சனிக்கிழமை மாலைச் செபம்

பிதாவுடையவும் சுதனுடையவும் இஸ்பிரீத்து சாந்துடையவும் நாமத்தினாலே ஆமென்.

மகா பரிசுத்த தெய்வீக தேவத்திரவிய அநுமானமானது எந்நேரமும் ஸ்துதிக்கவும் வாழ்த்தவும்படக்கடவது.

சர்வ மகத்துவராய் சர்வ வல்லவராய் சர்வேசுரராய் சர்வ வியாபியாய் சர்வ சவுந்தரராயிருக்கின்ற பிதாச் சுதன் இஸ்பிரீத்து சாந்தென்னும் திரித்துவ ஏகக் கடவுளுக்கு இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றைக்கும் வானத்திலும் பூமியிலும் பாதாளத்திலும் அரூபிகளாலும் உருபிகளாலும் ஸ்துதியும் தோத்திரமும் உண்டாகக்கடவது.

என் கடவுளே வாழி! என் ஆத்தும இரட்சணியத்தின் ஒளியே வாழி! பூலோக சக்கரத்தின் மேலும் வானத்தின் மேலும் வசிக்கின்ற சகல ஜீவராசிகளே, நான் தேவனிடத்தில் பெற்றுக் கொண்ட சகல உபகாரங்களுக்காக அவருக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்ய எனக்கு உதவியாக வாருங்கள். நான் தேவரீரிடத்தில் பெற்ற சகாயங்களுக்குக் கணக்கில்லை என்பதினாலும் அவைகளுக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்ய நான் வல்லவனல்ல என்பதினாலும், ஓர் தூசியைப் போலிருக்கின்ற நான் தேவரீராலே அந்தப் பெருங்கடமை சரிப்படுத்தப் பட வேண்டுமென்று கெஞ்சி மன்றாடுகின்றேன்.

ஆ, பிதாவே! உமது வலது பக்கத்தில் எழுந்தருளியிருக்கிறவரால் இந்தப் பெருங் கடமை ஆகக்கடவதென்று ஆவலோடும் தாழ்மையோடும் ஆசிக்கிறேன். இவ்விடத்திலிருக்கிற என் ஆண்டவரே, உமக்குப் பயந்து உம்மைச் சிநேகித்து உமக்கும் பிறருக்கும் எனக்கும் தானே நான் செய்த பாவங்களுக்காக வெகுவாய்ப் பிரலாபித்துக் கஸ்திப்படுகிறேன்.

ஓ பிதாச் சுதன் இஸ்பிரீத்து சாந்துவான திருத்துவ பரிசுத்த ஏகக் கடவுளே! தேவரீரைத் துதித்து நமஸ்கரிக்கிறேன். என்னிடத்திலும் சகல விசுவாசிகளிடத்திலும் உமது திருப் பார்வைக்கு அருவருப்புள்ளவைகளை அப்புறப்படுத்திப் போடத் தேவரீரை வணக்கத்தோடு மன்றாடி, என்னை உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்.

தேவரீருடைய திருவிழிக்குப் பிரியமானவைகளை எங்களுக்குக் கட்டளையிட்டருளும். இவ்வுலகத்தில் நாங்கள் தேவரீர் வாக்களித்திருக்கும் பரம வரப்பிரசாதங்களை இவ்வுலகத்தில் அனுபவிக்கச் செய்தருளும். நான் யாருக்காக வேண்டிக் கொள்ளவேண்டுமோ, அவர்களையும் பரிசுத்தக் கத்தோலிக்கத் திருச்சபையையும் திருச்சபையின் இராச்சியங் களையும் அவைகளை ஆண்டு வரும் அரசர்களையும் சக்கரவர்த்திகளையும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.

ஓ ஆண்டவரே! பூலோகத்தில் இருக்கப்பட்ட சகலரும் தேவரீரைக் கண்டறிந்து போற்றிப் புகழ்ந்து நமஸ்கரிக்கவும், அவர்கள் தேவரீரால் நேசிக்கப்படவும் சித்தம் கூர்ந்தருளும். ஆண்டவரே! பாவத்தில் விழுபவர்களை நல்வழிக்குக் கொண்டு வந்து சேரும்.

