2 கொரிந்தியர்

அதிகாரம் 01

1 கொரிந்து நகரில் இருக்கும் கடவுளின் சபைக்கும், அக்காயா முழுவதிலுமுள்ள இறை மக்கள் அனைவருக்கும் கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனான சின்னப்பனும் சகோதரனான தீமோத்தேயுவும் எழுதுவது:

2 நம் தந்தையாகிய கடவுளிடமிருந்தும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் சமாதானமும் உங்களுக்கு உண்டாகுக.

3 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றப்பெறுவாராக! அவர் இரக்கம் நிறைந்த தந்தை, ஆறுதல் அனைத்துக்கும் ஊற்றான கடவுள்.

4 அவரே எங்களுக்கு எல்லாவகை வேதனையிலும் ஆறுதல் அளித்து வருகிறார். இவ்வாறு கடவுளிடமிருந்து நாங்கள் பெற்றுக்கொண்ட ஆறுதலால், நாங்களும் எத்தகைய வேதனையுறுவோர்க்கும் ஆறுதலளிக்க முடிகிறது.

5 ஏனெனில், கிறிஸ்துவின் பாடுகள் எங்கள் வாழ்வில் மிகுந்திருப்பது போல், கிறிஸ்துவின் வழியாய் வரும் ஆறுதலும் மிகுந்திருக்கிறது.

6 நாங்கள் வேதனைக்குள்ளானால், அது உங்கள் ஆறுதலுக்காகவும் மீட்புக்காகவுமே; நாங்கள் ஆறுதல் அடைந்தால், அதுவும் உங்கள் ஆறுதலுக்காகவே. நாங்கள் படும் அதே பாடுகளை நீங்களும் பொறுமையாய்த் தாங்கிக் கொள்ளவே அந்த ஆறுதல் செயலாற்றுகிறுது.

7 ஆகவே, உங்களைப்பற்றி எங்களுக்குள்ள நம்பிக்கை உறுதியாய் உள்ளது; ஏனெனில், பாடுகளில் நீங்கள் பங்குபெறுவது போலவே ஆறுதலிலும் பங்கு பெறுவீர்கள் என்று அறிவோம்.

8 ஏனெனில், சகோதரர்களே, ஆசியாவில் எங்களுக்கு நேர்ந்த வேதனை உங்களுக்குத் தெரியுமன்றோ? அது எங்களை அளவுக்கு மிஞ்சி வாட்டியது; எங்களால் தாங்கமுடியாத சுமையாயிற்று; இனி பிழைப்போம் என்ற நம்பிக்கையே இல்லாமற் போயிற்று; இதையெல்லாம் நீங்கள் அறிந்திருக்க வேண்டுமென விரும்புகிறோம்.

9 சாகவேண்டுமென்ற தீர்ப்பு கிடைத்துவிட்டது போலவே மனத்தில் நினைத்துக்கொண்டோம். ஆனால், நாங்கள் எங்கள் மேல் நம்பிக்கை வைக்காமல் இறந்தோரை உயிர்ப்பிக்கும் கடவுள் ஒருவர்மேலேயே நம்பிக்கை வைக்கவேண்டுமென உணரவே இவ்வாறு நிகழ்ந்தது.

10 அவரே எங்களை இத்துணை அச்சத்துக்குரிய சாவினின்று விடுவித்தார்; இனிமேலும் விடுவிப்பார்.

11 ஆம் நீங்களும் எங்களுக்காக வேண்டுதல் செய்து, துணை புரிந்தால், இனிமேலும் எங்களை விடுவிப்பார் என்னும் நம்பிக்கை அவர்மேல் வைத்திருக்கிறோம். இவ்வாறு பலர் எங்களுக்கென மன்றாடி, இந்த வரத்தைப் பெறும்பொழுது அதற்காகப் பலரும் எங்கள் சார்பில் நன்றி செலுத்துவர்.

12 மக்களிடையே, குறிப்பாக உங்களிடம் நாங்கள் உலக ஞானத்தின்படி நடவாமல், கடவுளின் அருளையே பின்பற்றி, கடவுளிடமிருந்து வரும் நேர்மையோடும், கள்ளமற்ற உள்ளத்தோடும் நடந்து வருகிறோம் என எங்கள் மனச்சான்று சாட்சி பகர்கிறது;

13 அதுவே எங்கள் பெருமை, ஏனெனில், நாங்கள் எழுதும் கடிதங்களில் நீங்கள் படித்துக் கண்டுணர்வதைத் தவிர வேறெந்தப் பொருளும் மறைந்தில்லை.

14 இப்பொழுது எங்களைப்பற்றி உங்களுக்கு ஒரளவுதான் தெரியும்; ஆனால் நம் ஆண்டவராகிய இயேசுவின் நாளில், எப்படி நாங்கள் உங்களைப்பற்றி பெருமை பாராட்டிக்கொள்வோமோ, அப்படியே நீங்களும் எங்களைப் பற்றிப்பெருமை பாராட்டிக் கொள்ளலாம் என்பதை நீங்கள் முற்றிலும் தெரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.

15 இந்த நம்பிக்கையால் தான் உங்களுக்கு இரட்டிப்பான நன்மை தரும்படியே முதலில் உங்களிடம் வர எண்ணம் கொண்டிருந்தேன்.

16 உங்கள் நகரத்துக்கு வந்து, அங்கிருந்து மக்கெதோனியாவுக்குப் போய், உங்கள் ஊருக்குத் திரும்பியிருப்பேன்; அப்போது நீங்கள் என்னை யூதேயாவுக்கு வழி அனுப்பியிருப்பீர்கள்.

17 இவ்வாறு திட்டமிட்டபோது நான் எண்ணிப்பாராமல் செய்தேனே? நான் திட்டமிடுவதை மனிதப் போக்கின்படி திட்டமிடுகிறேனோ? ஒரே சமயத்தில் ஆம் என்றும், இல்லை என்றும் சொல்பவனா நான்?

18 உங்களிடம் நான் பேசும்போது, ஆம் என்பதும், இல்லை என்பதும் கலந்தில்லை; உண்மையாம் கடவுளே இதற்குச் சாட்சி.

19 என் வழியாகவும், சில்வானு, தீமோத்தேயு வழியாகவும் உங்களிடையே அறிவிக்கப்பட்ட இறைமகனாகிய இயேசு கிறிஸ்துவிடம் ஆம் என்பதும், இல்லை என்பதும் கலந்தில்லை. ஆம் என்பது ஒன்றே அவரிடம் இருந்து வருகிறது.

20 ஏனெனில், கடவுளின் வாக்குறுதிகள் யாவற்றுக்கும் ஆம் என்பதே அவரிடம் இருந்தது. ஆகையால் தான் நாம் கடவுளுக்குப் புகழுரை கூறும் பொழுது, அவர் வழியாகவே ' ஆமென் ' என்கிறோம்

21 உங்களையும் எங்களையும் கிறிஸ்துவின் ஒன்றிப்பில் உறுதிப்படுத்தி நம்மை அபிஷுகம் செய்தவர் கடவுளே.

22 அவரே நம்மீது தம் முத்திரையிட்டு நம் உள்ளங்களில் இருக்கும்படி ஆவியானவரை அச்சாரமாக அளித்தார்.

23 கடவுளைச் சாட்சியாகக் கூப்பிட்டு, என் உயிரின்மேல் ஆணையாகச் சொல்லுகிறேன்: உங்களை வருத்தத்திற்கு உள்ளாக்கமலிருக்கவே இதுவரை நான் கொரிந்து நகருக்கு வரவில்லை.

24 விசுவாசத்தைப் பொருத்தமாட்டில், உங்கள்மேல் நாங்கள் அதிகாரம் காட்டுகிறோம் என்று எண்ணாதீர்கள்; விசுவாசத்தில் நீங்கள் நிலையாய்த் தான் இருக்கிறீர்கள்; உங்கள் மகிழ்ச்சிக்காகவே உங்களோடு ஒத்துழைக்கிறோம்.

அதிகாரம் 02

1 மறுபடியும் வந்து உங்களுக்கு வருத்தம் விளைவிக்கக்கூடாது என்று நான் முடிவு செய்துகொண்டேன்.

2 நானே உங்களை வருத்தப்படுத்தினால், யார் எனக்கு மகிழ்வூட்ட முடியும்? என்னால் வருத்தத்திற்கு உள்ளான நீங்களா மகிழ்வூட்ட முடியும்?

3 இதைத்தான் நான் ஏற்கெனவே எழுதினேன். நான் வரும் போது எனக்கு மகிழ்ச்சி தரவேண்டிய உங்களாலே எனக்கு வருத்தம் ஏற்படக்கூடாதென்று அப்படி எழுதினேன். எனது மகிழ்ச்சியை உங்கள் அனைவருடைய மகிழ்ச்சியாகவே கொள்வீர்கள் என்று உங்கள்மேல் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

4 மிகுந்த வேதனையோடும், உடைந்த உள்ளத்தோடும், கலங்கிய கண்களோடும் இதை எழுதினேன். இப்படி எழுதியது உங்களுக்கு வருத்தம் தருவதற்கன்று. உங்கள்மேல நான் வைத்திருக்கும் பேரன்பை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்கே.

5 ஒருவன் வருத்தம் வருவித்தான் என்றால், எனக்கு வருவிக்கவில்லை. ஒரளவில் உங்கள் அனைவருக்குமே வருத்தம் வருவித்தான் என்பது மிகையாகாது.

6 உங்களுள் பெரும்பாலோர் அவனுக்கு விதித்த தண்டனையே போதும்;

7 ஆதலால் அவன் மிகுதியான வருத்தத்தில் மூழ்கிவிடாதபடி, நீங்கள் அவனை இப்பொழுது மன்னித்து அவனுக்கு ஊக்கம் அளிப்பதுதான் நல்லது.

8 அவன்மீது அன்பு காட்டி முடிவு செய்யுங்கள்; இதுவே என் வேண்டுகோள்.

9 நீங்கள் எல்லாவற்றிலும் எனக்குக் கீழ்ப்படிபவர்களா என்று சோதித்து அறியவே எழுதினேன்.

