கலாத்தியர்

அதிகாரம் 01

1 கலாத்திய நாட்டில் உள்ள சபைகளுக்கு, மனிதர்களாலோ, மனிதன் வழியாகவோ ஏற்படுத்தப்படாமல், இயேசு கிறிஸ்துவினாலும், அவரை இறந்தோரிடமிருந்து உயிர்ப்பித்த பரம தந்தையாகிய கடவுளாலும் அப்போஸ்தலனாய் ஏற்படுத்தப்பட்ட சின்னப்பனாகிய யானும்,

2 என்னுடனிருக்கும் எல்லாச் சகோதரரும், எழுதுவது:

3 நம் தந்தையாகிய கடவுளிடமிருந்தும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் சமாதானமும் உண்டாகுக!

4 இவரே நம் கடவுளும் தந்தையுமானவரின் திருவுளத்திற்கேற்ப, பொல்லாத இன்றைய உலகினின்று நம்மை விடுவிக்கும்படி, நம் பாவங்களுக்காகத் தம்மையே கையளித்தவர்;

5 அப்பரம தந்தைக்கே என்றென்றும் மகிமை உண்டாகுக! ஆமென்.

6 கிறிஸ்துவின் அருளால் உங்களை அழைத்தவரை விட்டு விட்டு, இவ்வளவு குறுகிய காலத்தில், வேறொரு நற்செய்தியைப் பின்பற்றப் போய்விட்டீர்களே! எனக்கே வியப்பாய் இருக்கிறது.

7 வேறொரு நற்செய்தி இருக்கிறது என்பதன்று; உங்கள் மனத்தைக் குழப்பிக் கிறிஸ்துவின் நற்செய்திகளைத் திரிக்க விரும்பும் சிலர் உள்ளதுதான் தொல்லை.

8 ஆனால், நாங்கள் அறிவித்த நற்செய்தியினின்றும் வேறான ஒன்றை, நாங்களோ, விண்ணிலிருந்து வந்த ஒரு தூதரோ, யார் வந்து அறிவித்தாலும், அவன் சபிக்கப்படுக!

9 ஏற்கனவே சொல்லியிருக்கிறோம், இப்பொழுது திரும்பவும் சொல்லுகிறேன்: நீங்கள் பெற்றுக் கொண்ட நற்செய்தினின்று வேறானதொன்றை எவனாவது உங்களுக்கு அறிவித்தால், அவன் சபிக்கப்படுக!

10 இப்படி நான் சொல்லும்போது, நான் தேடுவது மனிதருடைய நல்லெண்ணமா, கடவுளுடைய நல்லெண்ணமா? நான் மனிதருக்கு உகந்தவனாய் இருக்கவா பார்க்கிறேன்? இன்னும் மனிதருக்கு உகந்தவனாய் இருக்கப் பார்த்தால், நான் கிறிஸ்துவின் ஊழியனாய் இருக்கவே முடியாது.

11 சகோதரர்களே, உங்களுக்கு ஒன்று தெளிவபுடுத்த விரும்புகிறேன். நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தி மனிதனின் படைப்பன்று.

12 மனிதனிடமிருந்து நான் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை,. எந்த மனிதனும் அதை எனக்குக் கற்றுக்கொடுக்கவில்லை. இயேசு கிறிஸ்து அருளிய திருவெளிப்பாட்டின் வழியானவே அந்நற்செய்தி எனக்குக் கிடைத்தது.

13 ஒரு காலத்தில் நான் யூத மறையைப் பின்பற்றியபொழுது, என்ன செய்து வந்தேன் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். கடவுளின் திருச்சபையை எவ்வளவோ துன்புறுத்தி, ஒழிக்க முயன்றேன்.

14 முன்னோர் பரம்பரையில் ஆர்வம் மிக்கவனாய், என் இனத்தவருள் என் வயதினர் பலரினும் மேலாக யூத மறை ஒழுக்கத்தில் சிறந்து விளங்கினேன்.

15 ஆனால் தாயின் வயிற்றில் இருந்தபோதே என்னைத் தேர்ந்தெடுத்துத் தமது அருளால் என்னை அழைத்த இறைவன்,

16 தம் மகனைப் பற்றிய நற்செய்தியை நான் புறவினத்தார்க்கு அறிவிக்கும்படி, அம்மகனை எனக்குள் வெளிப்படுத்தத் திருவுளங்கொண்டார். அப்போது நான் எந்த மனிதனிடமும் போய்க் கலந்து ஆலோசிக்காமல்,

17 எனக்கு முன் அப்போஸ்தலர் ஆனவர்களையும் காண யெருசலேமுக்குப் போகாமல் உடனே அரேபியாவுக்குச் சென்றேன். 'அங்கிருந்து தமஸ்கு நகருக்குத் திரும்பினேன்.

18 மூன்றாண்டுகளுக்குப் பின்னர் கேபாவைப் பார்த்துப் பேச யெருசலேமுக்குப் போனேன்; அங்கே பதினைந்து நாள் அவருடன் தங்கியிருந்தேன்.

19 மற்ற அப்போஸ்தலருள் ஆண்டவரின் சகோதரரான யாகப்பரைத் தவிர வேறு யாரையும் நான் காணவில்லை.