ஓ ஆண்டவரே! எங்களைத் தேவரீருடைய சந்நிதானத்தில் நிலை நிறுத்தத் தயை செய்தருளும். எங்கள் சித்தமல்ல தேவரீருடைய திருச் சித்தமே நிறைவேறக் கடவது. ஆத்தும் சரீர வேதனைப் படுகிறவர்களுக்கு ஆறுதலும் கஸ்தி நிர்ப்பாக்கிய சோதனை துன்பம் அனுபவிப்பவர்களுக்குத் தேற்றரவும் செய்தருளும்.

கடைசியாய் உத்தரிக்கிற ஸ்தலத்திலிருக்கும் ஆத்துமங்களுக்கு நித்திய இளைப்பாற்றியைக் கட்டளையிடவும், பாவிகளுக்குப் பாவப் பொறுத்தல் அளிக்கவும் தேவரீருடைய பரிசுத்த ஆதரவில் இந்தப் பூலோக முழுமையும் ஒப்புக் கொடுக்கிறேன். ஆமென்.

ஆத்தும சோதனை செய்யவேண்டிய செபத்தியானங்களைச் செய்யாமல் விட்டு விட்டதும், அவைகளை அசட்டைத்தனத்தினால் குறைத்ததும், செய்தாலும் படபடப்பாகவும் பத்திக் குறைவாகவும் செய்ததும் பாவம்... 

சர்வேசுரனுடைய சமுகத்திற்கு முன் இருக்கப் பிரயாசைப் படாமல் போனதும், எவ்விதத்திலும் அவருடைய சித்தத்திற்கு விரோதமாய் முறுமுறுத்துச் சோம்பலாயிருந்ததும், வழக்கமாய்ச் செய்ய வேண்டிய காரியங்களைச் சோம்பலினால் செய்யாமற் போனதும் அல்லது தாமதப்படுத்தினதும் பாவம்...

ஆங்காரம் கோபம், பொறுமை, காய்மகாரம், பகை, முதலிய துஷ்ட குணங்களுக்கு இடங்கொடுத்தும் பிறருடைய குற்றங்களையும் அல்லது அவசியமான காரணமின்றி மற்றவர்களுடைய தப்பிதங் களைக் குறித்தும் இழிவாகப் பேசினதும், வழக்கமாய் விழுகிற பாவத்திலிருந்து தப்பித்துக் கொள்ளப் பிரயாசைப் படாமற் போனதும் பாவம்...

அற்பப் பாவத்தை முதலாய் செய்யாமற் இருப்பதோடு, பரிசுத்தத்தாலும் தெய்வசிநேகத்தாலும் உலகத்தை மேற்கொள்ளப் பிரியாசைப் படாமற் போனதும் பரிசுத்தமாய் நடக்கச் செபத்திலும் தியானத்திலும் தேவ வாக்கியத்திலும் ஞானப் புத்தகங்களைப் படிக்கிறதிலும் தன் காலத்தை உபயோகப்படுத்தா திருந்ததும் பாவம் .....

(இப்படிப்பட்ட பாவங்களைச் செய்ததுண் டானால் அவைகள் எல்லாவற்றையும் பாவசங்கீர்த்தனம் செய்யும் போது வெளிப்படுத்த வேண்டியது.) இவைகளையெல்லாம் கவனமாய் ஆராய்ந்து சிந்தனை செய்து அந்தப் பாவங்களுக்காக உத்தம மனஸ்தாபப்படக் கடவாய்.

ஓ மாட்சிமைப் பொருந்திய ஆண்டவரே இரக்கமுள்ள பிதாவே நான் பரலோகத்திற்கு தேவரீருடைய திருச்சபை முழுவதிற்கும் ஏற்காத பாவத் தோஷங்களைத் கட்டிக் கொண்டேனே.

தேவரீருடைய பிரமாணிக்க ஊழியக்காரனென்று அழைக்கப் படவும் உமது பிள்ளையென்று எண்ணப்படவும் நான் இனி தகுதியானவன் அல்லவே. ஏனென்றால் தேவரீர் எனக்குச் செய்த நன்றிகளுக்குக் கைம்மாறாக நான் நன்றியறிந்த தோத்திரஞ் செய்யாமல், உமக்கு வெகு அசட்டை செய்தேனே.