10 நீங்கள் ஒருவனை மன்னித்தால், நானும் அவனை மன்னிக்கிறேன்; ஏனெனில், நான் மன்னிக்கவேண்டியது ஏதாவது இருந்தால், அதைக் கிறிஸ்துவின் முன்னிலையில் உங்களுக்காக ஏற்கெனவே மன்னித்துவிட்டேன்.

11 இவ்வாறு, சாத்தான் நம்மை வஞ்சிக்க விடமாட்டோம்; அவனுடைய நயவஞ்சகங்களை நாம் அறியாதவர்கள் அல்ல.

12 நான் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கும்படி துரோவா ஊருக்கு வந்தபோது, ஆண்டவருக்குத் தொண்டாற்ற எனக்கு நல்ல வாய்ப்பு இருந்தும்,

13 என் தம்பி தீத்துவைக் காணாததால், என் உள்ளம் அமைதியின்றித் தவித்தது; உடனே அங்கிருந்தவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டேன்.

14 கிறிஸ்துவுக்குள் வாழும் எங்களை எப்போதும் கிறிஸ்துவின் வெற்றிப் பவனியில் பங்குபெறச் செய்து, தம்மைப்பற்றிய அறிவு, எங்கள் வழியாக நறுமணமென எங்கும் பரவச்செய்யும் கடவுளுக்கு நன்றி.

15 ஆம், நாங்கள் மீட்புப் பெறுவோரிடையிலும், அழிவுறுவோரிடையிலும், கடவுள்பால் எழும் கிறிஸ்துவின் நறுமணமாய் இருக்கிறோம்.

16 சிலருக்கு அது சாவு விளைவிக்கும் நச்சுப் புகையாகும்; வேறு சிலருக்கு வாழ்வளிக்கும் நறுமணமாகும். இத்தகைய பணிக்கு ஏற்றவன் யார்?

17 கடவுளின் சொல்லை விலைகூறித் திரிபவர் பலரைப்போல் நாங்கள் செய்யாமல், கள்ளமற்ற உள்ளத்தோடு கடவுளால் ஏவப்பட்டு, கிறிஸ்துவுக்குள், கடவுளின் முன்னிலையில் பேசுகிறோம்.

அதிகாரம் 03

1 மறுபடியும் எங்களைப்பற்றி நாங்களே நற்சான்று கூறத்தொடங்குகிறோமா? அல்லது நற்சான்றுக் கடிதங்கள் சிலருக்குத் தேவையாய் இருப்பதுபோல் அத்தகைய கடிதங்களை உங்களிடம் காட்டவோ, உங்களிடமிருந்து பெறவோ வேண்டிய தேவை எங்களுக்கு உண்டா?

2 நீங்களே எங்களுடைய நற்சான்றுக் கடிதம்; அது எங்கள் உள்ளங்களில் பொறிக்கப்பட்டுள்ளது; இதை எல்லா மனிதரும் பார்க்கவும் படிக்கவும் கூடும்.

3 எங்கள் ஊழியத்தைப் பயன்படுத்தி, கிறிஸ்து எழுதிய கடிதம் நீங்களே என்பது வெளிப்படை. எழுதியதோ மையினாலன்று, உயிருள்ள கடவுளின் ஆவியினாலே; கற்பலகையில் அன்று, உங்கள் உள்ளங்களாகிய உயிர்ப் பலகைகளிலேயே எழுதப்பட்டது.

4 இத்தகைய நம்பிக்கையே நாங்கள் கிறிஸ்துவின் வழியாய்க் கடவுள்மேல் வைத்திருக்கிறோம்.

5 நாங்களே செய்துவிட்டது போல எதன்மேலும் உரிமை பாராட்டிக்கொள்ளும் தகுதி எங்களுக்கு இல்லை; எங்கள் தகுதியுடைமை கடவுளிடமிருந்தே வருகிறது.

6 அவரே எங்களுக்குப் புதிய உடன்படிக்கையின் பணியாளராகும் தகுதியைத் தந்தார்: அந்த உடன்படிக்கையோ எழுதிய சட்டத்தைச் சார்ந்ததன்று; ஆவியானவரையே சார்ந்தது. ஏனெனில், எழுதிய சட்டம் விளைப்பது சாவு, ஆவியானவர் அளிப்பதோ வாழ்வு.

7 கற்களில் எழுத்துக்களால் வரையப்பட்ட அச்சட்டத்தோடு பொருந்திய திருப்பணி சாவை விளைப்பதாய் இருந்தும், அத்திருப்பணி இறைமாட்சிமை சூழ அருளப்பட்டது. விரைவில் மறையவேண்டியதாய் இருந்த அந்த மாட்சிமை மோயீசன் முகத்தில் எவ்வளவு ஒளி வீசிற்றென்றால், இஸ்ராயேல் மக்கள் அவர் முகத்தை உற்றுப் பார்க்கவும் இயலவில்லை.

8 அத்தகைய மாட்சிமை அதைச் சூழ்ந்திருந்ததென்றால், ஆவியின் திருப்பணியை இன்னும் எவ்வளவு மாட்சிமை சூழவேண்டும்!

9 ஏனெனில், தண்டனைத் தீர்ப்புக் குட்படுத்தும் திருப்பணி இவ்வளவு மாட்சிமையுள்ளதாய் இருந்ததென்றால், மன்னிப்புத் தரும் திருப்பணி இன்னும் எவ்வளவோ மாட்சிமை நிறைந்ததாய் இருக்கவேண்டும்!

10 உள்ளபடி அன்றைய மாட்சிமையை இவ்வளவு மேன்மையுள்ள இன்றைய மாட்சிமையோடு ஒப்பிட்டால் அது மாட்சிமையே அன்று.

11 ஏனெனில், மறையப்போவது மாட்சிமையினிடையே தோன்றியதென்றால், நிலைத்திருக்கப்போவது இன்னும் எவ்வளவோ மாட்சிமையோடு விளங்க வேண்டும்!

12 இத்தகைய நம்பிக்கைகொண்ட நாங்கள் மிக்க துணிவோடு இருக்கிறோம்.

13 மறைந்து போகும் மகிமையொளி மங்கி அணைவதை இஸ்ராயேல் மக்கள் உற்றுப் பார்க்காதபடி தம் முகத்தை மூடிக்கொண்ட மோயீசனைப் போல் நாங்கள் செய்வதில்லை...

14 அவர்களின் அறிவுப்புலன் மழுங்கிப் போயிற்று. ஆம், இன்று வரை, அவர்கள் பழைய ஏற்பாட்டைப் படிக்கும்போது, அதே முகத்திரை இன்னும் எடுபடாமலே இருக்கிறது; கிறிஸ்துவில்தான் அது மறைந்தொழியும்.

15 உண்மைதான், இன்று வரை, மோயீசன் எழுதியதைப் படிக்கும்போதெல்லாம், அவர்களுடைய மனத்தின் மீது திரை ஒன்று கிடக்கிறது.

16 "ஆண்டவர்பால் திரும்பினால்தான் அந்த மூடு திரை அகற்றப்படும்."

17 ஆண்டவர் என்றது ஆவியானவரைத்தான்; ஆண்டவரின் ஆவியானவர் எங்கிருக்கிறாரோ அங்கு விடுதலை உண்டு.

18 இப்பொழுது நாமனைவரும் மூடு திரையில்லா முகத்தினராய், ஆண்டவரின் மாட்சிமையைக் கண்ணாடிபோல் காட்டுகிறோம். அதனால் மேன்மேலும் மாட்சிமை ஒளி பெற்று. அதன் சாயலாகவே உருமாற்றம் அடைகிறோம்; இவையெல்லாம் ஆவியாகிய ஆண்டவரின் செயலே.

அதிகாரம் 04

1 அதனால்தான் இறைவனின் இரக்கத்தால் இந்தத் திருப்பணியைப் பெற்றிருக்கும் நாங்கள் உள்ளம் தளராதிருக்கிறோம்.

2 மறைவாக மக்கள் செய்யும் இழிவான செயல்களை வெறுத்துவிட்டோம்; எங்கள் நடத்தையில் சூழ்ச்சி என்பதே இல்லை; கடவுள் வார்த்தையை நாங்கள் திரித்துக் கூறுவதில்லை; உண்மையை வெளிப்படுத்துவது தான் எங்களைப்பற்றி நாங்கள் தரும் நற்சான்று இதுவே கடவுள் முன்னிலையில் நல்ல மனச்சாட்சியுள்ள மனிதர் அனைவருக்கும் நாங்கள் தரும் சான்று.

3 நாங்கள் அறிவிக்கும் நற்செய்தி சிலருக்கு இன்னும் மறைபட்டாதாய் உள்ளதென்றால், அழிவுறுவோர்க்கே அது மறைபட்டுள்ளது.

4 கடவுளது சாயலான கிறிஸ்துவினுடைய மாட்சிமை விளங்கும் நற்செய்தியின் ஒளியை அவர்கள் பார்க்காதபடி இவ்வுலகத்தின் தெய்வம் விசுவாசமற்றவர்களின் அறிவுக் கண்களைக் குருடாக்கிவிட்டது.

5 நாங்கள் தூதுரைப்பது எங்களைப்பற்றியன்று, இயேசு கிறிஸ்துவே ஆண்டவர் எனத் தூதுரைக்கிறோம். நாங்களோ இயேசுவுக்காக உங்கள் ஊழியர்களே.

6 ஏனெனில், ' இருளினின்று ஒளி சுடர்க ' என்று சொன்ன கடவுள்தாமே கிறிஸ்துவின் முகத்தில் வீசிய இறைமாட்சிமையின் அறிவொளி மிளிரும்படி, எங்கள் உள்ளங்களிலும் ஒளி சுடரச் செய்தார்.

7 ஆயினும், இணையற்ற இவ்வல்லமை எங்களிடமிருந்து வரவில்லை, கடவுளுக்கே உரியது என்று விளங்கும்படி, இந்தச் செல்வத்தைக் கொண்டிருக்கும் நாங்கள் வெறும் மட்கலங்களாகவே இருக்கிறோம்.

8 எல்லாவகையிலும் வேதனையுறுகிறோம்; ஆனால், ஒடுங்கிபோவதில்லை. மனக்கலக்கம் அடைகிறோம்; ஆனால், மனம் உடைவதில்லை.

9 துன்புறுத்தப்படுகிறோம்; 'ஆயினும், இறைவனால் கைவிடப்படுவதில்லை. வீழ்த்தப்படுகிறோம்; ஆனால், அழிவுறுவதில்லை.

