல, நாணித் தலை குனிதல் தான் நமக்கும் நம் தந்தையர்களுக்கும் உரியது.

7 ஏனெனில் நமக்கு வந்து நேர்ந்த இந்தத் தீமைகள் அனைத்தையும் ஆண்டவர் ஏற்கெனவே நமக்கு அறிவித்திருந்தார்.

8 ஆயினும் நாம் ஒவ்வொருவரும், நாம் மூழ்கியிருந்த தீய பழக்கத்தை விட்டு மனந்திரும்பும்படி நம் கடவுளாகிய ஆண்டவரைப் பார்த்துக் கெஞ்சி மன்றாடவில்லை.

9 ஆண்டவர் நமக்குக் கட்டளையிட்டிருந்த செயல்களிலெல்லாம் நீதியுள்ளவராய் இருந்ததால், ஆண்டவர் இத் தீமைகளைத் தயாராய் வைத்திருந்து நம் மேல் வரச் செய்தார்.

10 ஆண்டவர் நமக்கு வெளிப்படையாய்க் கொடுத்திருந்த கற்பனைகளின்படி நடக்காமல், நாம் அவருக்குச் செவிசாய்க்க மறுத்தோம்.

11 "ஆனால் இப்பொழுது இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரே, நீட்டிய கையாலும் மாபெரும் வல்லமையாலும் பல புதுமைகளையும் வியத்தகு செயல்களையுஞ் செய்து, புயபலத்தைக் காட்டி உம்முடைய மக்களை எகிப்து நாட்டிலிருந்து விடுதலை செய்ததன் மூலம் இன்று வரையில் உம் திருப்பெயருக்குப் புகழ்தேடிக் கொண்டவரே;

12 எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, உம் பரிசுத்த கற்பனைகளுக்கெல்லாம் விரோதமாய் நாங்கள் பாவஞ் செய்தோம்; அக்கிரமமான செயல்களைச் செய்து, அநியாயங்களைக் கட்டிக்கொண்டோம்;

13 புறவினத்தார் நடுவில் சிதறி வாழ்கின்ற நாங்கள் மிகச் சிலராய் விடப்பட்டிருப்பதால், எங்கள் பேரில் நீர் கொண்ட கோபத்தைத் திருப்பியருளும்.

14 ஆண்டவரே, எங்கள் வேண்டுதல்களையும் மன்றாட்டுகளையும் கேட்டருளும்; உமது மகிமைக்காவே எங்களைக் காப்பாற்றும்; எங்கள் நாட்டிலிருந்து எங்களை நாடுகடத்தியவர்களுக்கு நாங்கள் உகந்தவர்களாய் இருக்கும்படி செய்தருளும்;

15 இஸ்ராயேலும் இஸ்ராயேலின் இனத்தாரும் உமது திருப்பெயரையே தாங்கியிருப்பதால், நீரே கடவுளாகிய ஆண்டவர் என்பதை உலகம் முழுவதும் அறிந்துகொள்ளும்.

16 ஆண்டவரே, உம்முடைய பரிசுத்த இருப்பிடத்திலிருந்து எங்களைக் கண்ணோக்கியருளும்; செவி தந்து எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

17 கண் திறந்து எங்களைப் பார்த்தருளும்; ஏனெனில் இறந்து போய்ப் பாதாளத்தில் இருக்கிறவர்கள், தங்களுடைய ஆவி உடலை விட்டுப் பிரிந்து போன பின், ஆண்டவருக்கு மகிமை தரமுடியாதே! நீதி வழியில் நடக்க முடியாதே!

18 ஆனால், தான் கட்டிக்கொண்ட பாவச் சுமையால் இளைத்துக் களைத்து, வாடி வதங்கி கண்கள் மங்கிச் சோர்வடைந்து, நாணித்திரியும் ஆன்மாவே ஆண்டவராகிய உமக்கு மகிமை தரும், நீதி நெறியில் நடக்கும்.

19 ஏனெனில் எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, எங்கள் தந்தையர்கள், அரசர்கள் ஆகியோரின் நீதிச்செயல்களை முன்னிட்டு, உம் திருமுன் உம்மை இறைஞ்சி உம்முடைய இரக்கத்தை நாங்கள் கொஞ்சிக் கேட்கவில்லை.

20 உம்முடைய ஊழியர்களாகிய இறைவாக்கினர்களின் வாயிலாய் நீர் சொல்லியிருந்தவாறு உம்முடைய கோபத்தையும் ஆத்திரத்தையும் எங்கள் மேல் காட்டினீர்.

21 அந்த இறைவாக்கினர் இவ்வாறு சொல்லியிருந்தனர்: "ஆண்டவர் கூறுகிறார்: உடல் வளைந்து தலை வணங்கிப் பபிலோன் அரசனுக்குக் கீழ்ப்படிந்து வேலை செய்வீர்களாகில், உங்கள் தந்தையர்களுக்கு நாம் தந்த நாட்டில் அமைதியாய் வாழ்வீர்கள்.

22 ஆனால், பபிலோனிய அரசனுக்கு நீங்கள் ஊழியம் செய்ய வேண்டுமென்று உங்கள் கடவுளாகிய ஆண்டவர் சொல்லிய வாக்குக்கு நீங்கள் செவி சாய்க்காமல் போவீர்களாகில்,

23 யூதாவின் பட்டணங்களிலும் யெருசலேமின் தெருக்களிலும், மகிழ்ச்சியின் முழக்கத்தையும், அக்களிப்பின் ஆரவாரத்தையும், மணவாளனின் குரலையும், மணவாட்டியின் குரலையும் ஒயப் பண்ணுவோம்; குடியிருப்பாரற்று நாடு முழுவதும் பாலைவெளியாகிவிடும்."

24 ஆனால் பபிலோன் அரசனுக்குக் கீழ்ப்படிந்திருக்கும்படி நீர் சொல்லிய வாக்குக்கு நாங்கள் செவிசாய்க்கவில்லை; ஆதலால் உம்முடைய ஊழியர்களாகிய இறைவாக்கினர்கள் வாயிலாய் நீர் முன்பே சொல்லியிருந்த வார்த்தைகளை நிறைவேற்றி, எங்கள் அரசர்களின் எலும்புகளும், எங்கள் தந்தையர்களின் எலும்புகளும் அவை இருக்கும் இடத்தை விட்டுப் புறம்பே எறியப்படச் செய்தீர்.

25 இதோ அவை கதிரவனின் வெப்பத்திலும், இரவின் குளிரிலும் எறியப்பட்டுள்ளன. அவர்களோ கொடிய வேதனைகளுக்கு இலக்காகிப் பஞ்சத்தாலும் வாளாலும் கொள்ளை நோயாலும் மடிந்தார்கள்.