என் பாவங்களுக்குத் தக்க தண்டனையையும், என் குற்றத்திற்கு ஏற்ற மனஸ்தாபக் கண்ணீரையும் நான் எவ்விடத்தில் காண்பேன்? ஐயையோ! நித்திய கடவுளின் கோபத்தை மூட்டுவது பயங்கரமான காரியம். ஆனால் பூலோகத்திலுள்ள சகல பொருட்களிலும் மென்மேலும் நேசிக்கத் தக்கப் பொருளாகிய கடவுளுக்கு நான் கோபம் வருத்தியதை நினைத்து, என் இருதயம் ஊடுருவப் படுகின்றது.

ஓ பிரியமுள்ள ஆண்டவரே! நான் கட்டிக் கொண்ட பாவங்களை அருவருக்கும்படி, நான் செய்யவேண்டியதென்ன? நான் இனி பாவத்தில் வழுவாதபடிக்கு எப்படி தப்பித்துக் கொள்வேன்? பிதாவே நான் இது முதல் பாவத்தின் முகத்தைப் பார்க்கையில் நரகத்தைப் பார்ப்பது போலவும், நான் அற்ப சோதனைக்குள்ளாகையில் மரணத்தின் பயத்திலும் அதிக பாவம் எனக்கு தோன்றவும் திட்டஞ் செய்தருளும்.

சர்வ சக்தியுடைய நேசமே என் பாவத்தை மன்னியும். நான் கட்டிக் கொண்ட பாவங்களைத் தேவர் தமது ஞாபகத்தில் வைத்த காலம் எனக்குப் பாவ விமோசனம் தந்தருளும். மகா நீசப் பொருளாய் ஏழையாயும் இருக்கிற என் பேரில் பரலோகத்திற்கும் பூலோகத்திற்கும் கடவுளாகிய தேவரீர் கோபமாயிருப்பது என்ன நிர்ப்பாக்கியம்?

ஆ! தேவரீர் கோபமாயிருக்கும் போது என்னைப் பார்க்காமல் இரக்கத்தோடு என்னை நோக்கியருளும். ஏனென்றால் தேவரீர் எங்கள் பிதா, நாங்கள் உமது பிள்ளைகளாயிருக்கிறோம். தேவரீர் எங்கள் சிருஷ்டிகர், நாங்கள் உமது கரத்தால் படைப்புண்ட மண்ணாகவும் இருக்கிறோம். எங்கள் இரட்சகராகிய சேசுநாதரின் திரு ஊற்றிலுருந்து அருள் நீரை மொண்டு, தேவரீர் எங்கள் பாவக் கறையைச் சுத்திகரித்தருளும்.

அவருடைய திரு இரத்தத்தின் ஒரு துளி கொண்டு, எம்மை மகிமைப்படுத்தியருளும். ஓ இரக்கம் நிறைந்த பிதாவே! தேவரீரை மாத்திரமே எங்கள் பாவப் பொருத் தலுக்கு வேண்டிக் கொள்ளுகிறோம். சுத்தமும் சம்பூரணமும் பொருந்திய நேசத்தோடு தேவரீரை எக்காலமும் ஓயாமல் உண்மைக்கு உத்தரமாய் விசுவாசக் கீழ்ப்படிதலோடு நேசித்துப் பணிபுரிய உமது திரு ஒத்தாசை தரத் தேவரீரை மன்றாடுகிறோம் ஓ ஆண்டவரே, நாங்கள் சேசு கிறிஸ்து நாதரோடு காத்திருக்கவும் சமாதானத்தில் இளைப்பாறவும், நித்திரை செய்யவும் விழித்திருக்கவும் செய்தருளும் ... ஆமென்.

ஆண்டவரே, எங்களை உமது திரு நேத்திரத்தின் விழியைப் போலக் காத்தருளும். தேவரீருடைய இறக்கையின் நிழலில் எங்களைப் பாதுகாத்தருளும் ...

ஓ ஆண்டவரே! எங்களை இரட்சித்தருளும், இன்று இராத்திரி எங்களைப் பாவத்தில் விழாமல் காத்தருளும்

ஓ ஆண்டவரே! எங்கள் பேரில் இரக்கம் கூர்ந்தருளும், எங்கள் பேரில் தயை வைத்தருளும்.

நாங்கள் எங்களுடைய நம்பிக்கையைத் தேவரீர் மட்டில் வைத்திருக்கிறபடியால் ஓ ஆண்டவரே! தேவரீருடைய இரக்கம் எங்கள் பேரில் இருக்கக்கடவது.

ஓ ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேட்டருளும், என் அழுகுரல் தேவரீர் சந்நிதி மட்டும் வரக்கடவது.

