ஓசே ஆகமம்

அதிகாரம் 01

1 யூதாவின் அரசர்களாகிய ஓசியாஸ், யோவத்தாம், ஆக்காஸ், எசெக்கியாஸ் ஆகியோரின் நாட்களிலும், இஸ்ராயேலின் அரசனாகிய யோவாஸ் என்பவனின் மகன் யெரொபோவாமின் நாட்களிலும் பேயேரி என்பவனின் மகனான ஓசேயுக்கு அருளப்பட்ட ஆண்டவரின் திருவாக்கு இதுவே.

2 ஆண்டவர் ஓசேயின் வாயிலாக முதலில் பேசிய போது, ஆண்டவர் ஓசேயை நோக்கி, "நீ போய் வேசிப்பெண் ஒருத்தியை மணந்து, வேசிப்பிள்ளைகளைப் பெற்றெடு; ஏனெனில் நாடு ஆண்டவரை விட்டு விலகி வேசித்தனத்தில் மூழ்கியுள்ளது" என்றார்.

3 அவ்வாறே அவர் போய், தேபெலாயிம் என்பவனின் மகள் கோமேர் என்பவளை மணந்து கொண்டார்; அவள் கருவுற்று அவருக்கொரு மகனைப் பெற்றாள்.

4 அப்போது ஆண்டவர் ஓசேயைப் பார்த்து, "குழந்தைக்கு எஸ்ராயேல் என்று பெயரிடு; ஏனெனில், இன்னும் சிறிது காலத்தில், எஸ்ராயேலின் இரத்தப் பழிக்காக ஜேயு குடும்பத்தைப் பழிவாங்குவோம்; மேலும் இஸ்ராயேலின் அரசுக்கு ஒரு முடிவுகட்டுவோம்.;

5 அந்நாளில், எஸ்ராயேல் பள்ளத்தாக்கில் இஸ்ராயேலின் வில்லை முறித்துப் போடுவோம்" என்றார்.

6 கோமேர் மறுபடியும் கருவுற்றுப் பெண்குழந்தை ஒன்றைப் பெற்றாள்; அப்போது ஆண்டவர் அவரைப் பார்த்து, "இவளுக்கு 'அன்பு பெறாதவள்' என்று பெயரிடு; ஏனெனில், இஸ்ராயேல் வீட்டின் மீது இனி மேல் அன்பு காட்டவே மாட்டோம்.

7 ஆனால் யூதா வீட்டின் மீது அன்பு காட்டி, அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர் பேரால் அவர்களை மீட்போம்; வில், வாள், போர், குதிரைகள் கொண்டு நாம் அவர்களை மீட்கப்போவதில்லை" என்றார்.

8 'அன்பு பெறாதவள்' பால் மறந்த பின்பு கோமேர் திரும்பவும் கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றாள்;

9 அப்போது ஆண்டவர் ஓசேயைப் பார்த்து, "இவனுக்கு 'எம் மக்கள் அல்லர்' என்று பெயரிடு; ஏனெனில், நீங்கள் எம் மக்களல்லீர், நாமும் உங்கள் கடவுளல்லோம்" என்றார்.

10 ஆயினும் இஸ்ராயேல் மக்களின் எண்ணிக்கை, அளக்கவோ எண்ணவோ இயலாத கடற்கரை மணலுக்கு ஒப்பாகும்; "நீங்கள் எம் மக்களல்லீர்" என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டதற்கு மாறாக, "உயிருள்ள கடவுளின் மக்கள்" என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.

11 யூதாவின் மக்களும் இஸ்ராயேல் மக்களும் ஒன்றாகக் கூட்டிச் சேர்க்கப்படுவர்; தங்களுக்கென ஒரே தலைவனை ஏற்படுத்திக் கொண்டு நாடு பிடிக்க எழும்புவார்கள்; அதுவே இஸ்ராயேலின் மாபெரும் நாள்.

அதிகாரம் 02

1 எம் மக்கள்" என்று உன் சகோதரர்க்குச் சொல், "அன்பு பெற்றவள்" என்று உன் சகோதரிக்குச் சொல்.

2 வழக்குத் தொடுங்கள், உங்கள் அன்னையோடு வழக்காடுங்கள்- அவள் எமக்கு மனைவியுமல்லள், நாம் அவளுக்கு கணவனுமல்லோம்- அவள் வேசித்தனத்தின் குறிகளைத் தன் முகத்தினின்றும், விபசாரக் குறிகளைத் தன் கொங்கைகளினின்றும், அகற்றட்டும்.

3 இல்லையேல் அவளை நிருவாணமாய்த் துகிலுரிந்து, பிறந்த நாளின் கோலமாய் அவளை ஆக்குவோம்; பாலை நிலம் போலச் செய்து, உலர்ந்த தரை போல விட்டுத் தாகத்தினால் அவளைச் சாகடிப்போம்.

4 அவள் பிள்ளைகள் மேலும் நாம் அன்பு கொள்ளோம், ஏனெனில், அவர்கள் வேசித்தனத்தில் பிறந்தவர்கள்.

5 அவர்களைப் பெற்றவள் வேசியாய் இருந்தான், அவர்களைக் கருத்தாங்கியவள் ஒழுக்கம் கெட்டு நடந்தாள்; 'உணவும் நீரும், மயிராடையும் சணலாடையும், எண்ணெயும் பானமும் எனக்குத் தரும் என் காதலர்களோடே போவேன்' என்றாள்.

6 ஆகவே உன் வழியில் முள்ளடைத்து மறிப்போம்; அவள் பாதையில் சுவரெழுப்பித் தடுப்போம்; வழி கண்டு பிடித்து அவளால் போக முடியாது.

7 தன் காதலர்களைத் தொடர்ந்து ஓடுவாள், ஆயினும் அவள் அவர்களிடம் போய்ச் சேர மாட்டாள்; அவர்களை அவள் தேடித்திரிவாள், ஆயினும் அவர்களைக் காணமாட்டாள்; அப்போது அவள், 'என் முதல் கணவனிடம் நான் திரும்பிப் போவேன்; இப்போது இருப்பதை விட அப்போது மகிழ்ச்சியாய் இருந்தேன்' என்று சொல்லுவாள்.

8 நாமே அவளுக்குக் கோதுமையும் திராட்சை இரசமும் எண்ணெயும் கொடுத்து, வெள்ளியும் பொன்னும் அவளுக்குப் பெருகப்பண்ணினோம் என்பதை அவள் அறியவில்லை; அந்தப் பொன், வெள்ளியைக் கொண்டே பாகால் சிலை செய்தார்கள்.

9 ஆகையால் நாம் கொடுத்த கோதுமையை அதன் காலத்திலும், நாம் தந்த இரசத்தை அதன் பருவத்திலும் திரும்ப எடுத்து விடுவோம்; அவளது அம்மணத்தை மறைத்து மூடியிருந்த நமது மயிராடையும் சணலாடையும் உரிந்து விடுவோம்.

10 இப்போது அவளுடைய காதலர் கண் முன் ஆடைகளை உரிந்து அவளை நாணச் செய்வோம்; நம்முடைய கைகளிலிருந்து அவளை விடுதலை செய்பவன் எவனுமில்லை.

11 அவளது எல்லாக் கொண்டாட்டத்தையும் விழாக்களையும், அமாவாசைகளையும் ஓய்வு நாட்களையும், அவளுடைய திருநாள் அனைத்தையுமே நாம் நிறுத்தி விடுவோம்.

12 இவை என்னுடைய உடைமைகள், என் காதலர் எனக்கு இவற்றைக் கொடுத்தார்கள்' என்று அவள் சொல்லிக் கொண்ட திராட்சைத் தோட்டங்கள், அத்திமரங்கள் அனைத்தையும் பழாக்குவோம்; அவற்றை நாம் காடாக்கி விடுவோம்; காட்டு மிருகங்கள் அவற்றைப் பாழ்படுத்தும்.

