முதல் சனி பரிகாரப் பக்தியின் வாக்குறுதியும் அதன் நிபந்தனைகளும்

மாதா லூஸியாவிடம் கூறிய வார்த்தைகளிலேயே அவற்றைத் தருகிறோம்:  “என் மகளே! நன்றியற்ற மனிதர்கள் தங்கள் தூஷணங்களாலும் நன்றிக் கேட்டினாலும் ஒவ்வொரு கணமும் குத்துகிற முட்களால் சூழப்பட்டுள்ள என் இருதயத்தைப் பார். நீயாவது எனக்கு ஆறுதலளிக்க முயற்சி எடு. இதை நீ அறிவி.  தொடர்ச்சியாக ஐந்து முதல் சனிக்கிழமைகளில்:

1. எனக்கு நிந்தைப் பரிகாரம் செய்யும் கருத்துடன்,

2. பாவசங்கீர்த்தனம் செய்து,

3. 53 மணி ஜெபமாலை சொல்லி,

4. பரிகார நன்மை உட்கொண்டு,

5. தேவ இரகசியங்களைத் தியானித்தபடி கால் மணி நேரம் என்னுடன் செலவிடுபவர்களுக்கு, அவர்களுடைய மரண சமயத்தில் ஈடேற்றத்திற்குத் தேவையான எல்லா வரப்பிரசாதங்களையும் தந்து உதவி செய்வேன் என நான் வாக்களிக்கிறேன்.” 

விளக்கம்

ஐந்து முதல் சனிக்கிழமைகள்: 

முதல்சனி பக்தி, பாத்திமாவில் புதிதாகக் கொண்டுவரப்பட்ட பக்தி முயற்சி அல்ல. தொடர்ச்சியாக ஒன்பது தலைவெள்ளிகளில் சேசுவின் திரு இருதயத்துக்கு நிந்தைப் பரிகாரமாக நற்கருணை வாங்கும் பக்தி முயற்சி அர்ச். மார்கரீத் மரியம்மாள் வழியாக ஏற்கெனவே முந்நூறு ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதற்கு ஆண்டவர் வாக்களித்த சன்மானம்: “அப்படிச் செய்கிறவர்கள் சாகும்போது பாவங்களுக்கு மனஸ்தாபப்படும் வரம் அளவில்லாத வல்லமையுள்ள நமது இருதயத்தின் சிநேகம் கொடுக்குமென்று அவ்விருதயத்திலுள்ள இரக்க மிகுதியால் வார்த்தைப்பாடு கொடுக்கிறோம்.  

அவர்கள் நமது சத்துருக்களாயாவது, தேவதிரவிய அனுமானங்களின்றியாவது சாக மாட்டார்கள்.  அவர்கள் சாகும் வேளையில் நமது இருதயம் அவர்களுக்கு நிச்சயமான அடைக்கலமாக இருக்கும்” என்று ஆண்டவர் வாக்களித்திருந்தார்.  இந்த தலைவெள்ளி  பக்தி முயற்சி திருச்சபையில் எங்கும் பரவி வளர்ந்திருந்தது.

தலைவெள்ளி பக்தியைப் பின்பற்றியே மரியாயின் மாசற்ற இருதய பக்தியும் விசுவாசிகளால் தொடங்கப்பட்டு திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்டு ஓரளவு பரவலாக அனுசரிக்கப்பட்டும் வந்தது.

15 சனிக்கிழமை பக்தி: 

ஜெபமாலையின் 15 தேவ இரகசியங்களையும் மகிமைப் படுத்துவதற்காக ஜெபமாலை மாதா திருநாளுக்கு முன் 15 சனிக்கிழமைகள் கொண்டாடப்பட்டன.  13-ம் சிங்கராயர் இப்பக்தி முயற்சிக்கு பல பலன்களை அளித்தார். சனிக்கிழமையில் அதை அனுசரிக்க முடியாதவர்கள் ஞாயிறில் அனுசரிக்கலாம் என்று அனுமதியும் அளித்தார். 

12 முதல் சனிக்கிழமைப் பக்தி: 

ஒவ்வொரு மாதமும் முதல் சனியை விசேஷ தினமாக கொண்டாடி அமலோற்பவ மாதாவின் மகிமைக்காக பரிகார ஜெபங்களும் பக்தி முயற்சிகளும் செய்பவர்களுக்கு அர்ச். 10-ம் பத்திநாதர் ஒரு பரிபூரண பலனைக் கட்டளையிட்டார்.

8 முதல் சனிக்கிழமைப் பக்தி: 

தொடர்ச்சியாக எட்டு முதல் சனிக் கிழமைகளை மாசற்ற இருதயத்திற்குப் பரிகார தினங்களாக அனுசரிப்பவர்களுக்கு 15ம் ஆசீர்வாதப்பர் மேலும் புதுப்பலன்களைக் கட்டளையிட்டார்.

இவைகள் பாத்திமாவில் மாதா கேட்டுக்கொண்ட 5 முதல் சனிக்கிழமை பரிகார பக்திக்கு முன்னோடிகளாய் அமைந்தன. பாத்திமாவில் மாதா, முதல் சனிக்கிழமைகளின் எண்ணிக்கையை ஐந்தாக குறைத்து அதை அனுசரிப்பதின் பலனை அதிகரித்தார்கள்.

முதல் சனிகள் ஐந்தாகக் குறைக்கப்பட்டதற்கு இரண்டு காரணங்கள். 

முதல் காரணத்தை நமதாண்டவரே சகோதரி லூஸியா வழியாக நமக்குக் கூறுகிறார்: “என் மகளே, மரியாயின் மாசற்ற இருதயத்திற்கெதிராக ஐந்து வகையான துரோகங்களும் தூஷணங்களும் கட்டிக்கொள்ளப்படுகின்றன.

1. மாதாவின் அமலோற்பவத்துக்கு எதிரான தூஷணங்கள்.

2. மாதாவின் நித்திய கன்னிமைக்கெதிரான தூஷணங்கள்.

3. மாதாவின் தெய்வீகத் தாய்மைக்கெதிரான தூஷணங்கள். அதே சமயம் மாதாவை மானிடர்களின் தாயாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் துரோகம்;

4. மாதாவின் அன்பை இளம் உள்ளங்களிலிருந்து அகற்றி மாதாவுக்கெதிரான அலட்சியத்தையும் பகையையும் மூட்டும் துரோகம்.

5. மாதாவின் பக்திப் பொருள்களை அவமதிப்பதால் செய்யும் நிந்தைகள்.  

இவ்வைந்து நிந்தைகளுக்கும் மாதத்திற்கு ஒன்றாக மாதாவின் மாசற்ற இருதயத்துக்குப் பரிகாரம் செய்யலாம்.

2-ம் காரணம்: இப்பக்தி முயற்சி ஐந்து முதல் சனிக்கிழமைகளாக குறைக்கப் பட்டுள்ளதால் அது அதிக எளிதாக்கப்பட்டுள்ளது. 

ஆகவே நாம் அதை கூடுதலான பக்தி உருக்கத்துடன் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக. ஏனென்றால் போதிய பக்தி உருக்கம் இன்றி கூடுதல் முதல் சனிக்கிழமைகளை அனுசரிப்பதை விட பக்தி உருக்கத்துடன் 5 சனிக்கிழமைகளை அனுசரிப்பதே மேலானது.