சேசுவின் திரு இருதயம் வாழ்க!
உமது இராச்சியம் வருக!
சங். மத்தேயோ சுவாமிக்கு சுகமில்லையென்று கண்டு, அவரது சபை அதிபர்கள் அவரை 1907-ம் வருடம், அமெரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு அனுப்பி வைத்தார்கள். அவருக்கிருந்த வியாதி குணமாகாது என்று மருத்துவர்களால் கைவிடப்பட்டு, அவர் சாகும் நிலைமையில் பாரலேமோனியாவுக்கு வந்து சேர்ந்தார்; உடல் நலம் கிடைக்க வேண்டுமென்று கேட்க அவர் வரவில்லை. சேசுவின் திரு இருதயத்தின் மீது மிகுந்த சிநேகமும், நன்மரண வரமும் கேட்பதற் காக வந்தார். ஆண்டவர் தரிசனம் கொடுத்த ஆலயத்தில் முழங் காலில் இருந்ததுதான் தாமதம், உடனே திடீரென தமக்குப் பூரண ஆரோக்கியம் கிடைத்து விட்டதென்று அவர் உணர்ந்தார். அவருக்கு அச்சமயம் என்ன நேர்ந்தது என்று விவரிக்க அவரால் இயல வில்லை. ஆனால் தேவசிநேகம் அவரது உள்ளத்தை ஊடுருவிப் பாய்ந்திருக்க வேண்டும்; ஏனெனில் அன்று சாயந்திரம், அவர் திருமணித் தியானம் செய்துகொண்டிருக்கும்போது, அரசாட்சி ஸ்தாபகம் இப்போது நடைபெறுகிற விதத்தில் எப்படிச் செய்ய வேண்டுமென்று, திரு இருதய ஆண்டவர் அவருக்கு விளக்கிக் காட்டி, தமக்கு உலகத்தையே குடும்பம் குடும்பமாய் ஜெயித்துக் கொடுக்க வேண்டும் என்ற பேராவல் அவர் உள்ளத்தில் உதிக்கச் செய்தருளினார்.
அவர் தமது நோக்கத்தைப் பரிசுத்த தந்தையான அர்ச். பத்தாம் பத்திநாதரிடம் தெரிவித்துத் தமது அப்போஸ்தலத்துவத்தை ஆரம்பிக்க அனுமதி பெறும்படி தாமதமின்றி உரோமை நகருக்குப் பயணமானார். பரிசுத்த தந்தை அவர் சொன்னதைக் கேட்டறிந்து கொண்டு, "இல்லை மகனே, உமக்கு அனுமதி இல்லை'' என்று சொல்லி விட்டு, அவரைத் தமதருகில் அழைத்து, ""நீர் அதைச் செய்ய வேண்டுமென்று கட்டளை கொடுக்கிறேன், தெரிகிறதா?... நான் உமக்கு அனுமதி கொடுப்பது மாத்திரமல்ல, உம் வாழ்வு முழுவதையும் இந்த உன்னத அலுவலில் செலவழிக்க வேண்டுமென்று கட்டளையிடுகிறேன்'' என்றார்.
இவ்வாறு மத்தேயோ சுவாமியார், தமது பிரசங்கத்துக்குத் திருச்சபைத் தலைவரின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டதும், அர்ச். சின்னப்பரைப் போல் தேசங்களை ஜெயித்துக் கொண்டு வரப் புறப்படலானார். அவர் திரு இருதய சபையைச் சேர்ந்தவர்; இந்தச் சபையின் கருத்து, சிநேகத்தின் வழியாகவும் பரிகார முயற்சியாலும் அப்போஸ்தலத்துவத்தாலும் சேசுநாதருடையவும், மரியாயினுடை யவும் திரு இருதய வணக்கத்தை எங்கும் பரவச் செய்வதேயாகும். ஆதலால் திரு இருதயத்தைப் பற்றி, அல்லது அவரே சொல்வது போல், சிநேகத்தைப் பற்றிப் பிரசங்கிப்பது எப்போதுமே அவருக்குப் பேரானந்தம். அவர் மெய்யாகவே பணப்பையும், கைக்கோலும் இல்லாத அப்போஸ்தலர் என்று சொல்லலாம்; அவரிடமிருந்த தேவசிநேக அக்கினியும், பூரணமான சுய பரித்தியாகமுமே அவரது வல்லபம்.