20 நான் எழுதுகிற இதில் பொய்யொன்றுமில்லை. 'கடவுளே சாட்சி.

21 பின்பு சீரியா, சிலியா நாட்டுப் பகுதிகளுக்குப் போனேன்.

22 ஆயினும் யூதேயா நாட்டுக் கிறிஸ்தவ சபைகளுக்கு அதுவரை அறிமுகம் ஆகாமலே இருந்தேன்.

23 ஒரு காலத்தில் நம்மைத் துன்புறுத்தியவன், தான் முன்பு ஒழிக்க முயன்ற விசுவாசத்தைப் போதித்து இப்பொழுது நற்செய்தி அறிவிக்கிறான் என்று மட்டும் அவர்கள் கேள்விப்பட்டிருந்தனர்.

24 அதற்காக என்னை முன்னிட்டுக் கடவுளை மகிமைப்படுத்தினர்.

அதிகாரம் 02

1 பதினான்கு ஆண்டுகள் கடந்தபின், தீத்துவையும் கூட்டிக்கொண்டு, மறுபடியும் பர்னபாவுடன் யெருசலேமுக்குப் போனேன்.

2 அங்குப் போகவேண்டுமென்று இறைவன் வெளிப்படுத்தியதால் நான் போனேன்; நான் புறவினத்தாரிடையே அறிவிக்கும் நற்செய்தியை அங்கே விளக்கிக் காட்டினேன்; அதாவது, செல்வாக்குள்ளவர்களுக்குத் தனிமையில் எடுத்துரைத்தேன். இப்போது நான் வருந்திச் செய்யும் வேலையும் இதுவரை உழைத்த உழைப்பும் வீணாகுமோ என்று அஞ்சி இப்படிச் செய்தேன்.

3 என்னுடனிருந்தத் தீத்து கிரேக்கனாயிருந்தும் விருத்தசேதனம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்படவில்லை.

4 திருட்டுத்தனமாய் நுழைந்த கள்ளச் சகோதரர்கள் அங்கே இருந்ததால்தான், விருத்தசேதனத்தைப் பற்றிய பேச்சு எழுந்தது. யூதச் சட்டத்திற்கு அடிமைப்படாமல், கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் வாழும் முறையைப் பற்றி வேவுபார்க்க இவர்கள் வந்திருந்தனர். நம்மைத் திரும்பவும் பழைய அடிமை நிலைக்குக் கொண்டுவருவதே அவர்கள் நோக்கமாய் இருந்தது.

5 உங்கள் நன்மையை நினைத்து, நற்செய்தியின் உண்மையைப் பழுதுபடாமல் காக்க அவர்களுடைய வற்புறுத்தலுக்கு ஒரு நாழிகையேனும் நாங்கள் விட்டுக் கொடுக்கவில்லை.

6 பெரியவர்கள் என மதிக்கப்பட்டவர்கள் கூட இவர்கள் முன்பு எந்நிலையில் இருந்தார்கள் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. கடவுள் ஆளைப்பார்த்தா செயலாற்றுகிறார்! அந்தச் செல்வாக்குள்ளவர்கள் கூட நான் போதிப்பதற்கு மேல் புதிதாய் ஒன்றும் சேர்க்கவில்லை.

7 மாறாக, விருத்தசேதனம் பெற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கும் பணி இராயப்பரிடம் ஒப்படைக்கப்பட்டது போலவே, விருத்தசேதனம் இல்லாதவர்களுக்கு அதை அறிவிக்கும் பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொண்டனர் ஆம்,

8 விருத்தசேதனமுள்ளவர்களின் அப்போஸ்தலனாகும்படி இராயப்பருள் செயலாற்றியவரே புறவினத்தாரின் அப்போஸ்தலனாகும் படி என்னுள்ளும் செயலாற்றினார்.

9 அந்த அருள் எனக்கு அளிக்கப்பட்டதை உணர்ந்து, திருச்சபையின் தூண்கள் என மதிக்கப்பட்ட யாகப்பர், கேபா, அருளப்பர் ஆகியோர், நட்புறவின் அடையாளமாக, எனக்கும் பர்னபாவுக்கும் கை கொடுத்தனர்; விருத்தசேதனம் இல்லாதவர்க்கு நாங்கள் நற்செய்தி அறிவிப்பது என்றும் ஏற்பாடு செய்துகொண்டோம்.

10 ஏழைகளை மறக்க வேண்டாம் என்று மட்டும் கேட்டுக்கொண்டனர்; அவர்களுக்கு உதவி செய்வதில் தான் முழு ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்தேன்.

11 ஆனால், கேபா அந்தியோக்கியாவுக்கு வந்த போது, அவர் செய்வது கண்டனத்துக்கு உரியது என நன்றாகத் தெரிந்தால், நான் நேருக்கு நேராய் எதிர்த்தேன்.

12 ஏனெனில், யாகப்பரின் ஆட்கள் வருமுன், கேபா புறவினத்தாருடன் உண்டு வந்தார். ஆனால் அவர்கள் வந்தபோது, விருத்தசேதனம் உள்ளவர்க்கு அஞ்சிப் பிரிந்து விலகலானார்.