13 பாகால்களின் விழாக்களை அவள் கொண்டாடி, அவற்றுக்கு நறுமணப் பொருட்கள் கொளுத்தி, வளையல்களாலும் நகைகளாலும் தன்னை அணி செய்து, தன் காதலர்கள் பின்னாலேயே போய் நம்மை மறந்ததற்கு அவளைப் பழிவாங்குவோம், என்கிறார் ஆண்டவர்.

14 ஆதலால், இதோ, நாம் அவளை நயமாகக் கவர்ந்திழுத்துப் பாலை நிலத்துக்குக் கூட்டிப் போய் அவள் நெஞ்சோடு பேசுவோம்.

15 நாம் அவளுடைய திராட்சைத் தோட்டங்களை அவளுக்குத் திரும்பக் கொடுப்போம்; ஆக்கோர் என்கிற பள்ளத்தாக்கை நம்பிக்கையின் வாயிலாய் ஆக்குவோம்; அப்பொழுது அவள் தன் இளமையின் நாட்களிலும், எகிப்து நாட்டினின்று வெளியேறிய காலத்திலும் செய்தது போல் அன்புக்கன்பு செய்வாள்.

16 அந்நாளில்- 'என் கணவன்' என நம்மை அவள் சொல்லுவாள், 'என் பாகாலே' எனச் சொல்லமாட்டாள், என்கிறார் ஆண்டவர்

17 அவளுடைய வாயினின்று பாகால்களின் பெயர்களை எடுத்து விடுவோம், இனி மேல் அவர்களைப் பெயரிட்டு அழைக்கமாட்டாள்.

18 அந்நாளில்- வயல்வெளி மிருகங்களோடும், வானத்துப் பறவைகளோடும் நிலத்தில் ஊர்வனவற்றோடும் அவளுக்காக நாம் ஓர் உடன்படிக்கை செய்வோம்; வில்லையும் வாளையும் போரையும் நாட்டினின்றே நாம் அகற்றிவிட்டு, அவளை அச்சமின்றி ஒய்ந்திருக்கச் செய்திடுவோம்.

19 முடிவில்லாக் காலத்திற்கும் உன்னை மணமுடிப்போம், நேர்மையிலும் நீதியிலும் நிலையான அன்பிலும், இரக்கத்திலும் உன்னை நாம் திருமணம் செய்து கொள்வோம்.

20 பிரமாணிக்கத்துடன் நாம் உன்னை மணந்து கொள்வோம், நாமே ஆண்டவர் என்பதை நீயும் அறிந்து கொள்வாய்.

21 அந்நாளில்- நாம் வானத்தின் மன்றாட்டை ஏற்போம், அது நிலத்தின் கோரிக்கையைக் கேட்கும்;

22 நிலமானது கோதுமை, திராட்சை இரசம், எண்ணெய் இவற்றின் மன்றாட்டை ஏற்கும், என்கிறார் ஆண்டவர்.

23 நிலத்தில் நமக்காக அவளை விதைப்போல விதைப்போம். 'அன்பு பெறாதவள்' மேல் நாம் அன்பு கூருவோம்.

24 'எம் மக்களல்லர்' என்பவனை நோக்கி 'எம் மக்கள்' என்போம்; அவனும் 'நீரே என் கடவுள்' என்பான்."

அதிகாரம் 03

1 ஆண்டவர் மீண்டும் என்னிடம் சொன்னதாவது: "வேற்றுத் தெய்வங்கள் மேல் பற்றுக்கொண்டு, உலர்ந்த திராட்சை அடைகளை விரும்புகின்ற இஸ்ராயேல் மக்கள் மேல் ஆண்டவர் எவ்வாறு அன்பு கொண்டுள்ளாரோ, அவ்வாறே வேறொருவனால் காதலிக்கப்பட்டவளும், விபசாரியுமான ஒருத்தி மேல் நீ காதல் கொள்."

2 அவளை நான் பதினைந்து வெள்ளிக்காசும், ஒன்றரைக் கலம் வாற்கோதுமையும் கொடுத்து எனக்கென்று வாங்கிக் கொண்டேன்.

3 பின்பு அவளை நோக்கி, "நீ வேசியாய்த் திரியாமலும், வேறொருவனுக்கும் உடைமையாகாமலும், நெடுநாள் எனக்கே உரியவளாக வாழவேண்டும். நானும் அவ்வாறே வாழ்வேன்" என்றேன்.

4 ஏனெனில் இஸ்ராயேல் மக்கள் நெடுநாளைக்கு அரசனும் தலைவனுமின்றி, பலியும் பீடமுமின்றி, அர்ச்சகரும் ஆசாரியனுமின்றி இருப்பார்கள்

5 அதற்குப் பிறகு, இஸ்ராயேல் மக்கள் மனந்திரும்பித் தங்கள் கடவுளாகிய ஆண்டவரையும், தங்கள் அரசனாகிய தாவீதையும் தேடுவார்கள்; இறுதி நாட்களில் ஆண்டவரையும், அவர் நன்மைகளையும் நாடி நடுக்கத்தோடு அணுகி வருவார்கள்.

அதிகாரம் 04

1 இஸ்ராயேல் மக்களே, ஆண்டவருடைய வாக்கைக் கேளுங்கள்; நாட்டுக் குடிகளோடு ஆண்டவர் வழக்காடப் போகிறார்: உண்மையோ பரிவோ நாட்டில் இல்லை, கடவுளை அறியும் அறிவு கூட இல்லை.

2 பொய்யாணை, புளுகு, கொலை, களவு, விபசாரம் ஆகியவை நாட்டில் மலிந்துள்ளன; இரத்தப் பழிமேல் இரத்தப்பழி குவிகின்றது.

3 ஆதலால், நாடு புலம்புகிறது, அதில் வாழ்கின்ற உயிர்கள் யாவும், வயல் வெளி மிருகங்களும் வானத்துப் பறவைகளும் ஒருங்கே சோர்வடைந்திருக்கின்றன; கடல் வாழ் மீன்களும் அழிந்து போகின்றன.

4 ஆயினும் எவனும் வழக்காட வேண்டா, எவனும் குற்றஞ்சாட்ட வேண்டா; அர்ச்சகனே, உன்னைத்தான் குற்றஞ்சாட்டுகிறோம்.

5 பகலிலே நீ இடறி விழுகிறாய், இரவில் தீர்க்கத்தரிசியும் உன்னோடு இடறி விழுகிறான்; உன் தாயை நாம் அழித்து விடுவோம்.

6 அறிவின்மையால் நம் மக்கள் அழிகிறார்கள்; நீ அறிவைப் புறக்கணித்தது போல, நீ நமக்கு அர்ச்சகனாய் இராதபடி நாமும் உன்னைப் புறக்கணிப்போம். உன் கடவுளின் திருச்சட்டத்தை நீ மறந்து விட்டதால் நாமும் உம் மக்களை மறந்து விடுவோம்.

7 எவ்வளவுக்கு அவர்கள் பலுகினார்களோ, அவ்வளவுக்கு அவர்கள் நமக்கு எதிராகப் பாவம் செய்தனர்; அவர்களது மகிமையை மானக் கேடாய் மாற்றி விடுவோம்.

8 நம் மக்களின் பாவங்களால் இவர்கள் வயிறு வளர்க்கிறார்கள், அவர்கள் அக்கிரமம் செய்யும்படி இவர்கள் ஏங்குகிறார்கள்.

9 அர்ச்சகன் எவ்வழியோ, அவ்வழியே மக்களும்; அவர்களுடைய நெறிகளுக்காக அவர்களைத் தண்டிப்போம், அவர்களுடைய செயல்களுக்கேற்ப பலனளிப்போம்.

10 அவர்கள் சாப்பிடுவார்கள், ஆனால் நிறைவடைய மாட்டார்கள், வேசித்தனம் செய்தாலும் அவர்கள் பலுகமாட்டார்கள்; ஏனெனில் வேசித்தனத்தில் ஈடுபடுவதற்காக ஆண்டவரை அவர்கள் கைவிட்டார்கள்.