10 இயேசுவின் வாழ்வு எங்கள் உடலில் வெளிப்படும்படி, போகுமிடமெல்லாம் இயேசுவின் மரணப்பாடுகளைத் தாங்கிச் செல்கிறோம்.

11 ஏனெனில், இயேசுவின் வாழ்வு சாவுக்குரிய எங்கள் ஊனுடலில் வெளிப்படும்படி, உயிரோடிருக்கும்போதே இயேசுவுக்காக நாங்கள் எந்நேரமும் சாவுக்குக் கையளிக்கப்படுகிறோம்.

12 இவ்வாறு எங்களுள் சாவும், உங்களுள் வாழ்வும் செயலாற்றுகிறது.

13 ' விசுவசித்தேன், ஆகவே பேசினேன் ' என்று எழுதியுள்ளபடி, அதே விசுவாச மனப்பான்மை கொண்டிருக்கும் நாங்களும் விசுவசிக்கிறோம், ஆகவே பேசுகிறோம்.

14 ஆண்டவராகிய இயேசுவை உயிர்ப்பித்தவர், எங்களை இயேசுவோடு உயிர்ப்பித்துத் தம் திருமுன் கொணர்ந்து நிறுத்துவார் என அறிந்திருக்கிறோம்; அவ்வாறே உங்களையும் நிறுத்துவார்.

15 இவையெல்லாம் உங்கள் நன்மைக்கே. அதனால் மக்களிடையே இறையருள் பெருகப்பெருக, கடவுளின் மகிமைக்காகப் பலருடைய உள்ளத்தில் நன்றியறிதலும் பெருகும்.

16 ஆகவே நாங்கள் உள்ளம் தளர்வதில்லை; ஆனால், எங்கள் புறவுடலைச் சார்ந்தது அழிந்த வண்ணமாய் இருந்தாலும், உள் மனம் நாளுக்குநாள் புதுப்பிக்கப்படுகிறது.

17 நாம் படும் வேதனை அற்பமானது, நொடிப் பொழுதே நீடிப்பது; ஆயினும் அது நம்மில், அளவிடமுடியாத நித்திய மாட்சிமையை ஒப்புயர்வற்ற வகையில் விளைவிக்கிறது.

18 ஆனால், காண்பவற்றை அல்ல, காணாதவற்றையே நோக்கியவண்ணமாய் நாம் வாழ்தல் வேண்டும்; ஏனெனில், காண்பவை நிலையற்றவே; காணாதவை முடிவற்றவை.

அதிகாரம் 05

1 ஏனெனில் மண்மீது நாம் குடியிருக்கும் இக்கூடாரம் தகர்ந்து வீழ்ந்தாலும், கடவுளிடமிருந்து கிடைத்த வீடு ஒன்று நமக்கு விண்ணில் உள்ளது. இது கையால் அமைக்கப்படாதது; முடிவில்லாதது. இதையெல்லாம் நாம் அறிவோமன்றோ?

2 உள்ளபடியே இந்தக் கூடாரத்தில் உள்ள நாம் விண்ணிலிருந்து வரும் நம் உறைவிடத்தை மேலணிந்து கொள்ளவேண்டுமென்ற ஏக்கத்தால் பெருமூச்செறிகிறோம்.

3 உடை இழந்தவர்களாய் இராமல், உடுத்தியவர்களாய் இருந்தால் தான் ' அப்பேறு கிடைக்கும்.

4 இந்தக் கூடாரத்தில் இருக்கும் நாம் இந்நிலையைத் தாங்கமுடியாமல் பெருமூச்செறிகிறோம்; இந்த உடையைக்களைந்தெறிய நமக்கு விருப்பமில்லை; சாவுக்குரியது வாழ்வில் ஆழ்ந்து கலந்துவிடும்படி மேலுடை அணியவே விரும்புகிறோம்.

5 இதற்கென்றே கடவுள் நம்மை உருவாக்கினார்; அதற்கு அச்சாரமாக நமக்கு ஆவியானவரைத் தந்திருக்கின்றார்.

6 ஆதலால்தான் எப்பொழுதும் நம்பிக்கையோடு இருக்கிறோம்; இந்த உடலில் குடியிருக்கும்வரை ஆண்டவரின் வீட்டினின்று தொலைவில் அலைகிறோம் என்பதை அறிந்திருக்கிறோம்

7 ஏனெனில், கண்கூடான காட்சி நமக்கில்லை. நாம் வாழ்வது விசுவாச வாழ்வு

8 நம்பிக்கையை இழக்காமல், 'இவ்வுடலை விட்டுக் குடிபெயர்ந்து ஆண்டவரது வீட்டில் குடியேறுவதையே விரும்புகிறோம்.

9 ஆகவே உடலில் குடியிருந்தாலும் அதனின்று குடிபெயர்ந்தாலும் அவருக்கு உகந்தவர்களாய் இருக்கவேண்டும் என்பதே எங்கள் பேராவல்.

10 ஏனெனில், உடலோடு இருந்தபோது அவனவன் செய்த நன்மை தீமைக்குத்தக்க பலனடையும்படி கிறிஸ்துவின் நீதியிருக்கை முன் நாம் அனைவரும் செய்ததெல்லாம் வெளிப்படவேண்டும்.

11 ஆகையால், ஆண்டவரின் மீதுள்ள அச்சத்தை மனத்திலிருத்தி மக்களை வயப்படுத்தப்பார்க்கிறோம். எங்கள் உள்ளம் கடவுளுக்கு வெளிப்படையாய் இருக்கிறது; உங்களுடைய மனச்சாட்சிக்கும் வெளிப்படையாய் இருக்கும் என நம்புகிறேன். மறுபடியும் உங்கள் முன் எங்களைக் குறித்து நாங்களே நற்சான்று கூறவில்லை.

12 ஆனால், எங்களைப்பற்றி நீங்கள் பெருமைப்பட்டுக்கொள்ள உங்களுக்கு வாய்ப்பளிக்கிறோம்; அப்போது, உள்ளத்தில் இருப்பதைப் பாராமல் வெளித்தோற்றத்தை மட்டுமே பார்த்துப் பெருமை பாராட்டுகிறவர்களுக்கு, நீங்கள் விடைசொல்ல இயலும்.

13 நாங்கள் மதிமயங்கியவர்கள்போல் இருக்கிறோமென்றால், கடவுளுக்காகவே அப்படி இருக்கிறோம்; அறிவுத் தெளிவோடு இருக்கிறோமென்றால், உங்களுக்காகவே அப்படி இருக்கிறோம்.

14 அனைவருக்காகவும் ஒருவர் உயிர்துறந்தார் என்று உணர்ந்ததும் கிறிஸ்துவின் அன்பு எங்களை ஆட்கொள்கிறது; அனைவருக்காகவும் ஒருவர் இறந்தாரென்றால், அனைவருமே இறந்துபோயினர் என்பது பொருள்.

15 அப்படி அனைவருக்காகவும் அவர் உயிர்துறந்ததோ, வாழ்கிறவர்கள் இனித் தங்களுக்கென வாழாமல், தங்களுக்காக இறந்து உயிர்த்தவர்க்கென வாழவேண்டும் என்பதற்காகவே.

16 ஆதலால், இனிமேல் நாங்கள் ஊனக்கண் கொண்டு யாரையும் பார்ப்பதில்லை; இதற்கு முன் ஊனக்கண் கொண்டு கிறிஸ்துவைப் பார்த்திருந்தாலும், இனிமேல் அப்படிப் பார்ப்பதில்லை.

17 ஆகவே ஒருவன் கிறிஸ்துவுக்குள் வாழ்ந்தால், புதியதொரு படைப்பு தோன்றுகிறது; பழையன கழிந்துபோயின.

18 இதோ! புதியன தோன்றியுள்ளன. இவை எல்லாம் கடவுள் செயல்தான். அவரே கிறிஸ்துவின் வழியாய் நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கி, ஒப்புரவு செய்யும் திருப்பணியை எங்களுக்குக் கொடுத்தார்.

19 உள்ளபடியே கடவுள் உலகினரின் குற்றங்களுக்குரிய கடனைக் கணிக்காமல் அவர்களைக் கிறிஸ்துவுக்குள் தம்மோடு ஒப்புரவாக்கினார்; அவரே அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார்.

20 ஆகவே நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய்ச் செயலாற்றுகிறோம்; நாங்கள் பேசுவது கடவுளே அறிவுறுத்துவது போலாகும். ஆகவே கிறிஸ்துவின் பெயரால் நாங்கள் மன்றாடுகிறோம்:

21 கடவுளோடு ஒப்புரவாகுங்கள். கடவுளுடைய அருள் தன்மையோடு நாமும் கிறிஸ்துவுக்குள் விளங்கும்படி, பாவமே அறியாத அவரை நமக்காகப் பாவ உருவாக்கினார்.

அதிகாரம் 06

1 இறைவனின் உடனுழைப்பாளிகளான நாங்கள், நீங்கள் பெற்ற கடவுளின் அருளை வீணாக்க வேண்டாமென மன்றாடுகிறோம்.

2 ஏனெனில், "ஏற்ற காலத்தில் உனக்குச் செவிமடுத்தேன்; மீட்பின் நாளில் உனக்குத் துணை நின்றேன்" என்கிறார் இறைவன். இதோ, அந்த ஏற்புடைய காலம் இதுவே.

3 எங்கள் திருப்பணி, பழிச்சொல்லுக்கு உட்படாதவாறு நாங்கள் யாரையும் எதிலும் மனம் நோகச் செய்யவில்லை.

4 ஆனால், வேதனைகள், நெருக்கடி, இடுக்கண்,

5 சாட்டையடிகள், சிறை வாழ்வு, குழப்பங்கள், அயரா உழைப்பு, கண்விழிப்பு, பட்டினி இவற்றையெல்லாம் மிகுந்த மன உறுதியோடு ஏற்றுக்கொண்டு,

6 புனிதம், அறிவு, பொறுமை, பரிவு, பரிசுத்த ஆவிக்குரிய செயல்கள், கள்ளமில்லா அன்பு இவற்றைக் கடைப்பிடித்து,

7 உண்மையே பேசி, கடவுளின் வல்லமையைப் பெற்றுக்கொண்டு இறைவனுக்கு ஏற்புடைய வாழ்வைச் சார்ந்த படைக்கலங்களை வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் தாங்கி,

8 மேன்மையிலும் இழிவிலும், தூற்றப்படினும், போற்றப்படினும், அனைத்திலும் நாங்கள் கடவுளின் பணியாளரென்றே நடத்தையில் காட்டுகிறோம். எங்களை வஞ்சகர் என்கிறார்கள்; நாங்களோ உண்மையுள்ளவர்கள்.

