திரு இருதய அரசாட்சியை ஸ்தாபித்தல்!

கிறீஸ்தவக் குடும்பத்தில் சேசுவின் திரு இருதயத்தின் அன்புக் குரிய அரசுரிமையைப் பகிரங்கமாய் அங்கீகரித்தலே திரு இருதய அரசாட்சியை ஸ்தாபித்தல் எனப்படும். கிறீஸ்தவ இல்லத்தில் சேசுவின் திரு இருதயப் படத்தை சங்கைக்குரிய முறையில் ஸ்தாபித்து, அந்த இல்லத்தை அத்திரு இருதயத்திற்கு ஆடம்பரமாய் ஒப்புக் கொடுப்பதால், இந்த அங்கீகாரம் வெளிப்படையாகிறது. ""சகல வரங்களுக்கும் நானே ஊற்றாயிருப்பதால், எனது இருதயத்தை நேசித்து சங்கிக்கும்படி, அதன் படம் எங்கெங்கே ஸ்தாபிக்கப்பட்டிருக்குமோ, அங்கெல் லாம் அந்த வரங்களை அபரிமிதமாய் அள்ளிக் கொடுப்பேன். எனது விரோதிகளும் என்னை எதிர்க்கத் தேடுகிறவர்கள் எல்லோரும் என்னென்ன தான் செய்தாலும், நான் அரசாளுவேன்'' என்று மட்டற்ற இரக்கமுள்ள ஆண்டவர் பார-லே-மோனியாவில் பகர்ந்திருக்கிறார்.

ஆதலால் நமது இரட்சகர் அர்ச். மார்கரீத் மரியம்மாளிடம் கேட்டுக்கொண்டவைகளில் ஏதாவது ஒன்றையல்ல, அவை எல்லா வற்றையும் ஒருங்கே நிறைவேற்றுவதுதான் அரசாட்சி ஸ்தாபகமாகும்; அன்பின் அரசர் அவற்றைச் செய்பவர்களுக்கு வாக்களித்தவைகளை யெல்லாம் அடைய இதுவே தகுந்த வழி. மார்கரீத் மரியம்மாளிடம் கேட்டுக்கொண்டவற்றையெல்லாம் என்று சொல்கிறோம்; ஏனெனில் அரசாட்சி ஸ்தாபகத்தின் முக்கிய நோக்கம், ஒரு புதிய பக்தி முயற்சி யைப் பரப்புவதல்ல, கிறீஸ்தவ இல்லத்தை அர்ச்சித்து, நமது திவ்ய அரசருக்கு அதை ஓர் உயிருள்ள ஆசனமாக்குவதே அதன் நோக்கம்.