13 மற்ற யூதர்களும் இந்த வெளிவேடத்தில் அவரோடு சேர்ந்து கொண்டனர். இந்த வெளிவேடம் பர்னபாவைக்கூடக் கவர்ந்துவிட்டது.

14 ஆனால், அவர்கள் நற்செய்தியின் உண்மை எனும் நேர்பாதையில் நடவாததை நான் கண்டபோது, எல்லார் முன்னிலையிலும் கேபாவிடம் சொன்னதாவது: " நீர் யூதனாயிருந்தும், யூத முறைப்படி வாழ்கிறீரே. புறவினத்தார் யூத முறைமையைக் கடைப்பிடிக்கும்படி நீர் கட்டாயப்படுத்துவது எப்படி?"

15 "நாம் பிறப்பாலே யூதர்கள்; புறவினத்தாரைச் சார்ந்த பாவிகள் அல்ல;

16 எனினும், திருச்சட்டம் விதிக்கும் செயல்களால் அன்று, இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தால் மட்டுமே ஒருவன் இறைவனுக்கு ஏற்புடையவன் ஆகக் கூடும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆகவே தான் நாமும் திருச்சட்டம் விதித்த செயல்களாலன்று, கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தால் இறைவனுக்கு ஏற்புடையவராகும்படி, கிறிஸ்து இயேசுவில் விசுவாசம் கொண்டோம்; ஏனெனில், திருச் சட்டம் விதித்த செயல்களால் எந்த மனிதனும் இறைவனுக்கு ஏற்புடையவனாவதில்லை.

17 கிறிஸ்துவோடு இணைவதால் இறைவனுக்கு ஏற்புடையவராவதற்குத் தேடும் நாமும் பாவிகளே என்றால், கிறிஸ்து பாவத்திற்குத் துணை புரிகிறார் என்றாகுமே! இப்படி ஒருகாலும் சொல்லக் கூடாது.

18 நான் தகர்த்ததை நானே மீளவும் கட்டி எழுப்பினால், சட்டத்தை மீறினவன் என்பதை நானே நிலைநாட்டுபவன் ஆவேன்.

19 கடவுளுக்கென்று வாழும்படி நான் சட்டத்தின் செயலால் சட்டத்தைப் பொறுத்தமட்டில் இறந்தவன் ஆனேன்.

20 கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். இனி, வாழ்பவன் நானல்ல; என்னில் வாழ்பவர் கிறிஸ்துவே. இப்போது ஊனுடலோடு நான் வாழ்வது கடவுளின் மகன்மேல் உள்ள விசுவாசத்தின் வாழ்வாகும். இவரே என்மேல் அன்பு கூர்ந்தார்; எனக்காகத் தம்மையே கையளித்தார்.

21 கடவுளின் அருளை நான் வெறுமையாக்க மாட்டேன். ஏனெனில், திருச்சட்டத்தின் வழியாய் இறைவனுக்கு ஏற்புடையவராகக் கூடுமாயின், கிறிஸ்து இறந்தது வீணே. "

அதிகாரம் 03

1 அறிவிலிகளான கலாத்தியரே, உங்களை மயக்கியவன் யார்? இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டது உங்கள் கண்முன்னால் சித்தரித்துக் காட்டப்படவில்லையா? உங்களிடம் ஒன்று கேட்டறிய விரும்புகிறேன்;

2 நீங்கள் ஆவியானவரைப் பெற்றுக்கொண்டது எவ்வாறு? திருச்சட்டம் விதித்த செயல்களைச் செய்ததினாலோ? நற்செய்தியைக் கேட்டு விசுவசித்ததினாலோ?

3 ஆவியைச் சார்ந்த வாழ்க்கையைத் தொடங்கினீர்களே; இப்பொழுது ஊனுடலைச் சார்ந்தவற்றில் நிறைவு காணப்போகிறீர்களா? அத்தகைய அறிவிலிகளா நீங்கள்?

4 இதனால், உங்களுக்குக் கிடைத்த இத்துணை மேலான நன்மைகளும் வீண்தானா?

5 வீணாகத்தான் முடியுமா? அப்படியானால், உங்களுக்கு ஆவியானவரை அளித்து உங்களிடையே வல்லமை மிக்க செயல்களைச் செய்பவர் ஏன் அப்படிச் செய்கிறார்? நீங்கள் திருச்சட்டம் விதித்த செயல்களை நிறைவேற்றுவதால் செய்கிறாரா? நீங்கள் நற்செய்தியைக் கேட்டு விசுவசித்ததால் செய்கிறாரா?

6 ஆபிரகாமைப் பாருங்கள்! ' அவர் கடவுளை விசுவசித்தார்; அதனால் கடவுள் அவரைத் தமக்கு ஏற்புடையவரென மதித்தார்.'

7 ஆகவே யார் விசுவாசத்தால் வாழ்கிறார்களோ அவர்களே ஆபிரகாமின் மக்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

8 கடவுள் புறவினத்தாரை விசுவாசத்தினால் தமக்கு ஏற்புடையவராக்குவார் என்பதை மறைநூல் முன்னறிந்தே, ' புறவினத்தார் அனைவரும் உன் வழியாய் ஆசி பெறுவர் ' என்ற நற்செய்தியை ஆபிரகாமுக்கு முன்னுரைத்தது.