11 திராட்சை இரசம், புத்தம் புதிய திராட்சை இரசம் அறிவை மழுங்கச் செய்கின்றது.

12 நம் மக்கள் மரக்கட்டையிடம் குறி கேட்கின்றனர், அவர்கள் கோல் மறைமொழிகள் கூறிடும்! விபசாரப் புத்தி அவர்களை நெறிதவறச் செய்தது; விபசாரம் செய்வதற்காக அவர்கள் தங்கள் கடவுளை விட்டு அகன்றனர்.

13 மலைகளின் உச்சியில் அவர்கள் பலியிடுகிறார்கள், குன்றுகளின் மேலும், குளிர்ந்த நிழல் தருவதால் கருவாலி மரம், புன்னை மரம், தேவதாரு மரம் இவற்றின் கீழும் பலி செலுத்துகிறார்கள். ஆதலால் உங்கள் புதல்வியர் வேசித்தனம் செய்கிறார்கள், உங்கள் மனைவியரும் விபசாரம் புரிகின்றார்கள்.

14 உங்கள் புதல்வியர் வேசித்தனம் செய்யினும், உங்கள் மனைவியர் விபசாரம் புரிந்தாலும் நாம் அவர்களைத் தண்டிக்கமாட்டோம்; ஏனெனில் ஆண்களே வேசிகளோடு திரிகிறார்கள்; தேவதாசிகளோடு சேர்ந்து பலியிடுகிறார்கள்; இவ்வாறு அறிவற்ற அம்மக்கள் அழிந்து போகிறார்கள்.

15 இஸ்ராயேலே, நீ விபசாரியாய்ப் போனாலும் யூதாவாகிலும் குற்றமற்றவளாய் இருக்கட்டும்; கல்கலாவுக்குப் போகாதீர்கள், பெத்தாவென் என்னுமிடத்திற்கும் செல்ல வேண்டா; "ஆண்டவர் மேல் ஆணை" என்று நீங்கள் ஆணையிடவும் வேண்டா.

16 கட்டுக்கடங்காத இளம் பசுபோல் இஸ்ராயேல் மக்கள் பிடிவாதமாய் இருக்க, அவர்களை ஆண்டவர் பரந்த புல் வெளியில் ஆட்டுக் குட்டியைப் போல மேய்க்க முடியுமா?

17 எப்பிராயீம் சிலைகளோடு சேர்ந்துகொண்டான், அவனை விட்டு விலகியிரு.

18 குடிவெறியர் கூட்டமாகிய அவர்கள் வேசித்தனத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள்; தங்களுடைய மகிமையைக் காட்டிலும் மானக்கேட்டையே மிகுதியாய் விரும்புகிறார்கள்;

19 காற்று அவர்களைத் தன் இறக்கைகளில் மூடிக் கொண்டது, தாங்கள் இட்ட பலிகளைக் குறித்துத் தலை நாணுவர்.

அதிகாரம் 05

1 அர்ச்சகர்களே, இதைக் கேளுங்கள், இஸ்ராயேல் வீட்டாரே, கவனியுங்கள், அரச குடும்பத்தினரே, செவி கொடுங்கள்; உங்களுக்கு எதிராகவே தண்டனைத் தீர்ப்பு தரப்படுகிறது: ஏனெனில் மிஸ்பாவில் நீங்கள் கண்ணியாகவும், தாபேரில் விரிக்கப்பட்ட வலையாகவும் இருந்திருக்கிறீர்கள்.

2 வஞ்சகப் படுகுழியில் அவர்கள் சிக்கிக் கொண்டனர், ஆதலால் அவர்கள் அனைவரையும் தண்டிக்கப் போகிறோம்.

3 எப்பிராயீமை நாம் அறிந்திருக்கிறோம், இஸ்ராயேல் நமக்குத் தெரியாததன்று; ஏனெனில் எப்பிராயீமே, நீ வேசித்தனத்தில் ஈடுபட்டுள்ளாய்; இஸ்ராயேல் மக்கள் தீட்டுப்பட்டுள்ளனர்.

4 அவர்களுடைய கடவுளிடம் திரும்பி வருவதற்கு அவர்கள் செயல்கள் அவர்களை விடுவதில்லை; ஏனெனில் வேசித்தனப் புத்தி அவர்களை ஆட்கொள்கிறது, ஆண்டவரைப் பற்றிய அறிவு அவர்களுக்கில்லை.

5 இஸ்ராயேலின் இறுமாப்பே எதிர்சாட்சி சொல்லுகிறது; எப்பிராயீம் தன் அக்கிரமத்தில் இடறி விழுகிறான்;

6 யூதாவும் அவர்களோடு தடுக்கி வீழ்கிறான். தங்கள் ஆடுமாடுகளோடு அவர்கள் ஆண்டவரைத் தேடிப் போவார்கள், ஆயினும் அவரைக் கண்டடைய மாட்டார்கள்; ஏனெனில் அவர்களை விட்டு அவர் விலகி விட்டார்.

7 ஆண்டவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தனர்; ஏனெனில் விபசாரத்தால் அந்நிய பிள்ளைகளைப் பெற்றார்கள். இப்பொழுது அவர்களையும், அவர்கள் நிலங்களையும் அமாவாசை அடியோடு விழுங்கி விடும்.

8 காபாவிலே கொம்பு ஊதுங்கள், ராமாவிலே எக்காளம் ஊதுங்கள்; பெத்தாவானில் ஓலமிடுங்கள், பென்யமீனை எச்சரிக்கைப் படுத்துங்கள்.

9 தண்டனையின் நாளில் எப்பிராயீம் பாழ் வெளியாகும், இஸ்ராயேலின் கோத்திரங்களுக்கு உறுதியாய் நேரிடப்போவதையே அறிவிக்கிறோம்.

10 எல்லைக் கற்களைத் தள்ளிப் போடுகிறவர்களைப் போல யூதாவின் தலைவர்கள் ஆகிவிட்டனர்; வெள்ளப் பெருக்கைப் போல் அவர்கள் மேல் நமது கோபத்தை நாம் கொட்டித் தீர்ப்போம்.

11 எப்பிராயீம் ஒடுக்கப்படுகிறான், தண்டனைத் தீர்ப்பால் நொறுக்கப்படுகிறான்; ஏனெனில் வீணானதைப் பின் தொடர்வதில் பிடிவாதமாய்க் கருத்தூன்றியிருந்தான்.

12 ஆதலால் எப்பிராயீமுக்கு நாம் அரிபுழு போலும், யூதாவின் வீட்டுக்கு உளுப்புப் பூச்சி போலும் இருப்போம்.

13 எப்பிராயீம் தன் பிணியைக் கண்டுகொண்டான், யூதாவும் தன் காயத்தை உணரலானான்; ஆதலால் எப்பிராயீம் அசீரியாவில் புகலிடம் தேடினான், தன்னைக் காக்கும்படி யூதா பேரரசனைக் கேட்டுக் கொண்டான். ஆனால் உங்களை நலமாக்கவோ, உங்கள் காயங்களை ஆற்றவோ அவனால் இயலாது.

14 எப்பிராயீமுக்கு நாம் ஒரு சிங்கத்தைப் போலும், யூதாவின் வீட்டாருக்குச் சிங்கக் குட்டியைப் போலும் இருப்போம்; நாமே போவோம், அவர்களைக் கவ்விப் பிடிப்போம், தூக்கிக் கொண்டு ஓடுவோம்; விடுவிப்பவன் எவனுமிரான்.

15 தங்கள் குற்றத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டு நமது முகத்தை அவர்கள் தேடும் வரை, நாம் நம்முடைய இடத்திற்கே மறுபடியும் திரும்பிப் போய் அவர்களுக்காகக் காத்திருப்போம்.

அதிகாரம் 06

1 தங்கள் துன்பத்திலே அவர்கள் நம்மைத் தேடுவார்கள். வாருங்கள் ஆண்டவரிடம் திரும்புவோம்;

2 ஏனெனில், நம்மைக் காயப்படுத்தியவர் அவரே, அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்து நொறுக்கியவர் அவரே, அவரே நம் காயங்களைக் கட்டுவார்.

