அர்ச். பிரிட்ஜித்தம்மாளுக்கு சேசுவால் வெளிப்படுத்தப் பட்ட இந்தக் காட்சியை அவள் தனது “வெளிப்பாடுகளில்” பதிவு செய்திருக்கிறாள்:
“சர்வேசுரன் பேசுகிறார்: “நான் நீதியாசனத்தில் அமர்ந் திருக்க, ஒரு மனிதன் தீர்ப்பிற்காக என் முன் வந்தான். பிதா வின் குரல் முழங்கியது, அவர் அவனிடம்: “நீ பிறவா திருந்தால் நலமாயிருந்திருக்கும்!” என்றார்.”
அவனைப் படைத்தது பற்றிக் கடவுள் மனம் வருந்தி னார் என்பது இதன் பொருளல்ல, மாறாக, அவன் மீது பரிதாபப்பட்டே இவ்வார்த்தைகளை அவர் கூறினார். இதற்குப் பதில் சொல்லும் விதமாக தேவ சுதனின் குரல் ஒலித்தது: “நான் உனக்காக என் இரத்தத்தைச் சிந்தினேன்; ஒரு கடுமையான தண்டனையை உனக்காக நான் ஏற்றுக் கொண்டேன். ஆனால் என் திரு இரத்தத்திடமிருந்து நீ உன்னை முழுவதுமாக அந்நியமாக்கிக் கொண்டாய். அதற்கும் உனக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் செய்து விட்டாய்!”
அடுத்ததாக இஸ்பிரீத்துசாந்துவானவர் பேசினார்: “அவனது இருதயத்தில் கொஞ்சமாவது கனிவோ, தேவ சிநேகமோ, பிறர்சிநேகமோ இருக்குமா என்று நான் அந்த இருதயத்தின் மூலை முடுக்கெல்லாம் தேடிப் பார்த்தேன். ஆனால் அவனோ பனிக்கட்டி போலக் குளிர்ச்சியாகவும், கல்லைப் போல கடினமாகவும் இருக்கிறான். அவனைப் பற்றி எனக்கு இப்போது எந்தக் கவலையுமில்லை!”
“அங்கே மூன்று கடவுள்கள் இருந்தார்கள் என்பது போல மூன்று குரல்கள் ஒலித்தன. ஆனால், என் மணவாளியான உன் (அர்ச். பிரிட்ஜத்தம்மாள்) நிமித்தமாகவே எங்கள் குரல்கள் வெளியே கேட்கும் விதமாக ஒலித்தன. ஏனெனில் அப்படி இல்லையென்றால், இந்தப் பரம இரகசியத்தை உன்னால் புரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கும்.''
அதன்பின் பிதா சுதன் இஸ்பிரீத்துசாந்து ஆகிய மூவரின் குரல்களும் உடனே ஒரே குரலாக மாறி இடியாக முழங்கின. “எந்த விதத்திலும் நீ பரலோக இராச்சியத்திற்குத் தகுதியற் றவன்” என்ற அதிபயங்கர வார்த்தைகள் சொல்லப்பட்டன.
கிருபைதயாபத்தின் மாதா மவுனமாகவே இருக்கிறார்கள். அவர்களுடைய இரக்கம் இப்போது வெளிப்படாதிருப் பதைக் காண்கிறேன். ஏனெனில் தீர்ப்புக்காகக் காத்திருப் பவன் நேசத் தாயாரின் இரக்கத்திற்கு எந்த விதத்திலும் தகுதியற்றவனாக இருக்கிறான்.
இதோ, சகல அர்ச்சியசிஷ்டவர்களும் ஒரே குரலாகக் கூக்குரலிட்டு இப்படிச் சொல்கிறார்கள்: “உமது இராச்சியத் திலிருந்தும், உமது பேரின்பத்திலிருந்தும் நித்தியத்திற்கும் விலக்கப்படுவது அவனுக்குரிய தேவ நீதியாக இருக்கிறது” என்று! உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள பரிசுத்த ஆன்மாக்கள் அனைவரும் அடுத்ததாக, “உன் பாவங்களைத் தண்டிக்கப் போதுமான கடுமையுள்ள தண்டனை எதுவும் எங்களிடம் இல்லை. நீ அதிகப் பெரிதான வாதைகளை அனுபவிக்க வேண்டியவனாக இருக்கிறாய். அதன் காரணமாக, நீ எங்க ளிட மிருந்து பிரிக்கப்பட்டவனாக இருப்பாய்'' என்கிறார்கள்.
