இறப்பேயில்லாத ஆன்மாவை மீட்கப் பார்

எனது அன்பு சகோதரனே! நீ இப்போது கண்ட மரணக்காட்சியில் நீ ஒரு நாள் எப்படியெல்லாம் மாறிப் போவாய் என்பதை நன்கு காண்கிறாய். "நீ மண்ணாய் இருக்கின்றாய், மண்ணுக்குத் திரும்பிவிடுவாய்" என்பதை நினைத்துக் கொள். சில ஆண்டு, சில மாதம், சில நாட்களுக்குள்ளாக மெய்யாக நீ நாறி புழுக்களுக்கு இரையாகி விடுவாய். இந்த நினைவுதான் யோபு என்பவரை புனிதராக்கியது. நாற்றத்தை நோக்கி நீயே என் தந்தை என்றேன். புழுக்களை நோக்கி நீயே என் தாயும் சகோதரியும் என்றேன்" (யோபு 17:14) என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

எல்லாம் ஒரு நாள் முடிந்து போகும். அவ்விதம் நீ மரிக்கும்போது உன் ஆத்துமம் கெட்டுப்போயிருக்குமானால், ஐயோ, உனக்கு எல்லாமே கெட்டுப் போய்விடுமே. "உன் இறப்பு என்பது மாற்றமேயில்லாத உறுதி என்பதால் நீ உயிரோடு வாழும்போதே உன்னை இறந்தவனைப்போல் எண்ணிக் கொள்" என்று புனித லாரன்ஸ் ஜஸ்தினியன் உரைக்கின்றார்.

நீ உண்மையாகவே இறந்து போய்விட்டதாக எண்ணிக் கொள். அப்போது ஐயையோ வாழ்கிற காலத்தில் என்னென்னவோ புண்ணியங்கள் எல்லாம் செய்திருக்கலாமே என்று நினைக்கும் அல்லவா? ஆகவே, இன்னும் உனக்கு உயிர் இருப்பதால் அதையெல்லாம் இப்போது ஆராய்ந்து எண்ணிப் பார். மரணத்தைப் பற்றி அடிக்கடி நினை.

புனித பொன வெந்தூர் கூறியுள்ளபடி " கப்பலை சரியான வழியில் நடத்தும்படி கப்பல் மாலுமி எப்போதும் சுக்கானின் பக்கத்திலேயே இருப்பான். அதேபோல், நன்கு வாழ விரும்புகிறவனும், தன் மரணத்தை மறவாமல் மனதில் வைத்து நடக்க வேண்டும்"
இதன் பொருட்டு புனித பெர்நார்து கூறுவதாவது. "உன் சிறுவயதில் நீ கட்டிக் கொண்ட பாவங்களை நினைத்து நாணி வெட்கப்படும். நடுத்தர வயதில் செய்த பாவங்களை எண்ணி புலம்பிக் கண்ணீர் விடு. உனது தற்கால வாழ்க்கையின் அலங்கோலத்தை, தாறுமாறான நிலையை ஆராய்ந்து அஞ்சி நடுங்கக்கடவாய்"

புனித கமிலுஸ் தெ லெல்லிஸ் என்பவர் இறந்தவர்களின் கல்லறைகளைக் காணும் போதெல்லாம் தமக்குள்ளே சொல்லிக் கொள்வதாவது: "இவர்கள் எல்லாம் திரும்பி உயிர்த்தெழுந்து, உலகத்தில் மீண்டும் வாழ கடவுள் அனுமதித்தார் என்றால் முடிவில்லாத பேரின்பத்தை அடைவதற்காக இவர்கள் என்னதான் செய்யமாட்டார்கள்? அப்படியிருக்க, உயிரோடு இன்னமும் உலகத்தில் இருக்கும் நான் என் ஆத்துமத்திற்காக என்ன செய்கிறேன்?'' என்று இந்தப் புனிதர் தாழ்ச்சியோடு தன்னையே கேட்டுக் கொள்வார்.

ஆனால் உன்னைப் பொறுத்தவரையில் அப்படி இல்லாமல் நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள சிறிதும் பலன் கொடுக்காத அத்தி மரம் நீயாக இருக்கலாம். "இதோ கடந்த மூன்றாண்டு காலமாக இந்த அத்தி மரத்தில் ஏதாவது பலன் கிடைக்காதா என்று பார்த்துக் கொண்டே வருகிறேன். ஒன்றையும் காணேன்" என்று ஆண்டவர் தாமே திருவுளம் பற்றினார். நீயோ சகோதரனே, மூன்று ஆண்டுகளல்ல, அதற்கும் மேலாக உலகத்தில் வாழ்கிறாயே, என்ன பலனைக் கொடுத்தாய் ? புனித பெர்நார்து கூறுவதைக் கவனித்துக் கேள். ஆண்டவர் வெறும் பூவை மட்டுமல்ல, கனியையும் தேடுகிறார். அதாவது வெறும் நல்ல ஆசைகளும் உறுதிகளும் மட்டுமல்ல, நல்ல செயல்களையும் உன்னிடம் எதிர்பார்க்கிறார்.