உலகம் சீர்திருத்தம் அடைந்து இரட்சிக்கப்பட வேண்டு மானால், கிறீஸ்துநாதரின் பிறப்பு ஒரு பெரும் திருநாளாக மாத்திரம் இருப்பது போதாது. அது உயிர் கொண்டு நீடித்திருக்கிற ஓர் உண்மைச் சம்பவமாயிருத்தல் அவசியம். அதாவது, நமது எம்மானுவேலாகிய சேசுநாதர், பலவீனரும் பரதேசிகளும், அவரது சகோதரருமான நமது மத்தியில் மெய்யாகவே வசிக்க வேண்டும். நாம் நம்மையே ஏமாற்றிக் கொள்ளலாகாது. சேசுக்கிறீஸ்துநாதரை மக்கள் சமூகம் அரசராக அங்கீகரித்து வணங்கி, அவரது ஆளுகை உலகிலுள்ள சகல மனிதர்கள் மத்தியிலும் ஸ்தாபிக்கப்பட்டு, சமுதாயத்தில் அரசராக அவர் விளங்கும் நாள் சீக்கிரம் வந்தாலும் சரி, நீண்ட காலத்திற்குப் பிறகு வந்தாலும் சரி, எப்படியானாலும், அந்த நாள் வரச் செய் வதற்கு, இக்கால சமுதாயத்தை அஸ்திவாரத்திலிருந்தே சீர்திருத்தி அமைப்பது அத்தியாவசியம்; நாசரேத்தூர் வாழ்வை அடிப்படை யாக வைத்து சமுதாயத்தைப் புதிதாய் அமைக்க வேண்டும். குடும்ப வாழ்வு எப்படியோ, அப்படியே சமுதாயமும் இருக்கும். நல்வழியோ தீய வழியோ, குடும்பத்தைப் போலவே தேசமும் இருக்கும். இந்தச் சட்டம் எக்காலமும் மாறாத சட்டம் என்று சொல்லலாம். மனந் திரும்பிய ஒரு செல்வந்தர் இது பற்றிச் சொன்னது என் ஞாபகத்துக்கு வருகிறது: ""சுவாமி, நீங்கள் பிரசங்கம் செய்து வருகிற காரியம் எவ்வளவு முக்கியமானதென்று வார்த்தைகளால் சொல்ல முடியாது. நான் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியும். இரகசிய சபை யாருக்கு (நானும் வெகு காலமாக அவர்களில் ஒருவனாயிருந்தேன்.) உள்ள ஒரே நோக்கம் குடும்ப வாழ்வின் கிறீஸ்தவத் தன்மையைச் சிதைத்து விடுவது. இந்த நோக்கம் முழுமையாய் அல்லது அரை குறையாய் நிறைவேறினால் போதும், ஆலயங்களையும், ஜெபக் கூடங் களையும் கத்தோலிக்கர் கையில் விட்டுவிடுவார்கள். குடும்ப வாழ் வைத் தங்கள் கைவசப்படுத்திய பிறகு, கல்லால் செய்த கட்டடங்கள் இருந்தாலென்ன, இல்லாது ஒழிந்தாலென்ன? இந்த இரகசிய தந்திரம் எந்த அளவுக்கு நிறைவேறுமோ, அந்த அளவுக்கு நரக வாசல் வெற்றி பெறும். நான் இரகசிய சபையில் இருந்த காலமெல்லாம், இவ்வித எண்ணத்துடன் இதற்காகவே வேலை செய்தேன்'' என்று சொன் னார். ஆம். ""இப்பிரபஞ்சத்தின் மக்கள் ஒளியின் மக்களிலும் தங்கள் சந்ததியிலே அதிக விவேகமுள்ளவர்களாயிருக்கிறார்கள்'' என்ற சுவிசேஷ வாக்கியம் எப்போதைக்கும் உண்மையாயிருக்கிறது.

இக்கால வாழ்க்கையின் பெரிய தீமை, சகலத்திலும் மேலான தீமை யாதெனில், சுபாவத்துக்கு மேலான எண்ணம், தேவ நோக்கம் இல்லாமல் ஒழிந்து போனதுதான். ஆனால் இதற்குத் தகுந்த பரிகாரம் ஒன்று இருப்பது நிச்சயம்: சுவிசேஷப் பாதையைப் பின் சென்று, நாசரேத்துக்குத் திரும்புவதே இந்தப் பரிகாரம். உலக இரட் சணியத்துக்குத் திருக்குடும்பம் மூலைக்கல்லாயிருக்க வேண்டுமென்று நித்திய ஞானமானவர் திருவுளமானார். அந்தக் குடும்பத்தில் அல்லவா வார்த்தையான நமது சேசு சகோதரர் இரட்சணிய வேலையை ஆரம்பித்தார்? வேறெந்த வழியாகவும், தற்கால உலகத்தை இரட் சிக்க நாம் முயற்சிக்கலாகாது; இந்த உலகத்தைப் புதிதாய் உருவாக்கி, நாசரேத்தின் உருவத்தை அதில் பதியச் செய்ய வேண்டும். அந்த உருவம் சாதாரணமானது. ஆனால் மேன்மை பொருந்தியது.

கடந்த உலகப்போரில் அழிவுற்ற ஆலயங்களின் விகாரத் தோற்றத்தை வாய்ச்சாதுரியமாய் வர்ணித்தும், புகைப்படங்களைக் கொண்டு நிரூபித்துமிருக்கிறார்கள். படைகள் சென்ற இடங்களில் இருந்த கோவில்களும், மடங்களும் தரைமட்டமாயின. குடும்பத் தின் அழிவு இதைவிட எவ்வளவு பயங்கரமானது! மகத்தான ஆலயங்களும் சாலைகளும் எவ்வளவு மேன்மையும், சிறப்பும் உள்ளவைகளாயினும், அவற்றால் உலகத்தை இரட்சிக்க முடியாது; ஆனால் பரிசுத்த குடும்பங்களால், இது இயலும். இது நியாயப் பொருத்தமானதே. ஏனெனில் வாழ்வின் ஊற்றும், குழந்தையின் முதன்மையான பள்ளிக்கூடமும் குடும்பமன்றோ? ஊற்றில் நஞ்சிட் டால், மக்கள் சமூகம் நாசமுறும். ஆதலால் சேசுக்கிறீஸ்துநாதரும், அவரது தெய்வீக அன்பின் சாரமும், குடும்பத்திலும், குடும்பப் படிப் பினையிலும் தோய்ந்திருக்கும்படிச் செய்வதே நமது போதகத்தின் நோக்கம்; இதைச் சரிவரச் செய்வோமானால், கடைசியாய்ப் பூவும், கனியும் கொடுக்கிற மரம் சேசுக்கிறீஸ்துநாதராகவே இருப்பார்.