அதன்பின், இதோ, இறுதியாக, தீர்ப்பிடப்பட வேண்டியவனோ, கடுந்திகிலூட்டும் குரலில் இப்படிச் சொல்லிப் புலம்புகிறான்: “ஐயோ! ஐயோ! என் தாயின் உதரத்தில் நான் உருவான நாள் சபிக்கப்படுவதாக!”
அவனே இரண்டாவது முறையாகக் கூக்குரலிட்டு, “என் ஆன்மா என் சரீரத்தோடு இணைக்கப்பட்ட அந்தக் கணம் சபிக்கப் படுவதாக! எனக்கு ஒரு சரீரத்தையும் ஆத்துமத்தையும் தந்தவர் சபிக்கப்படுவாராக!” என்று அலறுகிறான்.
மீண்டும் மூன்றாம் முறையாக, அவன் கூச்சலிட்டு, “என் தாயின் வயிற்றினின்று நான் உயிருள்ளவனாகப் பிறந்த மணி நேரம் சபிக்கப்படுவதாக!” என்கிறான்.
இதோ, அடுத்ததாக, நரகத்திலிருந்து கடும் அச்ச மூட்டும் மூன்று குரல்கள் புறப்பட்டு வருகின்றன. அவை அவனிடம்: “சபிக்கப்பட்ட ஆன்மாவே, முடிவில்லாத மரணத்தை நோக்கி, உருகிய பித்தளையைப் போல இறங்கி, நீ எங்களிடம் வருவாயாக” என்கின்றன.
அவை இரண்டாவதாக கூக்குரலிட்டு, “எங்கள் கெடுமதிக்குத் திறப்பாக, முற்றிலும் வெறுமையாக இருக்கிற சபிக்கப்பட்ட ஆத்துமமே! எங்களிடம் வா! இங்கே (நரகத்தில்) உன்னைத் தன் சொந்த வேதனையாலும், கெட்ட புத்தியாலும் நிரப்பாதவன் ஒருவன் கூட எங்களில் இருக்க மாட்டான்” என்கின்றன.
மூன்றாவது முறையும் அவை கூச்சலிட்டு, “மூழ்குவதும், தொடர்ந்து அமிழ்ந்து கொண்டேயிருப் பதும், ஆனாலும் தான் ஓய்வெடுக்கும்படி அடிப்பகுதியை ஒருபோதும் தொடாததுமான கல்லைப் போல பாரமாயிருக்கிற சபிக்கப்பட்ட ஆத்துமமே, வா! நீ பாதாளத்தினுள் எங்களை விட அதிக ஆழத்திற்குள் இறங்குவாய். இப்பாதாளத்தின் மிகக் கீழான பகுதியைச் சென்றடையும் வரை, நீ ஒரே நிலையில் ஒருபோதும் நிற்க மாட்டாய்” என்கின்றன.”
இந்த பயங்கரத்துக்குரிய நிர்ப்பாக்கிய ஆன்மாவின் நிலையில் ஒவ்வொருவனும் தன்னையே அடிக்கடி வைத்து சிந்திப்பதும், இந்த நிலையை அடைவதை எப்பாடுபட்டாவது விலக்க அடிக்கடி பிரதிக்கினை செய்வதும் ஆத்துமத்திற்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
உலகில் இருக்கும் வரை, பரலோக இராச்சியத்தை மறந்து, மனிதன் உலகப் பெருமையையும், செல்வத்தையும், சுக வாழ்வையும், பட்டம் பதவிகளையும் தேடியலைகிறான்.
ஆனால், அவனே தினமும் சில நிமிடங்களை ஒதுக்கி, தன் மரணத்திற்குப் பிறகு தான் தமத்திரித்துவ சர்வேசுரனாலும், கிருபைதயாபத்தின் மாதாவாலும், சகல சம்மனசுக்கள், அர்ச்சியசிஷ்டவர்களாலும், உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள பரிசுத்த ஆத்துமங்களாலும் வெறுத்து ஒதுக்கப்படுவதும், நரக அரூபிகளால் கெடுமதியோடு வரவேற்கப்படுவதும் எத்துணை பயங்கரமானது என்பதை ஆழ்ந்து தியானிக்க முன்வர வேண்டும்.
உங்கள் ஆன்ம சத்துருக்களோடு துணிவோடு போராடுங்கள்! ஆத்துமத்தைக் காத்துக்கொள்ள எதையும் இழந்து போக ஆயத்தமாயிருங்கள்! எதற்காகவும் உங்கள் நேச ஆண்டவரையும், உங்கள் பரிசுத்த மாதாவையும் இழக்காதிருக்கப் போராடுங்கள். சேசுவும், மாதாவும் உங்கள் முயற்சிகளை ஆசீர்வதிப்பார்களாக!