தவறிப்போன ஆடுகளைத் திரும்ப மந்தையில் கொண்டு வந்து சேர்ப்பிப்பதே நமது நல்ல ஆயரின் முதல் நோக்கம். அன்பர்களுக்காகத் தமது ஆருயிரைத் தியாகம் செய்வதை விட அரிய நேசம் உண்டா ? உண்டு எனக் காட்டுகிறார் ஆண்டவர். தமது விரோதிகளை நேசிப்பதே அது. உடலை வதைப்பவர்களுக்காக உயிரைத் தியாகம் செய்வதே அது. ஆதலால்தான் தம்மைக் கொலை செய்யும் அந்தக் கொடிய பாவிகளுக்காகப் பரிந்து பேசுகிறார் இந்தத் தயாபர சேசு.
'பிதாவே, இவர்களை மன்னியும்; ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள்.''
இவ்வார்த்தைகள் சிலுவையில் அறையுண்டிருப்பவரின் முதல் வசனம். இந்தப் பொன்மொழி சேவகர்களின் செவிகளில் ஏறவில்லை . அவர்களது கவனம் எல்லாம் அவரது உடைகளின் மீது இருந்தது. சேசுவின் போர்வையை நான்கு பாகங்களாகப் பிரித்துத் தங்களுக்குள் பகிர்ந்து கொண் டார்கள். அவரது அங்கியோ தையல் இல்லாமல் ஒரே பின்னலால் ஆனது. இதைத் துண்டுகளாய்க் கிழிப்பதால் எவருக்கும் பயன்படாமல் போகும். "இதன்மீது திருவுளச் சீட்டுப் போடுவோம்" என்று கூறி அவ்விதமே செய்தனர். "என் ஆடைகளைப் பகிர்ந்து கொண்டார்கள்; என் அங்கியின் மீதும் சீட்டுப் போட்டார்கள்'' என்ற தீர்க்கதரிசனம் இவ்விதமாய் நிறைவேறியது. யூதர்கள் ஆண்டவரைப் பரிகசித்து, "சர்வேசுரனுடைய ஆலயத்தை இடித்து, மூன்று நாட்களில் திரும்பக் கட்டுகிறவனே, சிலுவையை விட்டு இறங்கி உன்னைக் காப்பாற்றிக்கொள், பார்ப்போம்" என்று ஏளனம் செய்கிறார்கள். "நீ தேவசுதனாய் இருந்தால் சிலுவையை விட்டுக் கீழே இறங்கு" என்று கூவுகிறார்கள். மூர்க்கம் கொண்ட இந்தப் பரிகாசத்தைக் கேட்ட மக்கள் கூட்டம் மவுனம் சாதிக் கிறது. அதைக் கவனித்த யூதத் தலைவர்களின் ஆவேசம் மட்டு மீறுகிறது. அவர்கள் கூட்டமாய் சேசுவின் முன்வந்து, "மற்றவர்களைக் காப்பாற்றினான்; தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடிய வில்லை," "இஸ்ராயேலின் இராஜாவான இந்தக் கிறீஸ்து உடனே சிலுவையை விட்டு இறங்கி வரட்டும், நாங்கள் விசுவசிப்போம்," "இவன் சர்வேசுரனை நம்பினானே; தேவன் இவனை நேசித் தால், அவர் இவனைக் காப்பாற்றட்டும்" என்று இவ்வாறு எள்ளி நகையாடிக் கூச்சலிடுகிறார்கள்.