3 இரண்டு நாளைக்குப் பிறகு நமக்கு அவர் புத்துயிரூட்டுவார், மூன்றாம் நாள் அவர் நம்மை எழுப்பி விடுவார்; அதன் பின் அவர் முன்னிலையில் நாம் வாழ்ந்திடுவோம். ஆண்டவரைப் பற்றி அறிந்திடுவோம், அவரைப் பற்றி அறிய முனைந்திடுவோம்; அவருடைய வருகை விடி வெள்ளிப் போலத் திண்ணமானது, மழை போலவும், நிலத்தை நனைக்கும் இளவேனிற்கால மாரி போலவும் அவர் நம்மிடம் வருவார்" என்றார்கள்.

4 எப்பிராயீமே, உன்னை நாம் என்ன செய்வோம்? யூதாவே, உன்னை நாம் என்ன செய்வோம்? விடியற்காலையின் மேகம் போலும், கதிரவனைக் கண்ட பனி போலும் உங்கள் அன்பு இருக்கிறதே!

5 ஆதலால் தான் இறைவாக்கினர்களைக் கொண்டு நாம் அவர்களை வெட்டி வீழ்த்தினோம்; நமது வாய் மொழிகளால் அவர்களைக் கொன்றொழித்தோம், நமது தீர்ப்பு வெட்ட வெளிச்சம் போல வெளிப்படுகிறது.

6 ஏனெனில், நாம் விரும்புவது பலியை அன்று, அன்பையே நாம் விரும்புகிறோம்; தகனப் பலிகள் நமக்கு வேண்டியதில்லை, கடவுளை அறியும் அறிவே நாம் விரும்புகிறோம்.

7 அவர்களோ ஆதாமைப் போல் உடன்படிக்கையை மீறினர், அதனால் நமக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தனர்.

8 காலாத் கொடியவர்கள் நிறைந்த பட்டணம், இரத்தக் கறை அங்கே படிந்துள்ளது.

9 வழிப்போக்கருக்காகக் காத்திருக்கும் கள்ளர் போல் அர்ச்சகர்களின் கூட்டம் சிக்கேம் வழியில் காத்திருந்து கொலை செய்கிறது; கொடுமையன்றோ அவர்கள் செய்வது!

10 குலை நடுங்கும் செயலொன்றை நாம் இஸ்ராயேல் வீட்டாரிடம் கண்டோம்; அங்கே எப்பிராயீமின் வேசித்தனம் கண்டோம், இஸ்ராயேல் தீட்டுப்பட்டிருந்தது.

11 யூதாவே, உனக்கும் அறுவடைக்காலம் குறிக்கப்பட்டுள்ளது, நம் மக்களை நன்னிலைக்கு மறுபடியும் கொணரும் போது அக்காலம் வரும்.

அதிகாரம் 07

1 நாம் இஸ்ராயேலைக் குணமாக்க வரும் போது, எப்பிராயீம் அக்கிரமம் வெளியாகும், சமாரியாவின் தீச்செயல்கள் புலனாகும். ஏனெனில் அவர்கள் வஞ்சகம் செய்கிறார்கள், திருடர்கள் உள்ளே நுழைகிறார்கள், கொள்ளைக் கூட்டம் வெளியே சூறையாடுகின்றது.

2 அவர்களுடைய தீச்செயல்களை எல்லாம் நாம் அறிந்திருக்கிறோம் என அவர்கள் நினைப்பதில்லை; இப்பொழுது அவர்கள் செயல்கள் அவர்களை வளைத்துக் கொண்டன, அவை நம் கண்முன் இருக்கின்றன.

3 இஸ்ராயேலில் சதித்திட்டம் மலிந்துள்ளது: தங்கள் தீமையினால் அரசனையும், பொய்களினால் தலைவர்களையும் மகிழ்வித்தனர்; அவர்கள் அனைவரும் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

4 மாவைப் பிசைந்தது முதல் புளிப்பேறும் வரையில் அப்பம் சுடுபவனால் மூட்டப்படாத அடுப்புக் கொத்தவர்கள்.

5 நம் அரசனின் நாளில், தலைவர்கள் குடிவெறியால் போதையேறிக் கிடந்தனர்; அரசனும் கயவர்களோடு சேர்ந்து கொண்டான்.

6 சதித்திட்டத்தால் அவர்கள் உள்ளம் அடுப்பைப் போல் எரிகின்றது. இரவெல்லாம் அவர்களது கோபத்தீ கனன்று கொண்டிருந்தது, காலையில் தீக்கொழுந்து போலச் சுடர் விட்டெரியும்.

7 அவர்கள் எல்லாரும் அடுப்பைப் போல் எரிகிறார்கள், தங்களை ஆளுகிறவர்களை அவர்கள் விழுங்குகிறார்கள்; அவர்களின் அரசர்கள் யாவரும் வீழ்ந்துபட்டனர், அவர்களுள் எவனுமே நம்மை நோக்கிக் கூப்பிடவில்லை.

8 எப்பிராயீம் புறவினத்தாருடன் கலந்து வாழ்கிறான், எப்பிராயீம் திருப்பிப் போடாத தோசையானான்.

9 அவனுடைய ஆற்றலை அந்நியர்கள் உறிஞ்சி விட்டனர், ஆயினும் அதை அவன் உணரவில்லை. அவனுக்கு ஊடு நரை விழுந்துள்ளது, ஆயினும் அதை அவன் அறியவில்லை.

10 இஸ்ராயேலின் இறுமாப்பே எதிர்சாட்சி சொல்லியும், தங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பவில்லை. இப்படியெல்லாம் இருந்தும் அவர்கள் அவரைத் தேடவில்லை.

11 அறிவில்லாப் பேதைப் புறாவைப் போல் எப்பிராயீம் மக்கள் இருக்கிறார்கள்; எகிப்தைத் துணைக்கு அழைக்கிறார்கள்; அசீரியாவிடம் புகலிடம் தேடுகிறார்கள்.

12 அவர்கள் எங்கே போனாலும் அவர்கள் மேல் நம் வலையை விரித்திடுவோம்; வானத்துப் பறவைகளைப் போல் அவர்களைக் கீழே வீழ்த்தி அவர்கள் தீச்செயல்களுக்காகத் தண்டிப்போம்.

13 அவர்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில் நம்மை விட்டு அகன்று போனார்கள்; அவர்களுக்கு அழிவுதான் காத்திருக்கிறது, ஏனெனில் நம்மை அவர்கள் எதிர்த்தார்கள்; அவர்களை மீட்க நமக்கு விருப்பந்தான், ஆனால் அவர்கள் நமக்கு விரோதமாய்ப் பொய் பேசுகிறார்களே!

14 தங்கள் உள்ளத்திலிருந்து நம்மை நோக்கி அவர்கள் கூக்குரலிடுவதில்லை, அதற்குப் பதிலாக தங்கள் படுக்கைகளில் கிடந்து கதறுகிறார்கள்; தானியத்திற்காகவும், திராட்சை இரசத்திற்காகவும் தங்களையே பிய்த்துப் பிடுங்கிக் கொள்கிறார்கள்; ஆயினும் நமக்கெதிராய் எழும்புகிறார்கள்.

15 நாமே அவர்களைப் பயிற்றுவித்து அவர்களின் தோள்கள் வலிமை பெறச் செய்திருந்தும், நமக்கே விரோதமாய்ச் சதி செய்கிறார்கள்.

16 பாகால் பக்கமே சேர்ந்து கொள்ளுகிறார்கள், வஞ்சக வில்லுக்கு ஒப்பாய் இருக்கிறார்கள்; தங்கள் நாவால் பேசிய இறுமாப்பை முன்னிட்டு அவர்களின் தலைவர்கள் வாளால் மடிவர்; இதைக் கண்டு எகிப்தியர் அவர்களை எள்ளி நகையாடுவர்.

