திங்கட்கிழமை மாலைச் செபம்

பிதாவுடையவும் சுதனுடையவும் இஸ்பிரீத்து சாந்துடையவும் நாமத்தினாலே, ஆமென்.

சர்வேசுரன் சத்தியமாயிருக்கிறபடியால் அவரை விசுவசிக்கிறேன், சர்வேசுரன் பிரமாணிக்கமுள்ளவராயிருக்கிற படியினாலே அவரை நம்புகிறேன், சர்வேசுரன் சகல நன்மையாயிருக்கிறபடியினாலே அவரை முழு மனதோடு நேசிக்கிறேன்.

திரிகாலச் செபம் செபிக்கவும்பர.அருள் விசுவாச மந்திரம்.

ஆனந்த சந்தோஷங் கொண்டு பரலோகத்தில் இருக்கிற சம்மனசுகளே! பூமண்டலத்தில் இருக்கிற சகலமான படைப்புகளே! ஆண்டவரைத் துதித்து நமஸ்காரம் செய்ய என்னுடனே வாருங்கள்.

ஆண்டவரே! நான் என் பாவங்களைச் சங்கீர்த்தனஞ் செய்து கொண்டு நீர் எனக்குச் செய்த எண்ணிறந்த உபகாரங் களைப் புத்தியில் நினைத்துக் கொண்டு பய பக்தியோடே நடுநடுங்கித் தூசியோடு தூசியாய் உமது தெய்வ சந்நிதியிலே விழுந்து உம்மை ஆராதித்து நமஸ்காரம் செய்கிறேன்.

ஆண்டவரே! நீரே பெரிய தேவனுமாய், என்னை உண்டு பண்ணினவருமாய், உண்மையின் உப்பரிகையுமாயிருக்கிறீர். உலகத்தின் பேரில் இருக்கப்பட்ட சகல மனிதர்களுக்கும் அமுது கொடுத்து அவர்கள் பாவங்களை அடிக்கடி பாராட்டாமல் பொறுத்து ஆண்டு வருகிறீர்.

பூமியின் ஆழங்களையும் உமது திருக்கண்கள் பார்க்கின்றன. சமுத்திரமும் உம்முடையது, வெட்டாந் தரையையும் உமது கரம் உருவாக்கினது. நீர் என்னுடைய கடவுள், நான் உமது சிருஷ்டிப்பும், உமது மேய்ச்சலின் ஆடுமாயிருக்கிறேன்.

நீர் என்னை உருவாக்கின நாள் முதற்கொண்டு இதுவரைக்கும் என் பாவங்களினாலே நான் நரகத்தில் விழாமற் காப்பாற்றி உமது அணை கடந்த இரக்கத்தால் எனக்குச் செய்த உபகாரங்களுக்காகவும், விசேஷமாய் இன்று செய்த நன்மைகளுக்காகவும் என் சத்துவங் கொண்ட மட்டும் அன்போடு பணிந்து உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறேன்.

இதுவரையில் என் சொந்தத் துர்ப்பலத்தினாலேயும், புத்தியின் கெடுதியினாலேயும், பாவப் பழக்கங்களினாலேயும் நானே எனக்குத் தேடிக்கொண்ட ஆபத்திலிருந்து இரட்சித்ததற்காக உம்மை வாழ்த்தித் துதிக்கிறேன்.

இந்த இராத்திரி வரையிலே என் பாவங்களுக்குச் சரியான தண்டனை இடாமல் என்னை நிலைநிறுத்தி உயிர் வாழ வைத்ததற்காக உமது தெய்வ சந்நிதியிலே என் ஐம்புலன்களையும், என் இருதயத்தையும் உமது பாதத்தில் வைத்து உம்மை வாழ்த்திப் போற்றிப் புகழ்ந்து என் நீசத்தனத்துக்குத் தக்க பிரகாரம் உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறேன்.

நான் இனி வாழப் போகிற வாழ்நாட்களையும், அதில் செய்யப்போகிற கிரியைகளையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். உலகத்தில் தரும் ஆத்துமாக்கள் செய்யும் செப் தவப் புண்ணியங்களையும், உலகத்தில் பலி பீடங்களில் உமக்கு இடப்படுகிற உன்னதமான தெய்வ பூசைகளையும் நமஸ்காரம் பொருந்திய நைவேத்தியங்களையும் இதன் நிமித்தமாகவே உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.

நான் தேவரீருக்குச் செய்யவேண்டியதுமாய், என் நிற்பாக்கியத்தின் நிமித்தம் என்னால் செய்யக்கூடாததுமான கடமைகளுக்காகப் பரலோகத்தில் உமது தெய்வ சந்நிதானத்திலே உமது தூதர்கள் உமது பாதத்திலே வைக்கும் காணிக்கைகளை உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்.

