யோவேல் ஆகமம்

அதிகாரம் 01

1 பத்துவேல் என்பவனின் மகனாகிய யோவேல் என்பவருக்கு அருளப்பட்ட ஆண்டவருடைய திருவாக்கு:

2 முதியோரே, இதைக் கேளுங்கள், நாட்டுமக்களே, நீங்கள் அனைவரும் செவிகொடுங்கள்; உங்கள் நாட்களிலோ, உங்கள் தந்தையரின் நாட்களிலோ இதைப் போன்றதொன்று நடந்ததுண்டோ?

3 உங்கள் பிள்ளைகளுக்கு இதைப்பற்றிச் சொல்லுங்கள்; உங்கள் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லட்டும். அவர்கள் பிள்ளைகள் அடுத்த தலைமுறைக்குக் கூறட்டும்.

4 கம்பளிப் புழுவுக்குத் தப்பியதை வெட்டுக்கிளி தின்றது, வெட்டுக்கிளிக்குத் தப்பியதை பச்சைப் புழு தின்றது, பச்சைப் புழுவுக்குத் தப்பியதை பயிர்ப் புழு தின்றது.

5 எழுங்கள், குடிவெறியர்களே, எழுந்து அழுங்கள்; இனிய மதுவருந்துகிறவர்களே, அனைவரும் புலம்புங்கள்; ஏனெனில் இனிமேல் அவ்வினிய மது உங்கள் வாய்க்கு எட்டாமல் போகும்.

6 ஆற்றல் மிக்கதும், எண்ணிக்கையில் அடங்காததுமான மக்கள் இனமொன்று நம் நாட்டுக்கு எதிராய் வருகின்றது; அதன் பற்கள் சிங்கத்தின் பற்களைப் போன்றவை, அதன் கடைவாய்ப் பற்கள் பெண் சிங்கத்தின் கடைவாய்ப் பற்கள் போன்றவை.

7 நம் திராட்சைக் கொடிகளை அது பாழாக்கிற்று, நம் அத்திமரங்களைப் பிளந்தெறிந்தது; அவற்றின் பட்டைகளை உரித்து விட்டுக் கீழே வீழ்த்தியது, அதன் கிளைகள் உலர்ந்து வெளிறிப் போயின.

8 இளமையிலேயே கணவனை இழந்த கன்னிப் பெண்ணைப் போல, கோணியுடுத்திக் கொண்டு கதறி அழுங்கள்.

9 ஆண்டவருடைய கோயிலில் உணவுப் பலியும் பானப் பலியும் இல்லாமல் ஒழிந்து போயின. ஆண்டவருடைய ஊழியர்களாகிய அர்ச்சகர்கள் அழுகின்றார்கள்.

10 வயல்வெளிகள் பாழாகின, நிலமும் புலம்புகின்றது; ஏனெனில் கோதுமை விளைச்சல் அழிவுற்றது, திராட்சை இரசம் வற்றிற்று, எண்ணெய் வறண்டு போயிற்று.

11 உழவர்களே, கலங்கி நில்லுங்கள், திராட்சைத் தோட்டக்காரர்களே, புலம்புங்கள்; ஏனெனில் கோதுமையும் வாற்கோதுமையும் இல்லாமல் போயின; வயலின் விளைச்சல் அழிந்து போயிற்று.

12 திராட்சைக் கொடி வாடிப்போயிற்று, அத்திமரம் உலர்ந்து போனது; மாதுளை, பேரீந்து, பேரிலந்தை முதலிய வயல் வெளி மரங்கள் யாவும் வதங்கி விட்டன; மகிழ்ச்சியும் மனிதர்களை விட்டு அகன்று விட்டது.

13 அர்ச்சகர்களே, கோணியுடுத்திக் கொண்டு அழுங்கள், பீடத்தில் பணிசெய்வோரே, புலம்புங்கள்; என் கடவுளின் ஊழியர்களே, கோணியுடை அணிந்து இரவைக் கழியுங்கள்; ஏனெனில் உங்கள் கடவுளின் கோயிலில் உணவுப்பலியும் பானப்பலியும் இல்லாதாகின.