26 இஸ்ராயேல் வீட்டாருடையவும் யூதா வீட்டாருடையவும் அக்கிரமங்களின் காரணமாய், உமது திருப் பெயரைப் புகழ்ந்தேற்றுவதற்காகக் கட்டப்பட்ட கோயிலையும் இன்றிருக்கும் நிலைக்குக் கொண்டு வந்தீர்.

27 ஆயினும் எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, உமது மிகுதியான பரிவும் மாபெரும் இரக்கமும் தோன்றும்படி எங்களை இவ்வாறு நடத்தினீர்.

28 இஸ்ராயேல் மக்களுக்கு உமது திருச்சட்டத்தை எழுதித் தரும்படி உம்முடைய ஊழியராகிய மோயீசனுக்குக் கட்டளையிட்ட போது, அவர் வாயிலாய் நீர் சொல்லியது இதுவே:

29 நீங்கள் நமது சொல்லுக்குச் செவிசாய்க்காமல் போவீர்களானால், இந்தப் பெரும் கும்பலை மிகச் சிறிதாக்கி, புறவினத்தார் நடுவிலே சிதறடிப்போம்.

30 இந்த மக்கள் முரட்டுத்தனம் உள்ளவர்களானதால், இவர்கள் நமக்குச் செவிசாய்க்க மாட்டார்கள் என்பது நமக்குத் தெரியும்; இவர்கள் அடிமைகளாய்க் கொண்டு போகப்படும் நாட்டில் தான், உள்ளத்தில் எண்ணிப் பார்த்து மனந்திரும்புவார்கள்.

31 அப்போது நாமே அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வார்கள்; நாம் அவர்களுக்குப் பணியும் இதயத்தையும், கேட்கும் திறன் வாய்ந்த செவிகளையும் கொடுப்போம்.

32 அவர்கள் அடிமைப்பட்டிருக்கும் நாட்டில் நம்மைப் புகழ்வார்கள்; நமது பெயரை நினைவுகூர்வார்கள்.

33 நமக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்த தங்கள் தந்தையர்களின் நெறியை நினைவில் இருத்திக் கொண்டு, தங்கள் தீய செயல்களையும் முரட்டுத்தனத்தையும் விட்டு விடுவார்கள்.

34 ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு இவர்களுக்கு நாம் ஆணையிட்டு வாக்குறுதி தந்த நாட்டுக்கு அவர்களை மீண்டும் கொண்டு வந்து சேர்ப்போம்; அவர்கள் அதை ஆளுவார்கள்; மேலும் நாம் அவர்களைப் பலுகச் செய்வோம்; அவர்கள் எண்ணிக்கையில் குறையமாட்டார்கள்.

35 அவர்களோடு முடிவில்லாக் காலத்திற்கும் மற்றுமோர் உடன்படிக்கை செய்து கொள்வோம்; அப்போது நாம் அவர்களுக்குக் கடவுளாய் இருப்போம்; அவர்கள் நம் மக்களாய் இருப்பார். நம் குடிமக்களான இஸ்ராயேலின் மக்களை, நாம் அவர்களுக்குக் கொடுத்த நாட்டிலிருந்து இனிமேல் அப்புறப்படுத்த மாட்டோம்."

அதிகாரம் 03

1 எல்லாம் வல்ல ஆண்டவரே, இஸ்ராயேலின் கடவுளே, வேதனையில் இருக்கும் ஆன்மாவும், கலக்கமுற்றிருக்கும் உள்ளமும் உம்மை நோக்கிக் கூக்குரலிடுகின்றன.

2 ஆண்டவரே, இந்தக் கூக்குரலைக் கேட்டு இரக்கமாயிரும்; ஏனெனில் நாங்கள் உம் முன்னிலையில் பாவம் செய்தோம்.

3 ஏனெனில் நீர் என்றென்றும் அரியணையில் வீற்றிருக்கிறீர்; நாங்களோ எந்நாளும் அழிந்து போகிறோம்.

4 எல்லாம் வல்ல ஆண்டவரே, இஸ்ராயேலின் கடவுளே, இஸ்ராயேலில் இறந்தவர்களின் மன்றாட்டை இப்பொழுதே கேட்டருளும்; தங்கள் கடவுளாகிய ஆண்டவருடைய சொல்லுக்குச் செவிகொடாமல் உமது முன்னிலையில் பாவம் செய்தவர்களுடைய மக்களின் மன்றாட்டையும் கேட்டருளும்; அவர்களுடைய பாவத்தினால் தான் எங்களுக்குத் தீமைகள் வந்துற்றன.

5 எங்கள் தந்தையர்களின் அக்கிரமங்களை நினைவில் கொள்ளாதீர்; ஆனால் இந்நாளில் உமது கைவன்மையையும், திருப்பெயரையும் நினைத்துக் கொள்ளும்.

6 ஏனெனில், நீரே எங்கள் கடவுளாகிய ஆண்டவர்; ஆண்டவரே, உம்மையே நாங்கள் வாழ்த்துவோம்.

7 ஏனெனில் உம் திருப்பெயரை நாங்கள் கூவியழைக்கவே, எங்கள் உள்ளங்களில் உம்மைப்பற்றிய அச்சத்தைத் தந்திருக்கிறீர்; எங்கள் அடிமைத்தனத்தில் உம்மை வாழ்த்துகிறோம்; ஏனெனில் உமது முன்னிலையில் பாவம் செய்த எங்கள் தந்தையர்களின் அக்கிரமத்தை நாங்கள் எங்கள் உள்ளங்களிலிருந்து அகற்றி விட்டோம்.

8 எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, உம்மை விட்டு அகன்று போய், எங்கள் தந்தையர்கள் செய்த எல்லா அக்கிரமங்களுக்காகவும், இதோ நாங்கள் இன்று அடிமைத்தனத்தில் அல்லலுறுகிறோம்; நீர் எங்களைச் சிதறடித்து நிந்தைக்கும் சாபனைக்கும் தண்டனைக்கும் உள்ளாக்கினீர்"

9 ஞானம்: இஸ்ராயேலின் தனியுரிமை: இஸ்ராயேலே, வாழ்வளிக்கும் முறைமைகளைக் கேளுங்கள்; விவேகத்தைக் கற்றுக்கொள்ளக் காது கொடுத்துக் கேளுங்கள்.

10 இஸ்ராயேலரே, நீங்கள் பகைவர்களின் நாட்டில் இருப்பது ஏன்?

11 அந்நிய நாட்டில் தளர்ச்சியுற்றிருப்பது ஏன்? இறந்தவர்களோடு நீங்களும் தீட்டுப்பட்டவர்களாய்ப் பாதாளத்தில் இறங்குகிறவர்களோடு சேர்த்தெண்ணப்படுவது ஏன்?