இதுவரையில் என்னைக் காப்பாற்றினது போல் இந்த இராத்திரி காலத்திலும் என்னைக் காப்பாற்ற மிக்க பக்திப் பற்றுதலோடு உம்மைப் பார்த்து மன்றாடுகிறேன். வெளி ஆபத்துகளிலிருந்தும், துர்க்கனவு முதலான சோதனைகளிலிருந்தும் என்னை இந்த இராக் காலத்தில் இரட்சித்தருளும்.

என்னைப் படைத்த பிதாவே! எனக்கு உமது திருக்கர ஆசீர்வாதம் தந்தருளும். தேவ சுதனே! என்னைக் கையேற்றுக் கொள்ளும், என்னை ஆதரித்துக் காப்பாற்றும். இஸ்பிரித்து சாந்துவே! என்னைச் சகலமான ஆபத்துகளினின்று காப்பாற்றியருளும்.

அர்ச். தேவமாதாவே! பாவிகளுக்கு அடைக்கலமே, என் நல்ல தாயே! எனக்காக அடைந்து தந்த உபகாரங்களுக்காக உம்மைப் பூசித்து உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறேன்.

சகல சம்மனசுக்களே! சகல மோட்சவாசிகளே! உங்களை நமஸ்கரித்து இந்த இரவில் எனக்கு ஒத்தாசையாக வர உங்களை மன்றாடுகிறேன்.

என் காவலான சம்மன சானவரே! என் பேர் கொண்ட அர்ச்சியசிஷ்டவரே! (பெயரை உச்சரிக்கவும்) உங்களை நமஸ்கரிக்கிறேன்; இந்த இராத்திரி காலத்தில் எனக்கு உதவியாக வாருங்கள். - ஆமென்.

ஐம்பத்து மூன்றுமணிச் செபம், மற்றதும்

உத்தரிக்கிற ஆத்துமாக்களின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும். மற்றதும்.

அர்ச். மரியாயே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

சர்வேசுரனுடைய அர்ச். மாதாவே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

கன்னியர்களுக்குள் உத்தம அர்ச். கன்னிகையே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச். மிக்கேலே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

தூதரும் அதிதூதருமாகிய சகல சம்மனசுக்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

நவ விலாச சபையாயிருக்கிற சகல சம்மனசுக்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச். ஸ்நாபக அருளப்பரே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச். சூசையப்பரே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிதாப் பிதாக்களும் தீர்க்கதரிசிகளுமாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச். இராயப்பரே , மரித்த அர்ச். சின்னப்பரே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச். அருளப்பரே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அப்போஸ்தலரும் சுவிசேஷகருமாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச். முடியப்பரே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச். லவுரேஞ்சியாரே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

வேதசாட்சிகளான சகல அர்ச்சியசிஷ்டவர்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச். கிரெகோரியாரே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச். அமிர்தநாதரே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச். அகுஸ்தினாரே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச். இயேரோனிமுவே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

மேற்றிராணிமார்களும் ஸ்துதியர்களுமாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

வேத வித்தியாபாரகரான அர்ச்சியசிஷ்டவர்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

குருக்களும் ஆசாரியர்களுமாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச். மரியமக்தலேனே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச். கத்தரீனாளே , மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச். பார்பாரம்மாளே, மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

கன்னியர்களும் விதவைகளுமாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே , மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஆண்டவருடைய திருவடியார்களான ஸ்திரீ பூமான்களாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களே மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

தயாபரராயிருந்து, அவர்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமீ .

தயாபரராயிருந்து, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

சகல பொல்லாப்புகளிலே நின்று, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

உமது கோபத்திலிருந்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

உமது நீதி உக்கிரத்திலிருந்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

பசாசின் வல்லமையிலிருந்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

கொடிய ஆக்கினையிலிருந்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

மரணத்தின் பயங்கரமான இருளிலிருந்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

அக்கினிச் சுவாலையிலிருந்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

துயரமான அழுகையிலிருந்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

உத்தரிக்கிற ஸ்தலத்துச் சிறைச்சாலையிலிருந்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய திரு மனுஷாவதாரத்தைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய மாசில்லாத உற்பவத்தையும் பிறப்பையும் பார்த்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய மதுரமான நாமத்தைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய குழந்தைப் பருவத்தைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய ஞானஸ்நானத்தையும் உபவாசத்தையும் பார்த்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய சுறுசுறுப்பான கீழ்ப்படிதலைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய கிருபையின் மிகுதியையும் அளவில்லாத சிநேகத்தையும் பார்த்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய கொடூர உபத்திரவங்களையும் நிர்ப்பந்தங்களையும் பார்த்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய இரத்த வேர்வையைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீர் கட்டுண்ட கட்டுகளைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீர் பட்ட அடிகளைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய திரு முள்முடியைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய திருச் சிலுவையைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய கடூரமான மரணத்தைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய ஐந்து திருக் காயங்களைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