14 உண்ணா நோன்புக்கெனக் காலத்தைக் குறிப்பிடுங்கள், வழிபாட்டுக் கூட்டத்தைக் கூட்டுங்கள்; உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கோயிலுக்கு மூப்பர்களையும், நாட்டு மக்கள் அனைவரையும் வரவழைத்து, ஆண்டவரை நோக்கிக் கதறுங்கள்.

15 இந்த நாளுக்கு ஐயோ கேடு! ஏனெனில் ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது, எல்லாம் வல்லவரிடமிருந்து அழிவைப் போல் அது வருகிறது.

16 நம் கண் முன்னாலேயே உணவுப் பொருளெல்லாம் அழியவில்லையா? நம் கடவுளின் வீட்டிலிருந்து அகமகிழ்ச்சியும் அக்களிப்பும் அகன்று போயினவன்றோ?

17 விதைகள் மண்கட்டிகளின் கீழ் மக்கிப்போயின, பண்டகச்சாலைகள் வெறுமையாய் கிடக்கின்றன, களஞ்சியங்கள் பாழடைந்து போயின; ஏனெனில் கோதுமை விளைச்சல் இல்லாமல் போயிற்று.

18 மிருகங்கள் தவிப்பதை என்னென்பது! மாட்டு மந்தைகள் திகைத்து நிற்கின்றன; ஏனெனில் அவற்றிற்கு மேய்ச்சல் கிடையாது; ஆட்டு மந்தைகளும் இன்னலுறுகின்றன.

19 ஆண்டவரே, உம்மை நோக்கிக் கதறுகின்றேன்; ஏனெனில் காட்டிலிருந்த மேய்ச்சல் இடங்களை நெருப்பு பாழ்படுத்தி விட்டது. வயல் வெளியில் இருந்த மரங்களை எல்லாம் தீயானது சுட்டெரித்து விட்டது.

20 காட்டு மிருகங்கள் கூட உம்மை நோக்கிக் கதறுகின்றன. ஏனெனில் நீரோடைகள் வற்றிப் போய்விட்டன; காட்டிலிருந்த மேய்ச்சல் இடங்களை நெருப்பு சுட்டெரித்தது.

அதிகாரம் 02

1 சீயோனில் எக்காளம் ஊதுங்கள், நமது பரிசுத்த மலைமேலிருந்து கூக்குரலிடுங்கள்; உலக மக்கள் அனைவரும் நடுங்குவார்களாக! ஏனெனில் ஆண்டவரின் நாள் வருகிறது, மிக அண்மையில் உள்ளது.

2 அதுவோ இருளும் காரிருளும் கவிந்த நாள், கார்முகிலும் மந்தாரமும் சூழ்ந்த நாள்; காலை வெயில் மலை மீது நொடிப் பொழுதில் பரவுவது போல் ஆற்றல் மிக்க பெருங் கூட்டம் வருகின்றது. பண்டு முதல் இதற்கொப்பாய்க் கண்டதுமில்லை, ஊழிக்காலம் வரை இனிக் காணப்போவதுமில்லை.

3 அக்கூட்டத்திற்கு முன்னால் தீயானது சுட்டெரிக்கிறது, அதற்குப் பின்னால் நெருப்புத் தழல் பொசுக்குகிறது; அதன் வருகைக்கு முன் நாடு ஏதேன் சோலை போல் இருக்கிறது; அது போன பின் பாலை நிலம் போல் ஆகிவிடும்; யாதுமே அதற்குத் தப்ப முடியாது.

4 பார்வைக்கு அவை குதிரைகள் போல் இருக்கும், போர்க் குதிரைகள் மேல் அவை விரைந்தோடும்.

5 தேர்ப்படையின் கிறீச்சொலி போல் இரைந்து கொண்டு மலைகளின் உச்சிகள் மேல் தாவிச் செல்லும்; சருகுகளைச் சுட்டெரிக்கும் தீத்தழல் போல் இரைச்சல் செய்து, போருக்கு அணிவகுத்த வலிமை மிக்க சேனை போல முன்னேறும்.

