சலேத் மாதாவின் இரகசியம் - பதிப்புரை

சலேத் மாதாவின் இரகசியம் திருச்சபைக்கு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. திருச்சபையின் பரிதாப நிலையை எண்ணி சலேத் காட்சி முழுவதும் மாதா கண்ணீருடன் காணப்பட்டார்கள். கடவுளின் அன்னை கண்ணீர் வடிக்க என்ன காரணம்?

மோன்டிசியாரியில் தேவ இரகசிய ரோஜா மாதாவாக நம் அன்னை காட்சியளித்த போது மூன்று பெரிய வாள்கள் அவர்கள் நெஞ்சில் குத்தியபடி காணப்பட, கண்களில் கண்ணீர் வழிந்து பாய "ஜெபம், தவம் பரிகாரம்" என்ற மூன்று வார்த்தைகளையும் மாதா கூறினார்கள்.

கண்ணீர் என்பது ஒரு தாயின் கடைசி ஆயுதம் . என்பதை நாம் அறிவோம். பாத்திமா காட்சிகளிலும் மாதா எப்போதும் துயர முகமாய்க் காணப்பட்டார்கள். தங்களின் மாசற்ற இருதயத்திற்கு நிந்தைப் பரிகாரம் செய்யக் கேட்டார்கள். அவர்களின் இருதயம் நிரம்ப கூரிய முட்களால் குத்தி ஊடுருவப்பட்டிருந்தது.

திருச்சபையையும் உலகத்தையும் காப்பாற்ற ஜெபமும் தவமும் பரிகாரமும் எவ்வளவு அவசரமாய்த் தேவைப் படுகின்றன என்பதை இக்காட்சிகளும் செய்திகளும் நமக்குக் கூறுகின்றன.

மாதாவின் அப்போஸ்தலர்களும் அன்புள்ள பிள்ளைகளுமாகிய நாம் இப்போது அசட்டையாயிராமல் இக்காட்சியின் பொருளையும் இரகசியத்தின் அவசரத் தன்மையையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்து, நம்மை முழுவதும் மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு அர்ப்பணித்து அன்புடன் பரிகாரம் செய்ய முன் வருவோமாக!