அதிகாரம் 08

1 எக்காளத்தை எடுத்து உன் வாயிலே வை! ஆண்டவருடைய வீட்டின் மேல் கழுகுவட்டமிடுகிறது, ஏனெனில் நம் உடன்படிக்கையை அவர்கள் மீறினார்கள், நம் திருச்சட்டத்தை மீறி நடந்தார்கள்.

2 அவர்கள் நம்மை நோக்கிக் கூக்குரலிட்டு, "எங்கள் இறைவா, இஸ்ராயேலராகிய நாங்கள் உம்மை அறிவோம்" என்று சொல்லுகிறார்கள்.

3 இஸ்ராயேல் நன்மையைத் தள்ளிவிட்டது, ஆதலால் பகைவன் அதைத் துரத்துவான்.

4 அவர்களே தங்களுக்கு அரசர்களை ஏற்படுத்திக் கொண்டனர், ஆனால், அதுபற்றி அவர்கள் நம் ஆலோசனை கேட்கவில்லை. அவர்களே தலைவர்களை வைத்துக் கொண்டார்கள், நாமோ அதைப் பற்றி ஒன்றுமறியோம்; தங்களது வெள்ளி, பொன் கொண்டு சிலை செய்து கொண்டார்கள், தாங்கள் அழிந்து போகவே அவற்றைச் செய்து கொண்டார்கள்.

5 சமாரியாவே, உன் கன்றுக்குட்டியை நாம் வெறுக்கிறோம், நம் கோபத்தீ அதற்கு எதிராய் எரிகின்றது, இன்னும் எத்துணைக்காலம் தூய்மையடையாமல் இருப்பார்கள்?

6 ஏனெனில் அக்கன்றின் சிலை இஸ்ராயேலில் செய்யப்பட்டது, அதை ஒரு தொழிலாளி செய்தான்; எனவே அது கடவுளன்று; சமாரியாவின் கன்றுக்குட்டி தவிடுபொடியாகும்.

7 ஏனெனில் அவர்கள் விதைப்பது காற்று, அறுக்கப்போவது கடும் புயல்; கோதுமை கதிர் வாங்காது, கோதுமை மணி மாவு தராது, அப்படியே தரினும், அந்நியரே அதை விழுங்குவர்.

8 பிறரை நமபி இஸ்ராயேல் பாழாயிற்று: இஸ்ராயேல் விழுங்கப்பட்டு விட்டது, ஏற்கனவே அவர்கள் புறவினத்தார் நடுவில் உதவாத பாத்திரம் போல் இருக்கின்றார்கள்.

9 தனிமையில் திரிகிற காட்டுக் கழுதையான அசீரியாவைத் துணையாகத் தேடிப் போயினர், எப்பிராயீம் காசு கொடுத்துக் காதல் செய்கிறது.

10 புறவினத்தார் நடுவில் துணைவர்களைக் கைக்கூலி கொடுத்து அமர்த்தினாலும், விரைவில் அவர்களைச் சிதறடிப்போம்; அரசனையும் தலைவர்களையும் அபிஷுகம் செய்யாமல் கொஞ்ச காலத்திற்கு ஓய்ந்திருப்பார்கள்.

11 பாவம் செய்வதற்காகவே எப்பிராயீம் பீடங்களைப் பலவாகச் செய்து கொண்டதால், அந்தப் பீடங்கள் அவர்கள் பாவஞ் செய்வதற்கே காரணமாயின.

12 பத்தாயிரம் சட்டங்களை அவர்களுக்கு நாம் எழுதிக் கொடுத்தாலும் அவை நமக்கில்லை என்று அவர்கள் கருதுகின்றனர்.

13 அவர்கள் பலியை விரும்புகிறார்கள், பலி கொடுத்து, அந்த இறைச்சியையும் உண்ணுகிறார்கள்; ஆயினும் ஆண்டவர் அவற்றில் விருப்பம் கொள்ளவில்லை; அதற்கு மாறாக அவர்களுடைய அக்கிரமத்தை நினைவில் கொண்டு, அவர்கள் செய்த பாவங்களுக்குத் தண்டனை தருவார்; அவர்களோ எகிப்து நாட்டுக்குத் திரும்புவார்கள்.

14 தன்னைப் படைத்தவரை இஸ்ராயேல் மறந்துவிட்டு அரண்மனைகளைக் கட்டினான்; யூதாவோ அரண் சூழ் பட்டணங்கள் பலவற்றை எழுப்பினான், நாமோ அவன் பட்டணங்கள்மேல் தீயனுப்புவோம், அவன் அரண்களை அது பொசுக்கி விடும்.

அதிகாரம் 09

1 இஸ்ராயேலே, நீ அகமகிழாதே, மற்ற மக்களைப்போல நீ அக்களிக்காதே; உன் கடவுளைக் கைவிட்டு நீ வேசித்தனம் செய்தாய், புணையடிக்கும் களங்களிலெல்லாம் நீ வேசிக்குரிய விலையை விரும்பியேற்றாய்.

2 புணையடிக்கும் களமும், திராட்சைப் பழம் பிழியும் ஆலையும் அவர்களுக்கு உணவளிக்க மாட்டா; புதிய திராட்சை இரசமும் அவர்களை ஏமாற்றிவிடும்.

3 ஆண்டவரின் நாட்டில் அவர்கள் குடியிருக்க மாட்டார்கள்; ஆனால் எப்பிராயீம் எகிப்துக்குத் திரும்புவான், அசீரியர்கள் நடுவில் தீட்டுப்பட்டதை உண்பான்.

4 ஆண்டவருக்கு இரசத்தைத் தாரைப் பலியாய் வார்க்க மாட்டார்கள், தங்கள் பலிகளால் அவருக்கு உகந்தவர்கள் ஆக மாட்டார்கள், அவர்களுடைய உணவு இழவு வீட்டாரின் உணவு போலாம், அதை உண்பவர் யாவரும் தீட்டுப் படுவார்கள். ஏனெனில் அவர்களின் உணவு அவர்கள் வயிற்றில் தான் செல்லும், ஆண்டவரின் கோயிலில் அது படைக்கப்படாது,

5 குறிக்கப்பட்ட விழாவின் போதும், ஆண்டவரின் திருநாளன்றும் என்ன செய்வீர்கள்?

6 இதோ, அழிவுக்கு அஞ்சி ஓடுகிறார்கள், எகிப்து அவர்களைக் கூட்டிச் சேர்க்கும், மேம்பிஸ் அவர்களை அடக்கம் செய்யும். அவர்கள் விரும்பி வைத்திருந்த வெள்ளியெல்லாம் பூனைக்காஞ்சொறிச் செடிகளுக்குச் சொந்தமாகும். அவர்கள் கூடாரங்களில் முட்புதர்கள் முளைத்து வளரும்.

7 தண்டனையின் நாட்கள் வந்துவிட்டன, கைம்மாறு கிடைக்கும் நாட்கள் புலர்ந்து விட்டன; 'இறைவாக்கினன் மடையனாகி விட்டான், இறையூக்கம் பெற்றவன் வெறிகொண்டு உளறுகிறான்' என்று இஸ்ராயேலர் எதிர்த்துப் பேசுகிறார்கள்; ஆம், இது உன் அக்கிரமத்தின் பெருக்கத்தையும், அளவுக்கு மிஞ்சிய மதியீனத்தையும் காட்டுகிறது.

8 என் கடவுளின் மக்களாகிய எப்பிராயீமுக்கு இறைவாக்கினர் ஒரு சாமக்காவலர்; ஆயினும் வேடனின் வலை அவரை எப்பக்கமும் சூழ்ந்துள்ளது, அவருடைய கடவுளின் கோயிலிலும் பகைமை நிலவுகிறது.

9 முன்னாட்களில் காபாவில் நடந்ததுபோல் அவர்கள் கனமான பாவங்களைக் கட்டிக் கொண்டனர்; அவர்களுடைய அக்கிரமத்தை ஆண்டவர் நினைவில் கொண்டு அவர்களுடைய பாவங்களுக்குத் தண்டனை கொடுப்பார்.