9 ஆகவே, விசுவாசத்தால் வாழ்பவர்கள் விசுவாசமுள்ள ஆபிரகாம் பெற்ற ஆசியில் பங்கு பெறுவர்.,

10 சட்டம் விதித்த செயல்களையே நம்பி வாழ்பவர்கள் சாபத்துக்கு ஆளானவர்கள். ஏனெனில், 'திருச்சட்ட நூலில் எழுதப்பட்டிருக்கும் யாவற்றையும் கடைப்பிடிப்பதில் நிலைத்திராத எவனும் சபிக்கப்படுக! ' என்று எழுதியுள்ளது.

11 திருச்சட்டத்தினால் எவனும் கடவுள் முன்னிலையில் ஏற்புடையவனாவதில்லை என்பதும் தெளிவு; ஏனெனில், 'விசுவாசத்தினால் இறைவனுக்கு ஏற்புடையவனாக்கப்பட்டவனே வாழ்வு பெறுவான்' என்று எழுதியுள்ளது.

12 திருச்சட்டம் விசுவாசத்தைச் சார்ந்ததன்று; மாறாக, " கட்டளைகளைக் கடைப் பிடிப்பவன் அவற்றால் உயிர் வாழ்வான் " என்று எழுதப்பட்டுள்ளது.

13 'மரத்தில் தொங்குபவன் எவனும் சபிக்கப்பட்டவனே' என்று எழுதியுள்ளவாறு நமக்காக கிறிஸ்து சாபமாகி நம்மைச் சட்டத்தின் சாபத்தினின்று மீட்டுக்கொண்டார்.

14 ஆபிரகாமுக்குக் கிடைத்த ஆசி இயேசு கிறிஸ்துவின் வழியாய்ப் புறவினத்தார்க்குக் கிடைக்கவும். இவ்வாறு வாக்களிக்கப்பட்ட ஆவியானவரை நாம் விசுவாசத்தின் வழியாய்ப் பெற்றுக்கொள்ளவும் இப்படிச் செய்தார்.

15 சகோதரர்களே, உலக வழக்கிலிருந்து ஓர் எடுத்துக்காட்டுத் தருகிறேன்: மனிதர் செய்யும் சாதாரண உடன்படிக்கை கூட, முறைப்படி செய்து முடிக்கப்பட்டதாயின், அதை யாரும் வெறுமையாக்குவதில்லை; அதனுடன் ஒன்றையும் விட்டுவதுமில்லை.

16 வாக்குறுதிகளோ ஆபிரகாமுக்கும் அவரது வழித்தோன்றலுக்கும் தரப்பட்டன. 'வழித் தோன்றல்களுக்கு' என்று பன்மையில் குறிப்பிடாமல், ஒருமையில் 'உன் வழித் தோன்றலுக்கு' என்றுள்ளது. கிறிஸ்துவே அந்த வழித் தோன்றல்.

17 என் கருத்து இதுவே: கடவுள் வாக்குறுதி தந்து ஓர் உடன்படிக்கையைச் செய்து முடித்தார்; நானூற்று முப்பது ஆண்டுகளுக்குப் பின் வந்த திருச்சட்டம், அவ்வுடன்படிக்கையைச் செல்லாததாக்கி, வாக்குறுதியை வெறுமையாக்கிவிட முடியாது.

18 உரிமைப் பேறாக இறைவன் தருவது திருச்சட்டத்தின் வழியாய்க் கிடைப்பதாய் இருந்தால், அது வாக்குறுதியின் வழியாய்த் தரப்படுவதன்று என்றாகிறது; ஆனால் கடவுள் அதை ஆபிரகாமுக்கு வாக்குறுதியின் வழியாகவே அருளினார்.

19 அப்படியானால் திருச்சட்டம் எதற்கு? குற்றங்களை முன்னிட்டு அது பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது. வாக்குறுதியைப் பெற்றுக் கொண்ட வழித்தோன்றல் வரும்வரை அது நீடிக்க வேண்டியிருந்தது. வானதூதர்களின் வழியாய் நிறுவப்பட்ட அச்சட்டம் இணைப்பாளர் ஒருவர் வழியாய்த் தரப்பட்டது.

20 ஒருவர் மட்டும் இருந்தால். இணைப்பாளருக்கு இடமில்லை. கடவுளோ ஒருவர்தான்.

21 அப்படியானால் திருச்சட்டம் கடவுளின் வாக்குறுதிகளுக்கு முரணானதா? ஒருகாலும் இல்லை. வாழ்வு அளிக்க வல்லதொரு சட்டம் தரப்பட்டிருந்தால், சட்டத்தின் வழியாய் மெய்யாகவே மனிதன் இறைவனுக்கு ஏற்புடையவனாகி இருக்கலாம்.

22 ஆனால், அனைத்துமே பாவத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருப்பதாக மறைநூல் சாற்றுகிறது. வாக்களிக்கப்பட்ட அப்பேறு விசுவசிப்பவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசத்தின் அடிப்படையில் கிடைக்கவேண்டுமென்று இவ்வாறு ஆயிற்று.