மத்தேயோ சுவாமி உலகமெல்லாம் சுற்றித் திரிந்து, ஆத்துமங்களை இரட்சித்து, தம் உள்ளத்தில் எரிந்த சிநேக அக்கினி அவர்களிடமும் கொழுந்து விட்டெரியச் செய்திருக்கிறார். இதெல்லாம் சத்தம் சந்தடியின்றி அமைதியாய் நடந்திருக்கிறது. அவரது சாந்தத்தையும், தயாள சிந்தையையும் எதிர்த்து நிற்க எவராலும் முடியாது. மிகவும் அசாதாரணமான விஷயங்களை, வெகு சாதாரணமான விதத்தில் எடுத்துரைக்கிறார்; ஆயினும், அவர் ஆத்துமங்களைத் தெய்வீக காந்தத்தால் உன்னதப்படுத்துகிறார். திவ்விய எஜமானர் தாமே தமது அப்போஸ்தலர் மூலமாய்ப் பேசுகிறார்; செயல்படுகிறார்; அவரைப் பார்க்கும்போதும், அவர் சொல்வதைக் கேட்கும்போதும், நமது ஆண்டவர் இவ்வுலகில் நடந்து திரிந்த போது நடந்தவை, அப்படியே மீண்டும் நடப்பது போல் உணர் கிறோம். அவர் நம்மை வசியப்படுத்தி நம்மீது வெற்றி கொண்டு, முழுவதும் நம்மைப் புது மனிதர்களாக்கி விடுகிறார். நாமே அப்போஸ் தலர்கள் ஆகிவிடுகிறோம். ""என் காவல் தூதரைப் பற்றியோ மற்ற சம்மனசுக்களைப் பற்றியோ எனக்குப் பொறாமை கிடையாது. ஏனெனில் அவர்களால் பூசை வைக்க முடியாது, சிநேகத்தைப் பிரசங்கிக்க முடியாது, சிநேகமாகவே இருப்பவருக்காகப் பாடுபடவும் முடியாது'' என்று சொல்வார். நாள் முழுவதும் கடுமை யாக உழைத்த பிறகும், மாலையில் எட்டாவது பிரசங்கம் ஒன்று செய்ய ஒப்புக்கொண்டிருக்கிறார். ""நாம் நேசிக்கிற ஒருவரைப் பற்றிப் பேசுவதை விட அதிக இளைப்பாற்றிக்குரியது உண்டா?'' என்பார். ""இப்படி உழைத்தால் வெகுகாலம் வாழ முடியாது, உங்கள் உயிருக்கே மோசம் தேடிக் கொள்கிறீர்கள்'' என்று யாராவது ஆட்சேபித்தால், "எனக்காக அவர் மரித்திருக்க, அவருக்காக நான் ஏன் மரிக்கக் கூடாது?'' என்று பதிலுரைப்பார்.
1914-ம் வருடம், மத்தேயோ சுவாமி ஐரோப்பாவுக்குத் திரும்பினார். அவர் அங்கே சேருவதற்குள் உலகப் போர் ஆரம்பித்து விட்டது. "பிரான்ஸ் தேசத்தில் அவர் என்ன செய்யப் போகிறார்? பிரசங்கம் செய்வதில் பயன் இருக்காது! யுத்தத்தின் காரணமாக எல்லாம் தாறுமாறாயிருக்கும். அவர் சொல்வதைக் கேட்க ஒருவரும் இருக்க மாட்டார்கள்'' என்று அவருடைய சிரேஷ்டர்கள் நினைத்தார்கள். ஆனால் அதற்கு நேர்மாறாய் நடந்தது; சண்டையில் ஏற்பட்ட சங்கடங்களின் காரணமாகவே, சஞ்சலப்பட்ட குடும்பங்கள் ஆறுதல் அடையுமாறு, திரு இருதயத்திற்குத் தங்கள் இல்லங்களைத் திறந்து வைத்தார்கள்.
அர்ச். பத்தாம் பத்திநாதர் மரணமானபின், அவர் மீண்டும் உரோமைக்குச் சென்று, 15-ம் ஆசீர்வாதப்பரைக் கண்டு பேசினார்; அந்தப் பாப்பரசர் தமது கைப்பட ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தார். மேலும், இத்தாலி நாடெங்கும் இந்த பக்தியைப் பிரசங்கித்து, அதற்கான ஸ்தாபனங்களை ஏற்படுத்தவும் அவர் கட்டளையிட் டார். கடைசியாய், 1916ம் வருடம் மத்தேயோ சுவாமி வத்திக்கான் அரண்மனைக்குச் சென்றபோது பாப்பரசர் தமக்கு முன்பாக அவர் பூசை செய்யும்படி சொன்னார். இந்தப் பூசை முடிந்த பின்னும், பாப்பரசர் அவருக்குப் பேட்டி கொடுத்து, ""இந்த போதகம் எங்கும் நடைபெற வேண்டும் என்பது எனது விருப்பம். ஏனெனில் இந்த வேலை பாப்பானவருடைய சொந்த வேலை'' என்று அழுத்தந் திருத்தமாகச் சொன்னார். 11ம் பத்திநாதரும் இந்த அலுவலை ஆசீர்வதித்து, உற்சாகப்படுத்தியிருக்கிறார்.