12 ஞானத்தின் ஊற்றை நீங்கள் கைவிட்டீர்கள்.

13 ஆண்டவரின் வழியில் நீங்கள் நடந்திருந்தால், உண்மையில் முடிவில்லாத சமாதானத்தோடு வாழ்ந்திருப்பீர்கள்.

14 ஞானம் எங்கேயிருக்கிறது, ஆற்றல் எங்கே உள்ளது, அறிவுத் திறன் எங்கிருக்கிறது என்று அறிந்து கொள்ளுங்கள்; அதே சமயத்தில் வாழ்நாளின் நீடிப்பும் நல் வாழ்வும், கண்களின் ஒளியும் சமாதானமும் எங்கிருக்கின்றன என்று அறிந்து கொள்வீர்கள்.

15 ஞானத்தின் இருப்பிடத்தைக் கண்டவன் யார்? அதன் கருவூல அறைகளுள் நுழைந்தவன் எவன்?

16 மக்களினங்களின் தலைவர்கள் எங்கே? பூமியிலுள்ள மிருகங்களை அடக்கி ஆள்பவர்கள் எங்கே?

17 வானத்தின் பறவைகளைக் கொண்டு விளையாட்டுக் காட்டுகிறவர்கள் எங்கே?

18 மனிதர்கள் தங்கள் நம்பிக்கையை வைக்கும் பொன்னையும் வெள்ளியையும் சேமிப்பவர்கள் எங்கே? அவர்களுடைய சேமிப்பு வேலைக்கு முடிவே இல்லை. பணம் சேர்ப்பதற்குத் திட்டங்கள் போட்டு, அதே கவலையாய் இருந்து அளவு கடந்து வேலைகளைச் செய்கிறவர்கள் எங்கே?

19 அவர்கள் அனைவரும் அழிந்து போனார்கள், பாதாளத்தில் இறங்கிப் போயினர். அவர்களுக்குப் பதிலாக வேறு மனிதர் கிளம்பியுள்ளனர்.

20 இளைஞர்கள் ஒளியைக் கண்டனர், பூமியில் குடியிருந்தனர்; ஆனால் நல்லொழுக்க நெறியை அவர்கள் அறியவில்லை.

21 அதனுடைய வழிகளை அவர்கள் கண்டு உணரவில்லை; அவர்களுடைய மக்களும் அதைப் பின்பற்றவில்லை, முழுதும் விலகி நடந்தார்கள்.

22 கானான் நாட்டில் அதைப்பற்றிக் கேள்விப்பட்டதில்லை, தேமான் நாட்டிலும் அதைக் கண்டதில்லை;

23 உலகத்துக்கடுத்த விவேகத்தைத் தேடின ஆகாரின் மக்களும், மேராவின் வணிகர்களும், தேமானின் வியாபாரிகளும், கட்டுக் கதைகளைப் பிதற்றுகிறவர்களும், உலகியல் விவேகத்தையும் அறிவையும் ஆராய்கிறவர்களும் மெய்ஞ்ஞானத்தை அறியவுமில்லை. மெய்வழியைக் கண்டுபிடிக்கவுமில்லை.

24 இஸ்ராயேலே, கடவுளின் கோயில் எவ்வளவு பெரியது! அவருடை சொத்துரிமையாகிய இடம் எவ்வளவு பரந்தது!

25 அது மிகப் பெரிது, எல்லையில்லாதது; உயரமானது, அளவிறந்தது.

26 அதிலே தான் பண்டைக் காலத்திலிருந்து இராட்சதர்கள் இருந்தனர், மிகவும் உயரமானவர்கள், போரில் வல்லவர்கள்.

27 எனினும் அவர்களை ஆண்டவர் தேர்ந்தெடுக்கவில்லை, அவர்களும் மெய்ஞ்ஞான வழியைக் காணவில்லை, ஆகவே அவர்கள் அழிந்து போனார்கள்.

28 அவர்களிடம் மெய்ஞ்ஞானம் இல்லாததால், தங்கள் அறிவின்மையால் கெட்டார்கள்.

29 வான் வெளிக்கு ஏறிப்போய் ஞானத்தைப் பெற்றுக்கொண்டவன் யார்? கார்மேகங்களினின்று அதை வெளிக் கொணர்ந்தவன் எவன்?

30 கடலைக் கடந்து போய் அதைக் கண்டுபிடித்தவன் யார்? பசும்பொன் கொடுத்து அதனை வாங்கினவன் யார்?

31 அதற்குச் செல்லும் வழியை அறிந்தவனுமில்லை, அந்த வழியைப் பற்றிக் கவலைப்படுபவனுமில்லை.

32 ஆனால் எல்லாம் தெரிந்தவர் அதை அறிந்திருக்கிறார், தம் மெய்ஞ்ஞானத்தினால் அதைக் கண்டடைந்தார், அவரே முடிவில்லாக் காலத்திற்கும் பூமியை நிலைநாட்டினார், பல்வகை மிருகங்களாலும் உயிர்களாலும் நிரப்பினார்.

33 அவர் ஒளியை அனுப்புகிறார், அது புறப்படுகின்றது; அதைத் திரும்ப அழைக்கிறார், அச்சத்தோடு கீழ்ப்படிகிறது.

34 தத்தம் சாமத்தில் விண்மீன்கள் ஒளிவீசின, மகிழ்ச்சியாய் இருந்தன.

35 அவற்றை அவர் அழைத்தார், அவை, "இதோ இருக்கிறோம்" என்றன; தங்களை உண்டாக்கியவருக்காக இன்பத்தோடு ஒளி வீசின.

36 அவரே நம்முடைய கடவுள், அவருக்கு இணையானவர் ஒருவருமில்லை!

37 உண்மையறிவின் வழியனைத்தும் கண்டவர் அவரே, தம் ஊழியனாகிய யாக்கோபுக்கு அதைக் கையளித்தார், தம் அன்புக்குரிய இஸ்ராயேலுக்குச் சொல்லிக் கொடுத்தார்.

38 அதன்பிறகு அந்த ஞானம் பூமியின் மேல் தோன்றிற்று, மனிதர்கள் நடுவில் குடிகொண்டிருந்தது.

அதிகாரம் 04

1 அந்த ஞானம் கடவுளுடைய கற்பனைகளின் நூலேயாகும், என்றென்றைக்குமிருக்கும் திருச்சட்டமேயாகும், இதைக் கடைப்பிடிப்பவர் அனைவரும் வாழ்வடைவர், இதைக் கைவிடுபவர் சாவையே அடைவர்;

2 யாக்கோபே, மனந்திரும்பு; அதைக் கைப்பற்றிக்கொள்; அதன் ஒளிச் சுடரையும், வீசும் வெளிச்சத்தையும் நோக்கி நட.