23 ஆனால் அந்த விசுவாசம் அளிக்கப்படுமுன், அவ்விசுவாசம் வெளிப்படும் வரை, சட்டத்தின் கீழ் அடைப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தோம்.

24 அவ்வாறு, விசுவாசத்தால் நாம் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆக்கப்படுவதற்குத் திருச்சட்டம் நம்மைக் கிறிஸ்துவினிடம் அழைத்துச் செல்லும் வழித்துணையாய் அமைந்தது.

25 இப்பொழுது விசுவாசம் அளிக்கப்பட்டதால், இனி நாம் வழித்துணைவனின் கண்காணிப்பில், இல்லை.

26 ஏனெனில், கிறிஸ்து இயேசுவின் மீது வைத்த விசுவாசத்தின் வழியாய் நீங்கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள்.

27 எவ்வாறெனில், கிறிஸ்துவுக்குள் ஞானஸ்தானம் பெற்ற நீங்கள் எல்லோரும் கிறிஸ்துவை அணிந்து கொண்டீர்கள்.

28 இனி யூதனென்றும் கிரேக்கனென்றும் இல்லை; அடிமையென்றும் உரிமைக் குடிமகனென்றும் இல்லை; ஆணென்றும் பெண்ணென்றும் இல்லை; கிறிஸ்து இயேசுவுக்குள் நீங்கள் அனைவரும் ஒருவரே.

29 நீங்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்களாயின், ஆபிரகாமின் வழி வந்தவர்களாய் இருக்கிறீர்கள்; வாக்குறுதியின்படி உரிமையாளர்களுமாய் இருக்கிறீர்கள்.

அதிகாரம் 04

1 இன்னும் ஓர் எடுத்துக்காட்டுச் சொல்லுகிறேன்: தந்தையின் சொத்தனைத்திற்கும் என் மகன் தலைவனாய் இருந்தாலும், சிறுவனாய் இருக்கும் வரையில், அவனுக்கும் அடிமைக்கும் வேறுபாடு எதுவும் இல்லை;

2 தந்தை குறித்த நாள்வரை, பாதுகாப்பாளர்கள், கண்காணிப்பாளர்களின் பொறுப்பில் அவன் இருக்கிறான்.

3 அவ்வாறே நாமும் சிறுவர்களாய் இருந்தபோது உலகப் பூதங்களுக்கு அடிமைப்பட்டவர்களாய் இருந்தோம்.

4 ஆனால், காலம் நிறைவுற்றபோது, நாம் இறைவனின் பிள்ளைகளாகும்படி திருச்சட்டத்திற்குக் கீழ்ப்பட்டிருந்தவர்களை மீட்டுக்கொள்வதற்காக,

5 கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்குக் கீழ்ப்பட்டவராகவும் அனுப்பினார்.

6 அந்த ஆவியானவர் ' அப்பா, தந்தாய் ' எனக் கூப்பிடுகிறார். ஆகவே, இனி நீ அடிமை அல்ல, மகன்தான்;

7 மகனாயின் உரிமையாளனுமாம். இவையாவும் கடவுளின் செயலே.

8 ஒரு காலத்தில் நீங்கள் கடவுளை அறியாதிருந்தபோது, இயல்பாகவே, கடவுளல்லாதவற்றுக்கு அடிமைகளாய் இருந்தீர்கள்;

9 ஆனால், இப்பொழுது கடவுளை அறிந்து ஏற்றுக் கொண்டீர்கள்; சரியாய்ச் சொல்லவேண்டுமாயின், இப்பொழுது கடவுளே உங்களை அறிந்து ஏற்றுக்கொண்டிருக்கிறார்; அப்படியிருக்க வலுவற்ற வறுமை மிக்க உலகப் பூதங்களிடம் திரும்பிப் போய், அவற்றிற்கு மறுபடியும் அடிமைகளாவதற்கு நீங்கள் விரும்புவதெப்படி?

10 நாள், திங்கள், காலம், ஆண்டு இவற்றைப் பார்க்கிறீர்களே.

11 உங்களுக்காக நான் உழைத்தது வீண்தானா என அஞ்ச வேண்டியிருக்கிறது.

12 சகோதரர்களே, உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்: நீங்கள் என்னைப்போல் நடங்கள்; ஏனெனில், நான் உங்களைப்போல் ஆனேன். நீங்கள் எனக்கு அநீதி யொன்றும் இழைக்கவில்லை.

13 என் உடற் பிணிதான் உங்களுக்கு முதன்முதல் நற்செய்தி அறிவிக்க எனக்கு வாய்ப்பளித்தது. இது உங்களுக்கு நினைவிருக்கும்.

14 என் உடல் நிலை உங்களுக்கு இடைஞ்சலாய் இருந்தும், நீங்கள் என்னைப் புறக்கணிக்கவில்லை, வெறுத்து ஒதுக்கவில்லை. மாறாக, கடவுளின் தூதரை ஏற்றுக்கொள்வது போல் என்னை ஏற்றுக்கொண்டீர்கள்; ஏன், கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொள்வது போலவே என்னை ஏற்றுக்கொண்டீர்கள்.