9 அறியப்படாதவர்கள் என்கிறார்கள்; ஆனால், எல்லாரும் எங்களை அறிவார். சாகவேண்டியவர்களைப் போல் இருந்தாலும், இதோ, உயிர் வாழ்கிறோம். நாங்கள் ஒறுக்கப்படுகிறோம்; ஆனால், சாவுக்கு இரையாவதில்லை.

10 துயரத்தில் ஆழ்ந்தவர்களாய்த் தென்படுகிறோம்; ஆனால், எப்பொழுதும் மகிழ்ச்சியில் திளைக்கிறோம். நாங்கள் ஏழைகளாயினும், பலரைச் செல்வராக்குகிறோம். ஒன்றுமே இல்லாதவர்கள்போல் இருக்கிறோம்; ஆனால், அனைத்துமே எங்களுக்குச் சொந்தம்.

11 கொரிந்தியரே, ஒளிவு மறைவின்றி உங்களிடம் பேசினோம்; எங்கள் உள்ளத்தில் உள்ளதை உங்களுக்கு வெளிப்படுத்தினோம்.

12 எங்கள் நெஞ்சம் கூம்பிவிடவில்லை, உங்கள் நெஞ்சந்தான் கூம்பிவிட்டது

13 அப்படியிருக்க, என் குழந்தைகளிடம் சொல்லுவதுபோல் சொல்லுகிறேன்: நான் காட்டிய நேர்மைக்கு ஈடாக நீங்களும் உங்கள் உள்ளத்தில் உள்ளதை வெளிப்படுத்துங்கள்.

14 அவிசுவாசிகளுடன் நீங்கள் தகாத முறையில் ஒரே நுகத்தடியில் இணைந்திருக்கலாகாது. இறை நெறிக்கும் தீய நெறிக்கும் தொடர்பேது?

15 ஒளிக்கும் இருளுக்கும் உறவேது? கிறிஸ்துவுக்கும் பேலியாருக்கும் உடன்பாடு உண்டோ?

16 அவிசுவாசியோடு விசுவாசிக்குப் பங்குண்டோ? கடவுளின் கோயிலுக்கும் தெய்வங்களின் சிலைகளுக்கும் பொருத்த முண்டோ? உயிருள்ள கடவுளின் கோயில் நாம்தான்; இதைக் கடவுளே சொல்கிறார்: " அவர்களிடையே குடிகொள்வேன்; அவர்கள் நடுவில் நடமாடுவேன். அவர்களுக்கு நான் கடவுளாய் இருப்பேன், அவர்கள் என் மக்களாய் இருப்பர்.

17 ஆகவே, வேற்று மக்களிடமிருந்து வெளியேறுங்கள்; அவர்களைவிட்டுப் பிரிந்துபோங்கள் என்கிறார் ஆண்டவர். அசுத்தமானதைத் தொடவேண்டாம்; நாம் உங்களை ஏற்றுக்கொள்வேன்,

18 உங்களுக்கு நான் தந்தையாய் இருப்பேன்; எனக்கு நீங்கள் புதல்வராகவும், புதல்வியராகவும் இருப்பீர்கள் என்கிறார் எல்லாம் வல்ல ஆண்டவர்.

அதிகாரம் 07

1 ஆகையால் அன்புக்குரியவர்களே, இத்தகைய வாக்குறுதிகளைப் பெற்றிருக்கும் நாம் உடலிலும் உள்ளத்திலும் எவ்வித மாசுமின்றி நம்மைத் தூயவர்களாக்கிக்கொள்வோமாக, கடவுளுக்கு அஞ்சிப் பரிசுத்தத்தின் முழுமையை அடைவோமாக.

2 உங்கள் உள்ளத்திலே எங்களுக்கு இடங்கொடுங்கள். நாங்கள் யாருக்கும் அநீதி இழைக்கவில்லை, யாருக்கும் கெடுதி செய்யவில்லை, யாரையும் வஞ்சிக்கவில்லை.

3 கண்டனம் செய்வதுபோல் அதை நான் சொல்ல விரும்பவில்லை. செத்தால் ஒன்றாய்ச் சாகிறோம், வாழ்ந்தால் ஒன்றாய் வாழ்கிறோம் என்னும் அளவுக்கு எங்கள் உள்ளத்தில் இடம் பெற்றிருக்கிறீர்கள்; இதை ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.

4 உங்களிடம் நான் மிகுந்த துணிவோடு பேசுகிறேன்; உங்களைக் குறித்து மிகப்பெருமைப்படுகிறேன்; எனக்கு வரும் வேதனையிலெல்லாம் என் உள்ளத்தில் ஆறுதல் நிறைகிறது; மகிழ்ச்சி பொங்கி வழிகிறது.

5 உள்ளபடியே, நாங்கள் மக்கெதோனியாவுக்கு வந்து சேர்ந்தபோது, எளியோர் எமக்கு அமைதியே கிட்டவில்லை; எல்லா வகையிலும் வேதனையுற்றோம்; புறத்திலே பல சச்சரவுகள், உள்ளத்திலே பலவிதத்திலும் அச்சம்;

6 ஆனால், தாழ்மையுள்வர்களுக்கு ஆறுதல் அளிக்கும் கடவுள் தீத்துவின் வருகையால் எங்களுக்கு ஆறுதல் அளித்தார்.

7 அவருடைய வருகையால் மட்டுமன்று, உங்களால் அவர் அடைந்த ஆறுதலாலும் எங்களுக்கு ஆறுதல் கிடைத்தது. உங்களுக்கிருந்த ஏக்கத்தையும், நீங்கள் வடித்த கண்ணீரையும், என்மட்டில் நீங்கள் காட்டிய ஆர்வத்தையும் அவர் எடுத்துச் சொன்னார். இதைக் கேட்டபின் எனக்கு இன்னும் மிகுதியான மகிழ்ச்சி உண்டாயிற்று.

8 நான் எழுதிய கடிதத்தால் உங்களுக்குத் துயர் தந்திருந்தாலும், அதற்காக நான் மனம் வருந்தவில்லை; அந்தக் கடிதம் உங்களைச் சில நாழிகையேனும் துயரத்தில் ஆழ்த்திற்று என்று தெரிகிறது; அதற்காக நான் முதலில் வருந்தியிருந்தாலும், இப்பொழுது எனக்கு மகிழ்ச்சிதான்.

9 நீங்கள் துயரத்துக்குள்ளானீர்கள் என்பதற்காக நான் மகிழவில்லை. ஆனால், மனமாற்றம் விளைவித்த துயரத்துக்குள்ளானீர்கள் என்பதற்காகவே மகிழ்கிறேன். ஏனெனில், கடவுளின் திருவுளத்திற்கேற்றவாறு அத்துயரத்தை ஏற்றுக்கொண்டீர்கள்; ஆகவே நாங்கள் செய்தது உங்களுக்கு எத்தீமையும் இழைக்கவில்லை.

10 கடவுளின் திருவுளத்தின்படி ஏற்கப்படும் துயரம், மீட்புத் தரும் மனமாற்றத்தை விளைவிக்கிறது. அதற்காக மனம் வருந்துவதற்கு இடமே இல்லை. ஆனால், இவ்வுலகுக்கடுத்த துயரமோ, சாவையே கொணர்கிறது

11 இதோ பாருங்கள், கடவுளின் திருவுளத்திற்கேற்ப நீங்கள் ஏற்றுக்கொண்ட துயரம் உங்களுக்கு எவ்வளவு ஊக்கமூட்டியது! அதுமட்டுமா? உங்களுடைய நேர்மையை எண்பிக்க உங்களுக்கு எவ்வளவு துடிப்பு! எவ்வளவு உள்ளக் கொதிப்பு! எவ்வளவு பரபரப்பு! என்னைப்பார்க்க எவ்வளவு ஏக்கம்! என்மீது எவ்வளவு ஆர்வம்! தீயவனை ஒறுப்பதில் எவ்வளவு கண்டிப்பு! இக்காரியத்தில் நீங்கள் எவ்வகையிலும் குற்றமற்றவர்கள் என எண்பித்தீர்கள்.

12 ஆகையால் நான் அக்கடிதம் எழுதியது அநீதி செய்வனை முன்னிட்டுமன்று; அநீதிக்கு ஆளாகாதவனை முன்னிட்டுமன்று; எங்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் அக்கறை கடவுள் முன்னிலையில் உங்களுக்கு விளங்கும் படியே அதை எழுதினேன்.

13 அதனால் தான் ஆறுதல் அடைந்தோம். இப்படி எங்களுக்குக் கிடைத்த ஆறுதலோடு தீத்துவின் மகிழ்ச்சியையும் பார்த்தபோது, இன்னும் மிகுதியான மகிழ்ச்சி உண்டாயிற்று. நீங்கள் அனைவரும் அவர் உள்ளத்தைக் குளிரச் செய்தீர்கள்.

14 அவரிடம் உங்களைப்பற்றிப் பெருமையாய்ப் பேசியிருந்தேன்; அப்படிப் பேசியது அறிவீனமாகத் தென்படவில்லை. ஆனால், நாங்கள் உங்களிடம் பேசியதெல்லாம் எவ்வாறு உண்மையாய் இருந்ததோ, அவ்வாறே தீத்துவிடம் உங்களைக் குறித்து நாங்கள் பெருமையோடு சொன்னதெல்லாம் உண்மையாகிவிட்டது .

15 உங்கள் எல்லோருடைய பணிவையும், அச்சத்தோடும் நடுக்கத்தோடும் அவரை நீங்கள் ஏற்றுக்கொண்ட வகையையும் அவர் நினைவு கூரும் போது, அவருடைய உள்ளமும் உங்களுக்காக மிகுதியாய் உருகுகிறது

16 உங்கள்மேல் எனக்கு முழு நம்பிக்கை உண்டு; இது எனக்குப் பெருமகிழ்ச்சி.