3 உன்னுடைய மகிமையைப் பிறனுக்கு விட்டுவிடாதே, உனது பெருமையை அந்நிய நாட்டானுக்கு விட்டுக் கொடுக்காதே.

4 இஸ்ராயேலே, உண்மையாகவே நாம் பேறு பெற்றவர்கள்; கடவுளுக்கு உகந்தவை நமக்கு வெளிப்படுத்தப் பட்டுள்ளன.

5 யெருசலேமின் முறையீடுகளும் நம்பிக்கைகளும்: இஸ்ராயேலின் நினைவுச் சின்னமாய் இருக்கிற இனமே, என் குடிமக்களே, தைரியமாயிருங்கள்.

6 அழிந்து போவதற்காகப் புறவினத்தாரிடம் நீங்கள் விற்கப்படவில்லை; ஆனால் நீங்கள் கடவுளின் கோபத்தை மூட்டியதால் தான் எதிரிகளுக்குக் ககையளிக்கப்பட்டீர்கள்.

7 ஏனெனில் கடவுளுக்குப் பலியிடாமல் பேய்களுக்குப் பலியிட்டு, உங்களை உண்டாக்கிய கடவுளுக்கு எரிச்சல் உண்டு பண்ணினீர்கள்.

8 உங்களை உண்பித்து வந்த நித்திய கடவுளை மறந்தீர்கள், உங்களை வளர்த்து வந்த யெருசலேமைத் துயரப்படுத்தினீர்கள்.

9 கடவுளுடைய கோபம் உங்கள் மேல் வருவதைக் கண்டு, யெருசலேம் சொன்னது: "சீயோனின் அண்டை நாட்டவரே, கேளுங்கள்; கடவுள் எனக்குப் பெருந்துயரத்தைத் தந்திருக்கிறார்.

10 ஏனெனில் என் மக்களையும், புதல்வர், புதல்வியரையும் நித்தியமானவர் அடிமைத்தனத்திற்கு உள்ளாக்கினதைக் காண்கிறேன்.

11 அவர்களை நான் மகிழ்ச்சியோடு வளர்த்து வந்தேன், இப்பொழுது, அழுகையோடும் கண்ணீரோடும் போக விட்டிருக்கிறேன்.

12 நான் கைம்பெண்ணாகித் துன்புறுவதைக் கண்டு எவனும் மகிழாதிருக்கட்டும்; என் பிள்ளைகளின் பாவங்களை முன்னிட்டுப் பலராலும் நான் கைவிடப்பட்டேன்; ஏனெனில் என் மக்கள் கடவுளின் கட்டளையை மீறினார்கள்.

13 கடவுளின் நீதி முறைமைகளை அவர்கள் கண்டறியவில்லை; அவருடைய கற்பனைகளின்படி நடக்கவுமில்லை; அவருடைய உண்மையான வழிகளில் நேர்மையோடு நடக்கவுமில்லை.

14 சீயோனின் சுற்றுப்புறத்தார் இப்பொழுது வரட்டும், நித்தியமானவர் அடிமைத்தனத்திற்கு உள்ளாக்கிய என் புதல்வர், புதல்வியரை நினைத்துக் கொள்ளட்டும்.

15 ஏனெனில் அவர்களுக்கு எதிராகத் தொலை நாட்டினரையும், கொடிய மக்களையும் வேற்று மொழியினரையும் கடவுள் கொண்டு வந்தார்.

16 இவர்களோ கல்நெஞ்சம் கொண்டவர்கள், முதியோரை மதிக்காதவர்கள், இளஞ் சிறுவர்களுக்கு இரங்காதவர்கள், கைம்பெண்ணின் அன்பு மக்களை நடத்திச் சென்றார்கள், மக்களைப் பிரித்து அவளைத் தனியள் ஆக்கினார்கள்.

17 ஆனால் நான் உங்களுக்கு எவ்வகையில் உதவக்கூடும்?

18 ஏனெனில் உங்கள் மேல் இத்தீமைகளை வரச்செய்தவர் யாரோ, அவரே உங்கள் பகவைர் கையினின்று உங்களை மீட்பார்;

19 போங்கள், என் மக்களே, நடந்து செல்லுங்கள்; நானோ கைவிடப்பட்டவள்; தனியளாய் இருக்கிறேன்.

20 அமைதியின் ஆடையைக் களைந்து விட்டேன், தவத்துக்குரிய மயிராடையை உடுத்துக் கொண்டேன், என் வாணாளெல்லாம் உன்னதரை நோக்கி ஒலமிடுவேன்.

21 என் மக்களே, தைரியமாயிருங்கள். ஆண்டவரைப் பார்த்துக் கூக்குரலிடுங்கள்; பகை மன்னர்களின் வல்லமையினின்றும் கையினின்றும் உங்களை விடுவிப்பார்.

22 நித்தியர் உங்களை மீட்பார் என்னும் நம்பிக்கை எனக்கு எப்போதும் இருக்கிறது; பரிசுத்தரிடமிருந்து எனக்கு மகிழ்ச்சி கிட்டியது, ஏனெனில் நித்திய மீட்பர் உங்கள் மேல் இரங்குவார்.

23 அழுகையோடும் புலம்பலோடும் உங்களை அனுப்பினேன், ஆனால் மகிழ்ச்சியோடும் முடிவில்லா அக்களிப்போடும் உங்களை ஆண்டவர் மீண்டும் என்னிடம் கூட்டி வருவார்.

24 ஏனெனில் சீயோனின் சுற்றுப்புறத்தார், கடவுள் உங்களை அடிமைத்தனத்திற்கு உள்ளாக்கியதைக் கண்டது போலவே, மிகுந்த மகிமையோடும் முடிவில்லா ஒளியோடும் கடவுளிடமிருந்து விரைவில் உங்களுக்குக் கிடைக்கப் போகிற மீட்பையும் காண்பார்கள்.

25 மக்களே, கடவுளிடமிருந்து உங்கள் மேல் வந்துள்ள, கோபத்தின் தண்டனையைப் பொறுமையோடு தாங்கிக்கொள்ளுங்கள்; உங்கள் பகைவன் உங்களைத் துன்புறுத்தியுள்ளான்; ஆனால் விரைவில் அவன் அழிவதைக் காண்பீர்கள், அவன் தலைகளை உங்கள் காலால் மிதிப்பீர்கள்.

26 மென்மையான என் மக்கள் கரடு முரடான வழிகளில் நடந்தனர், பகைவர் பறித்துச் செல்லும் மந்தை போலச் கடத்திச் செல்லப் பட்டார்கள்.

27 மக்களே, தைரியமாயிருங்கள், ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிடுங்கள்; ஏனெனில் உங்களுக்கு இத்துயரம் அனுப்பியவர் உங்களை மறக்க மாட்டார்.