பாப்பானவரின் விருப்பம் நிறைவேறி வருகிறது. இத்தகைய மாபெரும் அலுவலில் நாம் எதிர்பார்க்க வேண்டிய தட்டுத்தடை முட்டுக்கட்டைகள் எத்தனை இருந்தாலும், திரு இருதய அரசாட்சி யின் ஸ்தாபகம் எப்போதும் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. தென் அமெரிக்கா, வட அமெரிக்கா மாத்திரமல்ல, ஐரோப்பியக் கண்டத்தின் சகல நாடுகளிலும், இந்தியா, இலங்கை, எகிப்து, மடகாஸ்கர், தென் ஆப்ரிக்கா, காங்கோ, கினியா, செனேகல், கொரியா, ஆஸ்திரேலியா நாடுகளிலும், மலாக்காய் என்ற குஷ்டரோகிகளின் குடியிருப்பிலும் கூட இது பரவியிருக்கிறது. மத்தேயோ சுவாமியின் அலுவல் அதிசயத்துக்குரிய தேவ ஆசீர்வாதம் நிறைந்தது. "சுவாமி, செத்த மனிதன் ஒருவன் உயிர்த்தெழுந்ததையல்ல, ஒரு கல்லறைத் தோட்டம் முழுவதுமே உயிர் பெற்றதை நான் பார்த்தேன்'' என்று ஒரு மேற்றிராணியார் அவருக்கு எழுதினார்.
இது வரை, அவர் இரு தடவை இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல், இத்தாலி தேசங்களுக்குப் போயிருக்கிறார்; ஹாலந்து, ஸ்விட்ஸர்லாந்து, பெல்ஜியம், லக்ஸம் பர்க் நாடுகளையும் சந்தித்திருக்கிறார். அவர் சென்ற இடமெல்லாம் சிறப்புத்தான். அதாவது எங்கும் ஆச்சரியத்துக்குரிய சம்பவங்களும் எதிர்பாராத மனந்திரும்புதலும் நடந்திருக்கின்றன. இவை யாவும் அவரது அலுவலில் தேவ முத்திரை பதிந்திருக்கிறதென்றும், திவ்விய இஸ்பிரீத்துவானவர் பூமியின் தோற்றத்தை மீண்டும் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார் என்றும் தெளிவாய்க் காட்டுகின்றன.
முற்றிலும் தெய்வீகமான இந்த அலுவல் ஆரம்பித்ததன் சுருக்கம் இதுவே. நம் ஆண்டவரே இதைக் கேட்டுக்கொண்டதால் அதன் தொடக்கம் தெய்வீகமானது; அதனால் உண்டாகும் சுபாவத்துக்கு மேலான மாற்றங்களின் காரணமாக, அதன் பயனும் தெய்வீகமானதே.
குடும்பங்களில் திரு இருதய அரசாட்சியை ஸ்தாபித்தல் என்று சொல்வதன் அர்த்தம் இன்னதென்று மத்தேயோ சுவாமியே இப்போது நமக்கு விளக்கிக் காட்டப் போகிறார்.
மூன்றாவது, இப்போதகத்தை நன்கு உணர்த்தக்கூடிய சம்பவங்கள் அவரது பிரசங்கங்களில் மலிந்து கிடக்கின்றன. அவரே அவைகளை நேரில் கண்டதுமன்றி, அவைகளில் அநேகம் நடை பெறுவதற்கு அவரே காரணமாகவும் இருந்ததன் நிமித்தம், அவர் அவைகளைச் சொல்லும்போது, கேட்பவர்கள் மனதில் அவற்றின் பாடம் பசுமரத்தாணி போல் பதிந்துவிடுகின்றது.
பிரெஞ்ச் மொழியில் வெளியிட்ட புத்தகம் அநேக தடவை மறு பிரசுரமாயிருக்கிறது; ஏழெட்டு இதர மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. அதை வெளியிட்டவர்களுக்கு இருந்த நல்ல நோக்கத்தைத் திரு இருதய ஆண்டவர் ஆசீர்வதித்திருக்கிறார் என்று சொல்வதற்கு இதுவே போதுமான அத்தாட்சி. திரு இருதய அப்போஸ்தலர் சொன்ன வார்த்தைகளின் சாராம்சம் அடங்கின இப்புத்தகத்தில், ""மொழி நடை நூல் அமைப்பு'' குறைவாகத் தோன்ற லாம். ஒருவர் பேசும்போது கேட்டவர்கள் தங்களுக்குத் தோன்றின வண்ணம் குறித்து வைத்ததில், ஆராய்ந்து யோசித்து எழுதின புத்தகத்திலுள்ள ஒழுங்கும் நடையும் இருக்காது என்று எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் அவர் தாமாகவே பேசின பேச்சின் எதார்த்தமும், நேர்மையுமே நமக்கு முக்கியம். அன்பின் அரசரான சேசுநாதர், அவரை மகிமைப்படுத்தவும், உலகம் முழு வதும் அவரது இராச்சியம் பரவும்படியாகவும் நாம் ஏற்றுக் கொண்ட இம்முயற்சியை ஆசீர்வதிப்பாராக.
மாட்ரீட்,
அக்டோபர் 1928.