திரு இருதய அரசாட்சியின் ஸ்தாபகம் என்று சொல்வதன் அர்த்தமென்ன? சுருங்கச் சொல்ல வேண்டுமானால், அன்பின் அரச ரான சேசுநாதர் நமது வீட்டுக்கு வந்து, அதில் தமக்கு இடம் கேட்ப தாகும்; அது அவருக்குத் தெய்வீக உரிமையால் சொந்தமானது. பெத் தானியாவில் அவருக்கு அளிக்கப்பட்டது அதுவே. அது மகிமைக் குரிய இடம், ஏனெனில் அவர் அரசர் (அரு.11:33-36). அவர் சீக்கிரம் குடும்பங்களைத் தமது அன்பால் வசப்படுத்தி, உலகம் முழு வதையும் அரசாளுவார். அது சிநேக ஒன்றிப்பின் இடமுமாகும். ஏனெனில் அவர் மெய்யாகவே நமது நண்பராயிருக்க விரும்புகிறார். ஒரே வார்த்தையில், நமது வீட்டில் நாம் சேசுநாதரோடு வாழ்வது எப்படியென்று, அரசாட்சி ஸ்தாபகம் நமக்குச் சொல்லிக் காட்டுகிறது.

சேசுநாதரை அறிந்தவர்கள் எவ்வளவு கொஞ்சப் பேர்! அவரை நேசிப்பது எவ்வளவு அபூர்வம்!... கிறீஸ்தவர்கள் எனப்படு வோரில் பெரும்பான்மையோர் அவருக்குப் பயந்து அவரை விட்டுத் தூரமாக ஓடிப் போகிறார்கள். ""ஆண்டவரே, உமது கூடாரத்தில் தங்கியிரும், எங்கள் பிரியம்போல் குடும்ப வாழ்க்கையை நடத்து வோம். அதில் நீர் தலையிட வேண்டாம்; எங்களிடம் நெருங்கி வந்து பேச வேண்டாம்; பயத்தால் எங்கள் உயிர் பிரிந்துபோகும்'' என்று வாய்மொழியாகச் சொல்லாவிடினும், அவர்கள் தங்கள் செயல் களால் அவ்விதம் சொல்கிறார்கள் (யாத்.20:19).

யூத மக்கள் தேவனிடம் இவ்வாறே சொன்னார்கள்; அவரது செல்வ மக்கள், தங்கள் தந்தையும், ஆயனுமானவரிடம் இவ்வாறே பேசிக்கொண்டு போகிறார்கள். ""சேசுநாதர் நமது இரட்சகர், அவர் மதுரமும் சாந்தமும் உள்ளவர், சகலரையும் தம்மிடம் வரவழைக் கிறவர், அன்பின் அரசர், மனுமக்களோடு இருப்பதே அவருக்கு இன்பம்; அவர் தமது உலக வாழ்வின்போது பாவிகளின் வீட்டில் பரிவுடன் தங்கினார், கானாவூர்க் கலியாணத்துக்குப் போனார், நமது வாழ்வின் இன்ப துன்பங்களில் பங்குபெறுவதே அவரது இருதய விருப்பம் என்று ஆயிரக்கணக்கான ஆச்சரியத்துக்குரிய சம்பவங் களால் காட்டியிருக்கிறார்'' என்பதை உணர மனதில்லாமல் பிடிவாத மாயிருக்கிறோம்.