28 கடவுளை விட்டு அகன்று போவதே முன்பு உங்கள் கருத்தாய் இருந்தது போல் இப்பொழுது மீண்டும் அவரிடம் திரும்பிய பிறகு, பத்து மடங்கு ஆர்வத்தோடு அவரைத் தேடுங்கள்.

29 ஏனெனில் இந்தத் தீமைகளை உங்கள் மேல் வரச் செய்தவரே முடிவில்லாத மகிழ்ச்சியையும் மீட்பையும் உங்களுக்குத் திரும்பவும் கொடுப்பார்."

30 யெருசலேமே, தைரியமாயிரு; ஏனெனில் உனக்கு இப்பெயரை இட்டவரே உனக்கு ஆறுதல் கொடுப்பார்.

31 உன்னைக் கொடுமைப் படுத்தி உன் அழிவைக் கண்டு மகிழ்ந்தவர்களுக்கு ஐயோ கேடு!

32 உன் மக்கள் அடிமை ஊழியம் செய்யும் பட்டணங்களுக்கு ஐயோ கேடு! உன் புதல்வர்களை அடிமைகளாய் ஏற்றுக்கொண்ட நகரத்துக்கு ஐயோ கேடு!

33 ஏனெனில் உன் அழிவைக் கண்டு அது மகிழ்ந்தது போல், உன் வீழ்ச்சியைப் பார்த்து அக்களித்தது போலத் தனக்கு வரும் கேடுகளைப் பார்த்துத் துயரமடையும்.

34 அதன் குடிகளின் மகிழ்ச்சி ஆரவாரமெல்லாம், முற்றிலும் அடங்கிவிடும்; அதன் செருக்கு அழுகையாய் மாறி விடும்.

35 நித்தியமானவரிடமிருந்தது பல நாட்களுக்கு அதன் மேல் நெருப்பு பொழியப்படும்; பன்னெடுங் காலத்திற்கு அது பேய்களின் இருப்பிடமாயிருக்கும்.

36 யெருசலேமே, கீழ்த்திசைப் பக்கம் நோக்கு; கடவுள் உனக்கு அனுப்பும் அகமகிழ்ச்சியைப் பார்.

37 உன்னை விட்டுப் பிரிந்து போன உன் மக்கள் இதோ வந்து கொண்டிருக்கிறார்கள்; கீழ்த்திசை முதல் மேற்றிசை வரையில் பரிசுத்தரின் வார்த்தையால் ஒன்றாய்க் கூடி கடவுளின் மகிமைக்காக மகிழ்ச்சியோடு வருகிறார்கள்.

அதிகாரம் 05

1 யெருசலேமே, உன் துக்க உடைகளையும், துயர கோலத்தையும் உரிந்து போடு; கடவுள் உனக்கு அருளும் முடிவில்லா மகிமை உன்னை அழகு செய்யட்டும்.

2 ஆண்டவர் உனக்கு அருளும் நீதியை ஆடையாய் உடுத்திக் கொள்; நித்தியமானவரின் மகிமையை மணி முடியாய் அணிந்து கொள்.

3 உலகமெலாம் காணும்படி கடவுள் உன்னுடைய ஒளியினைக் காட்டிடுவார்.

4 எந்நாளும் நிலைக்கும்படி கடவுள் உனக்கு இடும் பெயர்கள், 'நீதியின் அமைதி, இறைப்பற்றின் மகிமை' என்பனவாம்.

5 யெருசலேமே, எழுந்திரு, உயரத்தில் எழுந்து நில், கிழக்குத் திசையை நோக்கிப் பார்; மேற்றிசை முதல் கீழ்த்திசை வரையில் இருந்த உன் குழந்தைகள் பரிசுத்தரின் வார்த்தையால் ஒன்றாய்க் கூடிக் கடவுள் தங்களை நினைவு கூர்ந்ததற்காக மகிழ்ந்து கொண்டு வருகிறார்கள்.

6 அவர்கள் உன்னை விட்டு அகலும் பொழுது, தாங்கள் பகைவர்களால் கால் நடையாய் நடத்திச் செல்லப்பட்டார்கள்; ஆனால் கடவுள் அவர்களை உன்னிடம் திரும்பச் செய்யும் பொழுது, அரசுக்குரிய மக்களைப் போல மகிமையோடு கொண்டு வரப்படுவார்கள்.

7 ஏனெனில் கடவுளின் மகிமையோடு இஸ்ராயேல் தீங்கற்ற வழியில் தாராளமாய் நடக்கும்படி, உயர்ந்த மலைகளையும் அழியாத குன்றுகளையும் தாழ்த்திப் பள்ளத்தாக்குகளை நிரப்பிச் சமநிலமாக்கும்படி கடவுள் கட்டளை கொடுத்தார்.

8 காடுகளும் நறுமணம் வீசும் மரங்களும் கடவுளின் கட்டளையால், இஸ்ராயேலுக்கு இனிய நிழலைத் தந்தன.

9 ஏனெனில் கடவுள் தம் மகிமையின் வெளிச்சத்தில் இஸ்ராயேலை அகமகிழ்ச்சியோடும், தம்மிடத்திலிருந்து வெளிப்படும் இரக்கத்தோடும் நீதியோடும் கூட்டிக் கொண்டு வந்து சேர்ப்பார்

அதிகாரம் 06

1 பபிலோனிய அரசனால் பபிலோனியாவுக்கு அடிமைகளாய்க் கூட்டிக்கொண்டு போகப்படவிருந்த யூதர்களுக்கு எரெமியாஸ் தமக்குத் கடவுள் கட்டளையிட்டவற்றை அறிவிக்கும்படி எழுதியனுப்பிய திருமுகத்தின் பிரதி. நீங்கள் கடவுளுக்கு முன்பாகப் பாவங்களைக் கட்டிக்கொண்டதால், பபிலோனிய அரசனான நபுக்கோதனசாரால் பபிலோனுக்கு அடிமைகளாய்க் கூட்டிக் கொண்டு போகப்படுவீர்கள்.

2 நீங்கள் பபிலோனுக்குப் போய்ச் சேர்ந்த பிறகு, அவ்விடத்திலேயே பல்லாண்டுகளாய் நெடுங்காலம்- ஏழு தலைமுறைகளுக்கு இருப்பீர்கள்; அதன் பிறகு அங்கிருந்து உங்களைச் சமாதானமாய்ப் புறப்படச் செய்வோம்.

3 பபிலோனில் பொன், வெள்ளி, கல், மரம் முதலியவற்றால் செய்யப்பட்ட பயங்கரமான தெய்வங்களைச் சுமந்துகொண்டு மக்கள் ஊர்வலம் வருவதைக் காண்பீர்கள்.

