பாத்திமா காட்சிகள் - நிறைவேறிய ஜஸிந்தாவின் வாக்குகள் சில

லிஸ்பன் நகர டாக்டர் ஒருவர் அவள் தனக்காக மோட்சத்தில் மன்றாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  ஜஸிந்தா அதற்கு சரி என்று கூறியதோடு, தன் மரணத்துக்குப் பின் அந்த டாக்டரும், அவருடைய மகளும் சீக்கிரமே இறந்து விடுவார்கள் என்று கூறினாள்.  அவள் கூறியபடியே அவள் இறந்த சில காலத்துக்குள் அந்த டாக்டரும், அவர் மகளும் இறந்தனர்!

ஒருநாள் ஒலிம்பியாவுடன் சகோதரி கோடினோ பேசிக் கொண்டிருக்கையில், ஒலிம்பியாவின் பெண்மக்கள் ப்ளோரின்டா (வயது 16), தெரேசா (வயது 15) இருவரையும் பற்றிப் பேச்சு வந்தது. அவ்விருவரும் கன்னியர்களாகச் சென்றால் அவளுக்கு மகிழ்ச்சிதானே என்று சகோதரி கோடினோ ஒலிம்பியாவிடம் கேட்டார்கள்.  அவர்களைக் கன்னியராகச் செல்ல அனுமதிக்க மாட்டேன் என்றாள் ஒலிம்பியா.

இந்த உரையாடல் பற்றி ஜஸிந்தாவுக்கு எதுவும் தெரியாது. ஆனால் சகோதரி கோடினோவிடம்: “என் சகோதரிகள் இருவரும் கன்னியர்களாக வேண்டுமென்று தேவ அன்னை விரும்புகிறார்கள். என் தாய் அதற்கு இணங்க மறுக்கிறார்கள். இதனால் என் சகோதரிகளை நம் அம்மா சீக்கிரம் மோட்சத்திற்கு அழைத்துக் கொள்வார்கள்” என்று கூறினாள் ஜஸிந்தா.  அவள் கூறியபடியே மறுவருடம் ப்ளோரின்டா தன் 17-வது வயதிலும், தெரேசா 16-ம் வயதிலும் இறந்தனர்!

சகோதரி கோடினோ ஒருநாள் ஜஸிந்தாவிடம், ஒரு குரு சிறந்த பிரசங்கம் நிகழ்த்துவதாகவும், நகரத்திலுள்ளவர்கள் அவரைப் புகழ்வதாகவும் கூறியபோது அவள்: “நீங்கள் எதிர்பாராத சமயத்தில் இந்தக் குரு மோசமானவர் என்று கண்டுகொள்வீர்கள்” என்றாள்.  சில மாதங்களுக்குள் அக்குரு விசுவாசத்தை மறுதலித்து, குருத்துவத்தையும் விட்டு விட்டார்.

சகோதரி கோடினோ தான் கோவா தா ஈரியாவுக்குச் செல்ல விரும்புவதாக ஜஸிந்தாவிடம் கூறினார்கள்.  அதற்கு ஜஸிந்தா: “என் மரணத்துக்குப் பின் நீங்களும் போவீர்கள்.  நானும் அங்கு செல்வேன்” என்றாள்.  அதன்படியே சகோதரி கோடினோ கோவா தா ஈரியாவுக்குச் சென்றார்கள்.  ஜஸிந்தாவின் உடலும் அங்கு கொண்டு செல்லப்பட்டது.