நாம் தகுதியற்றவர்கள் என்று சாக்குப்போக்குச் சொல்கிறோம்! இது என்ன பைத்தியம்! சக்கேயுஸ் என்ன மிகுந்த தகுதியுள்ளவரா யிருந்தாரா! அவர் விநோதப்பிரியத்தினால்தான் தமது இரட்சகர் செல்லும் வழியில் போய் நின்றாரே தவிர, வேறு எதற்காகவும் அல்ல. கனானேய ஸ்திரீ, சமாரிய ஸ்திரீ, பரிசேயனான சீமோன், இன்னும் எத்தனையோ பேர் நம்மைப்போல் தவறிப் போனவர்கள், இவர்கள் எல்லோரும் மிகுந்த தகுதியுள்ளவர்களா? இல்லை, அவர்களில் ஒருவ ராகிலும் தகுதியுள்ளவர்களல்ல; ஆனால் அவர்கள் எல்லோரும் நமது திவ்ய எஜமானரின் இரக்கமுள்ள அன்பில் நம்பிக்கை கொண்டு, களங்கமற்ற இருதயத்துடன் அவரது தெய்வீக வருகையை ஏற்றுக்கொண்டார்கள். தங்கள் துன்ப துயரங்களைக் கண்டு, நமது திவ்ய இரட்சகரின் இருதயம் இளகி, இரக்கம் காட்டப் பாக்கியம் பெற்ற அந்தப் பாவிகளின் பாக்கியமே பாக்கியம்! ஏனெனில் அவரோடு அந்த வீடுகளிலும், ஆத்துமங்களிலும் இரட்சணியம், சமாதானம், மனந்திரும்புதல் ஆகிய பாக்கியங்களும் பிரவேசித்தன. ""இன்றைக்கு இவ்வீட்டிற்கு இரட்சணியம் உண்டாயிற்று'' (லூக். 19:9). சங்கை என்று சாக்குச் சொல்வது பரிசேயருக்குரியது! சகல மகத்துவமும் நிறைந்த சர்வேசுரன் தமது இராஜ உடையைக் களைந்து விட்டு, நம்மைத் தமது கரங்களை நீட்டி அழைக்கும்போது, நாம் எட்ட நின்று, ""நீர் தேவனும் அரசனுமானவர் என்பதை நினைத்துக் கொள்ளும், என்னை விட்டு அகன்று போவீராக'' என்று சொல்வது போல் நடந்து கொள்வது எத்தகைய அகந்தையும் அசட்டைத்தனமு மாக இருக்கிறது! இரட்சணியப் பாதையை அறிந்திருந்தும், தங்களுக்கும், தங்கள் இரட்சகருக்கும் இடையே மலைகளையும், கணவாய்களையும் நிறுவி வைப்பதால், அவருக்கு ஊழியம் செய்ய லாமென்று எண்ணுகிற போலிக் கிறீஸ்தவர்கள் கோடிக்கணக்கான வர்கள்; இதெல்லாம் சங்கைக்காக என்று இவர்கள் பிதற்றுவார்கள்!

சங்கை என்பது, சிநேகத்தைக் காட்டும் அடையாளம். அது வெறும் உபசாரமல்ல. சேசுநாதரைப் பொறுத்தவரை, இதுவே உண்மை. சங்கை அடங்கியிருப்பது எட்ட நிற்பதில் அல்ல; இதை அவர் வெளிப்படையாய் எண்பித்திருக்கிறார். எப்படியெனில், மனித அவதாரத்திலும், திவ்ய நற்கருணையிலும் இது தெள்ளத் தெளி வாகிறது. ஆயினும், அவர் எட்டாத் தூரத்தை அவ்விதம் அகற்றின போதே, யூதர்கள் எட்ட நின்று நடுநடுக்கத்துடன் அவருக்குச் செலுத்தின ஆராதனையைவிட மிகச் சிறந்ததும், பூரணமுள்ளதுமான ஆராதனையைக் கேட்டுக்கொள்ளலானார். எத்தனையோ கிறீஸ் தவர்களின் ஞானஸ்நானம் தோலுக்குக் கீழ் இறங்கவில்லை என்று சொல்லலாம்; அவர்களது உள்ளம் யூதர்களின் உள்ளங்களைப் போன்றது. அவர்கள் மிதமிஞ்சி பயப்படுகிறவர்கள். சேசுநாதர் அவர்களிடம் பேசி, ""சிறு பிள்ளைகளே,'' ""என் சிநேகிதரே'' என்று சொல்வாராகில், அவர்கள் பாச உருக்கத்தினாலல்ல, பயத்தால் செத்துப் போவார்கள். நானோ, ""மோயீசனும், தீர்க்கதரிசிகளும் மவுனமாயிருப்பார்களாக; அவர்கள் பேச வேண்டாம். அவர்களது குரல் எவ்வளவுதான் இனிமையாய் இருப்பினும், அது என்னை உறுத்தாது. ஏனெனில், சேசுவே, உம்மிடம் நித்திய ஜீவியத்தினுடை யவும், அன்பினுடையவும் வார்த்தைகள் இருப்பதால், என் ஆத்துமம் உமக்கு மாத்திரம் செவிசாய்க்க ஆவலாயிருக்கிறது. உமது குரல் என் காதில் விழக் கடவது. தேவ சுதனும், மகா பரிசுத்த கன்னிமாமரியின் குமாரனுமாகிய மெய்யான சேசுவே, சிநேகங்களின் சிநேகமே, உம்மை நான் போதிப்பேனாக'' என்று அழுத்தந்திருத்தமாக அறைந்து சொல்வேன்.

