பாத்திமா காட்சிகள் - ஜஸிந்தா கூறியவற்றுள் சில

ஜஸிந்தா சொல்வாள்: “உலகில்  நிறைய யுத்தங்களும், பிரிவுகளும் இருக்கின்றன;  பாவத்திற்குத் தண்டனைதான் யுத்தம் என்று நம் அம்மா என்னிடம் கூறினார்கள்.” 

“உலகத்தைத் தண்டிக்கவிருக்கும் தன் திருக்குமாரனின் கரத்தை நம் அம்மாவால் தாங்கி நிறுத்தக் கூடவில்லை. தபசு செய்வது மிகவும் அவசியம். மக்கள் தங்கள் வாழ்வைத் திருத்தினால், இப்போது கூட ஆண்டவர் உலகத்தைக் காப்பாற்றுவார்.  இல்லாவிட்டால் தண்டனை வரத்தான் செய்யும்.” 

“உலகத்தின் பாவங்கள் மிக மிக அதிகம்.  நித்தியம் என்றால் என்ன என்று மனிதர்கள் அறிந்தால், அவர்கள் தங்கள் வாழ்வைக் கட்டாயம் மாற்றிக் கொள்வார்கள்...” 

“பாவிகளுக்காகவும், குருக்களுக்காகவும், சந்நியாசத்தில் உள்ளவர்களுக்காகவும் அதிகமாக வேண்டிக்கொள்வது அவசியம்.”

“குருக்கள் திருச்சபையின் காரியங்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.”

“அரசாங்கங்கள் திருச்சபையை எதுவும் செய்யாமல் சமாதானமாக விட்டு, அதற்கு முழு சுதந்திரம் கொடுப்பார்களானால், கடவுளின் ஆசீரைப் பெறுவார்கள்.”

“செல்வத்தையும், செளகரியமான வாழ்வையும் விட்டு ஓடுங்கள்.  வறுமையையும், மவுனத்தையும் விரும்புங்கள். தீயவர்கள் மீதும் அன்பாயிருங்கள். யாரைப் பற்றியும் குறைவாகப் பேச வேண்டாம்.  அப்படிப் பேசுகிறவர்களை விட்டுப் போய்விடுங்கள். மிகவும் பொறுமையோடிருங்கள். ஏனென்றால் பொறுமை நம்மை மோட்சத்திற்குக் கொண்டு செல்கிறது. பரித்தியாகங்களும் நமதாண்டவருக்கு மிகப் பிரியமானவை.”

“பாவசங்கீர்த்தனம் இரக்கத்தின் தேவத்திரவிய அனுமானம். மகிழ்வோடும், நம்பிக்கையோடும் பாவசங்கீர்த்தனத்திற்குச் செல்ல வேண்டும்.”

“குருக்கள் மிகவும் தூயவர்களாக இருக்க வேண்டும். குருக்கள் துறவியர் தங்கள் அதிகாரிகளுக்குக் கீழ்ப்படியாமலிருப்பது நமதாண்டவருக்கு மிகவும் வெறுப்பாயிருக்கிறது. அதிகாரிகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.”

“மாதாவுக்குத் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றாதவர்கள் தங்கள் காரியங்களில் ஒருபோதும் மகிழ்ச்சியடைய மாட்டார்கள்.”

“நோயாளிகளைக் குணமாக்கக் கூடிய ஒளி டாக்டர்களுக்கு இல்லை.  ஏனென்றால் அவர்களிடம் கடவுளின் அன்பு இல்லை.”

“சில நாகரீக பாணிகள் புகுத்தப்படும்.  அவை நமதாண்டவரை மிகவும் நோகச் செய்யும். சர்வேசுரனுக்கு ஊழியம் செய்பவர்கள் இப்பாணிகளைப் பின்பற்றக் கூடாது. திருச்சபையில் நாகரீக பாணிகள் கிடையாது.  நமதாண்டவர் மாற்றமடைவதில்லை.”

“பல திருமணங்கள் கடவுளால் ஆனவையல்ல. அவை நமதாண்டவருக்கு விருப்பமில்லாதவை. அதிகப்படியானவர்கள் நரகத்திற்குச் செல்லக் காரணம் சரீர பாவங்களே.”

“கற்பென்னும் வார்த்தைப்பாடு கொடுத்து கன்னிமை விரதம் பூண்ட ஆன்மாக்கள் வர வேண்டுமென தேவதாய் அதிகமாக விரும்புகிறார்கள்.”

“எனக்கு மடத்தில் சேர மிக ஆசை.  ஆனால் அதை விட மோட்சம் செல்ல விரும்புகிறேன்.”

“தேவ ஊழியராக இருப்பதற்கு மனதிலும், உடலிலும் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும்.”

“தூய்மையாயிருப்பது என்னவென்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்டதற்கு ஜஸிந்தா:

“ஆம். தெரியும்.  உடலில் தூய்மையாயிருத்தல் என்றால் கற்பை அனுசரிப்பதாகும். மனதில் தூய்மையாயிருப்பதென்றால் எந்தப் பாவமும் செய்யாதிருப்பது. பார்க்கத் தகாதவற்றைப் பார்ப்பது கூடாது. களவாடல், பொய் கூறல் தகாது.  கஷ்டமாயிருந்தாலும் எப்போதும் உண்மையையே பேச வேண்டும்” என்று பதிலளித்தாள்.

போர்த்துக்கல் நாட்டின் மிகுதியான பாவங்களுக்காக அந்நாடு சமூகப் புரட்சிகளால் மிகவும் வேதனைப்படுமென்றும், அது ஒரு உள்நாட்டுக் கலகமாகவாவது, கம்யூனிஸ்ட் கொடுமை போன்ற குழப்பமாவது உருவாகி, தலைநகரான லிஸ்பன் பட்டணம் நரகம் போல் காட்சியளிக்கும் என்றும் அச்சிறுமி கூறியுள்ளதாக சகோதரி கோடினோவின் குறிப்புகள் கூறுகின்றன.