பிரார்த்திக்கக்கடவோம்

ஓ ஆண்டவரே! இந்த வாசஸ்தலத்திலிருக்கிற சத்துராதியின் மாயக் கண்ணியை நீக்கிட்ட போரத் தேவரீர் எழுந்தருளி வரும் படிக்குத் தேவரீரை நாங்கள் மன்றாடுகிறோம். எங்கள் ஆண்டவராகிய சேசு கிறிஸ்துநாதரின் மூலமாய்த் தேவரீருடைய ஆசீர்வாதமானது எங்கள் போரில் நித்திய காலமும் இருக்கும் படிக்கு எங்களை இவ்விடத்தில் காப்பாற்றத் தேவரீருடைய பரிசுத்த சம்மனசுகள் இறங்கி வரக்கடவார்களாக. ஆமென்.

காவலான சம்மனசிற்குச் செபம்

ஓ ஆண்டவருடைய சம்மனசானவரே! நமது பரிசுத்த ஆண்டவரின் இரக்கத்தினால் நான் உமது துாய் காவலில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறேன். என்னை இன்றிரவு சகல பாவத்திலும் அபாயங்களிலுமிருந்து காத்து ஆண்டருளும் ... ஆமென்.

ஆசீர்வாதம் 

பிதாவாகிய ஆண்டவரே, என்னை ஆசீர்வதித்தருளும். சேசு கிறீஸ்துவே, என்னை காத்து இரட்சியும், இஸ்பிரித்து சாந்துவே, உமது வரப்பிரசாதத்தினால் இன்றிரவும் எக்காலமும் என்னை பிரகாசிக்கச் செய்து சுத்திகரித்தருளும்...... ஆமென்.

ஓ கடவுளே! தேவரீருடைய திருக் கரத்தில் என் உயிரை ஒப்புவிக்கிறேன் ஆண்டவராகிய சேசுவே, என் ஆத்துமத்தை தேவரீர் கையேற்றுக் கொள்ளும். பிதாவே, சுதனே, இஸ்பிரித்து சாந்துவே பரிசுத்த திருத்துவமே, சேசுவே, மரியாயே, சர்வேசுரனு டைய சம்மனசுக்களே, ஸ்திரீபூமான்களாகிய மோட்சத்தின் சகல அர்ச்சியசிஷ்டவர்களே சேசுகிறிஸ்துநாதருடைய விலைமதிக்க முடியாத திரு இரத்தத்தைப் பார்த்து நான் கேட்கிற இந்த வரப்பிரசாதங்களை அடைந்தருளுங்கள்

1 வது ... எப்போதும் சர்வேசுரனுடைய சித்தப்படி நடக்கவும்

2 வது சர்வேசுரனோடு ஐக்கியமாய் என்றும் சீவிக்கவும்

3 வது சர்வேசுரனை விட வேறே ஒரு காரியத்தையும் சிந்தியாதிருக்கவும்

4 வது ... சர்வேசுரனை மாத்திரம் சிநேகிக்கவும்

5 வது .... எல்லாவற்றையும் சர்வேசுரனுக் காகச் செய்யவும்

6 வது சர்வேசுரனுடைய மகிமையை மாத்திரம் தேடவும்

7 வது என்னைச் சர்வேசுரனைப் பற்றி மாத்திரம் அர்ச்சித்துக் கொள்ளவும்

8 வது நான் முற்றிலும் ஒன்றுமில்லா திருப்பதை நன்றாய் அறிந்து கொள்ளவும்

9 வது சர்வேசுரனுடைய சித்தத்தை எப்போதும் மேன்மேலும் அறியவும்தான்

10 வது மகா பரிசுத்த மரியாயே, என் ஆத்துமத்திற்காகவும் உத்திரிக்கிறஸ்தல பரிசுத்த ஆத்துமங்களுக்காகவும் பரிசுத்த திருச்சபையின் அவசரங்களுக்காகவும் பாவிகள் மனந்திரும்புவதற்காகவும் உலக முழுமைக்காகவும் சேசுநாதருடைய விலைமதிக்கப்படாத இரத்தத்தை நித்திய பிதாவுக்கு ஒப்புக் கொடும்.