6 அவற்றின் முன் மக்களினங்கள் வேதனையால் துடிக்கும், அச்சத்தால் முகங்கள் எல்லாம் வெளிறிப் போகும்.

7 போர் வீரர்களைப்போல் அவை தாக்குகின்றன, படை வீரர்களைப் போலச் சுவர் மேல் ஏறுகின்றன; ஒவ்வொன்றும் தன் போக்கின்படி முன்னேறுகிறது, தங்கள் வழிகளை விட்டு அவை பிறழ்வதில்லை.

8 ஒன்றையொன்று வரிசையில் நெருக்குவதில்லை, ஒவ்வொன்றும் தன் வழியே செல்லுகின்றது; அம்புமாரி அவற்றின் மேல் பொழிந்தாலும், வரிசை கலையாமல் அவை முன்னேறுகின்றன.

9 நகருக்குள் பாய்கின்றன, மதில்கள் மேல் ஓடுகின்றன, வீடுகள் மேல் ஏறிப் பலகணி வழியாய்த் திருடனைப் போல நுழைகின்றன.

10 அக்கூட்டத்தின் முன்னிலையில் நிலம் நடுங்குகிறது, வானம் விடவிடத்துப் போகிறது; கதிரவனும் வெண்ணிலவும் இருளுகின்றன; விண்மீன்கள் ஒளியிழந்து நிற்கின்றன.

11 ஆண்டவர் தம் சேனைக்கு முன் குரலொலி எழுப்புகிறார், அவருடைய சேனை மிகமிகப் பெரிது; அவராணையை நிறைவேற்றுபவன் ஆற்றல் மிக்கவன், ஏனெனில் ஆண்டவரின் நாள் பெரியது, மிகுந்த அச்சத்தைத் தரக்கூடியது, அதனைத் தாங்கிக் கொள்ளக் கூடியவன் யார்?

12 ஆண்டவர் கூறுகிறார்: "இப்பொழுதாவது நோன்பிருந்து, அழுது புலம்பிக் கொண்டு உங்கள் முழு உள்ளத்தோடு நம்மிடம் திரும்பி வாருங்கள்;

13 உங்கள் உடைகளைக் கிழித்துக் கொள்ள வேண்டா, உங்கள் இதயங்களைக் கிழித்துக் கொள்ளுங்கள்." உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள், ஏனெனில் அவர் அருளும் இரக்கமுமுள்ளவர்: நீடிய பொறுமையுள்ளவர், நிலையான அன்புள்ளவர், செய்யக் கருதிய தீமையைக் குறித்து மனமாறுகிறவர்.

14 ஒரு வேளை அவர் திரும்பவும் மனத்தை மாற்றிக் கொண்டு, நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு உணவுப் பலியும் பானப் பலியும் ஒப்புக் கொடுப்பதற்காக, உங்களுக்கு ஆசி வழங்கமாட்டாரென யார் அறிவார்?

15 சீயோனில் எக்காளம் ஊதுங்கள், உண்ணா நோன்புக்கெனக் காலத்தைக் குறிப்பிடுங்கள் வழிபாட்டுக் கூட்டத்தைக் கூட்டுங்கள்.

16 மக்களைக் கூட்டுங்கள். பரிசுத்த சபையை ஒன்று சேருங்கள், முதியோரைத் திரட்டுகள், சிறுவர்களைக் கூப்பிடுங்கள். பால் குடிக்கும் குழந்தைகளையும் ஒன்று கூட்டுங்கள்; மணமகன் தன் அறையை விட்டு வெளியேறட்டும், மணமகள் தன் மணமஞ்சத்தை விட்டுப் புறப்படட்டும்.

17 ஆண்டவருடைய ஊழியர்களாகிய அர்ச்சகர்கள் கோயில் முகமண்டபத்திற்கும் பீடத்திற்கும் நடுவில் நின்று கொண்டு, "ஆண்டவரே, உம் மக்கள் மேல் இரங்கியருளும்; உம்முடைய உரிமைச் சொத்தைப் புறவினத்தார் நடுவில் வசை மொழிக்கும் பழிச் சொல்லுக்கும் ஆளாக்காதீர்; 'அவர்களுடைய கடவுள் எங்கே இருக்கிறார்?' என்று மக்களினங்களின் நடுவில் ஏன் சொல்லப்படல் வேண்டும்?" என்று சொல்லி அழுவார்களாக!