அதிகாரம் 08

1 சகோதரர்களே, மக்கெதோனியா நாட்டுச் சபைகளுக்குக் கடவுள் தந்த அருளைப்பற்றி உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

2 அவர்கள் வேதனையால் மிகவும் சோதிக்கப்பட்டபோது, கொடிய வறுமையில் ஆழ்ந்திருந்தும், அவர்களுற்ற பெருமகிழ்ச்சி வள்ளன்மையாய்ப் பொங்கி வழிந்தது.

3 தங்களால் இயன்ற அளவுக்குக் கொடுத்தார்கள்; இயன்ற அளவுக்குமேலும் கொடுத்தார்கள்; அதற்கு நானே சாட்சி.

4 இறைமக்களுக்குச் செய்யப்படும் அறப்பணியில் பங்கு கொள்ளும் பேறு தங்களுக்கு அளிக்க வேண்டுமென்று தாங்களே முன்வந்து எங்களை வற்புறுத்திக் கேட்டுக் கொண்டனர்.

5 நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாக, அவர்கள் கடவுளின் திருவுளத்தால் தங்களையே ஒப்புக்கொடுத்தார்கள். இப்படி அவர்கள் எங்கள் பணிக்குத் தங்களைக் கையளித்தது, முதன்மையாக ஆண்டவருக்கே கையளித்ததாயிற்று.

6 ஆகையால் தீத்து தொடங்கிய அத்தகைய அன்புத் தொண்டினை உங்களிடையே செய்து முடிக்கும்படி அவரைக் கேட்டுக்கொண்டோம்.

7 மேலும், விசுவாசம், சொல்வன்மை, அறிவு, தளாராத ஊக்கம், எங்களிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொண்ட அன்பு, இவற்றிலெல்லாம் நிறைவளம் உங்களுக்கு வாய்த்துள்ளது. அதே வளம் இந்த அன்புத் தொண்டிலும் உங்களிடம் விளங்கட்டும்.

8 இதை நான் கட்டளையாகச் சொல்லவில்லை; பிறருடைய ஊக்கத்தை எடுத்துக்காட்டி, உங்கள் அன்பு உண்மையானதா எனச் சோதிக்கவே விரும்புகிறேன்.

9 ஏனெனில், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருள் வன்மையை நீங்கள் அறிந்தேயிருக்கிறீர்கள். அவர் செல்வ மிக்கவராய் இருந்தும், அவருடைய ஏழ்மையால், நீங்கள் செல்வராகும்படி, உங்களுக்காக ஏழையானார்.

10 அத்திட்டத்தைப்பற்றிய என் கருத்து இதுவே: இதனால் உங்களுக்கே நம்மை உண்டாகும். கடந்த ஆண்டிலிருந்து நன்கொடை திரட்டத் தொடங்கியவர்கள் நீங்களே; அதுமட்டுமன்று, அப்படிச் செய்ய முதலில் திட்டமிட்டவர்களும் நீங்களே.

11 அப்படியானால் தொடங்கியதை இப்பொழுது செய்து முடியுங்கள்; திட்டமிடுவதற்கு இருந்த ஆர்வத்தோடேயே, உங்களுடைய நிலைக்கு ஏற்றவாறு கொடுத்து, அத்திட்டத்தை நிறைவேற்றுங்கள்.

12 கொடுப்பதற்கு உள்ளத்தில் ஆர்வம் இருந்தால், தன்னிடம் உள்ளதற்கு ஏற்றபடி எவ்வளவு கொடுத்தாலும் அது இறைவனுக்கு ஏற்புடையதாகும். தன்னிடம் இருப்பதற்கு மேலாக யாரும் கொடுக்கவேண்டியதில்லை .

13 மற்றவர்களின் வேதனையைத் தணிக்க, நீங்கள் வேதனைக்குள்ளாக வேண்டியதில்லை; சமநிலைப்படுத்துவது பற்றியே இங்கே பேச்சு.

14 அதாவது இப்பொழுது உங்களிடம் மிகுதியாயிருக்கிறது; அவர்களுடைய குறைவை நீக்குங்கள்; அவர்களிடம் மிகுதியாயிருக்கும்போது, அவர்கள் உங்கள் குறைவை நீக்கக்கூடும். இவ்வாறு சமநிலை எற்படும்.

15 ' மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு மிச்சமுமில்லை, குறைவாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவுமில்லை, என எழுதியுள்ளதன்றோ?

16 உங்கள்மேல் எனக்குள்ள அதே அக்கறையைத் தீத்துவின் உள்ளத்திலும் உண்டாக்கிய கடவுளுக்கு நன்றி.

17 எங்கள் வேண்டுகோளுக்குத் தீத்து இணங்கியதோடு, தாமும் மிகுந்த அக்கறைகாட்டி, உங்க?ருக்குப் புறப்படத் தாமே முன்வந்தார்.

18 அவரோடு கூட நாங்கள் அனுப்பியுள்ள சகோதரர் நற்செய்தித் தொண்டினால் எல்லாச் சபைகளிலும் பேர் பெற்றிருப்பவர்.

19 அதுமட்டுமன்று, ஆண்டவருக்கு மகிமையுண்டாகவும், எங்கள் ஆர்வம் விளங்கவும், நாங்கள் பணியாற்றும் இந்த அன்புத் தொண்டில் எங்களுக்கு வழித் துணையாகச் சபைகளால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறார்.

20 எங்கள் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ள இவ்வளவு தாராள நன்கொடையை நாங்கள் கையாளும் முறைபற்றி யாரும் எங்களைக் குறைகூறாதபடி பார்த்துக் கொள்ளுகிறோம்.

21 ஆண்டவர் முன்னிலையில் மட்டுமன்று, மக்கள் முன்னிலையிலும் கூட நன்மதிப்பை இழக்காதபடி பார்த்துக்கொள்கிறோம்.

22 அவர்களோடுகூட, எங்களைச் சேர்ந்த வேறொரு சகோதரரையும் அனுப்பியுள்ளோம். இவர் ஊக்கமுள்ளவர் எனப்பல சூழ்நிலைகளில் பலமுறை கண்டறிந்தோம்; அவர் உங்கள்மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதால் இப்பொழுது இன்னும் மிகுதியான ஊக்கம் காட்டுகிறார்.

23 தீத்துவைப் பற்றிக் கேள்வி எழுந்தால், அவர் என் தோழர், நான் உங்களுக்காகச் செய்யும் தொண்டில் என் உடனுழைப்பாளி என்று அறிந்துகொள்ளுங்கள். நாங்கள் அனுப்பிய சகோதரர்களோ, சபைகளின் அப்போஸ்தலர்கள்; அவர்கள் கிறிஸ்துவுக்கு மகிமையாய் இருக்கிறார்கள்.

24 ஆகையால், உங்களுடைய அன்பை எடுத்துக்காட்டி, நாங்கள் அவர்களிடத்தில் உங்களைக் குறித்துப் பெருமைப்படுவது முறையே எனச் சபைகளின் முன்னிலையில் எண்பியுங்கள்.

அதிகாரம் 09

1 இறைமக்களுக்கெனச் செய்யும் இந்த அறப்பணியைக் குறிந்து நான் உங்களுக்கு எழுதவேண்டியதில்லை.

2 ஏனெனில், உங்களுடைய உற்சாகம் எனக்குத் தெரியும். தண்டலுக்குரிய ஏற்பாடெல்லாம் கடந்த ஆண்டிலேயே அக்காயா நாட்டில் செய்தாயிற்று என்று மக்கெதோனியரிடம் உங்களைக் குறித்துப் பெருமையாகப் பேசி வருகிறேன்; உங்களுடைய ஆர்வம் பலரைத் தூண்டிவிட்டிருக்கிறது.

3 உங்களைக் குறித்து நாங்கள் இதில் பெருமைப்படுவது வீணாகக் கூடாது என்பதற்காகவே இச்சகோதரர்களை உங்களிடம் அனுப்பியுள்ளேன். நான் ஏற்கெனவே மக்கெதோனியருக்குச் சொன்னதுபோல, நீங்கள் தக்க ஏற்பாட்டோடு இருக்க வேண்டும் அன்றோ?

4 இல்லையேல், மக்கெதோனியர் என்னோடு வரும்போது, நீங்கள் எந்த ஏற்பாடுமின்றி இருப்பதைக் கண்டால், நாங்கள் கொண்டிருந்த நம்பிக்கைக்காக நாங்கள் தலைகுனிய வேண்டியிருக்கும்; நீங்களும் தலைகுனிய வேண்டியிருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை.

5 ஆகையால்தான், அச்சகோதரர்கள் எனக்கு முன்பே உங்களிடம் வந்து, நீங்கள் வாக்களித்திருந்த நன்கொடையைச் சேர்க்கும்படி கேட்டுக் கொள்ளவேண்டும் என, எனக்குத் தோன்றிற்று. இவ்வாறு ஏற்பாடாய் இருந்தால், நீங்கள் கொடுப்பது, வேண்டாவெறுப்போடு தந்ததாய் இராமல், அன்பின் கொடையாகவே விளங்கும்.

6 இதை எண்ணிப் பாருங்கள்: சிறுக விதைப்பவன் சிறுக அறுப்பான்; பெருக விதைப்பவன் பெருக அறுப்பான்.

7 ஒவ்வொருவனும் தனக்குள் முடிவு செய்தவாறு கொடுக்கட்டும்; முகவாட்டத்தோடோ, கட்டாயத்தினாலோ கொடாதீர்கள்; ஏனெனில் முகமலர்ச்சியுடன் கொடுப்பவன் மேல்தான் கடவுள் அன்புகூர்கிறார்.

8 கடவுள் உங்களை எல்லா நன்மைகளாலும் நிரப்பவல்லவர்; எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் தேவையானதெல்லாம் போதுமான அளவில் உங்களிடம் இருக்கச் செய்வார்; அதோடு எந்தசெயலையும் செய்வதற்குத் தேவையான பொருள் உங்களிடம் மிகுதியாகவே இருக்கச் செய்வார்.