பின் சேசு நாதருடைய மகா பரிசுத்த இரத்தத்திற்கு மூன்று முறை திரித்துவ தோத்திரமும், தேவமாதாவின் வியாகுலத்தைக் குறித்து ஒரு அருள் நிறை மந்திரமும், உத்தரிக்கிற ஸ்தலத்தின் ஆத்துமாக்களைக் குறித்து நித்திய இளைப்பாற்றியை அவர்களுக்குத் தந்தருளுஞ் சுவாமி முடிவில்லா பிரகாசம் அவர்களுக்குப் பிரகாசிக்கக்கடவது' என்னும் மந்திரத்தையும் சொல்லவும்

ஐம்பத்து மூன்று மணிச் செபம்

நன் மரணப் பிரார்த்தனை

சுவாமீ கிருபையாயிரும், மற்றதும் 

சுவாமி தேவரீருடைய மட்டில்லாத கிருபையைக் கொண்டு எங்களுக்கு நன்மரணம் தந்தருளும் சுவாமி.

மாசில்லாத கன்னிகையான உமது திரு மாதாவின் பேறுபலன்களையும் மன்றாட்டையும் பார்த்து, எங்களுக்கு நன்மரணம் தந்தருளும் சுவாமி.

தூ தரும் அதிதூதருமாகிய சகல சம்மனசுகளுடைய மன்றாட்டைப் பார்த்து, எங்களுக்கு நன்மரணம் தந்தருளும் சுவாமி.

அப்போஸ்தலருடைய பேறு பலன்களையும் மன்றாட்டையும் பார்த்து, எங்களுக்கு நன்மரணம் தந்தருளும் சுவாமி.

மேற்றிராணிமார்களும் ஸ்துதியர்களுமாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களுடைய பேறு பலன்களையும் மன்றாட்டை யும் பார்த்து , எங்களுக்கு நன்மரணம் தந்தருளும் சுவாமி.

வேத வித்தியாபாரகரான சகல அர்ச்சியசிஷ்டவர்களுடைய பேறு பலன்களைப் பார்த்து, எங்களுக்கு நன்மரணம் தந்தருளும் சுவாமி.

சந்நியாசிகளும் தபோதனருமாகிய சகல அர்ச்சியசிஷ்டவர்களுடைய பேறு பலன்களையும் மன்றாட்டையும் பார்த்து, எங்களுக்கு நன்மரணம் தந்தருளும் சுவாமி.

குருப்பட்டமுள்ளவர்களும் ஆசிரியருமாகிய சகல அர்ச்சிய சிஷ்டவர்களுடைய பேறு பலன்களையும் மன்றாட்டையும் பார்த்து, எங்களுக்கு நன்மரணம் தந்தருளும் சுவாமி.

கன்னியர்களும் விதவைகளும் சகல அர்ச்சியசிஷ்ட வர்களுடைய பேறு பலன்களையும் மன்றாட்டையும் பார்த்து எங்களுக்கு நன்மரணம் தந்தருளும் சுவாமி.

திடீரென்று வருகிற துர்மரணத்திலிருந்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

மரணத் தருவாயிலே சகலப் பாவங்களிலிருந்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

மரணத் தருவாயிலே எவ்வித அச்சத்திலிருந்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

மரணத் தருவாயிலே அவ நம்பிக்கையான தந்திரத்திலிருந்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

மரணத் தருவாயிலே வீண் நம்பிக்கையான தந்திரத்திலிருந்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

மரணத் தருவாயிலே கல் நெஞ்சத்தனத்திலிருந்து, எங்க மரணத் தருவாயிலே உமது கோபத்திலிருந்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

மரணத் தருவாயிலே பசாசினுடைய வல்லமையிலிருந்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

மரணத் தருவாயிலே நரக வேதனைகளிலே நின்று, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

மரணத் தருவாயிலே உலகம் சரீரம் உறவின்முறையார் முதலான சகல மயக்கங்களிலிருந்து, எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

மரணத் தருவாயிலே நல்ல பாவசங்கீர்த்தனம் செய்யவும் . தேவ நற்கருணை வாங்கவும் அவஸ்தைப் பூசுதல் பெறவும் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி.

மரணத் தருவாயிலே தேவ இஷ்டப் பிரசாதத்தை, எங்களுக்குத் தந்தருளும் சுவாமி.

மரணத் தருவாயிலே எங்கள் பாவங்களுக்குத் தக்க உத்தம் மனஸ்தாபத்தை, எங்களுக்குத் தந்தருளும் சுவாமி.