எங்கள் மரணத்தைச் செயித்தழித்த தேவரீடைய அவமானமுள்ள மரணத்தைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய விலைமதிப்பில்லாம் திரு இரத்தத்தைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய மகிமையான உத்தானத்தைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேவரீருடைய அதிசயமான ஆரோகணத்தைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

தேற்றரவு பண்ணுகிறவராகிய இஸ்பிரீத்துசாந்துவின் வருகையைப் பார்த்து, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

நடுத்தீர்க்கிற நாளிலே, அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

பாவிகளாயிருக்கிற நாங்கள் தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

பாவியாயிருந்த மக்தலேன் அம்மாளுக்குப் பாவ மன்னிப்பு தந்தவரும் நல்ல கள்ளனுடைய மன்றாட்டைக் கேட்டவருமாகிய தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

மரணத்தின் திறவுகோலையும் நரகத்தின் திறவுகோலையும் கைக்கொண்டிருக்கிற தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

இரட்சண்ணியத்திற்கு உரியவர்களை இலவசமாயிரட்சிக்கிற தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

எங்கள் சகோதரர் பந்துக்கள் உபகாரிகளுடைய ஆத்துமங்களை உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து இரட்சித்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

பூலோகத்தில் யாரும் நினையாத சகல ஆத்துமாக்களுக்கும் தயவு செய்யவேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

கிறீஸ்துநாதரிடத்தில் இளைப்பாறுகிற சகலருக்கும் குளிர்ச்சியும் பிரகாசமும் சமாதானமுமுள்ள ஸ்தலத்தைக் கட்டளை இட்டருளத் தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

பாவதோஷத்தால் அவர்களுக்கு உண்டாகிற ஆக்கினையைக் குறைக்கவேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

அவர்கள் துயரத்தைச் சந்தோஷமாக மாற்றியருளத் தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

அவர்களுடைய ஆசை நிறைவேறத் தயை புரிய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

அவர்கள் உம்மைப் புகழ்ந்து புகழ்ச்சிப் பலியை உமக்குச் செலுத்தும்படி செய்தருளத் தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

உம்முடைய அர்ச்சியசிஷ்டவர்களின் கூட்டத்தில் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

சர்வேசுரனுடைய குமாரனே தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

கிருபையின் ஊருணியே தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற... மற்றதும்.

நரக வாசலிலிருந்து, அவர்களுடைய ஆத்துமங்களை மீட்டு இரட்சித்தருளும். சமாதானத்தில் இளைப்பாறுவார்களாக, ஆமென்.

சுவாமி எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். எங்கள் அபய சத்தம் தேவரீருடைய சந்நிதி மட்டும் வரக்கடவது.

பிரார்த்திக்கக்கடவோம்

சகல விசுவாசிகளுடைய சிருஷ்டிகரும் இரட்சகருமாகிய சர்வேசுரா, மரித்த உமது அடியார்களுக்காகச் செய்யப்படுகிற பக்தியுள்ள மன்றாட்டுகளை அங்கீகரித்து, அவர்கள் மிகுந்த ஆவலோடே ஆசிக்கிற பாவ மன்னிப்பைக் கிருபை செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். சதாகாலமும் சீவியரான சர்வேசுரா, இந்த மன்றாட்டைத் தயவோடே கேட்டருளுஞ் சுவாமி.

நித்திய பிதாவே பெற்றோர், பந்துக்கள், சிநேகிதர், உபகாரிகள் முதலியவர்களைத் தக்கவிதமாய் நேசித்து அவர்களுக்கு வேண்டிய நன்மை செய்யக் கற்பித்தருளினீரே, ஆகையால் எங்களைப் பெற்று அன்போடு வளர்த்து ஆதரித்தவர்களும் பற்பல உபகாரம் எங்களுக்குச் செய்தவர்களும் எங்கள் பந்துக்கள் சிநேகிதர் முதலானவர்களும் வேதனை நீங்கி நித்தியகாலம் உம்மைச் சந்தோஷமாய்த் தரிசித்துக்கொண்டிருக்கத் தேவரீர் கிருபை செய்தருள வேண்டுமென்று மன்றாடுகிறோம்.

மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளுவோமாக. நித்திய இளைப்பாற்றியை அவர்களுக்குத் தந்தருளும் சுவாமீ ; முடிவில்லாத பிரகாசமும் அவர்களுக்குப் பிரகாசிக்கக்கடவது.

எனக்குக் காவலாயிருக்கிற சர்வேசுரனுடைய சம்மனசானவரே, தெய்வீகக் கிருபையால் உம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட என்னை இன்று காத்து நடத்தி ஆண்டுகொண்டு என்னுடைய மரணவேளையிலும் ஆதரித்தருளும்.

ஆமென்.