10 பாலை நிலத்திற்ல் திராட்சைக் குலைகளைக் கண்டாற் போல் இஸ்ராயேலை நாம் கண்டு பிடித்தோம்; பருவ காலத்தின் தொடக்கத்தில் பழுக்கும் அத்தி மரத்தின் முதற் கனி போல் உங்கள் தந்தையரை நாம் கண்டு பிடித்தோம்; ஆனால் பெல்பேகோருக்கு வந்து சேர்ந்த போது, தங்களையே மானக்கேடானவற்றுக்குக் கையளித்தார்கள்; அவர்கள் நேசித்தவற்றைப் போலவே அருவருப்புக்குள்ளாயினர்.

11 எப்பிராயீமின் மகிமை பறவைப் போலப் பறந்தோடி விடும், அவர்களுக்குள் பிறப்புமில்லை, வயிற்றில் தாங்குவதுமில்லை, கருத்தரிப்பதுமில்லை.

12 அவர்கள் மக்களை ஈன்றெடுத்து வளர்த்தாலும், பெரியவர்களாகு முன்பே அப்பிள்ளைகளை இழக்கச் செய்வோம்; நாம் அவர்களை விட்டு அகன்றுவிட்டால், அவர்களுக்கு ஐயோ கேடு!

13 எப்பிராயீம் தன் மக்களைக் கொள்ளைப்பொருள் ஆக்கிவிட்டான். ஆயினும் எப்பிராயீம் தன் மக்களையெல்லாம் கொலைக்களத்திற்கே கூட்டிச் செல்வான்.

14 ஆண்டவரே, அவர்களுக்குக் கொடுத்தருளும், எதைக் கொடுப்பிர்? கரு வளரும் முன் வெளியேற்றும் கருப்பையையும், பால்சுரக்கா முலைகளையும் கொடுத்தருளும்.

15 அவர்களின் அக்கிரமங்கள் யாவும் கில்காலில் வெளிப்பட்டன, அங்கேதான் அவர்களை நாம் பகைக்கும் படியாயிற்று; அவர்களுடைய தீச்செயல்களை முன்னிட்டு, நம் வீட்டினின்று நாம் அவர்களை விரட்டியடிப்போம்; அவர்களுக்கு இனி நாம் அன்பு செய்வோம், ஏனெனில் அவர்களின் தலைவர்கள் அனைவரும் கலகக்காரர்கள் ஆவர்.

16 எப்பிராயீம் மக்கள் வெட்டுண்டு வீழ்ந்தனர், அவர்களுடைய வேர் உலர்ந்து போயிற்று; இனி மேல் அவர்கள் கனி கொடுக்க மாட்டார்கள்; அப்படியே கொடுத்தாலும், அவர்களுடைய அன்புக் குழந்தைகளை நாம் மாய்த்து விடுவோம்.

17 என் கடவுள் அவர்களைத் தள்ளிவிடுவார், ஏனெனில் அவர்கள் அவருக்குச் செவி கொடுக்கவில்லை; புறவினத்தார் நடுவில் அவர்கள் நாடோடிகளாய்த் திரிவார்கள்.

அதிகாரம் 10

1 இஸ்ராயேல் தழைத்து வளர்ந்த ஒரு திராட்சைக் கொடி, அது நிரம்பக் கனிகளைக் கொடுத்தது. எவ்வளவு மிகுதியாக கனிகளைக் கொடுத்ததோ, அவ்வளவு மிகுதியாகப் பீடங்களை அமைத்தது; நாடு எவ்வளவுக்குச் சிறப்புற்றதோ அவ்வளவுக்கு சிலைகள் சிறப்புப் பெற்றன.

2 இருமனம் கொண்ட மக்கள் அவர்கள்,ஆதலால் அவர்கள் தண்டனை பெறுவார்கள். ஆண்டவரோ அவர்களுடைய பீடங்களைத் தகர்த்திடுவார், அவர்களுடைய சிலைகளை நொறுக்கிடுவார்.

3 அப்போது அவர்கள், "நமக்கு அரசன் இல்லை, நாமோ ஆண்டவருக்கு அஞ்சி நடக்கவில்லை, அரசனுந்தான் நமக்கு என்ன செய்வான்?" என்பார்கள்.

4 வீண் வார்த்தைகளையே அவர்கள் பேசுகிறார்கள்; பயனற்ற ஆணைகளையிட்டு உடன்படிக்கை செய்கிறார்கள்; ஆகவே வயலின் உழவுசால்களில் முளைக்கும் நச்சுப் பூண்டுகள் போலத் தண்டனைத் தீர்ப்பு முளைக்கும்.

5 பெத்தாவானில் கன்றின் முன்னிலையில் சமாரியாவின் மக்கள் நடுங்குகின்றார்கள்; அதனுடைய மகிமை இப்பொழுது மறைந்து போயிற்று, ஆகவே அதன் மக்கள் அதைக் குறித்து அழுகின்றனர்; அதன் பூசாரிகளும் அதற்காகப் புலம்புகின்றனர்.

6 ஆம், அந்தக் கன்றின் சிலையே திறைப் பொருளாக அசீரிய மாமன்னனுக்குக் கொண்டுப் போகப்படும்; எப்பிராயீம் இதைப்பற்றி வெட்கப்படும், இஸ்ராயேல் தனது சிலையை நினைத்துத் தலை நாணும்.

7 சமாரியா அழிந்து போயிற்று, அதன் மன்னன் நீர்க் குமிழி போல் ஆனான்.

8 இஸ்ராயேலின் பாவமாகிய சிலைவழிபாட்டின் உயர்ந்த இடங்களெல்லாம் அழிக்கப்படும்; அவற்றின் பீடங்கள் மேல் முட்களும் முட்புதர்களும் வளரும், அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து, 'எங்களை மூடிவிடுங்கள்," குன்றுகளைப் பார்த்து, "எங்கள்மேல் விழுங்கள்" என்பார்கள்.

9 காபாவில் தங்கியிருந்த காலந்தொட்டே நீ பாவஞ் செய்து வந்திருக்கிறாய், இன்னும் தொடர்ந்து செய்து வருகிறாய்; காபாவின்ன அக்கிரமக்காரர் மேல் கடும் போர் எழாமல் போய்விடுமா?

10 நாம் வந்து அவர்களைத் தண்டிப்போம், அவர்களது இருவகையான அக்கிரமத்திற்குத் தண்டனை அளிக்கும் பொருட்டு, அவர்களுக்கு எதிராக நாடுகள் ஒன்று கூடும்.

11 எப்பிராயீம் புணையடிக்கப் பழக்கப்பட்டதும், புணையடிக்க விரும்புவதுமான பசுவுக்கு ஒப்பானவன், நாமே அதன் அழகான கழுத்தின் மீது நுகத்தை வைப்போம், எப்பிராயீமை நுகத்தில் பூட்டுவோம், யூதா நிலத்தை உழுவான், யாக்கோபு அவனுக்குப் பரம்படிப்பான்.

12 உங்களுக்கென நீதியை விதையுங்கள், அன்பை அறுவடை செய்யுங்கள்; உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்; ஏனெனில் ஆண்டவர் வந்து உங்கள் மேல் நீதியைப் பொழியுமாறு நீங்கள் அவரைத் தேடுங்காலம் நெருங்கிவிட்டது.

13 நீங்கள் அக்கிரமத்தை உழுதீர்கள், அநீதியை அறுவடை செய்தீர்கள், பொய்களின் கனியைத் தின்றீர்கள், உங்கள் தேர்ப்படைகளின் மேலும், வீரர்களின் எண்ணிக்கையின் மேலும் நீங்கள் நம்பிக்கை வைத்ததால்,

14 உங்கள் மக்களிடையே போர்க்குரல் எழும்பும்; சல்மான் போரில் பெத்- ஆர்பெல்லை அழித்தது போல் உங்கள் கோட்டைகள் யாவும் அழிக்கப்படும்; தாய்மாரும் குழந்தைகளும் நொறுக்கப்படுவர்.

