குடும்ப ஜெபமாலை!

ஒரு முறை ஒரு குருவானவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர்   ஒரு நிகழ்வைச் சொன்னார். அவர்  தொடர்  வண்டியில் பயணம் செய்தபோதெல்லாம் சில இஸ்லாமியர்கள் தங்களுடைய தொழுகை நேரத்தில் தொழுவதைப் பார்த்திருக்கிறார். சில இந்துக்கள் தங்களது மத புத்தகத்தை படித்து பிரார்த்தனை செய்வதையும் பார்த்திருக்கிறார்.

அதே போல்  ஒரு முறை அவர் வாஸ்கோடகாமா விரைவு  ரயிலில்  வேளாங்கண்ணி  செல்ல  நேர்ந்தபோது  கோவாவில் இருந்து ஒரு  குடும்பமும்  பயணம்  செய்திருக்கிறது.  அவர்கள்  ஒரு பெரிய குடும்பம்.    அனைவரும்    சேர்ந்து   அவர்களது   தாய்  மொழியில் குடும்ப ஜெபமாலை செய்துகொண்டே சென்றிருக்கின்றனர்.  அதைப்  பார்த்த அந்த குருவானவருக்கு மிகவும்  மகிழ்ச்சியாக இருந்ததாம். அதைப்போல  எல்லாக் கிறிஸ்தவக் குடும்பமும் இருந்தால் நன்றாக இருக்கும் என கூறினார்.

இன்றைய   பரபரப்பான உலகில்  ஒரே   குடும்பமாக சேர்ந்து பேச, உணவருந்த  நேரம்  கிடையாது. ஏன்  கணவன்  மனைவி  குழந்தைகள்  மூவரையும்   ஒரே   நேரத்தில்   வீட்டில்  பார்ப்பதே அரிதாகி  விட்டது.  ஏதாவது ஒன்றை தேடிக்கொண்டே நமது வாழ்க்கைப் பயணம் செல்கிறது. கடவுளைத் தேடுவது   என்பது  கடினமாகிவிட்டது.  குடும்பமாக அமர்ந்து ஜெபிப்பது என்பது  எத்தனை   இனிமையானது.   எத்தனை   பலம்  வாய்ந்தது    என்று சுவைத்துப்    பார்த்தால்  மட்டும்  தான்   புரியும். 

ஒரு  காலத்தில்   வீடுகளில்  மாலையில் அனைவரும்  கூடி ஜெபித்து அதன் பின்னர்  இரவு  உணவு உண்ட காலமுண்டு..  இன்று அனைவரும்  கூடி  தொலைக்காட்சிக்கு முன்  அமர்ந்து நாடகங்களிலும், திரைப்படங்களிலும் பொழுதைப் போக்கி வெறுமையாகிப் போகிற  காலமாகி  விட்டது.   குடும்ப   ஜெபமில்லாத  வீடு   கூரையில்லாத வீடு   என்று   சொல்வார்கள்.  கூரையில்லாத   வீட்டில்  விஷ   ஜந்துக்களும் திருடர்களும்ஆபத்துக்களும் அழைக்காமலே உள்ளே வரும். அதே போல்தான் குடும்ப ஜெபமில்லாத வீட்டில் பிரச்சனைகளும் துன்பங்களும் துயரங்களும் எளிதில்  தாக்கும்.  அதே  நேரத்தில்  ஜெபிக்கிற  இல்லத்திலும்  உள்ளத்திலும் துன்பங்களையும் துயரங்களையும் தாங்கக்கூடிய சக்தியை இறைவன் தருவார்.குடும்பங்களில்   குடும்ப   ஜெபம்   நாள்தோறும்   ஜெபிக்கப்பட   வேண்டும். பிள்ளைகளைச் ஜெபிக்கச் சொல்லி பெற்றோர்கள் தூண்ட வேண்டும்.

ஜெபமாலை எப்போதும்  ஒரு குடும்பச்  ஜெபமாகவும் ஒரு குடும்பத்திற்கான  ஜெபமாகவும் இருந்திருக்கிறது  என்று புனித இரண்டாம் ஜான்   பால் கூறுகிறார்.  ஜெபமாலையில் நாம் ஜெபிக்கக்கூடிய  ஒவ்வொரு வார்த்தைகளும் திருவிவிலியத்தில் இருந்து எடுக்கப்பட்டது. (லூக் 1 : 28) நாம் ஜெபமாலை ஜெபிக்கின்ற போது கடவுளது வார்த்தையைத்தான் தியானித்து ஜெபிக்கிறோம்.  அன்னையை   ஒவ்வொரு   முறையும்  அருள்   நிறை  மரியே வாழ்க!  என்று வாழ்த்தும்போது இறைவனுக்குப் பெருமை  சேர்க்கிறோம்.

ஜெபமாலை என்பது ‘‘மானிடர்களை மீட்க  வானவர்  விடுகின்ற வடமே’’ -   வீரமாமுனிவரின் கூற்றுப்படி  நம்மை   பாவ   வழியில்  இருந்து  மீட்க வந்த வல்லமை    மிக்க   ஜெபமாலையை  ஜெப்போம்.   கூடி   ஜெபித்தால் கோடி நன்மை  என்பதற்கேற்ப குடும்பமாக கூடி  ஜெபிப்போம். 1  தெச 5 :  17, 19 ல் கூறியுள்ளபடி நல்லதைப்  பற்றிக்  கொள்ளுவோம். எல்லா வகையான  தீமைகளையும் விட்டு விலகுவோம்.

ஜெபமாலை அருள் வரங்களின் கிரீடம் என்ற தந்தை  பியோவின் வார்த்தைக்கேற்ப ஜெபமாலை  ஜெபிப்போம்.   ஏராளமான   அருள்   வரங்களை   இறைவனிடமிருந்து  பெறுவோம். அக்டோபர் மாதம்  ஜெபமாலை  அன்னைக்குரிய   மாதம். ஜெபமாலை ஜெபிப்போம். ஜெயம் பெறுவோம்.