9 அதைக்குறித்தே, ' வாரி வழங்கினான், ஏழைகளுக்கு ஈந்தான், அவனது ஈகை என்றென்றும் மறக்கப்படாது! ' என்று எழுதியுள்ளது.

10 விதைக்கிறவனுக்கு விதையும், உண்பதற்கு உணவும் கொடுத்து உதவுகின்றவர் விதைப்பதற்கு வேண்டியதை உங்களுக்கும் கொடுத்து அதைப் பெருகச் செய்து, உங்களுடைய ஈகையால் ஏராளமான பலன் விளையச் செய்வார்.

11 நீங்களும் எல்லா வகையிலும் செல்வர்களாகி, உங்கள் வள்ளன்மையில் எக்குறைவுமின்றி விளங்குவீர்கள்; எங்கள் பணியின் வாயிலாக அவ்வள்ளன்மை மக்களின் நன்றியறிதலைக் கடவுள்பால் எழும்பச் செய்யும்.

12 அதாவது நீங்கள் செய்யும் இந்தத் கொண்டு இறைமக்களின் குறைகளை நீக்குவதோடு, பலர் கடவுளுக்குச் செலுத்தும் நன்றியாகவும் மலரும்.

13 இந்தத் திருப்பணியின் வாயிலாய் உங்கள் நற்பண்பு எண்பிக்கப்படும்; நீங்கள் ஏற்றுக்கொண்ட கிறிஸ்துவின் நற்செய்திக்குக் காட்டும் கீழ்ப்படிதல் புலப்படும்; அவர்களுக்கும் மற்றெல்லாருக்குமே உங்கள் நற்கொடையால் நீங்கள் காட்டிய வள்ளன்மையும் வெளிப்படும். அந்தக் கீழ்ப்படிதலையும் வள்ளன்மையையும் பார்த்து, அவர்கள் கடவுளை மகிமைப் படுத்துவார்கள்.

14 மேலும், கடவுள் உங்கள் மேல் பொழிந்த அருளை அவர்கள் உணர்ந்து, உங்களிடம் பரிவு கொண்டு, உங்களுக்காக வேண்டுவார்கள்.

15 கடவுள் வழங்கிய சொல்லொண்ணாக் கொடைக்காக அவருக்கு நன்றி.

அதிகாரம் 10

1 கிறிஸ்துவிடம் விளங்கிய சாந்தத்தின் பெயராலும், பரிவுள்ளத்தின் பெயராலும், சின்னப்பனாகிய நானே உங்களைக் கேட்டுக் கொள்வதாவது: நான் உங்களை நேரில் காணும்போது தாழ்ந்து போகிறேன். உங்களோடு இல்லாத போது கண்டிப்பாய் இருக்கிறேன் என்றா சொல்லுகிறீர்கள்?

2 நான் ஒன்று சொல்லுகிறேன்; உங்களை நேரில் காணும்போது நான் கண்டிப்பாய் இருக்க இடமில்லாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். கண்டிக்கும் துணிவு எனக்கில்லாமலில்லை; நாங்கள் உலகப்போக்கில் நடப்பதாகக் கருதும் சிலரிடம் அந்தத் துணிவைத் தயங்காமல் காட்ட எண்ணுகிறேன்.

3 உலகில்தான் வாழ்கிறோம். ஆனால் எங்கள் போராட்டம் உலகப் போக்கின்படி நிகழ்வதன்று.

4 ஏனெனில், எங்கள் போராட்டத்தில் பயன்படும் படைக்கலன்கள் உலகைச் சார்ந்தவையல்ல, கடவுளின் வல்லமைகொண்டவை, கோட்டைகளைத் தகர்த்தெறியக் கூடியவை,

5 அவற்றைக் கொண்டு குதர்க்கங்களையும், கடவுளைப்பற்றிய அறிவுக்கு எதிராகத் தலைதூக்கும் எத்தகைய மேட்டிமையையும் நாசமாக்குகிறோம்; மனித எண்ணங்கள் அனைத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியுமாறு அடிமைப்படுத்துகிறோம்.

6 உங்கள் சபை எனக்கு முற்றிலும் அடங்கியபின்னும், யாராவது கீழ்ப்படியாமலிருந்தால் அதற்குத்தக்க தண்டனை கொடுக்கத் தயங்கமாட்டேன்.

7 வெளித்தோற்றத்தை மட்டும் நீங்கள் பார்க்கிறீர்கள். தான் கிறிஸ்துவுக்குச் சொந்தமானவன் என்று உறுதியாய் நம்பும் எவனும், மேலும் சிந்தித்துப் பார்க்கட்டும்: தான் எப்படிக் கிறிஸ்துவுக்குச் சொந்தமோ அப்படியே நாங்களும் கிறிஸ்துவுக்குச் சொந்தம்.

8 எங்களுக்குள்ள அதிகாரத்தை ஆண்டவர் உங்களுடைய ஞான வளர்ச்சிக்கென்றே தந்திருக்கிறார்; உங்கள் அழிவுக்காகவன்று. அந்த அதிகாரத்தைக் குறித்துச் சற்று அதிகமாகவே நான் பெருமை பாராட்டிக் கொண்டாலும், அது வீண் பெருமையன்று என்று காண்பீர்கள்.

9 கடிதத்தால் மட்டும் உங்களுக்கு அச்சமூட்டுகிறேன் என்று நினைக்க வேண்டாம்.

10 ' அவருடைய் கடிதங்கள் கடுமையானவை; அழுத்தம் மிக்கவை; ஆனால் ஆளை நேரில் பார்த்தால், தோற்றமும் இல்லை, பேச்சுத் திறனும் இல்லை ' என என்னைப் பற்றிச் சிலர் சொல்லுகிறார்களாம்.

11 அப்படிப் பேசுபவர்கள் நான் சொல்லுவதை மனத்திலிறுத்தட்டும்: தொலையிலிருந்து எழுதும் கடிதங்களில் எங்கள் வார்த்தை எப்படிப் புலப்படுகிறதோ, அப்படியே இருக்கும் எங்கள் செயலும் உங்களிடம் நாங்கள் வரும்போது.

12 சிலர் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்ளுகின்றனர். அவர்களோடு எங்களையும் சேர்த்துக்கொள்ளவோ, ஒப்பிடவோ நாங்கள் துணியோம்; அவர்கள் தங்களையே அளவுகோலாகக் கொண்டு தங்களை அளவிட்டுத் தங்களைத் தங்களோடே ஒப்பிட்டுக் கொள்கிறார்கள்; இது அறிவீனமன்றோ?

13 நாங்கள் பெருமை பாராட்டுவதற்கு ஒர் அளவை இல்லாமல் இல்லை; கடவுள் எங்களுக்கு வரையறுத்த அளவுகோல்தான் நாங்கள் பயன்படுத்தும் அளவை; அப்படிக் கடவுள் எங்களுக்கு வரையறுத்துக்கொடுத்த அலுவலின்படி நாங்கள் உங்க?ர் வரை வரவேண்டியிருந்தது.

14 உங்கள் ஊர்வரை நாங்கள் முன்னரே வராமற்போயிருந்தால், எல்லைமீறினவர்களாய் இருப்போம்; ஆனால் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க உங்கள் ஊர்வரைக்கும் வந்தோம்.

15 மற்றவர்களின் உழைப்பைக் காட்டி நாங்கள் பெருமை பாராட்டவில்லை; அப்படிச் செய்தால் அது அளவையை மீறிப் பெருமை பாராட்டுவதாகும். அதற்கு மாறாக, உங்கள் விசுவாசம் வளர வளர நாங்கள் உங்கள் நடுவில் செய்யும் பணியும் விரிவடைந்து, எங்களுக்கு வரையறுத்துக் கொடுக்கப்பட்ட எல்லையை மீறாமலே,

16 உங்க?ருக்கு அப்பால் உள்ளவர்கள் நடுவிலும், நாங்கள் நற்செய்தி அறிவிக்க இயலும் என் நம்புகிறோம்; பிறருக்குக் குறித்துள்ள எல்லையை நாங்கள் மீறி அவர்கள் செய்து முடித்த வேலையைக் குறித்துப் பெருமை பாராட்டவே மாட்டோம்.

17 பெருமை பாராட்டுவோன் ஆண்டவரைப்பற்றிப் பெருமை பாராட்டுக."

18 ஏனெனில், தன்னைப் பற்றித் தானே நற்சான்று கூறுபவன் சான்றோன் அல்லன்; ஆனால், ஆண்டவர் யாரைப்பற்றி நற்சான்று அளிக்கிறாரோ அவனே சான்றோன்.

அதிகாரம் 11

1 என் பேதைமையை நீங்கள் ஒரளவு பொறுத்துக்கொள்வீர்களா? ஆம், சற்றுப் பொறுத்துக்கொள்ளுங்கள்.

2 நான் உங்கள் மீதுகொண்டுள்ள அன்பார்வம் கடவுள்கொண்டிருக்கும் அன்பார்வமே. ஏனெனில், கிறிஸ்து என்னும் ஒரே மணவாளற்கு உங்களை மண ஒப்பந்தத்தில் பிணைத்துள்ளேன்; அவர்முன் உங்களைக் கற்புள்ள கன்னியென நிறுத்த வேண்டுமென்பதே என் விருப்பம்.

3 ஆனால், ஏவாள், எவ்வாறு பாம்பின் சூழ்ச்சியால் ஏமாற்றப்பட்டாளோ அவ்வாறே நீங்களும் உங்கள் எண்ணங்களைச் சீரழியவிட்டு, கிறிஸ்துவிடம் இருக்கவேண்டிய ஒருமனப் பற்றுதலை இழந்து விடுவீர்களோ என அஞ்சுகிறேன்.

4 ஏனெனில், எவனாவது வந்து நாங்கள் அறிவிக்காத வேறொரு இயேசுவை அறிவிக்கும்போது அல்லது நீங்கள் பெற்றிருக்கும் ஆவியானவரைத் தவிர வேறோர் ஆவியைப் பெற்றுக்கொள்ளச் செய்யும்போது அல்லது நீங்கள் ஏற்றுக்கொண்ட நற்செய்திக்கு ஒவ்வாத வேறொரு நற்செய்தியைக் கொணரும்போது, அவனை எளிதில் பொறுத்துக் கொள்ளுகிறீர்களே;

5 ஆயினும் இந்தப் ' பேர்போன ' அப்போஸ்தலர்களைவிட நான் எதிலும் தாழ்ந்தவனல்லேன் என்றே எண்ணுகிறேன்.

