ஜெபமாலை யாருக்காக சொல்லப்படுகிறது? யாரை மகிமைப்படுத்த சொல்லப்படுகிறது?

ஜெபமாலை தமத்திரித்துவத்தை போற்றிப் புகழத்தான் சொல்லப்படுகிறது.

வெளிப்பார்வைக்கு மாதாவை புகழ்வது போல் தோன்றினாலும் உண்மையில் புகழப்படுவது தமத்திருத்துவமே.

அதனால்தான் ஜெபமாலைக்கு இத்தனை சக்தி.

சர்வ வல்லமை படைத்த தமதிருத்துவத்தின் சக்தி வெளிப்படுவதால்தான் சாத்தான் அஞ்சி நடுங்கி ஒட்டம் பிடிக்கிறான்.

நாம் சொல்லும் ஒவ்வொரு அருள் நிறை மந்திரத்திலும் பிதாவாகிய சர்வேசுவரன்; சுதனாகிய இயேசு; பரிசுத்த ஆவியானவர் மகிமைப்படுத்தப்படுகிறார்கள்.

பிதா கற்றுக்கொடுத்த " அருள் நிறை மரியே வாழ்க கர்த்தர் உம்முடனே " ( கபரியேல் தூதரை மாதாவிடம் அனுப்பி நீ சென்று என் மகளைப்பார்த்து இப்படித்தான் வாழ்த்த வேண்டும் என்று பிதா சொல்லி அனுப்பியதால் அருள் நிறை மந்திரத்தின் முதல் இரண்டு வரிகளை இயற்றியவர் பிதாவாகிறார்)

பரிசுத்த ஆவியானவர் கற்றுக்கொடுத்த " பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே ! உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே " ( எலிசபெத்தம்மாள் பரிசுத்த ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு சொல்லியதால் அடுத்த இரண்டு வரிகளை இயற்றியவர் பரிசுத்த ஆவியானவராகிரார்)

அடுத்த வாக்கியங்களில் “ அர்ச்சிஷ்ட்ட மரியாயே ! சர்வேசுவரனுடைய மாதாவே ! “ என்று வாழ்த்தி விட்டு அவருடைய திருக்குமாரனிடம்தான் நம் தாயை மன்றாட கேட்கிறோம்.

மேலும் மற்ற ஜெபமாலை மந்திரங்களான நம் இயேசு சுவாமி கற்றுக்கொடுத்த பரலோக மந்திரம், நம் தேவ மாதா கற்றுக்கொடுத்த “ ஓ என் இயேசுவே ( 1917, பாத்திமா) , இருப்பதால் ஜெபமாலை மகிமை பெறுகிறது; வல்லமையும் பெறுகிறது.

மேலும் பரலோக மந்திரமும், அருள் நிறை மந்திரமும் பன்மையில் ஜெபிக்கப்படுவதால் அதாவது “ பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே” “ பாவிகளாக இருக்கிற எங்களுக்காக “ என்று நாம் ஜெபிப்பதால் நமக்காகவும், இந்த உலகத்தில் வாழும் அனைத்து மக்களுக்காகவும் நாம் சொல்லும் ஒவ்வொரு பர-அருள் மந்திரங்கள் அமைவதாலும் அதற்கு அவ்வளவு மகிமை; வலிமை.

இப்போது புரிகிறதா ? மாதா தன் ஒவ்வொரு காட்சியிலும் " ஜெபமாலை சொல்லுங்கள் " பாவிகள் மனந்திருந்த " ஜெபமாலை சொல்லுங்கள் " என்று ஏன் கேட்கிறார்கள் என்று.

மாதா கேட்காத விசயங்களான அவர் சொரூபத்திற்கு சேலை கட்டுவோம்; வேளாங்கன்னி, பூண்டி சென்று மொட்டை போடுவோம் ( தவறல்ல) ஆனால் அன்னை அவர்கள் விரும்பி கேட்கும் ஜெபமாலையை மட்டும் சொல்ல மாட்டோம் என்றால் இது என்ன நியாயம்?

நாம் எப்படி சொல்ல முடியும் " நாங்கள் மாதாவின் பிள்ளைகள் " " நாங்கள் மாதாவை நேசிக்கிறோம் " என்று. அப்படி சொன்னால் அது பொய்தானே?
" ஜெபம் செய்வோம்; தினம் ஜெபமாலை சொல்வோம்; பாவத்திற்காக பரிகாரம் புரிவோம் " என்று மாதாவே சரணம் பாட்டில் நாம் அடிக்கடி சொல்லும் பொய் போலத்தான் இந்த பொய்யும். அதனால் இனி பொய் சொல்ல வேண்டாம்.

ஜெபமாலை ஜெபிக்காதவர்கள் ஜெபமாலையை துவக்கிவிடுங்கள்.
தமத்திருத்துவம் மகிமை பெறும், நம் அன்னை விரும்பிக்கேட்கும் ஜெபமாலையை அடிக்கடி ஜெபிப்போம். குடும்ப ஜெபமாலையை நம் குடும்பத்தில் கட்டாயமாக்குவோம்.

நம் குடும்பமும், இந்த உலகமும் வாழ நாள் தோறும் ஜெபிப்போம் ஜெபமாலை... தமத்திருத்துவத்தின் அன்பில் நம் அன்னையின் பாதுகாப்பில் வாழ ஜெபிப்போம்... ஜெபமாலை... ஜெபிப்போம்...