ஆகவே, ஆண்டவர் தமது அளவில்லாத இரக்கத்தால் உனக்கு அளித்திருக்கும் இந்தக் காலத்தில் நல்ல பலனை பெற்றுக்கொள்ளும்படி அதை நன்றாகப் பயன்படுத்தப் பார். இந்த நேரமெல்லாம் போய் புண்ணியங்களை சம்பாதிக்க இன்னும் கொஞ்சம் காலம் வேண்டுமென்று உனக்கு அது கிடைக்காத நேரம் வரை காத்திருக்காதே. "இனிமேல் காலமில்லை, உலகத்தை விட்டுப் புறப்படும்" என்று மரணப்படுக்கையில் உனக்கு சொல்லப்படும் நேரம் நீ நினைக்காத வேளையில் வந்து நிற்கும். ஆகவே தயாராக இரு. இவ்வுலகப் பற்றுதலை விட்டு உன்னைப் பிரித்துக் கொள்ள இதுவே காலம், இதுவே நேரம். இதுவரை செய்தவை மட்டுமே உன் கணக்கில் சேரும்.

செபம்: நேசப் பற்றுதல்

ஓ! என் இயேசுவே! "இந்த மரம் ஏன் வீணாகத் தோட்டத்தில் நிற்கிறது? இதை வெட்டி எறிந்து விடுங்கள்" நீர் கூறிய கடினத் தீர்ப்புக்கு இவ்வளவு காலமாய், எத்தனை ஆண்டுகளாய், உண்மையாகவே தகுதியான மரம் நானே. ஆம் ஆண்டவரே, நான் பூமியில் வாழ்ந்த இவ்வளவு நீண்ட காலம் வரையில், என்னால் விளைந்த நற்கனிகள் என ஒன்றுமே இல்லை. எல்லாம் பாவமாகிய முள்ளும் முரடுகளும் மட்டுமே. ஆயினும் ஆண்டவரே இதை நான் எண்ணி எண்ணி அவநம்பிக்கைப்பட்டு மோசம் போவது உமது திருச்சித்தமல்ல.

நல்லவர்கள், பொல்லாதவர்கள் என எல்லோருமே, அவர்கள் எப்படிப்பட்டவர்களாயினும் உம்மை நம்பிக்கையோடு நாடி வந்தால் உமது கருணையைப் பெற்றுக்கொள்வதாக அறிவித்திருக்கின்றீரே! தேடுங்கள் கண்டடைவீர்கள் என்பது திருமறை வசனம். நான் உண்மையாகவே உம்மைத் தேடி வருகிறேன். உமது அருட்கொடைகளைப் பெற ஆசிக்கிறேன். உமக்கு விரோதமாய் நான் செய்த எண்ணில்லாத பாவங்களுக்காக என் முழு மனதோடு மனஸ்தாபப்படுகிறேன். இந்த என் மனஸ்தாபத்தால் என் உயிரை இழக்கவும் ஆசிக்கிறேன்.

இதுவரையில் நான் உம்மை விட்டு தொலைவில் விலகியிருந்தேன். இன்று முதல் அப்படியல்ல. பூமியையும் அதன் எல்லா அரசுகளையும், சொத்து சுகங்கள் எல்லாவற்றையும்விட உமது அன்பை மேலாக மதிக்கிறேன். உமது அழைப்புக் குரலினை நான் தடை செய்ய மாட்டேன். நான் உமக்கு முற்றும் சொந்தமாக வேண்டுமென்று ஆண்டவரே நீர் விரும்புகிறீர். ஆம், ஆண்டவரே! ஓர் அணுவளவும் நான் எனக்கென்று எடுத்து வைத்துக் கொள்ளாமல் என்னை முழுதும் உமக்கு அர்ப்பணிக்கிறேன். சிலுவையில் ஆண்டவரே நீர் உம்மை முழுதும் எனக்காக ஒப்புக் கொடுத்தீரே. அடியேனும் என்னை முழுதும் ஒப்புக் கொடுக்கிறேன்.

"என் திருப்பெயரால் எதையேனும் என்னிடம் கேட்டால் நான் உங்களுக்கு அதை அளிப்பேன்" (யோவான் 14:14) என்று உறுதியோடு திருவுளம் பற்றினீரே. என் நேச இயேசுவே! இந்த உன்னத வாக்குறுதியின்படி உமது அருட்கொடைகளையும், உமது அன்பையும் அடியேனுக்கு அளித்தருளும்படி உமது திருப்பெயரைக் குறித்தும், பேறு பலன்களைக் குறித்தும் உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன். உமது அருட்கொடைகளையும் அளவில்லாத அன்பையும் இதுவரையில் பாவ நாட்டங்களால் இழந்து போன என் ஆத்துமத்தின் மேல் ஏராளமாய்ப் பொழிந்தருளும்.

இந்த விண்ணப்பத்தை நான் துணிந்து கேட்கும் பாக்கியத்தை நீர் எனக்கு அளித்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். இந்த நல்லெண்ணத்தை நீரே என் மனதில் உருவாக்கியபடியால், இந்த மன்றாட்டுக்கு செவி கொடுப்பீர் என்பது உறுதி. இரக்கமாயிரும் இயேசுவே, இரக்கமாயிரும்! உமது பேரில் நான் அளவில்லாத நேசம் கொள்ள வையும் உமக்கு எப்போதும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய அதிக ஆசைகளையும், ஆவலையும் எனக்குள் வளர்த்தருளும் ஆசையை மட்டுமல்ல, அந்த ஆசையை செய்து முடிக்கும் ஆற்றலையும் எனக்குத் தந்தருளும்.

மரியாயே! பெரும் வல்லமையுள்ள தாயே! - நீரும் என் விண்ணப்பத்தைக் கேட்டருளும். எனக்காக உம் திருக்குமாரன் இயேசுவை மன்றாடும்!

ஆமென்.