புண்ணியங்களை அடைந்து கொள்வதற்காக மிகப் பரிசுத்த கன்னிமாமரியை நோக்கி ஜெபம்

ஓ கிருபைதயாபத்துக்கு மாதாவாகிய மரியாயே, பிறர் தாங்கள் விரும்புகிற சரீர சுகம், உலகப் பொருட்கள், அனுகூலங்கள் ஆகியவற்றை உம்மிடம் மன்றாடக் கூடும். நானோ, எனக்கு எதெல்லாம் மிகவும் அவசியமென்று தேவரீர் காண்கிறீரோ, அவற்றையும், உமது மாசற்ற இருதயத்திற்கு முற்றிலும் இசைவானதையும் எனக்குத் தந்தருளும் படி உம்மை மன்றாடுகிறேன். தேவரீர் மிகுந்த தாழ்ச்சியுள்ளவராக இருக்கிறீர். எனக்கு தாழ்ச்சியையும், அவமானங்களை நேசிக்கும் வரத்தையும் பெற்றுத் தாரும். ஜீவியத்தினுடைய துன்ப துரிதங்களில் நீர் வெகு பொறுமையாயிருந்தீர். பொறுமையையும், திடத்தையும் எனக்குப் பெற்றுத் தாரும். உமது அயலாரின் மட்டில் நீர் மிகுந்த நேசமுள்ளவராய் இருந்தீர். சகலரையும், விசேஷமாக எந்த வகையிலாவது எனக்கு விரோதிகளாய் இருக்கிறவர்களையும் நேசிக்கும் வரத்தை எனக்கு அடைந்து தாரும். சர்வேசுரன் மீதுள்ள சிநேகத்தினால் நீர் நிறைந்திருக்கிறீர்; அவருடைய மாசற்ற, பரிசுத்த சிநேகத்தின் கொடையை எனக்குப் பெற்றுத் தாரும்.

தேவ சித்தத்தோடு நீர் முழுவதுமாக இணைந்திருக்கிறீர்; சகலத்திலும் தேவ சித்தத்திற்கு முழுவதும் ஒத்திருக்கும் வரத்தை எனக்குப் பெற்றுத் தாரும். ஓ மரியாயே, தேவரீர் சகல சிருஷ்டிகளிலும் அதிக பரிசுத்தவதியாக இருக்கிறீர். என்னை ஒரு அர்ச்சியசிஷ்டவன் ஆக்கியருளும்.

என்னை நேசிப்பது உமக்கு அவசியமே இல்லை. ஆனாலும் உம்மால் ஆகாதது ஒன்றுமில்லை. எனக்கு அவசியமான சகலத்தையும் பெற்றுத் தர தேவரீர் சித்தங் கொண்டிருக்கிறீர். ஆதலால் உம்மிடம் தஞ்சமடைவதை நான் அலட்சியப் படுத்துவது, அல்லது உமது பரிந்துரையில் மிகக் குறைவான நம்பிக்கை கொண்டிருப்பதுதான் உமது உபகாரங்களை நான் பெற்றுக் கொள்ள முடியாமல் தடுக்கிற ஒரே காரியமாக இருக்கும். இந்தக் கொடைகளைப் பெற்றுக் கொள்வேன் என்ற உறுதியான நம்பிக்கையோடு, அவற்றை உம்மிடம் கேட்கிறேன், ஓ மரியாயே, என் தாயாரே, என் நம்பிக்கையே, என் நேசமே, என் சீவியமே, என் தஞ்சமே, என் உதவியே, என் ஆறுதலே. ஆமென்.