18 ஆண்டவர் தம் நாட்டின் மேல் ஆர்வங்கொண்டார், தம்முடைய மக்கள் மீது இரக்கம் காட்டினார்.

19 ஆண்டவர் தம் மக்களுக்குச் சொன்ன மறுமொழி இதுவே: "இதோ, நாம் உங்களுக்குச் கோதுமையும் திராட்சை இரசமும் எண்ணெய்யும் கொடுக்கிறோம்; நீங்கள் நிறைவு பெறுவீர்கள். இனிமேல் புறவினத்தார் நடுவில் உங்களை நிந்தைக்கு ஆளாக்க மாட்டோம்.

20 வடநாட்டுப் படையை உங்களிடமிருந்து தொலைவிலோட்டுவோம், வறண்ட பாலைநிலத்திற்கு விரட்டி விடுவோம்; அதன் முன் பகுதியைக் கீழ்க்கடலுக்குள்ளும், பின் பகுதியை மேற்கடலுக்குள்ளும் ஆழ்த்துவோம். நாற்றமும் தீய வாடையும் அங்கே கிளம்பும், ஏனெனில் அப்படையானது பெரியன செய்தது.

21 இஸ்ராயேல் நாடே, அஞ்சாதே, மகிழ்ச்சி கொள், அக்களிப்பு அடை; ஏனெனில் ஆண்டவர் பெரியன செய்தார்.

22 வயல்வெளி மிருகங்களே, அஞ்சாதீர்கள்; ஏனெனில் காட்டிலுள்ள மேய்ச்சலிடங்கள் பசுமையாய் உள்ளன; மரம் தன் கனியைக் கொடுக்கிறது, அத்தி மரமும் திராட்சைக் கொடியும் நிறைந்த பலன் தருகின்றன.

23 சீயோனின் மக்களே, அகமகிழுங்கள், உங்கள் கடவுளாகிய ஆண்டவரில் அக்களியுங்கள்; ஏனெனில் நீதியைக் காட்ட உங்களுக்கு முன்மழை தந்தார், முன்னாளில் தந்தது போலவே உங்களுக்காக முன்மழையும் பின்மழையும் மிகுதியாய்ப் பொழிந்தார்.

24 புணையடிக்கும் களங்களில் தானியம் நிறைந்திருக்கும், ஆலைகளில் திராட்சை இரசமும் எண்ணெயும் வழிந்தோடும்.

25 நாம் உங்கள் மேல் அனுப்பிய நம் பெரும்படையாகிய வெட்டுக்கிளிகள், பச்சைப்புழுக்கள், பயிர்ப் புழுக்கள், கம்பளிப்புழுக்கள் ஆகியவை அழித்து விட்ட ஆண்டின் பலன்களைத் திரும்ப உங்களுக்குத் தந்திடுவோம்.

26 அவற்றை வயிறார உண்டு நிறைவுபெறுவீர்கள். உங்களுக்காக விந்தைகள் புரிந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் திருப்பெயரை வாழ்த்துவீர்கள். இனி மேல் நம்முடைய மக்கள் ஒருபோதும் அவமானத்துக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள்.

27 இஸ்ராயேல் நடுவில் நாம் இருக்கிறோம் என்றும், ஆண்டவராகிய நாமே உங்கள் கடவுள், நம்மையன்றி வேறெவரும் இல்லையென்றும் அப்போது நீங்கள் அறிந்துகொள்வீர்கள்; நம் மக்கள் இனி ஒருபோதும் அவமானத்துக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள்.

28 அதற்கு பின்பு, எல்லார் மேலும் நம் ஆவியைப் பொழிந்திடுவோம், உங்கள் புதல்வர் புதல்வியர் இறைவாக்குரைப்பர்; உங்கள் முதியோர் கனவுகள் காண்பர், உங்கள் இளைஞர்கள் காட்சிகள் அருளப்பெறுவர்.