6 எனக்குப் பேச்சு வன்மை இல்லை, மெய்தான்; ஆயினும் அறிவு இல்லாமற் போகவில்லை. இதை நாங்கள் எப்போதும் எல்லா வகையிலும் உங்களுக்குக் காட்டியிருக்கிறோம்.

7 கைம்மாறு கருதாமல் உங்களுக்குக் கடவுளின் நற்செய்தியை அறிவித்து, உங்களை உயர்த்துவதற்காக நான் என்னையே தாழ்த்திக்கொண்டேனே, இப்படிச் செய்தது குற்றமா?

8 உங்களிடையே பணிபுரிந்தபோது, என் செலவுக்கு வேண்டியதை மற்றச் சபைகளிடமிருந்து பெற்றுக் கொண்டேன். உங்களுக்காக இவ்வாறு அவர்களிடமிருந்து பொருளைக் கவர்ந்தேன் .

9 நான் உங்களோடு இருக்கையில் எனக்குக் குறையிருந்தபோதிலும், நான் யாருக்கும் சுமையாய் இருக்கவில்லை; எனக்கிருந்த குறையை மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர்கள் நீக்கினார்கள்; எதிலும் உங்களுக்குச் சுமையாய் இராமல் பார்த்துக்கொண்டேன். இனியும் பார்த்துக்கொள்வேன்.

10 என்னுள் இருக்கும் கிறிஸ்துவின் உண்மையே சாட்சியாகச் சொல்லுகிறேன்; எனக்குரிய இப்பெருமையை அக்காய நாட்டுப் பகுதிகளிலிருந்து யாரும் எடுக்க முடியாது.

11 நான் இப்படியெல்லாம் செய்வானேன்? உங்கள்மேல் எனக்கு அன்பு இல்லை என்பதாலோ? கடவுளுக்குத் தெரியும் நான் உங்கள்மேல் வைத்துள்ள அன்பு.

12 தாங்கள் பெருமை பாராட்டிக்கொள்ளும் அப்போஸ்தலப் பணியில் எங்களுக்கு நிகராய்த் தென்படச் சிலர் வாய்ப்புத் தேடுகிறார்கள். அந்த வாய்ப்பு அவர்களுக்கு கிட்டாதபடி நான் இப்போது செய்வதையே தொடர்ந்து செய்து வருவேன்.

13 இத்தைகையோர் போலி அப்போஸ்தலர்கள், வஞ்சக வேலையாட்கள், கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களாக நடிக்கிறவர்கள்.

14 இதில் ஒரு வியப்புமில்லை; சாத்தான் கூட ஒளியின் தூதனாக நடிக்கிறான்.

15 ஆகையால் அவனுடைய பணியாளர் நீதியின் பணியாளராக நடிப்பது பெரிதா? அவர்களுடைய முடிவு அவர்களின் செயல்களுக்கேற்றதாகவே இருக்கும்.

16 மறுபடியும் சொல்லுகிறேன்; எவனும் என்னை அறிவிலி என எண்ணவேண்டாம்; அப்படி எண்ணினால், என்னை அறிவிலியாகவே வைத்துக் கொள்ளுங்கள். நானும் அறிவிலியைப் போலச் சற்றுப் பொருமையடித்துக் கொள்ளுகிறேன்.

17 நான் இப்பொழுது ஆண்டவரின் ஏவுதலின்படி பேசவில்லை; அறிவிலியைப்போல் துணிவோடு பெருமையடித்துக் கொள்ளப்போகிறேன்.

18 உலகச் சிறப்புகளைச் சொல்லிக்காட்டி, பலர் பெருமையடித்துக் கொள்வதால் நானும் அவ்வாறே பெருமையடித்துக் கொள்கிறேன்.

19 அறிவு நிறைந்திருக்கும் நீங்கள் அந்த அறிவிலிகளைத் தாராளமாய்ப் பொறுத்துக் கொள்கிறீர்கள்.

20 உங்களை யாராவது அடிமைபோல் நடத்தினால், அல்லது சுரண்டினால், அல்லது ஏமாற்றிப் பிழைத்தால், அல்லது உங்களிடம் இறுமாப்புக் காட்டினால், அல்லது உங்களைக் கன்னத்திலே அறைந்தால் நீங்கள் பொறுத்துக் கொள்கிறீர்கள்.

21 இப்படியெல்லாம் செய்ய நாங்கள் வலுவற்றவர்களே; இது எனக்கு வெட்கந்தான். எனினும் அவர்கள் எதிலே பெருமை பாராட்டத் துணிகிறார்களோ, அதிலே நானும் துணியக்கூடும் அறிவிலியைப் போலவே இன்னும் பேசுகிறேன்

22 அவர்கள் எபிரேயரோ? நானும் எபிரேயன்தான். அவர்கள் இஸ்ராயேலரோ? நானும் இஸ்ராயேலன் தான். அவர்கள் ஆபிராகாமின் வழிவந்தவர்களோ? நானும் ஆபிரகாமின் வழிவந்தவன் தான்.

23 அவர்கள் கிறிஸ்துவின் பணியாளர்களோ? அறிவிழந்தவனாகவே பேசுகிறேன் நான் அவர்களுக்குமேல் கிறிஸ்துவின் பணியாளன். அவர்களைவிட மிகுதியாய் உழைத்தேன். அவர்களைவிட மிகுதியாய்ச் சிறையில் துன்புற்றேன். அவர்களைவிட மிக்க கொடுமையாகச் சாட்டையால் அடிபட்டேன்.

24 பலமுறை மரண வாயிலில் நின்றேன். ஐந்துமுறை யூதரிடமிருந்து ஒன்று குறைய நாற்பது கசையடிகள் வாங்கினேன்.

25 மும் முறை தடியால் அடிபட்டேன். ஒரு முறை என்னைக் கல்லால் எறிந்தார்கள். மும்முறை கப்பற் சிதைவில் சிக்குண்டேன். ஓர் இரவும் பகலும் நடுக்கடலில் அல்லலுற்றேன்.

26 நான் செய்த பயணங்கள் மிகப் பல:அவற்றில் ஆறுகளாலும் கள்ளர்களாலும் இடர்கள், சொந்த இனத்தாரும் வேற்றினத்தாரும் இழைத்த இடர்கள், நாட்டிலும் இடர்கள், காட்டிலும் இடர்கள். கடலிலும் இடர்கள், போலிச் சகோதரர்களால் இடர்கள். இப்படி எத்தனையோ இடர்களுக்கு ஆளானேன்.

27 அயராது உழைத்துக் களைத்தேன்; பன்முறை கண் விழித்தேன்; பசி தாகமுற்றேன்; பன்முறை பட்டினி கிடந்தேன்; குளிரில் வாடினேன்; போதிய ஆடையின்றியிருந்தேன்;

28 இவைபோல் வேறு பல இடர்கள் நேர்ந்தன. இவையேயன்றி, எல்லாச் சபைகளையும் பற்றிய கவலை வேறு எனக்கு அன்றாடச் சுமையாய் உள்ளது.

29 யாராவது மன வலிமையற்றிருந்தால், நானும் அவனைப் போல் ஆவதில்லையோ? எவனாவது இடறல் உற்றால், என் உள்ளம் கொதிப்பதில்லையோ?

30 நான் பெருமை பாராட்டுவதாய் இருந்தால் என் வலுவின்மையைக் காட்டுவதனைத்தையும் குறித்தே பெருமை பாராட்டுவேன். நான் சொல்லுவது பொய்யன்று.

31 இதை ஆண்டவராகிய இயேசுவின் தந்தையும் கடவுளுமானவர் அறிவார்; அவர் என்றென்றும் போற்றி!

32 நான் தமஸ்கு நகரத்திலே இருந்தபொழுது, அதேத்தா அரசன் கீழ் இருந்த ஆளுநன் என்னைச் சிறைப்பிடிக்க விரும்பித் தமஸ்கு நகரவாயில்களில் காவல் வைத்தான்.

33 நானோ நகர மதிலிலிருந்த பலகணி வழியாய்க் கூடையில் வைத்து இறக்கப்பட்டு, அவன் கைக்குத் தப்பினேன்.

அதிகாரம் 12

1 பெருமை பாராட்டுதல் பயனற்றதே; ஆயினும் பெருமை பாராட்டவேண்டிய தேவை இருப்பதால், ஆண்டவர் அருளிய காட்சிகளையும், வெளிப்பாடுகளையும் சொல்லப் போகிறேன்.

2 கிறிஸ்தவன் ஒருவன் எனக்குத் தெரியும்; அவன் பதினான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்றாம் வானம் வரை கவர்ந்தெடுக்கப்பட்டான் உடலோடு அங்குச் சென்றானோ உடலின்றிச் சென்றானோ யானறியேன், கடவுளே அறிவார்

3 அந்த ஆள் 'வான் வீட்டுக்குள் கவர்ந்தெடுக்கப்பட்டது எனக்குத் தெரியும். உடலோடு அங்கே சென்றானோ உடலின்றிச் சென்றானோ எனக்குத் தெரியாது, கடவுளுக்கே தெரியும்.

4 அங்கே மனித மொழிக்கெட்டாத சொற்களை, மனிதன் திருப்பிச் சொல்லக் கூடாத சொற்களைக் கேட்டான்.

5 அவனைப் பற்றியே நான் பெருமை பாராட்டுவேன்; என்னைப் பற்றிப் பெருமை பாராட்டாமாட்டேன். என் குறைபாடுகளே எனக்குப் பொருமை!

6 அப்படி நான் பெருமைப்பட விரும்பினாலும், அது அறிவீனமாய் இராது; சொல்வது உண்மையாகவே இருக்கும். ஆயினும் என்னிடம் காண்பதிலும் கேட்பதிலும் உயர்வாக என்னைப்பற்றி யாரும் எண்ணாதபடி நான் பெருமை பாராட்டாது விடுகிறேன்.

7 ஆகவே, எனக்கருளிய தனிப்பட்ட வெளிப்பாடுகளால் நான் செருக்குறாதபடி இறைவன் அனுப்பிய நோய் ஒன்று என் உடலில் தைத்த முள்போல் வருத்தியது. அது என்னைக் குத்திக் கொடுமைப்படுத்தச் சாத்தான் அனுப்பிய தூதனைப்போல் இருந்தது; நான் செருக்குறா திருக்கவே இவ்வாறு நடந்தது.

