நரகத்தில் விழும் ஆன்மாக்களின் எண்ணிக்கை

கடவுள் இரக்கமுள்ளவர், எப்படியும் கடைசி நேரத்தில் அவரது மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற "மிதப்பான" எண்ணம் கொண்டவர்கள்தான் இன்று ஏராளம் பேர் இருக்கிறார்கள். ஆனால் நரகத்திலிருந்து தப்பித்து மோட்சம் செல்வோரின் எண்ணிக்கை பற்றி அர்ச்சியசிஷ்டவர்கள் நமக்குக் கூறும் உண்மைகள் நம்மை மிரள வைப்பவையாக இருக்கின்றன.

பிரான்சிஸ்கன் சபைத் துறவியாகிய போர்ட் மவுரீஸின் அர்ச். லியோனார்ட் ஒரு நிகழ்ச்சியை விவரிக்கிறார்: ”எங்கள் சபையின் காலப் பதிவேடுகள் ஒரு மிக பயங்கரமுள்ள நிகழ்ச்சியை விவரிக்கின்றன. எங்கள் சகோதரர்களில் தமது போதகங்களுக்காகவும், பரிசுத்ததனத்திற்காகவும் புகழ் பெற்ற ஒரு துறவி ஒரு முறை ஜெர்மனியில் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். 

இந்தப் பிரசங்கத்தில் அவர் எந்த அளவுக்கு சரீர அசுத்தப் பாவங்களின் அருவருப்பான தன்மையைத் தத்ரூபமாக விவரித்துக் காட்டினார் என்றால், ஒரு பெண்மணி மிகுந்த துயரத்திற்குள்ளாகி, எல்லோர் முன்பாகவும் இறந்து விழுந்தாள். அதன்பின் மீண்டும் உயிர் பெற்ற அவள், "நான் கடவுளின் நீதியாசனத்திற்கு முன்பாக நின்ற அதே சமயத்தில் உலகின் எல்லாப் பாகங்களிலுமிருந்து அறுபதாயிரம் மனிதர்கள் அங்கு வந்து சேர்ந்தார்கள்; அவர்களில் மூவர் மட்டுமே உத்தரிக்கிற ஸ்தலத் திற்குத் தீர்ப்பிடப்பட்டு மீட்படைந்தார்கள். மற்றவர்கள் எல்லோரும் நரகத்திற்குத் தீர்ப்பிடப்பட்டார்கள்!' என்று அறிவித்தாள்.”

திருச்சபைத் தந்தையும், வேதபாரகருமான அர்ச். க்றீசோஸ்தோம் அருளப்பர் ஒரு பட்டணத்தில் பிரசங்கம் செய்து கொண்டிருந்தபோது, கூடியிருந்த மக்களை நோக்கி, ”நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்தப் பட்டணத்தில் எத்தனை பேர் மீட்படைவார்கள்? நான் சொல்லப் போவது மிக பயங்கரமானது, ஆனாலும் இதை நான் உங்களிடமிருந்து மறைக்க விரும்பவில்லை. ஆயிரக்கணக்கான மக்களைக் கொண்டுள்ள இந்தப் பட்டணத்தில் நூறு பேர் கூட இரட்சிக்கப்பட மாட்டீர்கள். நான் கூறும் எண்ணிக்கை கூட சற்று அதிகம்தான்” என்று சொல்லி அவர்களை நடுங்க வைத்தார்!

அர்ச். வியான்னி அருளப்பர், "நாம் அனைவரும் இரட்சிக்கப்படுவோமா? நாம் மோட்சத்துக்குப் போவோமா? ஐயோ, என் பிள்ளைகளே, நமக்கு அது பற்றி எதுவும் தெரி யாது! ஆயினும் இன்றைய நாட்களில் இழக்கப்படுகிற பெருந்திரளான ஆன்மாக்களைக் கண்டு நான் நடுங்கு கிறேன். இதோ, குளிர்காலம் நெருங்கி வருகையில் மரங்களி லிருந்து விழும் இலைகளைப் போல அவர்கள் நரகத்தில் விழுந்து கொண்டிருக்கிறார்கள்'' என்று கண்ணீரோடு கூறினார்.

அர்ச். வின்சென்ட் ஃபெரர் விவரித்துள்ள பின்வரும் சம்பவம், இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைத் தெளிவுபடுத்தும். லயோன்ஸ் துணை ஆயர் ஒருவர் தமது பதவியைத் துறந்து, வனாந்தரமான ஓரிடத் திற்குச் சென்று தவ வாழ்க்கையில் ஈடுபட்டார். அர்ச். பெர்நார்து இறந்த அதே நாளில் இவரும் இறந்தார். 

தமது மரணத்திற்குப் பிறகு, அவர் தமது ஆயருக்குக் காணப்பட்டு, ”ஆயரவர்களே, நான் மரித்த அதே நேரத்தில், உலகில் முப்பத்து மூவாயிரம் பேர் இறந்தார்கள். இவர்களில் பெர்நார்தும், நானும் மட்டுமே எந்தத் தாமதமுமின்றி நேராக மோட்சத்திற்குச் சென்றோம். மூவர் உத்தரிக்கிற ஸ்தலத்திற்குச் சென்றார்கள். மற்றவர்கள் அனைவரும் நரகத் தில் விழுந்தார்கள்” என்றார்” என்று அவர் விவரிக்கிறார்.

“தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகச் சிறியது - மிகவும் சிறியது - அது எவ்வளவு சிறியது என்பதை அறிந்தால், நாம் துக்கத்தால் மயக்கமடைந்து விடுவோம். தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு சிறியது என்றால், கடவுள் அவர்களை ஒன்றுகூட்டுவதாக இருந்தால், பழைய ஏற்பாட்டில் தாம் செய்தது போல, தீர்க்கதரிசியின் வாய்மொழியாக, “ஒருவர் பின் ஒருவராக - இந்த மாகாணத்திலிருந்து ஒருவரும், அந்த இராச்சியத்திலிருந்து ஒருவருமாக, ஒன்றாகக் கூடுங்கள்” என்று அவர் அவர்களுக்குச் சொல்வார்" என்கிறார் அர்ச். லூயிஸ் மோன்ஃபோர்ட்.

தொலைக்காட்சி, வலைத்தளம் என்ற பயங்கர பாவ சோதனைகள் இல்லாதிருந்த காலத்தின் நிலை இது! இன்று பாவத்தில் தாங்கள் பிடிவாதமாக நிலைத்திருந்தும், முன் ஒருபோதும் இருந்திராத சபிக்கப்பட்ட விஞ்ஞான, தொழில்நுட்ப, பொறியியல் வளர்ச்சியால் விளைகிற பெரும் சோதனைகளுக்கு மத்தியில் எந்த விதக் கவலையுமின்றி வாழ்ந்து கொண்டும் இருக்கும் மனிதர்கள், தாங்கள் எளிதாகவும், நிச்சயமாகவும் மோட்சத்தை அடைந்து விட முடியும் என்று எப்படி நம்புகிறார்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம்!

ஆனால் இந்த உண்மைகள் உங்களுக்குத் தரப்படுவது அவநம்பிக்கைக்குள் உங்களை வீசியெறிவதற்காக அல்ல, மாறாக, எப்போதும் தேவ இஷ்டப்பிரசாத நிலையில் உங்கள் ஆன்மாவைக் காத்துக் கொள்ளவும், மரணம் எப்போது வந்தாலும், அதை எதிர்கொள்ளத் தயாராயிருக்கவும் உங்களால் முடிந்ததையெல்லாம் செய்யும்படி உங்களை எச்சரிப்பதற்காகவே இவை உங்களுக்குத் தரப்படுகின்றன. நரகத்தைப் பற்றிய பயம் நலம் பயக்கும் பயமே என்பதில் சந்தேகமில்லை.

"ஆகவே, ஆண்டவர் பூமிக்குத் திரும்பி வரும்போது அவர் காணக்கூடிய, இன்னும் உயிரோடிருக்கிற மெய்யான பரிசுத்த வேதம் உங்களில் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை அறிந்து, உங்கள் பக்தியார்வத்தை அனுதினமும் வளர்த்துக் கொள்ளும்படியாக உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். 

குருநிலையினரிடையிலும் கூட தேவத் துரோகிகள் எழும்பினாலும், அது கடவுளில் உங்களுக்குள்ள நம்பிக்கையை அழித்து விடாதிருக்கட்டும். நாம் மனதாலும், நோக்கத்தாலும், நம் சிருஷ்டிகரின் மட்டில் நாம் கொண்டுள்ள உண்மையான நேசத்தாலும் இரட்சிக்கப்படுகிறோம். 

நம் ஆண்டவருக்கு எதிரான தாக்குதலில், தலைமைக் குருக்களும், சட்ட வல்லுனர்களும் மூப்பர்களும் எப்படி சதித்திட்டம் தீட்டினார்கள் என்பதையும், எவ்வளவு குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் நிஜமாகவே தேவ வார்த்தையை ஏற்றுக் கொண்டார்கள் என்பதையும் சிந்தியுங்கள். 

இரட்சிக்கப்படுபவர்கள் கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் மட்டுமே என்பதை நினைவில் வையுங்கள். ஆகவே காற்றினால் அலைக்கழிக்கப்படும் கடல் நீர்த்திரளைப் போல, அங்குமிங்குமாக சிதறடிக்கப் படுகிற பெருந்திரளான மக்கள் கூட்டத்தைக் கண்டு அச்சமடையாதீர்கள். 

சோதோமின் லோத்தைப் போல, ஒருவன் மட்டுமே இரட்சிக்கப்படுவதாயிருந்தாலும், அவனும் கூட கிறீஸ்துநாதரில் அசையாத நம்பிக்கை கொண்டு, கடவுளின் சரியான நீதியின்படி வாழ வேண்டியவனாக இருக்கிறான். ஏனெனில் ஆண்டவர் தமது பரிசுத்தர்களைக் கைவிட மாட்டார்” என்று திருச்சபையின் வேத பாரகரும், திருச்சபைத் தந்தையுமான அர்ச். பெசில் அறிவுறுத்துகிறார்.

"ஆகையால் எனக்கு மிகவும் பிரியமானவர்களே... அச்ச நடுக்கத்தோடு உங்கள் ஈடேற்ற வேலையைப் பாருங்கள்” (பிலிப். 2:12); 

“தின்மை செய்கிறவன் இன்னும் தின்மை செய்யட்டும்; அசுத்தங்களில் இருக்கிறவன் இன்னும் அசுத்தமாகட்டும்; நீதிமான் இன்னும் நீதிமானாகட்டும்; பரிசுத்தவான் இன்னும் பரிசுத்தவான் ஆகட்டும்” (காட்சி. 22:11).