மரணத் தருவாயில் விடாத நம்பிக்கையையும் தவறாத விசுவாசத்தையும், எங்களுக்குத் தந்தருளும் சுவாமி.

மரணத் தருவாயிலே தேவசிநேகத்தின் மிகுதியை, எங்களுக்குத் தந்தருளும் சுவாமி.

மரணத் தருவாயிலே நேரிடப் போகிற கஸ்திவாதைகளில் அசையாத பொறுமையை, எங்களுக்குத் தந்தருளும் சுவாமி.

மரணத் தருவாயிலே பசாசின் போர்ச் சண்டையில் வெல்லப்படாத தைரியத்தை, எங்களுக்குத் தந்தருளும் சுவாமி.

மரணத் தருவாயிலே தேவரீருடைய திருச் சித்தத்துக்கு கீழ்ப்படிதலை, எங்களுக்குத் தந்தருளும் சுவாமி.

மரணத் தருவாயிலே சர்வேசுரனை முகமுகமாய் தரிசிக்க வேண்டுமென்கிற ஆசையை, எங்களுக்குத் தந்தருளும் சுவாமி.

மரணத் தருவாயிலே மாசில்லாத் திவ்விய மாதாவின் ஆதரவையும் சம்மனசுகளுடைய அடைக்கலத்தையும் சகல அர்ச்சியசிஷ்டவர்களுடைய சிபாரிசையும், எங்களுக்குத் தந்தருளும் சுவாமி.

மரணத் தருவாயிலே குருவானவரின் ஒத்தாசையும் ஆறுதலும் பெற, எங்களுக்குத் தந்தருளும் சுவாமி.

நித்திய பிதாவாகிய ஏக சுதனாகிய ஏசுகிறிஸ்துநாதரே எங்கள் மரணத் தருவாயிலே, தேவரீருடைய ஞானஸ்தானத்தைப் பார்த்து, எங்களை மீட்டருளும், சுவாமி.

எங்கள் மரணத் தருவாயிலே , தேவரீருடைய வருத்தமான சீவியத்தைப் பார்த்து, எங்களை மீட்டருளும், சுவாமி.

எங்கள் மரணத் தருவாயிலே, தேவரீருடைய விழிப்பையும் தாகத்தையும் பார்த்து, எங்களை மீட்டருளும், சுவாமி.

எங்கள் மரணத் தருவாயிலே, தேவரீர் சிந்திய திருக் கண்ணீரைப் பார்த்து, எங்களை மீட்டருளும், சுவாமி.

எங்கள் மரணத் தருவாயிலே, தேவரீர் திவ்விய இருதயம் அனுபவித்த அச்சத்தையும் கிலேசத்தையும் பார்த்து, எங்களை மீட்டருளும், சுவாமி.

எங்கள் மரணத் தருவாயிலே, தேவரீருடைய திருஇரத்தத்தையும் வியர்வையையும் பார்த்து, எங்களை மீட்டருளும், சுவாமி.

எங்கள் மரணத் தருவாயிலே, கற்றூணோடேக் கட்டப்பட்ட தேவரீருடைய திருக் கரங்களை பார்த்து, எங்களை மீட்டருளும், சுவாமி.

எங்கள் மரணத் தருவாயிலே, தேவரீர் சாட்டைகளாலும் கசைகளாலும் பட்ட  திருக்காயங்களைப் பார்த்து, எங்களை மீட்டருளும், சுவாமி.

எங்கள் மரணத் தருவாயிலே, தேவரீருக்குத் தரிக்கப்பட்ட முள்முடியைப் பார்த்து, எங்களை மீட்டருளும், சுவாமி.

எங்கள் மரணத் தருவாயிலே, தேவாரீர் பற்பல இடங்களில் சிந்தின திருஇரத்தத்தைப் பார்த்து, எங்களை மீட்டருளும், சுவாமி.

எங்கள் மரணத் தருவாயிலே, தேவரீருடைய திருச் சிலுவையையும் பாடுகளையும் பார்த்து, எங்களை மீட்டருளும், சுவாமி.

எங்கள் மரணத் தருவாயிலே, தேவரீருடைய திருத் தாயார் சிலுவை அடியிலே அனுபவித்த சொல்லிலடங்காத விடாாகுலத்தைப் பார்த்து, எங்களை மீட்டருளும், சுவாமி.