8 ஆதலால் என்னிடமிருந்து அதை அகற்றுமாறு மும்முறை ஆண்டவரை வேண்டினேன்.

9 அவரோ, "நான் தரும் அருள் உனக்குப் போதும்; ஏனெனில், மனித வலுவின்மையில் தான் என் வல்லமை சிறந்தோங்கும்" என்று சொல்லிவிட்டார். ஆகையால் நான் என் குறைபாடுகளில் தான் மனமாரப் பெருமைப்படுவேன். அப்போதுதான் கிறிஸ்துவின் வல்லமை என்னுள் குடிகொள்ளும்.

10 ஆகவே, நான் என் குறைபாடுகளைக் காணும்போது, இழிவுறும்போது, நெருக்கடியில் இருக்கும்போது, துன்புறுத்தப்படும்போது, இடுக்கண்ணுறும் போது கிறிஸ்துவை முன்னிட்டு நான் மனநிறைவோடு இருக்கிறேன். ஏனெனில், வலுவின்றி இருக்கும்போது தான் நான் வலிமை மிக்க வனாயிருக்கிறேன்.

11 இப்படிப் பேசுவது அறிவீனமே; நீங்களே என்னை இப்படிப் பேச வைத்தீர்கள். நீங்களே எனக்கு நற்சான்று தந்திருக்கவேண்டும். நான் ஒன்றுமில்லை எனினும், அந்தப் பேர்போன அப்போஸ்தலர்களுக்கு நான் எதிலும் தாழ்ந்தவனல்லேன்.

12 உண்மை அப்போஸ்தலனுக்குரிய அறிகுறிகள் உங்களிடையே செய்யப்பட்டன. நான் கொண்டிருந்த தளார மனவுறுதி, செய்த அருங்குறிகள், அற்புதங்கள், புதுமைகள் இவையே அப்போஸ்தலனைக் காட்டும் அறிகுறிகள்.

13 மற்றச் சபைகளுக்கு நேராத குறை உங்களுக்கு மட்டும் என்னால் என்ன நேர்ந்தது? நான் உங்களுக்குச் சுமையாய் இல்லாததைத் தவிர, வேறு என்ன குறை? ஆம், அது அநியாயந்தான்; மன்னித்துக்கொள்ளுங்கள்.

14 இதோ, மூன்றாம் முறையாக உங்களிடம் வரப்போகிறேன்; இம்முறையும் உங்களுக்குச் சுமையாய் இருக்க மாட்டேன். உங்கள் உடைமை எனக்கு வேண்டாம். எனக்கு வேண்டியது நீங்களே. பெற்றோர்க்குப் பிள்ளைகள் பொருள் சேர்த்து வைப்பதில்லை; பெற்றோர் பிள்ளைகளுக்குப் பொருள் சேர்த்து வைப்பதே முறை.

15 ஆதலால் எனக்குள்ளதையும் ஏன், என்னை முழுவதுமே உங்கள் ஆன்மாக்களுக்காக மனமுவந்து தியாகம் செய்வேன். இந்த அளவுக்கு நான் உங்கள் மீது அன்பு வைத்திருக்க, என்மேல் உங்களுக்குள்ள அன்பு குறைந்து கொண்டு போக வேண்டுமா? இருக்கட்டும்;

16 நான் உங்களுக்குச் சுமையாய் இல்லை என்றாலும், சூழ்ச்சிமிக்கவனாய் உங்களைக் கபடமாகச் சிக்க வைத்தேனாம்!

17 அப்படி நான் உங்களிடம் அனுப்பியவர்களுள் எவனைக்கொண்டேனும் உங்களை வஞ்சித்தேனா?

18 தீத்துவைப் போகும்படி கேட்டுக்கொண்டேன்; அவரோடு நம் சகோதரரை அனுப்பினேன்; தீத்து உங்களை வஞ்சித்தாரா? நாங்கள் ஒரே ஆவியானவரின் ஏவுதலால் நடக்க வில்லையா? ஒரே அடிச்சுவடுகளையே பின்பற்ற வில்லையா?

19 நாங்கள் குற்றமற்றவர்களென உங்களுக்கு எண்பிப்பதாக இவ்வளவு நேரமும் எண்ணியிருப்பீர்கள். கிறிஸ்துவுக்குள், கடவுள் திருமுன் சொல்லுகிறேன்: என் அன்புக்குரியவர்களே, நாங்கள் செய்வதெல்லாம் உங்கள் ஞான வளர்ச்சிக்காகவே.

20 நான் வரும்போது, உங்களை நான் காண விரும்பும் நிலையில் நீங்கள் இருப்பீர்களோ என்னவோ! நானும் ஒருவேளை நீங்கள் காண விரும்பாத நிலையில் இருக்கலாம். உங்களிடையே சண்டை சச்சரவுகள், பொறாமை, சினம், கட்சி மனப்பான்மை, கோள், புறணி, செருக்கு, குழப்பங்கள் முதலியன இருக்கக் காண்பேனோ என்னவோ!

21 மேலும் நான் உங்களிடம் மறுபடியும் வரும்போது, என் கடவுள் என்னை உங்கள் பொருட்டுத் தாழ்வுறச் செய்வாரோ என்னவோ! முன்பு பாவம் செய்தவர்களுள் பலர் தங்களுடைய அசுத்த செயல்கள், கெட்ட நடத்தை, காமவெறி ஆகியவற்றை விட்டு மனந்திரும்பாதிருத்தலைக் கண்டு நான் அழவேண்டியிருக்குமோ என்னவோ!

அதிகாரம் 13

1 இதோ, மூன்றாம் முறையாக உங்களிடம் வருகிறேன். 'இரண்டு மூன்று சாட்சிகள் சொற்படி காரியம் எல்லாம் தீரும்.'

2 முன்பு பாவம் செய்தவர்களுக்கும், மற்ற அனைவருக்கும் ஏற்கெனவே எச்சரிக்கை செய்ததுபோல் மறுபடியும் எச்சரிக்கை செய்கிறேன்.

3 இரண்டாம் முறை நான் உங்களிடம் வந்திருந்த போது சொன்னதையே, உங்களோடு இல்லாத இந்த நேரத்திலும் சொல்லுகிறேன்; என் வழியாய்ப் பேசுகிறவர் கிறிஸ்துவே என்பதை எண்பிக்கவேண்டும் என்கிறீர்கள் அல்லவா? நான் மறுபடியும் வந்தால், அதை எண்பித்துக் காட்டுவேன்; பரிவு காட்டவே மாட்டேன். கிறிஸ்து உங்கள்பால் வலுக்குன்றியவராகக் காணப்படவில்லை; உங்களிடையே தம் வல்லமையைக் காட்டினார்.

4 வலுவின்மையால் அவர் சிலுவையில் அறையுண்டார்; ஆனால் கடவுளின் வல்லமையால் உயிரோடிருக்கிறார். அவருடைய வலுவின்மையில் பங்குபெறும் நாங்களும், கடவுளின் வல்லமையால் அவரோடு ஒன்றித்து உயிரோடிருப்போம்; அது நாங்கள் உங்களை நடத்தும் முறையில் விளங்கும்.

5 உங்கள் வாழ்க்கை விசுவாசத்தின்மேல் ஊன்றியுள்ளதா எனச் சோதித்துப் பாருங்கள்; உள்ளங்களை ஆய்ந்தறியுங்கள். கிறிஸ்து இயேசு உங்கள் உள்ளத்தில் இருப்பதை அறிகிறீர்கள் அல்லவா? நீங்கள் தகுதியற்றவர்களாய் இராவிட்டால் அறிவீர்கள்.

6 நாங்கள் தகுதியற்றவர்கள் அல்ல என்று நீங்கள் அறிவீர்களென நம்புகிறேன்.

7 நீங்கள் தீமையொன்றும் செய்யாதிருக்கும்படி கடவுளைப் பார்த்து மன்றாடுகிறோம்; எங்கள் தகைமையை எடுத்துக்காட்ட நாங்கள் விரும்பவில்லை; அதை எடுத்துக்காட்ட வாய்ப்பே இல்லாதவாறு நீங்கள் நல்லதைச் செய்ய வேண்டுமென்பது தான் எங்கள் நோக்கம்.

8 உண்மைக்கு முரணாய் எதையும் செய்ய எங்களால் இயலாது; உண்மையில் பொருட்டே உழைக்க முடியும்.

9 நீங்கள் வலிமையுள்ளவர்களாய் இருக்கும்போது நாங்கள் எங்கள் வலிமையைக் காட்டத் தேவையிராது; அது எங்களுக்கு மகிழ்ச்சியே. ஆகவே நீங்கள் ஞான நிறைவு அடைய வேண்டுமென்பதே எங்கள் மன்றாட்டின் கருத்து.

10 ஆகையால்தான் உங்களிடம் வருவதற்கு முன்பே இதையெல்லாம் எழுதுகிறேன். நான் உங்களிடம் வரும்போது என் அதிகாரத்தைப் பயன்படுத்தி உங்களிடம் மிகக் கடுமையாய் நடந்துகொள்ள நான் விரும்பவில்லை. ஏனெனில், அழிவுக்காக அன்று, ஞான வளர்ச்சிக்காகவே இந்த அதிகாரத்தை ஆண்டவர் எனக்கு அளித்திருக்கிறார்.

11 இறுதியாக, சகோதரர்களே, மகிழ்ச்சியோடு இருங்கள்; ஞான நிறைவடைய முயலுங்கள்; என் அறிவுரைக்குச் செவிசாயுங்கள்; ஒன்றுபட்டு வாழுங்கள்; சமாதானமாய் இருங்கள். அப்போது அன்புக்கும் சமாதானத்துக்கும் ஊற்றாகிய கடவுள் உங்களோடு இருப்பார்.

12 பரிசுத்த முத்தங் கொடுத்து, ஒருவரையொருவர் வாழ்த்துங்கள்; இறை மக்கள் அனைவரும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர்.

13 ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், பரிசுத்த ஆவியின் நட்புறவும் உங்களனைவரோடும் இருப்பதாக!