15 அதைப் பெரும் பேறாகவும் கருதினீர்கள்; அந்த மனநிலை இப்பொழுது எங்கே? முடிந்திருந்தால், உங்கள் கண்களையும் எனக்காகப் பிடுங்கிக் கொடுக்கத் தயங்கியிருக்க மாட்டீர்கள். உங்களைப்பற்றி இதைத் திண்ணமாகச் சொல்ல முடியும்.

16 இவ்வாறு உங்களுக்கு உண்மையைச் சொன்னதனால் உங்கள் பகைவன் ஆனேனோ?

17 முன்பு நான் குறிப்பிட்டவர்கள் உங்கள்மேல் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் அந்த ஆர்வம் நேர்மையானதன்று. தங்கள் மேல் நீங்களும் அதே ஆர்வம் காட்டவேண்டுமென்று அவர்கள் உங்களை என்னிடமிருந்து பிரிக்கப் பார்க்கிறார்கள்.

18 உங்கள் நடுவில் நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மற்றவர்கள் உங்கள்மேல் ஆர்வம் காட்டுவது எப்பொழுதும் நல்லதே; ஆனால், அந்த ஆர்வம் நேர்மையானதாய் இருத்தல் வேண்டும்.

19 என் குழந்தைகளே, குழந்தை பெற்றெடுக்கும் தாய்ப்போல, உங்களில் கிறிஸ்து உருவாகும் வரை, மறுபடியும் உங்களுக்காக நான் வேதனையுறுகிறேன்.

20 உங்களைப் பொறுத்த மட்டில் என்ன செய்வது என்றே எனக்கு விளங்கவில்லை. இப்பொழுதே நேரில் வந்து, உங்களோடு இருந்து, வேறு வகையாய்ப் பேசிப் பார்த்தால் நலமாயிருக்கும்.

21 சட்டத்திற்குக் கீழ்ப்பட்டிருக்க விரும்புகிறீர்களே, நான் ஒன்று கேட்கிறேன்; அச்சட்டம் சொல்வதை நீங்கள் கேட்டதில்லையா?

22 ஆபிரகாமுக்கு இரு புதல்வர்கள் இருந்தனர். 'ஒருவன் அடிமைப் பெண்ணிடம் பிறந்தவன். மற்றவன் அடிமையல்லாத மனைவியிடம் பிறந்தவன் என்று எழுதியுள்ளது.

23 ஆனால், அடிமைப் பெண்ணின் மகன் இயல்பு முறைப்படி பிறந்தவன். அடிமையில்லாத மனைவியின் மகனோ வாக்குறுதியின் பயனாய்ப் பிறந்தவன்.

24 இது ஓர் உருவகம்: இந்தப் பெண்கள் இருவரும் இரண்டு உடன்படிக்கைகளைக் குறிக்கின்றனர்; ஒன்று, சீனாய் மலையில் செய்யப்பட்ட உடன்படிக்கை. அதனால் அடிமைத்தனத்துக்கெனப் பிள்ளைகள் பிறக்கின்றனர்;

25 ஆகாரால் குறிக்கப்படுவது அரேபியாவிலுள்ள சீனாய் மலை. இது இப்பொழுதிருக்கும் யெருசலேமுக்கு அடையாளம். ஏனெனில், இது தன் மக்களுடன் அடிமையாய் இருக்கிறது.

26 விண்ணக யெருசலேமோ அடிமையன்று; அந்த யெருசலேம் நமக்கு அன்னை.

27 ஏனெனில், 'பிள்ளை பெறாத மலடியே மகிழ்வாயாக! பேறுகால வேதனையுறாதவளே, துள்ளிக் குதித்து ஆர்ப்பரிப்பாயாக! வாழ்க்கைப்பட்டவளின் மக்களைவிட கைவிடப்பட்டவளின் மக்களே மிகப் பலர்' என்று எழுதியுள்ளது.

28 ஆனவே சகோதரர்களே, ஈசாக்கைப் போல நீங்களும் வாக்குறுதியின் புதல்வர்கள்.

29 ஆனால், இயல்பு முறைப்படி பிறந்தவன் தேவ ஆவியின் ஆற்றலால் பிறந்தவனை எவ்வாறு அப்பொழுது துன்புறுத்தினானோ, அவ்வாறே இப்பொழுதும் நடக்கிறது.

30 எனினும் மறைநூல் கூறுவதென்ன? அடிமைப் பெண்ணையும் அவள் மகனையும் விரட்டி விடு; அடிமை அல்லாத மனைவியின் மகனோடு அடிமைப் பெண்ணின் மகன் உரிமை கொண்டாட முடியாது'

31 ஆகவே, சகோதரர்களே, நாம் அடிமைப் பெண்ணின் மக்கள் அல்ல; அடிமை அல்லாத மனைவியின் மக்கள்.

அதிகாரம் 05

1 கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து உரிமை வாழ்வு நமக்கு அளித்தார். அதிலே நிலைத்திருங்கள். அடிமைத்தனத்தின் நுகத்தைத் திரும்பவும் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.