நல்ல கத்தோலிக்கர் என்று பெயர் பெற்ற கனவான் ஒருவர் என்னிடம் சொன்னது இப்போது ஞாபகத்துக்கு வருகிறது. "சேசு நாதரின் திரு இருதயப் படத்தை என் அறையில் ஸ்தாபிக்கவா? அது ஒருக்காலும் கூடாது, சுவாமி. சங்கைக் குறைவான காரியம்! என்ன பைத்தியம் அது!'' என்று சொன்னார். இராஜாதிராஜனானவர் பாவிகளோடு பேசிப் புழங்கி, ஆயக்காரரோடு நெருங்கிப் பழகி, சற்றும் கண்ணியமும், கெளரவமுமில்லாத வேறு அநேகரோடு உரை யாடி, அவர்களுடைய அன்பைத் தேடித் திரிந்ததை இந்தக் கனவான் கண்ணாற நேரில் பார்த்திருந்தால், என்ன செய்திருப்பாரோ தெரிய வில்லை. சங்கை, சங்கை என்று சாக்குச் சொல்வது, கள்ளத்தனமான முகத்தாட்சணியமும், அகந்தையுமேயாகும். கானாவூர்த் தம்பதி களால் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்ட சேசுநாதர், தமது சொந்த இருப்பிடத்தில், கிறீஸ்தவக் குடும்பத்தின் மண்டபத்தில் மகிமை பெற முடியாதா? அவர் இராஜாதி ராஜனல்லவா? கிறீஸ்தவ வேதம் போதிக்கப்பட்டு இருபது நூற்றாண்டுகள் ஆனபிறகும், "சிநேகத்தைச் சிநேகிப்பார் இல்லை'' என்பது உண்மையாகவே கஸ்திக்குரியது. சேசுக்கிறீஸ்துநாதருடைய சிநேகத்தைப் போதிய அளவு நாம் போதிப்பதில்லை. இந்த சிநேகம் வெறும் பலவீனத்தின் உணர்ச்சியல்ல. இது உயிரும் அக்கினியும் நிறைந்த சிநேகம்.

இந்த விபரீத எண்ணங்களுக்கெல்லாம் காரணம் என்ன? சுவிசேஷத்தை வாசிக்காததும், அதை தியானிக்காததும்தான் என்று ஒருவாறு சொல்ல வேண்டும். மனிதரோடு நெருங்கியிருந்து அவர் களோடு சேர்ந்து வாழ நம் ஆண்டவர் விரும்புகிறார் என்று சுவிசேஷத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் தெளிவாய்க் காண முடிகிறது. சேசுநாதரின் கரங்களில் தாவி விழுந்து, அவரது பார்வையால் பரவசமாகி, அவருடைய திரு இருதயத்தில் இளைப் பாறின கலிலேய நாட்டுச் சிறு பிள்ளைகள் அவரைக் கண்டு பயப் பட்டார்கள் என்று சொல்வீர்களா? வலுவந்தமாய் அவர்களை அவரிடமிருந்து பறித்து இழுத்தபோது, அவர்கள் மீண்டும் வெகு சீக்கிரமாய் அவர் மடியில் போய் விழவில்லையா? நமது பக்தி விசுவாசம் நாம் அவரோடு நெருங்கி வாழத் தூண்டாவிடில், அவரை அறிந்து தேவ பற்றுதலுடன் அவரை நேசிப்பது எவ்வாறு? கண்ணுக் கெட்டாத தூரத்தில் ஏதோ உருவம் தோன்றினதுபோல் அவரைப் பார்த்து, நாம் பரவசம் கொண்டு அவரைப் பரிசுத்த பற்றுதலோடு நேசிக்கக் கூடுமா? அதற்கு மாறாய், அவரது அழகை ஒரு தடவை பார்த்து ஆனந்தித்தவன், வேறெந்தப் பொருளின் மட்டிலும் அருவருப்பும் அரோசிகமும் கொள்ளாதிருக்கக் கூடுமா?