கீழே உட்கார்ந்திருந்த சேவகரும் குதித்தெழுந்து, "நீ யூதர்களின் இராஜாவாயிருந்தால், உன்னையே காப்பாற்றிக்கொள்" எனக் கூட்டத்தோடு ஆர்ப்பரிக்கிறார்கள். சேசுவின் இரு பக்கங் களிலும் அறையுண்டிருந்த கள்வரையும் இந்தத் தொற்றுநோய் பீடிக்கிறது. "நீ கிறீஸ்துவாயிருந் தால், உன்னையும் எங்களையும் காப்பாற்று" என அவர்களும் பிதற்றுகிறார்கள். இத்தனை தூஷணங்களையும் கேட்டுப் பொறுமையோடு மவுனம் சாதிக்கிறார் சேசுநாதர். இந்த அற்புத அமைதியையும் மவுனத்தையும் ஆழ்ந்து கவனிக்கிறான் ஒரு கள்வன். ஆச்சரியமும் பிரமிப்பும் அனுதாபத்தை உண்டாக்குகிறது. ஞானமற்ற கொலை பாதகன் சிறிது நேரத்தில் மாறி ஞானத்தைக் கண்டடைகிறான். மற்றொரு கள்வன் திரும்பவும் சேசுவைத் தூஷணிப்பதைக் கேட்டு அவனைக் கண்டிக்கிறான். தன் பாவ நிலையையும், சேசுநாதரின் மாசற்றதனத்தையும் அறிக்கையிடுகிறான். இந்தப் பாவசங்கீர்த்தனமும், தேவ சாட்சியமும் தேவ வரப்பிரசாதத்தை அவனது இருதயத்தில் பொழிகின்றன. உடனே, தன்னைப் போல் அறைப்பட்டிருக்கும் இந்த சேசு சாதாரண மனிதன் அல்ல, அவரே தேவன் என்று கண்டுணர்கிறான். அதனால் அவன் அவர் பக்கம் திரும்பி, "ஆண்டவரே, தேவரீர் உம் இராச்சியத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்" என மன்றாடுகிறான். அந்நேரமே சேசு இரட்சகர் அவனிடம் திரும்பி, "இன்றுதானே நம்மோடு பரகதியில் இருப்பாய்" என்கிறார். மனந்திரும்பிய எந்தப் பாவியும் இந்த நல்ல கள்ளன் அடைந்த பாக்கியத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று இக்கடைசி வேளையிலும் போதிக்கிறார் நமது தெய்வீக ஆசிரியர்.
அவர் சிலுவையில் உயர்த்தப்பட்டதிலிருந்து வானத்தில் தோன்றிய ஒரு காரிருள் மேக மண்டலம், வர வர அதிகமாகப் பரவி, எருசலேம் பட்டணத்தையும், யூதேயா நாட்டையும், ஏன், உலகத்தை யுமே மூடுகிறது. சேசுநாதரின் தாயாரும், அவர்களது சகோதரியான கிளேயோப்பாஸ் மரியம் மாளும், மரிய மதலேனம்மாளும், அருளப்பரும் சிலுவையை நெருங்குகிறார்கள். தங்களால் நேசிக்கப்பட்டவர் அடையும் நிகரற்ற வேதனையைக் கண்டு அவர்களது இருதயம் உருகி, கண்ணீர் ஆறாகப் பெருகுகிறது. மனங்கலங்கி தம்மைப் பார்த்து அழுது நிற்கும் அவர்களை சேசுநாதர் கிருபாகடாட்சத்தோடு நோக்குகிறார். தம்மைப் பெற்ற மாதரசியின் பக்கம் திரும்பு கிறார். அம்மா என்று அவர்களை அழைத்தால், மாதாவின் வேதனை பலமடங்கு அதிகரிக்கும் என நினைத்து, "ஸ்திரீயே," என்று அழைத்து, அருளப்பரைக் காட்டி, "இதோ உம் மகன்" என்றும், அருளப்பரிடம், "இதோ உன் தாய்" என்றும் சொல்லி ஒருவரை ஒருவரிடம் ஒப்படைக்கிறார். இவ்வாறு, சாகும் வேளையில் தம் வேதனையை மறந்து, தமது அன்னைக்கும் தமது ஊழியர்களுக்கும் தாய் - மகன் உறவை ஏற்படுத்துகிறார். இந்நேரத்தில் அவர் தம் மாதாவை குருக்களுக்கும், சகல மனிதர்களுக்கும் தாயாக ஏற்படுத்துகிறார்.
சிலுவை மரணம் மிகக் கொடியது. நிமிடத்திற்கு நிமிடம் ஆணிகளால் ஏற்பட்ட காயங்கள் பிய்ந்துகொண்டே வந்து, நரம்புகள் பிசகி, தசைகள் சுருங்கி, இரத்தத் தாரைகள் அறுபட்டு, காய்ச்சல் உண்டாகி, சகிக்க முடியாத தாகம் மேலிடுவதாலும், வேதனை மேலும் மேலும் அதிகரிக்கிறது. துயரக் கடலில் அமிழ்ந்திருந்த சேசு, தமது பரம பிதாவைக் கூவியழைக்கிறார். "என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்?'' என்று பிரலாபிக்கிறார்.