2 சின்னப்பனாகிய நான் உங்களுக்குச் சொல்வது: நீங்கள் விருத்தசேதனம் செய்து கொண்டால், கிறிஸ்துவினால் உங்களுக்குப் பயனே இல்லை.

3 விருத்தசேதனம் செய்து கொள்ளும் ஒவ்வொருவனுக்கும், மீளவும் நான் எச்சரித்து வலியுறுத்துவது. அவ்வாறு செய்பவன் யூதச் சட்டம் முழுவதையும் கடைப்பிடிக்கக் கடமைப்பட்டவன் ஆவான்.

4 அச்சட்டத்தால் இறைவனுக்கு ஏற்புடையவராகப் பார்க்கும் நீங்கள் கிறிஸ்துவுடன் உறவற்றுப் போய்விட்டீர்கள்; அருளாட்சியினின்று நிலைபெயர்த்துவிட்டீர்கள்.

5 நாமோ விசவாசத்தால் இறைவனுக்கு எற்புடையவராக்கப்படுவோம் என்னும் நம்பிக்கை நிறைவேறுமென ஆவலோடு காத்திருக்க ஆவியானவர் நம்மைத் தூண்டுகிறார்.

6 கிறிஸ்து இயேசுவுக்குள் வாழ்கிறவர்களுக்கு விருத்தசேதனமும் பயனற்றது; விருத்தசேதனமின்மையும் பயனற்றது, ஒன்றும் செய்ய இயலாது. தேவைப்படுவது அன்பின் வழியாய்ச் செயலாற்றும் விசுவாசமே.

7 நீங்கள் நன்றாகத்தான் முன்னேறி வந்தீர்கள்; உண்மைக்குக் கீழ்ப்படியாதபடி உங்களைத் தடுத்தவன் யார்?

8 இவ்வாறு செய்ய நீங்கள் தூண்டப்பட்டது உங்களை அழைத்த இறைவனின் செயலால் அன்று.

9 சிறிதளவு புளிப்புமாவு, கலவை முழுவதையும் புளிக்கச் செய்கிறது.

10 வேறுபட்ட கொள்கை எதையும் ஏற்க மாட்டீர்கள் என்பது ஆண்டவருக்குள் உங்களைப்பற்றி எனக்குள்ள உறுதியான நம்பிக்கை. ஆனால் உங்கள் மனத்தைக் குழப்புகிறவன் யாராயிருந்தாலும், அவன் தண்டனைத் தீர்ப்பை அடைவான்.

11 சகோதரர்களே, விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டுமென நான் போதிப்பதாகச் சொல்லுகிறார்களே, அப்படியானால் நான் ஏன் இன்னும் துன்புறுத்தப்படவேண்டும்? நான் அவ்வாறு போதித்தால், சிலுவையால் வரும் இடறலுக்கு இடமே இல்லையே.

12 உங்கள் உள்ளங்களில் குழப்பம் உண்டாக்குகிறவர்கள் தங்களை அண்ணகராகவே ஆக்கிக்கொள்ளட்டுமே.

13 நீங்களோ, சகோதரர்களே, உரிமை வாழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; அந்த உரிமை, ஊனியல்பின் இச்சைகளுக்கு ஏற்ற வாய்ப்பாகும்படி விட்டுவிடாதீர்கள். மாறாக ஒருவருக்கொருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள்.

14 உன்மீது நீ அன்பு காட்டுவது போல, உன் அயலான்மீதும் அன்பு காட்டுவாயாக என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவேறுகிறது.

15 ஆனால், நீங்கள் ஒருவரையொருவர் காட்டு விலங்குகளைப் போல் கடித்து விழுங்குவதை நிறுத்தாவிட்டால், எச்சரிக்கை! ஒருவரால் ஒருவர் அழிந்துபோவீர்கள்.

16 ஆகவே நான் சொல்வது: ஆவியின் ஏவுதலின்படி நடங்கள்; அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்றமாட்டீர்கள்.

17 அந்த இயல்பு இச்சிப்பது தேவ ஆவிக்கு முரணானது. தேவ ஆவி விரும்புவதோ அவ்வியல்புக்கு முரணானது. இவை ஒன்றுக்கொன்று முரணாய் உள்ளன; அதனால் தான் விருப்பமானதை உங்களால் செய்யமுடியாமல் இருக்கிறது.

18 நீங்கள் தேவ ஆவியினால் இயக்கப்பட்டால் சட்டத்திற்குக் கீழ்ப்பட்டவர்களாய் இருக்க மாட்டீர்கள்.

19 ஊனியல்பின் செயல்கள் யாவர்க்கும் தெரிந்தவையே. அவை பின் வருமாறு: கெட்ட நடத்தை. அசுத்தம்,

20 காமவெறி, சிலைவழிபாடு, பில்லிசூனியம், பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை,

21 சினம், கட்சி மனப்பான்மை பிரிவினை. பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலியவை. இத்தகையவற்றில் ஈடுபடுவோர்க்குக் கடவுளின் அரசு உரிமையாகாது என்று நான் ஏற்கனவே சொன்னதை இப்போதும் சொல்லி எச்சரிக்கிறேன்.