15 இஸ்ராயேல் வீட்டாரே, உங்கள் மாபெரும் அக்கிரமத்திற்காக உங்களுக்கும் இவ்வாறே செய்யப்படும்;

அதிகாரம் 11

1 வரவிருக்கும் கடும்பயுலில் இஸ்ராயேல் அரசன் முற்றும் அழிந்து போவான். இஸ்ராயேல் குழந்தையாய் இருந்த போதே நாம் அவன் மேல் அன்பு கூர்ந்தோம்; எகிப்திலிருந்து நம் மகனை அழைத்தோம்.

2 எவ்வளவு வற்புறுத்தி நாம் அவர்களைக் கூப்பிட்டோமோ, அவ்வளவு பிடிவாதமாய் அவர்கள் நம்மை விட்டு விலகினார்கள்; பாகால்களுக்குப் பலியிட்டார்கள், சிலைகளுக்குத் தூபம் காட்டினார்கள்.

3 எப்பிராயீமுக்கு நடை பயிற்றுவித்தவர் நாம் தாம், அவர்களைக் கையிலேந்தி நாம் சீராட்டினோம்; ஆயினும் தங்களைப் பராமரித்து வருபவர் நாமே என்பதை அவர்கள் உணரவில்லை.

4 பரிவு என்னும் கயிற்றால் அவர்களைப் பிணைத்து, அன்புக் கயிற்றால் கட்டி நடத்தி வந்தோம். அவர்கள் கழுத்திலிருந்து நாம் நுகத்தை அகற்றி அவர்களை இளைப்பாறச் செய்து உணவளித்தோம்.

5 எகிப்து நாட்டுக்கே அவர்கள் திரும்பிப் போவார்கள், அசீரியா அவர்களை அரசாள்வான்; ஏனெனில் நம்மிடம் திரும்பி வர அவர்கள் மறுத்துவிட்டனர்.

6 அவர்களின் நகரங்களுக்கு எதிராக வாள் எழும்பும், அவர்களுடைய கதவுகளின் தாழ்ப்பாள்களை நொறுக்கிவிட்டு, கோட்டைகளுக்குள் இருக்கிறவர்களை விழுங்கி விடும்.

7 நம் மக்கள் நம்மை விட்டு அகல்வதிலேயே கருத்தாய் இருக்கிறார்கள். ஆகையால் அவர்கள் மேல் நுகத்தடி பூட்டப்படும், அதை அகற்றுகிறவன் எவனுமில்லை.

8 எப்பிராயீமே, உன்னை எப்படிக் கைநெகிழ்வோம்? இஸ்ராயேலே, உன்னை எப்படிக் கைவிடுவோம்? ஆதாமைப் போல் உன்னை எப்படி நடத்த முடியும்? செபோயீமுக்குச் செய்தது போல் உனக்குச் செய்வோமோ? நமது உள்ளம் அதை வெறுத்தொதுக்குகிறது, நம் இரக்கம் பொங்கியெழுந்து துடிக்கிறது.

9 நமது கோபத்தின் ஆத்திரத்தை நிறைவேற்ற மாட்டோம், மறுபடியும் எப்பிராயீமை அழிக்கமாட்டோம்; ஏனெனில் நாம் கடவுள், வெறும் மனிதன் அல்ல; நாமே உங்கள் நடுவில் இருக்கும் பரிசுத்தர்; எனவே உங்களை அழிக்கும்படி வர மாட்டோம்.

10 ஆண்டவர் பின்னாலேயே அவர்கள் போவார்கள், அவரோ சிங்கத்தைப் போலக் கர்ச்சனை செய்வார்; ஆம், அவர் கர்ச்சனை செய்வார்; அவர் மக்கள் மேற்கிலிருந்து நடுங்கிக் கொண்டு வருவார்கள்.

11 எகிப்தினின்று பறவைகள்போலப் பறந்து வருவர், அசீரியர் நாட்டினின்று புறாக்களைப்போல விரைந்து வருவர்; அவர்களை நாம் அவர்களுடைய வீடுகளுக்கே கொண்டு வருவோம், என்கிறார் ஆண்டவர்.

12 எப்பிராயீம் நம்மைப் பொய் சொல்லி ஏமாற்றினான், இஸ்ராயேல் வீட்டார் நமக்கு வஞ்சகம் செய்தனர்;ஆனால் யூதாவை இன்னும் கடவுள் அறிகிறார், அவனும் பரிசுத்தருக்குப் பிரமாணிக்கமாய் நடக்கிறான்.

அதிகாரம் 12

1 எப்பிராயீம் வெறும் காற்றை உண்டு, நாள் முழுவதும் கீழ்க்காற்றைத் துரத்தித் திரிகிறான்; பொய்யும் வன்செயலும் அவனிடம் மிகுந்துவிட்டன, அசீரியாவோடு உடன்படிக்கை செய்கிறான், எகிப்துக்கு எண்ணெய் கொடுத்தனுப்புகிறான்.

2 யூதாவுக்கும் எதிராக ஆண்டவர் வழக்குத் தொடுக்கிறார், யாக்கோபை அவன் வழிகளுக்கேற்பத் தண்டிப்பார், அவன் செயல்களுக்குத் தக்கபடி கைம்மாறு தருவார்.

3 தாய் வயிற்றிலேயே தன் தமையனை ஏமாற்றினான், வளர்ந்த பின்பும் கடவுளோடு போராடினான்.

4 வானதூதரோடு போராடி வெற்றி கொண்டான், கண்ணீர் சிந்தி அவரருளை வேண்டிக் கொண்டான்; பேத்தேல் என்னுமிடத்தில் கடவுளைச் சந்தித்தான், அவரும் அங்கே அவனுடன் பேசினார்.

5 அந்த ஆண்டவரே சேனைகளின் கடவுள், ஆண்டவர் என்பதே அவருடைய திருப்பெயர்.

6 ஆகவே, இஸ்ராயேலே, உன் கடவுளிடம் திரும்பி வா, அன்பையும் நீதியையும் கடைப்பிடி, உன் கடவுள் மேல் எப்போதும் நம்பிக்கை கொள்."

7 இஸ்ராயேலோ ஒரு கனானேயனைப் போலக் கள்ளத் தராசை வைத்துக் கொண்டு கொள்ளை லாபம் தேட விரும்புகிறான்.

8 எப்பிராயீம், "நான் பணக்காரனாகி விட்டேன், எனக்கென்று செல்வம் சேர்த்துக் கொண்டேன்" என்கிறான்; ஆனால், அவனுடைய செல்வங்கள் எல்லாம் சேர்ந்து கூட அவனுடைய அக்கிரமத்தைப் போக்க முடியாதே!

9 எகிப்து நாட்டிலிருந்து உன்னை விடுவித்த நாள் முதல் நாமே உன் கடவுளாகிய ஆண்டவர்; திருவிழா நாட்களில் செய்வது போல மறுபடியும் உன்னைக் கூடாரங்களில் வாழச் செய்வோம்.

10 இறைவாக்கினர்களிடம் பேசுவோம், காட்சிகள் பெருகச் செய்வோம்; இறைவாக்கினர் வாயிலாகச் சாவை வருவிப்போம்.

11 காலாத்தில் அக்கிரமம் மலிந்திருந்தால், அவர்கள் திண்ணமாய் அழிவார்கள்; கில்காலில் அவர்கள் காளைகளைப் பலியிட்டால், நிலத்தின் உழவுசாலில் இருக்கும் கற்குவியல் போல் அவர்களுடைய பீடங்கள் ஆகிவிடும்.

12 யாக்கோப் ஆராம் நாட்டிற்குத் தப்பி ஓடினான், பெண்ணுக்காக இஸ்ராயேல் தொண்டூழியம் செய்தான், பெண்ணை மணப்பதற்காக அவன் ஆடுமேய்த்தான்.

