பாத்திமா காட்சிகள் - முதல் சனி பக்தி

மேலே கூறிய மூன்று நிபந்தனைகளின் நிறைவேற்றம் போல் இருப்பது மாதத்தின் முதல் சனி பக்தி. துயரம் நிறைந்த மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு ஆறுதலாகவும், மாமரிக்கு எதிராகச் செய்யப்படும் பாவங்களுக்கு நிந்தைப் பரிகாரமாகவும் ஐந்து முதல் சனிக்கிழமைகள் தொடர்ச்சியாக, இக்கருத்துடன் பாவசங்கீர்த்தனம் செய்து, நற்கருணை உட்கொண்டு, ஒரு 53 மணி ஜெபமாலை செய்வதுடன், கால்மணி நேரம் ஏதாவது ஜெபமாலைத் தேவ இரகசியங்களைத் தியானித்தபடி  தேவ அன்னையுடன் கருத்தால் இணைந்திருப்பதே முதல் சனி பக்தி எனப்படும்.  

இவ்வாறு செய்கிறவர்கள் மரண சமயத்தில் ஈடேற்றத்திற்கு அவசியமான எல்லா உதவிகளையும் தன்னிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள் என மாமரி வாக்களித்துள்ளார்கள். நீல அணியினர் இப்பக்தி முயற்சியை அனுசரிக்கும்படி மிகவும் தூண்டப்பட்டார்கள்.

நீல அணியினருக்கு உத்தரிய மாதாவின் “சனிக்கிழமை சலுகையும்” வாக்களிக்கப்பட்டது.

“மாமரி அன்னையின் வேண்டுகோளை போதிய தொகையான மக்கள் நிறைவேற்றும்போது உலக சமாதானம் வரும்” என்று லூஸியா கூறியுள்ளாள்.  “எத்தனை கம்யூனிஸ்ட்கள் உள்ளார்களோ, அத்தனை நீல அணி உறுப்பினர்கள் வரும்போது கம்யூனிஸம் நிறுத்தப்படும்” என்று காலஞ்சென்ற ஐந்து காய வரம்பெற்ற அர்ச். பியோ கூறினார்.  

ஆனால் இன்று நிலைமை பரிதாபத்திற்குரிய விதமாக மாறி விட்டது. பாத்திமாவில் தேவ அன்னை கேட்டுக்கொண்ட முறைப்படி, ரஷ்யா மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு இன்னும் ஒப்புக்கொடுக்கப்படவில்லை என்ற நிலையில், நீல அணியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் ஏற்கெனவே ரஷ்யா மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு விட்டது என்று அறிவித்து விட்டார்கள்.  

அப்படி ரஷ்ய ஐக்கிய அர்ப்பணம் உண்மையாகவே நிகழ்ந்திருந்தால், மாதா வாக்களித்தபடி திருச்சபையில் பாரம்பரியமும், உலகத்திற்கு சமாதானமும் திரும்பி வந்திருக்கும், கடவுளின் மகிமையும், ஆத்தும இரட்சணியமும் மீண்டும் திருச்சபையின் முதன்மையான நோக்கமாக ஆகியிருக்கும். 

ஆத்துமங்களும் உத்தமதனம் அடையும் போராட்டத்தில் ஆர்வத்தோடு ஈடுபட்டிருப்பார்கள். மேலும் மரியாயின் மாசற்ற இருதய பரிகார பக்தியான முதல்சனி பக்தியை அனுசரிக்க வேண்டிய முதன்மையான காரணம் இல்லாமல் போயிருக்கும். 

ஆனால் இன்று திருச்சபையும், உலகமும் அந்த நிலையில் இல்லை. தப்பறைகளும், குழப்பமும், மிகவும் அருவருப்புக்குரிய பாவங்களும், சகல விதமான தீமைகளும் இன்று திருச்சபையின் மீதும், உலகின் மீதும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பதை யாரும் மறுத்து விட முடியாது.

ஆனால் நீல அணி ரஷ்ய ஐக்கிய அர்ப்பணம் நிகழ்ந்து விட்டது என்று பிரகடனம் செய்து விட்டதால், அதன் செயல்பாடுகள் இன்று எந்த விதத்திலும் மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு ஆறுதல் தருவதையோ, உலக சமாதானத் தையோ, மரியாயின் மாசற்ற இருதய வெற்றியையோ நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை.

இதன் காரணமாக, உண்மையாகவே மரியாயின் மாசற்ற இருதய பரிகார (முதல் சனி) பக்தியைக் கடைப்பிடிக்க விரும்புபவர்கள் தங்கள் பங்குகளில் மாதா கேட்டுக்கொண்டபடி இந்த பக்தி முயற்சியைத் தொடங்கி தொடர்ந்து அனுசரித்து வரலாம். அதற்கு வாய்ப்பில்லாதவர்கள் ஒரு சிறிய குழுவாகவோ, குடும்பமாகவோ, தனியாகவோ முதல் சனி நிபந்தனைகளை அனுசரித்து, மரியாயின் மாசற்ற இருதய வெற்றி துரிதப்பட ஜெபிப்பது போதுமானது.