22 ஆனால், தேவ ஆவி விளைவிக்கும் பலன்களாவன: அன்பு, மகிழ்ச்சி, அமைதி பொறுமை, பரிவு, நன்னயம், விசுவாசம், சாந்தம், தன்னடக்கம்.

23 இவையுள்ள இடத்தில் சட்டம் எத்தடையும் விதிப்பதற்கு இடமில்லை. .

24 கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் ஊனியல்பை அதன் இழிவுணர்ச்சிகளோடும் இச்சைகளோடும் சேர்த்துச் சிலுவையில் அறைந்துவிட்டார்கள்.

25 ஆவியானவரே நமக்கு உயிர் ஊட்டுபவராயின், ஆவியானவர் காட்டும் நெறியிலேயே நடப்போமாக.

26 வீண் பெருமையைத் தேடாமலும், ஒருவர்க்கொருவர் எரிச்சல் ஊட்டாமலும், ஒருவரைப் பார்த்து ஒருவர் பொறாமைப்படாமலும் இருப்போமாக.

அதிகாரம் 06

1 சகோதரர்களே, ஒருவன் ஏதேனும் குற்றத்தில் அகப்பட்டால், ஆவியானவரைப் பெற்றிருக்கும் நீங்கள் சாந்தமான உள்ளத்தோடு அப்படிப்பட்டவனைத் திருத்துங்கள். நீயும் அவனைப்போலச் சோதனைக்குள்ளாகாதபடி பார்த்துக்கொள்.

2 ஒருவரொருவருடைய சுமைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள். இவ்வாறு கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றுவீர்கள்.

3 எம்மதிப்புக்கும் உரியவனாய் இல்லாதிருந்தும், தன்னைப் பெரியவன் என்று எண்ணிக்கொள்கிற எவனும் தன்னையே ஏமாற்றிக்கொள்கிறான்.

4 ஒவ்வொருவனும் தன்னுடைய நடத்தையை ஆய்ந்து பார்க்கட்டும். அப்பொழுது அவன் தன்னைப் பிறரோடு ஒப்பிட்டுப் பெருமை பாராட்டாமல், தானே செய்த செயல்களை முன்னிட்டுப் பெருமை பாராட்டுவான்.

5 அவனவன் தன் சுமையைத் தாங்கிக் கொள்ளவேண்டும்.

6 தேவ வார்த்தையைக் கற்றுக்கொள்பவன் கற்பித்தவனுக்குத் தனக்குள்ளதில் பங்கு கொடுப்பானாக.

7 ஏமாந்து போக வேண்டாம். கடவுளை ஏமாற்ற முடியும் என நினைக்காதீர்கள். ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.

8 தன் ஊனியல்பில் விதைப்பவன், அந்த இயல்பிலிருந்து அழிவையே அறுப்பான். ஆவியானவரைப் பெற்ற இயல்பில் விதைப்பவன், ஆவியானவர் தரும் முடிவில்லா வாழ்வை அறுப்பான்.

9 நன்மை செய்வதில் மனந்தளராதிருப்போமாக! நாம் சோர்வுறாதிருந்தால், தக்க காலத்தில் அறுவடை கிடைக்கும்.

10 ஆகையால், இன்னும் காலம் இருக்கும்போதே, எல்லார்க்கும் சிறப்பாக விசுவாசத்தால் நம் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும் நன்மை செய்வோமாக!

11 இப்பொழுது என் கைப்பட நானே உங்களுக்கு எழுதுகிறேன். எவ்வளவு பெரிய எழுத்துக்களில் எழுதுகிறேன். பாருங்கள்!

12 நல்லவர்களாய் நடிக்க விரும்புகிறவர்கள் தான் நீங்கள் விருத்தசேதனம் செய்துகொள்ளும் படி உங்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள். கிறிஸ்துவின் சிலுவையை முன்னிட்டுத் தாங்கள் துன்புறுத்தப்படாமல் இருக்கவே அவர்கள் இப்படிச் செய்கிறார்கள்.

13 விருத்தசேதனம் செய்து கொண்டவர்களே திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில்லை. ஆனால் உங்கள் உடலில் பெற்றுக்கொண்ட விருத்தசேதனத்தை முன்னிட்டு, அவர்கள் பெருமை பாராட்டிக்கொள்வதற்காக நீங்கள் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறார்கள்.

14 நானோ நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையிலன்றி வேறெதிலும் ஒருகாலும் பெருமை பாராட்ட மாட்டேன்; அந்தச் சிலுவையின் வழியாகவே உலகம் எனக்கு அறையுண்டதாய் இருக்கிறது, நானும் உலகத்திற்கு அறையுண்டவனாய் இருக்கிறேன்.

15 விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமின்மையும் ஒன்றுமில்லை. புதிய படைப்பாவதே முக்கியம்.

16 யார் யார் இந்த ஒழுங்கு முறையைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள் மேலும், உண்மையான இஸ்ராயேலராகிய இறை மக்கள் மேலும் சமாதானமும் இரக்கமும் இருப்பதாக!

17 இனிமேல் எவனும் எனக்குத் தொல்லை கொடுக்க வேண்டாம்: ஏனெனில், என் உடலில் நான் தங்கும் தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம்.

18 சகோதரர்களே, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக! ஆமென்.