4 நீங்களோ அந்நியருடைய செயல்களைப் பின்பற்றாமல் எச்சரிக்கையாய் இருங்கள்; அந்தத் தெய்வங்களுக்கு அஞ்சாதீர்கள். அவற்றைப் பற்றிய அச்சத்திற்கு இடங் கொடாதீர்கள்.

5 முன்னும் பின்னுமாக இருந்து மக்கட் கூட்டம் அந்தத் தெய்வங்களை வணங்கும் போது, நீங்கள், "ஆண்டவரே, உம்மையே மனிதர் வணங்க வேண்டும்" என்று உங்கள் மனத்திலே சொல்லிக் கொள்ளுங்கள்.

6 ஏனெனில் நம்முடைய தூதர் உங்களோடு இருக்கிறார்; உங்கள் வாழ்க்கை அவர் கண்காணிப்பில் இருக்கிறது.

7 அச்சிலைகளின் நாக்கு தச்சனால் செதுக்கப்பட்டது; பொன்னாலும் வெள்ளியாலும் மூடப்பட்டிருந்தாலும், அவை (சிலைகள்) பொய்யுருவங்கள்; ஆகவே பேசமாட்டா.

8 நகைகளை விரும்பும் கன்னிப்பெண் ஒருத்திக்குச் செய்வது போல,

9 பொன்னையெடுத்து அவர்களுடைய தெய்வங்களின் தலைகளில் பொன் முடிகள் வைக்கிறார்கள். ஆனால் அந்தப் பொன், வெள்ளியைப் பூசாரிகள் தங்களுக்கென்று எடுத்துப் பயன்படுத்திக் கொள்வதுண்டு.

10 அப்பொன்னை வேசிகளுக்கும் கொடுக்கிறார்கள். மனிதர்களை அலங்கரிப்பது போலப் பொன்னாலும் வெள்ளியாலும் மரத்தாலும் செய்யப்பட்ட தங்கள் தெய்வங்களை அலங்கரிக்கிறார்கள்.

11 துருப் பிடிக்காமலும் பூச்சி அரிக்காமலும் தங்களையே காப்பாற்றிக் கொள்ள அத்தெய்வங்களால் முடியாது.

12 அத்தெய்வங்களுக்குப் பட்டாடைகளை உடுத்தின பின்பு, அவற்றின் முகத்தைத் துடைக்க வேண்டியிருக்கிறது; ஏனெனில் அவை இருக்கும் இடத்தின் புழுதியெல்லாம் அவற்றின் மேல் தான் படிந்துள்ளது.

13 ஒரு சிலை மனிதனைப் போலவே தன் கையில் செங்கோல் ஏந்திக் கொண்டிருந்தாலும், நாடாள்பவனைப் போலத் தன்னை அவமதித்தவனை ஒழிக்க முடியாது.

14 மேலும் சிலை தன் கையில் வாளையோ கோடரியையோ பிடித்துக் கொண்டிருந்தாலும், போரிலிருந்தோ கள்ளர்களிடமிருந்தோ தன்னைக் காத்துக் கொள்ளப் பயன்படுத்த முடியாது; இதிலிருந்து அவை மெய்யான தெய்வங்கள் அல்ல என்பது உங்களுக்கு விளங்கும்.

15 அந்தத் தெய்வங்களுக்கு அஞ்சாதீர்கள்; அவை ஒன்றுக்கும் உதவாத உடைபட்ட பாண்டத்துக்கு ஒப்பானவை.

16 அவற்றை ஒரு வீட்டில் வைத்தால், வீட்டுக்குள் நுழைகிறவர்களுடைய கால் தூசியால் அவற்றின் கண்கள் நிரம்புகின்றன.

17 அரச துரோகம் செய்த ஒருவனைச் சிறைக்கூடத்தில் அடைப்பது போல், அந்தத் தெய்வங்களின் பூசாரிகள் அவற்றைக் கள்ளர்களின் கையிலிருந்து காப்பாற்றுவதற்காகத் தாழ்ப்பாளிட்டுப் பூட்டுப் போட்டுக் காவல் செய்கிறார்கள்.

18 (இவர்கள்) அவற்றின் முன் விளக்குகளைத் தங்களுக்கு ஏற்றுவதை விட அதிகமான விளக்குகளை ஏற்றினாலும், அவற்றில் ஒன்றையும் அவை காண்பதில்லை; வீட்டின் விட்டங்களைப் போல் அத்தெய்வங்கள் இருக்கின்றன;

19 அத்தெய்வங்களுக்குத் தெரியாமலே அவற்றையும், அவற்றின் உடைகளையும் செல்லரிக்கின்றது; இதைக் கண்டு அவர்களின் உள்ளம் உருகி விட்டதாகக் கூறுகிறார்கள்.

20 அவை இருக்கும் இடத்தில் உண்டாகும் புகையினால் அவற்றின் முகம் கறுத்துப் போகின்றது.

21 வெளவால்களும் குருவிகளும் மற்றப் பறவைகளும் அத்தெய்வங்களின் உடல் மேலும் தலை மேலும் வட்டமிடுகின்றன; பூனைகளும் அவ்வாறே அவற்றின் மேல் விளையாடும்.

22 இதிலிருந்து அவை தெய்வங்கள் அல்ல என்று அறிந்து கொள்ளுங்கள்; ஆகையால் அவற்றுக்கு அஞ்சவேண்டா.

23 இனி, அத்தெய்வங்கள் மேலிருக்கும் பொன் வெறும் பகட்டு; அதைத் துலக்கினாலன்றி ஒளி வீசாது; அச்சிலைகளை உலையிலிட்டு உருக்கிய போதும் அவற்றிற்கு உணர்ச்சியில்லை.

24 உயர்ந்த விலைக்கு அவை வாங்கப்பட்டவை; ஆனால் அவற்றில் உயிர் மூச்சு இல்லை.

25 காலில்லாத அந்தத் தெய்வங்கள் தோளில் சுமந்து செல்லப்படுகின்றன; இவ்வாறு தங்கள் பலவீனத்தைக் காட்டிவிடுகின்றன; அவற்றை வணங்குகிறவர்களோ தலை நாணி வெட்கிப்போகின்றனர். ஏனெனில் அவர்களோ அவற்றைக் கீழே விழாமல் பிடித்து நிறுத்துகிறார்கள்.

26 அவை தரையில் விழுந்தால் தாமாகவே எழுந்திருக்க மாட்டா; தூக்கி நிறுத்தினாலும், பாத நிலையில் நிற்க மாட்டா; ஆனால் செத்தவர்களுக்கு முன் காணிக்கைகள் வைக்கப்படுவது போல் அவற்றின் முன்னும் வைக்கப்படுகின்றன.