29 ஆம், அடிமைகளாய் இருக்கும் ஆண்கள், பெண்கள் மீதும் அந்நாட்களில் நம் ஆவியைப் பொழிந்திடுவோம்.

30 இன்னும் விண்ணிலும் மண்ணிலும், அற்புதங்களைக் காட்டுவோம்; எங்குமே இரத்தமும் நெருப்பும் புகையும் இருக்கும்.

31 அச்சந்தரும் பெருநாளாம் ஆண்டவரின் நாள் வருமுன், கதிரோன் இருளாகும், நிலவோ இரத்தமாய் மாறும்.

32 அப்பொழுது ஆண்டவரின் பெயரைச் சொல்லி மன்றாடும் எவனும் மீட்புப் பெறுவான்; ஏனெனில் ஆண்டவர் சொன்னவாறே, சீயோன் மலையிலும் யெருசலேமிலும் தப்பியவர் வாழ்வர், ஆண்டவர் அழைத்தவர்களும் தப்பிப்பிழைத்தவர்கள் நடுவில் இருப்பார்கள்.

அதிகாரம் 03

1 இதோ, அந்நாட்களில் யூதாவையும் யெருசலேமையும் துன்ப நிலையிலிருந்து முன் போல நன்னிலைக்கு நாம் கொணரும் போது,

2 புறவினத்தார் அனைவரையும் ஒன்று சேர்த்து யோசப்பாத் பள்ளத்தாக்கிற்குக் கொண்டுவருவோம்; நம் மக்களும் உரிமைச் சொத்துமான இஸ்ராயேலை முன்னிட்டு, அங்கே அவர்களுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்குவோம்; ஏனெனில் அவர்கள் நம் மக்களை வேற்று நாடுகளில் சிதறடித்து, நமக்குரிய நாட்டைத் தங்களுக்குள் பங்கிட்டனர்;

3 மேலும் நம் மக்கள்மேல் சீட்டுப்போட்டார்கள், சிறுவர்களை விலைமகளுக்குக் கூலியாய்க் கொடுத்தார்கள், சிறுமிகளை மதுவுக்கு விலையாய்க் கொடுத்து, வாங்கிக் குடித்தனர்.

4 தீர், சீதோன் நகரங்களே, பிலிஸ்தியா நாட்டு எல்லாப் பகுதிகளே, நம்மோடு உங்களுக்கு என்ன? நீங்கள் நம்மைப் பழிவாங்குகிறீர்களோ? அப்படி நீங்கள் பழிவாங்கினால் விரைவில் காலம் தாழ்த்தாமல், பழிக்குப் பழி உங்கள் தலை மேலேயே வாங்குவோம்.

5 நீங்கள் நம் வெள்ளியையும் பொன்னையும் எடுத்துக் கொண்டீர்கள், விலையுயர்ந்த பொருட்களை உங்கள் கோயில்களுக்குக் கொண்டு போனீர்கள்.

6 யூதாவின் மக்களையும் யெருசலேம் மக்களையும் கிரேக்க மக்களிடம் விலைக்கு விற்றீர்கள்; இவ்வாறு அவர்களைத் தங்கள் நாட்டிலிருந்து மிகத் தொலைவில் கொண்டு போகச் செய்து விட்டீர்கள்.

7 ஆனால் நீங்கள் அவர்களை விற்ற நாடுகளிலிருந்து இப்பொழுதே அவர்களைக் கிளம்பி வரச்செய்வோம்; உங்கள் கொடுமை உங்கள் தலை மேலேயே விழச்செய்வோம்.

8 உங்கள் புதல்வர் புதல்வியரை நாம் யூதாவின் மக்களிடம் விற்றுப் போடுவோம், இவர்களோ அவர்களைத் தொலை நாட்டு மக்களான சாபேர்க்கு விற்பர்; ஏனெனில் ஆண்டவரே இதைச் சொல்லியுள்ளார்."