நரகத்தில் பாவிகள் சர்வேசுரனால் கைவிடப்பட்டு அனுபவிக்கும் பெரும் தண்டனையைப் போல் ஒரு தண்டனையை தேவசுதன் அனுபவித்தார்! நமக்காக அவர் அந்நேரம் "சபிக்கப்பட்டவர்" ஆனார்! புத்திக்கெட்டாத வியாகுலத்தில் மூழ்கிய அவர், தம் திருப்பாடுகளால் பலனடையாமல், நரகத்தில் விழும் கோடான கோடி பாவிகளை நினைத்து, அவர்கள் தம் ஞான சரீரத்தின் உறுப்புகள் ஆதலால், அவை தம்மை விட்டு வலுவந்தமாய்ப் பிரிந்து, சர்வேசுரனால் கைவிடப்படுவதை அறிந்து, இந்தப் பிரலாபக் கூக்குரலை எழுப்புகிறார்! நம் அன்பர் நம் பாவங்களுக்காக அனுபவித்த ஆத்தும சரீர வேதனை அளவுகடந்தது என்று இந்த வசனம் நமக்கு வெளிப்படுத்துகின்றது.
இரட்சகர் தம் சரீரத்திலும் உயிரிலும் அடைந்த வாதை அளவற்றது எனினும், நம்மை முன் னிட்டு, இன்னும் அதிகமாக அனுபவிக்கவும் சித்தமாயிருந்தார். இந்த ஆவலே அவர் வாய் விட்டுக் கூறிய ஐந்தாம் வசனத்தின் உட்பொருளாகும் : "தாகமாயிருக்கிறேன்!" இது சரீர தாகம் இல்லை . முன்பு ஒரு நாள் சமாரியப் பெண்ணிடம் தாகத்திற்குத் தண்ணீர் கேட்டவர், 'உன்னிடம் கேட்பவர் இன்னார் என்று நீ அறிந்திருந்தால், நீயே அவரிடம் கேட்டிருப்பாய். அவரும் ஜீவிய தண்ணீரை உனக்குக் கொடுத்திருப்பார்" என்று கூறித் தம் சரீர தாகத்தை மறந்து விடவில்லையா? ஆதலால் இது அவரது சரீர தாகமல்ல; ஆத்தும் தாகமே. மனந்திரும்பும் ஆன்மாக்களால் மட்டுமே அதைத் தீர்க்க முடியும்!
அவரது தாகம் பெரிதுதான். நம்மை இரட்சிக்க இன்னும் அதிகம் பாடுபடவும் தாகமாய் இருந் தார் நமது அன்பர். அத்தாகத்தைத் தீர்க்க, பிதாவினால் குறிக்கப்பட்ட சகலமும் அணுப் பிசகாமல் நிறைவேறி விட்டன. அதனால்: "எல்லாம் நிறைவேறிற்று" என முடிவுரை கூறுகிறார் தேவசுதன். பிதாவின் சித்தம் நிறைவேறியது ; தீர்க்கதரிசனங்கள் நிறைவேறின; சேசுவின் ஆசையும் நிறைவேறியது. சகலமும் சம்பூரணமாய் முடிவுற்றது கண்டு : "பிதாவே! என் ஆத்துமத்தை உமது கரங்களில் ஒப்படைக்கிறேன்" என்று உரத்த சத்தமாய்க் கூறி, தலை சாய்த்து உயிர்விடுகிறார்.
ஜீவிய ஊற்றான தேவசுதன், மனிதர்கள் ஜீவிப்பதற்காகத் தமது ஜீவனைப் பலியாக்கி மரிக் கிறார். இந்த அற்புத மரணத்தின் முன்பாக, அவரை நேசிக்கும் விதமாக, நாம் நம் சகல பாவங் களையும் பாவ சந்தர்ப்பங்களையும் விட்டுவிட்டு, உத்தம மனஸ்தாபத்தோடும், இனி பாவம் செய் வதில்லை என்ற உறுதியான பிரதிக்கினையோடும், பரிகாரங்களின் மூலம் அவரது நேச இருதயத் திற்கு ஆறுதலளிக்கும் கருத்தோடும், மவுனமாய் முழந்தாளிட்டு, நம் அன்பர் அறையுண்டிருக்கும் திருச்சிலுவையையும், அவரது பொற்பாதங்களையும் பக்தியுடன் முத்தி செய்வோமாக!