27 அத்தெய்வங்களுக்கு வைக்கப்படும் காணிக்கைகளை அவற்றின் பூசாரிகள் எடுத்து விற்றுத் தங்கள் விருப்பம் போலச் செலவிடுகிறார்கள்; இவர்களின் மனைவியர் அக்காணிக்கைகளில் தங்களுக்கு வேண்டியவற்றை எடுத்துக் கொள்கிறார்கள்; அவற்றைக் கொண்டு ஏழை எளியவர்களுக்குத் தானம் செய்வதில்லை.

28 அவர்களுடைய பெண்கள் தீட்டுப்பட்ட காலத்திலும் சூலான காலத்திலும் தெய்வங்களின் காணிக்கைகளைத் தீண்டுகிறார்கள்; இதிலிருந்து அவை தெய்வங்கள் அல்ல என்று அறிந்து கொள்ளுங்கள்; ஆகவே அவற்றுக்கு அஞ்சவேண்டா.

29 இனி, அவற்றைத் தெய்வங்கள் என்று சொல்லக் காரணந்தான் இருக்கிறதா? பொன், வெள்ளி, மரம் முதலியவற்றால் செய்யப்பட்ட அந்தத் தெய்வங்களுக்குப் பெண்கள் காணிக்கை படைக்கிறார்கள்!

30 அவற்றின் பூசாரிகளோ தாடியை மழித்து விட்டுத் தலையை மொட்டையடித்துக் கொண்டு கிழிந்த உடைகளை உடுத்தித் தலையில் முக்காடு போடாது நாள் முழுவதும் கோயில்களில் உட்கார்ந்து கிடக்கிறார்கள்.

31 செத்தவரைக் குறித்துச் செய்விக்கும் விருந்தில் நடப்பது போலத் தங்கள் தெய்வங்களின் முன் ஊளையிட்டு அந்தப் பூசாரிகள் கூக்குரலிடுகிறார்கள்.

32 அந்தப் பூசாரிகள் தங்கள் தெய்வங்களுக்கு உடுத்திய உடைகளை உரிந்து தங்கள் மனைவி, மக்களுக்கு உடுத்துகிறார்கள்.

33 அத்தெய்வங்களுக்கு நன்மை செய்தாலும் சரி, தீமை செய்தாலும் சரி அதற்கு அவற்றால் பதிலுக்குப் பதில் செய்ய முடியாது; அவற்றால் ஒருவனை அரசனாக்கவும் இயலாது; அவனுடைய மணிமுடியை எடுக்கவும் முடியாது.

34 அவற்றால் செல்வங்களைத் தரமுடியாது; தீமைகளை வருவிக்கவும் முடியாது; ஒருவன் தன் தெய்வங்களுக்கு நேர்ந்து கொண்டு அந்த நேர்ச்சிக் கடனைச் செலுத்தாமல் போவானாகில், அந்தத் தவற்றுக்காக அவனைத் தண்டிக்க அவற்றால் இயலாது.

35 அவை ஒருவனைச் சாவிலிருந்து தப்பச் செய்ய முடியாது; வலிமையுள்ளவர்கள் கையிலிருந்து வலிமையற்றவர்களை மீட்கிறதில்லை.

36 அவை குருடனுக்குப் பார்வை கொடுக்கமாட்டா; நெருக்கடியில் உள்ளவனை விடுவிக்கமாட்டா;

37 கைம் பெண்ணின் மேல் இரக்கங்கொள்ளா; அனாதைப் பிள்ளைகளைக் காப்பாற்றமாட்டா.

38 இவர்கள் வணங்கும் அத்தெய்வங்களோ மலையிலிருந்து எடுக்கப்படும் கற்களுக்கு ஒப்பானவை; கல்லாலும் மரத்தாலும் பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்டவை; இவற்றை வணங்குகிறவர்கள் வெட்கி நாணுவர்.

39 ஆகையால் இவற்றைத் தெய்வங்கள் என்று எவ்வாறு கருத முடியும்? அல்லது சொல்ல முடியும்?

40 மேலும், கல்தேயர்களே இவற்றை அவமதிக்கிறார்கள்; ஊமையன் ஒருவனை அவர்கள் பேல் என்னும் சிலைக்கு முன்னால் கொண்டு போய் நிறுத்தி, அவனுக்குப் பேசும் ஆற்றலைத் தரும்படி கேட்கிறார்கள்; இந்தச் சிலைகளுக்கு உணர்ச்சியுண்டு என நினைக்கிறார்கள் போலும்!

41 இதைக்கூட அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லையே! அவ்வளவு அறிவிலிகள் அவர்கள்! கண்டுபிடித்தால் அவற்றைக் கைவிடுவாரன்றோ?

42 பெண்கள் இடுப்பில் கயிறு கட்டிக் கொண்டு வழியோரங்களில் உட்கார்ந்து சாம்பிராணிக்குப் பதிலாக உமியால் தீ வளர்த்துக் கொண்டிருப்பார்;

43 இந்தப் பெண்களுள் ஒருத்தியை வழிப்போக்கன் ஒருவன் அழைத்துப்போய் அவளோடு உறவுகொள்வானாகில், அவள் தன் பக்கத்தில் இருக்கிற வெறொருத்தியைப் பார்த்து, "நீ என்னைப் போல மதிக்கப்படவில்லை, உன் இடுப்பில் கட்டப்பட்ட கயிறு தெறிக்கப்படவில்லை" என்று சொல்லி, அவளை இகழ்ந்து பேசுவாள்.

44 இந்தத் தெய்வங்களுக்குச் செய்வதெல்லாம் பொய்; அப்படியிருக்கும் போது, இவற்றைத் தெய்வங்கள் என்று எவ்வாறு கருத முடியும்? அல்லது சொல்ல முடியும்?

45 இவை தச்சனாலும் தட்டானாலும் செய்யப்பட்டவை; பூசாரிகள் விரும்பியபடியே உருவாக்கப்பட்டவை.

46 இவற்றை உருவாக்கிய வேலைக்காரர்களே நெடுநாள் வாழாமலிருக்க, இவர்களுடைய கைவேலையாகிய உருவங்கள் எப்படித் தெய்வங்களாய் இருக்க முடியும்?

47 தங்களுக்குப் பின் வருகிறவர்களுக்குப் பொய்களையும் வெட்கத்தையுமே விட்டுச் சென்றார்கள்.

48 ஏனெனில் ஏதேனும் சண்டையோ தீமையோ உண்டானால், இந்தப் பூசாரிகள் தங்கள் தெய்வங்களோடு எங்கே போய் ஒளிந்து கொள்ளலாம் என்று பார்க்கிறார்கள்.

49 சண்டைக் காலத்திலே தங்களைக் காத்துக்கொள்ளவோ, தீமைகளினின்று தங்களை மீட்டுக் கொள்ளவோ இயலாதவர்களைத் தெய்வங்கள் என்று எப்படி நினைக்கக் கூடும்?