9 புறவினத்தார் நடுவில் இதை முழங்குங்கள்; பரிசுத்தப் போருக்குப் புறப்படுங்கள், வலிமை மிக்க வீரர்களைக் கிளப்புங்கள்; போர்த்திறம் வாய்ந்த அனைவரும் திரண்டு வரட்டும், வந்து போருக்குக் கிளம்பட்டும்.

10 கலப்பைக் கொழுவைப் போர் வாளாக அடித்துக் கொள்ளுங்கள், அரிவாள்களைக் கொண்டு ஈட்டிகள் செய்து கொள்ளுங்கள்; வலுவற்றவனும், "நானொரு போர்வீரன்" என்று சொல்லிக் கொள்ளட்டும்.

11 சுற்றுப்புறத்திலுள்ள மக்களினங்களே, நீங்கள் அனைவரும் விரைந்து வாருங்கள், வந்து அங்கே ஒன்றுகூடுங்கள். (ஆண்டவரே உம் படைகளை அனுப்பியருளும்!)

12 மக்களினங்கள் யாவும் கிளம்பி வரட்டும், வந்து யோசப்பாத் பள்ளத்தாக்கில் சேரட்டும்; ஏனெனில் சுற்றுப்புறத்து மக்களினங்கள் அனைத்தையும் தீர்ப்பிட நாம் அங்கே அமர்ந்திருப்போம்.

13 அரிவாளை எடுத்து அறுங்கள், விளைச்சல் முற்றிவிட்டது; வந்து மிதியுங்கள், இரசம் பிழியும் ஆலை நிறைந்துள்ளது; திராட்சை இரசத் தொட்டிகள் பொங்கிவழிகின்றன, அவர்கள் செய்த தீமை மிகுந்து போயிற்று.

14 மக்களினங்கள், மக்கட் கூட்டங்கள் தீர்ப்பு வழங்கும் பள்ளத்தாக்கில் நிறைந்துள்ளன; ஏனெனில் தீர்ப்பு வழங்கும் பள்ளத்தாக்கில் ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது.

15 கதிரவனும் நிலவும் இருண்டு போகின்றன, விண்மீன்கள் ஒளிமங்கி விடுகின்றன.

16 சீயோனிலிருந்து ஆண்டவர் கர்ச்சனை செய்கிறார், யெருசலேமில் தமது குரலையெழுப்புகிறார், விண்ணும் மண்ணும் நடுங்குகின்றன; ஆனால் ஆண்டவர் தம் மக்களுக்குப் புகலிடம், இஸ்ராயேல் மக்களுக்குக் காவலரண்.

17 அப்போது, நமது பரிசுத்த மலையான சீயோனில் குடிகொண்டுள்ள உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நாமே என்று அறிவீர்கள்; யெருசலேம் நகரம் பரிசுத்த இடமாயிருக்கும், அந்நியர் அதன் வழியாய் ஒரு போதும் செல்ல மாட்டார்கள்.

18 அந்நாளில் - மலைகள் இனிமையான இரசம் சிந்தும், குன்றுகளிலிருந்து பால் வழிந்தோடும்; யூதாவின் அருவிகளிலெல்லாம் நீரோடும், ஆண்டவரின் கோயிலிலிருந்து நீரூற்று ஒன்று கிளம்பும், சித்தீம் என்னும் பள்ளத்தாக்கில் பாயும்.

19 எகிப்து நாடு பாழாகும், இதுமேயா பாலைநிலமாகி விடும்; ஏனெனில் யூதாவின் மக்களை அநியாயமாய்த் துன்புறுத்தின, தங்கள் நாட்டில் மாசற்ற இரத்தத்தைச் சிந்தின.

20 யூதாவோ என்றென்றும் மக்கள் குடியிருக்கும் இடமாகும், யெருசலேமிலும் எல்லாத் தலைமுறைக்கும் மக்கள் வாழ்வர்.

21 அவர்கள் இரத்தத்திற்கு நாம் பழிவாங்குவோம், குற்றவாளிகளை நாம் தண்டியாமல் விடோம், ஆண்டவர் சீயோனில் குடிகொண்டிருப்பார்."