13 ஓர் இறைவாக்கினரைக் கொண்டு ஆண்டவர் இஸ்ராயேலை எகிப்தினின்று கூட்டிவந்தார்; ஓர் இறைவாக்கினரால் அவன் பாதுகாக்கப் பட்டான்.

14 எப்பிராயீம் நமக்கு மிகவும் கோபமூட்டினான்; அவனுடைய இரத்தப்பழி அவன் மேலேயே விழும், அவனுடைய நிந்தைகளை ஆண்டவர் அவன் மேலேயே திருப்புவார்.

அதிகாரம் 13

1 எப்பிராயீம் பேசியபோது, மனிதர் நடுங்கினர், இஸ்ராயேலில் அவன் மிக உயர்த்தப்பட்டான்; ஆனால் பாகாலை வழிபட்டப் பாவத்தில் வீழ்ந்தான், மடிந்தான்.

2 இப்பொழுதோ தீவின் மேல் தீவினை செய்கிறார்கள், வார்ப்பிட்ட சிலைகளைத் தங்களுக்கெனச் செய்கிறார்கள்; அவர்களுடைய வெள்ளியில் செய்யப்பட்ட சிலைகள் அவை, அவை யாவும் தட்டானுடைய கைவேலைகளே. "இவற்றுக்குப் பலியிடுங்கள்" என்கிறார்கள்; கன்றுக்குகட்டிகளை மனிதர் முத்தம் செய்கிறார்கள்.

3 ஆகையால் அவர்கள் காலைநேரத்துப் பனிபோலும், விரைவில் உலர்ந்துபோகும் பனித்துளி போலும், களத்திலிருந்த துரும்பு சுழற்காற்றில் சிக்கியது போலும், பலகணி வழியாய் வெளிப்பட்ட புகை போலும் ஆவார்கள்.

4 எகிப்து நாட்டினின்று உன்னை விடுவித்த நாள் முதல் நாமே உன் கடவுளாகிய ஆண்டவர்; நம்மைத் தவிர வேறு கடவுளை நீ அறிவாய், நம்மையன்றி வேறு மீட்பரும் இல்லை.

5 வறண்ட நிலமாகிய பாலைவெளியில் உன்னை அறிந்து ஆதரித்தவர் நாமே.

6 ஆனால் அவர்கள் வளமான மேய்ச்சலால் வயிறு நிறைந்தனர், வயிறு நிறைந்ததும் அவர்கள் செருக்குற்று நம்மை மறந்து போனார்கள்.

7 ஆனால் நாம் அவர்களுக்கு ஒரு சிங்கம் போல் இருப்போம், வேங்கைபோலப் பாய வழியோரத்தில் மறைந்திருப்போம்.

8 குட்டிகளைப் பறிக்கொடுத்த பெண் கரடி போல் அவர்கள் மேல் பாய்ந்து, மார்பைப் பிளப்போம்; சிங்கத்தைப் போல் அங்கேயே அவர்களைத் தின்றொழிப்போம், காட்டு மிருகங்கள் அவர்களைக் கிழித்தெறியும்.

9 இஸ்ராயேலே, உன்னை நாம் அழிக்கப்போகிறோம், உனக்கு உதவி செய்ய வல்லவன் யார்?

10 எனக்கு ஓர்அரசன் கொடும், தலைவர்கள் கொடும்" என்று நீ நம்மிடம் கேட்டாயே! அந்த அரசன் எங்கே? தலைவர்கள் எங்கே? அவர்கள் இப்பொழுது உன்னையும், உன் நகரங்களையும் மீட்கட்டுமே!

11 எரிச்சலோடு உனக்கு அரசனைத் தந்தோம், கோபத்தில் அவனை நாம் எடுத்து விட்டோம்.

12 எப்பிராயீமின் அக்கிரமம் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது, அவனுடைய பாவம் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

13 பிரசவ வேதனைகள் அவனுக்கு வருகின்றன, ஆனால், அவன் ஒரு புத்தியில்லாப் பிள்ளை, ஏனெனில் பேறு காலம் வந்துவிட்டது; இருப்பினும் வயிற்றை விட்டு வெளியேறுகிறானல்லன்.

14 பாதாளத்தின் பிடியினின்று அவர்களை விடுவிப்போமோ? சாவிலிருந்து அவர்களை நாம் மீட்போமோ? சாவே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் அழிவு (வேலை) எங்கே? இரக்கம் இப்பொழுது நம் கண் முன் இல்லை.

15 எப்பிராயீம் நாணல்களின் நடுவில் செழித்து வளரலாம், ஆயினும் கீழ்த்திசையினின்று காற்று வரும், பாலை நிலத்திலிருந்து ஆண்டவரின் மூச்சு கிளம்பி வரும்; வந்து நீரோடைகளையும் நீரூற்றுகளையும் வறண்டு போகச் செய்யும், விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் வாரிக் கொண்டு போம்.

அதிகாரம் 14

1 சமாரியா அழியக் கடவது, ஏனெனில் தன் கடவுளை எதிர்த்துக் கோபமூட்டிற்று; அதன் குடிமக்கள் வாளால் மடியக்கடவார்கள், அவர்களுடைய குழந்தைகள் பாறைகளில் மோதப்படுவர்; கர்ப்பவதிகள் வயிறு கிழித்தெறியப்படும்.

2 இஸ்ராயேலே, உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா, ஏனெனில் உன் அக்கிரமத்தினாலேயே நீ வீழ்ச்சியுற்றாய்,

3 வாய் விட்டுச் சொல்லி ஆண்டவரிடம் திரும்புங்கள்: "அக்கிரமங்களை எல்லாம் அப்புறப்படுத்தியருளும், நன்மையானதை ஏற்றுக்கொள்ளும், உதடுகளால் தரும் காணிக்கையை உமக்களிக்கிறோம்; அசீரியர் எங்களைக் காக்க மாட்டார்கள்,

4 குதிரைகள் மேல் நாங்கள் இனி ஏற மாட்டோம்; எங்கள் கைவேலைப்பாடுகளை நோக்கி, 'எங்கள் இறைவா!' என்று சொல்ல மாட்டோம்; ஏனெனில் திக்கற்ற பிள்ளைக்குப் பரிவு காட்டுபவர் நீரே" என்று ஆண்டவரிடம் சொல்லுங்கள்.

5 அவர்களுடைய பிரமாணிக்கமின்மையை நாம் குணமாக்குவோம், அவர்கள் மேல் உளமார அன்பு கூர்வோம்; ஏனெனில் அவர்கள் மேலிருந்த நம் சினம் ஆறி விட்டது,

6 நாம் இஸ்ராயேலுக்குப் பனி போல இருப்போம், அவன் லீலியைப்போலத் தளிர்ப்பான், லீபானைப்போல வேரூன்றி நிற்பான்.

7 அவனுடைய கிளைகள் நீண்டு படரும். ஒலிவ மரம் போல் அவன் அழகு இருக்கும்; லீபானைப்போல் அவன் நறுமணம் பரப்புவான்.

8 நமது நிழலில் வாழ அவர்கள் திரும்பி வருவர், வளமான தானியமும் திராட்சையும் பயிரிடுவர், லீபானின் திராட்சை இரசம் போல் அவர்களது புகழ் விளங்கும்

9 இனிமேல் எப்பிராயீமுக்குச் சிலைகள் எதற்கு? நாமே அவனுக்குச் செவி சாய்த்துக் கண்காணிக்கிறோம்; பசுமையான தேவதாரு மரம் போல் இருக்கிறோம்; நீ கனிகொடுப்பது நம்மால் தான்.

10 ஞானம் நிறைந்தவன் இவற்றைக் கண்டு பிடிக்கட்டும், புத்தியுள்ளவன் இவற்றை அறிந்து கொள்ளட்டும்; ஏனெனில் ஆண்டவரின் வழிகள் நேர்மையானவை, நேர்மையானவர்கள் அவற்றில் நடக்கிறார்கள்; மீறுகிறவர்கள் அவற்றில் இடறி விழுகிறார்கள்.