50 இவர்கள் உண்மையில் மரத்தினாலும் பொன், வெள்ளித்தகட்டினாலும் அமைக்கப்பட்ட சிலைகளானதால், ஒருநாள் இவற்றின் பொய்மை எல்லா மக்களுக்கும், எல்லா அரசர்களுக்கும் வெட்ட வெளியாகிவிடும்; இவை தெய்வங்கள் அல்ல என்பதும், மனிதர்களின் கைவேலைப்பாடாகிய வெறும் சிலைகளே என்பதும், இவற்றுக்குத் தெய்வ வல்லமை ஒன்றுமில்லை என்பதும் பட்டப் பகலாகக் காணப்படும்.

51 ஆம், இவை தெய்வங்கள் அல்ல என்பது யாருக்குத்தான் தெளிவாகாது?

52 ஒரு நாட்டுக்கு ஒர் அரசனை அவை ஏற்படுத்துகிறதில்லை, மனிதர்களுக்கு மழையைத் தருகிறதுமில்லை.

53 அவை தங்களுக்கே நீதி வழங்க முடியாது; பலாத்காரத்தினின்று நாடுகளை மீட்கவும் இயலாது; வானத்துக்கும் பூமிக்கும் இடையில் பறக்கும் காகங்களைப் போல் அவை வல்லமையற்றவை.

54 மரம், பொன், வெள்ளி இவற்றால் செய்யப்பட்ட தெய்வங்கள் அமர்ந்திருக்கும் கோயிலில் தீப்பற்றிக் கொண்டால், அவற்றின் பூசாரிகள் தப்பிப் பிழைத்தோடிப் போக, வீட்டின் விட்டங்களைப் போல் அவை சுட்டெரிக்கப்படும்.

55 அரசனையோ போரையோ அவற்றால் எதிர்க்க இயலாது. அப்படியிருக்க, அவற்றைத் தெய்வங்கள் என்று எவ்வாறு கருதமுடியும் அல்லது ஏற்றுக்கொள்ள முடியும்?

56 மரம், கல், பொன், வெள்ளி இவற்றால் உருவாக்கப்பட்ட இத்தெய்வங்கள் திருடர்களிடமிருந்தோ, கள்ளர்களிடமிருந்தோ தங்களைக் காத்துக் கொள்ள முடியாது.

57 வலிமை வாய்ந்த மனிதர்கள், இவை அணிந்திருக்கும் பொன், வெள்ளி அணிகலன்களையும் உடைகளையும் திருடிக் கொண்டு போகும் போது, இவை தங்களைக் காத்துக் கொள்ள இயலாது.

58 ஆதலால் இத்தகைய பொய்த் தெய்வங்களாய் இருத்தலை விடத் தன் வல்லமையைக் காட்டுகின்ற ஒர் அரசனாக இருத்தல் மேலானது; அல்லது தன்னை வைத்திருப்பவனுக்குப் பயன்படுகின்ற ஒரு பாண்டமாய் இருத்தல் மேலானது; அல்லது வீட்டில் வைத்திருக்கும் பொருட்களைப் பத்திரமாய்க் காக்கும் ஒரு கதவாய் இருத்தல் மேலானது. அரண்மனையில் ஒரு மரத்தூணாய் இருப்பது மேலானது.

59 கதிரவன், நிலா, விண்மீன்கள் இவையெல்லாம் ஒளி வீசுகின்றன; அவை மனிதர்களின் நன்மைக்காக அனுப்பப்பட்டவையாதலால், கடவுளுக்கு அமைந்திருக்கின்றன.

60 அவ்வாறே மின்னல்கள் மின்னும் போது தங்கள் மகத்துவத்தைக் காட்டுகின்றன; காற்றும் நாட்டின் நாலா பக்கங்களிலும் வீசுகிறது.

61 கடவுள் கட்டளையிடுகிறார். வானத்து மேகங்கள் அந்தக் கட்டளையின்படியே உலகெங்கும் பரவுகின்றன.

62 வானத்தினின்று இறங்கும் நெருப்பும் கடவுளின் கட்டளைப்படி மலைகளையும் காடுகளையும் அழிக்கின்றது; இப்படைப்புப் பொருட்களுக்குள்ள அழகு, ஆற்றல் இத்தெய்வங்களில் எதற்கும் கிடையாது.

63 அவற்றைத் தெய்வங்கள் என்று கருதவோ சொல்லவோ கூடாது; ஏனெனில் அவற்றால் மனிதருக்கு நீதி வழங்க முடியாது; நன்மையோ தீமையோ செய்யவும் இயலாது.

64 ஆகவே அவை தெய்வங்கள் அல்ல என்று அறிந்திருக்கும் நீங்கள் அவற்றுக்குச் சிறிதும் அஞ்சவேண்டா.

65 நாடாளும் மன்னர்களை அவை ஆசீர்வதிக்கிறதுமில்லை, சபிக்கிறதுமில்லை.

66 மக்களுக்கு வானத்தில் அருங்குறிகளைக் காட்ட முடியாது. கதிரவனைப் போலச் சுடர் விடுவதுமில்லை; நிலாவைப் போல் ஒளி வீசுவதுமில்லை.

67 அவற்றைவிட மிருகங்கள் எவ்வளவோ மேலானவை; ஏனெனில் இருப்பிடத்துக்கு ஓடித் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ளவாவது அவற்றால் இயலுகிறது;

68 அவை தெய்வங்கள் என்பதற்கு யாதொரு ஆதாரமும் இல்லை; ஆகவே அவற்றுக்கு அஞ்ச வேண்டா.

69 வெள்ளரித் தோட்டத்துக்குக் காவலாக வைக்கப்படும் பொம்மை எதையும் காவல் காக்காதது போலவே, மரம், பொன், வெள்ளி ஆகியவற்றால் செய்த அந்தத் தெய்வங்களும் இருக்கின்றன.

70 மரம், பொன், வெள்ளி இவற்றால் ஆன அத்தெய்வங்கள், வானத்துப் பறவைகள் தங்கி இளைப்பாறும் தோட்டத்து முட்செடிக்கும், காரிருளடர்ந்த ஒரிடத்தில் எறியப்பட்ட பிணத்துக்கும் ஒப்பானவை.

71 அவற்றைப் போர்த்தியிருக்கும் பட்டுப் பட்டாவளிகள் மக்கிப் போவதிலிருந்தே, அவை தெய்வங்கள் அல்ல என்பது தெளிவாகிறது; இறுதியில் அவையும் அரித்துத் தின்னப்பட்டு, நாட்டுக்கே நிந்தையாகவும் நகைப்பாகவும் இருக்கும்.

72 ஆகவே, சிலைகளை வைத்திராத நீதிமானே மேலானவன்; ஏனெனில் அவன் நிந்தை அவமானத்திற்கு உள்ளாகமாட்டான்.