எங்கள் மரணத் தருவாயிலே, தேவரீருக்குக் கொடுக்கப்பட்ட பிச்சோடு கலந்த புளித்த முந்திரிகை இரசத்தைப் பார்த்து, எங்களை மீட்டருளும், சுவாமி.

எங்கள் மரணத் தருவாயிலே, இரும்பாணிகளால் ஊடுருவப் . பட்ட தேவரீருடைய திருக் கரங்களையும் பாதங்களையும் பார்த்து, எங்களை மீட்டருளும், சுவாமி.

எங்கள் மரணத் தருவாயிலே , தேவரீர் திருச் சிலுவையிலே மூன்று மணி நேரம் அனுபவித்த அவஸ்தையைப் பார்த்து, எங்களை மீட்டருளும், சுவாமி.

எங்கள் மரணத் தருவாயிலே, தேவரீர் உமது நித்திய பிதாவுக்கு ஒப்புக் கொடுத்த உமது திவ்விய ஆத்துமத்தைப் பார்த்து, எங்களை மீட்டருளும், சுவாமி.

எங்கள் மரணத் தருவாயிலே, தேவரீருடைய சரீரத்தை விட்டுப் பிரிந்த உமது திவ்விய ஆத்துமத்தைப் பார்த்து, எங்களை மீட்டருளும், சுவாமி.

எங்கள் மரணத் தருவாயிலே, தேவரீருடைய திரு மரணத்தைப் பார்த்து, எங்களை மீட்டருளும், சுவாமி.

எங்கள் மரணத் தருவாயிலே, ஈட்டியால் குத்துண்ட தேவரீருடைய திரு இருதயத்தை பார்த்து, எங்களை மீட்டருளும், சுவாமி.

எங்கள் மரணத் தருவாயிலே, குத்தப்பட்ட தேவரீருடைய . விலாவிலிருந்து சொரிந்து விழுந்த உதிரத்தைப் பார்த்து, எங்களை மீட்டருளும், சுவாமி.

எங்கள் மரணத் தருவாயிலே, தேவரீருடைய திரு அடக்கத்தைப் பார்த்து, எங்களை மீட்டருளும், சுவாமி.

உலகின் பாவங்களைப் போக்குகிற, மற்றதும்

உம்மை நம்பியிருக்கிற நாங்கள் கடைசியில் பேறு பெறத்தக்கதாக எங்களைச் நேசிக்கும் ஆண்டவரே, எங்களுக்கு அநுக்கிரகஞ் செய்தருளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

அதிதூதரான அர்ச் மிக்கேலே , நவவிலாச சபையில் உட்பட்ட சகல சம்மனசுக்களே, எங்களுக்குக் காவலாயிருக்கிற தேவ தூதர்களே, நாங்கள் பேர் கொண்ட மோட்ச வாசிகளே, நாங்கள் தேவ நீதி சந்நிதியினின்று தள்ளப்படாமல் எங்கள் மரணத் தருவாயில் எங்களைக் காப்பாற்றி ஆதரிக்க வேண்டுமென்று உங்களைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம்.

சேசு கிறிஸ்துநாதருடையவும் தேவ மாதாவினுடையவும் திருக் கரங்களில் பாக்கியமான மரணத்தை அடைந்த அர்ச். சூசையப்பரே , மரிக்கிறவர்களுக்குச் சரணமாக அளிக்கப்பட்ட நீரே எங்கள் மரண நேரத்திலே எங்களை ஆதரித்து இஷ்டப் பிரசாதத்தோடே மரிக்கச் செய்தருளும்.

பரிசுத்தக் கன்னிகையும் தேவ மாதாவுமாகிய அர்ச். மரியாயே, சகல அர்ச்சியசிஷ்டவர்களுடைய இராக்கினியே, கஸ்திப்படுகிறவர்களுக்குத் தேற்றரவே, நிர்பாக்கியராகிய எங்களுக்கு இரங்கி எங்களுடைய ஆத்துமம் பாவமில்லாமலும் பாவத்துக்குச் செலுத்த வேண்டிய கடனில்லாமலும் சரீரத்தை விட்டுப் பிரிந்து சம்மனசுகளால் கைக்கொள்ளப்படவும், மோட்ச இராச்சியத்தில் பிரவேசிக்கப்படவும் உமது திருக் குமாரனிடத்தில் வேண்டிக் கொள்ள வேண்டுமென்று உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம் தாயே.

ஆமென்.